Monday, July 15, 2019

என் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இயக்குனர்ராட்சசி / விமர்சனம் 

‘கற்பித்தவனே கடவுள்’ என்கிற சித்தாந்தத்தை, கற்பித்தவனே செல்லாக் காசாக்குகிற உலகம் இது! இங்குதான் ஆசிரியன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்று அவ்வப்போது படங்களில் காட்டி பசியாற்றுகிறார்கள் டைரக்டர்கள். தெருவுக்கு நாலு அபாயம் இருக்கிறார்கள். ஆனால் ஊருக்கே ஒரு சகாயம்தான் இருக்கிறார். இதையெல்லாம் கண்டும் கேட்டும், உண்டும் உயிர்த்தும் வாழ்கிற திருவாளர் பொதுஜனத்திற்கு இந்த இயக்குனர் கௌதம்ராஜ் கொடுத்த பரிசு, பரீட்சை அல்ல... 100 சதவீத பாஸ் பாஸ்!

ஒரு சிறு கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்று காயலான் கடையை விட மோசமாக இயங்கி வருகிறது. வாத்தியார்கள் என்ற பெயரில் சில சுயநலவாதிகள் மேலும் அந்த பள்ளியை தரமிறக்கி வருகிறார்கள். பல வருடங்களாகவே தலைமை ஆசிரியர் இல்லாத இடத்தில் தலைமை ஆசிரியராக வருகிறார் ஜோதிகா. இரும்பை பிழிந்து கரும்பாக்குகிற வேலை அவருக்கு. அதை எப்படி கனக்கச்சிதமாக செய்தார்? இவரது கண்டிப்பு பிடிக்காத சக வாத்தியார்கள் செய்த துரோகம் என்ன? அதையெல்லாம் அவர் எப்படி முறியடித்தார்? இவையெல்லாம்தான் ராட்சசி!

அந்தப் பள்ளிக்கூடத்தை இஞ்ச் இஞ்சாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். அது நாளுக்கு நாள் பொலிவுறுகிற அதே நேரத்தில் எதிரிகளும் சேர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். 

ஜோதிகா, அவர்களையெல்லாம் ஊதித் தள்ளுவாரா, அல்லது மோதி விழுவாரா என்கிற அச்சத்திலேயே நகர்கிறது படம். ஒரு துப்பறியும் நாவலைப் போல விறுவிறுப்பான திரைக்கதை! பலே...

அந்த முட்டைக்கண்ணில் கோபத்தையும், அன்பையும் சரி சமமாக வழிய விட்டிருக்கிறார் ஜோதிகா. அந்த கதர் புடவையில் அவரது கம்பீரம் அழகு. அப்படியே பிளாஷ்பேக்கில் வரும் அந்த இராணுவ மேஜரின் மிடுக்கும் அழகு. நடிப்பு ராட்சசிக்கு சரியான தீனி போட வேண்டுமே? அதற்கெனவே ஒரு காட்சி. ஏன் அந்த ஸ்கூலுக்கு வந்தேன் என்பதை டைட் குளோஸ் அப்பில் வார்த்தைகளாக அவர் சொல்ல சொல்ல... மிரண்டு போகிறது தியேட்டர். நிதானம், கோபம், நட்பு, முறைப்பு என்று கலந்து கட்டி அடித்திருக்கும் இந்த ஜோதிகா, இன்டஸ்ரிக்கே புதுசு! மூன்று கேள்வி கேட்கவா? என்று ஜோதிகா விரலை உயர்த்தினாலே தியேட்டரில் விசில் பறக்கிறது.

‘வில்லனிக்’ வாத்தியார்களில் கவிதா பாரதி மிரள விடுகிறார். நம்மை தாண்டி ஒரு நல்லது கூட நடந்துவிடக் கூடாது என்கிற அவரது வெறி, எவ்வளவு தூரம் போகிறது என்பதை நினைத்தால் பகீராகிறது மனசு. க்ளைமாக்சில் திருந்துகிற முத்துராமன், மென்று கொண்டேயிருக்கும் சத்யன், பூர்ணிமா பாக்யராஜ் என்று அத்தனை பேரும் பிரமாதப்படுத்துகிறார்கள்.

தனியார் பள்ளி நடத்தி வரும் ஹரிஷ், ஒரு எல்லையை தாண்டி தன் பயங்கரத்தை நிறுத்திக் கொள்வது ஆறுதல்.

தினந்தோறும் ஜோதிகாவை ஆட்டோவில் ஏற்றிவரும் மூர்த்தி, அவர்தான் எச்.எம் என்று தெரியாமலிருக்கிறாராம். இதுபோல சில அபத்தங்கள் படத்திலிருந்தாலும், மூர்த்தி பேசும் அபார டயலாக்குகள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது.

