Monday, November 22, 2021

விவசாய மசோதா விலக்கம் குறித்து:

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, மிக அத்தியாவசியமான விவசாய சட்டத்திருத்தத்தை பா.ஜ.க. திரும்பப் பெற்றது குறித்தான பல கோபமான எதிர்வினைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நானும் ஒரு விவசாய குடும்பத்துப் பின்னனியில் இருந்து வந்தவன்தான். உயிரைக் கொடுத்து உழைத்த விவசாயியை எப்படி இடைத்தரகர்களும், அரசாங்கமும் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதனையெல்லாம் கண்கூடாகக் கண்டவனும் கூட.




இருந்தாலும், மோடி அரசின் இந்த முடிவினை வரவேற்கிறேன். அதற்கான சில காரணங்களை என்னால் இயன்ற அளவு விளக்க முயற்சிக்கிறேன். 

படித்த பிறகு "இப்போது" இதற்கான அவசியத்தை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 

மோடி எது செய்தாலும் ஆதரிப்பது என்கிற கோஷ்டியில்லை நான். மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்குப் பின்னர் அவர் நடந்து கொண்டவிதம் இன்றைக்கும் எனக்குள்  கசப்ப்பாகவே இருக்கிறது. அதுமட்டுமில்லை. இன்னும் பல விஷயங்களில் அவரது நிலைப்பாட்டின்மீது எனக்கு வருத்தமுண்டு.

இன்றைய பஞ்சாப் ஒரு பெரும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. மீண்டும் அங்கு தீவிரவாதமும், தனிநாடு கோரிக்கையும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. பஞ்சாப் விவகாரங்களைக் கடந்த பத்து  வருடங்களாகக் கூர்ந்து கவனித்து வருபவன் என்கிற முறையில், இன்றைய பஞ்சாப் எந்த நேரமும் வெடித்துச் சிதறக் கூடியதொரு எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கிறது என்பதனை உறுதியாகச் சொல்லுவேன்.

இந்தப் பிரச்சினையின் அடிநாதமே காங்கிரஸ் கட்சிதான். நேரு எவ்வாறு காஷ்மீரைப் பற்றியெரிய வைத்தாரோ அப்படியே பஞ்சாப், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைப் பற்றியெரிய, அங்கு தீவிரவாதம் வளர அடித்தளம் இட்டவர் அவரது மகளான இந்திரா காந்தியேதான். சொந்த அரசியல் காரணங்களுக்காக ஊர், பேர் தெரியாமலிருந்த பிந்தரன்வாலேவை தூக்கிப் பிடித்து, அவன் மூலமாக பஞ்சாபில் தீவிரவாதம் வேரூன்ற விதை, விதைதவரும் இந்திராதான். இறுதியில் வினை விதைத்தவன் அதை அறுவடை செய்வானோ அதனையே இந்திராவும் செய்தார் என்பது வரலாறு.

1960-களில் இன்றைய பஞ்சாப் பகுதி அன்றைய ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையான பஞ்சாப்பின் பெரும்பகுதி தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானிடம் சென்றுவிட்டது. இந்திரா காந்தி, பலருடைய எதிர்ப்புகளுக்கும் மத்தியில், ஹரியான மாநிலத்தை இரண்டாகப் பிரித்து பஞ்சாப் மாநிலத்தை உருவாக்கிய நாளில் இருந்து இந்தியாவிற்குச் சனியன் பிடித்தது. அப்படிச் செய்வது மிகப்பெரிய தவறு என்று வாதாடியவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டன. பிரிந்த பிறகு தலைநகரான சண்டிகர் யாருக்குச் சொந்தம் என்கிற சர்ச்சை உருவாகி அது இன்றுவரை ஓய்ந்தபாடில்லை.

