Saturday, July 20, 2019

தாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது




திமுக அல்லது திராவிட அரசியல் என்ற அமைப்பைத் தமிழகத்தில் வெறுக்கின்றேன் என்ற சொல்லிக் கொண்டு இருப்பவர்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்க முடியும்.  பெரியார், அண்ணா, கலைஞர் என்று தொடங்கி இன்று நான்காவது தலைமுறை வரைக்கும் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் திராவிட அரசியல் என்பது தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அதன் தாக்கம் இன்னமும் இங்கே இருக்கின்றது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. 

இன்றைய  தமிழகத்தின் மூன்றாவது நான்காவது தலைமுறைகள் வளர்ந்த தொழில் நுட்ப வளர்ச்சியில் நமக்குக் கிடைத்துள்ள இணையம் வரைக்கும் திராவிட அரசியலை விமர்சிக்கின்றார்கள். வெறுக்கின்றார்கள். விமர்சனம் என்ற பெயரில் விசத்தை வார்த்தைகளாக எழுதுகின்றார்கள். தொடர்ந்து தீரா வன்மத்தை எழுத்தாக எழுதி வைக்கின்றார்கள்.  ஆனால் இன்னமும் திராவிட அரசியல் நீர்த்துப் போகவில்லை. அதன் அடிப்படைக் கொள்கைகள் மாறியுள்ளது.  செயல்படும் விதங்களும், அதனைச் செயல்படுத்துபவர்களின் சிந்தனைகளும் மாறியுள்ளது. ஆனால் திராவிட அரசியல் தமிழகத்தில் உருவாக்கிய அளப்பறிய மாற்றங்களை நாம் மறந்து விடக்கூடாது. 

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் பலவிதங்களில் மாற்றம் கண்டதற்கு முக்கியமாக பத்து காரணங்கள் என்று எடுத்துக் கொண்டால் முதல் ஐந்து காரணங்கள் திராவிட அரசியல் உருவாக்கியது தான் என்பதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஏன் இன்னமும் திராவிட அரசியலுக்கு இங்கே வெறுப்பு உள்ளது என்பதனை பட்டியலிட்டுப் பார்த்தால் பின்வரும் காரணங்கள் பிரதானமாக உள்ளது.

1. பிராமணர்கள் தொடக்கம் முதல் இன்று வரையிலும் வெறுக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் இந்து மதத்தை இழிவு செய்தார்கள். எங்கள் வளர்ச்சியைத் தடுத்தார்கள். குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி முதல் அண்ணா முதல் அமைச்சர் பதவிக்கு வந்தது வரைக்கும் அவர்கள் இருந்த பதவி, அதிகாரம் அனைத்தும் மற்ற சாதி மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.  சமூக நீதி, சம உரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.  தமிழக வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளில் தமிழகத்தில் மற்ற சாதி மக்கள் தான் தங்கள் வாழ்க்கைக்காகப் புலம் பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். திராவிட அரசியல் ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த பின்பு பிராமணர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள்.

2. சொல்லுக்கும் செயலுக்குத் தொடர்பில்லாதவர்கள். இந்தக் குற்றச்சாட்டைச் சொல்பவர்கள் திமுகவில் உள்ளவர்கள் தங்கள் அரசியல் வளர்ச்சிக்காகத் தொடக்கம் முதல் இன்று வரையிலும் செயல்படும் விதங்களை விமர்சனமாக வைக்கின்றார்கள்.

3. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திராவிட அரசியலின் கொள்கைகள் பின்னுக்குப் போய் தனி மனிதர்கள் முன்னுக்கு வந்துள்ளார்கள். தனிமனிதர்களை முன்னிறுத்தல் தான் திமுகவில் தொடர்ந்து நடக்கின்றது.

4. ஊழல்வாதிகளாக உள்ளனர்.  இதற்குப்பின்னால் உள்ள குற்றச்சாட்டு அனைத்தும் திமுக அரசின் ஒவ்வொரு கால செயல்பாட்டிலும் நடந்த அரசியல் செயல்பாடுகளை உதாரணமாகக் காட்டுகின்றார்கள்.  அதிகாரங்கள் மூலம் தனி மனிதர்கள் அடைந்த பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

5. தனியொரு குடும்பத்திற்குச் சொந்தமான அமைப்பு போல இன்றைய திமுக மாறியுள்ளது.  ஜனநாயகம் எங்கள் கட்சியில் உள்ளது என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் அது வெறும் அரசியல் கோஷமாகவே உள்ளது. சாதாரண திமுக தொண்டர்களுக்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. அது இன்று திராவிட அரசியலின் கொள்கைகளை முழுமையாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

6. எனக்குக் கலைஞரைப் பிடிக்கவே பிடிக்காது. தமிழகத்திற்கு ஊழலை அறிமுகம் செய்தவர்.

7. எனக்குக் கலைஞரைத் திறமைசாலியாக, தமிழ் ஆர்வலராக, எழுத்தாளராக, கதை வசனகர்த்தவாக, நிர்வாகத்திறமை உள்ளவராகப் பிடிக்கும். ஆனால் அவரின் அரசியல் செயல்பாடுகள் பிடிக்காது.

8. கலைஞரின் வாரிசுகளை அரசியலுக்குத் தகுதி படைத்தவர்களாக என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

9. சிறுபான்மையினர் வளர்ச்சி என்ற பெயரில் பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை, செயல்பாடுகளைக் கலைஞர் தொடர்ந்த விமர்சித்த விதம் என்னைப் பாதித்துள்ளது.

10. கலைஞர் பெரியார், அண்ணா வழியில் தன்னால் முடிந்த அளவுக்குத் தமிழகத்தில் சாதிய கட்டுமானத்தை உடைத்து, எளியவர்களை, ஒடுக்கப்பட்டவர்களையும் அரசு பதவியில் அமர்த்தினார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பலன் அடையும் வகையில் பல நல்ல சமூக திட்டங்களையும் உருவாக்கி அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.  இது எங்களைப் போன்ற ஆதிக்கச் சாதியாக இருந்தவர்களின் வாழ்க்கையை எங்களின் பிடிமானங்களை தலைகீழாக மாற்றிவிட்டது. எங்களின் திமுக வெறுப்பு இன்று வரையிலும் மாறவில்லை.

****************


தெற்கிலிருந்து ஓரு சூரியன் நூலில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க மூன்று பகுதிகள்

நான் வசித்த மயிலாடுதுறையில் மகாதேவ தெரு, பட்டமங்கலம் தெரு என்று இரண்டு தெருக்கள் உண்டு.  பிராணமர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு.  அவர்கள்தான் வழக்கறிஞர்களா, ஆசிரியர்களாக, மருத்துவராக இருப்பார்கள்.  

சாமானிய மக்கள் அன்றைக்கு அந்தத் தெருக்களில் நுழைந்தாலே, சாமி வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்வார்கள்.  அய்யர் வீடு என்று கூடச் சொல்ல மாட்டார்கள்.  எந்தச் சாமி வீட்டிற்குப் போகிறாய்? என்று கேட்டால், டாக்டர் சாமி வீட்டிற்குப் போகிறேன், வக்கீல் சாமி வீட்டிற்குப் போகிறேன் என்று பதில் வரும்.  அவ்வளவு பயபக்தி.  பிள்ளைவாள் வரச் சொன்னார். முதலியார் வீடு வரைக்கும் போய் வருகிறேன். இப்படி எல்லோருமே சாதியால் தான் குறிப்பிடப்பட்டார்கள்.  மேல் சாதி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இதில் உள்ள பேதம் புரியாது.  

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.  எனக்கு விபரம் தெரிந்து முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் வீடுகளில் தண்ணீர் குடிக்க யோசித்த இந்துக்கள் உண்டு. என்னுடைய அப்பாவின் நண்பர் ஒருவர் கோமுட்டிச் செட்டியார். அவர் நல்ல மனிதர்.  ஆனால் அவர் எங்கள் வீட்டிற்கு வந்தால் திண்ணையில்தான் உட்காருவாரே தவிர, வீட்டிற்குள் வரமாட்டார்.  அவரும் சைவர், நாங்களும் சைவர்கள்.  

ஆனால் அவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டார்.  அரிசியைக் கொடுத்துவிடுங்கள்.  நானே பொங்கிக் கொள்கிறேன் என்பார்.  எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் இன்றைக்குத் தமிழ்நாடு உள்ள நிலைமையை யோசித்துப் பாருங்கள்.தமிழன் என்ற அடையாளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோமா? இல்லையா? 

அன்றைக்கெல்லாம் வெளிமாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ நம்மவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு ஒடுங்கிப் போய் நிற்பார்கள்.  தமிழன் என்றாலே, பிறவியிலேயே ஏதோ தாழ்ந்து விட்டதாக எண்ணிய, இழிவாகக் கருதிய நாட்கள் எல்லாம் உண்டு.  இன்றைக்கும் நாம் முழுக்க உயர்ந்து நிற்கிறோம் என்று சொல்லமாட்டேன். ஆனால், நம் உடல் யார் முன்னாலும் குனிந்து நிற்கவில்லை அல்லவா? அதுதான் திராவிட இயக்கத்தின், திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் பெரும் சாதனை என்று சொல்வேன்.

பேராசிரியர் க.அன்பழகன்.

இந்தியா விடுதலை பெற்ற போதும், அதற்குப் பிந்தைய அரை நூற்றாண்டு வரையிலும்கூட வேளாண் சமூகமாகவே நாடு நீடித்தது.  தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.  ஏனைய மாநிலங்களைப் போலவே தமிழகத்தின் வேளாண் அமைப்பும் சாதிய அமைப்பை ஒத்ததாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது.

நிலவுடைமை மிகப் பெரும்பான்மையான அளவில் எண்ணிக்கையில் குறைவான மேல் சாதியினரிடம் குவிந்திருந்தது.  மாறாக, எண்ணிக்கையில் பெரும்பான்மையான நடுத்தர, ஓடுக்கப்பட்ட மக்கள் நிலமற்ற கூலிகளாகவும் குத்தகைதாரர்களாகவும் இருந்தனர்.  எனினும் நிலவுடைமையாளர்கள் ஒரு மாயக்கட்டுக்குள் ஏனையோரை வைத்திருந்தனர். அந்த மாயக் கட்டின் மையப் புள்ளியாக உணவு இருந்தது.

உணவு எப்படி மக்களைக் கட்டிப் போட்டிருந்தது என்பதனை உணர, அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழகத்தின் வேளாண் சூழலை நினைவுகூர்வது அவசியம்.  அப்பொதெல்லாம் தமிழகத்தில் நீர்ப்பிடிப்பு மிக்க வெகுசில இடங்களில் மட்டுமே இரு போகச் சாகுபடி நடந்தது.  ஏனைய பகுதிகளில் ஒரு போகச் சாகுபடியே பெரிய சவால் தான்.

வருடம் முழுவதும் வேலை என்பது கிராமத்தில் சாத்தியமே இல்லாதது.  இரு போக நெல் சாகுபடி நடைபெற்ற பகுதியிலேயே கூட 120 150 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும்.  இந்த நாட்களில் கிடைக்கும் சொற்பக்கூலியைக் கொண்டு வருடம் முழுமைக்குமான வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எப்படி சாத்தியம்?

சாப்பிடுவதற்கே உடைமைகளை அடகு வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது.  உடைமைகளும் சொற்பம் தானே? அடுத்த கட்டமாக வட்டிக்கு நெல் வாங்கும் வழக்கம் இருந்தது.  வாங்கும் நெல்லை வட்டியுடன் (நெல்) அடுத்த அறுவடையில் திரும்பச் செலுத்த வேண்டும்.  அதுவும் தீர்ந்தபின், இருந்த ஒரே வழி நில உடைமையாளர்களிடம் போய்க் கெஞ்சி நிற்பது தான்.

நிலவுடைமையாளர்களிடம் சோற்று நெல் வேண்டும் என்று வீதியில் விவசாயத் தொழிலாளர்கள் மன்றாடி நிற்பது அன்றைக்கு அன்றாடக் காட்சி.  இது தவிர, இயற்கைச் சீற்றம் உண்டாக்கும் பட்டினியும் பட்டினிச் சாவுகளும் இப்படியெல்லாம் சோற்றுக்கு மக்கள் அலைந்த காலத்தில் அவர்களுடைய சுதந்திரமும் சுயமரியாதையும் என்ன கதியிலிருந்திருக்கும் என்பதனை யோசிக்க வேண்டும்.

பசியிலிருந்து மக்களை விடுவித்து, உணவு விடுதலையின் வாயிலாகச் சமூக விடுதலையை உருவாக்க முடிந்தது.

இந்தியாவின் பொது விநியோகத் திட்டத்துக்கான விதை ஆங்கிலேயர்கள் காலத்திலேயே ஊன்றப்பட்டது என்றாலும், அது பெருமளவில் விரிவாக்கப்பட்டது சுதந்திரத்திற்குப் பிறகு தான்.  1960களில் உணவுப் பற்றாக்குறை பெரும் சவாலானபோது, பொது விநியோகத்திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டது. வேளான் உற்பத்தியைப் பெருக்குவதிலும் அரசின் கவனம் சென்றது.  வீரிய ஓட்டுரக விதைகள், உரங்கள், கடன் வழங்கக் கூட்டுறவுச் சாங்கங்கள், விலையை முன்கூட்டியே நிர்ணயிக்க விவசாய விலை நிர்ணயக் குழு, விளைந்த பொருளை நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்து இருப்பு வைக்க இந்திய உணவுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புகளும் உருவாக்கப்பட்டு மக்களைப் பசியிலிருந்து காக்கும் செயல்திட்டம் முடுக்கிவிடப்பட்டது.  

ஜெ. ஜெயரஞ்சன். பொருளாதார ஆய்வறிஞர். எம்ஐடிஎஸ். சென்னை.

பல மாநிலங்களுடன் தமிழ் நாட்டை ஒப்பிட முடியாது. ஏனென்றால், இங்கு பழங்குடி மக்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் மட்டுமே. சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் 25 முதல் 30 சதவிதிகம்.  வட கிழக்கை எடுத்துக் கொண்டால் 90 சதவிகிதம் வரைக்கும் ஓட்டு இருக்கிறது.  ஆட்சிப் பொறுப்பிலும் அவர்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது.  தமிழ்நாடு மாதிரி குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்களில் என்ன பிரச்சனை என்றால், மலையையும் காட்டையும் விட்டு எங்கள் ஆட்கள் வெளியே வருவதே கண்டம்.  அதனால் ஆட்சியாளர்களுக்குக் காட்டில் நடப்பதே போய்ச் சேராது.  

அதனால்தான் பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வனவுரிமைச்சட்டம் இன்று வரை தமிழக அரசியல் களத்தில் விவாதம் ஆகவில்லை.  ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல. ஊடகங்கள், அதிகாரிகள் எல்லோரையுமே இதற்கான காரணமாகச் சொல்லலாம்.  ஒரு பள்ளிக்கூடம் எப்படிச் செயல்படுகின்றது என்று பார்ப்பதற்கு மலை ஏறி இறங்கவே குறைந்தபட்சம் அரை நாள் நீங்க செலவிட வேண்டும். பத்திரிக்கையாளர்கள் மேலே வர மாட்டார்கள்.  கீழே கொண்டு போய் கொடுத்தாலும் செய்தி வராது.  இப்படி இருக்கும் போது ஆட்சியாளரை எப்படி எங்கள் குரல் போய்ச் சேரும். 

கல்வி பழங்குடியினரெல்லாம் ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும்.  மருத்துவக் கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்துவிடும் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டதுண்டு. இன்று ஓசி எனப்படும் பொதுப் பிரிவில் தேறிவருகிறார்கள்.  

