Saturday, May 17, 2014

(தேர்தல்) திருவிழாக்களில் தொலைந்து போனவர்கள்

தேர்தல் 2014 கொண்டாட்டம் முடிந்தது விட்டது. ஆமாம். உண்மையிலேயே இதுவொரு திருவிழா கொண்டாட்டம் தான். திருவிழாவில் அலங்காரம் செய்து ஊர்வலமாகக் கொண்டுவரப்படும் பலதரப்பட்ட சாமி சிலைகள் போல ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வேடிக்கை காட்டி அடுத்த ஐந்து வருடங்கள் காணாமல் போய்விடும் (ஜனநாயக) திருவிழா. 

இனி அடுத்த ஐந்து வருடங்களுக்கு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சம்மந்தம் இல்லை. அரசியல்வாதிகள் எப்போதும் போல அவர்களின் மூதலீடு குறித்த கவலைகளில் உழைக்கத் தொடங்குவர். இதைப்போல இந்திய ஜனநாயகத்தின் ஆட்டுவிப்பவர்களாக உள்ள அதிகாரவர்க்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட சோளக் கொள்ளை பொம்மைகளை வேடிக்கை பொருளாகப் பார்த்துக் கொண்டிருப்பர். 

மக்களாட்சி என்ற பெயரில் மக்களுக்கும், மக்கள் விரும்பும் நலவாழ்வுக்கும் சம்மந்தம் இருக்காது. எட்டாக்கனியை ஏக்கத்துடன் பார்த்து அடுத்த ஐந்து வருடத்திற்கு மக்கள் காத்திருப்பர். இப்போது வந்துள்ள நரேந்திர மோடி போல வேறொரு தேவ தூதனுக்காகக் காத்திருப்பர். 

நம்பிக்கை தானே வாழ்க்கை.


இந்த வருடம் தேர்தல் குறித்து, எண்ணிய எண்ணங்களை எழுத்தாக மாற்ற எண்ணம் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் பலதரப்பட்ட பதிவுகளை, இணையப் பத்திரிக்கைகளை அமைதியாகப் படித்துக் கொண்டே வந்தேன். சென்ற வருடம் நான் அரசியலை பார்த்த பார்வைக்கும், இப்போது இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களின் வெளியே தெரியாத முகம் போன்றவற்றைப் பல நண்பர்களிடம் உரையாடல் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையான அரசியலுக்கும், நடைமுறை அரசியலுக்கும் உள்ள உண்மை முகத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

நிறையப் பலதரப்பட்ட சமூகம் சார்ந்த பல சிந்தனைகளைப் பதிவுகளின் வாயிலாக விதைக்க முடிந்ததுள்ளதை நினைத்து மனதிற்குள் கொஞ்சம் மகிழ்ச்சி இருந்த போதிலும் செயலாக்கத்தில் நாம் என்ன சாதித்து உள்ளோம் என்ற எண்ணம் மட்டும் இடைவிடாது மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. நாம் இருக்கும் இடத்தை, பணியாற்றும் சூழ்நிலையில் சில நல்ல காரியங்களைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் உருவாகி அது சார்ந்த விசயங்களைக் கவனம் எடுத்து செய்து கொண்டு வருகின்றேன். அது குறித்து விரைவில் எழுதுகின்றேன். 

பதிவில் எழுதாத சமயங்களில் மற்ற சமூகத் தளங்களில் குறிப்பாக முகநூலில் மட்டும் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்து அதன் நீக்கு போக்குகளைக் கவனித்து வந்தேன். அப்போது நான் ரசித்த படமிது. 

***
ஒருவர் எழுதிய பதிவை முதல் ஆளாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் எழுதி வைக்க வேண்டிய விமர்சனம் இருந்தால் கட்டாயம் எழுதி வைத்து விட்டு வந்து விடுவதுண்டு. 

தாமதமாக உள்ளே நுழைந்தால் கட்டாயம் முதலில் அந்தப் பதிவுக்கு வந்த விமர்சனங்களைப் படித்து விட்டு அந்தப் பதிவை படிப்பதுண்டு. இதன் மூலம் எழுதியவரின் உழைப்புக்கு, அவரின் சிந்தனைக்குக் கிடைத்த மரியாதையைப் படித்தவர்கள் எந்த அளவுக்கு அங்கீகரித்துள்ளனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். மற்றபடி கும்மி, ஆஜர், த.ம போன்றவற்றை வேடிக்கையாளனாகப் பார்த்து ரசிப்பதுண்டு. 

