Saturday, June 28, 2014

10 கேள்விகள்


பத்துக் கேள்விகள் கொடுத்து பல நண்பர்கள் தொடர் பதிவு என்ற வலைக்குள் என்னையும் சேர்ந்து இருந்தார்கள். அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. 

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்? 

நான் அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். தாத்தா (அப்பாவின் அப்பா) பழைய வீட்டில் இருந்தார். நாங்கள் ஊருக்குள் அப்போது கட்டியிருந்த புது வீட்டில் இருந்தோம். தாத்தாவிற்குத் தினந்தோறும் இனிப்பு மற்றும் கார வகைகளைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியது என் பொறுப்பாக இருந்தது. ஒரு தடவை நான் சென்ற போது அவருக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நாட்டு வைத்தியர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தேன். "டாக்டர் இப்பவெல்லாம் என்னால் சாப்பிடவே முடியவில்லை" என்று அங்கலாய்ப்புடன் சொல்லிக் கொண்டே சூடான பதினெட்டாவது இட்லியை தாத்தா உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். 

கூடவே அம்மியில் அரைத்த மிளகாய், செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய் சேர்த்து குழப்பி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். மருத்துவர் சிரித்துக் கொண்டே வெளியே சென்ற காட்சி இன்று மனதில் நிழலாடுகின்றது. அப்போது தாத்தாவின் வயது 84. அதே போல அப்பா இறந்த போது வயது 69. அப்பனுக்குத் தப்பாத பிள்ளை போலத்தான் இருந்தார். சாப்பாடு மேல் தீரா ஆர்வம் கொண்ட எனக்கும் இவர்களைப் போல வாழ்ந்து விடத்தான் ஆசை. ஆனால் கடந்த 14 வருடங்களாக உணவு முதல் என் அனைத்து பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி மருந்துவம் தேவைப்படாத ஆரோக்கிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன்.

'பதின்ம வயதை' வளரும் குழந்தைகளுக்கு பிரச்சனையான காலம் என்கிறார்கள். இதைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் 40 வயதின் தொடக்கமும் பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பது கண்கூடு.  புதிய காதல் தோன்றும். விரும்பாத பழக்கங்கள் அறிமுகமாகும். பதவி, பணம் பொறுத்து இன்னும் பலதும் வாழ்க்கையில் அறிமுகமாகும். ஆனால் இவையெல்லாம் தாண்டி வந்த போதிலும் உணவில் அதிக ஆர்வம் செலுத்தும் எனக்கு உடம்பு ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

மனம் ஆசைப்படாலும் 'வேண்டான்டா மகனே' என்று எச்சரிக்கும் போது ஏன் இந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று தோன்றுகின்றது.  இன்னும் ஏராளமாய் அடக்க வேண்டியது உன் பட்டியலில் உள்ளது என்று மனம் சொல்ல ஆசை மட்டும் எல்லையைத் தாண்டிச் செல்வேன் என்று பிடிவாதம் பிடிக்க நான் வாழும் ஒவ்வொரு நாளும் ரணகளமாகத்தான் போய்க் கொண்டேயிருக்கின்றது. மனைவி என்னை குழந்தை போல பாதுகாக்க நான் பிடிவாதம் பிடிக்க சாப்பாடு வகைகள் 'சப்பென்று' தான் இருக்கின்றது.

நூறு வயது என்பது தேவையில்லாத ஒன்று. நாற்பது வயதை தாண்டும் போதே பல உறுப்புகள் அடம் பிடிக்கத் தொடங்குகின்றது. ஒவ்வொன்றையும் அடக்கு அடக்கு என்று எச்சரிக்கின்றது. விரும்பியவற்றை உண்ண முடியவில்லை. வேடிக்கை பார்க்கும் சூழ்நிலையில் தான் வாழ வேண்டியதாக இருக்கின்றது. 