எங்கள் பிள்ளைகள் கல்வியில் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கான குறியீடு இது. தமிழ்நாட்டில் அடர்ந்த காடுகளிலும் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடங்கள் உண்டு. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போனால் போதும். சாப்பாடு, தங்குமிடம், சீருடை, பாடக்கருவிகள் எல்லாவற்றையுமே அரசு தருகிறது. அதேபோல சுகாதாரம், கடைக்கோடியிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உண்டு. 

அவை வந்த பிறகு தான் பழங்குடிக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன என்பது துல்லியமாக அடையாளம் காணப்பட்டது.  திமுக ஆட்சியில் நாடமாடும் மருத்துவ முகாம் நடத்தினார்கள்.  வாகனங்கள் போக முடியாத மலை முகடுகளுக்குக்கூட ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வீடு தேடி வருவார்கள். நாட்டின் பல பகுதிகளில் சுற்றிவந்த பின்பு நான் புரிந்து கொண்டது சாலைகளையும் மின்சாரத்தையும் சகல இடத்திற்கும் கொண்டு வந்ததே மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கிறேன்.

கலைஞர் கொண்டுவந்த இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் எங்கள் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது.  தொலைக்காட்சி இருக்கும். மின்சாரம் இல்லை. கேபிள் இல்லை என்ற புது அரசாங்கம் மிச்ச சொச்சம் மின்சாரம் இல்லாத இடங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு வந்தது. கேபிள் மூலமாகத் தகவல்தொடர்பு வந்தது.  எல்லாவற்றுக்கும் மேல் எங்களின் மக்களில் பெரும்பாலானோர் அப்போது தான் உலகம் எப்படி இருக்கிறது? நாம் எப்படி இருக்கிறோம்? என்று பார்த்தார்கள். உலகத்தை எங்களோடுஇணைத்த திட்டமிது.

ராஜன். வழக்குரைஞர். கன்னியாகுமரிமாவட்டம். மேற்குத் தொடர்ச்சி மலை பழங்குடி மக்கள் செயல்பாட்டாளர்.

இந்த வார பதிவுகள்


ஜே.பி யின் ஜெயில் வாசம் (எமர்ஜென்சி).


தெற்கிலிருந்து ஓரு சூரியன்


'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..! |Vijayabaskar ...


நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019


என் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி 


தமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள்? ஏன்? எப்படி...


மோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்?



48 comments:

நம்பள்கி said...

///6. எனக்குக் கலைஞரைப் பிடிக்கவே பிடிக்காது. தமிழகத்திற்கு ஊழலை அறிமுகம் செய்தவர்.///

ஜோதி!
உங்கள் கணிப்பு தவறு! முக ஒன்றும் புத்தர் அல்ல!
அப்ப தமிழ்நாட்டில் ஊழலை ஆர்மபித்தது யார்?
சாட்சாத் ராஜாஜி தான்!
அப்புறம் அவர் சிஷ்யன் ஆர். வெங்கடராமன்!

எப்படி ராஜாஜி ஊழல் செய்தார்? ஊழல் என்பது பணம் மட்டுமல்ல ஜோதி தம்பி; குலக் கல்வி திட்டத்தை கொண்டு வந்து சூத்திரர்களை படிக்கவிடாமல் செய்து, அவாள் மட்டும் பள்ளிக்கூடம் செல்லும் முறையை கொண்டு வந்தது மகா பெரிய ஊழல். குடும்ப அரசியலை தமிழ் நாட்டிக்கிற்கு 1952-ல் அறிமுகப் படுத்தியதும் ஊழல் தான். ""காமராஜர் இல்லையென்றால் நான் இன்று உங்களுக்கு இப்படி பதில் எழுதிக் கொண்டு இருக்க முடியாது.""

ஆர். வெங்கடராமன் கிண்டி [சென்னை] தொழில் வளாகத்தில் 90 விழுக்காடு பார்ப்பனர்களுக்கு கொடுத்ததும் ஊழலே.

TTK இந்தியாவின் முதல் ஊழல் குற்றவாளி.
க்ரிஷ்ணமேனோன் இரண்டாவது---அவர் ஊழலினால் தான் சீனா போரில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனால், கோர்ட்டு அவாள் பக்கம் அப்புறம் என்ன புடலங்கா நீதி?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முக புத்தர் அல்ல--முழு பிராட் என்று வைத்துக்கொண்டால்....தமிழ் நாட்டை தவிர இந்தியா முழுவதும் புத்தர்களும் காந்திகளும் தான் இருந்தார்களா? இல்லை இருக்கிறார்களா? ஊரோட ஒத்துவாழ் ---இந்தியயாவில் இருக்கும் எல்லா பிராடுகளுக்கும் சமமாக முக இருந்தார் என்பதே உண்மை.

சுருக்கமாக...தமிழ் நாட்டில் முதல் ஊழல்வாதி ராஜாஜி----எல்லா சமூகத்தையும் அழிப்பது ஊழல் இல்லையா?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உங்கள் வாதம் பிரகாரம் ஹிட்லரும் ஊழல் வாதி இல்லை --பணத்தால் பத்து பைசா லஞ்சம் கிடையாது--ஆனால், ஒரு இனத்தையே அழித்தவர் ---ராஜாஜியும் ஜாதியில் கீழாக இருந்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய படிப்பை தடுக்க நினைத்தார்--இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.

உண்மையில் தமிழ் நாட்டில் ஊழலை கொண்டுவந்தது, கல்வியை சிதைத்தது நம்து எம்ஜியார் மட்டுமே...


Unknown said...

கிருஷ்ண மேனன் பார்ப்பனர் அல்ல
நாயர் கிளை ஜாதி
மேனன்கள் நாயர்கள் பிரிவே
.
மு கருனாநிதி கட்சி பணத்தையே ஆட்டை போட்ட தன் விளைவே மகோரா அரசியல் பிரவேசம் . அந்த விஞ்ஞான ஊழல் மறந்து விட்டதா
.
மகோரா யோக்கிய சிகாமணி அல்ல
.
மகோராவுக்கு ஊழல் குரு நாதர் மு கருணாநிதி
.

Unknown said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

விகடனில் நாவலர் நெடுஞ்செழியன் குறித்து கட்டுரையிது. திராவிட அரசியல் பற்றி புரிந்து கொள்ள உதவும் என்பதற்காக இதனை இங்கே பலரின் பார்வைக்காக.

ஜோதிஜி said...

அடைமொழிகள் என்றால் திராவிட இயக்கத்துக்கு அவ்வளவு விருப்பம். மாவீரன், அஞ்சாநெஞ்சன், போர்வாள், தளபதி என்றெல்லாம், உண்மையான பெயர்களை மறக்கும் அளவுக்கு அடை மொழிகளால் அழைப்பது வழக்கம். ‘மக்களாட்சிக் காலத்தில் மன்னர்களைப்போல் ஏன் இவ்வளவு அடைமொழிகள்?’ என்று கேள்வியும் எழுப்பலாம்; ‘இன இழிவைத் துடைப்பதற்காக உருவான இயக்கம், பெருமையான அடைமொழிகளைச் சூட்டிக்கொண்டது’ என்று நியாயமும் சொல்லலாம். திராவிட இயக்கத்தவர்கள் நீளமான துண்டு அணிந்து கொள்வதைத் ‘தங்கப்பதக்கம்’ படத்தில் சோ கிண்டலடித்தி ருப்பார். கிண்டலும் அடிக்கலாம்; இடுப்பிலே துண்டு கட்ட வேண்டிய நிலையில் இருந்தவர்கள் தோளிலே துண்டு அணிந்தது வரலாற்று மாற்றம் என்றும் வாதிடலாம். திராவிட இயக்கத்து மேடைப் பேச்சாளர்களைக் கிண்டலடித்து ‘அவர்களேங் இவர்களேங்’ என்று ஞானக்கூத்தன் கவிதை யொன்றை எழுதினார். பகடிக் கவிதையும் எழுதலாம்; பேராசிரியர் முதல் கூலித்தொழிலாளி வரை உள்ள ஒரு கட்சியில் அனைவரின் பெயரையும் மேடையில் குறிப்பிட்டு ‘அவர்களே’ என்று விளிப்பது ஜனநாயகம் என்றும் விளக்கலாம். எப்படியோ அண்ணாவுக்கு அறிஞர், கருணாநிதிக்குக் கலைஞர் என்ற பட்டங்கள் நிலைத்ததைப் போல, பேசிப் பேசியே வளர்ந்த இயக்கத்தில் பேச்சுக்கலையை நினைவூட்டும் ‘நாவலர்’ என்ற பெயர் நெடுஞ்செழியனுக்கு நிலைத்துப்போனது. அவருக்கு இது நூற்றாண்டு.

ஜோதிஜி said...

1920-ல் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்த நெடுஞ்செழியனின் தந்தை இராஜகோபாலன், பெரியாரின்மீது பற்று கொண்டவர். அவர் மூலம் பெரியாரின் கூட்டங்களுக்குச் சென்ற நெடுஞ்செழியனும் சுயமரியாதை இயக்கத்துக்காரர் ஆனார். பின்னாளில் நாவலர் என்று அழைக்கப்பட்டவருக்கு, சிறுவயதில் பேசும்போது வார்த்தைகள் சரியாக வராதாம். மீண்டும் மீண்டும் பேசிப் பேசிப் பயிற்சி எடுத்தார். அப்படியும் சில வார்த்தைகள் வராதபோது, ங் என்ற வார்த்தையோடு நிறுத்தி, அதைத் தன்னுடைய பாணியாகவும் மாற்றிக்கொண்டார் நெடுஞ்செழியன். 1938, முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தான் நெடுஞ்செழியனுக்கும் முதல் போராட்டம்.

ஜோதிஜி said...

இளம் தாடியும் நெடுநெடு உயரமும் அவர் அடையாள மானது. ‘இளம்தாடி’ நெடுஞ்செழியன் என்றழைக்கப் பட்டார். திருமண நிகழ்ச்சி களைக் கொள்கை விளக்கக் கூட்டங்களாக மாற்றியது திராவிடர் இயக்கத்தின் சாதனை. நெடுஞ்செழியனோ தன் திருமணத்தை விழாவாக நடத்தாமல், திருமணம் முடிந்த பிறகுதான் வெளியுலகத்துக்கு அறிவித்தார். “ஏன் உன் கல்யாணத்துக்கு என்னை அழைக்கவில்லை?” என்று கேட்ட நண்பரிடம், “எனக்குத்தானே கல்யாணம். உனக்கு அங்கே என்ன வேலை?” என்று கேட்கும் அளவுக்குப் பெரியாரியம் அவரைப் பற்றியிருந்தது.

ஜோதிஜி said...

திராவிடர் கழகத்தில் இருந்தபோதே தனக்கான தம்பிகள் வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அண்ணா. பெரியாரை விட்டுப் பிரிந்து தி.மு.க-வைத் தொடங்கியபோது, தாங்கிப்பிடித்த தூண்களாக இருந்தவர்கள் அந்தத் தம்பிகளே. அப்படியான தம்பிகளில் ஒருவர்தான் நெடுஞ்செழியன். தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். ‘தம்பி, தலைமையேற்க வா, உன் தலைமையின்கீழ் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று அண்ணாவால், மாநாட்டுத் தலைமையேற்க அழைக்கப்பட்டார்.

ஜோதிஜி said...

1961-ல் ஈ.வி.கே.சம்பத் தி.மு.க-வை விட்டு வெளியேறியபோது தி.மு.க-வின் அவைத்தலைவரானார் நாவலர். 1967-ல் ஆட்சியைப் பிடித்தபோது அண்ணாவுக்கு அடுத்த இடம். கல்வி அமைச்சரானார். அண்ணா மறைந்தபோது தற்காலிக முதல்வர் ஆனார். நிரந்தர முதல்வராகிவிடலாம் என்ற நெடுஞ்செழியனின் நினைப்புக்குத் தடையாய் இருந்தவர், சினிமாவில் கதாநாயகனாவும் நெடுஞ்செழியன் நினைப்புக்கு வில்லனாகவும் இருந்த எம்.ஜி.ஆர். ‘கருணாநிதிதான் முதல்வராக வேண்டும்’ என்று ஆதரவு திரட்டி, நினைத்ததை முடித்தார் எம்.ஜி.ஆர். ‘ஆனால் முதலமைச்சர்தான்; வேறு அமைச்சர் பதவி வேண்டாம்’ என்று அடம்பிடித்தவரை சமாதானப்படுத்தி மீண்டும் அமைச்சர் ஆக்கினார் கருணாநிதி.

ஜோதிஜி said...

1972-ல் எந்த எம்.ஜி.ஆர், கருணாநிதியைத் தலைவர் ஆக்கினாரோ அந்த எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையில் மனக்கசப்பு. கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரே கட்சியில் கணக்குக் கேட்டார். சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோதே தி.மு.க பொதுச்செயலாளரான நெடுஞ்செழியனிடமிருந்து எம்.ஜி.ஆரை நீக்குவதாக அறிவிப்பு வந்தது. ‘யாரையும் கலந்தாலோசிக்காமல் நெடுஞ்செழியனே எடுத்த முடிவு அது’ என்று பின்னாளில், தன் சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதினார் கருணாநிதி. உதயசூரியனுக்கு எதிராக உதயமானது அ.தி.மு.க.

ஜோதிஜி said...

சில ஆண்டுகளிலேயே கருணாநிதி யுடனான முரண்பாடுகள் முற்ற, தி.மு.க-விலிருந்து வெளியேறி ‘மக்கள் தி.மு.க’ என்னும் கட்சியைத் தொடங்கினார் நாவலர். மக்கள் ஏற்கவில்லை மக்கள் தி.மு.க-வை. எந்த எம்.ஜி.ஆர் தன் முதல்வர் கனவுக்குத் தடையாக இருந்தாரோ, எந்த எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு அதிரடியாகத் தூக்கினாரோ அதே எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார் நெடுஞ்செழியன். எம்.ஜி.ஆர் இறக்கும்வரை அவருக்கு அடுத்த இடம் நாவலருக்குத்தான்.

ஜோதிஜி said...

எம்.ஜி.ஆர் மறைந்தார். இரண்டாம் முறை தற்காலிக முதல்வரானார் நெடுஞ்செழியன். இப்போதாவது நிரந்தர முதல்வர் பதவி கிடைக்குமா என்ற நினைப்பில் இந்த முறை மண்ணள்ளிப்போட்டவர், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி. அவர் முதல்வராக, கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. நான்காவது முறையாகக் கட்சிப்பிளவைச் சந்தித்தார் நெடுஞ்செழியன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பயன் பெற்றவர்கள் பாராட்டுவதும்... பயன் பெற முடியாதவர்கள் தூற்றுவதும்...

ஜோதிஜி said...

ஜெயலலிதா அணியில் இணைந்தவருக்கு அங்கேயும் முரண்பாடுகள். அங்கிருந்து வெளியேறி க.ராசாராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து ‘நால்வர் அணி’ என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தார். ‘அவர்கள் என் தலையில் இருந்து உதிர்ந்த ரோமங்கள்’ என்று வர்ணித்தார் ஜெயலலிதா. அண்ணாவால் ‘தலைமை ஏற்க வா’ என்று அழைக்கப்பட்டவரை ‘தலையில் இருந்து உதிர்ந்த ரோமம்’ என்று ஜெயலலிதா கூறியது, அரசியல் அவலக் காட்சிதான். என்ன செய்ய, உதிர்ந்த ரோமம் ஒட்டிய அதிசயமும் தமிழக அரசியலில் நடந்தது. சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா தலைமையில் இணைந்தார் நெடுஞ்செழியன். இரண்டு அணிகளும் இணைந்தன. ஜெயலலிதா அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஆனார். நெடுஞ்செழியன் அ.தி.மு.க-வின் அவைத்தலைவராகவும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும் இருந்தார். புத்தாயிரம் தொடங்கிய 2000-ஆம் ஆண்டில், ஜனவரி 12-ல் மறைந்தார் நெடுஞ்செழியன்.

ஜோதிஜி said...

