Wednesday, July 10, 2019

ஒரே நாடு. ஒரே ரேசன் அட்டை

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' - மத்திய அரசின் நோக்கம் என்ன?

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது வட இந்தியாவிலிருந்து இந்தியாவின் பிற பகுதிக்கு புலம்பெயர்பவர்களுக்கான திட்டம். நிரந்தரமாக இந்திக்காரர்களை எல்லா மாநிலங்களிலும் குடியிருக்கவைக்கும் செட்லர் காலனியாக்கத் (Settler colonialism) திட்டம்.

இந்திப் பிரதேசங்களில் வளர்ச்சியைக் கொண்டுவந்து, அவரவர் மாநிலங்களை வளர்ப்பதை விட்டுவிட்டு பிற மாநிலங்களைச் சுரண்டிக்கொழுப்பதற்காகவும் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குடியேறி அதன் வசதிகளைக் கொள்ளையடிக்கவும் அவற்றின் மக்கள் தொகை சார்ந்த இயல்பை மாற்றவுமே இது திட்டமிடப்படுகிறது. இது ஒரு டெமாகிராபிக்கல் பிராடு.

தமிழர்களின் தாயகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்கவேண்டுமென்றால் இது போன்ற நாசகாரத் திட்டங்களை நாம் எதிர்க்கவேண்டும்.

நமது தாயகத்தில் மற்றவர்கள் நுழையக்கூடாது இதற்கு அர்த்தமில்லை. ஆனால் யார் நுழையலாம், எவ்வளவு பேர் நுழையலாம் என்பதை நாம் தீர்மானிக்கும் நிலை இருக்குமானால் அது வேறாகும். கட்டுப்பாடற்ற குடியேற்றம் என்பது இயல்பு மீறியது.

இது புது தில்லி திட்டமிட்டிருக்கும் தாயக அழிப்புக்கொள்கை. எல்லா ஏகாதிபத்தியங்களும் பல சமயங்களில் இப்படித்தான் திட்டமிட்டிருக்கின்றன. இன்றும் இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இவை அனைத்துமே திட்டமிட்ட இனவழிப்புக்கான செயல்பாடுகளாகும்.

தயவுசெய்து யாரும் சர்வதேசியவாதத்தையும் பரந்த மனப்பான்மையையும் தூக்கிக்கொண்டு இங்கே வராதீர்கள். அது ஏற்கனவே எங்களிடம் எக்கச்சக்கமாக இருக்கிறது!

தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

மக்கள் புலம்பெயர்வது இயற்கையானதே. ஆனால் அதற்கு பின்னால் உள்ள காரணங்ளையும் யோசிக்கவேண்டும்.

ஒரு சில சதவீத மக்கள் எப்போதுமே புலப்பெயர்ச்சியினூடாக வந்து செல்வதை ஏற்போம். அது அனைவருக்கும் பொதுவானது. சில குறிப்பிட்ட தொழிற்துறைகளில் ஆள் பற்றாக்குறை ஏற்படும்போது தற்காலிகமாக குடிபெயர்ச்சியை அனுமதிப்பது என்பதுதான் வேலைசார்ந்த புலப்பெயர்ச்சியின் அடிப்படை. அதை வேலை அனுமதி (work permit) திட்டத்தின் கீழ் ஏற்கலாம். ஆனால் அதற்கான உரிமைகளும் அதிகாரமும் மாநில அரசுகளிடம் இருக்கவேண்டும்.

மோடி அரசு திட்டமிட்டிருக்கும், கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறையிலிருக்கும் "இந்திக்காரர்களை இந்தி பேசாத மாநிலங்களில் குடிபெயரவைக்கும் திட்டம்" என்பது திட்டமிட்ட சதியாகும். குஜராத் மாநிலம் கூட ஏற்றுக்கொள்ள மறுத்து அங்கே இந்திக்கார்களுக்கு எதிராக பிரச்சினை வெடித்ததை மறந்துவிடவேண்டாம்.

மாநிலங்களின் அனுமதியோடு குடிபெயரும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவது அந்தந்த மாநிலங்களின் கடமையாகும். புலம்பெயரும் தொழிலாளர்களின் நலனைக் காப்பது என்பதில் எந்த சமரசமும் இல்லை. புலம் பெயரும் தொழிலாளர்களைச் சுரண்டும் உள்ளூர் கொள்ளைக்காரர்களை நாம் எதிர்க்கிறோம். புலம்பெயர்தலின் வலியை தமிழர்களை விட வேறு யாரால் அதிகம் உணரமுடியும்?