1960களில் தனி மாநிலமான பஞ்சாபில் ஏறக்குறைய 47 சதவீதம்பேர் ஹிந்துக்கள் இருந்தார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும். சீக்கியர்கள் பிந்தரன்வாலே தலைமையில் தனிநாடு கேட்டுப் போராட்டம் நடத்திய காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் பஞ்சாபில் கொல்லப்பட்டார்கள். சீக்கியர்களும் கொல்லப்பட்டார்கள் என்றாலும் ஹிந்துக்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள். பஞ்சாபின் உள் கிராமங்களில் ஹிந்துக்கள் வாழ இயலாத சூழ்நிலை உருவாகி பல ஆயிரக்கணக்கானவர்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்றைக்கு பஞ்சாபில் ஏறக்குறைய 35 முதல் 40 சதவீத ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.

பஞ்சாபில், பிந்தரன்வாலேக்கு எதிராக இந்திரா காந்தி ஆபரேஷன் புளூஸ்டார் நடத்திய பிறகு, அவரது சொந்த சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரங்கள் மூண்டன. அதனை முன்னின்று நடத்தியவர்கள் காங்கிரஸ்காரர்களான சஜ்ஜன் குமார், ஜெகதீஷ் டைட்லர், கமால் நாத் போன்றவர்கள். 

தில்லியின் பொது இடங்களில் நின்று கொண்டு கலவரக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள்தான். பல ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் காங்கிரஸ்காரர்களால் கொல்லப்பட்டார்கள். பல ஆயிரக்கணக்கான சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

ராணுவத்தை அனுப்பி அந்தக் கலவரங்களைத் தடுக்கும்படி பலர் வேண்டுகோள் விடுத்தும் அன்றைக்குப் பிரதமராகப் பதவயேற்றிருந்த ராஜிவ் காந்தி அதனைச் செய்யவில்லை. மூன்று நாட்கள் வரையில் கலவரம் நடப்பதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார். அதற்கும் மேலாக, "ஒரு பெரும் மரம் விழுகையில் அருகிலிருப்பவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவது சகஜம்தான்" எனக் கேலியாகச் சொன்னார் ராஜிவ்.

தில்லியில் அந்தப் படுகொலையிலிருந்து பல சீக்கியர்களைக் காப்பாற்றுவதில் முன் நின்றது ஹிந்து இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.தான். அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். சீக்கியர்களுக்குப் பாதுகாப்பாக நின்றிருக்காமல் இருந்திருந்தால் இந்தப் படுகொலைகளின் எண்ணிக்கை பலமடங்காகியிருக்கும் எனச் சொன்னவர் பிரபல எழுத்தாள குஷ்வந்த் சிங்.

ஆனால் பஞ்சாப்பில் காங்கிரஸ் இந்தக் கலவரத்தை நடத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதனைத் தந்திரமாக மறைத்து "ஹிந்துக்களே இந்தப் படுகொலைகளைச் செய்தார்கள்" எனப் பிரச்சாரம் செய்தார்கள். இன்றைக்கு இருப்பதனைப் போல இணையம் இல்லாத காலத்தில் நடந்த இந்தப் பிரச்சாரம் மிக எளிதாக சாமானிய சீக்கியனை எட்டியது. பா.ஜ.க. போன்ற கட்சிகள் அன்றைக்குக் களத்தில் இல்லை. இது ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையே பிளவினை ஏற்படுத்தியது என்றாலும் நிலைமை கைமீறிப் போய்விடவில்லை. வழக்கம் போல காங்கிரஸ் கட்சி சீக்கியர்களுக்கு பணத்தை அள்ளி வீசியது. பல தொழில்களும், விவசாய தரகில் கொள்ளையடிக்கும் வழிகளும் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டன. இன்றைய லூதியானா போன்ற பகுதிகள் தொழிற்சாலை நகரங்களாக பெருமளவில் வளர்ந்தன. இந்தியாவின் முதுகில் சவாரி செய்த சீக்கியர்கள் பெரும் பணக்காரர்களானார்கள். அப்பாவி ஏழை ஹிந்து விவசாயியின் முதுகில் உட்கார்ந்து அவன் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தார்கள் சீக்கிய இடைத்தரகர்கள். இதன் காரணமாக பஞ்சாபில் தீவிரவாத தாக்கம் பெருமளவுக்குக் குறைந்தது.

