Sunday, September 27, 2020

எஸ்பிபி - அரசியல் புகழ் Vs திரைப்பட புகழ்

அரசியலில் ஒருவர் எத்தனை வருடங்கள் இருந்தாலும் அவர் நேர்மையாக வாழ்ந்திருந்தாலும் முழுமையான அங்கீகாரம் கிடைக்குமா? என்றால் அது வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்லது நடந்தால் நாற்பது எதிரிகளும் கெட்டது நடந்தால் நானூறு எதிரிகளும் உருவாகும் களமது. ஆனால் திரைத்துறையில் பணிபுரிய ஊதியம் கொடுத்துக் கூடவே புகழும் அங்கீகாரமும் உங்கள் திறமை பொறுத்து  உண்டு. இந்த இரண்டு துறைகளிலும் உங்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. உச்சபட்ட புகழை அடைந்திருந்தால் நீங்கள் வளர்க்கும் நாயும் ஒரு பிரபல்யமே. 



அரசியலில் அதிகாரத்தை நோக்கி நகர்ந்தவர்களுக்கு நல்ல போதை கெட்ட போதை என்பது பிரச்சனையல்ல. ஒவ்வொரு நாளும் போதை தான். சுற்றிலும் கூட்டம் சேரச் சேர தன்னிலை மறக்கும் தருணங்கள் உருவாக்கும் சூழலைக் கையாள தனித்திறமை இல்லாவிட்டால் தரங்கெட்ட பாதைகள் அறிமுகமாகும். கூடியிருந்தவர்கள் அற்ற குளத்து அறுநீர் பறவையினமாக மாறியிருப்பார்கள்.

அரசியல் அதிகாரம் போதையாக மாறும் தான் பிரச்சனைகள் தொடங்கும். ஆனால் திரைத்துறையில் எந்தத் துறையில் இருந்தாலும் போதையும் வாழ்க்கையின் ஓர் அங்கத்தினராகவே வாழும். கொஞ்சம், அதிகம், மிக அதிகம் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. புகழ் போதைகளுடன் இது போன்ற பல போதைகள் சேரும் போது தான் சில வருடங்களில் காணாமல் போய்விடுகின்றார்கள்.

தங்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம். சிலரால் மட்டுமே வென்று வாழ முடிகின்றது. புகழும் பணமும் ஒரே நேரத்தில் மிக அதிக அளவு கிடைக்கும் துறைகளில் ஒவ்வொரு நாளும் புதுப்புது எதிரிகள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வதுடன் இதனையும் கையாளத் தெரிய வேண்டும். சரியான நபர்களை அருகே வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகள் தொடங்கும் போதே அதனை வளர விடாமல் கற்றுக் கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும். இவர் அற்புதமான திறமைசாலி என்பதற்காக மட்டும் எந்தவொரு கலைஞருக்கும் முழுமையாக அங்கீகாரம் கிடைத்து விடாது. ஊடகங்கள், போட்டியாளர்கள்,கால மாற்றத்திற்கேற்ப வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள், தொழில் நுட்பத்தைக் குறைந்தபட்சமேனும் புரிந்து கொள்ள வேண்டிய திறன்கள், இத்துடன் குடும்பத்தினருடன் செலவழிக்க வேண்டிய நேரத்துடன் தன் உடல் நலன் ஆரோக்கியம் குறித்த அக்கறை என்று எல்லாநிலையிலும் கவனம் செலுத்த முடிந்தவர்களால் மட்டுமே தலைமுறை கடந்தும் தங்களை இங்கே நிரூபிக்க முடியும்.

சிவாஜி கணேசன் அவர்களைக் கொண்டாடாமல் போனது அவருக்கு அவமரியாதையல்ல. ஒவ்வொரு தமிழர்களுக்கும் தான் அவமானம். தமிழக அரசியல் சூழல் அவரை நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் சார்புள்ளவராகவும் பார்த்தது தான் பிரச்சனையாக இருந்தது. ஆனால் எடப்பாடியார் எஸ்பிபி க்கு தமிழக அரசின் நல்லடக்க அரசு மரியாதை செய்ததன் மூலம் மொத்தத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

உன்னதமான காரியம் எடப்பாடியார் வாழும் வாழ்நாள் முழுக்க அவருக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கக்கூடியதைச் செய்துள்ளார். 

தமிழக அரசு செய்கின்ற மரியாதை 50 வருடங்களாக எஸ்பிபி இங்கே ஒவ்வொரு தமிழருக்கும் ஆசிரியராக, மருத்துவராக, நண்பராக, கவலைகளைத் தீர்க்கும் மூலிகைச் செடி வளர்ந்து மணம் பரப்பியதற்குப் பிரதி உபகாரமிது. போற்றத்தக்கது.