ஆனால் மைய அரசு வேலைகள் அனைத்தும் இந்திக்காரர்களுக்கே என்பது தொடங்கி மோடி அரசு செய்துவரும் ஒற்றையாட்சிச் செயல்பாடுகள் வெறுமனே வட நாட்டு பாமர மக்களின் நலன்களுக்கானது அல்ல.

அது இந்தி பேசாத மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பிறப்பு வீதக் குறைவு நிலையை சாதகமாக ஆக்கிக்கொண்டு அவற்றையும் இந்திக்கார மாநிலங்களாக ஆக்க நினைக்கிற "அகண்ட இந்திஸ்தான்" திட்டமாகும்.

மேற்கு வங்கம், பஞ்சாப், அசாம், மகாராஷ்ட்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் நெடுங்காலமாக இந்தச் சிக்கலால் அவதியுறுகின்றன. அங்கே இவை சமூகப் பிரச்சினைகளாக அவ்வப்போது வெடிக்கின்றன.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாக இதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கர்நாடகம் கொஞ்சம் விழித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்பியான தேஜஸ்வி சூர்யா கூட கர்நாடகத்திலுள்ள வங்கிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று பேசினார். கர்நாடகத்தில் இந்தி பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் வெளிப்பாடகவே சில ஆண்டுகளாக அங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்துவருகிறது.

பார்ப்பன அரசியல் - சமூக ஆதிக்கம், பனியா பொருளாதார ஆதிக்கம், அதற்கு அடித்தளமாக இந்தி பேரினவாத ஆதிக்கம் - இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் வியூகம். இதை நாம் பார்க்க மறந்துவிடக்கூடாது.

திட்டமிடப்பட்ட, அரசியல் நோக்கத்திலான புலப்பெயர்ச்சிகளை ஏற்றுக்கொண்டால் இலங்கையிலும் பாலஸ்தீனத்திலும் நடந்தது எல்லாம் இங்கும் நடக்கும் என்பதை மறக்காதீர்கள்.

சாரி, இனி வந்தாரை "எல்லாம்" வாழவைக்க நாங்கள் விரும்பவில்லை.

- ஆழி செந்தில்நாதன்

+++++++++++++

2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழக மக்களின் மக்கள் தொகை 7.22 கோடி.  ஆனால் ரேசன் கார்ட் அடிபடையில் எல்கார்ட் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதில் 8.36 கோடி பேர் உள்ளனர்.  இதன் அடிபடையில் பார்த்தால் தமிழகத்தின் மொத்த குடும்ப எண்ணிக்கை 1.47 கோடி குடும்பங்கள் தான் இருக்க வேண்டும்.

ஆனால் ரேசன் கார்ட் அடிபடையில் 1.97 கோடி குடும்பங்கள் உள்ளன.   இதன் மூலம் 50 லச்சம் குடும்பங்கள் அதிகமாக உள்ளது மட்டும் அல்லாமல் 50 லச்சம் ரேசன் கார்டுகள் அதிகமாக அதாவது போலியா இருப்பதாக கண்டு பிடிக்க பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 1.16 கோடி பேர் அதிகம் இருப்பதாக இந்த போலி ரேசன் கார்ட் மூலம் தெரிய வருகிறது.

போலி முகவரி தாங்கிய நபர்களை நீக்கி ரேசன் கார்டுகளை முடக்க கடந்த 10 ஆண்டுகளாக அரசு முயற்சித்தும் 30 லச்சம் ரேசன் கார்டுகளைதான் கண்டு பிடித்து முடக்கி இருக்கிறது.   கடந்த ஆண்டு மட்டும் 3 லச்சம் கார்டுகள் முடக்க பட்டுள்ளன.  இருந்தாலும் இன்னும் 50 லச்சம் கார்டுகள் முடக்க படவேண்டி உள்ளதாக அரசு தெரிவிக்கிறது.    இதற்க்கு காரணம் இரண்டு கார்டுகளில் பெயர்கள் இடம் பெற்று   இருப்பதுதான்.    அப்படி இடம் பெற்று இருக்கும் நபர்களை கண்டறிந்து அந்த கார்டுகளை முழுவதும் முடக்கி விட அரசு முடிவு செய்து உள்ளது.