இன்னொருபுறம், பஞ்சாபின் சீக்கியர்களிடையே ஹிந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை தூபம்போட்டு வளர்க்கப்பட்டது. சீக்கியர்களின் ஒருபகுதியினர் அவர்களது புனித நூலான குரு கிரந்தத்தில் கூறப்படும் ராமனையும், கிருஷ்ணனையும் நீக்கிவிட்டு பிரிட்டிஷ்காரனான மெக்காலிஃப் எழுதிய புத்தகத்தை நம்ப ஆரம்பித்தார்கள். 

ஹிந்துக்களின் ஒரு அங்கமே சீக்கியம் என்பது வெற்றிகரமாக மறைக்கப்பட்டு, அவர்கள் ஒரு தனி இனம் போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. மெல்ல, மெல்ல சீக்கியர்கள் தங்களின் வேரினை இழந்தார்கள். தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம், தங்களுக்கும் கீழானவர்கள் ஹிந்துக்கள் என்கிற எண்ணம் பஞ்சாபில் இன்றைக்கு பொதுவில் நிலவுவதனைக் காணலாம். இன்றைக்கும் பஞ்சாபிய ஹிந்துக்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்.

பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகத்தை உபயோகப்படுத்த நினைத்த மேற்கத்திய நாடுகள் கிறிஸ்தவ பாதிரிகளை அங்கு கொண்டுபோய் இறக்கினார்கள். இன்றைக்கு பஞ்சாபின் ஏறக்குறைய இருபது சதவீத சீக்கியர்கள் மதம்மாறிய கிறிஸ்தவர்களே. இன்னொருபுறம் பாகிஸ்தானிலிருந்து போதை மருந்துகள் இந்திய பஞ்சாபுக்குள் கடத்திவரப்பட்டு, பஞ்சாபிய இளைஞர்களை போதை மருந்திற்கு அடிமைகளாக்கினார்கள். தீவிரவாத எண்ணங்கள் மீண்டும் பாகிஸ்தானினால் தூண்டிவிடப்பட்டது. இருபுறமும் ஒரே மொழி பேசுபவர்கள் இருப்பதால் இது மிக எளிதாக செய்யப்படுகிற ஒன்றுதான். தேசப் பிரிவினையின்போது முஸ்லிம்களின் கையால் தங்களின் முன்னோர்கள் அடைந்த துயரங்கள் அனைத்தையும் இன்றைய பஞ்சாபி இளைஞர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது அதனை அவர்கள் அறியாமலிருக்கச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தினமும் ட்ரோன்கள் மூலமாக போதைமருந்துகளும், துப்பாக்கிகளும் இன்னபிற ஆயுதங்களும் பஞ்சாபில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையான வெற்ற்பெறவில்லை. ஏனென்றால் உள்ளூர் போலிஸ்காரர்களின் ஒத்துழைப்பு அதற்குக் கிடைப்பதில்லை. இதனைக் கொண்டு சமிபத்தில் எல்லைப்பாதுகாப்புப் படையின் நடவடிக்கை 50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் முழுமையாக இதனைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அமெரிக்கப்படைகள் வேண்டுமென்றே பல நவீன ஆயுதங்களை விட்டுவிட்டுச் சென்றார்கள். அதனைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அந்த ஆயுதங்களை இந்திய பஞ்சாபுக்குள் அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

அதற்கும் மேலாக போதை மருந்து கடத்தலுக்கு எதிராக இந்திய அரசு செய்யும் காரியங்களும் எல்லைக்கு இருபுறமும் பலரைக் கோபமுறச் செய்திருக்கிறது. எனவே சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான ஆயுதமும், வெடிமருந்துகளும் இந்திய பஞ்சாபுக்குள் ஏற்கனவே நுழைந்துவிட்டதாக எல்லா உளவு அமைப்புகளும் மத்திய அரசினை எச்சரிக்கை செய்திருக்கின்றன. சீனாவும் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறது. பாகிஸ்தான் துணையுடன் இந்திய பஞ்சாபில் பேயாட்டம் போட அவர்கள் காத்திருக்கிறார்கள். சீனாவிடம் இல்லாத பணமில்லை. விவசாயிகள் போராட்டத்தின் பின்னனியில் பாகிஸ்தானும்,சீனாவும், பணக்கார சீக்கியர்களும் கூட்டுச் சேர்ந்து கலவரம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்த நிலையில் பஞ்சாபில் தேர்தல் வருகிறது.

