Monday, October 05, 2020

நீங்களும் கோடீஸ்வரர் தான்.

வேலையிழப்பு, தொழில் மந்தம், தொழில் நிறுத்தம், இழப்புகள், நிறைவேற்ற நினைத்த கனவுகள் நிராசையான வருத்தங்கள் என்று கொரானா கொடுத்த பாடத்திலிருந்து இன்னமும் தெளிய முடியாமல் இருப்பவர்களுக்கு நண்பர் உரையாடலில் தெரிவித்த கருத்துகள் உத்வேகமாக இருக்கக்கூடும்.

"கையில் கையுறை, ஹெல்மெட் போல கண்ணாடி கவசம் போட்டு அதற்குள் முககவசம் அணிந்து என் இருக்கையை விட்டு நகராமல் என் அறைக்கு எவரையும் வர விடாமல் கடந்த இரண்டு மாதமாக அலுவலகம் சென்று வந்த எனக்கும் எப்படி கொரானா வந்தது என்றே தெரியவில்லை. என்னை விட வீட்டில் அதிகம் பயந்த காரணத்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால் அங்குள்ள நெருக்கடியான சூழலை, சுகாதாரமற்ற செயல்பாடுகளை, அலட்சியமாக நடத்திய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைப் பார்த்து வேறு வழியே தெரியாமல் கோவை தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய சூழல் உருவானது".

"மொத்தம் 13 நாட்கள். முதலாளியிடம் வாங்கிய கடன் தொகை 3 லட்சம். என் கையில் இருந்த 4 நான்கு லட்சம். வீட்டுக்கு நான் வந்து சேர்ந்த போது பண இழப்பு, அதிகரித்த கடன், எல்லாவற்றையும் விட வழிகாட்ட ஆள் இல்லாமல் பணம் இல்லாதவர்கள் படும் பாடும், அரசின் அலட்சியமும், மேலிருந்து கீழ் வரைக்கும் இதனைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளை போன்றவற்றை முழுமையாகப் பார்த்த பின்பு நான் எப்படி உயிரோடு திரும்பி வந்தேன் என்பதே எனக்கே வியப்பாக உள்ளது".

"அரசு மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளில் எந்தத்தந்த வகைகளில் எப்படியெல்லாம் பணம் சாம்பாதிக்கலாம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு சுவாசிக்கும் கருவிகளைத் தலையில் கட்ட அவர்கள் செய்யும் பயமுறுத்தல்கள், வாங்க மறுத்தால் வாடகைக்கு நீங்க எடுத்துக் கொண்டு போகலாம் என்று முன் பணம் கட்டச் சொல்லும் அவலம் பார்த்து என் புத்தியே பேதலித்து விட்டது. நான் வைத்திருந்த காப்பீடு அனைத்தும் இவர்களிடம் செல்லுபடியாகவே இல்லை. பணத்தைக் கட்டு என்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள். எல்லாவற்றையும் கடந்து வந்து பின்பு என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்".

"கடந்த ஐந்து மாதத்தில் வருமானம் ஒன்றுமே இல்லையே தினமும் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக் கொள்வதை விட தங்களைக் காப்பாற்றிக் கொண்டு கொரானா வராமல் வாழ்ந்தாலே போதுமானது. ஐந்து லட்சம் பத்து லட்சம் பணத்தையும் செலவளித்து இத்தனை அவமானத்தைப் பெறாமல் இருக்கின்றோமே என்று சந்தோஷமாக இருங்கள். திருப்பூரில் உள்ள முக்கிய முதலாளிகள் தெளிவாகக் கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொடுக்க வேண்டிய நபர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தனி அறை வாங்கி ஜாலியாக குடும்பத்தோடு இருக்கின்றார்கள். மாநில அரசின் மருத்துவமனைக்கும் மத்திய அரசின் மருத்துவமனைக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்த போது நான் எவ்வளவு பெரிய தப்பு செய்துள்ளேன் என்பதே எனக்கு திருப்பூர் வந்த பிறகு தான் தெரிந்தது. நான் விசாரித்த ஒரு நபர் கூட கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனைபற்றி எனக்குச் சொல்லவே இல்லை. முப்பது வருடமாகப் பல்லாயிரம் கோடி வருமானம் உள்ள திருப்பூரில் ஏன் இவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவமனை திறக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முயலாமல் இருக்கின்றார்கள் என்பதே அங்கே சென்று பார்த்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது".

••••

மொத்தத்தில் பத்து சதவிகித தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமே கொரோனா உருவாக்கிய நெருடிக்கடிகளை சமாளிக்கும் அளவிற்கு தொழில் நுட்ப வசதிகளை கொண்டு இருந்தது.  மற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் முதல் பணம் பறிக்க நடத்தப்படும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கொரோனா உருவாக்கிய அதிரடி மாற்றங்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். தடுமாறிக் கொண்டும் இருக்கின்றார்கள். இதன் பாதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். 2020 கல்வியாண்டில் மொத்தம் 15 லட்சம் பேர்கள் அரசு பள்ளிக்கூடம் பக்கம் வந்து சேர்ந்து உள்ளனர். 

சென்ற வருடத்தை விட 4 லட்சம் அதிகமான மாணவர்கள் வந்து உள்ளனர்.

இதுவரையிலும் அடையாத உச்சமிது.

#JoPechu

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கொரோனாவினால் இன்னும் சில நல்ல மாற்றங்களும் வரும் என்று நம்புவோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்....

கரந்தை ஜெயக்குமார் said...

கொரோனா
ஒரு புறம் அச்சத்தைக் கொடுத்தாலும்,
மறுபுறம் இதுவரையிலும் இல்லாத ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்
நன்றி ஐயா

Mohamed Yasin said...

மருந்தே கண்டுபிடிக்காத நோய்க்கு மருத்துவம் பார்த்து கோடிகளில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனையை பற்றி என்ன சொல்வது??? ஒரு நபருக்கு ஏழு லட்சம் என்றால் ஒரு குடும்ப சராசரி கணக்கே (4 பேருக்கு) முப்பது லட்சத்தை தாண்டும் என்றால், நடுத்தர குடும்பத்தினரால் எப்படி சமாளிக்க முடியும்.. கொரோன பயத்தை விட, இவர்களின் கட்டணத்தை கேட்டால் இதய துடிப்பு நின்று விடும் போலிருக்கு..

ஜோதிஜி said...

இப்போதைய சூழலில் பணம் சம்பாரிப்பதைக் காட்டிலும் இங்கே வாழ நம் உயிரை கொரானாவிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வாரம் ஒரு முறை நாலைந்து வேலைகளை ஒன்றாக பார்க்கும் வண்ணம் வாழ்க்கைச் சூழலை அமைத்து செயல்படுகிறேன்.

ஜோதிஜி said...

பாதிப்புகளை முழுமையாக இன்னமும் மக்கள் உணரவில்லை என்றே நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவான பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கொரானா.