+++++++++++++++

ரேசன் கடையை மூடப் போகின்றார்கள் என்று இரண்டு வருடத்திற்கு முன்பிருந்தே இங்கே பலரும் கூவிக் கொண்டு இருந்தனர். மானியம் என்ற பெயரில் மக்களைத் திசை திருப்பி பெரிய ஆப்பை சொருகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றனர் சிலர். நம் காசை நம்மிடம் இருந்தே வாங்கிக் கொண்டு நமக்குத் தாமதமாகக் கொடுக்கின்றனர். வட்டி கணக்கு என்னாச்சு? என்று கணக்குப் பிள்ளையாகப் பலரும் பேசினர்.

இதே போலப் பலரும் பல்வேறு ஊகங்கள், உளறல்கள் என்கிற ரீதியில் ரேசன் கடை குறித்துத் தொடர்ந்து இணைய தளங்களில் வந்து கொண்டிருந்தது. ஆனால் எழுதிய எவரும் நியாயமாக ரேசன் கடைகளில் என்ன மாறுதல்கள் நடந்தது? அதன் மூலம் கிடைத்த பலன் என்ன? கிடைத்துக் கொண்டிருக்கும் பலன் எப்படியெல்லாம் மடைமாற்றப்படுகின்றது என்பதனைப் பற்றியெல்லாம் எழுதவே இல்லை.

காரணம் எவரும் ரேசன் கடைக்குச் செல்வதும் இல்லை. அதன் உள்ளரசியல் புரியவும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் இதனை இன்று வரையிலும் பார்க்கின்றனர். இதற்குப் பின்னால் உள்ள ஊழல் குறித்து எவரும் பேச விரும்புவதே இல்லை.

1. ஏ1 கிரிமினல் இருந்தவரைக்கும் ரேசன் கடைகள் என்பது சீரழிவின் உச்சமாக இருந்தது. எந்தப் பொருள் எப்போது கிடைக்கும் என்பதே தெரியாது. எவரும் எங்கும் எந்தக் கேள்வியும் கேட்கவே முடியாது.

2. மத்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தது. சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதனை. ஆனால் கிரிமினல் கண்டு கொள்ளவே இல்லை.

3. மத்திய அரசாங்கம் தாங்கள் மாநில அரசாங்கத்திற்கு வழங்கும் பொருட்கள் மீது கை வைத்தார்கள். இவற்றையெல்லாம் செய்தால் இனி உங்களுக்கு வழங்குவோம் என்றனர். அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. போலி கார்டுகள், இறந்தவர்கள் பெயரில் உள்ள கார்டுகள் என்று மிகப் பெரிய கொள்ளை நாள் தோறும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

4. மேலும் அழுத்தங்கள் பல வகையில் தொடர்ந்து வரப் பழைய ரேசன் கார்டில் தாள் ஒட்டுகின்றோம். அந்த வேலை முடிய எங்கள் அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்தனர். நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது. இயற்கை நீ தாள் ஒட்டியது போதும். வந்து சேர் என்று நல்லவேளையாக அழைத்துக் கொண்டு சென்றது.

5. புதிய அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அப்படியே தொபக்கடீர் என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது. மத்திய அரசாங்கம் நினைத்த சீர்திருத்தங்கள் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கியது.

6. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது. கை ரேகை வாங்கப்பட்டது. ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அலைபேசி சேவை அறிமுகமானது. வாங்கிய பொருட்களின் பட்டியல் குறுஞ்செய்தி வாயிலாக நமக்கு வந்து சேர்ந்தது. ஆப் அறிமுகமானது. விபரங்களைப் பரிசோதிக்க முடிந்தது. நமக்குத் தேவையில்லாத பொருட்களை நாமே நீக்கிக் கொள்ள முடிந்தது. அதாவது நுகர்வோர்க்கு எல்லாவகையிலும் சுதந்திரம் அளித்து திருடர்களை வட்டம், சதுரத்துக்குள் அடைத்து மாதந்தோறும் பல நூறு கோடி ரூபாய் மிச்சமாகத் தொடங்கியது. ஆனால் இங்கு தான் மாநில சுயாட்சி என்ற கோஷம் ஒலிக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பே இல்லாமல் எல்லாப் பக்கத்திலும் வாய்ப்பூட்டு போடப்பட்டது.

