Tuesday, July 31, 2018

நாட்டு நடப்பு - ஆரோக்கிய குறிப்புகள் - 16

ஊரில் நடக்கு விசேடங்களில் கலந்து கொள்ளும் போது உள்ளே நுழைந்ததும் முக்கியமான நபர்களிடம் முகத்தைக் காட்டி விட்டு சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்று விடுவதுண்டு. என்னைத் தேடிக் கொண்டு வருபவர்களிடம் எப்போதும் அம்மையார் சமையல்கட்டு எங்கே இருக்கோ? அங்கே போய்ப் பாருங்கள்? என்பார். 

காரணம் உள்ளே நடக்கும் விவாதங்கள், வாக்குவாதங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், விட முடியாத கொள்கை கொண்டவர்கள், மாற விரும்பாத மனிதர்கள், இன்னமும் 1947 க்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எவரையும் புண்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. 

ஆனால் இந்த முறை வரவேற்பு மேஜையின் முன்பே கட்டாயப்படுத்தி அமர வைத்து விட்டார்கள். தட்டில் இருந்த பாதிக் கல்கண்டு, பழங்கள், காணாமல் போவதைப் பார்த்து மகள் நீங்க உள்ளே போயிடுங்க. இந்தப் பக்கமே வராதீங்க என்று புகைப்படம் எடுத்து என்னை அனுப்பி வைத்து விட்டார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்கள் சமையில் கலக்கோ கலக்கு என்று தூள் கிளம்புகின்றார்கள். 

அறந்தாங்கி தாண்டி கீரமங்கலம் பட்டுக்கோட்டை வரைக்கும் மட்டன் சாப்பாட்டுக்கு சொத்தே எழுதி வைத்து விடலாம் போலிருக்கும். அதே போலப் பேரையூர், நச்சாந்துபட்டி பக்கம் சின்னவெங்காயம் முருங்கைக்காய் போட்டு பொங்கலுக்குச் சம்பார் வைத்திருந்தார்கள். யார் என்று கேட்டு சமையல் கட்டுப் பக்கம் சென்றேன். சமையல் செய்பவர்கள் அனைவரும் 25 வயதுக்குள் இருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. யார் சம்பார் வைத்தது என்று கேட்டு அவருக்குக் கைகுலுக்கி நூறு ரூபாய் தாளை வைத்துக் கொள் என்றேன். 

மிரண்டு போய்விட்டான். 

உங்க வார்த்தையே போதும் அண்ணே என்றான்.

•••••••••••••••••••••••••••

2009 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் முதல் முறையாக வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதத் தொடங்கினேன். என் எழுத்துப் பயணத்திற்கு 10 வது ஆண்டு தொடங்குகின்றது. 800 பதிவுகளை கடந்து வந்துள்ளேன்.  

முதல் பதிவில் விமர்சனம் செய்த சுந்தர் நேற்று வரைக்கும் என் எழுத்தை படித்துக் கொண்டிருக்கின்றார் என்பதே எனக்குப் பெருமையாக உள்ளது.  இருவரும் கருத்து ரீதியாக எதிரெதிர் துருவமாக இருந்தாலும் கூட. நன்றி சுந்தர்ராமன்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நூலுக்கான வாசகர்களும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுக்கான வாசிப்பாளர்களும் அறிமுகம் ஆகி உள்ளனர்.  

எழுதத் தொங்கியது முதல் இன்று வரைக்கும் யார் யாரோ வந்தார்கள்.... சென்றார்கள். நெருங்கிய தொடர்பிலும் இருக்கின்றார்கள். முதல் பதிவு முதல் இன்று வரையிலும் வாசிக்கும் நண்பர்களும் உள்ளனர். 

விமர்சனப் பெட்டியை இன்று வரையிலும் பூட்டி வைத்தது இல்லை.

சமூகத்தைப் பாதிக்கும் மனிதர்களின் உண்மையான குணங்களை எப்போதும் விமர்சிக்க தவறியதே இல்லை. 

ஊருக்கு ஒவ்வொருமுறையும் செல்லும் போது நான் சந்திக்கும் உறவினர்களின் ஆரோக்கியம் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது, என்னுடன் பணிபுரிபவர்கள், உடன் பழகும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பார்க்கும் போதும் நான் இன்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வாழ்வதற்கும் காரணம் என் எழுத்துப் பயணம் மட்டுமே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. மனதில் உளைச்சல் இல்லாத போது உடலெங்கும் ஆரோக்கியம் நீடிக்கும் என்பது நான் கண்ட உண்மையாகும்.

இன்று வரையிலும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பர் இராஜராஜன் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தொடர்பில் தொடர்ந்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


(முற்றும்)

நாட்டு நடப்பு மற்ற பதிவுகள்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய அவல நிலை

நீட் என்பது உருவாக்கிய வணிக கொள்ளை

தமிழக கல்வியில் உருவான பாடத்திட்ட மாற்றங்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வானளாவிய அதிகாரங்கள்

ப.சிதம்பரம் என்றொரு அதிபுத்திசாலி

காலா திரைப்பட விமர்சனம்

தந்தை பெரியார் என்றும் தேவைப்படுவார்?

வைகோ உணர்ச்சிமயமானவர்

ரஜினி என்ற ஆபத்து

தமிழகம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் போர்

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்

சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் புத்தக விமர்சனம்

நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா

திமுக அதிமுக அடிப்படை வித்தியாசங்கள்

பிஎஸ்என்எல் அழிக்கப்பட்ட வரலாறு









Saturday, July 28, 2018

நாட்டு நடப்பு - தொல்லை தொடர்பு குறிப்புகள் - 15




சில மாதங்களுக்கு முன் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மோடம் பழுதாகி விட்டது. அப்போது தொடர்ந்து ஒரு வாரம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்ற போது கற்றதும் பெற்றதும்.

ரிசையில் காத்திருந்து, மீண்டும் மீண்டும் அலைந்து, தவமாய் தவமிருந்து என்று சொல்லக்கூடிய வகையில் பெற்ற பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பைப் பெற்ற அந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. இன்று வரையிலும் இதே அரசாங்கச் சேவையைத்தான் வீட்டில் பயன்படுத்தி வருகின்றேன். வீடுகள் மாறும் போது கதறடிப்பார்கள். ஆனாலும் விட்டுவிடவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தனியார் நிறுவனங்கள் அலைஅலையாக உள்ளே வந்தது. ஆனாலும் என் பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை. அலைபேசி சேவை வந்தது. பல ஆண்டுகளாகத் தான் இன்று வரையிலும் செல்ஒன் சேவையைத்தான் பயன்படுத்தி வருகின்றேன்.

காரணம் நம்பகத்தன்மை. ஆனால் லாபம் கொழிக்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தை எந்த அளவுக்கு அரசியல்வாதிகளால் தங்களின் சுயநல லாபத்திற்கு சீரழிக்க முடியும் என்பதற்கு பிஎஸ்என்எல் மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

மாதக்கட்டணம் கட்டுவதற்காக நீண்டடட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஏதோவொரு சூழலில் பழுதாகிவிட்டது என்ற நிலையிலும் நம் உயிர் போய் உயிர் திரும்பி வரும் அளவிற்கு சாகடிப்பார்கள். உள்ளே பணிபுரிபவர்களிடம் சென்று நம் அவசரத்திற்குச் சென்று பேச முடியாது. ராஜபுத்திர வம்ச மன்னர்கள் போல செயல்படுவார்கள். பொறுத்துக் கொள்ள வேண்டும். பிடிவாதமாக வெளியேறாமல் இருந்த சூழல் இப்போது படிப்படியாக மாறிக் கொண்டே வருகின்றது. பிஎஸ்என்எல் சேவையை மற்றும் செல் ஒன் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை நீங்களாகவே வெளியே சென்று விடுங்கள்? என்கிற அளவிற்குத் தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு உணர்த்துகின்றது.

ன்றைய சூழலில் பிஎஸ்என்எல் நாளுக்கு நாள் மக்களுக்கு உதவும் வண்ணம் நிறையச் சேவைகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். பல அற்புதமான திட்டங்கள் பொது மக்களின் பார்வைக்குச் செல்வதே இல்லை. தனியார் நிறுவனங்கள் போல மறைமுக கட்டணம் ஏதுமில்லை. தற்போது ஜிஎஸ்டி அறிமுகமான பின்பு அந்தத் தொகை மட்டும் தான் அதிக அளவு வருகின்றது. மற்றபடி நாம் பயன்படுத்தும் கட்டணம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது. ஆனால் கட்டமைப்பை சரியாக நாளுக்கு நாள் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மொத்த நிர்வாகமும் உள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் எப்படியாவது தனியார் கைக்குக் கொடுத்து விட வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளது?

ளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்ப வசதிகளைத் தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு வளர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இந்தத்துறையில் எந்த நவீன வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு வந்து சேர்வதே இல்லை. எல்லாமே அறிக்கைகளாகவே உள்ளது.

ணிபுரியும் ஊழியர் சொன்ன வார்த்தைகள் இது. "தனியார் நிறுவனங்கள் வியாபாரம் செய்கின்றார்கள். நாங்கள் மக்களுக்குச் சேவை செய்கின்றோம். நீங்கள் அவர்களிடம் போய் சேவையை எதிர்பார்த்தால் அது உங்களின் தவறு " என்றார். எதார்த்தமான உண்மை.


பிஎஸ்என்எல் பயன்படுத்தும் பெரும்பாலான மிண்ணணு உபகரணங்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. தரம் என்பது குப்பையாக இருந்தாலும் யாரோ ஒரு அதிகாரி அல்லது அந்த லாபி வட்டத்திற்கு பெரும் லாபமாக உள்ளது. இதன் மூலம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அடிமட்ட ஊழியர்கள் செய்த வேலைகளையே திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியதாக உள்ளது என்று புலம்புகின்றார்கள். இன்றைய சூழலில் சீனா இல்லாவிட்டால் இந்தியா என்பது இல்லாமல் போய்விடுமோ? என்கிற அளவுக்குத்தான் இங்கே உள்ள ஒவ்வொரு துறையும் உள்ளது என்பது தான் உண்மை. கணவன் மனைவியின் அந்தரங்க செயல்பாட்டினைத் தவிர்த்த மற்ற அன்றாட செயல்பாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சீனப் பொருட்களே உள்ளது.  இது தான் வல்லரசு இந்தியா.

ந்தத் துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் அரசாங்கத்தின் மேல் அதிக அளவு ஆத்திரமாக இருக்கின்றார்கள். எங்கள் நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கம் நடத்துகின்றது. பல ஆண்டுகளாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதே முதன்மையான குற்றச்சாட்டு. ஆள் பற்றாக்குறை ஒரு பக்கம். தனியார் நிறுவனங்களுக்குத் துணை போகும் பெரிய அதிகாரிகளின் அட்டகாசங்கள் மறுபக்கம்.

னியார் நிறுவனங்கள் இன்று வரை 4ஜி என்று விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இன்று வரையிலும் பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்கப்படவே இல்லை. ஏலத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை.

காங்கிரஸ் ஆண்டபோது இந்தத் துறைக்கு வந்தமர்ந்த அமைச்சர்கள் குறிப்பாக தயாநிதி மாறன் தொடங்கி ஒவ்வொருவரும் தங்களின் சுயலாபத்திற்காக மொத்த சேவையின் சீரழிவைத் தொடங்கி வைக்க இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

டிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பிஎஸ்என்எல் தங்களின் அடித்தளத்தை அதன் கட்டுமானத்தை உருவாக்கி வளர்த்து இந்தியா முழுக்க எந்த இடத்திற்குச் சென்றாலும் பேச முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால் இவர்கள் உருவாக்கி கோபுரங்களை இன்று தனியார் நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் அவலச் சூழல் காரணமாக பிஎஸ்என்எல் சேவை என்பது சந்துக்குள் சிக்கிய பூனை போல கதறிக் கொண்டு இருக்கின்றது.

ரசாங்கம் வியாபாரத்தில் இருக்கக்கூடாது. வியாபாரம் என்பது தனியார் கைகளில் தான் இருக்க வேண்டும் என்பது புத்திசாலி முதலீட்டாளர்கள் நமக்குப் பாடம் நடத்துகின்றார்கள். இதனால் சேவை என்பது மாறி கொள்ளை என்ற வார்த்தை கடந்த பத்தாண்டுகளில் தனியார் அலைபேசி வாடிகைக்கையார்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உண்மையாகும்.

பிஎஸ்என்எல் ல் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் வருத்தமுடன் பலவற்றை பகிர்ந்து கொண்டார். "இப்பொழுதே பாதி நிர்வாகம் ரிலையன்ஸ் கைக்குப் போய்விட்டது. அடுத்தமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் வேளையாக இந்தத் துறையை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். எனக்குப் பணி ஓய்வு பெற இன்னமும் 10 ஆண்டுகள் உள்ளது. நான் என்ன செய்யப் போகிறேன்? அவர்கள் வந்தால் என்னை வைத்திருப்பார்களா? என்று தெரியவில்லை" என்று சொன்னார்.

நான் அந்தப் பெண்மணி சொன்னதை முழுமையாக நம்பவில்லை. ஆனால் கடந்த பத்து நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் அது உண்மைதான் என்று எனக்கு உணர்த்தியது.

நண்பர் ஒருவருக்கு அழைத்து இருந்தேன். அவர் ரிங்டோனாக ஒரு பாடலை வைத்திருந்தார். அவர் நான் அழைத்த போது என் அழைப்பை எடுக்கவில்லை. நானும் அடுத்து இடைவெளி விட்டு அழைக்கலாம் என்று விட்டு விட்டேன். அப்போது எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. நீங்க கேட்ட பாடலை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணத்தால் உங்கள் ரிங்டோனாக மாற்றி உள்ளோம் என்று நான் தேர்ந்தெடுக்காமல் என் அனுமதி இல்லாமல் என் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நாம் அது தேவையில்லை என்று குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க முயற்சித்த போது அடுத்தடுத்து வேறு எந்தநத பாடல்கள் வேண்டும் என்று ரிலையன்ஸ் வாடிக்கையார் சேவை மையத்தில் இருந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது. சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

ன்றாக சோதித்துப் பாருங்கள். தற்போதைய சூழலில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்க சேவை சார்ந்த வாடிக்கையாளர் இலவச தொலைப்பேசிக்கு அழைத்துப் பாருங்கள். தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்று சொல்லும் போதே அது இயல்பாகவே துண்டிக்கப்பட்டு விடும். அதே போல வாடிக்கையாளர் பேச ஊழியருடன் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்குப் பல கோல்மால்கள் செய்து வைத்து உள்ளார்கள்.

அதாவது உன்னிடமிருந்து உன் கண் எதிரே நாங்கள் திருடத்தான் செய்வோம். சேவை என்பதனை எல்லாம் எதிர்பார்க்காதே. நீ குறிப்பிட்ட சேவைகளை பயன்படுத்தாமல் இருந்தால் கூட நாங்கள் அதற்கான பணத்தை எடுத்துக் கொள்வோம். இப்படித்தான் ஒவ்வொரு துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் வங்கி குறித்து நான் பெற்ற அனுபவங்களைத் தனியாக எழுதுகிறேன்.

மீபத்தில் ஏர்செல் மூடப்பட்டபின்பு அதில் இருந்த வாடிக்கையாளர்களில் குறிப்பிட்ட சதவிகித மக்கள் செல்ஒன் மற்றும் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்து சேர்ந்து விட ஏற்கனவே நெருக்கிக்கொண்டு நிற்கும் சேவை தற்போது கூட்ட நெரிசலில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது. இப்போது வீட்டுக்குள் இருந்தால் கூட நாட் ரீச்சபிள் என்று தான் வருகின்றது. யாராவது அழைத்தால் வெட்ட வெளியில் வந்து நின்று அல்லோ அல்லோ என்று அல்லோலியா கோஷ்டி போல கத்த வேண்டியுள்ளது.

காரணம் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனும் கொடுத்தும், பிஎஸ்என்ல் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பையும் தாரை வார்த்து அமைச்சர்களும் அதிகாரிகளும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை வருடந்தோறும் நிலுவையாகவே காட்டப்படுகின்றது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வார்த்தை இப்போதைக்கு நம் நாட்டின் தொலை தொடர்பு சேவைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

காலையில் நம் அவசரத்தின் பொருட்டு ஒன்பது மணிக்கு பிஎஸ்என்எல் அலுவகத்திற்குச் சென்றாலும் ஒவ்வொரு ஊழியரும் பத்து மணிக்கு உள்ளே வருகின்றார்கள். பலர் பத்தரை மணிக்குத்தான் உள்ளே வருகின்றார்கள். சரியாக மாலை நாலரை மணி சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பி விடுகின்றார்கள். இதற்கிடையே தேநீர், சாப்பாடு, புகைப்பது என்று கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் முழுமையாக மூன்று மணி நேரங்கள் தங்கள் பணியைச் செய்வார்களா? என்று சந்தேகமாக உள்ளது.

குறிப்பிட்ட பதவியில் உள்ளவர்கள் சங்க செயல்பாட்டின் அடிப்படையில் தாதாவாக உள்ளே இருக்கின்றார்கள். பெரிய அதிகாரிகள் கூட அவர்களை வேலை வாங்க முடியாது என்பது தான் உண்மை. ஒவ்வொரு துறையில் உள்ளவர்கள் சரியாக பணி புரியாவிட்டாலும் கூடச் சங்கத்தின் மூலம் தான் பேசிக் கொள்கின்றார்கள். நேரிடையாக திட்ட முடியாதாம். அப்புறம் அதுவே பெரிய பஞ்சாயத்தாக மாறிவிடுமாம்.

ரசாங்கத்தின் கொள்கை திட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளை, பணிபுரியும் ஊழியர்களின் தான்தோன்றித்தனம் என்று நான்கு புறமும் சூறாவளி போல இந்தத்துறையைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்தாலும் மக்கள் இந்தச் சேவையைத்தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருப்பது தான் இப்போது அரசாங்கத்திற்குச் சவாலாக உள்ளது.

வட இந்தியாவில் பல இடங்களில் தனியார் நிறுவனங்களின் சேவை இருக்காது. ஆனால் உத்தரகாண்ட் சென்ற போதும் அங்கிருந்து நண்பர் என்னை அழைத்துப் பேசி இருக்கின்றார்.

ப்போது ஒவ்வொருவர் வீட்டிலும் ஏழெட்டுச் சிம் கார்டு வைத்து இருக்கின்றார்கள். தனியார் அலைபேசி சேவை என்றாலும் ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்து உள்ளனர். சில உறவினர்களின் எண்கள் என்று குறைந்தது பத்து என்கிற அளவிற்கு அலைபேசியில் சேமித்து வைக்க வேண்டியதாக உள்ளது. புதிய எண்ணில் இருந்து அழைக்கும் போது நாம் எடுக்காவிட்டால் அது புதுப் பஞ்சாயத்தை உருவாக்கி விடுகின்றது. மக்களுக்குத் தேவை என்பதற்கும் ஆடம்பரம் என்பதற்கும் உண்டானதற்கும் வித்தியாசம் புரிபடுவதே இல்லை.


டிஜிட்டல் இண்டியா, கேஷ்லெஸ் இண்டியா விரும்பிய பிரதமருக்கு இவையெல்லாம் கண்களுக்குத் தெரியாதா? என்று நண்பரிடம் கேட்டேன்.

ஒரு கடிதம் வாயிலாக மோடிக்குத் தெரியப்படுத்துங்கள் என்கிறார்.

எந்த மொழியில் அவருக்கு எழுதுவது? எப்போது அவர் இந்தியாவில் இருப்பார்? என்பதே குழப்பமாக இருப்பதால் எழுதுவதைத் தள்ளிப் போட்டிருக்கின்றேன்.

Wednesday, July 25, 2018

நாட்டு நடப்பு - பணம் இருந்தால் பங்காளி - 14

கடந்து போன அரசியல் நிகழ்வுகளைச் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டும் திரிக்கவில்லை. நாமும் நம் விருப்பப்படியே தான் அதை அணுகின்றோம். இன்று சிலவற்றைப் படித்த போது இதை எழுதத் தோன்றியது. 

இதை எனக்குச் சொன்னtவர், கலைஞரின் கடந்த 40 வருடமாக அணுக்கத் தொண்டராகவும் இருப்பவரும், கலைஞருடன் தொடர்பில் இருந்தவரும், அவரைத் தவிர வேறு எவரும் எனக்குத் தலைவர் இல்லை என்று இன்று வரையிலும் இருக்கக்கூடிய என் நெருங்கிய நண்பர்.  

இன்று வரையிலும் பெரும்பாலான அனைவரும் ஊடகங்களில் பிராமணர்கள் தான் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் பிராமணர்கள் சம்மந்தப்பட்ட அரசியலில் உள்ளவர்களுக்கு அவர்களின் பார்வை ஒரு மாதிரியாகவும், பிராமணர் அல்லாதவர்களுக்கும் ஒரு மாதிரியாகவும் உள்ளது. இது தான் இங்கே முக்கியப் பிரச்சனை. 

ஏ1 குற்றவாளி என்று சட்டத்தின் முன்பு நிறுத்தி அவப்பெயருடன் மறைந்த ஜெயலலிதாவை இன்று வரையிலும் எந்த ஊடகமும் பெரிதாகக் கேள்வி கேட்கவில்லை. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.  ஆனால் கலைஞர் முதல் ஆ ராசா வரைக்கும் பிராமின் இல்லாத காரணம் என்பதால் வறுத்து எடுக்கின்றார்கள்.  

இது எந்த அளவுக்கு உண்மை?

இந்தக் கேள்வி எனக்குள்ளும் இருந்தது. இதற்கு அவர் பிறந்த பிராமணர் குலம் மட்டும் காரணமல்ல. கலைஞரின் காசு, பணம் சார்ந்த பார்வையும் ஒரு முக்கியக் காரணம். (இந்த இடத்தில் மற்றொரு செய்தி சந்தியா என்பவர் பிராமணர் தான். ஆனால் ஜெ வின் தாயார் நடிகை சந்தியா நடிகையாக மாறுவதுற்கு முன்பே அன்றைய அவர் வாழ்க்கையில் அவர் தொடர்பில் இருந்தவர்கள் பல பேர்கள். இதைப் பல பத்திரிக்கைகள் பலவித ஆதாரங்களுடன் எழுதி உள்ளார்கள்?) 

பெங்களூரில் நடந்த ஜெ வின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த வழக்கு இழுத்துக் கொண்டே சென்றது. ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் உள்ள அத்தனை பத்திரிக்கையாளர்களும் அங்கே கூடுவார்கள். வழக்கு விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். ஆனால் எதையும் பத்திரிக்கையில் எழுத மாட்டார்கள். ஒரே காரணம். பணம். மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான். 

ஜெ வின் மறைவிற்குப் பின்னே வெளியே அதிகம் தெரிந்த பெங்களூர் புகழேந்தி பொறுப்பில் இது சார்ந்த மொத்த நிர்வாகத்தையும் ஜெ கொடுத்து இருந்தார். வாய்தா முடிந்து ஒவ்வொரு தடவையும் வழக்கு வழக்காடு மன்றத்திற்கு வரும் போது அங்கே ஒரு மாவட்டச் செயலாளர் ஆஜர் ஆவார்.  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் அங்கே ஆஜர் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அன்றைய செலவு முழுக்க அல்லது அது எத்தனை நாட்கள் என்றாலும் அவர் தான் பொறுப்பு.  அடுத்த வாய்தா வரும் போது அடுத்தவர் வருவார்.

அதிமுகச் சார்பில் குறைந்தபட்சம் (வாதாடுபவர் ஒருவராக இருந்தாலும் எடுப்புத் தொடுப்பு என்று அங்கே இருப்பவர்கள் ஏராளம்) ஐம்பது வக்கீலாவது அங்கே இருப்பார்கள். இது தவிரத் தொண்டர் படையினர் தனி. இது போலத்தான் பத்திரிக்கையாளர் கூட்டமும். 

இந்தக் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் காலை, மதியம் சாப்பாடு முதல் ஊக்கப் பரிசு போல அவரவர்களுக்கு என்று தனித்தனியாக ஒரு குறிப்பிட்டத் தொகை வழங்கப்பட்டு வந்தது. 

இதில் பணம் வாங்காத இரண்டு பேர்கள் தமிழில் நக்கீரன் நிருபர். ஆங்கிலத்தில் தி ஹிந்து நிருபர். தொடக்கத்தில் தி ஹிந்து தமிழில் வரவில்லை. 

திமுகச் சார்பாக வழக்காடிக் கொண்டிருப்பவர்களுக்கு, அது சார்ந்த வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கட்சி சார்பாகச் சல்லி பைசா பேராது. திமுகக் கட்சியில் இருப்பவர்களே (தங்கள் சீனியரிடம்) பல முறை எத்திரணியைச் சுட்டிக் காட்டி கேட்டு உள்ளனர். சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாராம். 

தொடக்கம் முதல் திமுக வின் டிசைன் இப்படித்தான். அந்த கட்சி எப்போதும் ஒன் வே டிராபிக். உள்ளே போக முடியும். ஆனால் திரும்பி வெளியே வர முடியாது.  இருப்பதை இழந்து விட்டு தான் வர முடியும். ஆனால் சமூகநீதி, சம உரிமை போன்ற ஜல்லி போட்டு ரோடு பலமாக இருக்கும்.

ஜெ வை மற்றவர்கள் ஆதரிக்கப் பத்துக் காரணங்களில் ஒரு காரணம் பிராமணர் என்பது. ஆனால் மற்ற காரணங்கள் என்பது பணம் சார்ந்தது தான் என்று நண்பரே பல முறை என்னிடம் வருத்தமுடன் சொல்லியுள்ளார். 

இன்று ஊடகம் என்பது செய்தித்தாள்கள், வாரப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்று பிராமண ஆதிக்கம் அளவுக்குப் பிராமணர் அல்லாதவர் கைகளிலும் உள்ளது.

ஆனால் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. 

#பணம் இருந்தால் தான் பங்காளி.

Thursday, July 19, 2018

நாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே? - 13



நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். 

எமர்ஜென்சி என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னைப் போல அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கு முதல் முறையாக உள்ளே நுழைந்தவர்கள் முதல் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் வரைக்கும் இதன் ஆழமும் வீரியமும் புரிந்து இருக்காது. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி உருவாக்கிய நிகழ்வுகளைப் பற்றி ஒருவர் எழுதியிருக்கும் புத்தகம் இன்னமும் வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ளது. 

ஆனால் இதனை அனுப்பிய நண்பர் எனக்குச் சொல்ல விரும்பியது குன்ஹாவின் கதையை. அவர் சில விசயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். 

ஆனால் என் நெருக்கமான தொடர்பில் இருக்கும் என் மதிப்புக்குரிய நண்பர் ஏற்கனவே பெங்களூரில் நடந்த ஏ1 குற்றவாளியின் சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நடந்த போது பலவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  இந்தக் காட்சியைப் பார்த்த போது அவர் சொன்ன பல விசயங்கள் என் நினைவுக்கு வந்து போனது.

ஜெ. விற்கு ஏ1 குற்றவாளி என்ற மரியாதையைக் கொடுத்து நீ நினைப்பது போல என்னை உன்னால் விலைக்கு வாங்க முடியாது என்ற நிரூபித்த மைக்கேல் டி குன்ஹா குறித்து அவர் சொன்ன ஆச்சரியமான பல நிகழ்வுகள் இன்று வரையிலும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உள்ள பலருக்கும் தெரிந்த கதையாகவே உள்ளது.  

