Sunday, July 14, 2019

தமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள்? ஏன்? எப்படி?


காங்கிரஸ், பா.ஜ.க என்று எந்த கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தாலும் இவர்கள் தென்னிந்திய மாநிலத்தில் உள்ள கட்சிகளை இந்தி மொழி என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் அவர்களை அறியாமல் அந்தந்த மாநிலக் கட்சிகளை அவர்களை அறியாமல் வளர்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பதனை உணர்வார்களா? என்று தெரியவில்லை.

தேசிய கட்சிகளின் கொள்கை என்பது வேறு. மாநிலக் கட்சிகளின் கொள்கைகள் என்பது வேறு. ஆனால் மாநிலத்தில் உள்ள கட்சிகளுக்கு எப்போதும் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய விசயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். அதுவே மொழி, மதம், சாதி என்றால் அல்வாதுண்டு.

தேஜஸ் ரயில் பாஜக பாரபட்சமில்லாமல் தமிழகத்தில் கொண்டு வந்து சேர்த்தது. எந்த அதிமுக எம்பி யும் வாயைத் திறக்கவில்லை. அதற்காக முயலவும் இல்லை. லாப நட்ட அடிப்படையில் எப்படியோ மத்திய ரயில்வே துறை தமிழகத்திற்கு வழங்கியது. இன்று அந்த திட்டம் வெற்றி. அத்துடன் அதீத லாபம். திமுக எம்பி டிஆர் பாலு எம்பி யாக உள்ளே வந்தார். அந்த ரயிலைத் தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்து ஸ்கோர் செய்துள்ளார். உடனே மக்கள் எங்க எம்பி பணியைத் தொடங்கி விட்டார் என்று ஆரவாரம் செய்கின்றார்கள்?

எப்போதும் போல அதிமுக மிச்சரும், காரச்சேவும் வாங்கி தின்று கொண்டு இருக்கின்றார்கள். காரணம் அவர்கள் வளர்ந்த விதம் அப்படி.

இன்று இந்தி மொழியை அலுவலர்கள் உரையாடக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மாநில மொழியைத் தவிர்க்க வேண்டும் என்று கொடூரமான கேவலமான புத்தியை பாஜக உள்ளே கொண்டு வரத் தயாநிதி மாறன் ஆஜர் ஆகி மனு கொடுத்துள்ளார். சன்டிவி திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். உடனே வாபஸ் என்றவுடன் மாவீரன் சென்றதும் இது நடந்தது என்று சன்டிவி அதனை விவாத மேடை வரைக்கும் கொண்டு வந்துள்ளது.

இப்போது தமிழக பாஜக அல்வா, பூந்தியைத் தட்டில் வைத்துக் கொண்டு தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருப்பார்கள். தமிழிசை எப்போதும் போல நான் ஹிந்தி படிக்காத காரணத்தால் முன்னேற முடியவில்லை என்று மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பார். இவர்கள் வளரும் விதம் இப்படி?

கடந்த முறை பாஜக செய்த உருப்படியான திட்டங்கள் எதுவும் தமிழக மக்கள் எவருக்கும் சென்று சேரவே இல்லை. இப்படியெல்லாம் நடந்ததா? என்று கேட்பார்கள். அதுவே அவர்கள் செய்யும் இது போன்ற மொழி சார்ந்த விசயங்கள் எப்ப வாய்ப்பு கிடைக்கும்? என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முழு நேர பணியாக எடுத்துக் கொண்டு தமிழகம் முழுக்க சேர்த்து விட்டு, பார்த்தீர்களா? என்று முடித்து முடிவு கட்டி விடுகின்றார்கள்.

தென் மாநிலங்களில் ஜாபர் ஷெரிப் க்குப் பிறகு ரயில்வே துறையில் காபினட் அந்தஸ்தில் நம்மவர்கள் வாய்ப்புகள் வாசல் வரைக்கும் வந்து நின்ற போதும் எவரும் சென்று அமரவே இல்லை. விரும்பவும் இல்லை. நம்மவர்களுக்கு டிப்ஸ் போலக் கிடைக்கும் வருமானமெல்லாம் போதாது. அருவி போலக் கொட்ட வேண்டும். அப்படிப்பட்ட இலாகா தான் கேட்டு வாங்குவார்கள். அப்படித்தான் பெற்றார்கள். வளர்ந்தார்கள். வாழ்ந்தார்கள்.

தென்னக ரயில்வேவில் உள்ள தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு முக்கிய விசயத்தைச் சொன்னார்.

கடந்த பத்தாண்டுகளில் தெற்கு ரயில்வே துறையில் பல்வேறு பணியில் சேர்ந்தவர்களில் 55 000 பேர்களில் 15 000 பேர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதில் முக்கியமான வேலையான சீட்டு கொடுப்பவர்கள் (கவுண்டரிலிருந்து மக்களுடன் உரையாட வேண்டிய நிலையில் உள்ளவர்கள். இவர்கள் கட்டாயம் மாநில மொழியை கற்று ஆக வேண்டும்). அடுத்து சீட்டு பரிசோதகர், (இவருக்கும் மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும்) அடுத்து ஸ்டேசன் மாஸ்டர் என்று மூன்று பதவிகளில் தான் இவர்கள் அதிகம் பேர்கள் வந்து நுழைந்துள்ளார்கள்.

ஆனால் இவர்கள் யார் ரயில்வே துறையில் அமைச்சராக இருந்த போது வந்து சேர்ந்து இருப்பார்கள் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தெற்கு ரயில்வே மற்றொரு கூத்தை தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றது. வந்து சேர்பவர்கள் மாநில மொழியைக் கற்றால் தான் இங்கே பிழைப்பு நடத்த முடியும்? என்பதனைக்கூட உணர மறுத்து இன்னமும் தினமும் ஒரு ஹிந்தி வார்த்தை என்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மாநில மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வாய் வார்த்தையாகக்கூட சொல்லத் தயாராக இல்லை என்றால் இந்த ரயில்வே துறையில் உள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் எத்தனை கொடூரமானவர்களாக இருக்க வேண்டும்?

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து சேர்பவர்களைப் பற்றி பேசும் போது, ஒரு நுண் அரசியலும் உண்டு என்று பேசும் போது அவர் சொல்லிய தகவல் ஆச்சரியத்தை அளித்தது.

தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி வகுப்பினர்கள் உண்டு. ஆனால் கடந்த பல பத்து ஆண்டுகளாக இவர்கள் யாருக்கும் தமிழக அரசாங்கம் எஸ்டி சான்றிதழ் வழங்குவதே இல்லை. முடிந்தவரைக்கும் தவிர்க்கப் பார்க்கின்றார்கள். இழுத்தடிக்கின்றார்கள். கொடுக்காமல் தான் இருக்கின்றார்கள். சம்மந்தப்பட்டவர்களும் போராடிப் பார்த்துவிட்டு ஒதுங்கி கிடைத்த உள்ளூர் வேலைக்குச் சென்று விடுகின்றார்கள்.

ஆனால் வட மாநிலங்களில் வந்து சேர்பவர்கள் அனைவரும் சாதிச் சான்றிதழ் மூலமாகக் குறிப்பாக எஸ்சி எஸ்டி என்று கோட்டாவில் தான் வந்து சேர்கின்றார்கள். அதன் நம்பகத்தன்மை குறித்து ஆண்டவனுக்குத் தெரியும்?

இப்போது சொல்லுங்கள்?

இங்கு வடமாநிலத்திலிருந்து தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்? எங்கள் நிலத்தின் வேலை வாய்ப்பு பறிபோகின்றது? என்று பல்வேறு தரப்பினரும் வைக்கும் குற்றச்சாட்டுக்குப் பின்னால் உள்ள அரசியலை யோசித்துப் பாருங்கள்.

யார் காரணம்? யார் பொறுப்பு?

7 comments:

G.M Balasubramaniam said...

சாதி மதம் மொழி போன்றவைஉணர்வு பூர்வமாக ருப்பவை இவற்றைக்கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் தெரிந்துதானே செய்கிறார்கள் எந்தக் கட்சியும் விலக்கல்ல ஆதாயம்
பெறுபவர்கள் பேச மாட்டார்கள்

நெல்லைத்தமிழன் said...

1. நீங்கள் சொல்லியிருப்பது எம்.பிக்களைப் பொறுத்தவரையில் சரி. அதிமுக, பாஜக போன்றவர்கள் உணர்வு பூர்வமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் 'முட்டாள்கள்' என்று நாம் நினைக்கும்படி, எம்ஜிஆர் படப் பாடல்களை பாராளுமன்றத்தில் பாடுவதோடு அவர்கள் கடமை முடிந்தது என்று நினைக்கிறார்கள். இதன் காரணம் அவர்கள் 'தலைமையை' மீறி எதுவும் செய்ய முடியாது.

2. திமுக எம்பிக்கள் அனேகமாக எல்லோரும் எத்தர்கள், பலவித குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். திகார் சிறையில் வருமானவரி கட்டுபவர்கள் போட்ட உணவை உண்டவர்கள். ஆனால் 'மொழி' என்ற உணர்வைப் பிடித்துக்கொண்டு படம் காட்டுகிறார்கள்.

3. தமிழகத்தில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதில், அவர்களுக்கு வேலை கிடைப்பதில், தவறு தமிழக அரசியல்வாதிகளிடம்தான் உண்டு.

நீங்கள் சொன்னதில் ஒரு தவறு இருக்குன்னு நினைக்கிறேன். எஸ்.சி, எஸ்.டி - இது மத்திய அரசுதான் கொடுக்கணும்னு நினைக்கிறேன். நினைத்த மாதிரி ஏதோ ஒரு சாதியை இந்தப் பட்டியலில் கொண்டுவர முடியாது.

ஆனால் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் தமிழகம் மோசமாக உள்ளது.

ஜோதிஜி said...

சாதிச் சான்றிதழ் என்பது கிராம நிர்வாக அதிகாரி மனசு வைத்தால் போதும். ஆர்ஐ அப்புறம்தாசில்தார் கையொப்பம் இட்டால் எந்த அரசு அதிகாரியும் ஒன்றும் செய்ய முடியாது. இது முழுக்க முழுக்க மாநில அரசு சார்ந்த விசயம். இவர்கள் செய்ய விரும்பாததற்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் உண்டு. முக்கியமாக இவர்களை வளர்த்து விட்டால் வளர்ந்து விடுவார்கள் என்ற எண்ணம்.

ஜோதிஜி said...

அரசியல் என்றால் என்ன? பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் உருவாக்க வேண்டும். உருவான பிரச்சனை தொடர வேண்டும். தொடரும் பிரச்சனைகள் நம்மால் முடிக்கப்பட வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடக்கூடாது. இது தான் அடிப்படை அரசியல்.

Rathnavel Natarajan said...

தமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள்? ஏன்? எப்படி? - தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி வகுப்பினர்கள் உண்டு. ஆனால் கடந்த பல பத்து ஆண்டுகளாக இவர்கள் யாருக்கும் தமிழக அரசாங்கம் எஸ்டி சான்றிதழ் வழங்குவதே இல்லை. முடிந்தவரைக்கும் தவிர்க்கப் பார்க்கின்றார்கள். இழுத்தடிக்கின்றார்கள். கொடுக்காமல் தான் இருக்கின்றார்கள். சம்மந்தப்பட்டவர்களும் போராடிப் பார்த்துவிட்டு ஒதுங்கி கிடைத்த உள்ளூர் வேலைக்குச் சென்று விடுகின்றார்கள். - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

ஜோதிஜி said...

நன்றி

நெல்லைத்தமிழன் said...

//முக்கியமாக இவர்களை வளர்த்து விட்டால் வளர்ந்து விடுவார்கள் என்ற எண்ணம்.// என்ன அநியாயமான எண்ணம். சக மனிதர்களுக்கு உதவாமல், அதுவும் சட்டம் இருக்கும்போது உதவாமல், வேலை நாட்களைக் கழித்து ரிடையர் ஆகி கோவில் குளத்துக்கு இவங்க போனால்தான் என்ன போகாவிட்டால்தான் என்ன.