7. மின்சாரத்துறையும், பொருள் வழங்கல் துறையும் மத்திய அரசாங்கத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதற்குப் பின்னால் உள்ள அரசியலைப் பற்றிப் பேசுவதை விட நுகர்வோருக்கு இப்போது வரைக்கும் கிடைத்த பலன் அதிகமானது. ஒரு வேளை மின்சாரத்துறை சீரமைக்காமலிருந்திருக்கும் பட்சத்தில் இன்றைய தமிழக சூழலில் கழுத்து வரைக்கும் கடனில் தவித்துக் கொண்டிருந்த மின்துறை இன்று தமிழ்நாட்டை இருட்டுக்குள் தள்ளியிருக்கும். பா.ஜ.க செய்த முக்கிய சாதனைகளில் இதுவும் ஒன்று.

8. ஆனால் கொள்ளையடிப்பதை நிறுத்தியாயிற்று என்று மத்திய அரசு நகர்ந்து விட்டது. ஆனால் இங்கே நம் மக்கள் சும்பன்களா? நாடி, நரம்பு, புத்தி, சதை, ரத்தம், ஒவ்வொரு அணுக்களிலும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதைத்தான் வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தானே? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. எப்படி?

9. ஒரு அட்டைக்கு 15 கிலோ அரிசி வழங்கிக் கொண்டிருந்தார்கள். 10 என மாற்றிவிட்டனர். பச்சரிசி 5 கிலோ என்பதனை 2 அல்லது 3 என்று மாற்றியுள்ளனர். துவரம்பருப்பு ஒரு கிலோ கொடுக்க வேண்டும். பலமுறை கொடுக்கப்படுவதே இல்லை. சர்க்கரை (ஜீனி) வழங்குவதும் இடைவெளி விட்டுத்தான் கொடுக்கின்றார்கள். கோதுமை என்கிற பெயரில் குப்பையை அள்ளிக் கொடுக்கின்றார்கள். நல்ல கோதுமை நாறுன கோதுமையாக மாற்றுவது அதன் பின்னால் உள்ள லாபியைக் கேட்ட போது வெகு சுவராசியமாக இருந்தது.

10. கடைக்காரரே அரசி பத்து கிலோ கொடுத்து விட்டு நான் 15 கிலோ என்று எந்திரத்தில் ஏற்றிக்கொள்கிறேன் என்று கூசாமல் கேட்கின்றார். இந்தப் பொருள் இந்த முறை நீங்கள் வாங்குவீர்களா? நான் எடுத்துக் கொள்ளட்டுமா? என்கிறார். பலரும் மீற முடியாமல் தவிக்கின்றார்கள். இது குறித்து அவரிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட போது இதற்குப் பின்னால் உள்ள பெரிய நெட்வெர்க்கில் அவர் கடைசி கண்ணி என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. அவர் மேல் எந்த குற்றத்தையும் சொல்லத் தோன்றவில்லை.

ஊழல் என்பது புற்றுநோய் போன்றது. நமக்கு வந்தாலும் அது எப்போது வெளிக்காட்டி நம்மைச் சித்ரவதைக்குள் தள்ளும் என்பதே தெரியாது. தெரியத் தொடங்கும் போது நம்மை நம்மால் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது. அந்தச் சூழலில் தான் தமிழகம் உள்ளது.

++++++++++++++

கடைசியாக திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு

இதில் உள்ள காணொளியைப் பாருங்கள். உணவு அமைச்சர் சட்டமன்றத்தில் இது குறித்து விரிவாக எடுத்துச் சொல்கின்றார்.  இவர் சொல்லும் தகவல்கள் உண்மையா?  இவர் சொல்லும் அளவிற்கு தமிழக மக்கள் ரேசன் பொருட்கள் பெறுகின்றார்களா? இல்லையா?  அப்படியென்றால் மத்திய நிதியில் பெறப்படும் பொருட்களின் அளவு என்ன ஆயிற்று? ஏன் கொடுக்கவில்லை என்பதனை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

இணைப்பு


7 comments:

Unknown said...

Ippadi kettal enna bathil kidaikkum?
Periyar mannu, paarpana kumbal, khyber kanavaai, paarpanai nakkum soothiran,,,,,, ennovo ponga. Naadum naatu makkalum naasamagattuum!
RAjan

Unknown said...

However I want to. Say this was written nicely- good work.
Rajan

திண்டுக்கல் தனபாலன் said...

பலரும் ரேசன் பொருட்களை பெற்று, விற்று விடுகிறார்கள் என்பது தான் உண்மை...