ஆனால் நடந்து முடிந்த தேர்தல் குறித்து நான் பதிவுகளில்,இணையதளச் செய்தித் தாளில் பார்த்த சில விமர்சனங்களை இந்தச் சமயத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வர வேண்டும் என்று விரும்பினேன். நடந்துள்ளது. தமிழகத்தில் வைகோ ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை.

வைகோ தோற்று விடுவார் என்று ஒருவர் கிரி பதிவில் எழுதியிருந்தார் என்பதை விட அதற்கான காரணத்தை அவர் எழுதியிருந்தார்.

ஆச்சரியமாக இருந்தது. அது தான் நடந்துள்ளது. 

வலைபதிவில் எழுதுபவர்களை விட எப்போதும் வாசிப்பாளர்கள் புத்திசாலிகள் என்ற கருத்து என் மனதில் மேலும் வலுப்பெற்று உள்ளது. 


காத்தவராயன் May 15, 2014 at 6:36 PM

கிரி,

நாளை தேர்தல் முடிவுகள் வருகின்றன. தொகுதிக்காரன் என்ற முறையில் கூறுகிறேன். இந்த தேர்தல் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களிலும் வைகோ “விருதுநகர்” பாராளுமன்ற தொகுதியில் வெல்ல முடியாது. காரணத்தை கூறுகிறேன்.

40 தொகுதியில் வைகோ விருதுநகரை[முன்பு சிவகாசி] மட்டும் தேர்வு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினால் விடை கிடைக்கும்.

சிவகாசி தொகுதியாக இருந்தபோது இந்த தொகுதியில் நாயக்கர்,நாடார்,தேவர்,தாழ்த்தப்பட்டோர் என்ற வரிசையில் வாக்கு வங்கி இருந்தது; நாயக்கர் சமுதாயத்தின் ஏகோபித்த ஆதரவுடன் வைகோ எளிதில் வெற்றி பெற்றார்.

தொகுதி சீரமைப்பில் வைகோவை ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காகவே நாயக்கர் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் “கோவில்பட்டி” சட்டமன்ற தொகுதியை தூத்துக்குடியிலும், நாயக்கர் சமுதாய மக்கள் கணிசமாக இருக்கும்”ராஜபாளையம்-திருவில்லிபுத்தூர்” ஆகிய சட்டமன்ற தொதிகளை தென்காசியில் சேர்த்து நாயக்கர் ஓட்டுக்களை சிதறடித்துவிட்டனர்.

தற்போதைய தொகுதி நிலவரம் தேவர்,நாடார்,தாழ்த்தப்பட்டேர்,நாயக்கர் என்ற வரிசையில் உள்ளது.

அ.தி.மு.க, காங்கிரஸ் – தேவர்
தி.மு.க – நாடார்
பி.ஜே.பி – நாயக்கர்

திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் ஏரியாவில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் பெயர் ஓரளவுக்கு உள்ளது. இவர் தேவர் ஓட்டுக்களை பிரிக்கும் பட்சத்தில் தி.மு.க எளிதில் வெல்லும். அப்படி நடக்காவிட்டால் அ.தி.மு.க வெல்லும்.

வைகோவிற்கு மூன்றாவது இடம்தான்.


THIRUMOORTHI from Coimbatore 

வைகோ விருதுநகரில் தோற்றது, தோல்வி வைகோவிற்கு அல்ல, மக்களுக்கே. இதற்காக வைகோ அவர்களின் மக்கள் பணி மேலும் வேகமாகப் பயணிக்கவேண்டும். வெற்றியும் தோல்வியும் போராட்டகாரனுக்கு என்றுமே இல்லை.

***

திமுகக் குறித்து எழுத்தாளர் அமுதவன் பதிவில் விமர்சனமாக மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாக எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் நண்பர் ராஜா கலைஞர் குறித்துச் சிலம்பாட்டம் சுற்றியிருந்தார். ஆனால் எங்களை விட ஹிண்டு தமிழ் செய்தித்தாளில் வந்த கட்டுரைக்கு ஒருவர் எழுதியிருந்த விமர்சனமிது.