பத்திரிக்கைத்துறையில், எதிர்க்கட்சிகள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் தெரிந்த கதையாகவே உள்ளது. ஆனாலும் எவரும் எதையும் பொதுவெளியில் இன்று வரையிலும் பகிர்வதில்லை. ஒவ்வொன்றும் செவி வழிப் பேச்சாகக் கிசுகிசு ரீதியாகவே உள்ளது. 

நண்பர் சிரித்துக் கொண்டே சுவராசியமாகக் கதை போலத்தான் என்னிடம் சொன்னார். 

ஆனால் அவர் பேசிய அடுத்த இரண்டு நாட்கள் குன்ஹா வின் மனோதிடத்தைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்.  இவரைப் போன்ற ஒருவருடன் தான் அருகே நின்று புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளுணர்வு இன்று வரையிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

ஜெ. வின் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது அவருக்குப் பெரிய பாறாங்கல்லைத் தலையில் எப்போதும் வைத்திருக்கும் சுமை போலவே அழுத்திக் கொண்டேயிருந்தது. இந்த வழக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அது சார்ந்து ஒவ்வொரு இடத்திலும் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கள். தமிழ்நாடு, கர்நாடகா தொடங்கி டெல்லி வரைக்கும் சட்ட ரீதியாக, நிர்வாக ரீதியாக, லாபி ரீதியாக என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக ஆட்கள் இருந்தார்கள். 

இவர்களை ஒருங்கிணைக்க நிதி ஆதாரத்திற்கென்று தனி நபர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இது அரசியல் களத்தில் உள்ளவர்களுக்குக் குறிப்பாக ஊடக உலகத்தில் உள்ள முக்கிய அனைத்து நபர்களுக்கும் நன்றாகவே தெரியும். 

உன் விலை என்ன? என்று தான் தொடங்குவார்கள். உன் தேவை எங்கள் பொறுப்பு? என்று முடிப்பார்கள். 

இப்படித்தான் இந்த வழக்கு இழுத்துக் கொண்டே வந்தது.

மறைந்த ஏ1 குற்றவாளி ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, தமிழக அரசாங்க எந்திரத்தில் உள்ள எல்லாத்துறைகளுமே இந்த வழக்கு நல்ல விதமாக முடியவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

ஆனால் திமுக அடித்த மாஸ்டர் ஸ்ரோக் பால் என்பது தமிழகத்தில் இந்த வழக்கு நடக்கக்கூடாது என்று கர்நாடக மாநிலத்திற்கு நகர்த்தியது. ஆனால் அதைவிடச் சிக்ஸர் பால் என்பது மைக்கேல் டி குன்ஹா என்பவர் இந்த வழக்குக்காக நீதிபதியாக உள்ளே வந்தது. தன் வாழ்நாள் முழுக்க தனக்காகவே, தன் சுகத்துக்காகவே வாழ்ந்த ஏ1 குற்றவாளியின் உடல் நலம் இப்போது தான் எல்லையைத் தாண்டி விதியின் வளையத்திற்குள் செல்லத் துவங்கியது.

காரணம் கர்நாடகாவில் உள்ள பலரும் இந்த வழக்கு எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிய சூழலில் குன்ஹா விடம் கேட்கப்பட்டது. அவர் இயல்பாகவே இந்த வழக்கை எடுத்துக் கொண்டு களம்புகத் தொடங்கினார். 

வீம்பு, ஆணவம், அகம்பாவம், உச்சகட்ட அயோக்கியத்தனத்திற்கு அஞ்சாத குணம் என்று பெயர் பெற்றிருந்த ஜெ. வின் பார்வை குன்ஹா வின் மேல் பட்டது. 

அதுவரையிலும் ஒவ்வொருவரையும் விலைக்கு வாங்கியே பழக்கப்பட்ட ஜெ. வுக்குக் குன்ஹா என்பவர் அதற்கு அப்பாற்பட்டவர் என்பதனை முதலில் உணரக்கூடத் தயாராக இல்லை. எப்போதும் போலக் களம் இறக்கப்பட்டவர்கள் முதலில் கர்நாடக அரசின் உயர் மட்ட பதவிகளில் இருந்தவர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நடக்கவில்லை. அதன் பிறகு அங்கிருக்கும் காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் சில நகர்வுகள் நடத்தப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது. 

பிறகு நீதிமன்றத்தில் பணியில் இருந்த ஓய்வு பெற்று இருந்த பலரின் மூலம் குன்ஹா வை வட்டத்திற்குள் கொண்டு வர முடியுமா? என்று முயற்சிக்கப்பட்டது. 

இந்த இடத்தில் ஒரு சுவராசியம் என்னவென்றால் குன்ஹா தான் தங்கியிருந்த வீட்டை சில முறை மாற்றியுள்ளார். வெவ்வேறு இடத்தில் தங்கியுள்ளார். ஆனால் காலை நடைபயிற்சிக்குச் செல்லும் போது சொல்லிவைத்தாற் போல நீதித்துறையில் உள்ள சில கணவான்கள், அதிகாரிகள், உயர்பதவியில் உள்ளவர்கள் திடீரென்று அங்கே தோன்றுவார்கள். அவருடன் நடைபயிற்சியைத் தொடங்குவார்கள். குன்ஹா ஆச்சரியமாகப் பார்த்து விட்டு எப்போதும் போல இயல்பாக உரையாடுவார். அவர்கள் வலை வீசுவார்கள். பாதி நிலையிலே நடைபயிற்சியை முடித்து விட்டு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பி விடுவாராம். 

தொடர்ந்து செல்லும் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் வெறுத்து விடுவார்கள். 

காரணம் அதுவரையிலும் பல்வேறு காரணங்கள் சொல்லி இழுத்துக் கொண்டே வந்த இந்த வழக்குக் குன்ஹா கையாளத் தொடங்கியதும் சூடு பிடித்து விரைவாக நகரத் தொடங்கியதும் முக்கியக் காரணமாக இருந்தது. 

இந்த வழக்குக்கு முக்கியச் சாட்சியாக இருந்த ஜெ. பயன்படுத்திய பொருட்கள் அப்போது சென்னையில் ஒரு இடத்தில் அரசு பாதுகாப்பில் இருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் அவையெல்லாம் முக்கியச் சாட்சிப் பொருட்கள். பெங்களூர் கொண்டு வருவதற்கு ஆணையிட்டும் அது நகர்ந்து வந்தபாடில்லை. 

இறுதியாக இந்த நாளைக்குள் அவையெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்தாக வேண்டும் என்று சொன்ன குன்ஹா எவரிடமும் சொல்லாமல் சென்னைக்கு வந்துள்ளார். இங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சி. அங்கேயே அவருடைய பணியும் தொடங்கியுள்ளது. 

குன்ஹா கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். ஆழ்ந்த இறைபக்தி கொண்டவர். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே சர்ச் இருந்தால் கட்டாயம் அங்கே குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடுவார். சென்னைக்கு வந்த போது சாந்தோம் தேவாலயத்திற்குச் சென்று உள்ளார். அந்தத் தேவாலய ஃபாதர் இவருக்காகக் காத்திருந்தவர் போல இவரை வரவேற்று உபசரித்துள்ளார். இவர் என்னை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டுள்ளார்.

மேடம் கேஸ் நீங்க தானே பார்க்குறீங்க? தெரியாமல் இருக்குமா? என்று சொல்லி விட்டு நீங்க போகும் போது என் அறைக்கு வந்து விட்டுப் போங்க என்று அன்போடு பேசியுள்ளார். 

ஆனால் சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து ஃபாதர் அழைப்பைப் புறக்கணித்து நகர்ந்து சென்று விட்டார். தான் வந்த வேலையை முடித்து விட்டு பெங்களூர் சென்று விட்டார். காரணம் இவரின் ஒவ்வொரு அசைவும் தமிழக உளவுத்துறையினர் கண்காணிக்கப்பட்டு இவரை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். குன்ஹா எந்த இடத்திற்குச் செல்கின்றாரோ அந்த இடத்தில் இருப்பவர்களை வைத்து வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். 

இவர் தினசரி அலுவலக வேலையின் பொருட்டு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு வந்து திரும்பும் போது பல வித இடைஞ்சல்கள், அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள் நடந்து கொண்டேயிருக்கத் தான் வருகின்ற வழியை, செல்கின்ற வழியை மாற்றிக் கொண்டேயிருந்துள்ளார். 

இவருக்கு இரண்டு மகள்கள். தீர்ப்புக்குப் பின்னால் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனது. ஒரு பெண் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றார். 

இவர் நீதிமன்ற பணி முடிந்து வீட்டுக்கு மாலை திரும்பி வரும் போது இவரின் ஒரு மகள் வெவ்வேறு இடங்களில் இருந்து இவரை அழைத்துச் செல்வது வரைக்கும் எவரையும் நம்பாமல் தனி நபராகவே தன் பிரச்சனைகளைச் சமாளித்துள்ளார். 

உச்ச நீதிமன்றம் முதல் உள்ளுர் பிரமுகர்கள் வரைக்கும் இவருக்குக் கொடுத்த அழுத்தங்கள், மிரட்டல்கள் தாண்டி தன் தீர்ப்பை வழங்கிய இவரின் மனோதிடத்தை ஒவ்வொரு நாளும் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு. 

ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் நான் பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்புச் சொல்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் என் தோல் தடிமனானது என்ற பொன்னான வாசகத்தை உதிர்த்தார். ஊடகங்களைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பரிட்சயமாக இருந்து இருக்கும். 

அப்போதே சமூக வலைதளங்களில் வந்த செய்தி 600 கோடி என்றார்கள். 

குன்ஹா விற்கு எந்த அளவுக்கு விலை பேசப்பட்டு இருக்கும்? என்பதனை நினைத்துப் பார்க்கத் தோன்றியது. 

தீர்ப்பு வந்த நாள் முதல் அவரைப் பற்றித் தேடித் தேடி படித்த செய்திகளின் வாயிலாக அவர் வணங்கும் கர்த்தர் மேல் எனக்கு அளவு கடந்த மரியாதை உருவானது. 

கிறிஸ்துவம் சொல்லும் சத்தியமும் ஜீவனும் நானே என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்து போனது. 



Tuesday, July 17, 2018

நாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12


சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நிறுவனங்களில் இருக்கும் உள் அரசியல் குளறுபடிகளைக் கண்டு மனம் சோர்ந்து போகும் சமயங்களில் இவரையும் பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு.

திரைப்படங்களில் மட்டுமே சாத்தியப்படும் பல விசயங்களை இவர் செய்து காட்டியிருப்பதற்குப் பின்னால் இவர் எதையெல்லாம் இழந்திருக்க வேண்டும்? என்பதனை பல முறை யோசித்ததுண்டு. இவரின் சொந்த விசயங்களைப் பற்றி இணையத்தில் பகிர்ந்ததும் இல்லை. ஆனால் இவரின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பின் வாயிலாகக் காவல்துறை, நீதிமன்றம் என்ற இரண்டு துறைகளைப் பற்றி அதன் இருட்டுப் பக்கங்களைப் பற்றிப் புத்தகமாக எழுதியுள்ளதை வாசித்து முடித்த போது மனதில் உருவான தாக்கம் மறைய அடுத்த இரண்டு நாள் ஆனது.

அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி தேவைப்படாது. அரசு எந்திரத்திற்கு ஆன்மா என்பது தேவையில்லை. அதிகாரிகளுக்குக் கட்டளையை நிறைவேற்றுதல். தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுதல். உருவாகும், உருவாக்கும் வாய்ப்புகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளுதல் என்பது தான் இங்கே காலம் காலமாக நடந்து கொண்டு வரும் நிகழ்வு. இதற்கு நாம் அழைக்கும் பெயர் ஜனநாயகம். இதனைத்தான் இங்கே மக்களாட்சி என்கிறோம்.

இந்தக் கட்டமைப்புக்குள் சாதாரணக் கீழ்மட்ட அரசு ஊழியராகப் பணிபுரியும் ஒருவர் நாம் இவற்றைச் சகித்துக் கொள்ளக்கூடாது, நடந்து கொண்டிருக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தன்னால் ஆன முயற்சிகளை மறைமுகமாகச் செய்யும் போது உருவான தலைகீழ் மாற்றங்கள் தான் இன்று இவரை எழுத்தாளர் ஆக மாற்றியுள்ளது. இணையத்தில் நண்பர்கள் அளவுக்கு எதிரிகளையும் உருவாக்கியுள்ளது. பெயரைச் சொன்னாலே பலருக்கும் அலறும் அளவுக்கு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் காவல் நிலையம் வரைக்கும் செல்ல வேண்டியிருந்தாலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தவிர்க்கவே பார்ப்பார்கள். காரணம் அதன் அமைப்பு அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து அங்கு அவர் எதிர்கொள்ளும் கேள்விகளும், கேலிகளும் தாண்டி முதல் தகவல் அறிக்கை பெற்று விட்டால் கூட அதுவே மிகப் பெரிய சாதனை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அலையும் அலைச்சலில் கிடைக்கும் அனுபவங்கள் அடுத்தவர்கள் அங்கே போகாமல் இருக்க வைக்கின்றது.

ஆனால் நீதிமன்றம் இதனை விட வித்தியாசமானது. உள்ளே என்ன நடக்கின்றது? என்பதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அமைப்பு வேறொரு தளத்தில் இயங்குகின்றது. இன்று வரையிலும் இது தான் சரி என்று பிரிட்டிஷார் உருவாக்கிய இத்துப் போன நடைமுறைகளைக் கட்டி காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. காரணம் வெளிப்படையாக, எளிதில் அணுகக்கூடியதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்பட்சத்தில் அரசாங்கத்தின் கோர முகம் மக்களுக்கு எளிதில் தெரிந்து விடும் அல்லவா? மக்கள் பேசும் மொழியும் அலுவல் மொழியும் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எவரும் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாது. அதற்காக முயற்சிக்கவும் மாட்டார்கள். அப்படியே முயற்சித்தாலும் காலம் கடந்து போயிருக்கும்.

இப்படித்தான் இங்கே சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகின்றது. காலம் முழுக்க கையேந்தி வைத்துக் கொண்டிருப்பதே அரசாங்கத்தின் வெற்றியாகவும், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்வதே மக்களின் வெற்றியாகவும் இங்கே உள்ளது.

அதனைத் தான் இந்தப் புத்தகம் உயிருடன் இன்னமும் வாழும் பல அதிகாரிகளின் உண்மை முகம் வழியாக நமக்குப் புரியவைக்கின்றது. 

இரண்டு துறைகளிலும் நல்லவர்கள் விரல்விட்டு எண்ணிச் சொல்லும் அளவிற்கு இருப்பதால் மட்டுமே சங்கர் இந்தப் புத்தகம் எழுதும் அளவிற்கு உயிரோடு இருக்க முடிந்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

எழுத்தாளர் என்பவர்கள் எழுதி எழுதிப் பழகியவர்களுக்கு மட்டுமே அதன் சுவராசிய சூட்சமம் கைகூடும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இந்தப் புத்தகத்தை நள்ளிரவு தாண்டியும் வாசித்துக் கொண்டே இருக்கும் அளவிற்கு மனதில் பதட்டத்தை உருவாக்கியதோடு தொடர்ந்து படபடப்பையும் வாசிப்பவனுக்கு உருவாக்கியதில் முழுமையாகச் சங்கர் வெற்றியடைந்துள்ளார்.

இதில் வாசித்துக் கொண்டே வந்த போது மிகவும் ரசித்த விசயம் ஒன்று இதில் உள்ளது.

இப்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள டிடிவி தினகரன் மனைவி அனுராதா வீட்டுக்குச் சோதனை போடச் சென்ற போது அவர் கண்ணாடியில் பொட்டு வைத்துக் கொண்டு இயல்பான நின்றதும் இவர்களைக் கண்டதும் சோகமாகத் தன்னை மாற்றிக் கொண்டு அப்பாவியாக நிற்பதும் போன்ற காட்சிகள் வாசிக்கும் போதே அந்த நிகழ்வை யோசித்துப் பார்த்துச் சிரிக்கத் தோன்றுகின்றது.

அதே போல மன்னார்குடி குடும்பம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் தஞ்சாவூர் வீடு எங்கே உள்ளது என்பதனை அறிய அலைந்த சம்பவங்களையெல்லாம் வாசிக்கும் எந்தக் காலமாக இருந்தாலும் காத்திருந்து சங்கறுக்கும் கலையைக் கற்ற அந்தச் சமூகத்தின் செயல்பாடுகள் பெரிதாக ஆச்சரியமளிக்கவில்லை.

இவர்களையும் ஏ1 குற்றவாளி கட்டி மேய்த்துள்ளார் என்பதனைத்தான் ஆச்சரியமாகச் சொல்லத் தோன்றுகின்றது.

சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியை அளிக்கலாம். பலருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்து எப்படி இன்னமும் இவர் உயிருடன் இருக்கிறார்? என்றே விபரம் தெரிந்தவர்களுக்கு உடனடியாக மனதில் தோன்றும் அளவிற்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் கிலியடிக்க வைக்கின்றது.

மிக அழகாக, நேர்த்தியாக, தரமாக, பொருந்தக்கூடிய விலையில் தந்துள்ள கிழக்குப் பதிப்பகம் Badri Seshadri அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்தப் புத்தகத்தை நிச்சயம் சட்டக்கல்லூரி மாணவர்களும், காவல் துறையில் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் உள்ளேயிருக்கும் ஆன்மா அழுகிப் போய்விடக்கூடாது என்ற சங்கல்பத்தை இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அவர்களுக்கு ஏதொவொரு வகையில் உணர்த்தியே தீரும். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே இந்த இரண்டு துறைகளின் மேல் பொது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. அதனையும் சங்கர் அங்கங்கே குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் நான் முக்கியமாக அறிந்து கொண்ட ஒன்று கலைஞர் குறித்த அவர் ஆளுமை பற்றிய புரிதல்.

ஆட்சியில் இல்லாத போது போராடிக் கொண்டிருந்ததைப் போல ஆட்சியில் இருந்தாலும் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே தான் இருந்துள்ளார். அதன் மூலம் உருவான பல அனர்த்தங்களைச் சங்கர் சில இடங்களில் மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவரின் வலைதள வீச்சின் காரம் இதில் குறைவு. ஆனால் வாசிப்பவனை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடாமல் கெட்டியாகப் பிடித்து அடுத்தடுத்து நகர வைக்கும் சூட்ச எழுத்தாள திறமையை அனாயாசமாகக் கைப்பற்றி வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் குறை என்று பார்த்தால் குறிப்பிட்ட இடங்களில் ஜம்ப் ஆகி அதனைப் பற்றி முழுமையாக விவரிக்காமல் சென்று விடுவது இயல்பாகப் பல இடங்களில் உள்ளது. ஒரு வேளை சங்கர் Shankar Aஇதன் தொடர்ச்சியாக அடுத்தப் புத்தகம் எழுதினால் இன்னமு😋ம் தைரியமாகப் பல விசயங்களைச் சுட்டிக் காட்டுவார் என்று நம்புகிறேன். 😁

Sunday, July 15, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11

பாலகுமாரனுக்கு அஞ்சலி என்ற நோக்கில் எழுதியவர்களை எழுதிக் கொண்டிருப்பவர்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அப்போது ஞாநி அவர்களுக்குப் பலரும் எழுதிய அஞ்சலிக்கடிதங்களையும் (மின்னூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்) ஒப்பிட்டுப் பார்த்தேன். 

பாலகுமாரனின் கதைகளைப் படித்தவர்கள் நெக்குறுகி அதன் கதாபாத்திரம் கொடுத்த பாதிப்பில் இன்றும் எங்களால் வெளி வரமுடிவில்லை, இத்யாதி, இத்யாதி என்று என்ற அவர் உருவாக்கிய வட்டத்திற்குள், அவர் நினைத்த மாதிரியே அவரை விட்டு வெளியே வரமுடியாதவர்கள் எழுதிய வார்த்தைகளில் எவ்வித முதிர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. ஞாநிக்கு அஞ்சலி செலுத்தாத குறிப்பிட்ட சிலர் பாலகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். 

பார்ப்பனியத்தின் இருவேறு கூறுகள் பாலகுமாரனும், ஞாநியும். ஞாநியுடன் நெருக்கமான பழக்கம் என்பதால் மட்டும் அவர் யாரையும் அங்கீகரிப்பதில்லை. எது சரியோ? என்பதில் கடைசி வரைக்கும் தன்னளவில் நேர்மையாக இருந்தார். காசுக்காக கடைசி வரைக்கும் சோரம் போகவில்லை. 

வெற்றி பெற்ற கலைஞர்கள் வெற்றி பெற்ற வியாபாரிகளாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. இருந்தால் அதுவொரு மிகப் பெரிய ஆச்சரியம். அப்படிப்பட்ட மூவர் கலைஞர், வைரமுத்து, பாலகுமாரன். காசு விசயத்தில் படு கறார்.

மூவருமே தத்தமது துறையில் உச்சத்தை தொட்டவர்கள். இதில் வைரமுத்து ஒருவரால் மட்டுமே தனது குடும்ப வாழ்க்கையைச் சரியாக வாழமுடியாவிட்டாலும் இன்று வரையிலும் அது பொதுவெளியில் விவாத பொருளாக மாறாமல் வைத்திருப்பதில் தான் அவரின் தனித்திறமை உள்ளது. பாலகுமாரன் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு உருவங்களாக வாழ்ந்தவர். ஆனால் ஒவ்வொரு நிலையையும் மற்றோடு மோதிக் கொள்ளாத அளவுக்குச் சரியாக கடைபிடித்தவர். சாதியை அதிக அளவு நேசித்தவர். அவர் விரும்பியவர்களுக்கே முன்னுரிமையையும் கொடுத்தவர். இது அவரைச் சென்று பார்த்தவர்களுக்கும், உரையாடல்களில் உணர்ந்து கொள்ள முடியும். 

பத்து நிமிட உரையாடலில் மூன்று முறை சண்டை வந்து விடும். அவர் காலம் முழுக்க தியானப் பயிற்சியை போதித்தவர். அவர் போதித்த எதையும் கடைசி வரையிலும் அவர் கற்றுக் கொள்ளாமல் கற்றுக் கொடுப்பவராக மட்டுமே வாழ்ந்து மறைந்துள்ளார். 

ஆனால் ஞாநிக்கு அஞ்சலிக்கடிதங்கள் எழுதியவர்களின் பெரும்பான்மையினர் நான் என்ன நினைத்து இருந்தேனோ, எவ்வாறு எனக்கு ஞாநி பாதிப்பை உருவாக்கியிருந்தாரோ அதைப் போலவே அவர்களை அவர் பாதித்து இருந்தார் என்பதனை உணர முடிந்தது. அந்த உணர்வில் சமூகத்தின் மொத்த பார்வையும் கலந்து இருந்தது. மானே தேனே பொன்மானே என்ற வார்த்தைகள் இல்லை. 

ஒருவர் எழுதியிருந்த வரிகள் மிகப் பொருத்தமான எந்நாளும் நினைவு கூறத் தக்கத்து. ஞாநி ஒரு தலைமுறையின் மனசாட்சி. இது போன்ற வார்த்தைகள் பாலகுமாரனுக்கு எவரும் எழுதியதாக நான் எங்கும் படிக்கவில்லை. ஆனால் இந்த வார்த்தைகள் வேறு விதமாக வந்தது. 80 களில் வாழ்ந்த இளைஞர்களை தன் கதாபாத்திரங்களால் பாதித்தவர் என்று. நானும் அப்படி பாதிக்கப்பட்டவன் தான். 

இதிலிருந்து மீண்டு வரவே எனக்கு பத்தாண்டுகள் ஆனது. அதன் பிறகே எழுத்தின் விசாலமும், கோழை மனதிலிருந்து வெளியே வரவும் முடிந்தது. இவர் உருவாக்கிய ஆணுக்குள் பெண் தன்மை என்ற நிலை தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியைக் கொடுத்தாலும் தொழில் வாழ்க்கையில் அது படுதோல்வியைத்தான் அடையாளம் காட்டியது. 

இன்னமும் இப்படியே தான் வாழமுடிகின்றது. 

இறந்தவரைப் பற்றி எழுதுவது நாகரிகமாக இருக்காது. ஏன் எனக்குப் பாலகுமாரனின் கடைசிக் கட்ட வாழ்க்கை உச்ச கட்ட எரிச்சலை ஏற்படுத்தியது என்பதனை எழுத வேண்டாம் என்று நினைத்து கடந்து வந்தாலும் எழுத்தாளர் பா.ராகவன் நான் என்ன நினைத்து இருந்தேனோ அதனை அப்படியே எழுதியிருந்தார். கொஞ்சம் ஆச்சரியமாக அதிர்ச்சியாகவும் இருந்தது. தன் புகைப்படத்தைச் சாமியாக மாற்றி வணங்க வைத்த சித்தர் மறைந்து விட்டார். 

பாலகுமாரன் முகநூலில் இருக்கின்றார் என்று அறிந்த நாளில் 
அவரைத் தொடரும் மகிழ்ச்சியில் இருந்த நான் அங்கு அவர் செய்து கொண்டிருக்கும் காரியங்களைப் பார்த்த போது வயதாகும் போது எப்படியெல்லாம் மனிதன் மாறுவான் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. அசூயையாகவும் இருந்தது. 

90 மற்றும் 95 களில் அடிக்கடி திருவண்ணாமலை சென்று வரும் பழக்கம் இருந்தது. அப்போது இப்போது வளர்ந்த நிலையில் உள்ள யோகி ராம் சுரத் குமார் என்ற கதாபாத்திரத்தை சித்தர் எடுத்து பலரையும் உள்ளே நுழைத்து உருவான உருவாக்கப்பட்ட வளர்ச்சி ஒன்றே இவரின் தனித்திறமைக்கு ஆதாரம். பணம் அதிகமாக புழங்கும் இடங்களில் ஆன்மீகம் அறவே இருக்காது என்பதற்கு இதுவே முக்கிய உதாரணம். 

இதன் மூலம் பலர் வாழ்ந்தனர். வளர்ந்து விட்டனர்.

பாலகுமாரன் கடைசி காலத்தில் லேகியம் விற்கும் விளம்பரங்களில் மட்டும் தான் வரவில்லை. அதிர்ஷ்ட கல் முதல் இன்னமும் பல விளம்பரங்களில் யோசிக்காமல் தன் வருமானத்திற்காக நடித்தவர்.  கலைஞனுக்கு நடிப்பு என்பது வேறா?

இனி குறிப்பிட்ட அந்தப் பெண்மணி கூட்டம் இவரைச் சாமியாக மாற்றுவார்கள். இவரும் அதைத்தான் விரும்பினார். 

பாலகுமாரனின் எழுத்தை மட்டும் நேசித்தவர்களின் உலகமது தனி.



Thursday, July 12, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 10

நான் +2 படித்துக் கொண்டிருந்த போது இரண்டு நல்ல காரியங்கள் நடந்தது. 

ஒன்று. அறிவியல் வகுப்பு சார்பாக இராமேஸ்வரம் கூட்டிக் கொண்டு சென்றிருந்தார்கள். அப்போது இப்போதுள்ள பாலத்தின் தூண்களாக உள்ள கீழ்ப்பகுதி பீம் ஒவ்வொன்றாகக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். அது கட்டும் விதம் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் குழு கடல் பகுதியில் கிடைக்கும் மீன்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இந்தச் சுற்றுலா பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. 

ஆனால் வருட இறுதியில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மாங்குரூவ் காடுகள், சதுப்பு நிலம், உள்ளே தோணியில் போனது என்று இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக உள்ளது. ஆனால் இவற்றை விட அங்கு உள்ள ஒரு ஆராய்ச்சிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தாவரவியல் ஆசிரியர் கண்ணன் தான் அங்கே நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். பல அறைகள் இருந்தது. ஒருவர் மைக்ரோஸ்கோப் மூலம் எதையோ பார்த்து குறிப்பெழுதிக் கொண்டிருந்தார். அவர் பி.ஹெச்டி மாணவர். அப்படியொரு படிப்பு உள்ளது என்பதே அங்கே தான் தெரிந்தது. 

அங்குள்ள சூழல் எனக்கு நிறையவே பிடித்து இருந்தது. அவருடன் பேசினேன். அவர் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் பற்றிச் சொன்னார். அப்போது வாய்த்துடுக்கு, வேகம் மிக மிக அதிகம். நான் பேசிய விதம் அவருக்குப் பிடித்துப் போகப் பல விசயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தை தான் மரபணு. 

மனதில் அப்போது பதிந்த இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் கல்லூரியில் நுழைந்த போது தான் முழுமையாகப் புரிந்தது. நான் படித்த தாவரவியல் பாடங்களில் இதுவொரு தனிப்பாடமாக இருந்தது. என்னுடன் படித்து மற்றவர்கள் நோட்ஸ் மூலம் தமிழில் மனப்பாடம் செய்து பரிட்சை எழுதிக் கொண்டிருந்தனர். நான் கல்லூரியில் இருந்த நூலகங்களில் இருந்து பல புத்தகங்கள் எடுத்து பலவற்றையும் குறிப்பெழுதி மூன்று வருடமும் ஆங்கிலத்தில் தான் பரிட்சை எழுதினேன். 

ஜெனிடிக்ஸ் என்ற பாடம் நிறையவே பிடித்து இருந்தது. மேற்படிப்பு இதில் தான் படிக்க வேண்டும் என்பது அப்போது அது கனவாக இருந்தது. சூழ்நிலையில், சுற்றுச்சூழல், சமன் கெடுதல், ஆலைக்கழிவுகள் உருவாக்கும் தாக்கம் என்று நான் படித்த விசயங்கள் எதுவும் சமூக வாழ்க்கையில் உதவவில்லை. ஆனால் வட்டியிலும் முதலுமாக எழுதத் தொடங்கிய போது உதவியது. 

கல்லூரி முடித்துச் சில நாட்களில் நண்பன் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டான். டைப்ரைட்டிங் தெரிந்த காரணத்தால் எம்.டி க்கு உதவியாளர் மாதிரியான வேலை. அத்துடன் உள்ளே நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்து அவருக்குச் சொல்ல வேண்டும். மொத்தமே 13 நாட்கள் தான் அங்கே இருந்தேன். ஆட்டுத் தோல், மாட்டுத் தோல் உள்ளே உரிக்கப்பட்டு வருவது முதல் அது படிப்படியாக எப்படி மாற்றப்படுகின்றது என்பதனை டேனரியில் நடந்த ஒவ்வொன்றும் இப்போது நினைத்தாலும் உடம்பு முழுக்க ஒரு நாற்றம் உருவாகும் அளவிற்கு உள்ளது.

முதல் முதலாகச் சூழல் எப்படி மாசுபடுகின்றது என்பதன் அரிச்சுவடி அங்கே தான் தெரிந்து கொள்ள முடிந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊருக்கு வந்து விட்டேன். 

மீண்டும் சென்னை பயணம். இதே நிறுவனத்தின் தலைமை அலுவலகம். அங்கே இரண்டு விதமாக இரண்டு இடங்களில் காரியங்கள் நடந்து கொண்டிருந்தது. மணிபர்ஸ், பைக்பேக் தயாரிப்பது மற்றும் செப்பனிப்பட்ட தோல் ஏற்றுமதி. இங்கும் அலுவலக வேலை. இங்கே பணிபுரிந்தவர்களின் உடல்நலம் குறித்துப் பல்வேறு புலம்பல்களைப் பார்த்துக் கொண்டே வந்த போல இன்னும் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. சூழல் ஒத்துழைக்காத காரணத்தால் ஊருக்கு வந்து முதல் முறையாகத் திருப்பூர் பயணம் வந்த போது தான் மொத்த சூழலின் சீர்கேடும் அது சார்ந்த விசயங்களும் பல்கலைக்கழகப் பாடங்கள் போல இங்கே புரியத் தொடங்கியது. 

இதனைப் பற்றிப் பதிவுகளில் பல இடங்களில் படிப்படியாகப் பதிவும் செய்துள்ளேன்.

இன்று திருப்பூர் ஒப்பீட்டளவில் எவ்வளவோ மாறியுள்ளது. மனிதர்களை வேலை வாங்கும் விதம் முதல் பயன்படுத்தும் நவீன எந்திரங்கள் வரைக்கும் அனைத்தையும் கடந்து வந்த போதிலும் எனக்குள் பிச்சாவரத்தில் உருவான விதை நான் எழுதத் தொடங்கிய போது தான் விஸ்வரூபம் எடுத்தது. நான் அறியாத எனக்குள் இருந்த திறமைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியது. 

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்ற விதைகளில் ஜாம்பவானாக இருக்கும் மான்சாட்ட நிறுவனம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் எப்படிச் செல்கின்றது? எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றது? எப்படி அதிகாரவர்க்கத்தை விலைக்கு வாங்குகின்றது? என்பதனையெல்லாம் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தங்களை வைத்து எழுதத் தொடங்கினேன். 

அப்போது காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் இருந்தது. பாராளுமன்றத்தில் இதுவே தினமும் ரகளையை உருவாக்கிக் கொண்டிருந்தது. மன்மோகன் அமெரிக்காவை தனது தாய்வீடாக கருதியிருந்தார்.

சூழலியல் சார்ந்த சிறு, குறு புத்தகங்கள் எங்கே கிடைத்தாலும் வாங்கி வந்துவிடுவதுண்டு. கடைசியில் மாண்சாட்ட நிறுவனம் தான் வென்றது. இன்று காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் அவர்களை மீறி இங்கே ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு இங்கே ஆதரவாளர்களும் இருக்கின்றார்கள். 

இது வரையிலும் அனுபவப்பதிவு எழுதினாலும் அதில் நான் கடந்து வந்த பாதையில் உள்ள சூழல் குறித்து நூறு பதிவுகளாவது எழுதியிருப்பேன். இப்போது சில நாட்களாகப் பூவுலகின் நண்பர்கள் குழுவில் உள்ள பொறியாளர் சுந்தர்ராஜன் காணொளிக் காட்சியை (பழைய பேச்சுகள்) தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்த  போது பல ஞாபகங்கள் வந்தது. 

கடந்த என் முப்பது ஆண்டுக் கால அனுபவத்தில் நான் பார்த்தவரைக்கும் மிக மிக மோசமான தொழிற்சாலை என்றால் அது டேனரி மற்றும் அது சார்ந்த தோல் தொழிற்சாலைகள் தான் என்பேன்.

திண்டுக்கல், பேகம்பூரில் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள அடித்தட்டு மனிதர்களின் கால்களை, கைகளைப் பார்த்தால் நமக்கே அடுத்த நேரம் சாப்பாடு இறங்காது. ஆனால் இன்று வரையிலும் ஆம்பூர் மற்றும் அது சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்தத் தோல் தொழிற்சாலை தான் வாழ்க்கை தந்து கொண்டிருக்கின்றது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது குறித்து எங்கேயும் பேசி நான் கேட்டதே இல்லை. 

அடுத்து ஈரோடு. ஆம்பூர் அளவுக்குத் தோல் தொழிற்சாலை இல்லாவிட்டாலும் இங்கேயும் உண்டு. 

சாயத் தொழிற்சாலையின் கழிவுகள் மண்ணின் தன்மையைக் கெட்டுப் போக வைத்து மலடாக மாற்றி எதற்கும் பலன் இல்லாமல் ஆக்குகின்றது. இதன் தீங்கு படிப்படியாகத்தான் மனிதர்களிடம் நகர்ந்து வருகின்றது. ஆனால் தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தும் ஆசிட் சமாச்சாரங்கள் முதல் மற்ற வேதிப் பொருட்கள் அனைத்தும் நாசகார சமாச்சாரங்கள். இதனைத் தொழிற்சாலைக்காக வாங்கிய போது அதன் மூலக்கூறு சார்ந்த பலவற்றையும் அறிந்தவன் என்ற முறையில் இப்போது அதனைப் பற்றி யோசித்துப் பார்க்க முடிகின்றது. பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளர்களின் உடம்பின் பாதிப்பையும் சில மாதங்களிலேயே கண்டு கொள்ள முடியும். 

நாலைந்து ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் சூழலியல் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் கவனித்து வருகின்றேன். தொடக்கத்தில் இவர்கள் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் இருந்தது. கமலஹாசன் எண்ணூர் சென்றபிறகு நித்தியானந்தம் ஜெயராமன் வெளி உலகத்திற்குத் தெரிய வருகின்றார். அந்தப் பகுதி முழுக்க ஆபத்தின் விளிம்பில் உள்ளதை இன்னமும் எவரும் புரிந்து கொள்ளக்கூடத் தயாராக இல்லை. 

பூவுலகின் நண்பர்கள் குழுவினர், அணுவுலை எதிர்ப்பு பேரவை சார்பாகச் சுப. உதயகுமாரன், இப்போது நடந்து கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள பலர் முக்கியமாக ஃபாத்திமா என்று பலரையும் அவர்களின் அரசியலை, அவர்களின் பார்வையை ஒவ்வொன்றாகக் கவனித்தவன் என்ற முறையில் ஆதங்கம் தான் மிஞ்சுகின்றது. கவனிக்கத் தக்க வகையில் நல்லதும் உள்ளது. அதே சமயத்தில் குறிப்பிட்ட சிலருக்குப் பின்னால் உள்ள நிறுவனங்கள் சார்ந்த அரசியலும் உள்ளது. இதற்குள் மதம், சாதியும் வந்து நுழைந்து விடுகின்றது. கடைசியில் அதுவொரு அரசியலாகவும் மாறிவிடுகின்றது. நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க வருகின்றவர்கள். தேசத்துரோகி என்ற பட்டமும் வந்து சேர்ந்து விடுகின்றது. 

உணவு அரசியல், நீர் அரசியல், மருந்து அரசியல் இந்த மூன்றுக்குப் பின்னால் இருப்பது அனைத்தும் சர்வதேச நிறுவனங்கள். நாம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உலகம் முழுக்க எப்படி ஆயுத லாபி இவ்வுலகை ஆட்சி செய்கின்றார்களோ? அதைவிட இவர்களின் ஆதிக்கம் அதிகம். இவர்களை வென்றவர்கள் மிக மிகக் குறைவு. 

ஒரு பக்கம் நலத்திட்டம் என்று மில்லியன் கணக்கான டாலர்களை ஒரு பக்கம் கொடுத்துக் கொண்டே மறுபக்கம் ட்ரில்லியன் டாலர் வருமானம் பார்க்கும் உலகளாவிய பொருளாதார வியாபார யுக்திகளை வகுப்பவர்கள். உலகப் பணக்காரர் பில்கேட்ஸ் தன் மனைவி பெயரில் நடத்திக் கொண்டிருக்கும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையில் உள்ள நிதி எதன் மூலம் வருகின்றது? அந்த நிதி எப்படி பெருக்கப்படுகின்றது? எங்கே அதனை முதலீடு செய்துள்ளார்கள் என்பதனை வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். அட வெண்ணெய்களா? என்று சொல்லத் தோன்றும். 

மருத்துவர் கு சிவராமன் பேசிய காணொளிக் காட்சிகள், அவரின் புத்தகங்கள் சில வற்றை உங்களால் வாசிக்க முடிந்தால் பேசாமல் பட்டினியாக இருந்து விடுவோமா? என்று இருக்கத் தோன்றும். எதை விடுவது? எதை எடுப்பது? என்ற குழப்பமே மிஞ்சும். 

புரோட்டா குறித்துக் காட்டுக்கத்தலாகக் கத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்று புரோட்டா இல்லாவிட்டால் தமிழர்களில் பாதிப்பேர்கள் செத்தே போய்விடுவார்கள். மைதா வணிகம் படுத்து விட்டால் இங்கே பல மில்லியன் டாலர் வர்த்தகம் படுத்து விடும் அளவிற்கு அதன் தாக்கம் மாறிய உணவுப் பழக்கத்தில் மேலோங்கி நிற்கின்றது. மருத்துவம் என்பது தற்போது ட்ரில்லியனைத் தாண்டிச் சென்ற வணிகமாக மாறியுள்ளது. இது இன்னமும் நெருக்கிக் கொண்டே வருகின்றது. 

மோடி ஆட்சிக்கு வந்தபின்பு இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்.ஜி.ஓ நிறுவனங்களைக் கடந்த மூன்று ஆண்டுச் செயல்பாடுகளை ஒப்படைக்கச் சொன்ன போது பலருக்கும் கிலியடிக்கத் தொடங்கியது. குறிப்பாக மதம் சார்ந்த நிறுவனங்கள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள்.

நான் படித்தவரையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகின்ற வெளிநாட்டு நிதிகளைத் தங்கள் சுகவாழ்வுக்காகத்தான் பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. குரல்வளைப்பிடியில் சிக்கி இன்று பலரும் பிழைக்க வழியில்லாமல் தெருவில் நின்று கொண்டு மோடி ஒழிக என்று கத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

இதன் மூலம் அவர் நாட்டுக்கு நல்லது செய்கின்றார் என்று நான் எண்ணவில்லை. ஆனால் எங்கே அடிக்க வேண்டும்? எவருக்கு அடிக்க வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும்? என்பதான அரசியல் யுக்தியாகத்தான் நான் பார்க்கின்றேன். தமிழகத்திற்குத் தேவைப்படும் திட்டங்களை விடத் தேவைப்படாத அத்தனை திட்டங்களையும் இங்கே கொண்டு வந்து நிறுத்தும் அவர்களின் செயல்பாடுகள் மூலமே தற்போதைய ஆட்சியாளர்களும் யாருக்கு ஆதரவாளராக இருக்கின்றார்கள்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்? 

சர்வதேச லாபி தான் உலகத்தின் ஆட்சியாளர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். உலகத்திற்கே நாகரிகத்தைப் போதிக்கின்ற அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் துப்பாக்கியால் பள்ளியில் படிக்கும் மாணவனே சக மாணவர்களைச் சுட்டு சாகடித்த போதிலும் இன்னமும் அங்கே துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்த முடியவில்லையே. குறைந்த பட்சம் கட்டுப்பாடுகளைக் கூடக் கொண்டு வர முடியவில்லையே. ஒபாமா ஆட்சிக் காலத்தில் என்னன்னவோ செய்து பார்த்தார். பொத்திக்கிட்டு போவீயா? என்று தூக்கி எறிந்து விட்டார்கள். அங்கே உள்ள செனட்டர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னாலும் ஒரு உலகளாவிய லாபி வர்த்தகம் உண்டு. அவர்கள் அதற்கான பிரதிநிதியாகத்தான் இருக்கின்றார்கள். அது அங்கே மட்டுமல்ல. நம்மூர் மாவட்டச் செயலாளர்கள் வரைக்கும் இப்படித்தான் இருக்கின்றார்கள்.

இல்லாவிட்டால் பெப்சியும் கோக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கும் இடத்தில் கூட அரசாட்சி செய்ய முடியுமா? 

சூழலியல் குறித்துப் பேசத் தொடங்கினால் இரண்டு கேள்விகள் நம் முன்னால் வந்து நிற்கும்? அப்படி என்றால் வளர்ந்த மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்புக்கு எங்கே செல்வது? அவர்களின் உணவுக்கு எங்கே செல்வது? 

பசுமைப்புரட்சி என்ன சாதித்தது? 

ஆனால் இன்று இறக்குமதியில் தான் பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் 80 சதவிகிதம் உள்ளே வந்து கொண்டு இருக்கின்றது. நமக்குத் தெரிந்து அரசாங்கத்திற்கு அதிகச் செலவு பிடிப்பது பெட்ரோல் இறக்குமதி என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதனையும் தாண்டி இன்று உணவு இறக்குமதி படிப்படியாக மேலேறிக் கொண்டிருக்கின்றது? 

மேக இன் இண்டியா சாதித்தது? 

குழந்தைகள் பயன்படுத்தும் கிலுகிலுப்பை வரைக்கும் நாம் சீனத் தயாரிப்பை நம்பியே வாழ வேண்டிய சூழல். திருப்பூரில் பயன்பாட்டில் இருக்கும் எந்திரங்கள் அனைத்தும் கொரியா, ஜெர்மனி, சீனா,ஜப்பான் இந்த நான்கு நாடுகளை வைத்து பிழைப்பே ஓடிக்கொண்டிருக்கின்றது. வளர்ந்து இருந்த கோவை இன்று படுத்தே விட்டது. 

ஒவ்வொரு முறையும் வந்தமரும் ஆட்சியாளர்களின் வசதிக்காக, அவர்களின் விருப்பங்களைப் பொறுத்து தான் இங்கே மாற்றங்கள் உருவாகின்றதே தவிர வளர்ச்சிக்கான எந்தத் துரும்பையும் எவரும் இங்கே கிள்ளிப்போட தயாராக இல்லை. 

கொள்கை ரீதியாக இனி குப்பைகளை இங்கே இறக்கக்கூடாது என்று சீனா எடுத்த முடிவின் காரணமாக ஐரோப்பிய, அமெரிக்காவின் மிண்ணணு, மருந்து மற்றும் மற்ற அனைத்து குப்பைகளும் அது சார்ந்த வணிகத்தை இந்தியா முன்னெடுத்து வருகின்றது. 

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் சுற்றும் முற்றும் எதையும் பார்ப்பதில்லை. கவனிப்பதில்லை. நம்மை, நம் குடும்ப உறுப்பினர்கள், நம் உறுப்பினர்களைக் புற்றுநோய் என்ற கொடும் நோய் தாக்காத வரைக்கும். 

இன்று வளர்ச்சி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் உருவாக்கிய மாற்றங்கள் தமிழகத்தில் புற்றுநோய் என்ற நோயை மிக அதிக அளவு உருவாக்கி உள்ளது. முன்பு இந்த இடத்தைப் பஞ்சாப் பெற்று இருந்தது. இப்போது நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். 

என் நெருங்கிய உறவினர்களின் ஹீமோ தெரபி எடுக்கும் அது சார்ந்த அவஸ்தைகளைப் பார்த்த போது மனம் கூசாமல் ஏன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது? என்று சொன்னது. அதுவொரு நரக வேதனை. எல்லாப் பழக்கங்களும் இருந்து அவருக்கு இந்த நோய் வந்தது என்றால் கூட மனம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ஏன் வந்தது? என்று தெரியாமல் நரகத்தின் பாதையில் செல்லும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் போது என்ன தோன்றும். 

நவீன வளர்ச்சி என்பது பத்தாயிரம் பேரை வாழ வைக்கும். பத்து லட்சம் பேரை காவு வாங்கும் என்று தானே சொல்லத் தோன்றுகின்றது. 

இந்தக் காணொளியில் பொறியாளர் சுந்தர்ராஜன் பேசியதை முழுமையாகக் கேட்டு இரண்டு நாட்கள் ஜப்பான் என்ற நாடும், ஜப்பானியர்கள் குறித்தும் அதிகம் யோசித்துக் கொண்டேயிருந்தேன். 

சுந்தர்ராஜனைப் பொறுத்தவரையிலும் தெளிவாக அழகாக நிதானமாக எந்தக் குறிப்பும் தேவையுமின்றிப் பேசுகின்றார். ஒவ்வொரு பேச்சிலும் மிகுந்த ஆதங்கம் இருக்கின்றது. எந்த இடத்திலும் அலட்சியமில்லை. எதிராளிகள் பலமாக இருந்தாலும் சோர்வு இல்லாமல் இது போன்ற துறைகளில் ஏச்சுக்களைப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு தொடர்ந்து செயல்படுவதற்கெனத் தனி மனோபாவம் இருக்க வேண்டும். 

இவர் படித்த படிப்புக்கும் தற்போது செயல்படும் சூழலியல் துறைக்கும் தொடர்பு இல்லாத போதும் கூடச் சுய ஆர்வத்தின் மூலம் இந்த அளவுக்குச் சமூகப் பணியில் ஈடுபட்டு இருப்பது வியப்பாக உள்ளது. இவரைப் போல அமைச்சர்கள் இங்கே இது குறித்துப் பேச வேண்டும். 

ஆனால் இங்கே மாசுகட்டுப்பாட்டு அமைச்சருக்கு இப்படியெல்லாம் இங்கே நடக்கின்றது? என்பதாவது தெரியுமா? என்று தெரியவில்லை.

ஆனால் திருப்பூரில் மாதம் தோறும் அவருக்கும், அதிகாரிகளுக்குச் செலுத்தும் கப்பம் மட்டும் இன்னமும் குறைந்தபாடில்லை. அதில் மட்டும் தற்போதைய அமைச்சர் தெளிவாகவே இருக்கின்றார். தமிழகத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த இதுவரையிலும் நடந்து பிரச்சனைகளில் எந்தச் சமயத்திலாவது குறிப்பிட்ட ஆலைகள் மாசுகட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளது. இதற்கு அமைச்சரே பொறுப்பு. அவர் பதவி விலக வேண்டும் என்று பேச்சு வந்துள்ளதா? இப்படியொரு துறையிருப்பதே மக்களில் பாதிப் பேருக்குத் தெரியுமா? என்றே தெரியாது. 

வளர்ந்த தொழில் நுட்பமும், அர்ப்பணிப்பும், உழைப்பும், பராம்பரிய பின்புலம் கொண்ட ஜப்பான் இன்று வரையிலும் அணுவுலைக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றது.

அது தான் பன்னாட்டு நிறுவனங்களின் சக்தி. 

அணுவுலை குறித்துப் பேசும்போதெல்லாம் இந்திய அரசாங்கம் தவறாமல் ஒரு வார்த்தையைச் சொல்லும். அது தேச பாதுகாப்புச் சம்மந்தப்பட்டது என்று. 

சரிப்பா? உன் ரகசியம் உன்னோடு வைத்துக் கொள். ஆனால் இதன் கழிவுகளை எங்கே பாதுகாக்க போகின்றாய்? அதையாவது தெரிந்து கொள்ளலாமா? என்றால் கேட்டவுடன் தேசத்துரோகி என்று சொல்கிறார்களே? 

கௌரவம், வளர்ச்சி என்ற இரண்டு வார்த்தைக்குப் பின்னால் அரசாங்கத்திற்கு இருப்பது மக்களுக்குத் தேவைப்படுகின்ற ஆரோக்கியமான வாழ்க்கையல்ல என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் போதும். 

உங்களைச் சுற்றியுள்ள விசயங்களை ஓரளவுக்குக் கவனிக்கத் தெரிந்துள்ளீர்கள் என்று அர்த்தம்.



Tuesday, July 10, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 9

திமுக வில் உள்ள முக்கிய நண்பரிடம் சொன்னதை மீண்டும் இங்கே எழுதி வைக்கத் தோன்றுகின்றது. 

தமிழகத்தில் தேர்தலில் வெற்றி என்பது தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களில் நடக்கும் சம்பவங்கள், சடங்குகள் பொறுத்து தானே ஒழிய நல்லவர், கெட்டவர், தரமானவர், நம்ம சாதிக்காரர் எல்லாமே இரண்டாம் பட்சமே. இந்த நாளில் எவரும் மண்டையைப் போடாமல் இருக்க வேண்டும். இதில் விதிவிலக்காகப் பெரும் கோபம், பெரும் சோகம் உருவாகும் பட்சத்தில் தலைகீழ் மாற்றங்கள் உருவாக வாய்ப்புண்டு. 

காரணம் நம் மக்கள் தரம் அப்படி. (அறிஞர் அண்ணா வெற்றி பெற்றதும் சொன்ன வார்த்தை "இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவே இல்லை". காரணம் காங்கிரஸ் ன் தோல்வி என்பது அவரை மனதளவில் நிறையவே பாதித்தது) 

இன்று வரையிலும் நடுத்தர மக்களுக்குக் கீழே உள்ளவர்களின் வாழ்க்கையைத் தினந்தந்தி தான் தீர்மானிக்கின்றது. தூத்துக்குடி கலவரம் கொளுந்து விட்டு எறிந்த போது தூத்துக்குடி, திருநெல்வேலி பதிப்புகளில் கூட இந்தக் கலவரச் செய்திகள் வராமல் இருக்க அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கொந்தளித்து விட்டனர். மிகப் பெரிய எதிர்ப்பு உருவானது. வீட்டுக்கு வந்த தினத்தந்தியை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்குச் சென்றது. கடைசியில் இது போன்ற செய்திகள் கூடத் துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.

நடுத்தரவர்க்கமும், வியாபாரிகளுக்கும் தினமலர் முக்கியமாக உள்ளது. விமர்சனமாக எழுதவே கூச்சமாக உள்ளது. வார்த்தை பிரயோகம், எழுதும் விதமும் மொத்தமும் அசூசை. மனசாட்சி என்றால் கிலோ என்ன விலை என்கிற அளவிற்கு?

ஒரு பக்கம் அதிகாரத்தில் இருப்பவர்களின் தயவு வேண்டும்.  மற்றொரு பக்கம் முதலாளிகளின் அருள் கடாட்சம் வேண்டும்.  ஊடக முதலாளிகளுக்கு இருவருமே முக்கியம்.

ஒவ்வொரு தேர்தலில் உண்மையிலே ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முக்கியச் செய்திகள் எதுவும் போய்ச் சேர்வதில்லை.  அன்றாட வாழ்க்கைப்பாடுகளில் அதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்ளவும் நேரமும் இருப்பதில்லை. கொள்ளை அடிப்பவன் துடிக்கத் துடிக்க அறுத்துக் கொண்டே தான் இருக்கின்றான். 

எல்லாச் செய்திகளையும் வாசித்தவனும், விசயங்கள் புரிந்துவனுக்குத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் விடுமுறை நாளாக இருந்தால் விடு ஜுட். கொண்டாட்டம் தான். 

இணையத்தில் எல்லாமே வெளிப்படையாக உள்ளது. நல்லதும், கெட்டதும், பத்திரிக்கையில் வராமல் இருப்பது, ஊடகங்கள் மறைப்பது, பெரிய மனிதர்களின் லீலைகள் தொடங்கி அனைத்தும் உள்ளது.  அது இணையத்திற்குள் தான் உள்ளது.  பொது வெளிக்கு வருவதும் இல்லை.

வரும் அளவிற்கு நம்மவர்கள் இன்று வரையிலும் மாறவும் இல்லை.  

ஆனால் இவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு வாட்ஸ் அப் என்ற தொழில் நுட்பம் கக்கூஸ் வரைக்கும் வந்து சேர்ந்து விட்டது.

எது சரி? எது தவறு? எது உண்மை? எது பொய்? என்பதனை உணரும் அளவிற்கு மக்களுக்கு படிப்பறிவும் இல்லை. அதனை உள்வாங்கி சிந்திக்கின்ற வாசிப்பனுவமும் இல்லை.  

இந்த முறையும் (வருகின்ற தேர்தலில்) திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனால் நிச்சயம் அது வாட்ஸ் அப் என்ற தொழில் நுட்பம் தான் முக்கியக் காரணமாக இருக்கும் என்று என்னால் இன்று உறுதியாகச் சொல்ல முடியும்.

வருடந்தோறும் மருத்துவர் ராமதாஸ் மாதிரி பட்ஜெட் கொண்டு வருவார்.  தமிழகத்தில் பத்தாயிரம் பேர்களுக்குக்கூட அதன் சாரம் சென்று சேரவில்லை.

ஊடகப் பசியில் மலத்தைக்கூட அப்படியே வாயில் அள்ளி போட்டுக் கொள்ளும் பழக்கத்தால் சினிமா.. சினிமா.. சினிமா  இது தான் முக்கியமாக பேசப்படுகின்றது.  இதன் காரணமாகத்தான் ரஜினி போன்றவர்கள் இங்கே எப்போதும் முக்கிய செய்தியில் இடம் பெறுவராக இருக்கின்றார்.

எப்போதும் போல எந்திரன் 2 வரும் வரை அவருக்கு அரசியலென்பது பார்ட் டைம் வேலை தான். அடுத்தடுத்து வேறு பட ஒப்பந்தங்களில் வேறு ஈடுபாடு காட்டிக் கொண்டிருக்கின்றார். மொத்தத்தில் அவருக்கு என்ன தேவையோ அவர் கடமைகளில் கண்ணும் கருத்துமாகவே இருக்கின்றார். அவரைப் பின்னால் இருந்து இயக்குபவர்களை விட ஊடகங்கள் தாங்குவது கொடுமை என்றால் சமூகவலைத்தளங்கள் சொறிந்து கொண்டிருப்பது தான் பெரிய கொடுமை. 

நம்மவர்களுக்குக் கத்த தெரியும் அல்லது கல் எடுத்து அடிக்கத் தெரியும். புறக்கணிக்கத் தெரியாது. 

முன்பே ரஜினிக்கு அரசியல் ஆசை வந்த போது இப்போது காங்கிரஸ் ல் இருக்கும் திருநாவுக்கரசர் அவர்களை ரஜினி சந்தித்தார்.  அப்போது திருநாவுக்கரசர் ரஜினியிடம் சொன்ன வாசகம் இது.

"நாங்க பத்து நாட்கள் கஷ்டப்பட்டு ஒரு விசயத்தை நடத்தி விடலாம் என்று யோசித்து முடிவெடுத்து இருப்போம்.  கலைஞரின் ஒரு அறிக்கை எல்லாவற்றையும் அப்படியே புரட்டிப் போட்டு விடும். நாங்க எங்க வேலையை மறுபடியும் தொடங்க வேண்டும்" என்றாராம்.

தூத்துக்குடியில் கலவரம் நடப்பதற்கு முன்பு 99 நாட்கள் அமைதியாகத்தான் நடந்தது. கடைசி நாள் தான் அனைத்தும் மாறியது.

நூறு நாட்கள் எத்தனை காணொளிக்காட்சிகள், ஆவேச அறிக்கைகள், பேச்சுகள், விவாதங்கள், போராளிகள்.  ஆனால் இன்று அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லும் தூசி போல மாறிவிட்டது.  எம்.ஜி.ஆருக்கு மக்களிடம் செல்வாக்கு இருந்தது.  கலைஞருக்கு அவர் பேனா வலிமையாக இருந்தது. ஆனால் இன்று ஊடகங்களுக்கு ரஜினி என்றும் தேவையாய் இருக்கின்றார்.  

அந்த ஊடகங்களை கட்டுப்படுத்துபவர்களுக்கு ஒவ்வொன்றும் தேவையாய் உள்ளது.

மாற்ற, திரிக்க, திசை திருப்ப.

அறிவார்ந்த போராட்டங்கள் முன்னெடுக்காத வரைக்கும் இங்கு எல்லாமே கடைசிவரைக்கும் கண்டு களிக்கும் காட்சியாகத் தான் இறுதியில் முடியும். 

மற்ற போராட்டங்களை விட இந்த வேதாந்த நிறுவனம் இந்த முறை சற்று ஆடிப்போயுள்ளது என்பதனை சமூக வலைதளங்களை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.  எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்குமே அதன் எல்லை வரைக்கும் நம்மவர்கள் செய்திகளை கொண்டு சேர்த்துள்ளார்கள். இது இதற்கு முன்னால் நடக்காத நிகழ்விது.

ஆனால் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு ரஜினிக்கு பக்குவமும் இல்லை.  அது முழுமையாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.  அதனால் தான் உளறிவிட்டார்.

அனில் அகர்வால் ஒரு வியாபாரி என்றால் ரஜினியும் வியாபாரி தான்.  அவருக்கு தொழில் மூலம் வருமானம் வருகின்றது.  இவருக்கோ மக்களின் முட்டாள் தனத்தில் மூலம் கோடி கோடியாய் கொட்டுகின்றது.

சேர்த்த கோடிகளை காக்க வேண்டும்.  பழைய பெரிய நடிகர்கள் போல தெருக்கோடிக்கு போகாமல் வாரிசுகளுக்கு கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும்.  இதைத் தவிர இவருக்கு பெரிய கொள்கைகள் எதுவும் இல்லை.  

தூத்துக்குடி கலவரத்தில் இறந்த மக்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்க விரும்பாத பிரதமர் தமிழர்களின் மேல் காழ்ப்புணர்வு கொண்டவர் என்று விமர்சித்தால் அதை விட  உள்ளுருக்குள் இருந்து கொண்ட தந்திரசாலியாக வலம் வரும் ரஜினி பெரிய ஆபத்தானவராக தெரிகின்றார்.

ஆன்மிகம் என்பதனை எப்போது ஒருவன் உரக்க அறிவுரையாகப் பேசத் தொடங்குகிறானோ அவன் தான் ஒன்றாம் நம்பர் அயோக்கியன் என்று அர்த்தம். 

காரணம் சாமியை வெறுத்துப் பேசியவர்கள் எவரும் இங்கே சிலைகளை, மசூதியை, தேவாலயங்களை உடைத்ததில்லை. எல்லா மதங்களில் உள்ள பிதாமகன்கள் தான் மக்களை ரத்தவெறி பிடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ரஜினி தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மனுசன். அவர் மனைவிக்கு, இரண்டு பெண் குழந்தைகளுக்கு, மருமகனுக்கு.  

ஆனால் பொது வாழ்க்கையில்? 

அவர் உழைப்பு. அவர் சம்பாத்தியம். அவர் சுகவாழ்க்கை. அதனைக் கேட்க எவருக்கும் உரிமையில்லை.  ஆனால் துரும்பைக்கூட கிள்ளிப் போட மனமில்லாத மனம் கொண்டு மகான் மன்னவனாக முடிசூட்ட நினைப்பது தான் தமிழர்களின் வாழ்வில் நடக்க இருக்கும் ஆகப் பெரும் சோகமாக இருக்கப் போகின்றது. 

கன்னடராக பிறந்து இருந்தாலும் இவருக்குப் பின்னால் வந்த முரளி, பிரகாஷ்ராஜ் முதல் பலரும் பேசக்கூடிய தமிழ் கூட இவரால் சரியாகப் பேச முடியவில்லை. விருப்பமில்லை என்று சொல்ல முடியாது.  அதற்கான அறிவும் பொறுமையும் இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

காரணம் அவர் கழுவுவதைக்கூட காணக்கிடைக்காத காட்சியாக ஊடகங்கள் மாற்றிய பின்பு நமக்கு அவர் பேசும் மொழி தான் தமிழகத்தின் தலைவிதியாக தெரிவதில் என்ன ஆச்சரியம்?

காலம் தன்னை வில்லனாக மாற்றுவதற்குள் அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் போதே போய்ச் சேர்ந்து விட வேண்டும். நடிகர்கள் புகழுடன் இருக்கும் போதே கரைந்து விட வேண்டும். 

ரஜினி வில்லனாக வாழ்க்கையைத் தொடங்கினார். 

வில்லனாகத்தான் மாறிக் கொண்டு வருகின்றார். 

இழந்து போன  தனது ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் அவர் பணயம் வைத்துள்ளார். பயணம் நடத்துவதாக பயம் காட்டுகின்றார்.  அது தமிழர்களின் தலைவிதியாக வேறு இருந்து தொலைக்கின்றது.

இங்கே அடிப்படை எண்ணங்கள் மாறாதவரைக்கும் நல்ல ஆட்சியாளர்களை எதிர்பார்க்காதீர்.


Sunday, July 08, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 8


இதனை முழுமையாகப் பார்த்து முடித்த போது வேதனையும் சிரிப்பும் கலந்தே வந்தது.


இணையம் எங்கும் பாண்டே குறித்த எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒருவரைப் பேட்டி எடுப்பதற்கு முன்பு எந்த அளவுக்கு அவரும் அவர் குழுவினரும் தயார் நிலையில் வருகின்றார்கள் என்பதனை கவனிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது.



புள்ளி விபரங்கள், குறுக்குக் கேள்விகள், அதற்குப் பதில் வந்தால் எப்படிச் சமாளிக்க வேண்டும்? எப்படித் திசை திருப்ப வேண்டும்? எப்படித் தடுமாற வைக்க வேண்டும்? போன்ற அனைத்தையும் கவனிக்கும் போது சற்று வியப்பாகவே உள்ளது.



அவர் யாருக்காகப் பரிந்து பேசுகின்றார் என்பது இங்கே முக்கியமல்ல. அவர் பரிந்து போதும் போது அதை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் பாண்டே முன்னால் உட்கார்பவர்களுக்கு இருக்குமா? என்று தெரியவில்லை.



சகல விதங்களிலும் சரியான நபர் என்று நான் எதிர்பார்த்த வைகோ கூடப் பாண்டே முன்னால் தடுமாறத்தான் செய்கின்றார். வெற்றி பெற வேண்டும். அல்லது வெற்றி பெறப் போகின்றவர்களைத் தடுமாறச் செய்ய வேண்டும்? என்ற இரண்டு கொள்கைக்குள் நிற்கும் பாண்டேவின் கொள்கை நாம் எதிர்மறையாக, நேர்மறையாக எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.



நீ என்ன வேண்டுமானாலும் கேள். எப்படி வேண்டுமானாலும் குறுக்கிட்டுக் கொள். நான் சொல்ல வந்ததைச் சொல்லியே தீருவேன் என்ற பிடிவாதம் கொண்டு பாண்டே வை வெல்லப் போகின்றவர்கள் யார் என்பதனை ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.



இதில் ஓரளவுக்கு வென்றவர் ஆ. ராசா மட்டுமே. அலைக்கற்றைத் தொழில் நுட்பம், அதன் பின்புலம் குறித்து ஓரளவுக்கு மேல் ஆ. ராசா வுடன் பாண்டே வால் பேச முடியவில்லை என்பதே முக்கியமாக இருந்தது.



இந்தக் காணொளியில் வைகோ தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, பாண்டே சாமர்த்தியமாகத் திசை திருப்பி விட்ட பாதிப்பில் எப்போதும் போலப் பொதுக்கூட்ட உணர்ச்சிவசப்பட்டு முடித்த நிலையில் பேசுகின்றார். இவர் எதார்த்த அரசியல்வாதி அல்ல என்பதனை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார்.



இப்போது வைகோவிற்கு 75 வயது ஆகின்றது என்று நினைக்கின்றேன். ஆனால் இன்னமும் உணர்ச்சி கடந்த நிலையில் இருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை என்பதே ஆச்சரியமாக உள்ளது.



காலம் முழுக்கத் தன்னை உள்ளே தூக்கி வைத்து விட அரச பயங்கரவாதத்திற்கு அவரே வாசல் கதவை திறந்து வைத்துள்ளார் என்பதற்கு இந்தப் பேட்டியே சாட்சி.



Thursday, July 05, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 7

நேற்று மகளிடம் உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அவர் வாயில் வந்த வார்த்தை இது. 

"தந்தை பெரியார் அப்படியெல்லாம் பொண்ணுங்க இருக்கனும்ன்னு சொல்லவில்லையே?" என்று சொல்லி பழிப்பு காட்டி விட்டி பள்ளிக்குச் சென்றார். 

அம்மையார் பின்னால் இருந்து கொண்டு போதுமா? "இது தானே நீங்க எதிர்பார்த்து ட்ரைனிங் கொடுத்த லட்சணம்" என்று வாழ்த்துரை வழங்கினார். 

அவரிடம் நான் என்ன கேட்டேன்? அவர் ஏன் இப்படிப் பதில் சொன்னார் என்பது கடைசியில்? 

இவர்களைப் பள்ளிப் புத்தகங்கள் தாண்டி மற்ற புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல விதங்களில் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்துத் தோல்வி தான். சுருண்டுவிட வில்லை. நான் வாசித்த புத்தகங்கள் மிஞ்சியிருப்பது நூறு 
எண்ணிக்கையிருக்கக்கூடும். 

ஆனால் சீந்த ஆளில்லாமல் இருக்கப் பெற்ற புள்ள பாசத்தோடு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதுண்டு. இவர்களிடம் இதப் பாருடா? என்று ஆசை வார்த்தைகள் காட்டுவதுண்டு. ஒருவர் மட்டும் லேசாகப் புரட்டிப் பார்க்கத் துவங்கினார். 

அப்படியே தூக்கி ஓரமாக வைத்து விட்டார். நான் சோர்ந்து போகவில்லை. அப்போது புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவர்கள் விரும்பிய புத்தகங்களுடன் குறிப்பிட்ட சில புத்தகங்கள் (குழந்தைகளுக்கென்று எழுதப்பட்ட புத்தகங்கள். உள்ளடக்கம் சரியாக ஆனால் எளிமையாகச் சுருக்கமாக இருக்கும்) மகாபாரதம், இராமாயணம், காந்தி, நேரு, காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், விடுதலைப் போராட்ட வீரர்களின் தொகுப்பு போன்ற புத்தகங்களையும் வாங்கி வந்திருந்தேன். 

அதுவும் கண்டும் காணாமல் இருந்தது. இவர்களைப் படிக்க வைக்கச் சாப்பாட்டு மேஜையில் இவர்கள் கண் பார்வையில் எப்போதும் படும்படி வைத்திருந்தேன். வாரப்பத்திரிக்கைகள், தினசரி செய்தித்தாள்களை வாசிக்கத் துவங்கியவர் படிப்படியாக இதில் இறங்கினார். 

ஆச்சரியம் என்னவென்றால் அடுத்தச் சில வாரங்களில் இராமயாணம், மகாபாரதம் போன்றவற்றை முடித்து விட்டேன் என்ற போது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. காந்தி, நேரு, காமராஜர் இதில் ஏதாவது ஒன்றை எடுத்து அடுத்துப் படித்துப் பார் என்றேன். 

காமராஜர் குறித்துப் பள்ளிப் பாடங்கள் முதல் பல இடங்களில் படித்த காரணத்தினால் அவரைப் பற்றிய புரிதல் இவர்களுக்கு நன்றாகவே உள்ளது.

தந்தை பெரியார் குறித்து எடுத்துப் படிக்கத் துவங்கினார். இதற்கிடையே பா. ராகவன் எழுதிய டாலர் நகரம் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். சில வாரங்களில் அதனையும் முடித்து விட்டார். 

அடுத்தடுத்து நான் சுட்டிக் காட்டிய பல புத்தகங்கள் படித்தாலும் பெரியாரை அவர் கைவிடவில்லை என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் எதையும் கட்டாயப்படுத்தவில்லை. கடந்த 70 இந்திய, தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் சுருக்கத்தைக் கால் பங்காவது 12 வகுப்பு முடிப்பதற்குள் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். 

இவர்களின் அடித்தளமும், அடிப்படை எண்ணங்களும் எதிர்கால நோக்கங்களும் எப்படியிருக்க வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இவர் நல்லவர்? இவர் கெட்டவர்? இது தேவை? இது தேவையில்லை? என்று எதையும் நான் சொல்லவில்லை. 

வாசித்து முடித்த பின்பு உனக்கு இப்போதைய சூழ்நிலையில், எதிர்கால உன் கொள்கைக்கு எது சரியாக இருக்கும் என்று நம்புகின்றாயோ? அதனை நீயே எடுத்துக் கொள் என்று வாய்ப்புகளைக் கொடுத்து இருந்தேன். 

ஆனால் இன்னமும் அண்ணல் அம்பேத்கார் குறித்து முழுமையான புரிதலை உருவாக்க முடியவில்லை. பாடங்களில் அவர் குறித்து முழுமையான விபரங்கள் இல்லை. பெரியார் அளவிற்கு இன்னமும் அவர் இங்கே பரவலாக்கப்படவில்லை. அவரின் பிம்பத்திற்குக் கொடுத்த மரியாதை அவர் கருத்துக்களுக்கு அதைக் கடத்துவதற்கு யாருக்கும் அக்கறையில்லை என்பது தான் இங்கே குறிப்பிட வேண்டிய விசயம். 

புத்தகக்கடையில் நான் பார்த்த அம்பேத்கார் புத்தகங்கள் பெரிய சிலாகிப்பதாக இல்லை. 

முதல் வரியில் நான் மகளிடம் கேட்டது. 

"அப்பா ரொம்ப ஆசைப்படுறேன். நீங்க தாவணி கட்டவேண்டும். இந்த முறை தீபாவளிக்கு மூன்று பேரும் பாவாடை தாவணி கட்டவேண்டும் சரியா? என்று தான் கேட்டேன். பொம்பள புள்ளைங்க பேண்ட் சட்டை போட சொல்லியிருக்காரு பெரியார்" என்றார். 

மருத்துவர் ஷாலினி பேச்சைக் கேட்ட போது எனக்கு என் மகள் ஞாபகம் தான் வந்தது.

Tuesday, July 03, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 6


சென்ற வாரத்தில் காலா படம் பார்த்தோம். 

பிறை இன்று தெரியுமா? தெரியாதா? என்ற குழப்பம் உருவான போது பள்ளி விட்ட விடுமுறை இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காலை முதல் திட்டமிட்டு என்னை மாலை வரவழைத்து அழைத்துச் சென்றார்கள். 

மாலை 6.15 க்குப் படம் தொடங்கும். நான் மட்டும் 6.10 க்குத்தான் திரையரங்கத்தின் உள்ளே சென்றேன். அப்போது மொத்தமே 30 பேர்கள் தான் இருந்தார்கள். இடைவேளை விடும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் 50 பேர்களைத் தாண்டவில்லை. 

காலா படம் வெளியான தினத்தில் சென்னையில் இருந்தேன். மாலைக்குள் சென்ற வேலை அனைத்தும் முடிந்து விட நண்பர் கையில் மூன்று இலவச சீட்டுக்கள் இருந்தன. அழைத்தார். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வீட்டில் அம்மையாரின் அதிகபட்ச ஆசையான ரஜினியின் படத்தை ஒவ்வொரு முறையும் திரையரங்கில் சென்று பார்ப்பது என்ற கொள்கையின் காரணமாக என்பதனை நண்பரிடம் சொன்ன போது சிரித்தார். 

இயக்குநர் ரஞ்சித் உடன் நேரிடையாக சந்தித்து பேசியுள்ளேன். திரை உலகில் நான் சந்தித்த மற்றவர்களை ஒப்பிடும் போது ரஞ்சித் எதார்த்தவாதியாக எனக்குத் தெரிந்தார். நான் இந்தத் தளத்தில் இப்படித்தான் இயங்கப் போகின்றேன் என்பதில் தெளிவாகவே இருந்தார். தன் பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்தே இருந்தார். 

நெருங்கிய தம்பி ஒருவன் அவர் குழுவில் அவருடன் நெருக்கமான வட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான். சென்னையில் இருந்த போது அவனுடன் பேசினேன். ஐம்பது சதவிகிதம் மக்கள் கூட (அவருக்கென்று உள்ள ரசிகர் கூட்டம் குறிப்பாகக் குழந்தைகள், விடலைகள்) திரையரங்கம் வரவில்லை. வருகின்ற மாதிரி சூழலும் சாதகமாகத் தெரியவில்லை என்றான். தமிழர்களின் எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு அது ஊதிப் பெருக்கப்பட்டு அது வெற்றியும் அடைந்து விட்டது என்றான். 

ரஜினியின் தோல்வியை விட ரஞ்சித்தின் தோல்வியைக் கொண்டாடத்தான் இங்கே அதிகம் பேர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இப்போது வெளிப்படையாக மொத்த கோடம்பாக்கமும் ரஞ்சித் வைத்துப் படம் எடுக்கக்கூடாது என்பதனை பலர் வெளிப்படையாகவே எழுதத் தொடங்கி உள்ளனர். 

பிராமணியம் குறித்து எப்போதும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. இதன் இரண்டுக்கும் உள்ள நுண் அரசியலைத் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே ரஞ்சித் போன்றவர்கள் தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

படம் என்கிற வகையில் பார்த்தால் ரஞ்சித் வென்றுள்ளார். ரஜினியும் வென்றுள்ளார். ரஜினியின் படங்களில் நீண்ட நாளைக்குப் பிறகு நடித்துள்ளார் என்கிற வகையில் மிகவும் சிறப்பாகவே உள்ளது. 

கரணம் தப்பினால் இது பிரச்சாரப் படமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனையும் தாண்டி வர்த்தரீதியான நிலையில் சரியாகவே தொகுக்கப்பட்டுள்ளது. வசனத்தை ரஞ்சித்துடள் மூன்று பேர்கள் எழுதியுள்ளார்கள். பல இடங்களில் ரஜினி எப்படி இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு வசனங்கள் கத்திமுனை போலக் குத்திக் கிழிக்கின்றது. இணை இயக்குநர், துணை இயக்குநர்கள் என்று அதிகமான பேர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் ரஞ்சித். 

ரஜினி போலவே நடித்த ஒவ்வொருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். முக்கியமாக வில்லனாக வந்த நானா பட்கேர் நடிப்பைப் பார்க்கும் வியப்பாக இருநத்து. வேறு எவரையும் இந்த இடத்தில் இவருக்குப் பதிலாக வைத்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். 

ஆச்சரியம் என்னவென்றால் இயக்குநர் ரஞ்சித் க்கு நடிகர்களிடம் கதை சொல்லத் தெரியாது. அவர் தனது திரைக்கதை வடிவத்தை அவர்களிடம் வாசிக்கச் சொல்லி அதன் மூலம் தான் புரியவைப்பாராம். ஆனால் ஒரு இயக்குநராகக் காட்சியமைப்பில் அவர் எந்த அளவுக்கு இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பதனைப் பார்க்கும் போது நிச்சயமாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் என்பதில் சந்தேகமே இல்லை. 

படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரைக்கும் அதன் தயாரிப்பு சார்ந்த செலவுகளைத் தான் அதிகம் கவனித்துக் கொண்டு வந்தேன். செய்திகளில் வாசித்ததன் மூலம் முதல் இருபது நாட்கள் மட்டும் தாராவியில் எடுத்துள்ளார்கள். மற்ற நாட்கள் அனைத்து இங்கே அரங்கம் அமைத்து தான் எடுத்துள்ளார்கள். காரணம் பெரும்பாலான காட்சிகளில் ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் நூறு தலைகளாவது தெரிகின்றது. இது தவிரக் காலா வின் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். 

படத்தின் செலவு என்பது (ரஜினிகாந்தின் சம்பளம் அறுபது கோடி என்கிறார்கள். இதன் அடிப்படையில் 150 கோடிக்கு விற்பனையாகி இருக்க வேண்டும் என்று கணக்கீடு செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் விற்ற 51 கோடியே போணியாகவில்லை) நடித்த நடிகர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தான் பெரிய தொகையாக உள்ளது. உருவாக்கப்பட்ட தாராவி அரங்கம் என்பது அதுவொரு பெரிய செலவு. 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே பெரிய ஜனத்திரளை வைத்துத் தான் நினைக்கும் அளவிற்குத் தான் நினைத்தபடி எளிதாக விரைவாக வேலை வாங்கக்கூடியவர் என்று பெயர் எடுத்துள்ளார். அவரைப் போலவே இவரும் வென்றுள்ளார். 

கடந்த சில படங்களில் ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் இவரின் ஒவ்வொரு படத்திற்கும் விளம்பரம் மூலம் வரும் வருவாயை நேரிடையாகத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டார்கள். காலா மூலம் 50 கோடி ரூபாய் எடுத்துள்ளார்கள். வெளிநாட்டு விற்பனை உரிமையும் பெரிய அளவுக்குப் போணியாகவில்லை. ஈழத் தமிழர்கள் முழுமையாகவே புறக்கணித்து உள்ளதாகத் தெரிகின்றது. 

பாலு மகேந்திரா அறிமுகம் செய்யும் கதாநாயகிகள் மேல் எப்போதும் எனக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. ஷோபா, அர்ச்சனா, மௌனிகா தொடங்கி இதில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் வரைக்கும். ஒப்பனை தேவைப்படாத அழகி. கடந்த ஏழு வருடங்களாக நடிப்புப் பக்கம் வராமல் குடும்ப வாழ்க்கையில் இருந்த ஈஸ்வரி ராவ் அற்புதமாக ஜொலிக்கின்றார். 

ரஜினி போன்றவர்களை வேலை வாங்குவதே கடினம். சில எல்லைகளைத் தாண்ட முடியாது. ஆனால் ரஞ்சித் தான் விரும்பிய அளவுக்கு ரஜினியை பல எல்லைகளை உடைத்து அவரின் பழைய நடிப்பாற்றலைக் கொண்டு வந்துள்ளார். 

ரஜினியின் தனிப்பட்ட பலவீனங்களைக் கடந்து தமிழகம் அவருக்குக் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்தை, கட்சி, மதம், சாதி கடந்து அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை அவராகவே கெடுத்துக் கொள்வார் என்று நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். காலச்சூழல் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக அவர் பேசிய பேச்சு கொட்டிக் கவிழ்த்து விட்டது. கடந்த 30 வருட உழைப்பை சில உளறல்கள், பேச்சுகள் ஒரு பெரிய வணிக லாபத்தை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டது. 

ஆன்மீகத்தை மற்றவர்களை விட இவர் தான் அதிகம் பேசுகின்றார். ஆனால் இவரின் உடல் மொழி பொதுவிடங்களில் அதற்கான தகுதியை, ஆன்மீகம் மூலம் பெறும் அமைதியான சுபாவத்தை இவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதனை அப்பட்டமாக உணர்த்திக் காட்டியது. படத்தில் பேசும் ஏழைப்பங்காளன் வசனத்திற்கும் நிஜவாழ்க்கையில் அப்பட்டமாக எதிராக இருப்பதையும் அவர் அறியாமல் வெளிப்படுத்திய சூழலில் கோமாளி போலவே ஆக்கப்பட்டுள்ளார். 

ரஜினி அடுத்தப் படத்தில் நடிக்க டார்ஜிலிங் சென்று விட்டார். ரஞ்சித் தனது அடுத்த ஹிந்திப்பட வேலையில் இறங்கி விட்டார். நம் மக்கள் இன்னமும் காலா வின் குறியீடுகள் குறித்து எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.