Tuesday, October 05, 2021

கர்மவீரர் காமராஜர் கண்ணுறங்கும் இடம் கவலைக்கிடமாக

மாநிலத்தலைவரின் கடிதம்
கடித  எண்  19

04 october 2021



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் ஒலி வடிவத்தில் கேட்க

Listen to "கர்மவீரர் காமராஜர் கண்ணுறங்கும் இடம் கவலைக்கிடமாக (BJP Anna Letter-19)" by JothiG 

------------------------------------------
கர்மவீரர் காமராஜர் கண்ணுறங்கும் இடம் கவலைக்கிடமாக

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.... அனைவருக்கும் வணக்கம்.

நெஞ்சம் நிறைந்த நேர்மை    
ஏழைகளுக்கான எண்ணம்      
தெளிவான சிந்தனை    
சாதனைக்கான செயல்   
தெய்வீகத் தேசப்பற்று   
சுத்தமான சுயநலமின்மை     
ஆண்மை மிக்க அஞ்சாமை          
எவரும் அணுகும் எளிமை      
ஓய்வறியா உழைப்பு

இதன் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். கணக்கில் அடங்காத அவரின் சாதனைகள் அவரை கர்மவீரர் ஆக்கியது. கல்விக்கான கரை காணா பங்களிப்பு அவரை கல்விக் கண் திறந்த காமராஜர் ஆக்கியது.

விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மைக்கும் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த குழந்தையை அவர்கள் குலதெய்வமான காமாட்சியின் பெயர் சூட்டி காதலாய் ”காமாட்சி” என்று அழைத்தனர். அவரின் அன்னை மட்டும் ஆசை மிகுதியால் ”ராசா” என்றழைக்க, காமாட்சி ராஜா ”காமராஜர்” ஆனார்... அவரின் அன்னையாருக்கு மட்டும் அவர் ராஜாவாக இல்லை. தமிழகத்தின் அத்தனை ஏழை தாய்மார்களுக்கும் அவர் ராஜாவாக இருந்தார். அன்றைய இந்தியாவின் ராஜாக்களை உருவாக்கும் ராஜாதி ராஜனாக காமராஜர் இருந்தார். அக்டோபர் 2 ஆம் தேதி காமராஜரின் நினைவு தினத்தன்று சென்னை கிண்டியில் உள்ள கர்மவீரர் காமராஜர்  நினைவிடத்தின் அவல நிலையைப் பார்த்து மிக வருந்தினேன். அவரது நினைவு நாளன்று கூடக் கண்ணுறங்கும் இடம் திருத்தப்படவில்லை. ஒற்றை விளக்கு கூட ஏற்றப்படவில்லை. அங்கே அவரின் சாதனைச் சரிதம் இல்லை. பல தலைவர்களுடன் எடுத்த படங்கள் இல்லை. அவர் பயன்படுத்திய பொருட்கள் இல்லை. 

அட!.. காங்கிரஸ் கட்சிதான் தன் தேசியத் தலைவரை தேடாமல் சௌகரியமாக மறந்து விட்டது என்றால் ஆட்சியில் உள்ள அரசாவது அல்லது ஒரு சில அதிகாரிகளாவது  காமராசர் என்ற புனிதனின் சமாதியைச் சிதிலம் ஆகாமல் திருத்தி இருக்கலாம்.

இன்றைக்கும் விவசாயிகள் பெரும் பங்கு நம்பிக் கொண்டிருக்கும் பாசனத்திட்டங்களான மணிமுத்தாறு, ஆரணியாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி,வீடூர், வைகை, காவிரி டெல்டா, நெய்யாறு, மேட்டூர் பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று காமராஜர் உருவாக்கிய நீர் ஆதாரங்களைப் பராமரிக்கவே மற்ற ஆட்சிகளுக்கு நேரமில்லை.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம்,    
பெரம்பலூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்,
ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, 
ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம்,     கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை,   சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்காலை,

அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்ளான்ட் தொழிற்சாலை,    சமய நல்லூர் அனல்மின் நிலையம், சென்னை அனல்மின் நிலையம் நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை என்று அவர் அமைத்த தொழிற்சாலைகளுக்குக் கணக்கில்லை. தமிழகத்துக்குப் பொற்காலக் காட்சி தந்த மனிதன் கண்ணுறங்கும்  இடம் கற்காலக் குகை போலக் கவலைக்கிடமாக இருந்தது கண்டு என் மனதுக்குள் வருத்தம் குடிகொண்டது. ஏதாவது இதற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லை மீறியது. என்ன செய்வது காமராசர் இந்தக் காலத்திற்கு ஒவ்வாத மனிதராகி விட்டார். துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் காமராஜரின் இலட்சியத்திலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டது.  

தேர்தல் நேரத்தில் மட்டும் தெருவிலே முழக்கம் செய்ய அவருடைய பெயர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிக்காரர்களால் கடன் வாங்கப்படுகிறது. மாதாமாதம் தன் தாய்க்கு 120 ரூபாய் பணம் அனுப்புவதைக் காமராஜர் வழக்கமாகக் கொண்டிருந்தார். முதல்வரின் வீட்டையும் அவரின் தாயாரையும் சந்திக்க பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவதால் சோடா கலர் காபி என்று செலவு அதிகமாகிறது எனக்கு முப்பது ரூபாய் சேர்த்து அனுப்பவும் என்று தாயார் கடிதம் எழுதினார்.

நம் வீட்டிற்கு வருபவர்களுக்குச் சோடா கலர் காபி நீங்கள் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் காபி குடிக்கவும் வரவில்லை. எனக்கு 30 ரூபாய் கூடுதலாக கொடுக்க இயலாது ஆகவே 120 ரூபாய்க்குள் உங்கள் செலவைச் சுருக்கிக் கொள்ளுங்கள் என்று பதில்  அனுப்பினார். 

ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த நபரின் செலவுக்  கணக்கைப் பார்த்தால் காமராஜருக்குக் கோவில் கட்டி கும்பிடவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. 

எனவேதான், அங்கு கூடியிருந்த 

ஊடகவியலாளர்களுக்கு முன்பாகத் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

இனி காமராஜரின் நினைவாலயத்தைக் கமலாலயம் பார்த்துக் கொள்ளும்.

அவர் நினைவிடம் அழகு படுத்தப்படும்.      
அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.       
அவர் சாதனைகள் வெளிப்படுத்தப்படும்.
பல தலைவர்களுடன் அவர் எடுத்த படங்கள் சுவர்களை அலங்கரிக்கும்.         
அவருடைய பேச்சின் பதிவுகள் அங்கே ஒலிபரப்பப்படும்.
அவரின் வாழ்க்கை வரலாறு காணொளிக் காட்சியாக அமைக்கப்படும். 

இந்தப் பராமரிப்புப் பணிகளை, 
காங்கிரஸ் கட்சியும், 
திமுகழக அரசும், செய்யத் தவறியதால், 
அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தமிழக பாரதிய ஜனதா கட்சி தயாராக இருக்கிறது.     
பாரதியஜனதாகட்சியின்  தொண்டர்கள் காமராஜருக்குத் திரும்பச் செய்யும் 

கைமாறாக, புனிதப் பணியாக இதைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று உங்கள் அனைவரின் சார்பாக நான் உத்தரவாதம் அளித்து இருக்கிறேன்.

என்ன சரிதானே நான் சொன்னது.

அன்புச் சகோதரன்
உங்க ‘‘அண்ணா’’

No comments: