Saturday, February 29, 2020

தொழில் சமூகத்தை ஆதரிப்பவர்கள் யார்?

இங்கு எந்த ஊடகங்களுக்கும் தொழில் சார்ந்து வென்றவர்களைப் பற்றி முறையாக ஆவணப்படுத்தவில்லை அல்லது தோற்றவர்களை ஏன் தோற்றார்கள்? என்ன காரணங்கள்? அக புறக் காரணிகள் என்ன என்பதை எந்த விவாத நெறியாளர்களும் நெறியாள்கை செய்ததே இல்லை.

இங்கு காட்டப்படும் சித்திரங்கள் அனைத்தும் போலியானது. சினிமாத்தனமானது.

மொத்தமாகச் சரிவில் உள்ள தொழில் நகரங்களின் உள்கட்டமைப்பு குறித்துக்கூடக் கவலைப்படுவதும் இல்லை. கவலைப்பட வேண்டியவர்களுக்கு கட்சி சார்பாளர்களாகவே மாறிவிடுகின்றார்கள்.

தமிழகத்தில் ஐந்து தலைமுறையாக முறையாகத் தொழில் செய்தவர்கள் 30 வருடங்களில் உலகப் பணக்காரர் ஆனதாகச் சரித்திரம் பூகோளம் கணக்கு எதுவும் இங்கே இல்லை. ஆனால் இந்த வாய்ப்பு வட மாநிலங்களில் சாத்தியமாக உள்ளது. அது குறித்தும் இங்கே எவரும் பேசுவதே இல்லை.தமிழகத்தில் உள்ள பெரிய தொழிலதிபர்கள் சமூக வலைதளங்களில் செயல்படுவதில்லை. தங்களை அரசியலில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே அவர்களுக்கு தனித்திறமை தேவைப்படுகின்றது?

ஒரு பக்கம் சினிமா. மறுபக்கம் அரசியல். ஜிகினா பேச்சுகளும் கற்பனைகளும். அதேபோல சில்லறைத்தனமான விவாதங்களும் நிரம்பி வழிகின்றது. அதை சரியென்று நம்பும் கூட்டம் ஒரு பக்கம். இப்படித்தான் ஊடக தர்மத்தை சிதைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டும் போக்கு மறுபக்கம்.

நெறியாள்கை செய்தவன், அதை ஒருங்கிணைத்து ஊடக மொழியாக மாற்றியவன் எவனுக்கும் சமூகத்தின் ஒவ்வொரு நம்பிக்கை செங்கல்களை நாமும் சிதைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கருதுவான் என்றா நினைக்கிறீர்கள்?

திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இங்குள்ள சங்கத்தின் ஒத்துழைப்போடு மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி அளிக்க, பயிற்சி அளிக்கும் போதே மாதச் சம்பளமும் அளிக்கத் தயாராக இருந்தது. ஒவ்வொரு தாலுகா வாரியாக அலைந்து திரிந்து கணக்கு எடுத்து இத்தனை லட்சம் பேர்களுக்கு வேலைத் தேவைப்படுகின்றது என்று அவர்களுக்கு நம்பிக்கை நாற்றுகளை விதைக்கத் தயாராக இருந்தார்கள். இறுதியில் பயிற்சிக்குச் சிலர் கூடத் தயாராக இல்லை என்பதே தற்போதைய தமிழகச் சமூகத்தின் வளர்ச்சி.

வாகன நிறுத்துமிடம் கண்காணிப்புப் பணிக்குத் தொழில் நுட்பம் படித்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் முண்டியடித்து வரிசைகட்டி நிற்கின்றார்கள் என்பதனை வாசிக்கும் போது நாம் திரும்பவே முடியாத நிலைக்கு நீண்ட தூரம் வந்து விட்டோம் என்றே தோன்றுகின்றது.

சினிமா இங்கே கற்பனைகளை மட்டும் வளர்த்தது. வெற்று அரசியல் கூச்சல் இளைய சமூகத்தின் செயலாக்கத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தோன்றுகின்றது.

வடமாநில இளையர் கூட்டம் நாளுக்கு நாள் உள்ளே வந்து கொண்டேயிருக்கின்றது. திருப்பூருக்குள் மட்டும் ஒரு நாளைக்கு 700 முதல் 1000 பேர்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று கணக்கீடு சொல்கின்றது.

நாம் கண்களை மூடிக் கொண்டு கனவு காண்கின்றோம். நமக்கு இப்போது எது தேவையோ? அதைத் தவிர்த்து மற்ற அனைத்தும் இங்கே பேசு பொருளாக உள்ளது. முத்திரை குத்தப்படுவோம் என்ற பயத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு முகத்திரையை மாட்டிக் கொண்டு வாழ பழகி விட்டோம்.

*************

இன்று காலை Messenger மூலம் கடிதம் வந்தது. நள்ளிரவு நேரம். வாசிக்கத் துவங்கினேன். தூக்கம் கண்களைக் தழுவுகின்றது. வாசிக்கும் சுவராசியத்தில் விட்டுச் செல்ல மனமில்லை. தொடர்ந்து வாசிக்கின்றேன். ஏற்கனவே திருப்பூர் குறித்து ஓரளவுக்குத் தெரிந்திருந்த போதும் வாசிக்க வாசிக்க என்னை இழுத்துக் கொண்டே செல்கின்றது என்று எழுதியுள்ளார் அமெரிக்காவில் வாழும் நண்பர். Saravanan Subbiah

கடந்த கிண்டில் போட்டியில் கலந்து ஐந்து முதலாளிகளின் கதை.

சென்ற வாரம் அரசாங்கம் பாட நூல் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள ஒருவர் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார். திருப்பூர் பையன். ஐஏஎஸ் தேர்வு எழுதச் செல்கிறான். நிச்சயம் திருப்பூர் குறித்து உள்ளும் புறமும் அவனுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் சிறுவயது முதல் விடுதியில் தங்கியே படித்து வந்த காரணத்தால் (ஒரு பெரிய முதலாளியின் பையன்) முழுமையாக ஊரைப்பற்றித் தெரியவில்லை. அவனுக்குக் கட்டாயம் திருப்பூர் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். உங்கள் புத்தகத்தை இப்போது படித்தே ஆக வேண்டும். இணைப்பு கொடுங்கள் என்று கேட்டு இருந்தார். அனுப்பி வைத்தேன்.

குறிப்பிட்ட காலம் நாம் உழைக்கும் உழைப்பென்பது அது எப்போதும் வீணாகாது. நாம் தெளிவாக உழைத்து இருந்தால் தானாகவே சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேரும். நம்மையும் கொண்டு சேர்க்கும் என்பதற்காக இதனை இங்கே எழுதத் தோன்றியது.

கடந்த ஒரு மாதத்தில் நிரந்தரமாகக் குறைந்தபட்சம் வாரந்தோறும் 200 பேர்களை டிஜிட்டல் வாசிப்பாளராக மாற்றியதில் அதிக மகிழ்ச்சி.

#டிஜிட்டல் வாசிப்பு
#இலவசமாக
#5முதலாளிகளின்கதை


12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கடந்த ஒரு மாதத்தில் நிரந்தரமாகக் குறைந்தபட்சம் வாரந்தோறும் 200 பேர்களை டிஜிட்டல் வாசிப்பாளராக மாற்றியதில் அதிக மகிழ்ச்சி.

மிகப்பெரும் சாதனை ஐயா
வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான சாதனை. அமைதியாக சிறப்பாக செய்துவருகின்றீர்கள். பாராட்டுகள்.

ரா.சிவானந்தம் said...

எங்கேயோ படித்தேன். எல்லாமே சாத்தியமில்லாததுதான், ஒருவர் அதை சாதிக்கும் வரை. ஜோதிஜி அதை சாதித்திருக்கிறார்

உங்களை பின் தொடர்ந்து பலரும் வருவார்கள். நானும் ...

திண்டுக்கல் தனபாலன் said...

இது தான் உண்மை...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. தொடர்ந்து நல்ல விஷயங்களை பகிர்ந்து வரும் உங்களுக்கு பாராட்டுகள்.

ஜோதிஜி said...

உங்களின் தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

ஜம்புலிங்கம் போன்றவர்களை வாழும் காலத்தில் தமிழகம் கொண்டாடி இருக்க வேண்டும் தனபாலன்.

ஜோதிஜி said...

அன்பும் நன்றியும். நாம் வாழும் காலத்தில் என்ன செய்தோம் என்கிற விதத்தில் இதுவொரு சின்ன முயற்சி. அவ்வளவு தான்.

ஜோதிஜி said...

நன்றி

G.M Balasubramaniam said...

அப்ப்ரெண்டிஸ்ஷிப்புக்கு கிடைக்கும்ஊதியம் பற்றியும் சொல்லி இருக்கலாம்

ஜோதிஜி said...

தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

மாறன் said...

""""தமிழகத்தில் ஐந்து தலைமுறையாக முறையாகத் தொழில் செய்தவர்கள் 30 வருடங்களில் உலகப் பணக்காரர் ஆனதாகச் சரித்திரம் பூகோளம் கணக்கு எதுவும் இங்கே இல்லை. ஆனால் இந்த வாய்ப்பு வட மாநிலங்களில் சாத்தியமாக உள்ளது. அது குறித்தும் இங்கே எவரும் பேசுவதே இல்லை.""""

அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டத்தை பார்வையிடுங்கள்