"கையில் கையுறை, ஹெல்மெட் போல கண்ணாடி கவசம் போட்டு அதற்குள் முககவசம் அணிந்து என் இருக்கையை விட்டு நகராமல் என் அறைக்கு எவரையும் வர விடாமல் கடந்த இரண்டு மாதமாக அலுவலகம் சென்று வந்த எனக்கும் எப்படி கொரானா வந்தது என்றே தெரியவில்லை. என்னை விட வீட்டில் அதிகம் பயந்த காரணத்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால் அங்குள்ள நெருக்கடியான சூழலை, சுகாதாரமற்ற செயல்பாடுகளை, அலட்சியமாக நடத்திய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைப் பார்த்து வேறு வழியே தெரியாமல் கோவை தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய சூழல் உருவானது".
"மொத்தம் 13 நாட்கள். முதலாளியிடம் வாங்கிய கடன் தொகை 3 லட்சம். என் கையில் இருந்த 4 நான்கு லட்சம். வீட்டுக்கு நான் வந்து சேர்ந்த போது பண இழப்பு, அதிகரித்த கடன், எல்லாவற்றையும் விட வழிகாட்ட ஆள் இல்லாமல் பணம் இல்லாதவர்கள் படும் பாடும், அரசின் அலட்சியமும், மேலிருந்து கீழ் வரைக்கும் இதனைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளை போன்றவற்றை முழுமையாகப் பார்த்த பின்பு நான் எப்படி உயிரோடு திரும்பி வந்தேன் என்பதே எனக்கே வியப்பாக உள்ளது".
"அரசு மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளில் எந்தத்தந்த வகைகளில் எப்படியெல்லாம் பணம் சாம்பாதிக்கலாம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு சுவாசிக்கும் கருவிகளைத் தலையில் கட்ட அவர்கள் செய்யும் பயமுறுத்தல்கள், வாங்க மறுத்தால் வாடகைக்கு நீங்க எடுத்துக் கொண்டு போகலாம் என்று முன் பணம் கட்டச் சொல்லும் அவலம் பார்த்து என் புத்தியே பேதலித்து விட்டது. நான் வைத்திருந்த காப்பீடு அனைத்தும் இவர்களிடம் செல்லுபடியாகவே இல்லை. பணத்தைக் கட்டு என்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள். எல்லாவற்றையும் கடந்து வந்து பின்பு என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்".
"கடந்த ஐந்து மாதத்தில் வருமானம் ஒன்றுமே இல்லையே தினமும் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக் கொள்வதை விட தங்களைக் காப்பாற்றிக் கொண்டு கொரானா வராமல் வாழ்ந்தாலே போதுமானது. ஐந்து லட்சம் பத்து லட்சம் பணத்தையும் செலவளித்து இத்தனை அவமானத்தைப் பெறாமல் இருக்கின்றோமே என்று சந்தோஷமாக இருங்கள். திருப்பூரில் உள்ள முக்கிய முதலாளிகள் தெளிவாகக் கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொடுக்க வேண்டிய நபர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தனி அறை வாங்கி ஜாலியாக குடும்பத்தோடு இருக்கின்றார்கள். மாநில அரசின் மருத்துவமனைக்கும் மத்திய அரசின் மருத்துவமனைக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்த போது நான் எவ்வளவு பெரிய தப்பு செய்துள்ளேன் என்பதே எனக்கு திருப்பூர் வந்த பிறகு தான் தெரிந்தது. நான் விசாரித்த ஒரு நபர் கூட கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனைபற்றி எனக்குச் சொல்லவே இல்லை. முப்பது வருடமாகப் பல்லாயிரம் கோடி வருமானம் உள்ள திருப்பூரில் ஏன் இவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவமனை திறக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முயலாமல் இருக்கின்றார்கள் என்பதே அங்கே சென்று பார்த்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது".
()()()
3 comments:
அதோ அந்த சின்னஞ் சிறு பூமி எனும் நிலத்தில், 'உள்ளே தள்ளவும் - வெளியே தள்ளவும்' என்று சுகமாக வாழ்ந்த மனிதர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருந்ததாக ஒரு குறிப்பு உண்டு...!
5G - ஊழல் முதல் வளர்ச்சி வரை - முப்பது வருடமாகப் பல்லாயிரம் கோடி வருமானம் உள்ள திருப்பூரில் ஏன் இவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவமனை திறக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முயலாமல் இருக்கின்றார்கள் என்பதே அங்கே சென்று பார்த்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது". - அருமை. என் தம்பி இ.எஸ்.ஐ. ஸ்ரீவில்லிபுத்தூர் & சிவகாசியில் மருத்துவம் பார்த்து வருகிறார். அற்புதமான கவனிப்பு. - இந்தப்பதிவில் உள்ள காணொளியும் நண்பர்கள் ஆழ்ந்து கேட்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள், நன்றி திரு ஜோதிஜி
தற்போது தனியார் நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கும் பல விசயங்கள் ஊழல் மற்றும் விதி மீறல் தொடர்பானது. அரசின் பணம் சூறையாடப்படுகின்றது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல அதிகாரிகள் நீதிமன்றங்கள் என்று எல்லாப் பக்கமும் இதற்குள் உள்ளது. ஆனால் இதில் விரிவாக அவற்றை பேச வில்லை.
Post a Comment