எங்களுக்கு நடந்த ஒரு நிகழ்வு : நாங்கள் செல்லாமலேயே ரேசன் பொருட்களை பெற்றுக் கொண்டதற்கான குறுஞ்செய்தி வந்தது... தவறாக இருக்கும்பட்சத்தில், அதை ஒரு எண்ணிற்கு அனுப்புமாறும் அதில் இருந்தது... அனுப்பியாகி விட்டது... அடுத்தமுறை எங்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை... அதை பிறகு எப்படி வாங்கினோம் என்பது முக்கியமல்ல, அங்குள்ளவர் கேட்டது, "நீங்கள் தான் report செய்தீர்களா...?" அனைவரும் கூட்டுக்களவாணிகள்...

ஜோதிஜி said...


பாஜக அரசு வந்த பிறகு நான் விரும்பிய விசயங்களில் ஒன்று டிஜிட்டல் இண்டியா என்ற திட்டமாகும். இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் எல்லாத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மை. இடைத்தரகரை அடியோடு நீக்குவது. சம்மந்தப்பட்ட துறை அதிகார வர்க்கத்தினரை மக்கள் சந்திக்காமல் அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லாமல் இருக்கும் இடத்திலிருந்து கொண்டே பெறுவது. அதாவது நுகர்வோர் அல்லது குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை எளிதாக இயல்பாகச் சுயமரியாதையோடு பெறுவது.
இந்த திட்டத்தில் உள்ள குளறுபடிகள், மத்திய அரசாங்கம் தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள் என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. அதைத் தனியாக வைத்துக் கொள்வோம்.
ஆனால் இந்த திட்டம் மட்டுமல்ல. இது போன்ற பல திட்டங்கள் காங்கு ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அதனை ஏன் நிறைவேற்ற முயலவில்லை என்பதற்கு அவர்கள் சொல்லும் எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுகின்றார்கள். ஆனால் காரணம் அதுவல்ல. துறை சார்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஊழல்வாதிகளாக இருந்தார்கள். அவர்கள் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது உண்டான இழப்புகளை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்து இருந்தார்கள். ஆதார் இணைப்பு முதல் இன்று பாஜக கொண்டு வந்த, கொண்டு வந்து கொண்டிருக்கின்ற அனைத்து திட்டங்களுக்கும் வெளிப்படைத்தன்மை தேவை என்ற நோக்கம் மட்டுமே முக்கியமானது. இதன் காரணமாகவே காங்கு கடைசி வரை இதனை நிறைவேற்ற முன் வரவில்லை.
ஆனால் மரம் வைத்தவன் ஒருவன். பழம் தின்பவன் ஒருவன் என்கிற மாதிரி பாஜக சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. என்ன விளைவு?
தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் வட மாநிலங்களைப் பலவிதங்களில் ஒப்பிட்டுப் பார்த்தால் முன்னேறிய மாநிலமாகத்தான் இன்று வரையிலும் உள்ளது. ஆனால் 90 மதிப்பெண்கள் வாங்க தகுதி படைத்தவன் 60 மதிப்பெண்கள் வாங்கியதைப் பார்த்து வென்று விட்டோம் என்று புளாங்கிதம் அடைவதைப் போல இங்குள்ள கட்சி பாரபட்சமில்லாமல் கொள்ளையடித்து தன் குடும்பத்தினருக்கு பத்து தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்தும் ஆசை நிற்காமல் இன்னமும் அலைந்து சேர்த்துக் கொண்டேயிருக்கின்றார்கள். நாமும் கிடைத்ததே போதும் என்கிற ரீதியில் அவரவர் வாழ்க்கை அவரவர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் வட மாநிலங்களில் ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டும் நிதி என்பது ஒரு பைசா கூட மக்களுக்குச் சென்று சேர்வதே இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், தரகர்கள், லாபி வட்டம், உள்ளுர் குண்டர்கள், சாதிய ஆதிக்கம் அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கடைசி வரைக்கும் அமிழ்த்து வைத்திருப்பது போன்ற யுக்தியை கடைப்பிடிப்பது போன்ற காரணங்களினால் இன்னமும் அந்த மாநிலங்களில் அடிப்படை வசதிகள் கூட இன்னமும் எட்டவில்லை.
நன்றாகக் கவனிக்கவும் நேரு ஆட்சி வந்தது முதல் இன்று வரை 60ஆண்டுகளுக்கு மேலாகக் காங்கு தான் இந்தியா முழுக்க தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து வைத்து ஆண்டு கொண்டு இருந்தது. ஏன் வடமாநிலங்கள் வளரவில்லை. ஏன் என்றால் வளர்க்க விரும்பவில்லை என்பது தான் உண்மை. காரணம் வளர்ந்தால் கேள்வி கேட்பார்கள். யோசிப்பார்கள். ஓட்டுப் போடமாட்டார்கள். இன்னும் பல.

