Wednesday, February 26, 2020

கட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்

21 லட்சம் இராணுவ வீரர்களைக் கொண்ட உலகின் முதல் இராணுவமும், உலகிலுள்ள 177 நாடுகளில் 2 லட்சம் வீரர்களைக் கொண்டு முகாம் அமைத்து ஆதிக்கம் செலுத்தும் பேரரசும், உலகில் 800 இடங்களில் இராணுவத் தளங்கள் கொண்ட ஏகாதிபத்தியமும், உலகப் பொருளாதாரத்தில் 23.6 சதவிகிதத்தை தன்னுள் கொண்டுள்ள கணவானும், 20.58 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக விளங்கும் அமெரிக்காவின் 45 வது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று இந்தியா வந்து இருந்த போது சில ஆச்சரியங்களைக் காண முடிந்தது.

அதிபருக்கான உடல் மொழி எதுவும் இல்லை. விட்டால் டான்ஸ் ஆடத் தொடங்கி விடுவார் போல. ஆனால் 74 வயதில் ஜாலியாக இருக்கின்றார். சபை நாகரிமெல்லாம் அந்தப் பக்கம் நகர்த்தி வைத்து விட்டார் போல. மஞ்சள் கலர் டையைப் பார்த்தவுடன் நம் ராமராஜன் நினைவுக்கு வந்தார். யார் ஐடியா கொடுத்தார்களோ?
ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின்பு ரஷ்யா உதவியது, இணைய தளங்கள் உதவியது போன்ற பஞ்சாயத்தை விட அவர் முதலில் அதிபர் தேர்தலுக்குத் (முதல் கட்டத்திற்கு) தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கட்சியில் இருந்தவர்கள் கூட நம்பத் தயாராக இல்லை. பலருக்கும் பின்னால் இருந்தார். வந்தார். வென்றார். "மச்சம் இருந்தால் உச்சம் அடையலாம்" என்பதற்கு இவர் தான் முக்கிய உதாரணம்.

முந்தைய அதிபர்களின் சுய வரலாறு குறித்து பத்திரிக்கைகளால் தெளிவாக எழுத முடியும். ஒபாமா என்றால் சட்டத்துறை, புஷ் குடும்பம் என்றால் எண்ணெணெய் வர்த்தகம் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பின்புலம். ஆனால் ட்ரம்ப் க்கு தொழில் அதிபர் என்ற பெயர் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் அவரின் அடிப்படைத் தொழில் சூதாட்ட கிளப். இதனை ஊடகங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை.

அட்லாண்டா நகரின் அவரின் மிகப் பெரிய கிளப்பின் பெயர் தாஜ்மஹால் ட்ரம்ப். ஏறக்குறைய 2200 பேர்களுக்கு பணிபுரிந்த மிகப் பெரிய சூதாட்ட விடுதி தொழிலாளர்களின் பிரச்சனையால் மூடப்பட்டது. ட்ரம்ப் டவர் என்பது அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்டுமான நிறுவனம். மும்பையிலும் உண்டு. உலகம் முழுக்க உண்டு.
ட்ரம்ப் அடிப்படையில் ஒரு மன்மதர்ர்ர். வயது 74.

தன்னுடைய 52 வயதில் மூன்றாவது மனைவியான மெலனியாவை (அப்போது 28 வயது, ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர்) சந்தித்தது ஒரு பேஷன் ஷோவில். "சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை" என்று பாடாமல் 2005ல் திருமணத்தின் மூலம் சேர்ந்தனர். மகள் இவாங்கா (வயது 38) மாடல் அழகியின் மகள் நிஜமான அழகியாகவே இருக்கின்றார்.

தாங்கள் அனுபவிக்க வேண்டிய தாஜ்மஹால் அழகை வயதான பெரியவர்கள் அனுபவிப்பதை தன் கணவருடன் (ரொம்ப அப்பாவியாக இருப்பார் போல) வேடிக்கைப் பார்த்தார்.

ட்ரம்ப் போன்றோருக்கு பத்து வாத்தியார்கள் உட்கார்ந்து, குட்டு வைத்து காந்தியைப் பற்றி பாடம் நடத்தினாலும் அவரால் புரிந்து கொள்ளவே முடியாத மனிதர் மகாத்மா காந்தி. இருவரின் வாழ்க்கையும், வாழ்ந்த விதமும், கொள்கைகளும் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாது. இரண்டு கண்டங்களுக்கு உள்ள தொலைவு. இவர் என்ன சபர்மதி ஆசிரமத்தில் உள்ளே நுழைந்து புரிந்து கொண்டிருப்பார்? அங்குள்ள வருகை பதிவேட்டில் காந்தியைப் பற்றி எழுதாமல் வாய்ப்பு கொடுத்த மோடிக்கு நன்றி என்று எழுதியுள்ளார்.

விமானத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கியது முதல் ஒரு லட்சத்திற்கு மேல் கூடியிருந்த கிரிக்கெட் மைதானக் கூட்டத்தில் ட்ரம்ப் உரையாற்றியது வரைக்கும் எத்தனை முறை ட்ரம்ப் பகவான் மோடியைக் கட்டிப் பிடித்து இருப்பார் என்று போட்டி வைக்கலாம் என்கிற அளவுக்கு இருவரின் "கெமிஸ்ட்ரி" எல்லை மீறிப் போய்க் கொண்டே இருந்தது.

புரோட்டோகால் என்ற பஞ்சாயத்து மட்டும் இல்லாவிட்டால் ட்ரம்ப் மோடிக்கு லிப் டூ லிப் கொடுத்து இருப்பார் போல. உடனிருந்த மாடல் அழகி மனைவி தன் கணவரைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் சரி? நமது நாட்டுக்கு என்ன பிரயோஜனம்?

ஆக்ரா பல இடங்களில் சுத்தமாக மாறியிருக்கும். தாஜ்மஹால் புதுப் பொலிவு அடைந்திருக்கும். அகமதாபாத் 50 கிலோ மீட்டர் சுற்றளவு சுகாதாரமாக மாறியிருக்கும்.

டெல்லியின் மற்றொரு புறம் வாணவேடிக்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று ஜனாதிபதி மாளிகை விருந்து வேறு நடக்கப் போகின்றது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றது என்று வேறு பயமுறுத்தியுள்ளனர்.

நம்ம சூனா சாமி வாயை வைத்துக் கொண்டு ச்சும்மா இருக்காமல் எல்லாம் தண்டம் என்று அருள் பாலித்துள்ளார்.

இன்று இரவு காதலியைப் பிரிந்த சோகத்தில் ட்ரம்ப் கிளம்பி விடுவார்.

இந்த சமயத்தில் வாணவேடிக்கைப் பார்த்த மக்களிடம் போய் வரவு செலவு பற்றி பேச முடியுமா பாஸ்?

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நமது நாட்டுக்கு என்ன பிரயோஜனம் என்று சங்கிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...

மக்கள் மருத்துவராக மாறும் காலமும் வரும்...

டிபிஆர்.ஜோசப் said...

மக்கள் வருவார்கள். அது நிச்சயம். ஆனால் எப்போது?

சிவானந்தம் said...

///அகமதாபாத் 50 கிலோ மீட்டர் சுற்றளவு சுகாதாரமாக மாறியிருக்கும்.//

இல்லையே! எங்க ஏரியா அப்படியேதான் இருக்கு.

//எத்தனை முறை ட்ரம்ப் பகவான் மோடியைக் கட்டிப் பிடித்து இருப்பார்//

ஆனாலும் பெரிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

ஜோதிஜி said...

என்ன சார் நீங்களே வந்துட்டீங்க. அவங்க வராமல் இருப்பாங்களா?

ஜோதிஜி said...

எந்தப் பகுதி நீங்க?

சிவானந்தம் said...

கோக்ரா. (அகமதாபாத்தின் சவுகார்பேட்டை) இங்கிருந்து காந்தி நகர் 30 கிலோமீட்டர்