Friday, July 26, 2019

அதிர்ஷ்டம் என்பது புயல் காற்று


காலம் விசித்திரமானது. நீ தவழ்ந்து வரத் தெரிந்தால் போதும். நீ தான் ராஜா என்று சிலரை அங்கீகரித்து விடும். சிலருக்கோ பேசத் தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கக்கடவாய் என்று கடைக்கண் காட்டி அவர்களுக்கும் இடம் கொடுத்து விடும்.

சிலருக்கு முழுத் தேங்காய் கொடுத்து உரித்துத் தின்று கொள் என்றும், சிலருக்கோ உரித்துள்ளேன் நீ உடைத்துக் கொள் என்றும் சொல்லவல்லது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கோ தேங்காயை உடைத்தும் கொடுத்து இப்போது நீ உண்பாயா? என்று கெஞ்சும். குறிப்பிட்ட சிலருக்குத் தான் சிறு சிறு கீற்றாக மாற்றி தட்டில் வைத்து பரிமாறிக் காத்துக் கொண்டிருக்கும்.

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரைக்கும் உங்களுக்குத் தெரிந்தவர்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது. பாகிஸ்தான் என்ற நாட்டுக்கும் அதன் பெயர் உருவாக்கத்திற்குமே தொடர்பில்லாதவர் ஜின்னா. அவர் எந்த காலத்திலும் முஸ்லீமாக வாழ்ந்தது கூட இல்லை. கணவான் வாழ்க்கை தான்.

உண்பது, உடுத்துவது என்று எல்லாமே அமெரிக்கனை உரித்து வைத்துத் தான் வாழ்ந்தார். அவர் உயிரைக் காப்பாற்ற மவுண்ட் பேட்டன் பிரபு தன் உயிரைப் பயணம் வைத்து அந்த நாட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார். அவர் நினைத்த பதவியை அடைந்தார். இறக்கும் வரையிலும் ஜின்னா பாகிஸ்தானியாகவும் வாழவில்லை. உண்மையான முஸ்லீமாகவும் வாழவில்லை. அவர் தான் இன்று வரையிலும் பாகிஸ்தானின் தந்தை.

ஆனால் இன்று வரையிலும் எந்த பாகிஸ்தானியர்களும் தங்கள் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்ததே இல்லை.

ஜின்னாவிற்குப் பிறகு எத்தனை எத்தனை மாற்றங்கள். எத்தனை கொடூரங்கள், அவலங்கள், கண்ணீரும் கம்பலையும் உள்ள வாழ்க்கை இன்னமும் மாறவில்லை. அடிப்படையில் நாம் அனுபவிப்பது கூட அங்கே சராசரி மக்கள் அடைய முடியாத வாழ்க்கை தான் உள்ளது.

சொல்லப்போனால் இப்போது தான் நாடே திவால் என்கிற நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்தப் பெருமையை உருவாக்கிய ஒவ்வொருவரும் ஹாயாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள் அல்லது அடித்த கொள்ளையை வெவ்வேறு நாடுகளில் கொண்டு போய் சேர்த்து சுகவாசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம்ரான்கான் வந்து வகையாக மாட்டிக் கொண்டார்.

இம்ரான்கான் அரசியல் ஆசை என்பதே இல்லாத போது, அதனைப் பற்றியே நினைக்காத போது தன் நாட்டை, மக்களை நேசித்தவர். தன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து உடனே செயலில் காட்டியவர்.

பாகிஸ்தானில் புற்றுநோய்க்கு மருத்துவமனையே இல்லை என்பதனை உணர்ந்து நிதி திரட்டி தன் பங்களிப்போடு 1994 ஆம் ஆண்டு லாகூரில் கட்டினார். இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. 2015 ல் பெஷாவார் நகரில் இரண்டாவது புற்று நோய் மருத்துவமனையைப் புற்று நோய் தாக்கிய சிறுவனை வைத்துத் திறந்து வைத்தார். இதுவும் பலரின் நிதியளிப்புடன் சாத்தியமானது. தனது தாயார் செஷதக் கான் நினைவாகக் கட்டி இன்று வரையிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

அரசியல் ஆசை வந்து போராடித்தான் இந்த இடத்தை அடைந்தார். பாத்திரத்தைக் கழுவித் துடைத்து வைத்திருந்தார்கள். முன்னால் இருந்தவர்கள் எவரையும் குற்றம் சாட்டவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் செய்த தவறுகளைச் செய்யாமல் தவிர்த்தார். ஆடம்பரங்களை அறவே தவிர்த்து அரண்மனை மாளிகையை விட்டு எளிய வீட்டிற்குச் சென்றார். எவையெல்லாம் தன்னால் செய்ய முடியுமோ அரசியல் ஸ்டண்ட் என்பதற்கு அப்பாற்பட்டு செயலாக்கல் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவர் சென்றவாரம் அமெரிக்காவிற்குப் பயணிகள் விமானத்தில் செல்வதைப் பார்த்து பலரும் கிண்டலடிக்கின்றனர். ஆனால் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அசராமல் ஒவ்வொரு இடமாகச் சென்று கையேந்தி வருகின்றார். இதுவரையிலும் எந்த பாகிஸ்தான் ஆட்சியரும் தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம் குறித்து மூச்சு கூட விட்டதில்லை. தீவிரவாதிகளை தங்கள் அமைச்சரவை சகா போலவே பார்த்தனர். ஆனால் இவரோ அப்பட்டமாகப் போட்டு உடைக்கின்றார். நாட்டின் சூழல் அப்படி என்று எடுத்துக் கொண்டாலும் அவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தன் மக்களை நேசிப்பவனால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட முடியும். ஆப்கானிஸ்தானில் எங்கள் பங்களிப்பு இருக்காது. நாங்கள் அவர்கள் உள்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. காரணம் இந்தியா அங்கே ஆழமாக வேரூன்றியுள்ளது. எங்களால் இந்திய அரசியலைச் சமாளிக்க முடியாது. இப்போது எங்களை வேலையும் அதுவல்ல என்று எதார்த்தம் புரிந்து பேசுகின்றார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் உளவுத்துறை முதல் தீவிரவாதிகள் வரைக்கும் இங்கே உள்ள நிலையான ஆட்சியும், தீவிரவாத எதிர்ப்பில் காட்டும் உடனடி செயல்பாடுகளும் பயத்தை உருவாக்க அமைதி காக்கின்றார்கள். சீனா தாங்கும் என்று நம்பியிருந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் எகத்தாளம் மட்டுமே கிடைக்கின்றது.

இன்று காலம் இம்ரான்கானுக்கு உரிக்காத முழுத் தேங்காய் கூட கொடுக்கவில்லை. சுரண்டப்பட்ட சிரட்டையைத்தான் கொடுத்துள்ளது.

மதம் என்ற போதை அபினை விட மோசமானது என்பதற்கு நாம் வாழும் போதே பாகிஸ்தான் நமக்கு உதாரணமாக உள்ளது.

*************

சென்னையில் வசிப்போர் தண்ணீருக்கு தவியாய் தவித்த போது தண்ணீர் பஞ்சமல்ல. தண்ணீர் பற்றாக்குறை என்று வாக்கு அருளினார் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் வேலுமணி. அவர் மட்டுமல்ல. அதிமுக வில் உள்ள எந்த அமைச்சர்களும், முதலமைச்சரும், அதிகார வர்க்கத்தினரும் இதனைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் குளிக்காமல், குடிக்காமல் தவித்தார்களே தவிர கீரின்வேஸ் சாலை பக்கம் போய் யாரும் நிற்கவே இல்லை.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வான் ஏறி வைகுண்டம் போக நினைத்த கதையாகக் கடல் நீரைக் குடி நீராக மாற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆட்சியின் இறுதிக்காலத்தில் நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தருவோம் என்று சொல்லாமல் சொன்னார்.

ஆனால்...........

இப்போது ஒரு பக்கம் காவேரி ஒழுங்காற்று குழு ஆணையம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. குமாரசாமி பதவி விலகுவதற்கு முன்பு தண்ணீர் திறந்து விடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மற்றொருபுறம் கர்நாடகாவில் இப்போது மழை வெளுத்து வாங்கத் துவங்கியுள்ளது. காவேரி நீர் அதிகமாகவே மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கின்றது. நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்புள்ளது.

இப்போது சொல்லுங்கள்........

தகுதியில்லாதவர்களுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் என்பது புயல் காற்று போல விரைவாக வீட்டுக்குள் வந்து சேருமா?

9 comments:

KILLERGEE Devakottai said...

இம்ரான்கான் மனிதநேயமுள்ள மனிதர் என்பதை தொடக்கம் முதலே காட்டி வருகிறார்...

திண்டுக்கல் தனபாலன் said...

இம்ரான்கான் ம்... நல்ல மனிதர்...

Thulasidharan V Thillaiakathu said...

இம்ரானின் தனிமனிதனாக அவரைப் பற்றி சமீபத்தில் அறிய முடிந்தது. இப்போது மேலும் கூடுதல் தகவல்கள்...

கீதா

G.M Balasubramaniam said...

இம்மாதிரியான இம்ரான்கானுடன் சுமூகமாகப் போனால் இந்தியா பாகிஸ்தான் உறவு மேம்படலாம் ஆனால் மோடி அரசு செய்யுமா

ஜோதிஜி said...

கிரிக்கெட் என்றாலே எனக்கு ஆகாது. ஆனால் எனக்கு இம்ரான்கான் என்றால் மிகவும் பிடிக்கும்.

ஜோதிஜி said...

மனித நேயமுள்ளவர். உண்மையான முஸ்லீம்.

ஜோதிஜி said...

நன்றி.

ஜோதிஜி said...

பாகிஸ்தானை எந்த காலத்திலும் நம்பமுடியாது. அங்கே உளவுத்துறை தொடங்கி பல குட்டி ராஜாக்கள் உள்ளே இருக்கின்றார்கள். இவர்கள் அமைதியாக இருந்தாலும் அமெரிக்கா இவர்களை சும்மா இருக்க விட மாட்டார்கள். அந்தப்பக்கம் சீனா. என்ன ஆகப்போகுதோ?

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு விஷயங்கள் பற்றிய சிந்தனைகள் சிறப்பு.