Wednesday, June 25, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் - 5


ஊரில் வாழ்ந்த போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை யாரையாவது பார்க்க வேண்டியிருந்தால் "அவர் காங்கிரஸ்காரர். தப்புத் தண்டாவுக் கெல்லாம் போற மனுசன் இல்லப்பா" என்பார்கள். 

நைந்து போன அந்தக் கதர்ச்சட்டை, கதர்வேஷ்டி என்பது ஒரு அடையாளம். அவர்களின் அமைதியும், சாத்வீகமும் மற்றொரு அடையாளம். 

உள்ளும் புறமும் இப்படித்தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் வாழ்ந்தார்கள். 

ஆனால் தற்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது பன்னாட்டு நிறுவனம். கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் பரந்து விரிந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள். பணம் தான் பிரதானம். பணம் தான் கொள்கை. கொள்ளை என்பது கட்சி ஆதாரக் கொள்கை.

ஆங்கிலேயர்களுடன் பேச, உறவாட, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைக்க ஆங்கிலேயர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் உருவாக்கிய கட்சி தான் காங்கிரஸ்.  

காங்கிரஸ் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு ஆங்கிலேயரின் நிர்வாகத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளும், கிளர்ச்சிகளும் இடைவிடாது நடக்க வெள்ளையர்கள் யோசித்தார்கள். 1885 ஆம் ஆண்டு அப்பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்த டப்ளின் பிரபுவின் ஆலோசனையின் ( மத ரீதியாகச் சாதி ரீதியாக மக்களைப் பிரித்துச் சண்டையிட வைத்து ஒற்றுமையைக் குலைப்பது) பேரின் மேலே சொன்ன ஆலன் என்ற வெள்ளையர் மூலம் காங்கிரஸ் கட்சி உருவானது. 

முதல் இருபது வருடம் இவரே தலைமைப் பொறுப்பில் இருந்தார். 

அப்போது இவர் பகிங்கரமாகச் சொன்ன ஒரு விசயத்தை இப்போது நாம் நினைத்துப் பார்ப்பது அவசியமாகும். 

"நாம் அரசியல் ரீதியாகக் கூடுகின்றோமே தவிர இதில் சமூகச் சீர்திருத்த கருத்துக்களுக்கு இடமில்லை. எவரும் கூட்டத்தில் அது குறித்துப் பேசக்கூடாது. எனவே மதம், அனுஷ்டானம்,வருணாசிரமம் போன்றவற்றைப் புண்படுத்தும் விதமாக எவரும் நடந்து கொள்ளக்கூடாது" என்று அரசியார் சொல்லியுள்ளார் என்றார். "எனவே மத ஆச்சாரமும், குல ஆச்சாரமும் இங்கே பாதுகாக்கப்படும்" என்றார். 

விதை ஒன்று போட்டால் எது முளைக்குமோ? அது தான் இன்று விஷ விருட்சமாகி வந்து வளர்ந்து நின்றுள்ளது. 

காலமாற்றத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக மாறியபடி வந்த காங்கிரஸ், நேரு, இந்திரா,ராஜீவ்,சோனியா என்று வந்து இன்று ராகுலின் கைக்கு வந்துள்ளது. நாளை சோனியாவின் மருமகன் "கை"க்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

"தீராத விளையாட்டுப் பிள்ளை"களான மகனையும் மருமகனையும் நம்பி இந்தப் பெரிய தேசம் காத்திருப்பது தான் நம் நாட்டின் பெரிய மிகப் பெரிய கொடுமை. நல்ல வேளை இந்த முறை இந்த மாஃபியா கும்பலிடமிருந்து இந்தியா தப்பித்து விட்டது. 

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த "காங்கிரஸ் பேரியக்கம்" என்பது வேறு. இன்று உள்ள "காங்கிரஸ் கட்சி" என்பது வேறு. இன்று இருக்கும் காங்கிரஸ்வாதிகள் ஊழல்வாதிகளாக மாறிப்போனதால் மகாத்மா காந்தி கண்ட கிராமப் பொருளாதாரம் அருவெறுக்கத்தக்கதாக மாறி உள்ளது. 

"ஏன் இந்த நாட்டில் விவசாயிகள் இந்தப் பாழாய்ப் போன விவசாயத்தைக் கட்டி மாறடித்துக் கொண்டிருக்கின்றார்கள்?" என்று புண்ணியவான்கள் கேட்கின்ற அளவிற்குப் புத்திசாலிகளைக் காங்கிரஸ் கட்சி வளர்த்துள்ளது. இங்குள்ள கனிம வளங்கள் என்பது தேசத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றால் மட்டுமே இந்த நாடு வளம் பெறும் என்று பொருளாதார மேதைகள் அருள்வாக்காகச் சொல்லி நம்மை ரட்சிக்கின்றார்கள்.

காந்தியை, நேருவை இன்று கூட விமர்சிக்கின்றார்கள். அவர்களின் கொள்கைகளில் குழப்பங்கள் இருந்ததே தவிர அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூர்ந்து கவனித்தால் அவர்களின் நோக்கம் இந்த தேசத்தை கொள்ளையடித்து தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. காந்தி தனது குடும்பத்தை ஆட்சி அதிகாரம் பக்கம் அண்டவிடவில்லை. ஆனால் நேருவால் பல விதங்களில் மெருகூட்டப்பட்டும் இந்திரா காந்தியால் சோபிக்க முடியவில்லை.  அதிகார போதை என்பது அனைத்தையும் விட மேலானது என்பதைத்தான் அவரின் ஒவ்வொரு வீழ்ச்சியும் நமக்கு இன்று பாடமாக கற்றுத் தந்து கொண்டிருக்கின்றது. 

மற்ற கட்சிகளின் ஊழல்களை எளிதில் எவரும் விமர்சித்து விட முடியும். போபர்ஸ் பீரங்கி ஊழல் முதல் இன்று திமுகவும் மாட்டிக் கொண்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வரைக்கும் இதன் சரித்திர கதை மிக நீண்டது. பசுத் தோல் போர்த்திய இந்தக் காங்கிரஸ் என்ற பெருச்சாளியின் வண்டவாளம் நேரு காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. 

அப்போது பிரிட்டனின் ஹை கமிஷனராகப் பணிபுரிந்த வி.கே.கிருஷ்ணமேனன் விதிமுறைகளை மீறி ராணுவத்திற்கு ஜீப் வாங்கும் 80 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் கையெழுத்திட்டார். 

அப்போது இந்திய ராணுவத்திற்கு 4603 ஜீப்கள் தேவைப்பட்டது. 80 லட்சம் ரூபாய்க்கு 1500 ஜீப்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆன போதும் வாங்கப்பட்ட ஜீப்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனம் ஜீப்களை ஒப்படைக்கும் முன்பே ஒப்பந்தத்தில் கூறப்பட்ட பெரும்பாலான பணம் அந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டு விட்டது. 1949 ஆம் ஆண்டு 150 ஜீப்கள் மட்டும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரோ அந்த ஜீப்புகள் இராணுவம் பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். 

இந்த ஊழலைப்பற்றி விசாரிக்க நேரு அரசினால் அனந்தசயனம் ஐயங்கார் தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரனை கமிஷன் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிட்டது. ஆனால் நேரு நீதிமன்ற விசாரனைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த வல்லாப் பந்த் செப்டம்பர் 30, 1955ல் ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி ஊழல் வழக்கு முடிக்கப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் திருப்தி அடையாவிட்டால் இப்பிரச்சனை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

இதில் ஆச்சரியப்படக்கூடிய அம்சம் என்னவென்றால் இந்த ஊழலில் தொடர்புடைய வி.கே.கிருஷ்ணமேனன் (பிப்ரவரி 3 1956) இலாகா இல்லாத அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவரே தான் பின்னாளில் நேருவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார். இவரையே பின்னாளில் நேரு, மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நியமித்தார். 