நாவலர், நடமாடும் பல்கலைக்கழகம் என்ற பட்டங்கள் நிலைத்துப்போனதைப் போலவே ‘நம்பர் 2’ என்ற பட்டமும் நெடுஞ்செழியனுக்கு வரலாற்றில் நிலைத்துப்போனது. அண்ணாவுக்கு, கருணாநிதிக்கு, எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதாவுக்கு ‘நம்பர் 2’வாக இருந்து மறைந்தார்.

ஜோதிஜி said...

இறுதிக்காலங்களில் நெடுஞ்செழியன் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார் என்று சொல்லலாம். ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாகி, ஜெயலலிதா முதல்வரான 1991-க்குப் பிறகும் அ.தி.மு.க-விலிருந்து விலகி ஆர்.எம்.வீரப்பன் தனிக்கட்சி கண்டார்; திருநாவுக்கரசர் தனிக்கட்சி கண்டார்; ராஜ கண்ணப்பன் தனிக்கட்சி கண்டார். ஆனால் ‘நால்வர் அணி’க்குப் பிறகு, தனிக்கட்சி நடத்தும் ரிஸ்க்கை எடுக்க நாவலர் தயாராக இல்லை. அதேபோல் அ.தி.மு.க-வில் பல பிரச்னைகள் எழுந்தபோதும் அவர் கருணாநிதியிடம் சரணடையத் தயாராக இல்லை.

ஜோதிஜி said...

நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள். ஆனால் ‘தொடக்கக்கால திராவிட இயக்கத்தின் லட்சியவாத முகம்’ என்பதுதான் அவருக்குப் பெருமை சேர்க்கும் அடையாளம். தி.மு.க-வினர் நூற்றுக்கணக்கான இதழ்களை நடத்தினர். அவற்றில் ஒன்று நாவலரின் ‘மன்றம்’ இதழ். அண்ணாவின் ‘திராவிட நாடு’க்கும் கருணாநிதியின் ‘முரசொலி’க்கும் கண்ணதாசனின் ‘தென்றல்’ இதழுக்கும் உடன்பிறப்புகள் மத்தியில் என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ, அதே எதிர்பார்ப்பு நாவலரின் ‘மன்றம்’ இதழுக்கும் இருந்தது. பாவேந்தர் கவிதைகள் குறித்தும் தி.மு.க மற்றும் நீதிக்கட்சியின் வரலாறு குறித்தும் புத்தகங்கள் எழுதியவர் நெடுஞ்செழியன். திருக்குறளுக்கு உரை எழுதிய நாவலர், ‘மனுதர்மத்தின் அடிப்படையில்தான் குறள் எழுதப்பட்டது என்று பரிமேலழகர் தவறாக உரை எழுதிவிட்டார்’ என்று உதாரணங்களுடன் வாதிட்டார். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் பெயர் சூடியவரல்லவா!

ஜோதிஜி said...

இயற்பெயர் நாராயணசாமி. மத அடையாளங்களை மறுத்துத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக்கொள்வது இயக்கமானபோது ‘நாராயணசாமி’ நெடுஞ்செழியன் ஆனார்; அவரின் தம்பி ‘சீனிவாசன்’ இரா.செழியன் ஆனார்; ‘ராமையா’ பேராசிரியர் அன்பழகன் ஆனார்.

ஜோதிஜி said...

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா சொன்னபோதும் தொடக்கக்கால தி.மு.க நாத்திக இயக்கமாகவே இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜி கணேசனுக்கு எதிராகத் தி.மு.க உடன்பிறப்புகள் சுவரொட்டிகள் ஒட்டியதும், வெறுத்துப்போன சிவாஜி காங்கிரஸுக்குப் போனதும் வரலாறு. ஆனால், போகப்போக தி.மு.க தொண்டர்கள் நாத்திகத்தைக் கைவிட்டனர். அது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களுக்கும் பரவியது. அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குப் போனார். ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க-வைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால் நாவலர் இறுதிவரை நாத்திகராகவே வாழ்ந்து மறைந்தார். இத்தனைக்கும் அவர் மனைவி விசாலாட்சி, பங்காரு அடிகளார் பக்தையாக இருந்தார். அ.தி.மு.க-வில் எஞ்சிய நாத்திகர்களில் ஒருவர் நாவலர்.

ஜோதிஜி said...

மிக மிக சரியான விமர்சனம்.

ஜோதிஜி said...

உணர்ச்சி வேகத்தில் விசைப்பலகை தெறித்து விழும் அளவிற்கு உங்கள் ஆழ் கோப வார்த்தைகள் வெளிவந்துள்ளது. நீங்கள் சொல்வதற்கு ஒவ்வொரு பதிவாக விளக்கம் தர வேண்டும். நான் சாதகம் பாதகம் இரண்டையுமே எழுதியுள்ளேன். தனபாலன் சொன்ன விமர்சனம் தான் சரி. அப்புறம் ஒரு வேளை எம்ஜிஆர் தனியார் கல்வியை இங்கே கொண்டு வந்திருக்காவிட்டால் 1991 க்குப் பிறகு நடந்த உலகாளவிய மாற்றங்களின் பலன் தமிழகத்திற்கு கிடைக்காமல் போயிருக்கும். அப்போது ஊழல் இருந்தது. சாராயம் மூலம் எம்ஜிஆர் சம்பாரித்தார். ஊழலில் அவரும் மிதந்தார். ஆனால் அவர் காலத்தில் துணைவேந்தர் பதவிக்கு பத்து கோடி பேராசியர் பதவிக்கு 40 லட்சம் ஆசிரியர் பணிக்கு ஐந்து லட்சம் என்று பேரம் பேசி கட்டாயம் ஆகவில்லை. அந்த வகையில் கலைஞரை விட எம்ஜிஆர் பரவாயில்லை. அதே வீதிக்கு சாராயக்கடைகளை கொண்டு வந்த இந்த பெண்மணியை விட கலைஞர் எவ்வளவோ பரவாயில்லை. இப்படித்தான் ஒப்பிட்டு நாம் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும். பெரிய தீமை. கொஞ்சம் தீமை. இது தான் தமிழக அரசியல்.

ஜோதிஜி said...

இங்கு எல்லோருமே கில்லாடிகள். ஆனால் கலைஞர் செய்த நல்ல காரியங்கள் அனைத்தும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெரு வீக்க வளர்ச்சி தான் இங்கே பலருக்கும் இன்னமும் உறுத்தலாக உள்ளது. ஆனால் அதுவே இப்போது அதிமுக வில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்கள் எந்தத் தகுதியும் இல்லாமல் பிரமாண்ட ஊழல் பெருச்சாளிகளாக இருந்தாலும் எந்த ஊடகமும் அதைப் பெரிது பண்ணுவதில்லை என்பதில் தான் முக்கிய அரசியல் உள்ளது.

ஜோதிஜி said...

நம்மள்கி சொன்னது உண்மைதான் நண்பரே. ஆர்வி தனிப்பட்ட முறையில் புத்திசாலி. பொதுவான குணாதிசியங்களில் விஷப்பாம்பு.

G.M Balasubramaniam said...

பின்னூட்டங்களில் இன்னொரு பதிவு எழுது ஊங்களிடம் ஒர்ய் வேண்டுகோள் இப்போது அதிகமாகப்பேசப்படும் NRCபற்றிய ஒரு பதிவு எல்லாசாதகபாதகங்களுடன் எழுத வேண்டுகிறேன் நான் இந்நாட்டு குடிமகன் என்றுஎல்லோரை யும் நிரூபிக்கச் சொல்லும் வாய்ப்பு வருமா வற்புறுத்தக்கூடுமா

ஸ்ரீராம். said...

பதிவு - நல்ல தொகுப்பு.
பின்னூட்டப் பதிவு - பெரும்பாலும் தெரிந்த விவரங்கள் மீண்டும்.​

ஜோதிஜி said...

வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்காளம் வரைக்கும் கடந்த 50 ஆண்டுகளில் அண்டை நாடுகளில் இருந்து மிகப் பெரிய ஊடுருவல் நடந்துள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனையாக தலைவலியை இந்தியாவிற்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதன் மூலம் போதைப் பொருள், ஹவாலா பணப்பறிமாற்றம், கலாச்சார சீர்கேடு, சீன ஆதிக்கம், பாகிஸ்தான் திருவிளையாடல்கள், நேபாளம் கள்ள நோட்டு பிரச்சனைகள், வங்கதேசம் தங்கள் மக்களை கவனிக்க முடியாமல் தொடர்ந்து இந்தியாவிற்குள் அனுப்புவது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் இதற்குப் பின்னால் உள்ளது. அதனால் தான் குடியுரிமை சோதிப்பு அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது. மம்தா பேனர்ஜி, காங்கிரஸ் இரண்டு பேர்களும் இதனை வாக்கு அரசியலாக மாற்றவும், மைனாரிட்டி பாதுகாவலன் என்ற பெயரில் ஏகப்பட்ட குளறுபடிகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். தென் இந்தியா மாநிலங்களில் இது வாய்ப்பு இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் வட இந்திய ஆதிக்கம் குறைந்தபட்சம் தமிழக ஜனத்தொகையில் பத்து சதவிகிதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி

ஜோதிஜி said...

கரை கண்ட வேங்கையாக இருப்பீங்க போல.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்பு நன்றி அய்யா.

G.M Balasubramaniam said...

சந்தேகத்தின் பேரில் கார்கில் வீரரையும் அன்னிய நாட்டவர் என்று சொல்லி குடியுரிமையை நிரூபிக்க வேண்டினர் சமீபகாலத்தில் தெனிண்டியாவில் வட நாட்டவர்கள் எல்லா வேலையிலும் தருவிக்கப் படுகிறார்கள் இங்கிருப்பவர் தங்கள்குடியுரிமையை நிரூபிக்கும் அவலநிகை வருமோ என்னும் அச்சம்வருகிறது இந்தப் பிரச்சனைகளுக்கு பாஜகவும்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்

ஜோதிஜி said...

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியில் மட்டும் தான் பாஜக அரசினால் வட மாநிலத்தினரை திணிக்கும் பணி காங்கிரஸ் அரசை விட இவர்கள் ஆட்சி காலத்தில் கனஜோராக நடந்து வருகின்றது. ஆனால் இங்கே வேலை தேடி வருபவர்கள் நம்மவர்கள் செய்யாத செய்ய விரும்பாத வேலைகளைச் செய்யவே வந்து கொண்டு இருக்கின்றனர். திருப்பூரில் மட்டும் தற்போது ஐந்தரை லட்சம் வட இந்தியர்கள் இருக்கின்றனர். தினமும் 700 பேர்களுக்குக்குறையாமல் வந்து கொண்டு இருக்கின்றனர்.

ஜோதிஜி said...

குலக்கல்வி என்ற வார்த்தை இன்னமும் வைத்துக் கொண்டு இன்னமும் இங்கே எப்படி விளையாட்டு காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்? உண்மை என்ன? என்பதனை இந்தக் கட்டுரை வாசிப்பவர்களுக்கு புரிய வைக்கும்.

ஜோதிஜி said...

பதவிப்பித்து பிடித்து ராஜாஜி என்ன செய்தார்? பிள்ளையை பதவியில் அமரச்செய்தாரா? வாரிசுகளை தொழிலதிபர்களாக, கோடீஸ்வரராக ஆக்கினாரா? இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அடிப்படைக் கட்டுமானங்களை ராஜாஜிதான் திட்டமிட்டு அமைத்தார். அதன் பலன்களையே இன்றும் தமிழகம் அனுபவிக்கிறது. ஓசூர் தொழிற்பேட்டை அவரது கனவு. சென்னை துறைமுகவிரிவாக்கம் அவரது சாதனை. இன்றுவரை அவரது தனிப்பட்ட நேர்மைமீது எந்த ஒருவரும் ஆதாரபூர்வமான சிறு குறையைக்கூட சுட்டிக்காட்டமுடிந்ததில்லை.

ஜோதிஜி said...

முக்கியமான வரலாற்றுத்திரிபு என்பது சென்னையை மீட்ட சாதனையை முழுக்கமுழுக்க ம.பொ.சிக்கு விட்டுக்கொடுத்து ராஜாஜியை வில்லனாக ஆக்குவது. ராஜாஜி இல்லையேல் சென்னை தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே வரலாற்று உண்மை. இங்கே சில ஊர்களில் கோஷமிட்ட ம.பொ.சியைப்பார்த்து பயந்துபோய் ஆந்திரர்கள் சென்னையை விட்டுக்கொடுக்கவில்லை. அப்போது தமிழகத்தின் முதல்வராக ராஜாஜி இருந்தார். பேச்சுவார்த்தைகளில் இம்மிகூட அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 1953ல் ஆந்திரமாநிலம் உருவானபோது சென்னையையும் திருத்தணியையும் உள்ளிட்ட இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.

ஜோதிஜி said...

1952ல் ஆந்திர சுதந்திரப்போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ்மனதே என்ற போராட்டத்தின் உச்சமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவே கொந்தளித்தது. அதற்கிணையான எந்த அலையும் இங்கே உருவாகவில்லை. மபொசியை காங்கிரஸ் கிளப்பிவிட்டும்கூட பெரிதாக ஒன்றும் நிகழவில்லை, சில கூட்டங்களைத்தவிர. நேரு ஆந்திர காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாகவேண்டிய நிலை. காரணம் ஆந்திராவுக்கு தேசிய அரசியலில் பங்கு மிக அதிகம். அது மாபெரும் மாநிலம்.

ஜோதிஜி said...

ஆனால் ராஜாஜி நேருவை உதாசீனம்செய்தார். பொட்டிஸ்ரீராமுலு உயிர்துறந்த டிசம்பர் 15 ஆம் தேதி நேரு பலமுறை கூப்பிட்டும் ராஜாஜி நேருவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவர் தொலைபேசியை எடுத்திருந்தால் சென்னை கைவிட்டுப்போயிருக்கும் என்று எம்.ஓ.மத்தாய் சொல்லியிருக்கிறார். விளைவாக ஆந்திரா எரிந்தது, ராஜாஜி பிடிவாதமாக இருந்தார். அந்த ஒருசெயலால்ராஜாஜி சென்னையை மீட்டார். அவரது அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக அழித்தும் கொண்டார். பின்னர் சீனப்படையெடுப்பின்போது வலியச்சென்று நேருவுக்கு உதவ முன்வந்தார் ராஜாஜி. நேரு அப்போதும் அவரிடம் முகம்கொடுத்துப் பேச தயாராக இருக்கவில்லை.

ஜோதிஜி said...

ராஜாஜியின் கல்விக்கொள்கையை குலக்கல்வி என்று சொல்லிச் சொல்லி வரலாற்று நினைவாக ஆக்கிவிட்டார்கள். ஒரு திட்டத்தை அதன் எதிரிகள் எப்படி வசைபாடினார்களோ அந்த பெயரிலேயே வரலாற்றில் இடம்பெறச்செய்வதுபோல மாபெரும் அரசியல் மோசடி ஒன்றில்லை. ராஜாஜி அதை குலக்கல்வி என்று சொல்லவில்லை. அந்த திட்டத்தில் எங்கும் அப்பெயர் இல்லை. ஆனால் அதை நீங்கள் விக்கிபீடியாவில் தேடினால்கூட Hereditary Education Policy என்ற பேரிலேயே கிடைக்கும். அந்த திட்டத்தை இப்படி திரிக்காமல் இருந்தால் இன்றையதலைமுறைக்கு அதில் எந்த பிழையும் கண்ணுக்குப்படாது. அவதூறுசெய்தால் மட்டுமே அதை எதிர்க்கமுடிகிறதென்பதே அந்த திட்டத்தின் நேர்மைக்குச் சான்றாகும்

ஜோதிஜி said...

இணையத்திலேயே கிடைக்கும் ராஜாஜியின் பகுதிநேரக்கல்வித்திட்டத்தின் முன்வரைவை இன்று வாசிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்தால் அது தோற்கடிக்கப்பட்டது என்பதே புரியவில்லை. அன்றைய சூழலை நாம் ஓரளவாவது கவனிக்கவேண்டும். இந்தியா மாபெரும் நிதி நெருக்கடியுடன் சுதந்திரம் பெற்றது. தேசப்பிரிவினையால் வட இந்தியா கிட்டத்தச்ச சின்னாபின்னமாகிக் கிடந்தது. அடிப்படைத்திட்டங்களுக்கே பணமில்லாத நிலை நிலவியது. 1951ல் பிகார், மத்தியபிரதேசத்தை மாபெரும் பஞ்சம் ஒன்று தாக்கியது. 1785 முதல் வட இந்தியாவை தாக்கி வந்த பெரும் பஞ்சங்களின் நீட்சி அது.

ஜோதிஜி said...

1873 பஞ்சத்தில் பிகாரில் லட்சக்கணக்கானவர்கள் செத்தார்கள். ஆனால் 1951ல் நேருவின் அரசு உலகமெங்கும் பிச்சை எடுத்து பிகாரில் பட்டினிச்சாவு இல்லாமல் பார்த்துக்கொண்டது. [அதில் அமெரிக்கா அளித்த பங்கு மிக முக்கியமானது, அது சோவியத் ஆதரவு அரசியலால் பின்னர் மறக்கப்பட்டுவிட்டது] இப்பஞ்சத்தில் பிகாரில் மாபெரும் கஞ்சித்தொட்டி இயக்கத்தை ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இன்றும் அம்மக்களால் காந்திக்கு நிகராக கொண்டாடப்படுகிறார்.

ஜோதிஜி said...

இச்சூழலில் ராஜாஜி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தின் நிதிச்சுமையை அவரால் சமாளிக்க இயலவில்லை. கிராமப்பொருளாதாரம் குடிப்பழக்கத்தால் அழிந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தமையால் மதுவிலக்கை கறாராக அமல்படுத்தினார். தமிழக அரசின் முக்கியமான வரவினமே மதுமீதான வரி என்பதனால் அவர் கடுமையான பொருளியல் நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது

ராஜாஜியின் தரப்பு ஒருவகையான ஆழ்ந்த நேர்மை கொண்டது. வட இந்தியா பஞ்சத்தில் சாகும்போது தென்னிந்தியா உதவித்தான் ஆகவேண்டும் என்று அவர் நம்பினார். ஆகவே செலவினங்களை குறைத்தார். அவரது கடுமையான நடவடிக்கைகளை மக்கள் எந்த அளவுக்கு புரிந்துகொள்வார்கள் என அவர் எண்ணவேயில்லை

ஜோதிஜி said...

அவருக்கு நேர் மாறாக அன்று திராவிட இயக்கம், சி. என் அண்ணாத்துரை தலைமையில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று பிரச்சாரம் செய்தது. தமிழகத்தில் நிலவிய தானியத்தட்டுப்பாட்டுக்குக் காரணமே வடக்கு தெற்கை சுரண்டி கொழுப்பதுதான் என்றது. ‘தமிழகத்தில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி. அத்தனையும் கொணர்ந்து மக்களின் வாட்டத்தை போக்குவோம்’என்றார்கள். காங்கிரஸ் அரசு அன்று சந்தித்த பொருளியல் சிக்கல்களை அறியாத அன்றைய எளிய மக்கள் அந்த போலியுரைகளை நம்பினார்கள்.

பொருளியல் சிக்கல்களில் இருந்து உருவானதே ராஜாஜியின் கல்விச்சீர்த்திருத்த முறை. பள்ளிகளின் அளவை அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. ஆசிரியர்களையும் உடனடியாக அதிகரிக்கமுடியாது. அன்றைய கல்வி எப்படி இருந்தது என அவர் ஆராய்ந்தபோது பெரும்பாலான கல்விநிலையங்கள் ஓர் ஆசிரியரை மட்டும் கொண்டவையாக, அத்தனை பிள்ளைகளையும் கூட்டமாக ஒரே இடத்தில் அமரச்செய்பவையாக இருந்தன. தினம் ஒருமணிநேரம்கூட பிள்ளைகள் கற்கவில்லை – இன்றும் தமிழகத்தில் கணிசமான மலைக்கிராமப் பள்ளிகள் அப்படித்தான் உள்ளன

பிள்ளைகளை அதிகளவில் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் அளவை அதிகரிக்கமுடியாது என்பதனால் ராஜாஜி கல்வியை நேரம் பிரித்த்தார். அதாவது சாதாரணமான ஷிஃப்ட் முறை. அவ்வளவுதான் அவர் செய்த சீர்திருத்தம். அதுவும் நிதிநிலை சரியாகும் வரை. ஒரேபள்ளியில் காலையில் ஒருவகுப்பு. மதியம் ஒருவகுப்பு. ஆரம்பப்பள்ளிகளுக்கு 3 மணி நேரம் மட்டும் கல்வி. ஆனால் ஆசிரியர் முழுநேரமும் கல்வி கற்பிக்கவேண்டும். பாடத்திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை.

மூன்று மணிநேரக் கல்வி தவிர மிச்சநேரம் பிள்ளைகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு சாதாரணமான ஒரு பேட்டியில் ‘அவர்கள் பெற்றோருக்கு வேலையில் உதவலாம்’ என்று சொல்லப்பட்டது. மதியத்துக்கு மேலே பிள்ளைகள் இன்ன வேலைதான் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கல்விகக்ழகத்தால் முன்வைக்கப்படவில்லை. சாதியம் சார்ந்த எந்த குறிப்பும் எங்கும் இல்லை.

ஜோதிஜி said...

பிள்ளைகள் பெற்றோருக்கு உதவலாமே என்ற ஒருவரியை சமத்காரமாக பிடித்துக்கொண்டு குலக்கல்வி என்று சொல்ல ஆரம்பித்தார்கள் திராவிட இயக்கத்தவர். அண்ணாத்துரை அந்த அவதூறை ஆரம்பித்தார். திராவிட இயக்கத்தின் உச்சகட்ட பரப்புரைக்கு பதில்சொல்லும் திராணி காங்கிரஸுக்கு இருக்கவில்லை. இந்த விஷயத்தில் விஷயம் தெரிந்த கம்யூனிஸ்டுகள் மௌனம் சாதித்தார்கள். காமராஜ் ராஜாஜிக்கு எதிரி என்பதனால் அன்றைய காங்கிரசும் அவருக்கு உதவவில்லை. அந்த திட்டத்தைப் பயன்படுத்தி தன் அரசியலெதிரியான ராஜாஜியை வீழ்த்தினார் காமராஜ். அடுத்த முதல்வராக ஆனார்.

ஜோதிஜி said...

ராஜாஜியின் திட்டத்துக்கு அன்று உருவான எதிர்ப்புக்கும் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். இன்று எண்பது வயதான ஆசிரியர் ஒருவரே அதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அந்த திட்டம் ஆசிரியர்களின் பணிநேரத்தையும் சுமையையும் அதிகரித்தது. அவர்கள் ஒருநாளில் 5 மணி நேரத்திற்குப் பதில் 6 மணி நேரம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஐந்துநாள் வேலை ஆறுநாள் வேலையாக அதிகரிக்கப்பட்டது.

அன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சிறு கிராமங்களில் தங்கும் வசதி இருப்பதில்லை. அதைவிட பிறசாதியினர் நடுவே தங்குவது அன்று எவராலும் விரும்பப்படவில்லை. என்னிடம் பேசியவர் கோயில்பட்டியில் இருந்து இருபத்த்தைந்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று ஓர் இடைய கிராமத்தில் எழுபது பிள்ளைகளுக்கு ஒரேயாளாக பாடம் நடத்தினார். அவர் வேளாளர். இடையர் கிராமத்தில் அவர் தண்ணீர்கூட குடிப்பதில்லை.அவர் அங்கே சென்று சேர பத்து மணி ஆகிவிடும். மதியமே திரும்பி விடுவார்.

இந்த நிலையை ராஜாஜியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் பெருந்திரளான மாணவர்களுக்கு சில மணி நேரம் மட்டுமே கல்வி கற்பிக்கிறார்கள், அதனால் எந்த பயனும் இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காகச்செலவிடப்படும் பணம் பெரும்பாலும் வீணாகிறது என்கிறது. ஆகவே அது ஆசிரியர்கள்மேல் சவுக்கை சுழற்றுகிறது. அவர்கள் எட்டு மணிக்கே பள்ளியில் இருந்தாகவேண்டும். மாலை ஐந்துக்கு கிளம்பவேண்டும். ஆசிரியர்கள் கொந்தளித்தது இயல்பே. அந்த கசப்பை ஈவேராவும் அண்ணாத்துரையும் அவர்களின் இயக்கமும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டனர்.அது வெறும் அரசியல். உங்கள் அரசியல் அதுவாக இருந்தால் சொல்லிக்கொண்டிருக்கலாம் – வரலாறு அது அல்ல

ராஜாஜியின் இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் காலகட்டத்தில் பல பகுதிகளில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு விளைவுகளை காட்டிய ஒன்றே. அதை விரிவாக தமிழகம் முழுக்க கொண்டுவர முயன்றதே ராஜாஜியின் திட்டம். அவரது சாதியை இதில் பிணைப்பதற்காகத்தான் தந்திரமாக இது அவரே உருவாக்கிய திட்டம் என்று சொல்கிறார்கள்.

ஜோதிஜி said...

அத்துடன் இந்தத் திட்டமே கூட அன்று உலகில் பல நாடுகளில் நடைமுறையில் இருந்ததை ‘காப்பி’ அடித்து உருவாக்கப்பட்டதுதான். உலகமெங்கும் குடும்பத்தொழிலை பிள்ளைகள் செய்வது நடைமுறையில் இருந்த காலம். பிள்ளைகளை அப்படி சட்டென்று கல்விக்காக வெளியே எடுக்கமுடியாது. ஆகவே அவர்கள் பாதிநாள் கற்றால்போதும் என்னும் நிலை அன்று இருந்தது. மூன்றுமணிநேரம் சரியானபடி கற்பித்தாலே போதும் என ராஜாஜி வாதாடினார். நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆசிரியர் நாளெல்லாம் கூட்டி வைப்பதற்குப்பதில் பாதிப்பாதியாக மூன்றுமணி நேரம் கற்பிப்பதுதான் அவரது திட்டம்.

ராஜாஜியின் பள்ளித்திட்டத்தில் எங்காவது தகப்பன் தொழிலை மகன் செய்தாகவேண்டும் என்று உள்ளதா என்ன? ஒருவரி? அப்படியானால் கல்வியே தேவை இல்லையே. பள்ளிக்கூடமே திறக்கவேண்டாமே. ஏற்கனவே பிள்ளைகள் அதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள்? அவர் அடித்தட்டு மக்கள் பிள்ளைகளை கவர்ந்து பள்ளிக்கு கொண்டுவரவே அதைச் சொன்னார். உங்களுக்கு பிள்ளைகள் சம்பாதித்துக்கொடுப்பார்கள், மிச்சநேரத்தில் அவர்கள் பள்ளிக்கு வரட்டும் என்றுத தந்தையரிடம் சொன்னார். அரை நூறாண்டு கழித்து இன்றும் கூட, இத்தனை கல்வி வளர்ச்சிக்குப் பின்னரும்கூட, இது தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஒரு உத்தியே.

இன்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் வேலைக்கனுப்பாதீர் என்று கோடிக்கணக்கில் செலவிட்டு பிரச்சாரம்செய்கிறது தமிழக அரசு. இன்றும் கூட கால்வாசிப்பிள்ளைகள் படிப்பு நிறுத்தப்பட்டு குலத்தொழிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாட யதார்த்ததில் இருந்து உருவான திட்டம் அது. இங்கே 90 சதவீதம்பேர் குலத்தொழில் செய்பவர்கள் அன்று. அவர்களின் தொழிலில் பிள்ளைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அவர்களை வேலையைவிட்டு நிறுத்தி பள்ளிக்கனுப்புவது என்பது அக்குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமை. ஆகவேதான் அவர்கள் வேலையைச்செய்துகொண்டே படிக்கலாம் என்றார் ராஜாஜி. அந்தத் திட்டம் நீடித்திருந்தால் தமிழகக் கல்வியில் இன்னும் பெரிய பாய்ச்சல் நிகழ்ந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

சரி, காமராஜ் எப்படி முழுமையான ஆரம்பக்கல்வியை அளிக்க ஆரம்பித்தார்? 1954ல் அவர் ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழக அரசின் நிதிநிலை பலபடிகள் முன்னேறியிருந்தது. [ அதற்குக் காரணமும் ராஜாஜிதான். அவரது மறைமுக வரிகள் ] அரசு நிதியை அதிகம் செலவிடாமல் பெரும்பாலும் தனியார்நிதிகளைக்கொண்டே பள்ளிகளை நடத்தும் புதுமையான திட்டம் நெ.து.சுந்தரவடிவேலுவால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இன்று திரிபுகளுக்கு அளவே இல்லை. 6000 பள்ளிகளை மூடும்படி ராஜாஜி உத்தரவிட்டார் என்று தி.க பிரசுரங்களில் பார்த்தேன். நண்பர்கள் மூலம் முறையாக விசாரித்தேன். ’அதெப்படி சுதந்திர இந்தியாவில் அப்படி ஒரு சட்டம்போட முடியும் உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்றார்கள். இன்றும்கூட அப்படி பள்ளிகள் மூடப்பட்டமைக்கான அரசாணையை எவராவது ஆதாரம் காட்டவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்..

ராஜாஜி முதல்முறை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, 1937ல், சென்னைமாகாணம் கடுமையான நிதிச்சுமையை சந்தித்தது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம். பிரிட்டிஷ் அரசு வரிச்சுமையால் இந்தியாவை கசக்கிக்கொண்டிருந்த நிலை. பிரிட்டிஷ் அரசின் மைய நிதி ஆதாரம் குடிவணிகம். ராஜாஜி மதுவிலக்கை கொண்டுவந்தார். பிரிட்ட்ஷாருக்கு கட்டவேண்டிய வரியை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே பல துறைகளில் அவர் சிக்கன நடவடிக்கையை கொண்டுவந்தார்

அன்று தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் குடிப்பள்ளிக்கூடம் போன்ற கிராமிய அமைப்புகளுக்கு அரசு நிதி அளிக்கும் வழக்கம் இருந்தது. இந்த நிதி பெரும்பாலும் முறைகேடாக, பயனற்று செலவாகிறது என ராஜாஜி கருதினார். அவற்றை முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். இந்த ஆணைமூலம் ஆந்திராவில் பல குடிப்பள்ளிகளை மூடவேண்டியிருக்கும் என ஜஸ்டிஸ் கட்சி எதிர்த்தது. அதை பிரதிபலித்து ஈவேரா அவர்கள் தமிழகத்திலும் 6000 பள்ளிகள் மூட நேரலாம் என்று சொன்னார். இந்த வரியைத்தான் இன்று வரை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை வைத்து ராஜாஜி 1952லும் 6000 பள்ளிகளை மூடினார் என்கிறார்கள்.

ஜோதிஜி said...

அதீதமான காழ்ப்புடன் எதிர்கொள்ளப்பட்ட மனிதர் ராஜாஜி. அவர்மேல் இன்று, இத்தனை காழ்ப்பிருந்தபோதும்கூட இம்மாதிரி பொய்களையும் சில்லறைக்குற்றச்சாட்டுகளையும் மட்டுமே சொல்லமுடிகிறது என்பதே ராஜாஜி யார் என்பதைக் காட்ட போதுமான ஆதாரம்

ஸ்ரீராம். said...

மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

Rathnavel Natarajan said...

தாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் பின்னூட்டங்களையும் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

Rathnavel Natarajan said...

இராஜாஜி பற்றிய விபரங்கள் அருமை. நிறைய துர்பிரசாரங்களால் அவர் பெயர் கெடுக்க்ப் பட்டிருக்கிறது. ந்னறி