Saturday, September 26, 2020

SPB - உளப்பூர்வமான அஞ்சலி

எட்டுக் கோடி தமிழர்களில் இன்னமும் பாதிக்குப் பாதி பேர்கள் திறந்தவெளி கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். ஆரோக்கியம் சார்ந்த விசயங்களில் அவரவர் பக்தி மற்றும் மூட நம்பிக்கைகள் தான் இன்னமும் இங்கே நிலவுகின்றது. நடுத்தர வாழ்க்கை வரைக்கும் பொருளாதார நிலையில் உயர்ந்துள்ள தமிழினம் இன்னமும் பொது சுகாதார விசயங்களில் எண்ணம் அளவில் உயராமல் தான் இருக்கின்றார்கள்.

https://youtu.be/vUx96kd1bCc


000

கசகசக்கும் போக்குவரத்து நெரிசலில் எரிச்சலுடன் நின்று கொண்டிருந்த போது மகளார் அழைத்துச் சொன்னார்.

"உங்கள் காதலி இறந்து விட்டார்"

"டேய் அந்தப் பொண்ணு பொள்ளாச்சியில் என்னைப் போல ரெட்டப் புள்ள பெத்து நல்லாத்தான் இருக்குது. ஏன்டா அந்தப் பிள்ளையைச் சாகடிக்கிற" என்றேன்.

பச்சை விளக்கு எரிந்த போது மகள் சொன்ன வார்த்தை "எஸ்பிபி இறந்து விட்டார்".

ஆழ்மனம் அழுதாலும் கடந்த ஐம்பது நாட்கள் அவர் அடைந்த துன்பங்களை, பலமுறை இறந்து துன்பத்தோடு உழன்றதைப் பட்டியலிட்டுப் பார்த்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலில் கரைந்தேன்.

எஸ்பிபி யிடம் செல்வம் செல்வாக்கு இருந்தது.

ஐம்பது நாட்கள் தாக்குப்பிடித்தார்.

ஆனால் வடிவேல் பாலாஜி என்றொரு சின்னஞ்சிறு சின்னத்திரை நடிகர் இறந்த போது இப்படியொரு ஜீவன் இந்த உலகத்தில் இருந்தாரா? என்று என்னைப் போன்ற வெளியுலகம் தெரியாதவர்கள் அதன் பின்னே அவரைப் பற்றி அறிந்து கொள்ள முயன்ற போது அவர் அம்மா கதறுதலுடன் சொன்ன வாசகம் என் மனதில் பட்டுத் தெரித்தது.



"இருந்த பணம் கடன் வாங்கிய தொகை என்று இருபது லட்சத்தைச் செலவு செய்தும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை" என்று கதறிய அவரின் வார்த்தைகள் அந்தச் சின்ன நடிகரைப் பற்றி 1M (பத்து லட்சம்) பலவிதமான தலைப்புகளில் போட்டுச் சம்பாதித்து கல்லாக் கட்டிய யூ டியூப் சேனல் மக்களுக்கும், போதாக்குறைக்கும் பெரிய ஊடக மக்களும் இனி அடையப் போகும் லாபத்தை யோசிக்கத் தோன்றியது.

தென்னிந்தியா மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் அறிவிக்கப்படாத உறுப்பினராக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற இனி வாழப் போகின்ற எஸ்பிபி மரணத்தை வைத்து எத்தனை லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சம்பாதிக்கத் தயாராக இருக்கின்றார்களோ? என்பதனை யோசித்துப் பார்த்தேன்.

இங்கே பசிக்கு ருசிக்கும் மிருகங்கள் பலவுண்டு. ஆனால் பல நூறு மிருகங்களின் மொத்தப் பெயர்களையும் தங்களுக்குள் வைத்துக் கொண்டு வாழும் மிருகங்களுக்கு ஒரே ஒரு பெயர் தான்.

அதன் பெயர் மனிதன்.😔

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

போகும் பாதை தூரமே... வாழும் காலம் கொஞ்சமே...
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா...
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
கேளாய் பூமனமே...

subramanian said...

கண்களிடம் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்திலிருந்தே கவிதையை முடித்தான் .
அந்த இறைவன் என்றொரு கவிஞன் .
RIP பாலு

வெங்கட் நாகராஜ் said...

ஒரே பெயர் மனிதன்.... :(

பாடும் நிலா பாலு - அவரது ஆன்மா நற்கதியடைய எனது பிரார்த்தனைகளும்.

Yaathoramani.blogspot.com said...

நம்மை அன்றாடம் தூங்கவைத்தவர் இனியேனும் நிம்மதியாய்த் தூங்கட்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கல்

ஜோதிஜி said...

நம் குடும்பத்தில் இறந்த ஒருவர் போல கடந்த 48 மணி நேரமாக மனம் ஆற்றாமையில் தவிக்கின்றது.