Saturday, December 18, 2021

நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

லோக மான்ய பாலகங்காதர திலகர் காலத்தோடு கரைந்த பின்பு அடுத்த சுடரொளி ஏந்தி ஓடத் தொடங்கியவர் மோகன் தாஸ் கரம் சந்த்.  

பின்னாளில் தான் மகா ஆத்மா காந்தியாக மாறினார்.

முன்னவர் கேட்டது "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை".பின்னவர் கேட்டது "கிராம ராஜ்யம்" அல்லது "ராம ராஜ்யம்".

லட்சியவாதிகளும் தேசிய வாதிகளுக்கும் எப்போதும் கொள்கைகள் முக்கியம்.

நீங்கள் என்ன எதிர்க்கருத்துக்கள் வைத்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்.

பாஜக வின் பயணம் (1925) ஆர்எஸ்எஸ் என்று தொடங்கியது. அதற்கு முன்னால் இந்து மகா சபை என்ற புள்ளியில் ஓட்டம் ஆரம்பமானது. ஜனசங்கம் என்பதிலிருந்து பாரதிய ஜனதா கட்சி என்பதற்கு வந்து நின்ற போது காலம் 1980 என்று சொன்னது.  

நேருவுக்கு மட்டுமல்ல இந்திரா அம்மையாருக்கும் இவர்கள் வெட்ட வெட்டத் துளிர்க்கின்றார்களே என்ற அச்சம் உள்ளூர இருந்து கொண்டே இருந்தாலும் என்ன செய்வது? என்று புரியாமல் தவித்தார்கள்.

காரணம் காங்கிரஸ் மதநல்லிணக்கம் என்ற பெயரில் நாடு வளர்ந்து விடக்கூடாது என்பதோடு தங்கள் குடும்பத்தை எதிர்க்கும் எவரும் உயிரோடு இருந்து விடக்கூடாது என்பதிலும் அதிக அக்கறை காட்டினார்கள்.  அது கடைசியில் சூனியக்காரி கையில்  வந்து நிற்கும் என்று மோதிலால் நேரு நினைத்து இருப்பாரா?  

அவர் தான் கிலாபத் இயக்கம் என்ற கேலிக்கூத்துக்கு காந்தியுடன் ஒத்து ஊதிப் பல லட்சம் மக்களைக் காவு கொடுத்து இந்தப் புனிதப் பயணத்தைத் தொடங்கியவர்.  அந்தப் பயணம் 2013 வரைக்கும் விடாத மழை போல இந்தியா முழுக்க அங்கங்கே நடந்து கொண்டே இருந்தது.

வந்தார் மோடி. 

அசுரத்தனமான பாய்ச்சல் என்று தான் நான் முதலில் நம்பினேன்.  ஆனால் காங்கிரஸ் உருவாக்கியிருந்த அமைப்பு அவரை அதிக நிதானம் தேவை என்கிற அளவுக்கு மாற்றியது. வட்டியும் முதலுமாக இரண்டாவது ஆட்சிக் காலத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றார்.

1980 முதல் 2013 வரை கணக்கிட்டுப் பார்த்தால் 33 வருடங்கள் மழைக்காகக் காத்திருந்த செடி கொடிகள் போலவே பாரதம் இருந்தது.  தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சியிலிருந்து என்ன செய்தார்கள்? என்பதனை விட அதிகாரம் என்பது யாரிடம் உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அது யார் யாரோ கையில் சிக்கி சின்னாபின்னமாகி இந்தியாவைச் சிதிலமாக்கிக் கொண்டு இருந்த அனைத்தையும் மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் மோடி என்ற மாமனிதர்.

ஏச்சுக்களும் பேச்சுக்களும் கிண்டல்களும் கேலிகளும் ஒரு பக்கம்.  எதிர்பார்த்து மோடியிடம் சென்று அது நடக்காமல் போக வெறித்தனமாக எதிர்ப்பவர்களின் பட்டியலும் நீளம்.  அதாவது பதவியிலிருந்து கொண்டே பாறையில் முளைத்துத் துளிர்விட்ட செடி போல அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் மோடியைப் போலத் தமிழகத்தில் அண்ணாமலை அவர்களைப் பார்க்கின்றேன்.

முளைக்க விடாத பெரிய பாறைக்குள் சிக்கிய விதை எந்த அளவுக்கு மூச்சு முட்டத் தன்னை உயிர்ப்பித்து வெளிக்காட்டிக் கொள்ள முயலுமோ அப்படித்தான் அண்ணாமலை அவர்களின் தினசரி பயணம், வாழ்க்கை, வசவு, வாழ்த்துகள், எதிரிகள் என்று என் கண்ணில் வந்து போகின்றது.

ஆணி வேர் பலமாக இருப்பது என் கண்களுக்குத் தெரிவதை விட எதிரிகளின் கண்களில் தெரியும் மிரட்சியை வைத்தே என்னால் யூகித்துக் கொள்ள முடிகின்றது.  ஆனால் பெரிய மரத்திற்கு ஆணி வேரைப் போலச் சல்லிவேர், பக்கவாட்டு வேர் என்று பலதும் முக்கியம் அல்லவா?

அண்ணாமலை உருவாக்கப்போகும் அதிர்வலைகள் 

நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன். 

(சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, பெரம்பலூர் மண்டல் தலைவர்கள், மற்ற தொண்டர்கள் என்று தொடர்ந்து சூறாவளிப் பயணத்தின் சில காட்சிகள்)


No comments: