அமேசான் கிண்டில் சார்பாக ஒரு போட்டி நடந்தது. அதற்காக ஒரு வாரத்தில் இரவு நேரத்தில் தினமும் மூன்று மணி நேரம் என்கிற ரீதியில் 5 முதலாளிகளின் கதை என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி ( மின் நூல் வடிவம்) வெளியிட்டேன். பரவலாகச் சென்றது. விமர்சனம் 100 க்கும் மேல் வந்தது. வெற்றிக்கான ஆடு புலி ஆட்டத்திற்குள் நுழைய முடியவில்லை.
ஆனால் இன்று வரை வாரம் தோறும் யாரோ ஒருவர் மின் அஞ்சல் வழியாக நான் படித்தேன். என்னை நான் உணர்ந்தேன் என்கிற ரீதியில் விமர்சனம் எழுதி அனுப்புகின்றனர்.
நான் எதைப் பற்றி எழுதினாலும், என்ன விவாதம் நடந்தாலும் எவர் என்னுடன் சண்டை போட்டாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மறந்து விடுவேன். காரணம் உள்ளே வைத்துக் கொண்டு மறுகுவதில்லை. இது வயதும் அனுபவமும் சேரும் போது இந்தப் பக்குவம் வர வாய்ப்புண்டு.
நேற்று ஒரு தம்பி மற்றொரு மின்னூல் படித்து முடித்து விட்டு எனக்கு அச்சுப் புத்தகமாக மாற்றித் தர முடியுமா? என்றார்.
நான் ஏற்கனவே 2020 டவுசரை கழட்டி காயப் போட்டது. பின்னால் வந்த 2021 மீதியிருந்த உள்ளாடைகளையும் சேர்த்து வாங்கிச் சென்ற காரணத்தால் இது போன்ற அதீத ஆர்வங்களைச் சற்று ஒத்தி வைத்துள்ளேன் ராசா என்று பதில் அனுப்பினேன்.
ஆனால் 5 முதலாளிகளின் கதையில் 5 வது முதலாளியாக ஒருவரைப் பற்றி எழுதியிருந்ததில் பாதிக்கும் மேற்பட்ட விசயங்களை எடிட் செய்து தூக்கியிருந்தேன். நீண்டதாக இருந்தால் வாசிக்கும் போது சோர்ந்து விடுவார்கள் என்பதால். இப்போது 2021 முடியும் தருவாயில் அதில் உள்ள சில தகவல்களை இங்கே எழுதி வைத்திட விரும்புகிறேன்.
காரணம் இந்த வருடம் முழுக்க இடைவிடாது சோர்வில்லாது நக்கல் நையாண்டி என்பதனைக் கடந்து எல்லா நிலைகளிலும் செயல்பட்டுள்ளேன். நேரத்தை அழகாக பயன்படுத்தி உள்ளேன் என்ற திருப்தி உண்டு. எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. அதற்குக் காரணம் அந்த முதலாளி அந்த ஒரு நாளில் அவர் மச்சினனுக்குக் கொடுத்த உபதேசம். அன்று எதிர்பாராத விதமாக அவர்கள் அருகே இருந்தேன். நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தேன்.
இங்குள்ள பாதி முதலாளிகள் அழிந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் உறவுக்கூட்டம் என்பதனை உடனே சொல்ல முடியும். இன்று வரையிலும் அப்படித்தான். ஆனால் தொழில் நுட்பம் கொஞ்சம் காப்பாற்றி விடுகின்றது.
மச்சினர் சபலப் பிரியர். இரவு நேரச் சாகசப் பிரியர். மாதம் ஒரு முறை சில கோடிகள் அடி வாங்க காரணமாக இருந்தவர். அன்பாக சொல்லிப் பார்த்தார். அதட்டிப் பார்த்தார். மனைவி மூலம் மிரட்டிப் பார்த்தார். அது எங்கங்கே இணைப்பு தடுமாறி மாறி மாறி அலுவலகத்திற்குப் புயல் அடிக்கத் தொடங்கப் போனது போகட்டும். இருப்பது வரைக்கும் லாபம் என்று அன்றொரு நாள் பொறுமையாக அன்று அந்த மைனரிடம் பேசினார்.
"உன் வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றாய். உன் உடம்பு தாங்காது என்றால் கூட உன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் 30 வருடமாக குருவி சேர்த்த மாதிரி நான் சேர்த்ததை சில மாதங்களில் கரைத்து தெருவுக்குக் கொண்டு வந்து விடுவாய் போல. கடைசியாக ஒரே ஒரு விசயம் மட்டும் சொல்கிறேன். செய்வாயா"? என்று கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பேசினார்.
"ஒரு நாள் முழுக்க திட்டமிடாதே. ஒரு மாதம் ஒரு வருடம் திட்டம் என்பதெல்லாம் வேண்டாம். நீ முதலில் தினமும் முதல் ஐந்து மணி நேரம். அது முடிந்ததும் இரண்டாவது ஐந்து மணி நேரம் என்று இரண்டு விதங்களில் மொத்தம் பத்து மணி நேரம் மட்டும் திட்டமிடு. பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும்" என்றார்.
எனக்கு குழப்பமாக இருந்தது.
தொடர்ந்தார்..
"காலையில் 4 முதல் 5 மணிக்குள் எழுந்து விடு. 5 மணி என்றால் காலை பத்து மணிக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதனை மட்டும் யோசி. மதியம், இரவு, அடுத்த நாள் என்பதெல்லாம் வேண்டாம். அந்த ஐந்து மணி நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள். வேறு எந்தப் பக்கமும் உன் கவனத்தைத் திசை திருப்பாதே. நான் வேலைகள் தான் முடிக்க முடியும் என்றால் அது மட்டும் போதும். அந்த நேரத்திற்குள் வெளியே அலையாதே. அலைபேசி உரையாடல்களைத் தவிர்த்து விடு. அந்த நாளின் மொத்த வேலைகளும் முடிந்தது போல ஆகி விடும். அடுத்த ஐந்து மணி நேரத்தில் இதன் தொடர்ச்சி சார்ந்த விசயங்கள் தான் இருக்கும். மாலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் உன்னை உறுதியாக நெருக்கமாக வைத்துக் கொணடு வேலை செய்யப் பழகு. அதற்குப் பிறகு உன் ஆட்டத்தைத் தொடங்கு. வேலை செய்கின்ற சமயத்தில் ஆட்டத்தை நினைக்காதே. ஆட்டம் போடுகின்ற சமயத்தில் வேலைப் பக்கம் வராதே".
அவன் செய்யவில்லை என்பது கூடுதல் தகவல்.
அறிவுரை சொல்வது, அதனை அட்சரம் பிறழாமல் பின்பற்றி முன்னேறி விட முடியும் என்று நம்பிக்கை கொள்வது, தன்னம்பிக்கை நூல் படித்துப் பல கோடிக்கு அதிபதி ஆகி விட முடியும் என்று பகல் கனவு காண்பது என்பது எனக்கு உவப்பில்லாதது.
தொழில் செய்பவர்கள், மற்றவர்களிடம் பணி புரிகின்றவர்கள், முறை சாரா தொழிலில் இருப்பவர்கள் என்று பலவிதமாக வாழும் நபர்களுக்கு இவை பொருந்துமா? என்று கேட்க வேண்டாம். என்ன முடிகின்றதோ? எப்படி வாய்ப்புள்ளதோ? அதனை முதல் புள்ளியிலிருந்து தொடங்குக..
நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதனை நீங்கள் அறியாமல் இருந்தால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை விரைவில் விலை பேசும்?
நான் இன்று வரையிலும் அப்படியே கடைப்பிடிக்கின்றேன் என்பது உங்கள் 2022 நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் தரும் தகவல்.
நன்றி.
3 comments:
கடவுளை பார்த்தது உண்டா...?
தினமும்...!
என்னது...?
ஆம்... முன்பு சுவற்றில், இப்போது பக்கத்தில்...!
அருவினை என்ப உளவோ (?) கருவியான்
காலம் அறிந்து செயின்...
குறளில் கேள்வி உண்டா...?
அது நிறைய குறள்களில் உண்டு... கேள்விக்குறி தான் இல்லை... ஆனா அப்படி உள்ள எல்லா குறள்களையும் கணக்கிட்டால்...?
ஏழு தானே...?
அது சரி, மேலே சொன்ன குறளுக்கு ஒரு எதிர் குறள் :-
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
ஐயகோ...!
வரட்டுமா...?
அரிய செயல் என்று எதுவும் இல்லை தேவையான கருவியும் காலமும் அறிந்து செயல்பட்டால்.
வருடம் துவங்க இருக்கிற சமயத்தில் அருமையான ஆலோசனை...வாழ்த்துகள்..
Post a Comment