Wednesday, October 20, 2021

October 18 - மகளின் கல்லூரி வாழ்க்கைப் பயணம் தொடங்கியது

நான் சென்னைக்கு முதல் முறையாக கல்லூரி முடித்து ஒரு வருடத்தில் சென்றேன். பள்ளித் தோழன் சொக்கலிங்கம் எனக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தான். எழும்பூரில் இன்னமும் பிரபல்யமாக இருக்கும் ஆம்னி பேரூந்து அலுவலகத்தில் அதிகாலையில் சென்று சேர்ந்தேன். விடியாமல் இருந்தது. சொக்கலிங்கம் வருகைக்காகக் காத்திருந்தது இன்னமும் என் நினைவில் உள்ளது.  
முழுமையாக ஒரு வருடம் இருந்தேன்.  ராஜீவ் காந்தி இறந்த தினத்தன்று ஊருக்குக் கிளம்பி வந்த போது செங்கல்பட்டு அருகே தடுக்கப்பட்டு மீண்டும் சென்னைக்கே சென்று சேர்ந்தேன். அடுத்த சில வாரங்களில் ஊருக்குச் சென்று அங்கிருந்து எதிர்பாராத விதமாக திருப்பூர் வந்து சேர்ந்தேன்.

கடந்த 30 வருடங்களில் எத்தனை முறை சென்னைக்கு சென்று வந்து இருப்பேன் என்று கணக்கே இல்லை? ஆனால் இன்று வரையிலும் சென்னை ஈர்த்தது இல்லை. ஆனால் அதிகமாக யோசிக்க வைத்துள்ளது.  

முற்றிலும் மாறிப் போன சென்னையைக்  கடந்த மூன்று வருடங்களில் வீட்டில் உள்ள நான்கு பெண்களுக்கும் முடிந்த வரைக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளேன். என்னால் இவர்களுடன் செல்ல முடியாது என்ற போதிலும் அங்கு நண்பர் ராஜா மூலம் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுங்கள் என்று ஏற்பாடு செய்து திருப்திப் படுத்தி உள்ளேன்.  ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பக்கங்கள் சென்று பார்த்து இப்போதைக்கு ஓரளவுக்குத் திருப்தி அடைந்து உள்ளனர்.  மகள்களுக்கு இன்னமும் சென்னை மீது ஒருவிதமான ஈர்ப்பு இருக்கத்தான் செய்கின்றது.

இரட்டையரில் மூத்தவர் "நான் இந்தப் பாடம் கல்லூரியில் எடுத்துப் படிக்க விரும்புகின்றேன்" என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன போது இணையத்தில் தேடிப் பார்த்தேன்.  சென்னையில் உள்ள கல்லூரிகளில் தான் இருந்தது. அடுத்த வருடம் இவர்கள் சென்னை சென்ற போது இறுதியாக ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து அந்தக் கல்லூரியைப் பார்த்து வரச் செய்தேன்.

18 ஆம் நூற்றாண்டு இறுதியில் சென்னையில் தொடங்கப்பட்ட கல்லூரி. ஏறக்குறைய ஏழு தலைமுறைகள் அங்கே படித்துச் சென்று உள்ளனர்.  இன்னமும் புகழ் பெற்றதாகவே உள்ளது. மதிப்பெண்கள் அடிப்படையில் தான் உள்ளே நுழைய முடியும். தென் இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாது வட மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் என்று காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் போட்டி போடக்கூடச் சூழல் என்பதால் மகளிடம் 12 ஆம் வகுப்பு உள்ளே நுழைந்த போது சொல்லி வைத்திருந்தேன்.  ஆனால் இந்த முறை ஒரே ஒரு பரிட்சை மட்டும் கொரோனா காரணமாக பள்ளியிலிருந்து எழுத முடியவில்லை.  வீட்டில் இருந்தே எழுத  வேண்டிய சூழல்.  பிறகு பலரும் எழுத முடியாத சூழலில் பல்வேறு முடிவுகளுக்குப் பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை 10,11, மதிப்பெண்கள், 12 ஆம் வகுப்பில் ஏற்கனவே வாங்கிய மதிப்பெண்கள் என்று எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இறுதி மதிப்பெண்களைக் கொண்டு வந்தனர்.  இதில் மற்றொரு வியப்பு என்னவெனில் இந்த முறை  தசம கணக்கில் அதாவது 88.88 என்று வித்தியாசமான கணக்கீட்டில் இறுதி மதிப்பெண்களை வெளியிட்டனர்.  

தொடக்கம் முதல் நன்றாக படித்து வந்த மாணவ மாணவியர்கள் இது சிறப்பான அம்சம். மற்றவர்களுக்குப் பிரச்சனைக்குரியதாக இருந்தது.

மகள் 97 சதவிகிதம் எடுத்து இருந்தார். இதற்கு இடையே இவருடன் படித்த மாணவிகள் அனைவரும் திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை என்று நான்கு பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் மதிப்பெண்கள் வருவதற்கு முன்பே அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து முன்பணம் பதிவு போல உறுதிப் படுத்தி இருந்தனர். நாங்கள் பொருட்படுத்தவில்லை. சரியான கல்லூரிகள் மதிப்பெண்கள் வந்த பிறகு தான் சேர்க்கை என்பதனை நடத்துவார்கள் என்றேன்.  அதே போல முக்கியமான டெல்லி மற்றும் சென்னை கல்லூரிகள் அனைத்தும் மதிப்பெண்கள் வந்தவுடன் அன்றே இணையம் வழியே விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும் வசதிகளை உருவாக்கி இருந்தனர்.

அப்போது ஒரு புதுப் பிரச்சனை உருவானது. 88.88 என்கிற எண்களைக் கல்லூரிகள் சார்ந்த இணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு ஒரு காத்திருந்து அடுத்த நாள் பூர்த்தி செய்து அனுப்பினார்.  மகளுக்குக் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தாலும் 97 க்கு மேல் 3 மதிப்பெண்கள் இருக்கிறது. இந்தியா முழுக்க போட்டி போடும் மாணவிகள் உள்ளே வந்து விடுவார்களோ? என்ற தயக்கம் இருந்தாலும் தனிப்பட்ட நண்பர்களிடம் கேட்டேன்.  நிச்சயம் கிடைக்கும் என்றார்கள். நல்வாய்ப்பாக இரட்டையர்கள் இருவரும் மருத்துவ முகாம் மூலம் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நான் நினைத்தது போல முதல் வரிசைப்பட்டியல் வெளியானது. மகளின் பெயர் வந்தது. அன்றே பணம் கட்டி முடித்து, அடுத்த சில வாரங்களில் விடுதிக்குப் பணம் கட்ட தகவல் வர எங்களால் அந்த பணத்தை இணைய வேகத்தில் கட்ட முடியவில்லை. கல்லூரி இணையம் அடம்பிடிக்க சென்னையில் உள்ள நண்பர் ராஜகோபால் தான் கட்டினார்.

படிப்படியாக அவர்கள் கேட்ட ஒவ்வொரு கட்டணமும் கட்டி முடித்து அக்டோபர் 18 அன்று காலை கல்லூரியில் சேர்த்து விட்டு நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம்.

ஒரு மாதத்திற்கு முன்பே நெருக்கமான நண்பர் அஜிஸ் மகன் திருமண வரவேற்புக்கு ரயில் முன்பதிவு டிக்கெட் ஏற்பாடு செய்து இருந்தோம்.  திரும்பும் தினமாக அக்டோபர் 18 முன் பதிவு செய்து இருந்தோம். காரணம் கல்லூரி எப்போது திறப்பார்கள் என்பதே குழப்பமாக இருந்தது. எவராலும் உறுதிப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.  ஆனால் திடீர் என்று காட்சிகள் மாறியது. 18ந் தேதி கல்லூரிக்குள் இருந்த கூட்டம் அளவில்லாதது.  

இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் முகத்தையும் உள்ளே பார்த்தேன். பிரமிப்பாகவே இருந்தது.

18 வருடங்களுக்கு முன் மகள்கள் பிறந்து இருவரையும் என் கையில் மருத்துவர் கொடுத்ததைத் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் பதிவு செய்து இருந்தேன்.  இப்போது இரட்டையரில் ஒருவரின் கல்லூரி வாழ்க்கை 2021 அக்டோபர் முதல் தொடங்குகின்றது. இவர்கள் பள்ளி செல்லத் துவங்கயி காலகட்டத்தில் தான் நான் இங்கே எழுதத் தொடங்கினேன்.  

அதே வேகம். அதே எண்ணம் அதே இளமை.இன்று வரையிலும் உள்ளது.  ஆனால் இப்போது என் வாழ்க்கை  தமிழக பாரதிய ஜனதா கட்சி  என்ற பொறுப்பில் வந்து சேர்ந்துள்ளது. 

விடுதிக்குள் நுழைந்த மகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு நாங்கள் அனைவரும் சென்னையில் இருந்து திருப்பூர்  ரயிலுக்காக மதியம் சென்டரல் வந்து சேர்ந்தோம். இரவு திருப்பூர் வந்து சேர்ந்தோம். திருப்பூர் நுழைந்து வீட்டுக்குள் ஆசுவாசமான போது இனம் புரியாத கலக்கம் மனதிற்குள் இருந்தது. 

ஆனால் யாரும் காட்டிக் கொள்ளவில்லை.


தமிழகத்தில் மின்சார ஊழல் தொடங்கப் போகின்றது


14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அண்ணே...

ஜோதிஜி said...

மகிழ்ச்சி நன்றி வாழ்த்துகள் தனபாலன்.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் மகளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் சிறந்து விளங்குவார்!

துளசிதரன்

கீதா

Yaathoramani.blogspot.com said...

மகளின் கல்லூரி வாழ்க்கை சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஜோதிஜி நீங்கள் எந்தக் கல்லூரி பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிந்துவிட்டது. 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் என்றதும். அதுவும் மதிப்பெண் அடிப்படையில் என்றதும். பழம்பெரும் கல்லூரி. நீங்கள் சொல்லியிருப்பது அதே தான் என்றால்... நல்ல கல்லூரிதான். என் மகனும் கால்நடை மருத்துவம் ஒரு வேளை சேரமுடியாமல் போனால் எனும் சந்தேகத்தில், அதனை டிகிரி முடித்த பின்னும் கூடப் படிக்கலாம் என்ற வகையில் அதற்கான பாடப்பிரிவில் இக்கல்லூரியில்தான் சேர்ந்தான். 3, 3 1/2 மாதங்கள் போயிருப்பான். அதன் பின் கால்நடை மருத்துவம் கிடைத்ததும் அதில் சேர்ந்துவிட்டான்.

உங்கள் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

கீதா

ஜோதிஜி said...

சரஸ்வதி வாழும் வீட்டில் இருந்து இந்த வாழ்த்துகள் வந்துள்ளது. நன்றிங்க.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி.

ஜோதிஜி said...

நன்றிங்க.மகிழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

தங்கள் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க்கையில் எல்லாவித வெற்றியும் அவரை வந்தடையட்டும்.

Aravind said...

தங்கள் மகளின் கல்வி சிறக்க வாழ்த்துக்கள் சார்.
எந்த பிரிவில் இனைந்துள்ளார் என சொல்லுங்கள்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

உங்கள் உதவி மறக்க முடியாதது. நன்ற நாகராஜ்.

ஜோதிஜி said...

அனுப்பி உள்ளேன்.