ஜோதிகாவின் அப்பா நாகிநீடு பொறுத்தமான அப்பா. அவரது மறைவுக்கு ஜோதிகா காட்டுகிற ரியாக்ஷனும் அதை தொடரும் காட்சிகளும் புரட்சி... புரட்சி!

நடப்பு அரசியலை பிரித்து மேய்கிறது பாரதி தம்பியின் வசனங்கள். ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை இதைவிட சுலபமாக மக்களுக்கு சொல்லி, வெறுப்பேற்ற முடியாது! “சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்துறீங்களே, ஒரு நாளாவது ஸ்கூலின் தரம் உயரணும்னு போராடியிருக்கீங்களா?” என்று ஜோதிகா கேட்க, “அதானே...?” என்று திருப்பிக் கத்துகிறார்கள் ரசிகர்கள்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எதுவுமே தேறவில்லை. பொறுப்பான கருத்துக்களோடு வந்திருக்கும் படத்தில், காலம் முழுக்க பாடுகிற மாதிரியான ட்யூன்கள் வேண்டாமோ? படு சொதப்பல். நல்லவேளை... பின்னணி இசையில் தப்பித்துவிட்டார்.

ஊர்கள் தோறும் மரம் நடுகிறீர்களோ, இல்லையோ? இந்த திரைப்படத்தை போட்டுக் காட்டுங்கள். நாட்டின் அடிப்படை சிஸ்டம் சரியாவதற்கு இதைவிட சிறந்த மருந்தேயில்லை.

ராட்சஸி... மரியாதைக்குரிய ராட்சஸி!

-ஆர்.எஸ்.அந்தணன்

சென்ற வார பதிவுகள்

தமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள்? ஏன்? எப்படி...

மோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்?

இந்திய ரயில்வே துறையில் (நடந்த - நடக்கும்) மாற்றங்...

நரசிம்மராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)

ஒரே நாடு. ஒரே ரேசன் அட்டை

பாஜக அடித்த முதல் சிக்ஸர்

ஆறாவது தலைமுறையில் நாம் நினைக்கப்படுவோமா?

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். படம் நன்றாக இருக்கிறது என்றே நிறைய விமர்சனத்தில் படிக்கிறேன். படம் இங்கே பார்க்க வாய்ப்பில்லை.

KILLERGEE Devakottai said...

திரைப்படம் பார்க்க விரும்பாத என்னையும் தங்களது விமர்சனம் ஆவலைத் தூண்டி விட்டது.

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்.

ஸ்ரீராம். said...

அமேஸானில் வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்!

ஆனால் பாராட்டி வந்த விமர்சனம் இப்போதுதான் படிக்கிறேன். ஆசிரியர்கள் இந்தப் படத்துக்கு எதிராக கிளம்பி இருக்கிறார்கள் என்றும் படித்த நினைவு.

ஜோதிஜி said...

காரணம் அவர்களுக்குத்தான் ஆப்பு பலமாகச் சொருகப்பட்டுள்ளது.

Thulasidharan V Thillaiakathu said...

நீங்களே இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை பகிர்ந்திருக்கீங்கனா!!!!

இந்தப் படமும் லிஸ்டில் இருக்கிறது. நல்லபடம் என்று விமர்சனங்கள் பார்த்தவர்களிடம் இருந்து வருகின்றன. எல்லாதரப்பினரையும் சென்றடைய வேண்டும்.

கீதா

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி

ஜோதிஜி said...

பசங்க, சாட்டை, பள்ளிக்கூடம், ராட்சசி இந்த நான்கு படங்களும் நல்ல சிடி கிடைத்தால் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்க. நான்கு ஒரே களம். வெவ்வேறு பார்வைகள். மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்.

ஜோதிஜி said...

என்னங்க ஆச்சரியமாக இருக்கும். டெல்லியில் தமிழ் திரைப்படங்கள் திரையரங்கத்தில் வெளியிட மாட்டார்களா?

வெங்கட் நாகராஜ் said...

ஆமாம்.... இங்கே தமிழ் படங்கள் வெளியாவது குறைவு. சில படங்கள் மட்டுமே PVR போன்ற திரையரங்குகளில் வரும் அதுவும் ரொம்பவும் கறைவான காட்சிகள். ரஜினி, கமல் போன்றவர்களின் படங்கள் ஒரு நான்கு ஐந்து நாட்கள் தாக்குப்பிடிக்கும். ரொம்பவும் தொலைவு பயணிக்க வேண்டும்.