Friday, November 09, 2012

மின்சாரக் கனவு - 5 மத்திய தொகுப்பு மின்சாரம்


தொடக்கம் இங்கேயிருந்து

தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தியில் தனியார்கள் உள்ளே வந்து பலரும் ஓடிப்போன கதையைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்பு மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தைப் பற்றி பார்த்துவிடலாம்.

ஏற்கனவே பொதுப்பட்டியல் என்றொரு வார்த்தையை பார்த்தோம். மின்சாரம் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத்திய மாநில அரசுக்கான பொதுபட்டியலில் வைக்கப்பட்ட ஒன்றாகும். 

இரு அரசுகளும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து மின் உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டம் கனவு கண்டது. அதன்படி மத்திய அரசாங்கமும் மின் உற்பத்தியில் ஈடுபட்டது. 

முக்கியமாக அணு உலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மத்திய அரசாங்கம் தான் உற்பத்தி செய்து கொண்டு வருகின்றது.

மத்திய அரசு இந்திய மாநிலங்கள் அனைத்தையும் ஐந்து மண்டலங்களாக பிரித்தது.  

ஒவ்வொரு மண்டலத்திலும் அது புதிய மின் நிலையங்களை அமைத்தது.  ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களுக்கு இந்த மண்டலத்தில் நிறுவப்படும் மின் நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. என்ற கொள்கையை வெளியே சொல்கின்றது.  


ஆனால் நடைமுறை எதார்த்தம் என்பது வேறு.

சமீபத்தில் உத்திரபிரதேசம் எங்களுக்குத் தெரியாமல் உறிஞ்சிவிட்டார்கள் என்று மத்திய அரசாங்கம் சொன்னதை இந்த சமயத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்ளவும்.

தெற்கு மண்டலத்தில் நெய்வேலி, கல்பாக்கம் தவிர, ஆந்திராவின் ராமகுண்டத்தில் உள்ள மின் நிலையமே  1990க்கு முன்னதாக மத்திய அரசால் நிறுவப்பட்ட மின் நிலையமாகும்.  புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு மத்திய அரசால் மின் உற்பத்தியில் பெரியளவில் ஈடுபட முடியவில்லை.  அல்லது விருப்பம் இல்லை.  

நெய்வேலியில் உள்ள முதலாவது நிலையத்தின் விரிவாக்கமாக 420 மெகாவாட்டும், ராமகுண்டத்தில் ஏழாவது யூனிட்டாக 500 மெகாவாட்டும், கர்நாடகா மாநிலத்தில் கைகை அணு மின் நிலையத்தின் 440 மெகாவாட்டும் மட்டுமே புதிதாக மத்திய அரசால் இந்த காலகட்டத்தில் நிறுவப்பட்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களாகும்.  இவ்வாறு மத்திய அரசால் தொடங்கப்பட்ட புதிய மின் நிறுவனங்களில் இருந்து தமிழகத்திற்கு அதன் பங்காக 461 மெகாவாட்டை மட்டுமே  1990க்குப் பிறகு மத்திய அரசு  பிரித்தளித்தது. 

கிழக்கு மண்டலத்தில் உள்ள ஒடிசாவில் 2000 மெகாவாட் திறனுள்ள டால்சர் அனல் மின் உற்பத்தி நிலையம் துவங்கப்பட்டது.  

இது தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தமானது. அதிர்ஷ்டவசமாக கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இந்த மின்சாரம் தேவைப்படவில்லை.  ஆகவே 2000 மெகாவாட் மின்சாரமும் தெற்கு மண்டலத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் தமிழகத்துக்கென ஒதுக்கப்பட்டது 498 மெகாவாட்டாகும். எனவே தான் 1990 இல் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை மாற்றத்திற்குப் பிறகு மத்திய அரசு பெரிதளவில் மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை என்பதை நாம் உறுதியுடன் சொல்லலாம்.


ஆந்திரத்தின் கிழக்கு கோதவரி மாவட்டத்தில் உள்ள சிம்மெட்ரி என்ற இடத்த்ல் உள்ள அனல்மின் நிலையம் தேசிய அனல் மின் கழகத்தால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.  இது 1000 மெகாவாட் திறனுள்ள நிலையமாகும். 

மத்திய அரசின் விதிப்படி இந்த நிலையத்தின் மின்சாரமானது தெற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மின் நிலையத்தின் மொத்த திறனும் ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டு விடுகின்றது.

ஏற்கனவே தமிழ் நாட்டில் 1985 முதல் 86 வரை செயல்முறையாக துவங்கிய காற்றாலை உற்பத்தியானது தமிழகத்தில் மட்டும் பெரும் வளர்ச்சியைக் கண்டது.  இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு அளித்த அதிக அளவிலான வருமான வரிச் சலுகையே முக்கிய காரணமாக இருந்தது.

புதிய பொருளாதார கொள்கை உள்ளே வந்தவுடன் முதல் முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் தனியார்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக மின் உற்பத்தி துறைக்கு வரவேற்றது. 

1991- 92 ஆம் ஆண்டு 42 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஆனால் எதுவும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. காரணம் மத்திய அரசாங்கம் உருவாக்கி இருந்த ஒப்பந்தங்கள் முக்கிய காரணமாக இருந்தது.  இதன் காரணமாக தனியார்களுக்கு சாதகமாக பல முறை திருத்தப்பட்டது.   

1995 ஆம் ஆண்டு தான் இந்த ஒப்பந்தங்கள் முழு வடிவம் பெற்றது.

இந்த சமயத்தில் தான் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் உருவானது.

1996- 98 ஆம் ஆண்டு காலகட்டத்தில் புதிதாக பதவியேற்ற அரசு ஆறு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு போட்டது.  தனிப்பட்ட அக்கறை, ஏராளமான சலுகைகள் என்று தனியார் காட்டில் அடைமழை பெய்தது.  

மின்சாரம் தயாரிக்காமல், அந்த திட்டத்தையே தொடங்காமல் எனக்கு நீ பணம் தர வேண்டும் என்று மிரட்ட முடியுமா?

அதுவும் நடந்தது.  பணமும் கொடுத்தார்கள். 

உதவி புரிந்தவர் இன்றைய மத்திய அமைச்சர்.

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்................

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஷாக் அடித்துக் கொண்டே இருக்கிறது...

என்னென்ன தில்லுமுல்லுகள்...!

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

Sivakumar said...

//உதவி புரிந்தவர் இன்றைய மத்திய அமைச்சர்.// அடப்பாவிகளா...

Anonymous said...

உங்கள் ஷாக் தொடரை எத்தனை பேர் மின்வெட்டு இடையூறு இல்லாது படிக்கிறார்களோ...-:)

ஜோதிஜி said...

ரெவேரி உங்கள் விமர்சனத்தை மிகவும் ரசித்தேன்.

வவ்வால் said...

ஜோதிஜி,

பதிவு தான் நீள்கிறதே ஒழிய உள்ளடக்கத்தில் கொஞ்சமே மேட்டர் மாட்டுகிறது, ரொம்ப பொதுவாக போகிறது. பொதுப்பட்டியலில் வைத்திருந்தாலும் மத்திய அரசு முடிவு செய்து விட்டால் மாநில அரசு அதனை பின்ப்பற்ற தேவையில்லை ,ஆனாலும் மாநில அரசுகள் பின்ப்பற்ற காரணம் அவர்களின் சுய லாபம் ஆகும், அதன் அரசியலை 5 பாகம் ஆன பின்னும் தொடாமல் மத்திய அமைச்சர் வக்கீலாக இருந்து வேலை செய்தை சஸ்பெண்ஸ் வைத்து முடித்துள்ளீர்கள், அதற்கு காரணமே மாநில அரசின் முடிவு தானே.

--------

மத்திய அரசு மின் உற்பத்தியில் மெதுவாக தான் முதலீடு செய்கிறது ஏன் மாநில அரசுமே, எல்லாம் தனியார்களுக்கு கொடுத்தால் அவர்கள் கொடுக்கும் கமிஷனே, தமிழ் நாட்டில் இருந்து ஓடிய தனியார் மின் உற்பத்தியாளர்கள் யார் என சொல்லுங்கள், யாரும் உற்பத்தி செய்து நட்டத்தில் ஓடவில்லை, தனியார் அனைவரும் அரசே இடம் கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்த்து அரசியல் காரணங்களால் அது நிறைவேறாமல் தான் விலகி இருக்கிறார்கள்.

உ.ம்:

கடலூர் ஆலப்பாக்கம் மின் உற்பத்தி திட்டம் பா.ம.க எதிர்ப்பால் திமுக உதவி செய்யவில்லை.

மற்றபடி பல தனியார் திட்டங்கள் இன்னும் ஒப்பந்தத்தில் உள்ளது, சில 50% வேலை முடிந்துள்ளது.

மத்திய அரசின் NTPC மூலம் திருவள்ளூர் 1500 மெ. வாட் திட்டம், மீஞ்சூர் 4000 மெ.வாட் மெக திட்டம் , தூத்துக்குடி என தமிழ் நாட்டில் சில ஓடிக்கொண்டு தானிருக்கிறது.எப்போ முடியும் என்பது தான் கேள்விக்குறி.

மத்திய அரசின் நிதி மாநில அரசுக்கு வர வேண்டும் எனில் மத்திய அமைச்சர்களின் பங்களிப்பு வேண்டும், கேட்டு போராட வேண்டும், சும்மா டெல்லிக்கு போய் வந்தால் வராது , கடந்த 20 ஆண்டுகளாக மத்தியில் திமுக தான் அதிகம் பங்களித்து வருகிறது, அவர்கள் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் :-))

ஜோதிஜி said...

வவ்வால் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. இந்த துறையில் சுவாரசியமாகச் சொல்ல ஏதும் இல்லை. ஏறக்குறைய மண்ணியல் மாதிரி. எனக்கே ஒரு அலுப்பு வருகின்றது. இது தவிர காந்தி அவர்கள் எழுதிய அந்த புத்தகத்தில் உள்ள புள்ளிவிபரங்கள் பற்றி படிக்க படிக்க சோர்வு தான் மிஞ்சுகின்றது.

தொடர் மெதுவாகச் செல்லக் காரணம் சின்னச் சின்ன விசயங்களை துணுக்கு போல எழுதி வைத்தால் பின்னால் உதவும். மின்சாரம் என்று கூகுளில் அடித்துப் பாருங்க. உருப்படியான கட்டுரை எங்கேயும் காணோம். கீற்று கூட தனித் தனியாக எழுதி உள்ளார். இது தவிர நீங்க.

இன்னும் ஒரு நாலு பகுதிகளுக்கு முடித்து விடுகின்றேன். இதில் சுவாரசியத்தை எதிர்பார்க்க வேண்டாம்.