அறுபது வயது கடந்தவுடன் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் நாம் செய்த நல்ல காரியங்களின் மூலம் கிடைத்த வெகுமதியாகத்தான் இருக்கும் என்றே கருதுகின்றேன். நாம் வாழும் வாழ்ககை என்பது வயதோடு சம்மந்தப்பட்டது அல்ல என்பதை உறுதியாக நம்புகின்றேன். வாழும் வரையிலும் மனைவிக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், காட்ட வேண்டிய அக்கறையை சரியான முறையில் நிறைவேற்றி காட்டி விட்டாலே போதும் என்றே நினைக்கின்றேன்.

தாத்தவும், அப்பாவும் நொடிப் பொழுதில் இறந்து போனார்கள். இறக்கும் வரையிலும் விரும்பியபடி உண்டு, விருப்பப்படி வாழ்ந்து விட வேண்டும் என்று விரும்புகின்றேன். 

ஏதோவொரு நாளில் தாத்தா, அப்பாவுக்கு அமைந்தது போல அப்படியான மரணம் அமைந்து விட வேண்டும் என்றே விரும்புகின்றேன். 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 

இந்தியாவில் உள்ள வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளுக்குச் சென்று வர விரும்புகின்றேன். அவர்களின் கலாச்சாரம், மொழி, வாழ்க்கைத்தரம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கின்றது என்பதைக் கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். 

3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக? 

கடைசி என்ற வார்த்தையே தவறு. அலுவலகத்திலும் சிரி, வீட்டிலும் சரி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சிரித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். மற்றவர்களையும் சிரிக்க வைத்து விடுவேன். அலுவலக பணியாளர்களுடன் நான் சிரித்துப் பேசினால் அடுத்து ஏதோவொரு ஆப்பு என்று அவர்களே சொல்லிவிடுகின்றார்கள். வீட்டில் மனைவி இதைத் தினந்தோறும் ஒரு முறையாவது சொல்லிவிடுகின்றார். 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

பக்கத்தில் உள்ள மின்சாரக் கம்பியின் பழுது காரணமாகப் பல முறை இப்படி நடந்துள்ளது. இரவு நேரத்தில் மட்டும் (தூங்க ஆறு மணி நேரம்) மின்சாரம் இருந்தால் போதும் என்று மட்டும் தான் நான் நினைப்பேன். மற்ற நேரங்களில் பகல்பொழுது என்றால் பழைய பத்திரிக்கைகளை வீட்டுக்கு வெளியே பரப்பி வைத்துக் கொண்டு குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பேன். 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

அதற்கு இன்னமும் உத்தேசமாக 15 வருடங்கள் இருக்கின்றது. அப்போது நான் இருந்தாலும் அறிவுரையாக எதையும் சொல்ல மாட்டேன். எப்போதும் என் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது ஒரு நாள் வாழ்க்கை அனுபவங்கள் தான் உனக்குப் பாடம். நீ தான் புரிந்து கொள்ள வேண்டும். உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் மாற்றிக் கொள். மற்றவர்களை எப்போதும் குறை சொல்லாதே. உன் வாழ்க்கை உன் கையில் மட்டுமே. 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்? 

உலகத்துப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் உண்டு. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் வங்கியில் கடன் வாங்கிச் சவடால் கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெரிய மனிதர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு ஒரு மாதத்திற்குள் வசூலிப்பேன். அப்படிக் கொடுக்காதவர்களின் சொத்துக்களை அரசாங்க உடமையாக்குவேன். இது செய்தாலே நாட்டில் பாதிப் பிரச்சனை தீர்ந்து விடும். புண்ணியவான்கள் ஏப்பம் விட்டது கொஞ்சமா? 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம். ஒவ்வொரு முறையும் குழப்பங்கள் உருவாகும் போது அவரிடம் தான் கேட்கின்றேன். 

8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்? 

சம்மந்தப்பட்டவர் யார் என்று தெரிந்து கொண்டு அமைதியாக இருப்பேன். ஏற்கனவே இணைய நண்பர் ஒருவர் அந்த வேலையைச் செய்தார். உடல்ரீதியான பாதிப்பில் இப்போது செயல்பட முடியாத நிலையில் இணையம் பக்கம் வரமுடியாமல் படுத்த படுக்கையாக இருக்கின்றார். 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? 

