Monday, December 27, 2021

2021 கற்றுத் தந்த பாடங்கள்

கற்றுக் கொடுத்தது 2021

1. கடந்த இரண்டு வருடங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் நல்ல தரமான நிர்வாகம் நடத்தும் தனியார் நிறுவனங்கள் தவிர மற்ற அனைவரின் வாழ்க்கையிலும் பொருளாதாரக் குறைபாடுகள் இருந்தது.  நாங்களும் விதிவிலக்கல்ல.  அளவீடுகள் மட்டும் வித்தியாசமுண்டு.  



2. மகளின் கல்லூரி வாழ்க்கை, மகள்களின் 18 வயது தொடக்கம் என்று நாங்கள் பின்னுக்குச் சென்று கொண்டு இருக்கின்றோம். எங்கள் தலைமுறைகள் முன்னேறிச்  சென்று கொண்டு இருக்கின்றார்.


3. மஞ்சுளா என்ற நாய் மூலம் ஏழு குட்டிகள் பிறந்தது. இரண்டு இறந்து மீதியுள்ள ஐந்தில் நான்கு இரண்டு குடும்பங்கள் எடுத்துச் சென்றார்கள்.  ஒரு நாய்க்குட்டி மட்டும் ஊனத்துடன் பிறந்த காரணத்தால் பாதுகாக்கும் இல்லத்தில் விட்டு வந்தோம்.  மகளின் பிறந்த நாளுக்காக அந்த இல்லத்துக்கு நன்கொடை வழங்கி விட்டு பார்த்து வந்தோம். அதற்கு பாதமகன் என்று மகள் பெயரிட்டு இருந்தார்.  எலும்பும் தோலுமாக வளர்ந்து நின்றதைப் பார்த்து கண்ணீர் வந்தது.  மகள்களிடம் புரிய வைத்தேன்.  வயதான பெற்றோர்களை இது போல ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டு வந்தால் இப்படித்தான் கவனிப்பு இன்றி அவர்கள் உருவம் கண்ணீர் வரவழைப்பதாக இருக்கும் என்றேன்.

4. இந்த வருடம் அதீதமான பள்ளத்தைச் சந்தித்தவர்கள் பல பேர்கள்.  

மற்றவர்கள் எப்படியோ? நான் என்னை பலவேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு என் எண்ணங்களை மாற்றி வென்று வந்துள்ளேன்.

5.  இந்த வருடம் வெவ்வேறு பெயர்களில் செயல்படும் ஆனால் எல்லாக் கட்சிகளில் இருக்கும் பொதுவான அம்சங்களை ஆராய்ந்தேன். மனதில் வைத்துள்ளேன். ஏதோ ஒரு சமயத்தில் எழுதுவேன்.

6. நேரிடையான எதிரிகள், மறைமுகமான எதிரிகள், பழகிக் கொண்டே எதிரியாக இருப்பவர்கள், மன உளைச்சலை உருவாக்குவதைக் கடமையாக வைத்துள்ள எதிரிகள், இவர் கொள்கை ஏன் மாறியது என்று எதிரியாக மாறியவர்கள் என்று ஏராளமான நண்பர்கள் பட்டியலில் இருக்கின்றார்கள்.  என் வேகம் நிற்கவில்லை. கவனிக்கின்றேன். கடந்து வந்து விட்டேன்.

7. மகள்கள் படிக்கும் அரசுப் பள்ளியில் கல்வித்துறையுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு சில நல்ல விசயங்கள் நடக்க காரணமாக இருந்துள்ளேன். (இது குறித்து ஏற்கனவே முரளிதரன் மேலோட்டமாக பழைய பதிவில் விமர்சனமாக எழுதியிருந்தார். அது தான் இப்போது நடந்து வருகின்றது)

8. செயல்பட முடியாது. செயல்படக்கூடாது. வெளியே போகக்கூடாது. அதிக நேரம் வெளியே இருக்கக்கூடாது என்பது போன்ற பல கட்டளைகள் ஒவ்வொருவரின் உடம்பையும் அவரவர் ஆரோக்கியம் பொறுத்து வெவ்வேறு வகைகளில் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த வருடம் முழுமையாக அதனை உணர்ந்தேன்.

9. சுமாராகப் படித்தவர். அதிகம் படித்தவர் என்று பாரபட்சம் பாராது பழகிய பல நண்பர்கள் அரசியல் விசயங்களில் உணர்ச்சி வசப்படுவதும் அவர்களின் மூளை எந்த அளவுக்கு மழுங்கிப் போயுள்ளது என்பதனையும் இந்த வருடம் பல நண்பர்கள் மூலம் கண்டறிந்தேன்.