காங்கிரஸின் ஊழல் பயணம் என்பது 1948ல் தொடங்கியது. 2014 கடைசிக் கட்ட நேரம் வரைக்கும் தொட்டுத் தொடர்ந்தது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் காங்கிரஸில் சில நல்ல முகங்கள் தென்பட்டு கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியது. அது காமராஜர், கக்கன் போன்ற தன்னலமற்ற மனிதர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டது. அபுல்கலாம் ஆசாத் போன்ற மதச்சார்பற்ற தலைவர்கள் மூலம் புதுப்பொலிவை பெற முடிந்தது. 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் இவர்களைப் போன்ற தலைவர்களின் முகங்களை வைத்துத்தான் காங்கிரஸ் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது. 

இவையெல்லாம் 1970 ஆம் ஆண்டோடு முடிந்து போனது. 

காங்கிரஸ் கட்சிக்கு காந்தி தேவைப்பட்டார். ஆனால் காந்தியின் கொள்கை தேவைப்படவில்லை. 

1980க்குப் பிறகு காந்தியைப் போலக் காமராஜரின் கொள்கைகளும் இங்கே கேள்வி கேட்பாரன்றிப் போய்விட்டது. நாங்கள் காந்தியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் சாராய அதிபர் விஜய் மல்லையாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். 

காரணம் காந்தியார் பயன்படுத்திய பொருட்கள் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது அதனை அதிக விலை கொடுத்து எடுத்தவர் இந்த மல்லையா தான். காந்தியின் கொள்கைகளே கலாவதியான பின்பு அவர் பயன்படுத்திய பொருட்களுக்கு இவர்கள் எங்கே மரியாதை தரக்கூடும்?

(அடுத்த பதிவில் இறுதியாக சில வார்த்தைகளுடன் முடிவுக்கு வருகின்றது)

தொடர்புடைய பதிவுகள்10 comments:

மகிழ்நிறை said...

அப்போ காங்கிரஸ் எதற்காக தொடங்க பட்டதோ அதை கொஞ்சமும் மறக்காமல் இப்போவரை பாடுபட்டு காப்பாத்திகிட்டு இருக்காங்கன்னு சொல்லுங்க:))
//
"ஏன் இந்த நாட்டில் விவசாயிகள் இந்தப் பாழாய்ப் போன விவசாயத்தைக் கட்டி மாறடித்துக் கொண்டிருக்கின்றார்கள்?" // வெவரமாய் தான் பேசுறாங்க மீத்தேன் வியாபாரிகள்:(( அதுக்குள்ளே தொடர் முடியப்போகுதா?!

Unknown said...

காங்கிரஸ் அன்றும் இன்றும் எப்படி என்பதை அழகாய் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் !

திண்டுக்கல் தனபாலன் said...

இத்தனை தகவல்கள் எங்கிருந்து திரட்டுகிறீர்கள்...?

'பரிவை' சே.குமார் said...

காங்கிரஸ் விதை போட்டது முதல் பழம் தின்றது வரை எவ்வளவு தகவல்கள்... அருமை அண்ணா...

Rathnavel Natarajan said...

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் - 5 = முந்தைய பதிவின் தொடர்ச்சி.
நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி குமார்.

ஜோதிஜி said...

ஒருவர் பிடிஎப் கோப்பாக அனுப்பி வைத்திருந்தார். அவருக்குத்தான் நீங்க நன்றி சொல்ல வேண்டும் தனபாலன்.

ஜோதிஜி said...

அவர்கள் என்றுமே இப்படித்தான் இருப்பார்கள்?

ஜோதிஜி said...

நல்லாயிருக்கு மைதிலி.

மீத்தேன் வியாபாரிகள்.