Monday, June 30, 2014

அமுதவன் (இரண்டு) புத்தகங்கள் - அறிமுகம்

சில பதிவுகளுக்கு முன் எழுத்தாளர் அமுதவன் எழுதிய இரண்டு புத்தகங்கள் என் வாசிப்பில் உள்ளதாக அறிமுகப்படுத்தியிருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் வேலைப்பளூ அதிகமென்றாலும் நிச்சயம் இது போன்ற புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்தே ஆக வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு. 

சர்க்கரை நோய்..... பயம் வேண்டாம்! ( விலை ரூபாய் 55.00) 


நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி. (விலை ரூபாய் 100) 


அமுதவன் எழுதிய இந்த இரண்டு புத்தகங்களும் விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னால் அமுதவன் எழுதிய பதிவின் மூலம் ரெய்கி என்ற சொல் எனக்கு அறிமுகம் ஆனது. பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக்கூட விடாமல் படிக்கும் எனக்கு மருத்துவ உலகத்தைப் பற்றி, அதன் பல்வேறு கூறுகளைப் பற்றி, மாற்று மருத்துவங்கள் குறித்து எழுத்தாளர் அமுதவன் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகே எனக்குத் தெரிய வந்தது. 

அவர் பதிவில் எழுதப்பட்ட ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க வியப்பாகவே இருந்தது. 

ரெய்கி என்ற புத்தகத்தைப் படித்தவுடன் ஆசான் தான் என் நினைவுக்கு வந்தார். அவருடன் சேர்ந்து சில நாட்கள் சுற்றிய போது அவர் உடல் ஆரோக்கியத்திற்காக நாம் தினந்தோறும் செய்ய வேண்டிய யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் அவர் மூலம் கேட்டறிந்த எனக்கு இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பலதரப்பட்ட அனுபவங்கள், விளக்கங்கள் என் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தியுள்ளது. 

நாம் மாற்று மருத்துவங்களைக் குறித்து யோசித்தாலும், பேசினாலும் நம்மோடு இருப்பவர்களே நம்மைக் கிறுக்கன் என்று சொல்லிவிடக்கூடிய ஆபத்துள்ளது. 

அந்த அளவுக்கு மக்கள் நாகரிக மோகத்தில் இருக்கின்றார்கள். தற்போதைய சூழலில் ஒரு தலைவலிக்கு 5000 ரூபாய் செலவளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். சாதாரணத் தலைவலி முதல் தொடர்ச்சியாக நம்மைத் தாக்கும் ஒற்றைத்தலை வலி வரைக்கும் எளிய பயிற்சிகள் மூலம் எந்த அளவுக்கு நாம் நிரந்தர ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளார். 

ரெய்கி என்ற புத்தகத்தை ஒரு முறை வாங்கிப் படித்துப் பாருங்கள். 

உங்களுக்கே உங்களுக்குள் இருக்கும் சக்தியை உணர்ந்து கொள்ள முடியும். உடம்புக்குள் இருக்கும் சக்தியை எவ்வாறு பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைக்க முடியும்? என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நம்முடைய நம்பிக்கை தான் நமக்கு முதல் ஆதாரம். மற்ற மருத்துவ முறைகள் எல்லாமே அதற்குப் பிறகு தான் என்பதனை நீங்கள் தீர்மானமாக நம்பத் தொடங்குவீர்கள். 

ஆனால் நிச்சயம் தற்போதைய சூழ்நிலையில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் சர்க்கரை நோய். பயம் வேண்டாம்


எங்கள் குடும்பத்தில் அப்பாவுக்குச் சர்க்கரை நோய் இருந்தது. ஊரில் வசிக்கும் அம்மாவுக்கும் உள்ளது. இரண்டு சகோதரர்களுக்கு இருக்கின்றது. பரம்பரை நோய் என்று சொல்லப்படுகின்ற இந்த நோய் ( நோய் என்று கூடச் சொல்லக்கூடாது. பற்றாக்குறை என்று தான் சொல்ல வேண்டும்) எனக்கில்லை. 

காரணம் நான் உணவு முதல் மற்ற பழக்கவழக்கங்கள் வரைக்கும் தீர்மானமாக உருவாக்கிக் கொண்டு பாதைகள் தான் என்னை இன்று வரையிலும் பெருந்தீனி திங்கிற வட்டத்திற்குச் செயலாளராக மாற்றியுள்ளது. தினந்தோறும் வீட்டில் மனைவியின் கேள்விக்கணைகள் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கெஞ்ச வைத்துக் கொண்டிருக்கின்றது. 

ஆனால் தீனியில் ஆர்வமிருப்பவர்கள் அதைச் செறித்துச் சத்தாக மாற்றும் கடின வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரையிலும் உணவே மருந்து. ஆனால் உங்கள் உடம்புக்கு ஏற்ற உணவு முறைகள் தான் மருந்தாக இருக்க முடியும். இல்லாவிட்டால் அதுவே விஷமாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. 

அமுதவன் பல இடங்களில் தடவி கொடுக்கின்றார். சில இடங்களில் அறிவுரையைப் பட்டவர்த்தனமாகச் சொல்லி மிரட்டாமல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார். உங்கள் பழக்கவழக்கங்கள் தான் உங்கள் ஆரோக்கியத்தின் முதல்படி என்கிறார். பழக்கவழக்கங்கள் மாறும் போது இப்படித்தான் உங்கள் உடம்பில் ரசாயன மாற்றங்கள் உருவாகும் என்பதனை ஒரு மருத்துவர் போல எளிய முறையில் சொல்லிச் செல்கின்றார். 

இதில் குறிப்பிடவேண்டிய மற்றொரு அற்புதமான அம்சம் என்னவென்றால் அவரது அனுபவங்கள் சார்ந்த பல விசயங்களை அங்கங்கே சொல்லிச் செல்கின்றார். மக்களின் மனோபாவம், மாற்று மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை, பணத்திற்கு ஆசைப்படாமல் இருந்தாலும் மக்கள் காட்டும் அலட்சிய மனப்பான்மை, குணமாகிச் சென்றாலும் அதை அடுத்தவர்களிடம் அறிமுகம் செய்து வைக்க மனமில்லாமல் வாழும் ஆட்டு மந்தைக்கூட்டம் என்று ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு சுய அனுபவங்களை கொடுத்துள்ளார். 

தற்போது எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் வாங்கும் கட்டணம் 100 ரூபாய் என்கிற நிலையில் தான் உள்ளது. அவரே நடத்திக் கொண்டிருக்கும் மருந்தகங்களில் தான் மருந்து மாத்திரை வாங்க முடியும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் 500 ரூபாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். 

ஆனால் அமுதவன் தான் சொல்ல நினைதத அத்தனை விளக்கங்களையும் 55 ரூபாயில் சொல்லிவிடுகின்றார். சித்த மருத்துவம் குறித்து நான் எழுதிய பழைய பதிவை படித்து விட்டு ஒரு மருத்து நண்பர் அழைத்து நீண்ட நேரம் பேசினார். மற்றொரு நண்பரும் அழைத்துத் தவறு செய்யாதீர்கள் என்று அன்போடு எச்சரித்தார். 

காரணம் இன்றைய சூழ்நிலையில் சித்த மருத்துவம் என்றாலே ஆண்களுக்கு ஆண்குறி சம்மந்தபட்டதற்கு மட்டுமே என்று சந்து டாக்டர்கள் சிந்து பாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பயமுறுத்தல்கள் தான் அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. பல ஆண்களுக்குப் பணத்தையும் இழந்து தூக்கம் போன இரவாக முடிந்து போய்விடுகின்றது. 

ஆனால் அமுதவன் தெளிவாக ஆணித்தரமாகச் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார். 

எதற்காகவும் பயப்படாதீர்கள். மலக்குடலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். தினந்தோறும் எளிய உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றுக்கும் ஆங்கில மருத்துவம் மட்டும் தான் அருமருந்து என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள். உங்களுக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ மாற்று மருத்துவத்தில் ஒரு முறையாவது முயற்சி செய்து பாருங்கள். சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் எந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள். 

இவ்வாறு சொல்லும் போது ஆங்கில மருத்துவப் பிரியர்கள் ரவுண்டு கட்டி அடிக்க வரக்கூடும். போலியோ, தட்டம்மை, மலேரியா போன்ற கொள்ளை நோய்களை உதாரணம் காட்டி உதைக்க வருவார்கள். கவனமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நோய்களுக்கு முக்கியக் காரணம் சுற்றுச்சூழல். புகைக்குள் வாழ்ந்து கொண்டு, புழுதியில் புரண்டு கொண்டு வாழ்பவர்களை அரவணைத்து ஆறுதல்படுத்தி நம்மை நம்ப வைத்துக் கொண்டிருப்பது பல வண்ண நிற மாத்திரைகளே. 

பல நோய்களுக்கு இன்று வரையிலும் உறுதியான தீர்வு கிடைக்காத போதும் கூட அது தான் பலருக்கும் அருமருந்தாக உள்ளது. இன்று ஆங்கில மருத்துவம் என்பது மனித வாழ்க்கையில் சாதிக்க முடியாத சாதனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்ற போதிலும் ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது. சில நோய்களுக்குத் தீர்மானமான முடிவுக்கு வராமல் இருப்பதற்குக் காரணம் இந்த வர்த்தகப் போட்டியே என்பதை எத்தனை பேர்களால் உணர்ந்திருக்க முடியும் என்று நம்புகின்றீர்கள்? 

இந்த நூல் நோய் குறித்த பயத்தை விரட்டுகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளாலும், அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரேய்கி, பிராணிக் ஹீலிங் போன்ற சிகிச்சைகள் மற்றும் யோகா, தியானம், நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, முத்திரைகள் போன்ற பயிற்சி முறைகளாலும், மாத்திரைகளைக் குறைத்து பக்க விளைவுகள் இன்றிச் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றும் நம்பிக்கை ஊட்டுகின்றது. 

உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை என்றால் மகிழ்ச்சி. வந்து விடுமோ? என்ற பயத்தில் இருப்பவரா? உங்களுடன் பழகுபவர்கள் கதை, திரைக்கதை, வசனத்தை எடுத்து விடுகின்றார்களா? 

ஒரு முறை இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க அழைக்கின்றேன். காரணம் உங்கள் உடலைப்பற்றி, உடல் இயக்க செயல்பாடுகளைப் பற்றி, ஒரு மருத்துவர் சொல்ல வேண்டிய விசயங்கள் என அனைத்தையும் வாஞ்சையோடு பயமுறுத்தல் இல்லாமல் உங்களுக்குப் புரிய வைக்கும். 

புரிந்தவர்களும், புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களும் புண்ணியவான்களே. 

தொடர்புடைய பதிவுகள்

9 comments:

எம்.ஞானசேகரன் said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி. அதுவும் இத்தனை வேலை பளுவிற்கிடையிலும் மிகவும் விரிவாக. சர்க்கரை நோயாளியான எனக்கு மிகவும் பயன்படும் என நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான நூல் அறிமுகம்! வாங்கிட வேண்டியதுதான்! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா

Rathnavel Natarajan said...

அமுதவன் (இரண்டு) புத்தகங்கள் - அறிமுகம் =
திரு ஜோதிஜியின் புத்தக அறிமுக பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

சர்க்கரை நோய்..... பயம் வேண்டாம்! ( விலை ரூபாய் 55.00)

http://books.vikatan.com/index.php?bid=366

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி. (விலை ரூபாய் 100)

http://books.vikatan.com/index.php?bid=2204

அமுதவன் எழுதிய இந்த இரண்டு புத்தகங்களும் விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

மிக்க நன்றி அய்யா.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

டீச்சர் அடுத்த முறை இந்தியா வரும் அவசியம் வாங்கிப் படித்துப் பாருங்க. எனக்குத் தெரிந்து உடல் இயக்க செயல்பாடுகளை இந்த அளவுக்கு எளிமையாக ஒருவரால் எழுத முடியுமா? என்று எனக்கு பல இடங்களில் ஆச்சரியம் தந்த புத்தகமிது. நிச்சயம் இது போன்ற புத்தகங்களை இங்கே பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் வைக்க வேண்டும். படிக்கும் மாணவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை சரியாக வைத்துக் கொள்ள தங்கள் உடல் கூறுகளைப் பற்றி புரிந்து கொள்ள முழுமையாக இந்த நூல் உதவும். மருத்துவத் துறையில் ஆர்வமுள்ள ஒரு மகள் மூன்று அத்தியாயம் படித்து முடித்துள்ளார். புரியுமோ? புரியாதோ என்று தான் நினைத்தேன். எங்க பாடத்தை விட எளிமையாக உள்ளது என்றார்.

ஜோதிஜி said...

ஆன் லைனில் வாங்கலாம் கவிப்ரியன். நீங்க அவசியம் படிக்க வேண்டும். நன்றி.