10. ஜோ பேச்சு என்று சென்ற வருடம் யூ டியூப் ல் தொடர்ந்து முகம் காட்டாமல் பேசி பதிவு செய்து கொண்டு வந்தேன்.  300 பேர்களுக்கு மேல் உள்ளே வந்து இணைந்தனர்.  

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளில் வாழும் பல நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கற்று களத்தில் இறங்கு என்று  யூ டியூப் சேனல் தொடங்கி முக்கியமான ஆளுமைகள் அனைவரையும் பேச வைத்து பதிவேற்றி உள்ளோம். இதில் பாஜக என்ற கட்சியை நேரிடையாக ஆதரிப்பவர்கள் மட்டுமன்றி அந்த கட்சிக்குத் தொடர்பு இல்லாதவர்கள் என்பவர்களையும் பேச வைத்துள்ளோம். 

அரசியல் அறிவியல் போலப் பல தலைப்புகளில் இளையர்கள் இன்னும் பத்து ஆண்டுகளுக்கும் கற்றுக் கொள்ள முடிகின்ற பல விசயங்கள் இதில் உள்ளது. ஆறு மாதம் முடிந்ததுள்ளது.  500 பேர்கள் உள்ளே வந்து உள்ளனர். 

எந்தக் கட்சி என்றாலும் எவரும் வந்து நம்மை உடனே ஆதரிக்க மாட்டார்கள்.  

நண்பர்கள் பலரும் தவறான எண்ணத்தில் இருக்கின்றார்கள்.  

நம் உழைப்பின் மூலம் மட்டுமே உன்னதமான  நிலையை  அடைய முடியும். ஜனவரி அல்லது பிப்ரவரியில் தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை பேசப் போகின்றார்.

11.திரு.அண்ணாமலைஅவர்கள்
பாஜக வின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கையான ஒரே நாடு இதழில் தினமும் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வருகின்றார். அந்தக் கடிதத்தை பாட்காஸ்ட் வழியாக தினமும் வெளியிட்டு வந்தேன். இதுவரை 75 கடிதங்கள் முடிந்ததுள்ளது.  ஆனால் நம்மவர்களுக்கு யூ டியூப் தவிர வேறு பக்கம் செல்ல மனமில்லை.  இப்போது பாட்காஸ்ட் மற்றும் யூ டியூப் வழியாக வெளியிட்டு வருகின்றோம்.

12. கடந்த இரண்டு வருடங்களில் ஃபேஸ்புக் வழியாக எழுதி வருகிறேன். தினமும் ஒரு லட்சம் பேர்களை சென்று அடையும் அளவுக்கு நண்பர்கள் என் கட்டுரைகளை எடுத்துச் செல்கின்றார்கள்.  நான் கருவியாக உள்ளேன். நண்பர்களை களத்தை உருவாக்குகின்றார்கள். நான் என் அறையை பூட்டி வைத்துள்ளேன். கடந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே  தொடர்பில் இருந்த 2000 பேர்களை வெளியே அனுப்பியுள்ளேன்.  

13. இந்த வருடம் தான் ட்விட்டரில் செயல்படத் துவங்கி உள்ளேன். மற்ற தளங்களை விட இதன் வீச்சு அதிகம். எனக்கு கிடைத்த தொடர்புகளும் அதிகம். ப்யூஸ் கோயல் (இப்போது வர்த்தக அமைச்சர்) என் ட்விட்டரை பகிர்ந்து நான்கு லட்சம் பேர்களுக்கு கொண்டு சென்றார்.

14. இந்த வருடம் தான் இண்ஸ்டாகிராம் ல் செயல்படத் துவங்கி உள்ளேன்.  

15. இந்த வருடம் காலம் எனக்கு கற்றுத் தந்த பாடத்தின் மூலம் 2022 நிச்சயம் நன்றாக அமையும் என்று நம்புகின்றேன்.  என்னைப் பின்தொடர்ந்து வரும் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் 2022 ஆம் ஆண்டு வசந்தம் வீச முன்கூட்டியே சொல்லி இங்கு அதனை எழுதி வைத்து விடுகின்றேன்.

நன்றி.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதியோர் காப்பகம் - வருத்நம் மேலோங்குகிறது...

அடுத்த வருடம் பென்ஸ் கார் கிடைக்க வாழ்த்துகள் அண்ணே...!

ஜோதிஜி said...

எளிய தமிழ்ப்பிள்ளையின் கோரிக்கை மனு. வள்ளுவனைப் போல நீங்கள் மகாகவி பாரதியையும் ஆராய வேண்டும். பெரிதினும் பெரிது கேள். 2022 நீங்கள் நம்பக்கூடியது மூலம் நல்லது நடக்க வாழ்த்துகள்.