புகழ் என்ற மூன்றெழுத்து வார்த்தையில் எத்தனை விதமான மூலக்கூறுகள் இருக்கின்றதோ அத்தனை விதங்களை எஸ்பிபி அடைந்துள்ளார். சாதித்துள்ளார். இதற்கு மேலாகத் தெலுங்கு புரோகிதம் என்பது பாரபட்சமில்லாத கொள்கையுடையதாக இருந்த போதிலும் மற்ற மதங்களுக்காகவும் எஸ்பிபி பாடிய பாடல் வரிகள் என்பது அவர் வெறுமனே பாடகராகப் பாடவில்லை. உணர்ந்து, உள்வாங்கி, அனுபவித்து நான் மதங்களையும் கடந்த பறவை இனத்தைச் சேர்ந்த பாடகன் என்பதனையும் நிரூபித்து இன்று காற்றோடு கலந்துள்ளார். இதன் காரணமாகவே இன்று தொலைக்காட்சி ஊடகங்கள் தென்னிந்தியா முழுக்க தங்கள் நேரிடையான ஒளிபரப்பை நடத்தி அளவுக்கு அதிகமான விளம்பரங்களைப் போட்டு நாங்கள் அஞ்சலி செலுத்துகின்றோம் என்கிற அளவுக்கு இறந்த மனிதரை வைத்து கல்லா கட்டுகின்றார்கள். இன்னமும் வணிக சந்தையில் சகாவரம் பெற்ற மனிதராக தாமரைப்பாக்கத்திற்கு இன்று சென்று சேர்ந்துள்ளார்.

மகன் எஸ்பிபி சரண் தான் வாழும் காலம் முழுக்க இந்த இடத்தை உன்னதமான கோவிலாக வைத்திருக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்பதனை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும். காரணம் புதைக்கப்பட்டது எஸ்பிபி யின் உடல் அல்ல. அடுத்த பல தலைமுறைக்கு உற்சாகமும் நம்பிக்கையளிக்கக்கூடிய ஓர் ஆலமரத்தின் விதையை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள நிலம் இன்று உள்வாங்கியுள்ளது.

விதை முளைக்கும். விருட்சமாக மாறும். மாற வேண்டும்.

••••

இரண்டு மணி நேரம் திரைப்படம் பார்க்கும் பொறுமையும், நான்கு மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் விருப்பமும் நம் ஆளுமையை வளர்க்க உதவும் புத்தகங்களைப் பேச்சுகளை நம்மால் பொறுமையாகக் கேட்கப் படிக்க நேரமில்லை. சுருக்கமாகப் பேசவும். குறைவாக எழுதவும் என்று சொல்லுபவர்களின் விருப்பங்கள் மாறியுள்ளது என்று அர்த்தம். இது நம் ஆளுமையில் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது. மிஸ்டர் மொக்கை என்ற பட்டத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெறுகின்றோம். நாம் அடைய வேண்டிய உயரம் மாறும். ஆளுமைத் திறனுடன் வளர வேண்டிய நம் சிந்தனைகளும் மாறிவிடுகின்றது.  எல்லாமே எனக்குத் தெரியும் என்ற அதீத நம்பிக்கைகள் நம்மைத் தடம் மாற வைத்து பொறாமை மிகுந்த மனிதர்களாக மாற்றி விடுகின்றது என்பதனை உணரும் போது வாலிப பருவத்தைக் கடந்து இருப்போம்.

Jo Pechu (ஜோ பேச்சு)

பேச - பார்க்க - பழக - நேரமில்லை போடா...........

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

புகழ் என்ற மூன்றெழுத்து வார்த்தையில் எத்தனை விதமான மூலக்கூறுகள் இருக்கின்றதோ அத்தனை விதங்களை எஸ்பிபி அடைந்துள்ளார். சாதித்துள்ளார்.
உண்மை
உண்மை

Yaathoramani.blogspot.com said...

உண்மையில் இந்த அளவு மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்கச் சாத்தியமில்லை..பாடகர் என்பதற்காக மட்டும் என்றால் டி.எம் எஸ் அவர்களுக்கும் இதைப்போல் இருந்திருக்கவேண்டும்...ஊடகங்களில் இவரின் அடக்கமான பெருந்தன்மையான வெளிப்படையான குழந்தை இயல்பான வெளிப்பாடே இந்த அளவு மக்கள் மதிப்பைப் பெற்றிருக்கச் சாத்தியம் என நினைக்கிறேன்..குறிப்பாக எதிர்மறையான எந்தப் பேச்சும் நடவடிக்கையும் இல்லாததையும் சொல்லலாம்..

வெங்கட் நாகராஜ் said...

கல்லா கட்டும் ஊடகங்கள்... :( வேதனையான உண்மை.

சிறப்பான மனிதரை, அவரது இறப்பை பயன்படுத்தி இப்படி டி.ஆர்.பி. ரேட்டிங்க் ஏற்றிக் கொள்ளவும் வேண்டாம், சம்பாதிக்கவும் வேண்டாம். ஆனால் இதையெல்லாம் அவர்கள் உணரப் போவதில்லை. அப்படியே உணர்ந்து கொண்டாலும் நிறுத்தப் போவதில்லை.

Rathnavel Natarajan said...

அஞ்சலி