Sundaram

கலைஞர் இவரது வாழ்கை துவக்கத்தில் தமிழுக்கு வாழ்ந்தார் பிறகு கட்சிக்கு வாழ்ந்தார். தனது எஞ்சிய களத்தில் குடும்பத்தினருக்கு வாழ்ந்து, தான் இதுகாறும் வாழ்ந்து தமிழர்களுக்குச் சேர்த்திய பெருமைகளைப் பரம பதம் படத்தில் உள்ள பாம்பு தீண்டி கீழ விடுவிடு என இறங்குவது போல் அடி நிலையிக்கு வந்து விட்டார். அடுத்த மாதம் இவரது பிறந்த நாள் வருகிறது, தனது குடும்பச் சாதனைகளுக்கு ஒரு பட்டியலும், தமிழர்களுக்குச் செய்த துரோகத்திற்கு ஒரு பட்டியலும் தயாரித்து, செய்த துரோகத்திற்குத் தாங்களே ஒரு பிரயத்தனம் தேடி கட்சியை நிரந்தரமாகக் காக்க ஒரு வழி காட்டுங்கள்.

தவறுகளுக்கு வருந்தி தாங்களாகவே விலகிக்கொண்டால் 2016 தேர்தலில் கட்சி பலம் கூடும் .இல்லாவிடில் அறிவாலயத்தில் லியோனி அரட்டை கச்சேரி யை ரசித்துக் கொண்டே , எஞ்சிய காலத்தைக் குடும்பத்தினருடன் கழிக்கவே நேரிடும்! தளபதி, அஞ்சாநெஞ்சன் ஒன்று சேரவேண்டும். வாரிசு அரசியலை தவிர்த்து, ,குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியை வழி நடத்தவேண்டும் -சுந்தரம் 

அதேபோல நண்பன் விந்தைமனிதன் ராஜாராமன் ஜெயலலிதா வெற்றி குறித்த விமர்சனப் பார்வையிது. 

இரண்டுமே முற்றிலும் உண்மை. 

எந்தக் கூட்டணிக்கட்சியும் இல்லாம, எந்த பழைய தவறுகளையும் திருத்திக்காம அதே மாதிரி, இங்கிலாந்து மகாராணி மாதிரி உலா வந்தும்கூட மொத்தமா வாரிச் சுருட்டி இருக்காங்க அந்தம்மா... எதிர்த்து நின்னு பேருக்கு ஒத்தை சீட்டுகூட வாங்கமுடியாம, ஓட்டு சதவீதத்தை வெச்சி நாக்கு வழிக்கிறதா?! எதிர்க்கட்சி அந்தஸ்து ஏற்கனவே போச்சு.. இப்போ ஒத்தை எம்.பி சீட்டுக்குக்குக்கூட வழியத்துப் போயாச்சு.. இதுல எதுக்கு வெட்டி ஜபர்தஸ்து?

***

இது தவிர நடந்து முடிந்த தமிழ்நாட்டு தேர்தல் குறித்து (அலங்கோலம்) மற்றொரு நண்பர் எழுதிய கருத்து இது. 

வேதைதமிழன் தமிழன் 

வேதாரண்யம் பகுதியில் ஒரு ஓட்டிற்கு இரு நூறு முதல் ஐநூறு வரை அதி மு கவினர் கொடுத்தனர். அதில் எங்கள் வீட்டிற்குக் கொடுத்தனுப்பிய நான்கு ஒட்டிற்க்கான எண்ணூறு ரூபாய்களை எனது சகோதரர் வேதாரண்யம் பெரிய கோவில் உண்டியலில் போட்டு விட்டு வந்து விட்டார். பணம் கொடுக்கும் விசயம் சம்பந்தமாகத் தேர்தல் அதிகாரியாக வலம் வந்த ஒரு அரசு (இவர் எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர் 

அலுவலகத்திற்கு வரும் மக்களுக்குப் பணம் எதுவும் வாங்காமல் உதவி அல்லது ஆலோசனை வழங்குபவர் )அதிகாரியிடம் ஒரு தி மு க காரர் கூறியதற்கு ஏன் சார் நான் என்ன பண்ண முடியும் தேர்தல் முடிஞ்சி முடிவு அறிவிக்கும் வரைக்கும் தான் தேர்தல் கமிசன் அதுக்கப்புறம் அந்த அம்மா அரசுக்கு கீழே தான் நாங்க மீண்டும் வேலை பார்க்க வேண்டும் புரிஞ்சுகோங்க முடிந்தால் நீங்களும் கொடுங்க நாங்களும் கண்டும் காணாம இருந்துக்குறோம் அது தான் சார் என்னால பண்ண முடியும் என்று அவர் கூறியது சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆகப் பணம் வேலை செய்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். 

•••

http://books.vikatan.com/index.php?bid=366

எனது வாசிப்பில் உள்ள புத்தகமிது. ஒவ்வொருவர் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகமிது. மேலோட்டமாகப் படித்து முடித்து ஜம்பம் அடிக்க முடியாத அளவிற்கு நம் வாழ்க்கைக்கு உதவக்கூடிய நூலை எழுத்தாளர் அமுதவன் எழுதியுள்ளார். நிச்சயம் சமயம் கிடைக்கும் போது இந்த நூல் குறித்த விமர்சனத்தை எழுதி வைக்க ஆசைப்படுகின்றேன்.


http://books.vikatan.com/index.php?bid=2204

19 comments:

வடுவூர் குமார் said...

வைகோ தோல்விக்கு பின்னால் இப்படி ஒன்றா? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!!

Anonymous said...

மிகவும் நல்ல பதிவு. வைகோ தோல்விக்கு பின்னாளான சாதிய அடிப்படைக் காரணங்கள் அருமை. ஆனால் எனக்குத் தெரிந்து நாயக்கர்கள் பலரும் கூட வைகோவின் அபிமானிகளா இல்லை என்பது தான் முதல் உண்மை. வைகோ அதிமுகவில் சேர்வது உசிதம்.

புத்தகங்கள் அருமை. வாங்கி வாசிக்க முயல்கின்றேன்.

bandhu said...

கருணாநிதிக்குப் பிறகு கட்சி கலகலத்துப் போகும்.. எல்லோரும் தன் பின் வந்து விடுவார்கள் என வைகோ நினைத்திருக்கலாம்.. என்ன செய்ய.. கருணாநிதியின் நீண்ட ஆயுளும், குடும்பத்தினரின் சுதாரிப்பும் (அழகிரி, கனிமொழி ஆக்டிவ் அரசியல் வருகை) வைகோவின் கணக்கில் மண் அள்ளிப் போட்டுவிட்டது என நினைக்கிறேன்..

தனிமரம் said...

நல்ல அலசல் ஐயா!ம்ம்

ப.கந்தசாமி said...

வைகோ ஒரு கோமாளி என்பது என் கருத்து. அவருக்கு என்று ஒரு கொள்கை கிடையாது. சந்தர்ப்பவாதி. தமிழ் ஈழத்தை வைத்து காசு பார்ப்பவர் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

வைகோ நேர்மையாளர் என்பதில் சந்தேகமில்லை. எனக்கும் அவரிடம் பிடித்த நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் திடமான அரசியலுக்கு அவர் சரியில்லை என்று தோன்றுகிறது. தொகுதி பிரிப்பதை இப்படி எல்லாமா யோசித்துச் செய்ய முடியும்? ஆச்சர்யம்தான்.

எம்.ஞானசேகரன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய விரிவாகவே எழுதியிருக்கலாம் ஜோதிஜி. வைகோவை எப்படி நேர்மையாளர்கள் வரிசையில் சேர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. எந்த இயக்கத்திலிருந்து வெளியைறினாரோ அதே இயக்கத்தோடு கைட்டணியும், விடுதலைப்புலிகளைப் பற்றிய பேசியதால் இரண்டாண்டு காலம் ஜெயாவினால் சிறையில் கழித்துவிட்டு, கேவலம் சில தொகுதிகளுக்காக அதே ஜெயா கூட்டணியிலும் சேர்ந்த வைகோவும்கூட ஒரு தேர்ந்த சந்தர்ப்பவாதிதான். அதனால்தான் மரியாதை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறார்.

எம்.ஞானசேகரன் said...

மறந்நுவிட்டேன், அமுதவன் அவர்களின் சர்க்கரை நோய் குறித்த புத்தக அறிமுகத்திற்கும் எனது நன்றி.

saidaiazeez.blogspot.in said...

ரொம்ப நாட்களுக்குப்பின், அதுவும் மிகவும் சிறிய பதிவு!
நாட்டில் பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.

வைகோ போன்ற ஆகச்சிறந்த ஒருத்தரே தேர்தலில் வெல்ல தன்னுடைய ஜாதி ஓட்டு தேவைப்படுகிறது என்பதை எண்ணும்போது தேர்தல் முறையை குறை கூறுவதா அல்லது வைகோவையே குறை கூறுவதா என்பது எனக்கு புரியவில்லை.

இத்தனை பேர் திமுக தோற்றதர்க்கு பல காரணம் கூறினாலும் யாராலும் அதிமுக வென்றதற்கு ஞாயமான ஒரு காரணத்தையும் சொல்ல முடியவில்லை என்பதும் இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது.

அருமையான கார்ட்டூன்

Thulasidharan V Thillaiakathu said...

வெகு ந்க்குப் பிறகு தங்கள் பதிவு! மிகவும் அழகாக தேதல் குறித்து தொகுத்துள்ளீர்கள்! இங்கு பல அரசியல்வாதிகளின் பின்புலம் சாதிதான், கவிழ்பதும் அதுதான்! எந்த ஒரு அரசியல்வாதியின் +, _ விஷயங்களை மக்கள் அலசி ஆராய்வதில்லை. அப்படி மக்கள் செய்தால் நாட்டில் ஒரு நல்ல புதிய அரசியல் கட்சியும், ஏன் ஒரு அரசியல் புரட்சியே நிகழ வாய்ப்புண்டு! இங்கு கட்சிகள்தான் பேசப்படுகின்றனவே தவிர தனிமனித வேட்பாளரைப் பற்றிய ஆய்வு மக்களிடம் இல்லை! இரண்டாவது பணம் பேசுகின்றது. இவையெல்லாம் ஒழிந்து மக்கள் சிந்திக்கத் தொடங்கினால் நாடு கண்டிப்பாக பீடு நடை போடும் உலக அரங்கில்!

அமுதவனின் புத்தகத்தப் படிக்க வேண்டும்! அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே!

Thulasidharan V Thillaiakathu said...

மறந்து விட்டோம் கார்ட்டூன் மிக அருமை!

”தளிர் சுரேஷ்” said...

கார்டூன் சூப்பர்! வைகோ தோற்பார் என்று நான் நினைக்கவில்லை! நல்ல மனிதர் அவர்! அரசியலுக்கு அப்பாற்பட்டு வைகோவை பிடிக்கும். அவர் தோற்றதில் வருத்தமே! மற்றபடி இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பணமும் ஒரு காரணம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை!

Amudhavan said...

என்னுடைய புத்தகங்களைப் பற்றிய விமரிசனம் இருக்குமென்றுதான் வந்தேன். வெறும் அறிமுகத்தோடு நிறுத்தியிருக்கிறீர்கள். உங்களின் அறிமுகத்திற்கே இத்தனைப் பேர் 'ரியாக்ட்' செய்திருக்கிறார்களே..... உங்களுக்கும் 'வாசிக்க இருக்கும்' நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.

திரு சைதை அஜீஸ் சொல்லியிருப்பதுபோல்-
\\இத்தனை பேர் திமுக தோற்றதர்க்கு பல காரணம் கூறினாலும் யாராலும் அதிமுக வென்றதற்கு ஞாயமான ஒரு காரணத்தையும் சொல்ல முடியவில்லை என்பதும் இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது.\\ இதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். யார் என்ன காரணம் சொல்லியபோதிலும் மாநிலம் முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக 'அந்த 144 தடையுத்தரவு போட்டதற்கான காரணம்' என்னவென்பது வெளிவந்தால்தான் அதிமுக வென்றதற்கான காரணமும் தெரியவரும்.

sivakumarcoimbatore said...

its true sir....மிகவும் நல்ல பதிவு.

குறும்பன் said...

37 தொகுதிகளில் அதிமுக வென்றது வியப்பாக இருந்தாலும் வைகோ தோற்றது வருத்தம் தரும் செய்தி. மாநில நலனுக்காக தமிழர் நலனுக்காக மக்களவையில் ஓங்கி ஒலிக்க ஒரு குரல் இல்லாமல் போனது நமக்கு பெரும் இழப்பு. கன்னியாகுமரியில் சுப உதயகுமார் வெற்றி வாய்ப்பு உடையவர்களில் ஒருவர் என்று நினைத்தேன் ஆனால் மக்கள் மக்களுக்கான போராளியான அவருக்கு மிகக்குறைந்த வாக்குகள் கொடுத்து பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.

Ranjani Narayanan said...

தேர்தல் திருவிழாவில் காணாமல் போனவர்களில் திரு அருண் ஜெட்லியும் ஒருவர். அவரது தோல்வியும் வருத்தத்திற்குரியது தான்.

எனக்கு மிகவும் வியப்பாக இருப்பது என்னவென்றால், 2014 தேர்தல் குறித்த தமிழ் விமரிசனங்கள் அனைத்தும் இந்தத் தேர்தல் ஏதோ தமிழகத்திற்கு மட்டும் நடந்த தேர்தல் போல தமிழ் நாட்டைப் பற்றியே இருக்கின்றன. இது நாடு தழுவிய தேர்தல் அல்லவா? தமிழ்நாடு மட்டும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் இருப்பது ஏன்?

அம்மாவின் வெற்றி பாராட்டத்தக்கது என்றாலும், தமிழகத்தின் பிரதிநிதிகள் தலைநகரில் நமது பிரச்னைகளைப் பேசக் கூடியவராக இருக்க வேண்டுமே! மக்கள் அதை எண்ணிப் பார்த்தார்களா என்றே தெரியவில்லையே. அம்மாவிற்கு பயந்து யாரும் பேசமாட்டார்களே. பேசிய மலைச்சாமி பாவம்!

அமுதவனின் சர்க்கரை நோய் பற்றிய புத்தகம் நிச்சயம் வாங்க வேண்டும். கூடிய சீக்கிரம் வாங்குகிறேன்.

KILLERGEE Devakottai said...

கார்ட்டூன் அருமையான கற்பனை ஐயா.
Killergee
www.killergee.blogspot.com

ஊரான் said...

"சென்ற வருடம் நான் அரசியலை பார்த்த பார்வைக்கும், இப்போது இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களின் வெளியே தெரியாத முகம் போன்றவற்றைப் பல நண்பர்களிடம் உரையாடல் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையான அரசியலுக்கும், நடைமுறை அரசியலுக்கும் உள்ள உண்மை முகத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. "

அடுத்த ஆண்டு மேலும் பல மாற்றங்களை உங்களிடம் எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது இந்தப் பதிவு.

வாழ்த்துகள்!

Selvadurai said...

2014 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமக்குத் தரும் சேதி இதுதான்:
1. பா.ஜ.க. மதவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி என்ற செய்தி ஆழமாக மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சி மாற்ற முயல வேண்டும். கடும் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியின் சிறப்பை நிரூபித்து தமிழ் நாட்டில் காலூன்றலாம்.
2. காங்கிரஸ் தனது சிந்தனையற்ற திறமையற்ற ஊழல் நிர்வாகத்தால் மக்கள் செல்வாக்கைத் தக்கவைக்க முடியாமல் போயிற்று. ஈழப் பிரச்சினையின் அணுகுமுறையினால் தமிழ் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டனர். இதனை மாற்றுவது எளிதல்ல.
3. தமிழ்நாடு, மேற்குவங்கம் தவிர்த்து ஏனைய இடங்களில் நிச்சயமாகவே மோடி அலைதான். மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை அவர் புத்திசாலித்தனமாகப் பயன் படுத்திக்கொள்ளுவர் என நம்புவோம். பரவலாக மக்களின் மனோநிலை வெளிப்படையாக பிரதிபலித்துள்ளது. மக்கள் விபரமற்றவர்களல்ல.
4. தமிழ் மக்கள், அமையவிருக்கும் மத்திய அரசில் தமிழ்நாட்டுக்கு கணிசமான பலம் இருக்கவேண்டும் என விரும்பினார்கள். காங்கிரஸ் நிச்சயம் வர முடியாது என்றும் மோடி அலையினால் பா.ஜ.க. கணிசமான இடங்களைப் பெறும் எனவும் அவர் அரசு அமைக்கும் நிலையில் தமிழ் நாட்டின் கரம் மத்தியில் வலுவாக இருக்க வேண்டும் என்றால் ஜெயலலிதாவை நம்புவதைத்தவிர வேறு வழி இல்லை எனவும் தமிழ் மக்கள் நிச்சயமாகவே நம்பினார்கள். வெறும் வாய்ச் சவடாலிலேயே மூன்று ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருந்தும் கூட அ.தி.மு.க இந்த அமோக வெற்றி அடைந்திருப்பதன் காரணம் இதுதான். எதிர்க் கட்சிகள் பிளவுபட்டு நின்றது அவர்களுக்குச் சாதகமாய்ப் போயிற்று. பா.ஜ.க. வின் தனிப்பெரும்பான்மை எதிர்பாராத ஒன்று.
5. வளர்ச்சிப்பாதைக்கேற்ற திறமையான, ஊழலற்ற நிர்வாகமே மக்களின் நிரந்திரமான நன்மதிப்பைப் பெற்றுத்தரும் என்பதை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். மோடி அவர்களின் நாட்டுப்பற்றும், திறமையும், தொலைநோக்கும், கைத்தூய்மையும் இதற்கு வலுசேற்கும் என நம்புவோம்.