தேசவிரோத சக்திகளின் முக்கியமான அமைப்பு கேஜ்ரிவாலின் "ஆம் ஆத்மி" கட்சிதான். கேஜ்ரிவால் ஒரு காலிஸ்தான் ஆதரவாள ஆசாமி என்பது அனைவரும் அறிந்ததுதான். பல்லாயிரம் கோடிகளை இந்தத் தேர்தலில் கொட்டிக் கொடுத்து பஞ்சாபில் "ஆம் ஆத்மி" கட்சியை எப்பாடுபட்டேனும் வெற்றிபெற வைக்க பாகிஸ்தான், சீன, காலிஸ்தானிய, போதைமருந்து கடத்தல் கும்பல்கள், கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்டுகள் கோஷ்டிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஆயுதங்கள் தயாரக இருக்கின்றன. எனவே பஞ்சாப் தேர்தல் இரத்தக்களறியாக மாறுவதற்கான அத்தனை முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

சென்ற தேர்தலில் "ஆம் ஆத்மி" நிச்சயமாக வெற்றிபெறும் சூழ்நிலை இருந்தது. பா.ஜ.க. மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. ஹிந்துக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப்போட அறிவுறுத்தப்பட்டார்கள். பிரிவினைவாதியான கேஜ்ரிவாலிடம் ஆட்சியை ஒப்படைப்பதனை விடவும் அம்ரீந்தர் சிங் தேசப்பற்றுள்ளவர் என்கிற காரணத்தால் பஞ்சாப் ஹிந்துக்கள் அம்ரீந்தருக்கு ஓட்டுப்போடார்கள். 

ஆனால் இந்தமுறை இன்னும் சிக்கலான நிலைமை உருவாகியிருக்கிறது. பா.ஜ.க. மற்றும் அகாலிதள் கூட்டணி இன்றைக்கு இல்லை. விவசாய மசோதாவை எதிர்த்து அகாலிதள், பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகிவிட்டது. அம்ரீந்தர் சிங் தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி இருப்பதால் அது மீண்டும் வெல்ல சாத்தியம் இல்லை. மறைமுகமாக கேஜ்ரிவாலுடன் கூட்டணி வைக்கவும் தேசவிரோத காங்கிரஸ் தயங்காது. ஏற்கனவே விவசாய மசோதாவினைக் கொண்டுவந்த பா.ஜ.க. ஒரு சீக்கிய விரோத ஹிந்துக் கட்சி என்கிற எண்ணம் பஞ்சாபிய சீக்கியர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இடியாப்பச் சிக்கலில் கேஜ்ரிவாலின் கட்சி மிக எளிதாக பஞ்சாபில் ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அப்படி நடந்தால் பஞ்சாப் மீண்டுமொரு கலவர பூமியாக மாறும். அதனை பாகிஸ்தானும், சீனாவும் வெற்றிகரமாகச் செய்யும். அதற்கு ஆம் ஆத்மி கட்சி துணைபோகும்.

மோடி என்றைக்குமே தன் நலனைவிடவும், தேசத்தின் நலனை முன்னிறுத்துகிற பிடிவாதக்காரர். இந்த விவசாய மசோதா விலக்கல் தேச நன்மையை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அவருக்கு நஷ்டங்கள் வரும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவரது இந்த நடவடிக்கையால் விவசாயிகள் பாதிக்கப்படலாம். அதனை வேறு வழிகளில் அவர் சரி செய்துவிடுவார். ஆனால் நிச்சயமாக பஞ்சாபில் ரத்த ஆறு மீண்டும் ஓடுவதனை அவர் விரும்பவே மாட்டார்.

புரிந்துணர்வுள்ள தேசபக்தர்கள் அவருடன் துணை நிற்பார்களாக.


No comments: