நீண்ட பதிவு. மனதிடம் இல்லாத மாற்றுப் பாதையில் சொல்லவும்.
கீழே கொடுத்துள்ள செய்தி வருத்தமாக நண்பர் முரளி எழுதியது.
"சமீபத்தில் காமராஜரைப் பற்றியும் மதிய உணவுத் திட்டம் உருவான வரலாறு பற்றியும் ஒரு தொடர் எழுதி இருந்தேன். நன்றாக இருக்கிறது என்றுதான் படித்தவர்கள் கூறினர். அத் தொடர் கட்டுரை பலரது பார்வையில் படவே இல்லை . எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். 5 பகுதிகள் எழுதிமுடித்தேன். 6வது பகுதியைத் தொடரவில்லை. தயாராக வைத்திருந்தேன். யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. ஒருவருக்குக் கூட நினைவில் இல்லாத தொடரை ஏன் எழுத வேண்டும் என்று விட்டுவிட்டேன். அவரவர்க்கு ஆயிரம் வேலை. தப்பில் தவறி கண்ணில் பட்டால்தான் முகநூல் பதிவுகள் படிக்கப்படும் .( பார்க்கப்படுகிறது) என்பது எத்தனை முறை உணர்த்தப்பட்டாலும் புரிவதில்லை. முகநூல் வாசிப்பு என்பது பேருந்தில் செல்லும்போது கண்ணில் படும் கடைகளின் பெயர்ப்பலகைகளை வாசிப்பதற்கு ஒப்பானது"
++++
1. நான்கு ஆண்டுகளுக்கு முன் என் பதிவுகள் வெளியிட்ட மூன்று நாட்களுக்குள் (ஒவ்வொரு பதிவும்) குறைந்தபட்சம் 1000 பேர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். மிகச் சாதாரணமாக 3000 பேர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஃபேஸ்புக் என்பது தெரியும். ஆனால் ஈடுபாடு உருவாகவில்லை. கடந்த 24 மாதமாகத்தான் தீவிரமாக அந்த தளத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். முழுமையாக ஈடுபாடு இருக்கின்றதா? என்றால் ஒரு துளி கூட ஈடுபாடு இல்லை. ஆனால் நானும் செயல்படுகின்றேன்.
காரணம் முதல் தலைமுறை (15 முதல் 25 வயது) இளையர்களுக்கு நான் செய்ய வேண்டிய பணிகள் உள்ளது. இந்தச் சமூகம் என்னை வளர்த்துள்ளது. நான் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உதவியாக வேண்டும். என் குடும்பத்திற்காக நான் உழைப்பது போல என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் என்னால் ஆன என்னால் முடிந்த உதவிகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். என்னால் எழுத முடிகின்றது. பல விசயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அதனை என் பார்வையாகப் பகிர்கின்றேன். "தேவையிருப்பின் எடுத்துக் கொள். இல்லாவிட்டால் கடந்து சென்று விடு".
இது தான் என் கொள்கை.
சோர்வு எதுவுமில்லை. அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதுமில்லை. காரணம் "மனிதன் என்பது மகத்தான சல்லிப்பயல்" என்பதனை உணர்ந்தே வைத்துள்ளேன். சாக்கடையில் நின்று கொண்டு ஏன் மல்லிகைப்பூ வாசம் இல்லையே? என்று வருத்தப்படக்கூடாது. சேவை என்பது வேறு. லாபம் என்பது வேறு. நான் இதனையே சேவையாகவே செய்ய விரும்புகிறேன். செய்து கொண்டும் இருக்கின்றேன்.
2. இப்போது வெளியிடும் பதிவுகளைக் குறைந்தபட்சம் 200 பேர்கள் முதல் அதிகபட்சம் 300 பேர்கள் வரைக்கும் படிக்கின்றார்கள். தெரிந்தவர்கள் என்று கணக்கிட்டால் 30 பேர்கள் தான் இருப்பார்கள். மற்ற அனைவரும் பொது வாசகர்கள். ஏதோவொரு சமயத்தில் மகிழ்ச்சி என்று தெரிவிப்பார்கள். நன்றி என்று தெரிவிப்பேன். கூகுள் பஸ், கூகுள் ப்ளஸ், வலைதளம் என்ற கட்டுமானம் காலமாற்றத்தில் சிதைக்கப்பட்டு விட்டது. மீள்வது கடினம். மாற்றங்களை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
3. அப்படியெல்லாம் இவர்களுக்கு ஊட்டி விட வேண்டிய அவசியமில்லை. அங்கீகாரம் இல்லாவிட்டால் மனம் சோர்ந்து விடுமே? என்று சொல்வீர்கள் எனில் மனத்தை நீங்கள் பக்குவப்படுத்திக் கொள்ளவில்லை என்று அர்த்தம். கூட வாழும் மனைவி கூட அங்கீகாரத்தை எளிதாக தருகின்றாரா? மகன் மகள்கள் அப்பா குறித்த பெருமிதம் கடைசி வரைக்கும் இருக்கும் நம்புகின்றீர்களா? காரணம் மனித இனத்தின் அடிப்படையான குணமென்பது பொறாமை, வன்மம், கோபம்,எரிச்சல் போன்ற பலவிசயங்களுக்குள் கொஞ்சம் பெருமை, மகிழ்ச்சி, புரிதல், அமைதி. இவையெல்லாம் மனப் பக்குவத்தின் அடிப்படையில் வளர்த்துக் கொள்வது. பார்க்கும் அனுபவங்கள் நமக்கு கற்றுத் தருவது. எத்தனை பேர்களால் இதனைப் பெற முடிகின்றது என்றால் நூறில் ஐந்து சதவிகிதம் கூட இல்லை என்பது தான் உண்மை.
4. இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு தான் பொதுதளத்தில் செயல்பட வேண்டும். காரணம் எல்லாவித நோய்களுக்கும் மனம் தான் ஆதாரம். அதுவே தொடக்கம். சேவை செய்யப்போகின்றோம் என்று நோயாளியாக மாறி விடக்கூடாது. உணர்ந்து உள்வாங்கி அமைதியாக புரிந்து கொண்டால் உத்தமம்.
5. நான் ஈழம் குறித்து தவம் போலவே இரண்டு வருடங்கள் எழுதிக் கொண்டே இருந்தேன். என் நோக்கம் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து எதிர்காலத்தில் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதனை என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்துக்கொண்டு ஏறக்குறைய 800 நாட்கள் என் வாழ்க்கையைத் தொலைத்து இருக்கிறேன். யாருக்கு என்ன பலன்? என்று கருதவே இல்லை. முதலில் இலவச மின்னூலாக மாற்றி வெளியிட்டு வைத்தேன். அதன் பிறகு அப்படியே எடுத்த அமேசான் தளத்தில் வெளியிட்டேன். மீண்டும் ஒவ்வொரு பக்கத்தையும் திருத்தி மேம்படுத்திச் சேர்த்துப் பல ஆவணங்களைக் கோர்த்து 500 பக்கங்களுக்கு மேலாக அதனை மீண்டும் அமேசான் தளத்தில் வெளியிட்டேன். காசு கொடுத்து வாங்கினார்கள். கிண்டில் பதிப்பில் படித்தார்கள். இலவசமாக பலமுறை கொடுத்தேன். 2009 ல் எழுதிய எழுத்துக்கு இதுவரைக்கும் பல நூறு விமர்சனங்கள் வந்துள்ளது. இப்போது ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் மின் அஞ்சல் வழியாக ஏதோவொரு புத்தகத்தைப் பற்றி இரண்டு வரிகளில் மகிழ்ச்சி என்று எழுதுவார்கள். கடந்த ஆகஸ்ட் 25 ந் தேதி ஒருவர் எழுதியிருந்தார். அவர் இப்போது கனடாவில் வசிக்கின்றார். இது விமர்சனம் அல்ல. என் உழைப்புக்கு கிடைத்த பாரத் ரத்னா விருது. ஆனால் 12 வருடங்கள் காத்திருந்தேன் என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
+++++
அன்புள்ள ஜோதிஜி.