ஜோதிஜி said...

திரிபுரா, மணிப்பூர், மேகலாயா, நாகாலாந்து போன்ற இடங்களிலிருந்து இங்கு பணிபுரிபவர்கள் சொல்வதைக் கேட்டால் திகிலாக உள்ளது. இன்னமும் பல இடங்களில் மின்சாரமே இல்லை. சாலை வசதிகள் இல்லை. பொது போக்குவரத்து இல்லை. இல்லை...இல்லை தான்.
ஒரிசா மட்டும் பட்நாயக் மகன் வந்து கொஞ்சம் தப்பித்து விட்டது. அவர் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 50 வருடம் வரைக்கும் வாழ்ந்தவர் இங்கு அவர் செய்த ஒரே காரியம் எந்த இடத்திலும் ஊழல் சுரண்டல் இல்லாமல் பார்த்துக் கொண்டது தான். மக்களுக்குச் சேர வேண்டிய அனைத்தும் குறுக்கீடு இல்லாமல் முடிந்தவரைக்கும் சென்று சேர்கின்றது. மோடி அவரை ஒன்றுமே செய்யமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த குற்றச்சாட்டுகளையும் வைக்க முடியவில்லை. மக்கள் அந்த அளவுக்கு தங்கள் முதல்வரை நம்புகின்றார்கள்.
தமிழகத்திற்கு வருவோம். இவர்கள் சமூகநீதி, சம உரிமை என்று சொல்கிறார்கள். உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஒரு அரசு பள்ளிக்கூட கட்டிடம் ஏன் கடந்த 25 வருடங்களில் சீர் படுத்த முடியாமல் இருக்கின்றது? ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் படித்து முன்னேறி சம உரிமையோடு சாதி இழிவைக் கடந்து இந்த உலகில் அவனும் ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்று தானே பெரியார் சொன்னார். அதற்குப் பள்ளிக்கூடம் தேவைதானே? அதைக் காமராஜர் உருவாக்கினார். அந்தப் பள்ளிக்கூடம் இப்போது எந்த நிலையில் உள்ளது? கையில் காசு இல்லாதவனும் ஏன் தனியார் பள்ளிக்கூடம் நோக்கி ஓடுகின்றான். காரணம் என்னவென்றால் இவர்கள் ஓட வைக்கின்றார்கள். காரணம் இவர்களின் தனிப்பட்ட வருமானம் தான் அங்கே முக்கிய பங்காக உள்ளது.

ஜோதிஜி said...

