Wednesday, February 05, 2020

அகரம் அறக்கட்டளை 10 வது ஆண்டில்


மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுக்கு,

அகரம் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியைக் காணொலிக் காட்சி வழியாகக் (முழுமையாக) கண்டேன்.  நெகிழ்ச்சியுடன் என் எண்ணத்தைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். அதன் பொருட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்.

தமிழகத்தில் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப்பருவம் வரைக்கும் பாடங்களைப் பற்றி மாணவர்கள் அக்கறைப்படுவதை விடத் தமிழகத் திரை உலகம் சார்ந்த விசயங்கள், வாசிப்பு, விருப்ப நாயகர்கள், நாயகிகள் தான் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்து விடுகின்றார்கள்.  ஒவ்வொருவரும் தத்தமது வேலை தேடி தனக்கான சொந்த வாழ்க்கையை அடையாளம் காண அலைந்து திரியும் போதும் திரைப்பட உலகம் சொல்லும் கனவு வாழ்க்கை தான் அவர்களின் ஆழ்மனதில் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளதை நான் அறிந்தே வைத்துள்ளேன். திருமண வாழ்க்கைக்குப் பின்பும் கூட இது மாறுவதில்லை. 

ஆனால் திரையுலக ஜிகினாக்கள், மினுமினுப்புகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான வாழ்க்கையை எவரும் உணர்வதில்லை. ஜொலித்த நட்சத்திரங்கள் ஏன் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, மன ரீதியாக தங்களை இழந்து நிர்க்கதியாகப் பொருளாதாரப் பலமில்லாமல் கடைசி வாழ்க்கையைக் கொடுமையாக வாழ்ந்து முடிக்கின்றார்கள் என்பதனையும் யோசிப்பதில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற செல்வத்தின் மூலம் சமூகத்திற்கு என்ன செய்தார்கள் என்பதனையும் எவரும் யோசிப்பதில்லை.

ஆனால் தொடக்கம் முதலே இது குறித்துப் புரிதல்  ஆழமாக என்னுள் தாக்கத்தை உருவாக்கியிருந்த காரணத்தால் நான் தொடர்ந்து எழுதும் எழுத்துகளில் மன ரீதியான உளவியல் ரீதியான தாக்கத்தை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தெரியப்படுத்தி வந்துள்ளேன்.

நான் நேரிடையாகச் சந்தித்த பலரில் நீங்கள் முக்கியமானவர்.  காரணம் நீங்கள் ஓவியர், திரைப்பட நட்சத்திரம், மேடைப் பேச்சாளர் என்பதனைக் கடந்து நீங்கள் வாழும் வாழ்க்கை, உங்கள் வாரிசுகளை அதே பாதையில் கொண்டு வந்து நிறுத்திய விதம் என்று அனைத்து விதமான ஆச்சரியங்களையும் எனக்குக் கடத்தி என்னை என் குடும்ப வாழ்க்கையை நல்வழிப்படுத்தியவர் என்கிற ரீதியில் நான் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதனை இப்போது மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பொதுவாக நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள்.  உணர்ச்சிகரமான வாழ்க்கை தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். பெரிய ஜனத்திரள், காதுகள் உள்வாங்க முடியாத அளவிற்குக் கைத்தட்டலைப் பெற்று எது நிஜம் எது பொய் என்பதனை உணர முடியாத சூழலுக்கு வாழப் பழகியவர்கள் என்பதனை பலரின் வாழ்க்கையின் மூலம் பல சந்தர்ப்பங்களில் பார்த்து வந்துள்ளேன்.  ஆனால் எல்லாவற்றிலும் நீங்கள் கடைப்பிடிக்கும் நிதானம், எதையும் விலக்காமல், எதையும் உடனே அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், கடந்த வந்த பாதையை எதனையும் மறக்காமல் நீங்கள் வாழும் வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் லட்சத்தில் ஒருவரால் தான் முடியும். எண்ணங்களில் நீங்கள் மகா மகா கோடீஸ்வரன்.

எழுதிப் புரிய வைக்க முடியாது. தொடர்ந்து நடிக்கவும் முடியாது.  சதை, நரம்பு, மனம், மூளை என்று நான்கிலும் நன்னெறிகளும், நல்ல சிந்தனைகளும், நேர்மறையாகவே பார்த்துப் பழகிய விதங்களும் தான் இதனை நமக்குள் உருவாக்கும் என்பதனை நான் என் 50வயதில் உணர்ந்துள்ளேன்.  உங்களைப் பார்த்து அந்த வாழ்க்கை தான் நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

தற்போதைய தொழில் நுட்ப உலகில் 90சதவிகிதம் எதிர்மறை விசயங்கள் மட்டுமே தாக்கத்தை உருவாக்கும் சூழலில் நீங்கள் மற்றும் உங்கள் வாரிசுகளும் இது போன்ற கல்விப்பணியை ஆத்ம சுத்தியாகச் செய்வது வருவது என்பது பாராட்டு என்று வெறுமனே ஒற்றை வார்த்தையில் அடக்கி விடமுடியாது? 

ஞானவேல் சொன்னது போல நீங்கள் ஏந்திய ஜோதியிது. நல்ல சிந்தனைகளுடன் உருவாக்கப்பட்ட ஜோதி.  நான் பட்ட கஷ்டம். வருகின்ற மாணவர்கள் படக்கூடாது என்று உருவாக்கிய ஜோதி.  சாதி, மதம் கடந்து கல்வி ஒன்றே ஒருவனை உயர்த்தும். அதுவே வாழ வைக்கும் என்று தீர்க்கமாக உணர்ந்து உருவாக்கப்பட்ட ஜோதி.  நான் சேர்த்து வைத்துள்ள, சேர்த்துக் கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான பணம் நிரந்தரமல்ல என்ற எதார்த்தத்தை உணர்ந்து உருவாக்கப்பட்ட ஜோதி. இதனையே அனைத்து அரசியல்வாதிகளும் சொன்னார்கள். அவர்கள் சொன்னது வார்த்தைகளில் மட்டுமே இருந்தது. நீங்கள் வாழ்க்கையாக மாற்றி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

வள்ளலாளர் ஏற்றிய ஜோதி இன்று வரையிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது பசிப்பிணியை  நீக்க உருவாக்கப்பட்ட ஜோதி.

 காமராஜர் உருவாக்கிய ஜோதியை இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
அது கல்வியறிவைப் பரவலாக்கிய ஜோதி.  

ஆனால் நீங்களும், உங்கள் குடும்ப உறுப்பினர்களும் உருவாக்கிய ஜோதி என்பது கிராமத்து மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஜோதி.  பணம் இல்லாமல் இருந்தால் கூட அகரம் எங்களை வழிநடத்தும். வழிகாட்டும் என்று உருவாக்கப்பட்ட ஜோதி 

நீங்கள் சொன்னது போல இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இராஜராஜன் சோழன் போல, இராஜேந்திர சோழன் போல அடுத்த பத்துத் தலைமுறைக்குப் பின்னாலும் சூர்யாவின் பேரனுக்குப் பேரனும் வாழும் காலச் சூழலில் பேசப்படும் என்பதே நான் அறிந்த உண்மை.

தலைவன் சரியாக இருந்தால் மொத்த நாடே நன்றாக இருக்கும். குடும்பத்தலைவன் சரியாக இருந்தால் அடுத்த ஏழு தலைமுறைகள் சிறப்புற்று வாழும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வாழ்க்கையை நான் வாழும் காலத்தில் என்னால் பார்க்க முடிந்துள்ளது. உங்களுடன் பேசியுள்ளேன். பழகியுள்ளேன். உங்கள் அன்பில் நெகிழ்ந்துள்ளேன் என்பதே என்னைப் பொருத்தவரையிலும் பெரிய சாதனையாக எனக்குத் தெரிகின்றது.

நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், அகரம் அறக்கட்டளையில் தன்னலமற்று பணியாற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தேவியர் இல்லம் திருப்பூர் சார்பாக எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரியப்படுத்துங்கள். அகரம் அறக்கட்டளையில் நான் கவனித்த மற்றொரு உண்மை என்னவென்றால் அதிகாரம் என்பது பரவலாக்கும் போது அது எளியவர்களை எளிதாக சென்று சேரும் என்பது போல ஞானவேல், ஜெயஸ்ரீ போன்றோர்களை சூர்யா சுதந்திரமாக செயல்பட அனுமதித்தமைக்கு என் ஆயிரம் பாராட்டுக்கள்.

பேராசிரியர் கல்யாணி உருவாக்கிய மாடலை தொடர்ந்து இன்னமும் கடைபிடித்து வருவதற்கு லட்சம் பாராட்டுகள்.  

இது எங்கள் நிர்வாகம் என்று கருதிக் கொள்ளாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எவரும் இதில் தலையிடாமல் அமைப்பு என்பது எளியவர்களுக்கானது என்பதனை உணர்ந்து எவருக்கும் சிபாரிசு என்ற பெயரில் உள்ளே நுழையாமல் இருக்கும் உங்கள் குடும்பத்துக்கு கோடி பாராட்டுகள்.

நல்லோர் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை
.
எந்நாளும் நலமாய் வாழ என் வாழ்த்துகள்.

அளவில்லாத பிரியங்களுடன்
ஜோதி கணேசன் (ஜோதிஜி)
திருப்பூர்.
6 comments:

வருண் said...

சிவகுமார் பத்தி அமுதவன் சார்க்குத்தான் ரொம்பத் தெரியும். எனக்கு இந்த அறக்கட்டளை பத்தி சரியாத் தெரியாது. ஏதோ நல்லது பண்றார்னு தோனுது.

எனக்கு சிவகுமாரிடம் பிடித்தது, செல்ஃபி எடுக்க வர்ரவன் ஃபோனை தூக்கி எறிவது மற்றும் நம்ம ஐ டி மக்கள் ஃப்ரீ செக்ஸ் வைத்துக்கொண்டு பயன்படுத்திய காண்டத்தை ஒழுங்கா டிஸ்போஸ் பண்ணாமல் காண்டம் சாக்கடையை அடைப்பது பத்தி விம்ரசனம். If you dont know how to get rid of the condom you use, then dont "fu..." YOU IDIOT! நம்ம ஆளு எதையுமே ஒழுங்கா செய்யமாட்டான், இதுலமட்டும் எப்படி சரியா செய்வான்? :)

G.M Balasubramaniam said...

தனி மனிதர் புகழ்ச்சி என்பதை விட நல்ல செயல்களைப் பார்ராட்டுகிறீர்கள் என்பது புரிகிறது

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கடிதம். நல்ல விஷயங்களைச் செய்து வரும் அவருக்கும் அவர் தம் புதல்வர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ஜோதிஜி said...

சரியான பார்வை. அருமை.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அதிரடி. மாஸ். நாம் இதை சொன்னால் இங்கே அடிக்க வருவார்கள்.