இது புத்தக விமர்சனம் கிடையாது.புத்தகம் பற்றியும் அதில் கூறப்பட்ட சம்பவங்கள் பற்றியும் ஒரு மனம் திறந்த மடல். இந்த புத்தகம் கொஞ்ச நாளைக்கு முன்னால் என் கண்ணில் பட்டது. அப்போது இதை புரட்டி சாம்பிள் கூட பார்க்கவில்லை அப்போது.
காரணம் ஒன்று தான். தலைப்பைப் பார்த்தால் இது ஒன்று தலைவர் பிரபாகரனைப் போற்றுவது போல் போற்றி அதே நேரம் அவரை ஒரு நாத்திகராகவும் முருகனை முப்பாட்டன் என்று கூறுபவராகவும் காட்டி இருப்பார்கள். இல்லையெனில் கிறிஸ்தவக் கைக்கூலியாகவும் போர் வெறி பிடித்த மனநோயாளியாகவும் காட்டி இருப்பார்கள். இந்த இரண்டு வகை புத்தகங்களுக்குத் தான் இப்போது டிமாண்ட். இதுவும் அப்படி ஒன்றாக இருக்கும் என்று ஒதுக்கி விட்டேன்.
ஆசிரியரின் 5 முதலாளிகளின் கதை படித்து விட்டு அவர் பிற நூல்கள் பார்த்ததும் அவற்றுக்கு சம்பந்தமே இல்லாமல் இது இருக்க வாசிக்கலாம் என்று எடுத்தேன். சனிக்கிழமை இரவு ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்து விட்டேன். உங்களின் இந்தப் புத்தகத்துக்கு இலங்கைத்தமிழர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்து இருக்குமா என்பதும் சந்தேகமே. காரணம் எங்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்னமும் தந்தை செல்வாவும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அவரின் 50க்கு 50 கோரிக்கையும் கூட நியாயமானது தான். அதை நீங்கள் குறை கூறினால் அவர்களுக்குப் பிடிக்காது. ஆனால் நீங்கள் உண்மையை அப்படியே எடுத்து படம் பிடித்து காட்டி விடுகிறீர்கள்.
இதற்குப் பெயர் வரலாற்று நூலா ?
உங்கள் கடந்த கால வாழ்க்கையை -அதில் உங்களுக்கு எழுந்த சோகங்களைக் கேள்விகளை, அந்த கேள்விகளுக்கு நீங்கள் தேடிய பதில்களை . அவற்றைக் கண்டுபிடித்த போது சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவற்றை ஒருவர் கூட இருந்து நேரில் பார்த்தவர்கள் போல எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி இருக்கீங்க.
1972 ல் சிறிமாவோ பண்டாரநாயக்கா கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஆயுதப் போராட்டம் என்கின்ற அளவுக்கு இளைஞர்கள்-யாழ்ப்பாண இளைஞர்கள் போக காரணம்.அதுவரைக்கும் படிப்பு படிப்பு என்று மட்டுமே இருந்தவர்கள் அவர்கள். எல்லா கல்லூரிகளிலும் வேலைத்தளங்களிலும் மருத்துவராகவும் பொறியியலாளராகவும் அலங்கரித்தவர்கள்-சிங்களப் பகுதிகள் உட்பட.
எனக்கும் ஆயுதப்போராட்டத்துக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. நாங்கள் வளர்ந்த போது சிவகுமாரன் குட்டிமணி போராட்டத்திலிருந்து ஆயுதப்போராட்டம் முன்னேறி இருந்தது. ஆனால் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த போது சொன்ன காரணங்கள் சில மாறிப்போய் இருந்தன. 1972 இல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் இன ரீதியானது.70 வீத சிங்களவர் 30 வீத சிறுபான்மையோர்.எனவே பல்கலைக்கழக அனுமதியும் அதே வீதத்தில் தான் இருக்க வேண்டும் என்கின்ற விதமான தரப்படுத்தல்.
இது கல்வியை மட்டுமே நம்பி இருந்த யாழ் சமூகத்துக்குப் பேரிடியாக இருந்தது.இதில் தமிழ் மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபனுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விடயம். நாங்கள் வளர்ந்து வரும் போது எங்களுக்குக் கற்பித்த போராட்ட வரலாறு தந்தை செல்வா அருணாச்சலம் ராமநாதன் போன்றவர்களை மட்டும் அல்ல ஜி.ஜி பொன்னம்பலத்தையும் தமிழர்களுக்காகப் போராடிய சிறந்த தலைவர்களாகத் தான் காட்டி இருந்தார்கள். தமிழர்களுடைய போராட்டம் ஜி.ஜி.ஆல் 50க்கு 50 கேட்கப்பட்டு பிரித்தானிய யாப்புகள் எல்லாமே தமிழருக்குத் துரோகம் பண்ணி பின்னர் அகிம்சையில் தந்தை செல்வா போராடி -தனிச்சிங்கள பிரகடனைத்தை எதிர்த்து. மற்றும் 50க்கு 50 கேட்டு. இந்த 50க்கு 50 என்றால் என்ன என்பதை எங்களில் பலர் இன்னும் நியாயமான போராட்டமாகக் கருதுகிறார்கள்.
நான் கூட 1990 வரைக்கும் அது என்ன என்றே தெரியாமல் அது நியாயமான போராட்டம் என்றே நினைத்து வந்தேன். 1972 இல் வந்த தரப்படுத்தல் எதிர்ப்புகளால் கிடப்பில் போடப்பட்டு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் பிரதேசிய வாரியான தரப்படுத்தல் ஆக்கப்பட்டு நியாயமான தாக்கப்பட்டது.யாழ் பல்கலைக்கழகமும் திறக்கப் பட்டது. ஆனாலும் இன்று வரையும் கூடத் தரப்படுத்தல் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே யாழ்ப்பாண மக்களால் பார்க்கப்படுகிறது.1976 இல் அது திருத்தப்பட்ட பிறகும் கூட அது எதிர்க்கப்பட்டு தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகமாகவே யாழ்ப்பாணத்தில் பார்க்கப்பட்டது.
அதற்கு காரணம் 1972 வரையில் யாழ்ப்பாண வேளாள மற்றும் மேட்டுக்குடி சமூகங்களின் ஏகபோக உரிமையாக இருந்த பல்கலைக்கழகக் கல்வி தமிழீழம் என்று சொல்லப்படும் நிலப்பரப்பின் ஏனைய மாவட்ட தமிழர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டத்தை யாழ் சமூகத்தால் இன்றுவரைக்கும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான். கடந்த காலச் சுதந்திரத்துக்கு முற்பட்ட யாப்புகளில் மலையக இந்திய வம்சாவளித்தலைவர்கள் முக்கியமாக நடேச அய்யர் போன்ற உண்மையான தலைவர்கள் கூட இடம்பெற்று இருக்க அவை தமிழர்களால் ஏன் நிராகரிக்கப்பட்டது?
50க்கு 50 கேட்ட ஜி.ஜி எதற்கு இந்திய வம்சாவளி மக்களை வெளியேற்றச் சம்மதித்தார்? அதை எதிர்த்து கட்சி விட்டுப் பிரிந்த செல்வா ஏன் சாஸ்திரி பண்டா ஒப்பந்தம் மூலம் இந்திய வம்சாவளி தமிழர் வெளியேற எந்த எதிர்ப்பும் காட்டவில்லை? இதை எல்லாம் எதிர்த்து அமைத்த தமிழர் விடுதலைக்கூட்டணி அதனுடன் இணைந்து இருந்த -தமிழீழம் வேண்டும் என்ற அதன் கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்ட அஷ்ரப் க்கு யாழ் தேர்தல் தொகுதியில் ஓர் ஆசனம் கூட ஒதுக்காமல் அவரை ஓரம்கட்டி கடைசியில் மனம் வெறுத்துப்போய் தனியாக முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பிக்க காரணமாக இருந்தது? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடிய போது கிடைத்தது பதில் ஒன்று தான். அரசியல் தலைவர்களின் குறுகிய அரசியல் சிந்தனை-சுயநலம்.அவ்வளவு தான். 1972 இல் தமிழ் மக்களின் கல்விக்கு துரோகம் இழைத்தது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்ட அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்குடி மக்களுடன் ஒரே மாதிரி அமர்ந்து கல்வி கற்க கூட மறுக்கப்பட்டது.அவர்கள் தரையில் தான் அமர வேண்டும். இந்த விபரங்கள் கே டானியல் அவர்கள் எழுதிய நாவல்களில் காணலாம். நான் கே டேனியல் இந்த நாவல்களைப் படிக்கிறேன் என்று தெரிந்ததற்கே 1986-90களில் எங்கள் வீட்டில் அதற்குத் தடை விதிக்கப்பட்டது என்றால் 1972க்கு முற்பட்ட காலத்தில் நிலைமை எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். 1947 இல் எல்லோருக்கும் கல்வி என்ற செயல்திட்டத்தை கன்னங்கரே என்ற அமைச்சர் கொண்டு வந்த போது கிழக்கிலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஆதரித்தார்.தந்தை செல்வா உட்பட அனைவரும் எதிர்த்தனர்.இவர்கள் எப்படி ஒட்டுமொத்தத் தமிழ் இனத்துக்குமான விடுதலை பற்றி யோசித்து இருப்பார்கள்?
தாய்மொழியில் கல்வி என்பதே சிங்களவர் கொண்டு வந்ததால் தான் எங்களுக்கும் கிடைத்தது. இல்லையெனில் ஆங்கிலத்தில் படிப்பதையே பெருமைப்பட்டுக் கொண்டாடி இருக்கும் எங்கள் யாழ் சமூகம். உண்மையில் எங்கள் முன்னோர்கள் விட்ட பிழை. சேர் பொன் அருணாச்சலம் மற்றும் சேர் பொன் ராமநாதன் இருவரும் கொழும்பு தமிழர்கள். நீங்கள் குறிப்பிட்ட படியே பிறந்த யாழ்ப்பாணத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர் மட்டும் அல்ல யாழ்ப்பாணம் என்று சொல்வதையே தவிர்க்கும் தமிழர்கள்.
அவர்களுக்கு சுதந்திர இலங்கையின் அதிபர் பதவி தங்களுக்குக் கிடைக்கும் என்கின்ற மிதப்பு எண்ணமே அவர்கள் ஒன்று பட்ட இலங்கையை விரும்பக் காரணம். ஏனெனில் அப்போதைய இந்த உயர்பதவி வகிக்கும் யாழ் வம்சாவளி கொழும்புத் தமிழர்கள் என்றால் சிங்களவர்களை ஒதுக்க மாட்டார்கள்.ஆனால் அவர்களை மேட்டுச் சிங்களவர் என்றே குறிப்பிடுவார்கள்.-அதாவது மூடர்கள் என்று. உண்மையில் இந்த கறுவாத்தோட்டத்து தமிழர்கள் (இவர்களின் பங்களாக்கள் கொழும்பில் கறுவாத்தோட்டம் என்னும் பகுதியிலேயே செறிந்து இருக்கும். அதனால் அப்படிச் சொல்வது வழமை ) உண்மையில் தமிழர்கள் அல்ல. இவர்களும் ஜெ ஆர் போன்ற உயர் மட்டக் கிறிஸ்தவச் சிங்களவர்களும் ஒரே இனம்.-அதிகார வர்க்க பிரிட்டிஷ் அடிப்பொடிகள்.
அருணாச்சலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அமைப்பை உருவாக்கினார் என்றாலே அதிசயம். அவர் சிங்களவர்களைச் சேர்த்து உருவாக்கக் காரணம் சிங்களவர்களுக்கும் சேர்த்துத் தானே தலைமை ஏற்கலாம் என்கின்ற எண்ணம் மட்டுமே. காலனிய ஆதிக்கத்துக்கு முன்பிருந்தே இருந்த சிங்களத் தமிழ் முன்விரோதங்கள் தெரிந்த எந்தத் தமிழர்களும்-அவர்கள் உண்மையாக இருந்திருந்தால் ஒன்று பட்ட இலங்கையைக் கேட்டு இருக்க மாட்டார்கள்.
சேர்.பொன் ராமநாதன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் ஒன்று பட்ட இலங்கையைக் கேட்ட போதே அவர்களுடன் சேர்ந்து இருந்த பண்டாரநாயக்கா யாழில் பேசும் போது வடக்கு கிழக்கில் சுயேச்சை அதிகாரம் கொண்ட தமிழர் பிரிவுகளும் மத்தியில் பொது அரசும் அமையும் என்று பேசியவர்.-அவர் அப்போதே கோடி காட்டினார். சேர்ந்து போராடுவோம் ஆனால் கொஞ்சம் தள்ளியே நிற்போம் என்று. இவர்கள் அப்போதே சுயேச்சை கேட்டு இருந்தால் கண்டிப்பாக இனப்பிரச்சனை சுதந்திரத்தின் போதே தீர்ந்து இருக்கும். சிங்களவர்கள் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்றிணைந்த போது தமிழ்த்தலைவர்கள் தங்களுக்கான அமைச்சர் பதவிகளுக்கும் சரிசம ஆசனங்கள் பெறுவதன் மூலம் ஒன்று பட்ட அரசின் அதிபராக தங்கள் வருவதற்கும் சந்தர்ப்பங்களை மட்டுமே பார்த்தார்கள்.
ஆசை பேராசையான விபரீதம்.சிங்களவன் தமிழனால் ஆளப்படக்கூடாது என்று அவர்கள் தெளிவாக இருக்கும் போது தமிழர்களும் சிங்களவர்களால் ஆளப்படக்கூடாது என்கின்ற தெளிவான சுயநலமற்ற முடிவை எடுக்க இவர்களால் முடியவில்லை. முதலில் விலை போய் அவர்களிடம் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு நின்று விட்டு பின்னர் அவர்கள் தங்களை அவமதித்த ஒரே காரணத்தால் தமிழனுக்கு உரிமைப் போராட்டம் நடத்திய சுந்தரலிங்கம் க்கு பட்டப்பெயர் அடங்காத் தமிழன் ! அவர் சந்ததி அப்போதே வெளிநாட்டில்.
கண்டி அரசை விழுந்த ஆங்கிலேயருக்கு உதவியது ரத்வத்த குடும்பம் மட்டும் அல்ல.சேர் பொன் ராமநாதன் அவர்களின் தாத்தா குமாரசாமியும் தான்.இதற்காக அவருக்குப் பிரிட்டிஷ் அரசு கேட் முதலியார் பட்டம் வழங்கி கவுரவித்தது.பதவிக்காகக் காட்டிக்கொடுப்புக்குத் தமிழர்கள் ஒன்றும் புதியவர்கள் இல்லையே. ஆட்சி அதிகார ஆசை மட்டுமே இவர்கள் கண்ணை மறைத்தது.
ஜி.ஜி இந்திய வம்சாவளி தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தார் என்று கட்சியிலிருந்து பிரிந்த தாக சொன்ன செல்வா ஒன்றும் இந்திய வம்சாவளி தமிழருக்கு எந்த அனுகூலத்தையும் செய்யவில்லை.-ஏன் பூர்வீகக் குடிகளான தமிழர்களுக்கே எதுவும் செய்யவில்லை. அதற்கு காரணம் அவரின் இயலாமை மட்டும் அல்ல.அரசில் உயர்பதவிகளை வகித்து விட்டு வழக்கம் போல அரசியல் தலைவராகி பதவிக்கு வர ஜி.ஜி ஐ எதிர்க்க ஒரு காரணம் வேண்டும்.-அவரை ஓரம் கட்ட. அவ்வளவே. நீங்கள் கூறியபடி இலங்கைத்தமிழர் பூர்வீகக் குடிகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என்று பிரித்துப் பார்த்திருக்காவிடில் கூட வரலாறு வேறுபக்கம் திரும்பி இருக்கும். ஆனால் அந்த அரசியல் தலைவர்களுக்கு யாழ் மாவட்ட மேட்டுக்குடியினரைத் தவிர வேறு யாரும் தமிழர்களாகவே தெரியவில்லை.அது கூட வாக்குக்காகத்தான். அவர்கள் கவனம் அவர்கள் பதவிகளிலேயே இருந்தது.
50க்கு 50 என்கின்ற போராட்டம் நியாயமானது என்று போதிக்கப்பட்ட நான் ஓர் அரசியல்வாதியைக் கேட்டேன். 30 வீத சிறுபான்மையினரின் 20 வீத தமிழர் 50 வீத ஆசனம் கேட்பது நியாயம் என்றால் 70 வீத சிங்களவன் தனக்குப் பல் கலைக்கழகத்தில் 70வீத இடம் வேண்டும் என்று கேட்பதும் நியாயம் தானே? அது எப்படித் துரோகம் ஆயிற்று என்று? அப்போது இளம் வயது. அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் போக தமக்கு உரிமை உள்ளதாக நினைத்துக்கொண்டார்.
இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு எழுந்தது 1995க்கு பின்னர். யாழ்ப்பாணத்தில் இருந்த வரைக்கும் தரப்படுத்தல் செய்த துரோகத்தை முழுதும் நம்பிக்கொண்டு இருந்தேன். ஆனால் இடம் பெயர்ந்து யாழ் விட்டு வன்னிக்குப் போன போது தான் அந்த ஊர்கள் 1995யிலேயே இப்படி எனில் 1972 இல் எப்படி இருக்கும்? இவர்களையா நாங்கள் போட்டி என்று எண்ணுகிறோம் என்ற கேள்வி வந்தது.
மறுபடி படிப்புக்காக யாழ் வந்ததும் தரப்படுத்தல் மற்றும் ஆதிகால அரசியல் போராட்டங்களைப் பற்றித் தேடித் தேடிப் படித்தேன்.50க்கு 50 என்பது வெறும் பாராளுமன்ற ஆசனப் போராட்டம் என்று புரிந்தது. 72 இல் வந்த தரப்படுத்தல் 76 இல் மாற்றப்பட்டு பிரதேச ரீதியாக மாற்றப்பட்டு இதுவரை வாய்ப்புகள் கிடைக்காத தமிழர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு வரும் அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது.
ஆனாலும் அமிர்தலிங்கம் 76இல் கூடத் தமிழர் கல்விக்குத் துரோகம் நடந்ததாக கூறி இளைஞர்களைத் தூண்டிவிட்டு அவர்களுக்கு ஆதரவாக வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழ் ஈழப் பிரகடனம் செய்து தமிழீழம் கிடைக்கப் பாடுபடுவேன் என்று வாக்கு கேட்டு அதிகப்பட்ச வாக்குகளோடு எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். தங்கள் கட்சியின் போக்குக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம் உடையவர்களை-தனப் பதவிக்குப் போட்டி என்று நினைத்தவர்களைத் துரோகி முத்திரை குத்தி இளைஞர்களைக் கொண்டு கொள்ளாத தொடங்கினார். எல்லோரும் பதவிக்காகச் சிங்களவருடன் சேர்ந்தார்கள்.ஆனால் அமிர்தலிங்கம் காட்டியவர்கள் மட்டும் துரோகி ஆனார்கள். அங்கே ஐக்கிய இலங்கையின் உறுதிப்பாட்டைப் பேணுவேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து பின்னர் ஆயுதம் தாங்கிய இளைஞர்களை அரசிடம் காட்டிக் கொடுக்கும் வேலைக்கும் சம்மதித்தார். எல்லோரும் பதவி வெறியில் திரிந்தார்கள்.-ராமநாதன் தொடக்கி டக்ளஸ் ,கருணா கடந்து இந்தப் பட்டியல் நீள்கிறது.
இது தான் ஈழம் படிக்க மறந்த வரலாறு.
எனினும் உங்கள் புத்தகத்தில் சில திருத்தம்.
-ரத்வத்த சந்திரிகாவின் கணவர் வழி உறவினர் அல்ல. தாய்வழி உறவினர்.
-ரத்வத்த மட்டும் அல்ல ராமநாதனின் தாத்தா குமாரசாமியின் கண்டி ராஜ்ஜியம் விழா காரணம் ஆனவர்.
- கிட்டுவின் கால் போனது 1986 இல் அமைதிப்படை வருவதற்கு முன்னர்.
- operation bhavan நடந்தது மருத்துவ மனைக்குப் பின்னால் அல்ல யாழ் பல்கலைக்கழக மைதானத்தில்.-மருத்துவ பீட மைதானத்தில்
-அது முடிந்ததும் மருத்துவப் பீட மாணவர்களைக் கொன்றதும் நந்தாவில் அம்மன் கோவிலடியில் பச்சைக் குழந்தை வரைக்கும் உயிரோடு தெருவில் படுக்க வைத்து விட்டு அவர்கள் மீது புல்டோசர் ஏற்றிக் கொன்றதும் வேறொரு அத்தியாயம்.
-இந்திய அமைதிப்படையுடன் போர் என்று புலிகள் உத்தியோகப் பூர்வமாக அறிவித்தது குமரப்பா புலேந்திரன் உட்பட்ட 17 பேரின் தகனத்தின் பொது ஒக்டோபர் 10 ம் தேதி நெல்லியடியில். ஆயுதங்களை எடுத்து அவர்களுக்கு வீரவணக்கம் என்று வானை நோக்கிச் சுட்டு அறிவித்தார்கள்.அதற்கு முன்னரே இந்திய இலங்கை அரசுகள் ஊகித்து முஸ்தீபுகளைச் செய்த போதே அனைத்துப் புலிகளின் முகாமும் ரகசியமாகக் கலைக்கப்பட்டு வன்னிக்குப் போய் விட்டார்கள் -எங்கள் பின் வீட்டில் இருந்த முகாம் உட்பட. ஒவ்வொரு முகாமிலும் பேருக்கு இரண்டு பேர் நின்று விட்டு பெருவாரியாக வன்னிக்காட்டுக்கும் போய்விட்டார்கள் மீதிப்பேர் முகாம்களை விட்டு மறுபடி கொரில்லா யுத்தத்துக்குத் தயாராக அறைந்து விட்டார்கள். ஆளே இல்லாத புலிகளின் முகாம்களை இந்தியப்படை அட்டகாசமாகப் பிடித்து ஆரவாரமாகச் செய்தி வெளியிட்டது.
1987 அக்டோபர் ஆரம்பித்து எங்களை முகாம்களில் இருத்தி யாழ்ப்பாணம் கைப்பற்றினோம் என்று உறுதியாக அறிவித்து விட்டு எங்களை வீடுகளுக்கு அனுப்பித் தேர்தல் வைத்து மறுபடி பாடசாலை வரைக்கும் திறந்த போதும். புலிகளின் கொரில்லா தாக்குதல் நடந்து கொண்டே இருந்தது.ஆக அமைதிப்படை யாழ்ப்பாணத்தைப் பிடித்தது... ஆனால் பிடிக்கவில்லை கதை தான். தேர்தலுக்கு மக்கள் வாக்குப்போட்டதுக்கு காரணம் அவர்கள் பகுதியில் பாதிப்பு இல்லாததால் அல்ல. வீடுவீடாக வந்து இந்திய ராணுவத்தினர் பலவந்தமாக இழுத்துச் சென்று வாக்குப்போட வைத்தார்கள்.அவர்கள் துப்பாக்கிக்குப் பயந்தே மக்கள் சென்றார்கள்.போனவர்கள் வாக்குச்சீட்டைக் குறுக்கே கீறிவிட்டு வந்தார்கள்.ஆனாலும் வரதராஜபெருமாள் போட்டி இன்றி முதல்வர் ஆனார்.
- நடந்த பாலியல் வல்லுறவுகள் கொலைகளுக்கு நடுவே... அமைதிப்படையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிகாரம் ஏதும் இன்றி இருந்த தமிழக மற்றும் மலையாள ராணுவவீரர்கள் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இந்தக் கொடுமைகளை எதிர்த்து மக்களை மட்டும் அல்ல புலிகளையும் காப்பாற்றியதை நீங்கள் சொல்லாவிட்டாலும் நாங்கள் நன்றியுடன் நினைவு கூருவோம் . தலைசாய்த்து நன்றி சொல்கிறோம்.
- தலைவர் பிரபாகரனை உள்ளது உள்ளபடி அப்படியே வெளிக்காட்டி விட்டீர்கள்.-அவரின் பக்தியையும் கூட. இன்றுவரைக்கும் அவரை நாத்திகராகப் பதிவு செய்தவர்களே அதிகம். தமிழக திராவிடக் கொள்கைக்கு அப்பாற்பட்டு நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே எல்லா மதத்தினரும் இருந்தோம்.- புலிகளின் விமானம் கொழும்புக்குத் தாக்குதலுக்குப் போக முன்னர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முருகன் கோவிலுக்கு மேல் சுற்றிப் பூப்போட்டு விட்டுப் போன போது என் தம்பிகள் போராளிகள்.- அதை ஓர் இடத்தில் நான் சொல்ல வெளிநாட்டுப் புலி ஒருவரும் நாம் தமிழர் ஆதரவாளரும் LOL போடுகிறார்கள்.-அது தான் தலைவர் மீதான இன்றைய பிம்பம்.
96 இல் வன்னி விட்டு வெளியேறிய நான் 2003 இல் பாதை திறந்த பிறகு வன்னிக்கு மறுபடி போன போது நான் விட்டு வந்த வன்னிக்கும் அப்போதைய வன்னிக்கும் வித்தியாசம் தெரிந்தது. ஒரு பேரரசுக்குள் உள்நுழைவது போல் பிரமிப்பு வந்தது. மறுபடி நீங்கள் குறிப்பிட்ட கப்பல் 2003 இல் மூழ்கடிக்கப்பட்ட போது என் தம்பியை இழந்தது என் சோகம். அதைத் தொடர்ந்து வந்த இரண்டாவது கப்பலும் தாக்கப்பட்டது.அது மட்டும் அல்ல அதற்குப் பிறகு புலிகளுக்கு ஆயுத சப்ளை நடக்கவே இல்லை.-உபாயம் கருணா. அதுவும் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்.
-எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய வம்சாவளி தமிழரைப் பூர்வீகத்தமிழர் வேறு வேறு பேர்களால் அழைத்தனர் என்று குறிப்பிட்ட நீங்கள் அந்தப் பேர்களில் ஒரு பேரைக்கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை.அந்தப் பெருந்தன்மைக்கு இலங்கைத்தமிழர் சார்பில் உங்களுக்குத் தலை வணங்குகிறேன்.காலம் மாறி இலங்கைத்தமிழர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த போது அதே சொற்றொடர்கள் அவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. அது காலத்தின் கோலம். 56/77 கலவரங்களுக்குப் பிறகும் கிராம குடியேற்றங்கள் போதும் இந்திய வம்சாவளி தமிழர்களில் ஒருபகுதியினர் வன்னியில் குடியேற்றப் பட்டனர்.அவர்கள் தமிழீழப் பிரஜைகளாகக் கணிக்கப்பட்டவர்கள்- தலைவர் பிரபாகரன் மட்டுமே இந்திய வம்சாவளித்த தமிழர் என்ற ஒதுக்கு நோக்குக்கு அப்பால் எல்லாத் தமிழர்களையும் தமிழீழப் பிரஜைகளாகப் பார்த்தார்.
எந்த ஞாபகங்கள் என்னை 10 வருடம் முன்னர் என்னைத் தூக்கமாத்திரை இல்லாமல் தூங்க முடியாமல் பண்ணியதோ எந்த நினைவுகள் இன்றுவரை நெஞ்சில் வேகாத கனலாக இருக்கிறதோ எதை மறக்க நான் தவியாய் தவித்தேனோ அதற்குள் என்னை மறுபடி தள்ளி விடுகிறது இந்த நூல்.
இந்த நூலை வாசிக்க வேண்டியவர்கள் வேறு யாரும் இல்லை.
இப்போதைய இலங்கைத்தமிழ் அரசியல் வாதிகள் -அனைவரும். தங்கள் முன்னோர்கள் விட்ட பிழைக்கான தீர்வு அவர்கள் தான் சொல்ல வேண்டும். தலைவர் ஒவ்வொரு மாவீரர் உரையிலும் சொல்லும் வாசகம் "போரை நாங்கள் விரும்பவில்லை.ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது.- திணித்தவர்கள் சிங்களவர் இல்லை. அன்று ஒன்று பட்ட இலங்கைக்குப் பாடுபட்ட பேராசை பிடித்த தமிழ்த்தலைவர்கள்.
முள்ளிவாய்க்கால் இருந்து வெளியேறிய மக்களுக்கு வைத்த முகாம்களின் பெயர்களில் ராமநாதன் அருணாச்சலம் பொன்னம்பலம் என்று வைத்த சிங்களவன் தெளிவானவன். அன்று அவர்கள் விட்ட பிழை தான் இன்று இந்த அவலத்துக்குக் காரணம். காலம் சுழன்று மறுபடியும் கறுவாத்தோட்ட தமிழர்களிடம் தமிழனின் இனப்பிரச்சனை போய்ச் சேர்ந்து விட்டது.அது தான் நிஜம். மீட்சி இல்லாத நிஜம். எங்களுக்கு ஒரு தலைவன் வந்தான்.அவன் நேர்மையாய் நின்றான். சொன்னதைச் செய்தான்.செய்வதை மட்டும் சொன்னான். ஈற்றில் தன உயிரையும் கொடுத்து முடித்துக்கொண்டான் என்கின்ற திருப்தியுடன் வாழலாம். அவ்வளவு தான். தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்கள். வீரமும் காட்டிக்கொடுப்பும் அருகருகே இருக்கும்.அது தான் அந்த தனிக்குணம்.
கட்டபொம்மனுக்கு எட்டப்பன்
பண்டார வன்னியனுக்குக் காக்கை வன்னியன்
பிரபாகரனுக்கு கருணாகரன்.
பெயரில் கூட rhyming இருக்கும் பாருங்கள்.அது தான் தமிழன் வரலாறு.
இதை எல்லாம் பார்க்கும் போது புலிகளின் பாடல் ஒன்று ஞாபகம் வரும்.
நாயே உனக்கும் ஒரு நாடா எச்சில் நாடும் உனக்கு வரலாறா ? தாயால் புலம்புகின்ற வேளை மாற்றான் காலை கழுவுகிற கோழை
அருணாச்சலம் ராமநாதன் தொடக்கி இன்று கருணா அங்கசன் பிள்ளையான சுமந்திரன் வரைக்கும். இவ்வளவு உண்மைகளையும் தேடி எடுத்து நூலாகிய உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகின்றேன்.
-------
இவர் ஐந்து முதலாளிகளின் கதை படித்துவிட்டு அடுத்த நாளில் அளித்த விமர்சனமிது.
5 முதலாளிகளின் கதை - ஜோதிஜி.
திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலை துறையின் உள்ளும் புறமும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. நூலின் முதல் முதலாளியிடம் அப்போது தான் வேலைக்குச் சேர்ந்ததைச் சொல்லி ஐந்தாவது முதலாளியாகக் கதாசிரியரே வந்து விடுகிறார்.
பணம் என்னவெல்லாம் செய்யும், அதிலும் முதல் தலைமுறைப்பணம் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றி அமைக்கும் என்கின்ற விபரம் ஒருபக்கம், ஒரு முதலாளி எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்று உதாரணங்களாக வாசிப்பவருக்குப் புரிய வைக்கும் அறிவுரை ஒருபக்கம் இதற்கிடையில் சாதாரணத் தொழிலாளியாக ஆரம்பித்து இன்று முதலாளியாக வளர்ந்திருக்கும் தன வெற்றியின் ரகசியத்தையும் சேர்த்தே வெளியிடுகிறார் ஆசிரியர்.
50 கோடி turn over காட்டியவர் அடுத்த வருடமே முகவரிகள் இல்லாமல் போவதும் தனிமனித ஒழுக்கம் கேள்விக்குறியாவதும்.. இதை எல்லாம் கடந்து அடுத்த தலைமுறையைத் தொழில் முனைவர் ஆக்குங்கள் என்ற வாசகம் எனக்குப் பிடித்து இருந்தது. கிண்டில் வாசிப்பு போட்டி, விமர்சனம் எல்லாம் கடந்து இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டது.
காரணம் ....
என் கடந்த கால வாழ்க்கையை மறுபடி நினைவு கூர வைத்து விட்டது. கனடா வந்த புதிதில், ஊரில் பார்த்த தொழில்,படித்த படிப்பு எல்லாம் மறந்து நானும் குடும்பச் சூழல் காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளில் ஒரு தொழிலாளியாக வாழ்ந்து இருக்கிறேன்.இந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட வாழ்க்கை,அதன் கஷ்டங்கள் எல்லாமே அனுபவித்து இருக்கிறேன். இங்கேயும் திருப்பூர் மாதிரியே சின்ன சின்ன கம்பெனி முதல் பெரிய கம்பெனி வரை உண்டு. நூலில் காட்டப்பட்டுள்ள எல்லா வித மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன்.
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்து எனக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது. காரணம் ஆடைத் தொழிற்சாலை கம்பனிகள் முடித்து அப்புறம் Long haul trucking கம்பெனிகளில் அடிபட்டு இன்று சொந்தமாக கம்பனி ஆரம்பித்து 3 மாதம் ஆகிறது.அதனாலேயே எனக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாகத் தெரிகிறது.வாழ்த்துக்கள் ஜோதிஜி.அமேசான் இல் review போட்டு இருக்கிறேன்.
--------------
பெங்களூரிலிருந்து பெண்மணி ஒருவர் அழைத்து இருந்தார். அவர் தம்பிக்குப் பெரிய தொகை கொடுத்து திருப்பூரில் தொடங்கிய நிறுவனம் கொரானா காலத்தில் சிக்கலில் மாட்ட அது குறித்துப் பேச விருப்பம் தெரிவித்து இருந்தார். (அவரும் இப்போது என் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறார்) அவர் முதல் முறையாக இலவச பிடிஎப் மூலம் என் திருப்பூர் குறித்த புத்தகம் படித்து விட்டு அதன் பிறகே என் வலைதளம் வந்து ஒவ்வொன்றையும் பொறுமையாகப் படித்துவிட்டுப் பேச எண் கொடுத்து இருந்தார். பேசினேன். பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு "என் டாலர் நகரம் புத்தகம் இருக்கும் புத்தகக்கடை எண் கொடுத்து வாங்கி படித்துவிட்டு அழையுங்களேன்" என்றேன். அடுத்த நாளே பெங்களூரிலிருந்து கடைக்கு அழைத்து வரவழைத்து முழுமையாகப் படித்து முடித்துவிட்டுப் பேசினார். இந்தத் தகவலையும் அளித்தார். இப்போது கிண்டிலில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
Sir, I have finished reading Dollar Nagaram book.fantastic.you have touched every nook and corner of Tirupur about business, people's mind, exporters mentality the exact position. Valgha valamudan . If I read this book in 2016, I could have avoid to start my production unit. Now I start to read your face book pages. Please refer me your other books. Thank you once again
நான் வாசகர்கள் அனுப்பும் எந்தத் தகவலையும் வெளியிடுவதில்லை. இங்கே இவற்றை வெளியிடக் காரணம் அரசியல் வரலாறு எழுதிய போது வீட்டில் மகள்கள் இடையே சண்டையில் நான் பார்த்த அனுபவங்களை இணையம் இளையர் பயன்படுத்துவது எப்படி? போன்ற சிந்தனைகளை சில அத்தியாயங்களாக எழுதி ட்ராப் டில் வைத்திருந்தேன். நன்றாகவும் வந்துள்ளது. ஆனால் இனி எதனையும் எழுத்து வடிவில் வெளியிடும் எண்ணம் எனக்கில்லை. காரணம் மற்றவர்களுக்காக அவர்களின் விருப்பங்களாக அவர்கள் தொடர்ந்து என்னை நச்சரித்துக் கொண்டு இருந்தார்கள் என்பதற்காக யூ டியூப் தளத்திற்குக் கடந்த ஆறு மாதங்களில் சென்றேன். பலவற்றுக்குக் காரணமாக இருந்தேன்.
