Showing posts with label மின் மிகை மாநிலம். Show all posts
Showing posts with label மின் மிகை மாநிலம். Show all posts

Friday, November 09, 2012

மின்சாரக் கனவு - 5 மத்திய தொகுப்பு மின்சாரம்


தொடக்கம் இங்கேயிருந்து

தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தியில் தனியார்கள் உள்ளே வந்து பலரும் ஓடிப்போன கதையைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்பு மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தைப் பற்றி பார்த்துவிடலாம்.

ஏற்கனவே பொதுப்பட்டியல் என்றொரு வார்த்தையை பார்த்தோம். மின்சாரம் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத்திய மாநில அரசுக்கான பொதுபட்டியலில் வைக்கப்பட்ட ஒன்றாகும். 

இரு அரசுகளும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து மின் உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டம் கனவு கண்டது. அதன்படி மத்திய அரசாங்கமும் மின் உற்பத்தியில் ஈடுபட்டது. 

முக்கியமாக அணு உலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மத்திய அரசாங்கம் தான் உற்பத்தி செய்து கொண்டு வருகின்றது.

மத்திய அரசு இந்திய மாநிலங்கள் அனைத்தையும் ஐந்து மண்டலங்களாக பிரித்தது.  

ஒவ்வொரு மண்டலத்திலும் அது புதிய மின் நிலையங்களை அமைத்தது.  ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களுக்கு இந்த மண்டலத்தில் நிறுவப்படும் மின் நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. என்ற கொள்கையை வெளியே சொல்கின்றது.  


ஆனால் நடைமுறை எதார்த்தம் என்பது வேறு.

சமீபத்தில் உத்திரபிரதேசம் எங்களுக்குத் தெரியாமல் உறிஞ்சிவிட்டார்கள் என்று மத்திய அரசாங்கம் சொன்னதை இந்த சமயத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்ளவும்.

தெற்கு மண்டலத்தில் நெய்வேலி, கல்பாக்கம் தவிர, ஆந்திராவின் ராமகுண்டத்தில் உள்ள மின் நிலையமே  1990க்கு முன்னதாக மத்திய அரசால் நிறுவப்பட்ட மின் நிலையமாகும்.  புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு மத்திய அரசால் மின் உற்பத்தியில் பெரியளவில் ஈடுபட முடியவில்லை.  அல்லது விருப்பம் இல்லை.  

நெய்வேலியில் உள்ள முதலாவது நிலையத்தின் விரிவாக்கமாக 420 மெகாவாட்டும், ராமகுண்டத்தில் ஏழாவது யூனிட்டாக 500 மெகாவாட்டும், கர்நாடகா மாநிலத்தில் கைகை அணு மின் நிலையத்தின் 440 மெகாவாட்டும் மட்டுமே புதிதாக மத்திய அரசால் இந்த காலகட்டத்தில் நிறுவப்பட்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களாகும்.  இவ்வாறு மத்திய அரசால் தொடங்கப்பட்ட புதிய மின் நிறுவனங்களில் இருந்து தமிழகத்திற்கு அதன் பங்காக 461 மெகாவாட்டை மட்டுமே  1990க்குப் பிறகு மத்திய அரசு  பிரித்தளித்தது. 

கிழக்கு மண்டலத்தில் உள்ள ஒடிசாவில் 2000 மெகாவாட் திறனுள்ள டால்சர் அனல் மின் உற்பத்தி நிலையம் துவங்கப்பட்டது.  

இது தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தமானது. அதிர்ஷ்டவசமாக கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இந்த மின்சாரம் தேவைப்படவில்லை.  ஆகவே 2000 மெகாவாட் மின்சாரமும் தெற்கு மண்டலத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் தமிழகத்துக்கென ஒதுக்கப்பட்டது 498 மெகாவாட்டாகும். எனவே தான் 1990 இல் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை மாற்றத்திற்குப் பிறகு மத்திய அரசு பெரிதளவில் மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை என்பதை நாம் உறுதியுடன் சொல்லலாம்.


ஆந்திரத்தின் கிழக்கு கோதவரி மாவட்டத்தில் உள்ள சிம்மெட்ரி என்ற இடத்த்ல் உள்ள அனல்மின் நிலையம் தேசிய அனல் மின் கழகத்தால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.  இது 1000 மெகாவாட் திறனுள்ள நிலையமாகும். 

மத்திய அரசின் விதிப்படி இந்த நிலையத்தின் மின்சாரமானது தெற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மின் நிலையத்தின் மொத்த திறனும் ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டு விடுகின்றது.

ஏற்கனவே தமிழ் நாட்டில் 1985 முதல் 86 வரை செயல்முறையாக துவங்கிய காற்றாலை உற்பத்தியானது தமிழகத்தில் மட்டும் பெரும் வளர்ச்சியைக் கண்டது.  இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு அளித்த அதிக அளவிலான வருமான வரிச் சலுகையே முக்கிய காரணமாக இருந்தது.

புதிய பொருளாதார கொள்கை உள்ளே வந்தவுடன் முதல் முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் தனியார்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக மின் உற்பத்தி துறைக்கு வரவேற்றது. 

