Monday, September 21, 2020

பாட்லா ஹவுஸ் (இந்தி)

தமிழ்த் திரைப்பட உலகில் மார்க்கெட் இழந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள, தன்னை கில்லியாகக் காட்டிக் கொள்ள எடுக்கும் அவதாரம் தான் காவல்துறை அதிகாரி வேடம். கடைசியில் "நான் போலீஸ் அல்ல பொறுக்கி" என்ற பஞ்ச் டயலாக்கோடு முடிப்பார்கள். அதிகபட்சமாகத் தர்மத்தை நிலைநாட்டுவார்கள். பார்ப்பவர்கள் "மிஸ்டர் கேனயன்" என்ற பட்டம் பெற்று திரையரங்கை விட்டு வெளியே வருவார்கள். ஆனால் பாட்லா ஹவுஸ் (இந்தி) அமேசான் தளத்தில் (தமிழ் ஆங்கிலம் சப் டைட்டில் உள்ளது) படத்தைப் பார்த்த போது வியந்து போய் மகள்களுக்கு பரிந்துரைத்தேன்.




இது உண்மையிலேயே நடந்த கதை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சில நாட்களில் டெல்லி ஜாமியா நகர் பகுதியில் பாட்லா ஹவுஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறி போலீசார் முற்றுகையிட்டனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 7 பேர் பதுங்கியிருப்பதாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஷாஹ்சத் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்த மோதலில் டெல்லி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான காவல்துறை அதிகாரி மோகன்சந்த் சர்மாவும் உயிரிழந்தார்.

அப்போது உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

இந்தப் படத்தில் அப்போது நடந்த சம்பவங்களின் காட்சித் துண்டுகளையும் இணைத்துள்ளார்கள். ஒரு காவல் அதிகாரி தன் கடமையைச் செய்யும் போது நடந்த நிகழ்வுகளை படிப்படியாக ஒவ்வொரு இடமாக சொல்லிக் கொண்டு வருவது, அதனைக் காட்சிப் படுத்தியிருப்பது வேற லெவல். வசனங்களைக் குறைத்து பலவிசயங்களைத் திரைமொழியில் கடத்தியிருப்பது உச்சக்கட்ட ஆச்சரியம். ஆர்ட்டிகிள் 15க்கு பிறகு இரண்டு முறை பார்த்த படமிது.


1. மதம், மதவாதம், மத அரசியல்

2. அரசியல், அரசியல்வாதி, எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி (பயன்படுத்திக் கொள்ளும்) அரசியல்

3. சட்டம், நீதிமன்றம், நீதி, பாரபட்சம்

4. மனித உரிமைக்குழு, மனித உரிமை ஆணையம். இது தொடர்பான புரிதல்கள்

5. மத சிறுபான்மை, உரிமைகள், அத்துமீறல், அராஜகம்

6. முடிவெடுக்க முடியாத அரசியல்வாதிகள். முடிவெடுத்து விடக்கூடாது என்று அராஜகம் செய்யும் சிறு குழுக்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள்.

7. குறிப்பிட்ட பகுதிகளைத் தனிப்பட்ட நபர்கள் எப்படி தங்கள் கைக்குள் வைத்துள்ளார்கள்? எப்படி அரசினை மிரட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களையும் காட்சிப்படுத்தியுள்ள திரைமொழி என்பது ஐபிஎஸ், ஐஏஎஸ் மற்றும் நம் நாட்டின் பொது நிர்வாகம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அளவிற்கு இயக்குநர் அருமையாக திரைக்கதையை வடிவமைத்திருப்பது முதல் சிறப்பு. காவல்துறை கதாநாயகன் என்றால் கூடக் கதாநாயகி இடுப்புக்குள் நுழைந்து ஆராய்ச்சி செய்யும் அயோக்கியத்தனம் போன்ற அருவருப்பான காட்சிகள் ஓர் இடத்திலும் இல்லை என்பது அடுத்த சிறப்பு.

ஓர் இடத்தில் (நீதிபதி முன்னால் பேசும் கதாநாயகன்) சொல்கின்றார்.

"எங்களை மதிப்பதில்லை. எங்களைச் சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிப்பதும் இல்லை. எல்லா நிலையிலும் அரசியல். எல்லா பழிபாவங்களையும் நாங்கள் தான் சுமக்கின்றோம். அவமானங்களையும் நாங்கள் தான் அடைகின்றோம். அவர்கள் சிறுபான்மை தான். நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களுக்கு எதிரிகள் யார் தெரியுமா? அவர்கள் என்ன செய்தாலும் கண்களை மூடிக் கொண்டு ஆதரிக்கும் பெருங்கூட்டம். அவர்கள் என்ன செய்தாலும் கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கும் மற்றொரு கூட்டம். இதனை அவர்கள் உணர யார் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகின்றார்கள்"?

மகன் மகள் இருந்தால் பார்க்க அனுமதியுங்கள்.







நூல் -அறிமுகம் ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு படம். மிகவும் பேசப்பட்ட படமும் கூட.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நன்கு விமர்சிக்கப்பட்ட படங்களில் ஒன்றினை உங்கள் நடையில் ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களுக்கு பிடித்தவர்... முக்கிய புள்ளி... பலவற்றில் கில்லாடி... அவரே அந்நாளில் இருந்திருக்கிறார் என்றால் நன்றாகத் தான் இருக்கும்...

ஜோதிஜி said...

சீனாதானா உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தியாவே வெடிகுண்டு நகரமாகவே இருந்தது.

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் பார்க்கப்பட வேண்டிய படம் என்பதை தங்களின் விமர்சனம் உணர்த்துகிறது
நன்றி ஐயா
அவசியம் பார்க்கிறேன்