வீட்டில் கடைசி மகள் வானொலி ஆர்ஜே போலவே பேசுவார். எங்கிருந்து கற்றுக் கொண்டார் என்பதே எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. மற்றொருவரும் எடிட்டிங் போன்ற தொழில் நுட்பச் சமாச்சாரங்களை நொடிப்பொழுதில் மேய்ந்து விடுகின்றார். ஆனால் இருவக்கும் இந்தத் துறையில் பெரிய ஈடுபாடு இல்லை. அப்போது தான் மகள் என்னை வைத்து ஷுட் செய்து வெளியிட்ட சென்ற வாரம் காணொளியைப் பார்த்து மிக நெருக்கமான நண்பர்கள் (இவர்கள் பல மாதங்களாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்) மீண்டும் சொன்னார்கள். இந்தப் பக்கம் வந்து விடு. இனியும் எழுதி நேரத்தை வீணாக்காதே என்றார்கள். எழுதிய பதிவுகளின் பார்வையாளர்களைப் பார்த்த போது மக்கள் வாசிப்பிலிருந்து மாறிவிட்டார்கள். நாம் தான் பிடிவாதமாக அவர்களை இழுத்துக் கொண்டேயிருக்கின்றோம் என்று தோன்றியது.
நான் எப்போதும் படிக்க வா என்று எவரையும் இழுப்பதில்லை. வெளியிட்ட காணொளியிலும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று அழைக்கவும் இல்லை. ஆனால் மடமடவென்று 100 பேர்களுக்கு மேல் ஒரே நாளில் சேர்ந்துள்ளனர். அதுவும் இவர்கள் என்னைக் கவனிக்கின்றார்களா? என்பது போன்ற நபர்கள் அனைவரும் உள்ளே வந்துள்ளனர். நிச்சயம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சூழல் பொறுத்து தொடர்ந்து வெளியிடப் போகின்றேன். குறிப்பாக கல்வித்துறை, தொழில் துறை, இளைய சமூகம், தற்போதைய அனுபவம் போன்ற இதுவரையிலும் எவரும் தொடாத பரபரப்புக்கு இல்லாதவாறு ஆவணம் போல என்றும் கேட்க வேண்டிய விசயங்களை ஆவணப்படுத்தப் போகின்றேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஜோ பேச்சு கேட்க வா யூ டியுப் தளத்தில் இணைந்து கொள்ள அழைக்கின்றேன்.
காரணம் நான் எழுதியுள்ள திருப்பூர் சார்ந்த மூன்று புத்தகங்கள் அடுத்த பத்து வருடத்திற்குத் தேவைப்படும். டாலர் நகரம் பஞ்சு முதல் பனியன் வரை 5 முதலாளிகளின் கதை
ஈழம் சார்ந்த ஒரு புத்தகம் அடுத்த 50 வருடத்திற்குத் தேவைப்படும்.
தமிழக அரசியல் வரலாறு புத்தகம் அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தேவைப்படும்.
இது என் கடமை. செய்து முடித்தாகிவிட்டது. 12 வருடங்கள் கழித்து ஒருவர் எழுதியது போல அடுத்த 15 வருடங்கள் கழித்து ஒருவர் விமர்சனம் இவரைப் போல கொடுத்தாலும் நம் உழைப்புக்கு அதுவே போதுமானது.
வலைதளத்தைப் பொறுத்தவரையிலும் நான் நுணுக்கமாக கவனித்த வரையிலும் தனபாலன் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் மற்றொருவர் செய்ய வேண்டும் என்றால் இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும். அதே போல வலையுலகில் ப.சிதம்பரம் போல நுணுக்கமான அறிவுடையவர் என்று மனதில் நினைப்பவர் நண்பர் முரளி. அவர் எல்லாம் ஐஏஎஸ் துறையில் சென்று இருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. இவர்கள் வருத்தப்பட்டு எழுதிய விதத்தைப் பார்த்து இதை எழுதத் தோன்றியது.
10 comments:
அடுத்த இடத்திற்கு நகர்வு - மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் அண்ணே...
நன்றி... அப்புறம் எதையும் புதிதாக செய்யவில்லை... இருக்கும் சிலவற்றை (html) எனது விருப்பம் போல் செய்து கொண்டிருக்கிறேன்...
"செய்யும் தொழினுட்ப வேலைகளுக்கு காரணம் திருக்குறள்..." (!)
சிலரின் உரைகளை கேட்கும் போது, இவை எழுத்து வடிவில் இருக்கக் கூடாதா என்று நினைப்பதுண்டு... அதனால் அவசரப்பட்டு மாறினால்... சில நாட்களிலே தட்டச்சு வாராமல் போகலாம்... அதை விட எண்ணங்கள்...!
ஒன்று செய்யுங்கள் :- எடிட்டிங் செய்யும் செல்ல கலைமகளிடம் சொல்லுங்கள்... காணொளியில் உரையை ஆரம்பிக்கும் போது, பக்கத்தில் -Google docs-ல் ஒரு பக்கத்தை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்... பேசுவதை எல்லாம் தானே தட்டச்சு செய்யும்... ஆமாம், ஏற்கனவே எழுதி வைத்ததைப் பார்த்து பேசுவதில்லை தானே...? ஏனெனில், உங்க தல மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை, இவ்வளவு நாள் பேசிட்டு இருக்கு... அதுபோல ஆக வேண்டும் என்றால், தட்டச்சு செய்வதை மறக்கலாம்...
// வாராமல் // "வராமல்"
நண்பர் முரளி அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்... சொந்தமாக வலைத்தளம் வைத்திருந்தும் பதிவுகள் தொடர்வதில்லை... Excel-ல் மிகுந்த ஈடுபாடு + புதிர்கள் என பலவற்றில் ஆர்வம் உண்டு...
அண்ணே... வலைப்பூ, முகநூல், புலனம் வலையொளி என அனைத்தையும் நாம் தான் பயன்படுத்த வேண்டும்... அவைகள் (+ அவர்கள்) நம்மை பயன்படுத்திக் கொண்டால், மீள்வது சிரமமே...
எங்க தல பிறப்பிலேயே புத்திசாலி. உங்களுக்குத் தான் அவர் அருமை தெரியல.
உங்கள் எழுத்தானது காலங்காலத்திற்கும் பேசப்படும் என்பதை நாங்கள் அறிவோம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
1993இல் பௌத்தம் தொடர்பான ஆய்வில் அடியெடுத்து வைத்தபோதும் முதல் புத்தர் சிலையை 1999இல் கண்டுபிடித்தேன். நாளிதழ்களில் செய்திக்குறிப்பு (Press note) தந்துவிட்டு அவசரம் அவசரமாக அடுத்த சிலை கண்டுபிடிப்பில் ஈடுபட்டேன். நாளிதழில் முதல் செய்தி வந்தபோது நான் இருந்த படபடப்பு மற்றும் ஆர்வம் பற்றி ஒரு நண்பர், "அவசரப்படாதீர்கள். இன்னும் 20 வருடங்கள் கழித்து உங்கள் ஆய்வு நன்கு பேசப்படும்" என்றார். தொடாத ஒரு துறையில் சிரமப்பட்டு உழைக்கும் இந்த உழைப்பு வீண் போகிறதே என்று அப்போது நினைத்ததுண்டு. எழுதும் எழுத்துக்கும், உழைப்பிற்கும் கிடைக்கும் வெகுமானம் சற்று தாமதமானாலும் கிடைக்கும். அதை எதிர்பார்த்து செய்யாமல் பயணிக்க வேண்டும் என்பதை நாளடைவில் உணர்ந்தேன். தொடர்ந்து எழுதுவோம்.
தமிழ்த் தாத்தா உவேச அடுத்த 200 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சமூகம் நம்மை நினைத்துப் பார்க்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் செயல்பட்டது போல உங்கள் உழைப்பு அடுத்த மூன்று தலைமுறைக்கும் தேவைப்படுவதாக இருக்கும். அப்போது உங்கள் புகழ் பட்டொளி வீசி பறக்கும்.
நன்றி ஜோதிஜி . எனக்காகவே எழுதியது போல் உள்ளது.தங்கள் கருத்தை ஏற்கிறேன். முகநூலின் தன்மையை உணர்ந்தே எழுதினேன். முகநூலில் எழுதிய பதிவை வலைத்தளத்திலும் எழுதி இருக்கிறேன். வலைத்தளத்தில் ஏமாற்றம் இல்லை. நீண்ட நாட்கள் எழுதாவிட்டாலும் யாரேனும் தேடி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் என்மீது வைத்திருக்கும் நன் மதிப்பிற்கு நன்றி.
நீங்கள் அற்புதமான சமூவியலாளர். சமுதாயத்தை உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் அரசியல் பார்வையைக்கூட சமூக மாற்றங்களை அடிப்படையாக வைத்தே பதிவு செய்கிறீர்கள். சமூக அரசியல் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு முன் பின் நிலைகளை ஆய்வு செய்கிறீர்க்ள். காலத்திற்கேற்ப தொழிநுட்ப மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு சோர்வுறாமல் இயங்கி வருவது உங்கள் தனிச் சிறப்பு.அதனால் பலருக்கும் தூண்டுகோலாக இருக்கிறீர்கள். நல்ல பதிவுகளை சளைக்காமல் பகிரவும் செய்கிறீர்கள். வலைப்பூ மூலம் அறிமுகமான பொருளடக்கம் மிக்க அரிதான பதிவர்களில் நீங்களும் ஒருவர். மேலும் உயரங்களை எட்ட வாழ்த்துகள்
ஒரு பதிப்பக முதலாளி சொன்ன வாசகம் இது. சாராயக்கடை எவர் பார்வையிலும் படாமல் ஏதோவொரு சந்துக்குள் வைத்து இருந்தாலும் மக்கள் தேடிப் போய் வாங்குவார்கள். எங்களைப் போன்ற புத்தக கடைகள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வைத்திருந்தாலும் எவர் தேவையோ அவர் மட்டும் தான் வருவார் என்றார். மற்றொரு எழுத்தாளர் ஈ ஒரு இடத்தில் அதிகமாக மொய்க்கின்றது என்றால் அது அழுகின பொருளாகத்தான் இருக்கும். நல்ல பொருட்களின் மேல்அதிகமாக எதுவும் மொய்ப்பதில்லை என்றார். நான் வலைதளம் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்றவற்றில் செயல்படும் போது சோர்வு இல்லாமல் இன்னமும் செயல்பட முக்கியக் காரணம் இது போன்ற எதார்த்த வார்த்தைகள் என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். குறைவான எண்ணிக்கை இருந்தால் போதும் என்றே ஃபேஸ்புக்கில் சேர வருபவர்களை பார்த்துப் பார்த்து சேர்க்கின்றேன். அப்போதும் கூட பஞ்சாயத்தை கூட்டி விடுகின்றார்கள். ஆனாலும் என் கருத்தை உரக்கவே சொல்லி வருகின்றேன். உங்கள் திறமைகளை தயவு செய்து உங்கள் வாரிசுகளுக்கு கடத்துங்க. உங்களைப் போன்ற நபர்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவான நபர்கள் தான் இருக்கின்றார்கள். வாழ்த்துகள். மகிழ்ச்சி.
உங்களுடைய YouTube தளத்துக்கு வாழ்த்துகள் ஜோதிஜி. இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது.
படிப்பதை விடப் பார்க்கக் கேட்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
முன்னரே கூறியபடி இதிலும் நீண்ட நேர காணொளிகளைப் பலரும் விரும்புவதில்லை. YouTube நிறுவனமே 1தற்போது 5 நொடிகள் காணொளிகளுக்கு வந்து விட்டது.
எனவே, இதையும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி கிரி. நான் தொழில் குடும்பம் விருப்பம் இந்த மூன்றிலும் எனக்கென்று சில தனிப்பட்ட கொள்கைகள் வைத்துக் கொள்வதுண்டு. நான் செய்வது எனக்கு முதலில் பிடிக்க வேண்டும். எனக்கு திருப்தியைத் தர வேண்டும். அப்படி திருப்தி தராதபட்சத்தில் அதனை நான் செய்ய விரும்புவதே இல்லை. நான் இந்த தளத்தில் 7 நிமிடம் 10 நிமிடம் என்று அந்தந்த பொருளுக்குத் தகுந்தாற் போல அமைந்தும் உள்ளது. ஆனால் ஐந்து நிமிடத்தில் எதையும் பேசிப் புரிய வைக்கவே முடியாது என்பதனை பல்வேறு ஆராய்ச்சிகளை வைத்து புரிந்து கொண்டேன் கிரி. என் எழுத்துக்கு வரக்கூடியவர் திட சிந்தனை உள்ளவர்கள், நிதானமாக வாசிக்க முடிந்தவர்கள், நேரம் இருக்கும் போது அமைதியாக வாசித்து விட்டு செல்பவர்கள் படிப்படியாக வளர்ந்து எனக்கென்று ஒரு வட்டம் உருவானது போல இதிலும் உருவாகும் என்றே நம்புகிறேன். அப்படி உருவாக பட்சத்திலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். கடந்த இரண்டு விசயங்கள் சரியாக இருபது நிமிடங்கள் தான் வந்து நின்றது. மகள்களிடம் கேட்கச் சொன்னேன். போர் அடித்தால் சொல்லுங்க என்றேன். இல்லை நன்றாகவே உள்ளது என்றனர். நான் எதிர்பார்த்தது 18 முதல் 25 வயது. நீங்கள் ஆச்சரிப்படுவீர்கள். கடந்த இரண்டு காட்சிகளும் கூகுள் சொன்ன கணக்குப்படி 84 சதவிகிதம் இந்த வயதுக்குள் இருப்பவர்கள் தான் பார்த்துள்ளனர். நான் பார்த்தவரைக்கும் 130 பேர்கள் பார்த்துள்ளனர். அதுவும் முழுமையாக கேட்டு உள்ளனர். இது எல்லாமே கூகுள் கணக்கு தந்துள்ளது. எதையும் நான் பொழுது போக்காக அணுகுவதில்லை. வலைதள மக்கள் பார்க்கவில்லை. விரும்பவில்லை. சிலரைத் தவிர்த்து. உணர்ந்தே வைத்துள்ளேன். ஆனால் அமெரிக்காவில் இருந்து ஒருத்தர் அடுத்த காட்சியில் நான் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று ஒரு பட்டியல் அனுப்பி உள்ளார். ஆஸ்திரிரேலியா பெண்மணி நீங்க எழுதிய சத்து மாவு குறித்து பேச்சாகப் போடுங்க என்று எழுதி அனுப்பி உள்ளார். வாழ்க்கை என்பது வித்தியாசமானது. 50 வயது எல்லாம் ரிஜெக்ட். பசங்க ஆர்வமாக இருக்கின்றார்கள். எவ்வளவு நேரம் என்பதனை விட என்ன கற்றுக் கொண்டோம் என்பதில் தான் நம் உழைப்பு உள்ளது. உணர்ந்தே வைத்துள்ளேன் கிரி.
Post a Comment