எந்த அறிவுரையும் சொல்ல மாட்டேன். அவர் முடிவு செய்ய வேண்டிய கடமைகள், தீர்மானங்கள், வேலைகள் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? 

வீட்டைச் சுத்தம் செய்வேன். முடிந்தால் சமையல் செய்ய முயற்சிப்பேன். கொஞ்சம் நேரம் வாசலில் அமர்ந்து தெருவில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். பல நாட்கள் பேச முடியாத நண்பர்களை, உறவினர்களை நினைவில் வைத்து ஒவ்வொருவராக அலைபேசியில் அழைத்துப் பேசுவேன். படிக்காமல் விட்டுப் போன பழைய பத்திரிக்கைகள், வார இதழ்களில் படிக்காதவற்றைப் படிக்க முயற்சிப்பேன். மற்ற நேரங்களில் எழுதிக் கொண்டிருப்பேன். 

26 comments:

”தளிர் சுரேஷ்” said...

வழக்கம் போல நீண்ட பதில்கள்! ஆனால் சுவாரஸ்யமாகவும் படிப்பினை ஊட்டுவதாகவும் அமைந்த பதில்கள்! நான் இதுவரை படித்த பதில்களில் உங்கள் பதிவு சிறப்பானதாக தோன்றுகிறது! அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் குறித்து விவரித்தமை சிறப்பு! நன்றி!

Amudhavan said...

இந்தப் பத்துக் கேள்விகள் பகுதியில் உங்களையும் சேர்த்து (கோர்த்து) விட்டுவிட்டார்களா? சரி; 'கிடைத்த எந்த மேடையாயிருந்தாலும் உன்னுடைய கருத்து என்ன என்பதைச் சொல்லிவிட்டுப் போய்விடு. மேடை எதுவாயிருந்தாலும் நான் பாடுகின்ற பாட்டு என்னுடையதாக இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வேன்' என்றார் கண்ணதாசன். அந்த வார்த்தைகள்தாம் நினைவு வந்தன.
இந்த வரிசையில் வந்த பதில்கள் அனைத்தையும் நான் படிக்கவில்லை. திரு ரஹீம் கஸாலியின் பதில்கள் படித்தேன். குறும்பான முறையில் ரசித்துப் படிக்கிறமாதிரி எழுதியிருந்தார். சீரியஸாக எழுதிய பதில்களில் மேலே திரு தளிர் சுரேஷ் சொல்லியிருப்பதுபோல் உங்கள் பதில்கள்தாம் சிறப்பானவையாகத் தோன்றுகின்றன.

Unknown said...

வேறு எவரானாலும் உங்களின் கால்களைக் கொண்டு நடக்க முடியாது என்பது எப்படி உண்மையோ ,உங்களைப் போன்று யாராலும் இவ்வளவு ஆழமாக பதில் சொல்ல முடியாது என்பதும் உண்மை !

திண்டுக்கல் தனபாலன் said...

// மற்றவர்களையும் சிரிக்க வைத்து விடுவேன் // வாழ்வில் இதைவிட என்ன வேண்டும்...?

5 - மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

படுத்த படுக்கையாக - யாரது...? ஒருத்தர் அல்ல என்பது மட்டும் தெரியும் (!)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

எத்தனையோ கேள்வி பதில்கள் பார்த்து கருத்தும் அளித்துள்ளேன். ஆனால் தங்களின் எண்ண கரு ஒரு வித்தியாசமாக உள்ளது நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் said...

வித்தியாசமான கருத்துச்சிந்தனை !

Avargal Unmaigal said...


எதை எடுத்தாலும் அதை சிறப்பாகத்தான் செய்வேன் என்று உறுதி எடுத்தவரின் பதிலை இங்கே காண்கிறேன்.பாராட்டுக்கள் ஜோதிஜி..


வயதில் நீங்கள் இளையவர்தான் ஆனால் அறிவில் நீங்கள் மிகப் பெரியவர். உங்களை கணவராக பெற்றதற்கு உங்கள் மனைவியும் தந்தையாக பெற்றதற்கு உங்கள் குழந்தைகளும் மிகப் பெருமைதான் கொள்ள வேண்டும் அவர்கள் அப்படி பெருமை கொள்கிறார்களோ இல்லையோ உங்களை நண்பாரக சொல்லிக் கொள்வதில் நான் மிகப் பெருமை கொள்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
ஒழுககம்
அறிவு
துணிவு
மூன்றும் நிரம்பிய பதில்கள்
நன்றி ஐயா

எம்.ஞானசேகரன் said...

பதில்கள் அருமை. இலட்சிய வாழ்க்கை முறையை இம்மி பிசகாமல் பின்பற்றி வருகிறீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

எவ்வளவு அழகான பதில்கள்! தங்களிடமிருந்து இப்படி வித்தியாசமான, அறிவுபூர்வமான, சிந்திக்கவைக்கும் பதில்கள் வரும் என்று எதிர்பார்த்தோம்! அப்படியே! மிக அழகு, புத்திபூர்வமான பதிலகள்! தங்கல் வாழ்வே அதில் பளிச்சென்று எதிரொலிக்கின்றது! அருமை அருமை!

Rathnavel Natarajan said...

அறுபது வயது கடந்தவுடன் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் நாம் செய்த நல்ல காரியங்களின் மூலம் கிடைத்த வெகுமதியாகத்தான் இருக்கும் என்றே கருதுகின்றேன். நாம் வாழும் வாழ்ககை என்பது வயதோடு சம்மந்தப்பட்டது அல்ல என்பதை உறுதியாக நம்புகின்றேன். வாழும் வரையிலும் மனைவிக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், காட்ட வேண்டிய அக்கறையை சரியான முறையில் நிறைவேற்றி காட்டி விட்டாலே போதும் என்றே நினைக்கின்றேன். = நண்பர் திரு ஜோதிஜியின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

Pandiaraj Jebarathinam said...

இதுவரை படித்ததில் மிக நேர்த்தியான உண்மையான பதில்கள்.

ஜோதிஜி said...

உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி சுரேஷ்

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனத்தைப் படித்தவுடன் சிரித்து விட்டேன். பலரும் எழுதும் எழுத்தைப் போல என்னை பக்கா சீரியஸ் பார்ட்டீ என்றே நம்புகின்றார்கள். பாவம் அவர்கள்.

ஜோதிஜி said...

நன்றி பகவான்ஜி

ஜோதிஜி said...

ஆகா எங்கோயோ கோர்த்து விடுற மாதிரி தெரியுதே? மீ எஸ்கேப்பூ

ஜோதிஜி said...

நன்றி ரூபன்

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

எனக்கும் உங்களை நெருங்கிய நண்பராக அடைந்தது பெருமையாகவே உள்ளது நண்பா. உங்கள் அன்புக்கு அக்கறைக்கு மிக்க நன்றி. வீட்டில் வந்து கேட்டுப் பாருங்க. கொலவெறி பட்டியலில் தான் என்னை வைத்திருக்கின்றார்கள். அத்தனை சீக்கிரம் பாராட்டிவிடமாட்டார்கள் நான்கு பெண்களும்.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கவிப்ரியன். பலவற்றை முயன்று பார்க்கின்றேன். சில பழக்கங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. மறுபடியும் ட்ரையல் அண்ட் எர்ரர் தான் தான்.

ஜோதிஜி said...

உங்களின் மனப்பூர்வமான அழைப்புக்கு நன்றி.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

நன்றி பாண்டியன்.

ezhil said...

அருமையான பதில்கள் ஜோதிஜி....உண்மையில் நானும் உங்களை சீரியஸ் ஆசாமின்னு தான் நினைத்தேன்...உங்களை அழைக்கவே முதலில் யோசித்தேன்.

ஜோதிஜி said...

இப்போது தான் உங்கள் விமர்சனத்தைப் பார்த்தேன். சிரித்து விட்டேன் எழில்