Tuesday, October 20, 2020

கனத்த தோல் கொண்ட தமிழகக் கல்வித்துறை அமைச்சகத்திற்கு


கனத்த தோல் கொண்ட தமிழகக் கல்வித்துறை அமைச்சகத்திற்கு

2020 பெருந்தொற்று என்பது மறுக்க முடியாத உண்மை. பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் நிச்சயம் பாதிப்பு உருவாகி பரவும் கூடவே அது மரணங்களை அதிகப்படுத்தும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய மறப்பது நியாயமா? கல்வி அமைச்சக அதிகாரிகளின் அடிப்படை கட்டமைப்பு என்பதே தகர்ந்து போயுள்ளதாகவே தெரிகின்றது. ஒவ்வொன்றும் மிகப் பெரிய போராட்டமாக போய்க் கொண்டிருக்கிறது. தொற்று நோயை விட இது மாணவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.

உலகமே மதுக்கடைகளை திறக்காதீர் என்று அலறிய போதும் அலட்சியப்படுத்தி டெல்லி வரைக்கும் சென்று அனுமதி பெற்று வெற்றி பெற்ற வீரப்பரம்பரையினர் நீங்கள்? இன்று வரையிலும் மேலும் எத்தனை இடங்களில் மதுக்கடைகளை திறக்க முடியும் என்று எதிர்ப்பு காட்டும் பகுதி மக்களை சட்டம் கொண்டு சமாளிக்கும் நீங்கள் ஏன் கல்வித்துறையில் மட்டும் அக்கறை காட்ட மறுப்பது ஏன்?

கல்வித்துறைக்கென இதுவரையிலும் தமிழக அமைச்சரவையில் அமைச்சர் பெருமகன் ஒருவர் இருந்தார் என்பது மாறி இந்த முறை தான் ஆச்சரியமாக "முதல்வர் நடவடிக்கை எடுப்பார்". "முதல்வர் அறிவிப்பு செய்வார்". "முதல்வர் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்" என்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும் பிஆர்ஓ வேலை செய்யக்கூடிய வேலையாளாக ஒருவர் மாறியுள்ளார் என்பதே எவ்வளவு துர்ப்பாக்கிய நிலைமை?

பாடத்திட்டம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னமும் அது குறித்து ஒவ்வொருமுறையும் வெறுமனே அறிவிப்பாகவே சொல்வது எந்த அளவுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உளவியல் தாக்குதலை உருவாக்கும்? அவர்கள் செயல்பட முடியாத தன்மையை விளைவிக்கும் என்பதனை அறியாதவர்கள் நீங்கள் எனில் தமிழக மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

அரையாண்டு தேர்வு இல்லை என்று போகிற போக்கில் ஒவ்வொரு பத்திரிக்கைகளும் அதிகாரப்பூர்வமற்ற கிசுகிசு போலச் செய்திகளைப் பரப்பும்பட்சத்தில் இதுவரையிலும் கஷ்டப்பட்டு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் தனியார் மற்றும் ஆக்கப்பூர்வமாகச் செயலாக்கத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துவது போல இருக்காதா?
உறுதியான எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க முடியாத சூழல் என்பது பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையைப் பணயம் வைப்பது போல ஆகாதா?

கடந்த மூன்று வருடங்களில் கல்வித்துறையில் கல்வித்துறை செயலாளர்களாக வந்தமர்ந்த தங்களுக்கு உகந்த வட மாநில உயர் அதிகாரிகளுக்கு இங்குள்ள மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையான நிலவரம் முழுமையாகத் தெரியும் என்று நம்புகின்றீர்களா?

அரசு பள்ளிக்கூடங்களில் பதினோராம் வகுப்பு சேர்க்கை முடிந்துள்ளது. ஆனால் கடந்த மாதம் 25ந் தேதி பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் எழுதிய பரிட்சையின் முடிவு குறித்து இதுவரையிலும் எவ்வித அறிவிப்பும் வெளிவரவே இல்லை. அது குறித்து பேச்சே இல்லை. பல பெற்றோர்களின் கதறல் உங்கள் காதில் விழவேண்டுமென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகங்கள் கூட இன்னமும் முழுமையாகக் கொடுத்து முடிக்காத சூழலும், அரசிடம் இருந்து இன்னமும் வந்து சேர வில்லை என்று ஆசிரியர்கள் சொல்லும் நிலைமையில் நம் கல்வித்துறை நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உங்கள் நிர்வாகத்தில் யாராவது ஒரு நல்ல மனிதர் உணரும் அளவிற்கு அங்கே மனிதர்கள் பதவியில் உள்ளார்களா?

நீட் என்ற ஒற்றை வார்த்தை வைத்துக் கொண்டு கபடி ஆடிக்கொண்டிருப்பதும், அதற்கு அரசு சார்பாக நடத்துவதாகச் சொல்லப்படும் பயிற்சி முகாம், இணைய வகுப்பு, தேவையான நடவடிக்கைகள் என்பது இன்னமும் அறிவிப்புகளாக, பேட்டியில் கொடுக்கப்படும் ஒற்றை வார்த்தைகளாகக் காற்றில் கலந்து மறைந்து போய்க் கொண்டிருப்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? 

உங்கள் அரசின் கொள்கை முடிவின்படி 40 சதவிகித பாடத்திட்டங்கள் குறைக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள் வரும்பட்சத்தில் அவர்கள் வாழ்க்கையை எங்கே கொண்டு பணயம் வைப்பார்கள்? அப்போது நீங்கள் வழங்கும் ஊடக மொழி என்னவாக இருக்கும்?

கல்விக்குள் அரசியல் என்பது நம் மாநிலத்தில் மட்டுமே வருடந்தோறும் கொழுந்து விட்டு எறிந்து கொண்டேயிருக்கிறது. உங்கள் செயல்படாத தன்மை, செயல்பட விடமாட்டோம் என்ற அலட்சியம், பல லட்ச மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற எண்ணமில்லாமல் வழங்கப்படும் அக்கறையற்ற அறிவிப்புகளை எப்போது மாற்றப் போகிறீர்கள்? எப்போது தான் உணரப் போகின்றீர்கள்?

கல்வி மூலம் மட்டுமே நம் குழந்தைகள் இந்தச் சமூகத்தில் உயர்ந்து விட முடியும் என்று நம்பிக்கையுடன் கல்வி மேல் அக்கறை வைத்துள்ள பல லட்சம் சாதாரணக் குடும்பங்கள் அனைத்துக்கும் நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் நிர்வாகம் என்பது ஆள் இல்லாத அத்துவானக்காட்டில் கத்தும் ஒலி போல இருப்பதால் உங்கள் காதில் எட்டுவதே இல்லை என்பதனை உணர முடிகின்றது.

காலம் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றது.

பதிவு செய்யப்படும் ஒவ்வொன்றுக்கும் பதில் உண்டு என்பதனை நம்புங்கள்.
தூண்டுதல் | Self Motivation | 021 | Oct 20 2020

 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விதைகளை கேள்விக்குறிகளாக ஆக்கி விட்டபின், புதிய விதைகள் உருவாக்கும் இடமும் சேர்ந்தே அழியும் என்ற உயர்ந்த கொள்கைகளை, எளிய தமிழ்ப் பிள்ளைகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கவனிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...

ஜோதிஜி said...

அயோக்கியர்கள் அதிகமான பின்பே அவதாரம் முன்னால் வருவார்.