ஏன் ஒரு அரசு பேரூந்து இவ்வளவு கேவலமாக உள்ளது? மற்ற மாநிலங்களில் பொது போக்குவரத்து கூட இல்லை. நாங்கள் சாதித்து விட்டோம் என்கிறார்கள். ஏன் தனியார் பேரூந்து வரும் வரைக்கும் காத்திருந்து மக்கள் செல்கின்றார்கள். பக்கத்து மாநிலங்கள் எந்த இடங்களிலும் அரசுப் பேரூந்து நட்டத்தில் ஓடவில்லை என்பதனை கவனத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கர்நாடக கேரளா பேரூந்துங்களை பார்க்கவும். தனியார் வண்டிகளை விடச் சிறப்பாக வைத்துள்ளார்கள்.
இப்போது உணவுத் துறைக்கு வருவோம். அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்கிறார். ஐந்து பேர்கள் இருக்கும் குடும்பத்திற்கு 25 கிலோ அரசி என்று ஒரு பட்டியல் வாசித்தார். இங்கே 15 கிலோ மட்டும். அதுவும் இப்போது 10 கிலோ.
மத்திய அரசாங்கம் 70 சதவிகித பங்களிப்பு உடன் பொது விநியோகத்திட்டம் பலதும் இங்கே நடக்கின்றது. கொடுப்பது அவர்கள். தின்பது மக்கள் அல்ல.
பாஜகவின் கடைசி ஆண்டில் கல்வித்துறையில் மேல்நிலை ஆய்வகப் பொருட்கள் வாங்க 70 கோடி ஒதுக்கினார்கள். நூலக மேம்பாட்டிற்காக ஒரு பெரிய தொகை கொடுத்தார்கள். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு என்று ஒரு தொகை வருடந்தோறும் கொடுக்கின்றார்கள். உங்களுக்குத் தெரிந்த அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள். இதன் பின்னால் உள்ள ஊழல் உங்களுக்குப் புரியும். அப்படியே ஸ்வாகா.
மாநிலங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்திச் சிறப்பாக நடந்து கொண்டு இருந்தால் வருடந்தோறும் 3500 கோடி மத்திய அரசாங்கம் கொடுக்கின்றார்கள். ஆனால் அந்தத் தொகையை மாநில அரசு கை வைக்க முடியாது. உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் தங்கள் ஊருக்குக் கிராமத்திற்கு செலவளிக்க முடியும். இவர்கள் வருடந்தோறும் அந்தத் தொகையை மத்திய அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி யில்கொண்டு வந்து விடலாம் என்று தொடக்கம் முதலே மத்திய அரசாங்கம் முயன்றாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஆனால் பழிபாவம் மட்டும் மத்திய அரசாங்கத்திற்கே.
ஆன் லைன் மூலம் சான்றிதழ் பெறுவது திருப்பூர் பகுதியில் கொஞ்சம் பரவாயில்லை. மதுரைப் பக்கமெல்லாம் அதிகாரிகளே பிடுங்கிப் போட்டு நேரிடையாக வரச் சொல்லிவிடுகின்றார்கள். அப்போது தான் பணம் பார்க்க முடியும் என்பதால்.
பெரியார் நல்ல காரியம் தான் செய்தார். அண்ணாவும் தொடர்ந்து அதனைப் பரவலாக்கம்தான் செய்தார். கலைஞரின் தொடக்க காலத்திலும் அவர் அனைத்து விதமான நல்லதும் செய்தார். ஆனால் மாறன் குடும்பம் முதல் அடுத்தடுத்து உள்ளே வந்த குடும்ப உறுப்பினர்கள் வரைக்கும் இன்று அந்த கட்சி எங்கே உள்ளது? என்ன நடக்கின்றது?
கடந்த தேர்தலில் குஜராத்தில் ஒரே நாளில் இரண்டு லட்சம் கோடி மதிப்புள்ள வைர நகைகளை விற்ற காரணத்தால் வைர மார்க்கெட் 30 சதவிகிதம் இறங்கியது என்று படித்தோம். அப்படியானால் இன்னும் எத்தனை கோடி வைரங்கள் சசிகலா குடும்பத்திடம் உள்ளது. அந்தப் பெண்மணி எத்தனை லட்சம் கோடி தான் கொள்ளை அடித்தார்?
இப்போது அதிமுக சமஉ மட்டுமல்ல திமுக சமஉ மாதம் தோறும் கப்பம் போய் விடுகின்றது. மேலே வரைக்கும்.
இறுதியாகச் சொல்ல விரும்புவது கெட்டவனை அழிக்க யாரால் முடியால். அவனை விட ஒரு கெட்டவனால் மட்டும் தானே முடியும். புரிகிறதா? தனபாலன்.
வேடிக்கை மட்டும் பார்ப்போம். மோடி அதனைச் செய்து முடிப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம். அவர்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் (காங்கு பார்த்து பாடம் படித்து இருப்பார்கள். அண்ணா முதல் முறையாக வென்ற போது அவரே சொன்ன வாசகம் என்னப்பா காங்கு இப்படித் தோற்றுவிட்டது. மக்கள் இப்படிச் செய்வார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்றாராம்) என்பதற்காக நிச்சயம் அடிப்படை விசயங்களை (அவர்களுக்குச் சாதகமாக இருந்தாலும்) மக்களுக்குச் செய்தே தீருவார்கள் என்றே நம்புகிறேன். மற்றபடி அவர்களின் மதவாதம், மற்ற அஜண்டா எல்லாமே அரசியலுக்கு உல்லுலாயிவேலைகள். இழுத்துக் கொண்டே செல்வார்கள். அதை வைத்தே அரசியல் செய்வார்கள் என்றே நினைக்கின்றேன். பார்க்கலாம்.

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி