Sunday, December 19, 2021

கர்மா என்ற வார்த்தை

"மோடி இந்தியாவை இரண்டாக பிளக்கின்றார். இதுவரை இருந்த பிரதமர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றார்" என்று டெலிகிராப் ஆங்கில நாளிதழ் அலறுகின்றது.  இது வடக்கே.  

இங்கே நடப்பது மொத்தத்திலும் வித்தியாசமானது.  




ஐபிஎல் போட்டியில் ரசிகர்களை மகிழ்விக்க "சியர்ஸ் கேர்ள்ஸ்" இருப்பார்களே அதைப் போலவே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறுவதற்காகவே நேர்ந்து விடப்பட்ட அபலைக் கூட்டம் மாறி மாறி கதறுகின்றார்கள்.  

"இந்துத்துவா பாதையில் மோடி அழைத்துச் செல்லும் பாதை தவறானது" என்கிறார்கள்.  காசி கூட்டத்தில் மோடி அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்துப் பிரித்து விளக்கவுரை அளித்தாலும் இறுதியில் தமிழக தொலைக்காட்சிகளில் ஆயிரம் ரூபாய் பேட்டா காசுக்காக விவாதம் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இறுதியாக காங்கிரஸ் மேல் தான் கோபம் வருகின்றது.

நேரு கொண்டு வந்த செக்யூலர் இந்தியா. இந்திரா காப்பாற்றிய மதச்சார்பின்மை. ஆனால் ராஜீவ் தடுமாறினார். தடம் மாற்றினார் என்று அவர்களே ஆதங்கப்பட்டு அங்கலாய்ப்புடன் பேச்சைத் தொடர்கின்றனர்.  கடைசியாக ராகுல் தன்னை ஒரு பிராமணர் என்று பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ளும் அளவுக்கு வந்து நின்று விட்டார் என்று அலறுகின்றனர்.  

பீட்டர் அல்போன்ஸ் ஒரு படி மேலே சென்று "ஐயகோ அன்றே நான் செத்துப் போய்விட்டேன். அதற்குப் பிறகு திமுக வை என் கட்சியாக மாற்றிக் கொண்டேன்" என்று பதவியை வாங்கிக் கொண்டு முரசொலியில் கூசாமல் கட்டுரை எழுதுகின்றார்.

நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

மோடியைக் காங்கிரஸ் கட்சியால் தற்போதைய சூழலில் வீழ்த்த வாய்ப்பில்லை என்று வேண்டா வெறுப்பாக முடிக்கின்றனர்.  

அதாவது எதார்த்தம் என்பது என்ன? என்பது இங்குள்ள அனைவருக்கும் கண்கூடாகத் தெரிகின்றது. ஏற்பதில் உள்ள சிக்கல்.  அது இருப்பியல் சிக்கல்.  தங்களுக்குப் படியளக்கும் கோபாலபுரம் வருத்தப்படுமோ? என்ற அச்சம். 

ஏன் இப்படி இவர்கள் அத்தனை பேர்களும் பதட்டப்படுகின்றார்கள்?  

ஒரே காரணம்.  

காசி. 

வாரணாசியில் நடந்த காசி விஸ்வநாதர் ஆலய விழா அத்தனை பேர்களின் கண்களை உறுத்துகின்றது. பதட்டப்பட வைக்கின்றது.  அடுத்த நான்கு மாதங்களில் நடக்கப் போகின்ற உபி தேர்தலில் மக்கள் மாறி விடுவார்களோ என்று எரிச்சல்பட வைக்கின்றது.  தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல முடிகின்றதே தவிர எங்கள் கொள்கையும் இந்துத்துவா சார்ந்தது என்று அகிலேஷ் முதல் ராகுல் வரை பிரியங்கா முதல் மாயாவதி வரை எவராலும் உரத்துச் சொல்ல முடியவில்லை.  காரணம் உத்திரபிரதேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்கு என்பது ஏறக்குறைய 4 கோடி.  

மொத்த ஜனத் தொகையில் 20 சதவிகிதம் இருக்கின்றார்கள். இவர்கள் ஓட்டளித்துத் தான் யோகி வந்து அமர்ந்தார். லட்டு போல 73 சீட்டோடு அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியில் அமர்ந்தது.

என்ன மாயம் பாஜக செய்தது? 

ஒன்றும் செய்யவில்லை. 

மோடி உண்மையைச் சொன்னார். அமித்ஷா அதனை பூத் வாரியாக கொண்டு சேர்த்தார். 

"உன் மதம் உனக்குச் சோறு போடாது. வீட்டுக்குள் வைத்துக் கொள்.  பிழைக்கும் வழியே நமக்கு முக்கியம். நாம் இருவரும் சேர்ந்தே பார்ப்போம்" என்றார்கள்.  

இப்போது அதற்கான முழுப் பலன்களை உத்திரப்பிரதேசத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என்று பாரபட்சம் இல்லாமல் அனைவரும் அனுபவிக்கின்றனர். 

எதிர்க்கட்சிகள் நான்கு வருடமாக பேச முடியாமல் தவித்துப் போய் ஒதுங்கி நின்றவர்கள் இப்போது "நாங்கள் தான் இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தோம்.  நாங்கள் உருவாக்கியது தான்" என்று மோடி திறப்பு விழா நடத்தும் ஒவ்வொரு திட்டங்களையும் தங்கள் சாதனைகளாக பறை சாற்றிக் கொள்கின்றனர்.   

உத்திரப்பிரதேசம் நேருவின் குடும்ப உறுப்பினர்களை வாழ வைத்த மாநிலம். அங்கீகரித்த மாநிலம். இன்று ராகுல் வரைக்கும் உலகம் முழுக்க தெரிய முடிகின்றது என்றால் அது உபி மக்கள் போட்ட பிச்சை. 

இந்தக் குடும்பம் அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?

இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 'கரீபி ஹட்டாவோ' என்ற கோஷம் கொடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் ரேபரலி தொகுதியிலிருந்து  இந்திரா அம்மையார் ஏழாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர் ஆந்திராவிலும் போட்டியிட்டார். ரேபரலி தொகுதியை ராஜினாமா செய்தார் என்பது கடந்த கால வரலாறு.  

ஏன் இந்த வரலாறு இப்போது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும்?

அண்ணாமலை அவர்கள் லக்னோவில் ஐஐஎம் படிக்கச் சென்ற ஆண்டு 2008. அவர் தலைநகர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது இரண்டு கால் மனிதர்களுக்கு சமமாக அங்கே (விமான நிலையத்திற்குள்) நான்கு கால் பிராணிகள் பிரியத்துடன் நடமாடியதை வியப்புடன் பதிவு செய்து இருந்தார்.  அதாவது முதல் தேர்தல் நடந்த 1952 முதல் 2013 வரை உபி யில் எந்த மாற்றமும் நடக்கவில்லை.  எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றால் நீங்கள் இதற்கும் பாஜக வைத்தான் குற்றம் சொல்வீர்களா? 

மோடி அரசு சமீப காலத்தில் உத்திரப்பிரதேசத்தில் உருவாக்கிய மாற்றங்கள் அனைத்தும் அடுத்த ஐந்து வருடங்களில் அங்கு வாழும் 22 கோடி மக்களின் சமூக, பொருளாதாரக் குறியீடுகளை முற்றிலும் மாற்றப் போகின்றது.

இடப் பெயர்வு அதிகமாக மக்கள் விட்டு விடுதலையான உணர்வுடன் புதிய உலகத்தைக் காணப் போகின்றார்கள். அரை நூற்றாண்டுக் காலமாக சாதி ரீதியாக ஒடுக்கு முறை செய்து தங்களை ஆளுமையாக காட்டிக் கொண்டவர்களின் காலம் முடிவுக்கு வந்து கொண்டே இருக்கின்றது.  குட்டி ஜமீன் போல ஒவ்வொரு இடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்களுக்கு அடுத்த ஐந்தாண்டுக் காலம் என்பது கொடுமையான காலமாக இருக்கப் போகின்றது.

காலம் முழுக்க இவர்கள் "இருட்டில்" இருந்தால் நம் குடும்ப வாரிசுகள் கடைசி வரைக்கும் வெளிச்சத்தில் இருக்க முடியும் என்று எண்ணம் கொண்டவர்கள் கடைசியில் கேரளா மாநிலத்தில் வந்து நிற்கும் அளவுக்கு உத்திரப்பிரதேச மக்கள் பரிசினை காங்கிரஸ் க்கு வழங்கியதைப் பார்க்கும் போது கர்மா என்ற வார்த்தை என் நினைவுக்கு வருகின்றது.

காசிக்கு அலறுகின்றார்கள்.  

அயோத்திக்கு என்ன செய்யப் போகின்றார்கள்?  

No comments: