சம்பவம் 1
அவர் உள்ளூரில் சாயப்பட்டறையில் உயர் பதவியில் இருக்கின்றார். 20 வருடமாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலும் கொரானா தொடங்கியது முதல் அவர் மற்றொரு புனிதப் பணியைத் தொடங்கித் திக்குமுக்காட வைத்தார். உலகில் நடந்த அனைத்து கொரானா தொடர்பான விபரங்கள் முதல் உள்ளூரில் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் சமாச்சாரங்கள் வரைக்கும் உண்டான அனைத்துத் தகவல்களையும் ஃபார்வேர்டு செய்திகளை அனுப்பத் தொடங்கினார். மறுத்துப் பார்த்து, கெஞ்சிப் பார்த்தும் மசியவில்லை. காலையில் எழுந்ததும் ஐந்து நிமிடம் சுத்தம் செய்வது தான் முதல் பணியாக இருந்தது.
கொடூரமான செய்திகள் கூட அவருக்கு அல்வா துண்டு போலவே தெரிந்த காரணத்தின் உளவியலை இன்று வரைக்கும் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு வாரமாக செய்திகள் எதுவும் வரவில்லை. அழைத்துக் கேட்ட போது கொரானா தாக்குதலால் தலைகீழாக மாறிப் போயிருந்தார். இங்குள்ள அரசு மருத்துவமனைச் சென்று அவஸ்தைகள் பட்டு உள்ளுர் தனியார் மருத்துவமனை சென்று 25000 வரைக்கும் செலவழித்துக் கடந்த ஒருவாரமாகக் கோவை பெரிய தனியார் மருத்துவமனையில் சேர்ந்து நேற்று வரைக்கும் 3 லட்சம் செலவளித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களாம். உயிர்பிழைத்த பின்பு ஐந்து லட்சம் புராணம் பாடத் தொடங்கியுள்ளார்.
சம்பவம் 2
உறவினர். ஒரே மகன். அம்மாவுக்கு கொரானா. அனைவரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பரிந்துரைக்க மறுத்து காரைக்குடி, மதுரை (மதுரை மீனாட்சி மிசன் உள்ளே நுழையத் தொடக்கத்தில் 50 000 அதன் பிறகு மற்ற செலவுகள் தனி. வேலம்மாள் தொடக்கமே ஐந்து இலக்கம்) சென்று பல லட்சங்கள் இழந்து நகைகளை அடகு வைத்துப் பல பேர்கள் அடிக்கப் போய் கடைசியாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து இப்போது அபாயக் கட்டத்தைக் கடந்துள்ளார். செலவு ஒன்றுமே இல்லை. அங்கு வழங்கும் சாப்பாடு வகைகளும் அருமை என்றார்கள்.
தீர்ப்பு
1. அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் (கல்வித்துறை, மருத்துவத்துறை) தொடர்பே இல்லை. சொல்லப் போனால் அரசு இவர்களிடம் எதையும் திணிக்க முடியாது. நாங்கள் உங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையே? வந்தால் வா. வராவிட்டால் அழுக்கு அரசு மருத்துவமனைக்குப் போ. (இதுவே தான் கல்வித்துறையும்) சிம்பிள் லாஜிக். கௌரவம் பார்க்கும் எளிய தமிழ்ப் பிள்ளைகள் இருப்பதை எல்லாம் இழந்து விட்டு இது நோயா இல்லை நம்மைச் சுவைத்துப் பார்க்க வந்த காயா? என்று கதறுகின்றார்கள்.
2. கட்டாயம் தமிழ்நாட்டில் அரசு எட்டுக் கோடி தமிழ்ப்பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் எதையும் நல்லமுறையில் செய்து கொடுக்க வாய்ப்பில்லை. கட்டமைப்பு இல்லை. நம்மவர்கள் உணர்வதும் இல்லை. திமிர் எடுத்து தடித் தாண்டவராயர்கள் இ பாஸ் இல்லை என்றவுடன் அடுத்த நாளே கொடைக்கானலுக்குப் படையெடுத்துச் செல்லுக்கும் பக்கிகளை எந்த இபிகோ வைத்துத் திருத்த முடியும்?
கொரானா பாகம் 2 படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
13 comments:
//இ பாஸ் இல்லை என்றவுடன் அடுத்த நாளே கொடைக்கானலுக்குப் படையெடுத்துச் செல்லுக்கும் பக்கிகளை எந்த இபிகோ வைத்துத் திருத்த முடியும்?//
சரியான கேள்வி - பல இடங்களில் திருவிழாக் கூட்டம் மாதிரி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இது எதில் போய் நிற்குமோ...?
மக்களின் மனநிலை என்ன என்று அனுமானிக்கவே முடியவில்லை...எதில் போய் முடியுமோ...அச்சமாகத்தான் இருக்கிறது..
கொரானா 5.0 - அவசியான பதிவு. எனது பகத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் திரு ஜோதிஜி
திருப்பூர்:திருப்பூரில் நிட்டிங் துறை மேம்பட, 'சிம்கா' (தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம்), சார்பில், பல்லடம் அருகே நாரணாபுரத்தில், பொது பயன்பாட்டு சேவை மையம் உருவாகி வருகிறது.
இது பற்றி கருத்து வரவேற்கிறோம்
முதல்கட்டமாக, ஜெர்மனியிலிருந்து ரிப், இன்டர்லாக் 7 மெஷின்கள்; தைவானிலிருந்து 20 பிளாட் நிட்டிங் மெஷின்கள் என, மொத்தம் 27 மெஷின்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
இன்று செய்தித் தாளில் வாசித்தேன். அருமை.
தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி.
கழிவுகளை காலம் நீக்கிவிடும்.
பல நோய்கள் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சவாலானது.
மக்கள் நுகர்வு நிலையில் தான் வாழ்கின்றார்கள்
உண்மைதான் ஐயா
பெருவாரியான மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள்
இனிமேல் தான் தீநுண்மியின் ஆட்டமோ...? இருக்கலாம்...
Post a Comment