1991- 92 ஆம் ஆண்டு 42 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஆனால் எதுவும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. காரணம் மத்திய அரசாங்கம் உருவாக்கி இருந்த ஒப்பந்தங்கள் முக்கிய காரணமாக இருந்தது.  இதன் காரணமாக தனியார்களுக்கு சாதகமாக பல முறை திருத்தப்பட்டது.   

1995 ஆம் ஆண்டு தான் இந்த ஒப்பந்தங்கள் முழு வடிவம் பெற்றது.

இந்த சமயத்தில் தான் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் உருவானது.

1996- 98 ஆம் ஆண்டு காலகட்டத்தில் புதிதாக பதவியேற்ற அரசு ஆறு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு போட்டது.  தனிப்பட்ட அக்கறை, ஏராளமான சலுகைகள் என்று தனியார் காட்டில் அடைமழை பெய்தது.  

மின்சாரம் தயாரிக்காமல், அந்த திட்டத்தையே தொடங்காமல் எனக்கு நீ பணம் தர வேண்டும் என்று மிரட்ட முடியுமா?

அதுவும் நடந்தது.  பணமும் கொடுத்தார்கள். 

உதவி புரிந்தவர் இன்றைய மத்திய அமைச்சர்.

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்................

Thursday, November 08, 2012

மின்சாரக் கனவு - 4 தமிழ்நாட்டின் (மின்சார) பொற்காலம்

தொடக்கம்

முதல் பகுதி

இரண்டாவது பகுதி

மூன்றாவது பகுதி

இப்போதுள்ள மின்சார பற்றாக்குறையில் தமிழ்நாடு தவித்துக் கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் நமக்கு சில பழைய மகிழ்ச்சியான நடைமுறையில் சாத்தியமான விசயங்களையும் பார்த்து விடுவது நல்லது. 

தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் பொற்காலம் ஒன்று இருந்தது.  முழுமையான தன்னிறைவு பெற்றதாக நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியமும்  இருந்தது என்றால் நம்ப முடியுமா?

1977 ஆம் ஆண்டு திரு. மெரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா கட்சியானது மத்தியில் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தைச் சேர்ந்த பா.ராமச்சந்திரன் மத்திய மின்துறை அமைச்சராக பதவியேற்றார். 

அவருடைய முயற்சியால் தேங்கிக் கிடந்த தூத்துக்குடி அனல் மின் நிலையப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.  1979 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தூத்துக்குடியின் முதல் 210 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் தன் உற்பத்தியை தொடங்கியது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அங்கு 210 மெகாவாட் திறனுள்ள மூன்று அனல் மின் மையங்கள் தம் உற்பத்தியைத் தொடங்கின.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் கூட்டப்பட்டதுடன் கட்டுமானத்தில் இருந்த மேட்டூர் அனல் மின் நிலையமும் திட்டமிட்ட காலத்திலேயே தன் உற்பத்தியைத் துவங்கியது. அதன் நான்கு மையங்களும் ஒன்றன் பின் ஒன்றாக 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை தம் மின உற்பத்தியை தொடங்கின.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி உயர காரணமாக இருந்தவர் ஒரு ஃபோர்மென் என்றால் நம்பமுடிகின்றதா?   

அங்கு வரும் நிலக்கரியில் அதிக அளவு கற்கள் கலந்து இருப்பதை தவிர்த்து சுத்தமாக்கினால் போதும் என்று அந்த ஃபோர்மென் சொல்ல அப்போது பணியில் இருந்த ராஜரத்தினம் என்ற செயற்பொறியாளர் அவர் யோசனையை ஏற்று செயலாக்கத்தில் காட்டினார்.  சொன்னபடியே அந்த அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முதல் முறையாக தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட 68,49 சதவிகிதம் என்ற இலக்கை எட்டியது.

மனிதர்களை பதவிக்கு அப்பாற்பட்டு மதித்து அவர்கள் யோசனைகளை கேட்கும் போது தான் பல சாதனைகள் பல நிறுவனங்களில் நடந்து கொண்டிருக்கின்றது.

1989 ஆம் ஆண்டில் வட சென்னை அனல் மின் நிலையத்திற்காக தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை வி.ஜி.பி. கோல்டன் பீச் என்ற நிறுவனம் தனக்கு சொந்தமானது என்று சாதகமான நீதிமன்ற தீர்ப்பு பெற்று இருந்த போதிலும் 1989 ஆம் ஆண்டு பதவியேற்ற அரசு  இந்த பிரச்சனையில் நேரிடையாக தலையிட்டு இடத்தை உடனடியாக பெற்றுத் தந்தது.

அங்கு கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப் பெற்றது.  அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள்ளாக வரிசையாக மூன்று யூனிட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

மத்திய அரசுக்க சொந்தமான நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணியும் 1986 ல் தொடங்கி 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட 7 மையங்கள் இருந்தது.  

மொத்ததில் 1470 மெகாவாட் திறன் கொண்ட இந்த நிறுவனத்திலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டது வெறுமனே 465 மெகாவாட் மட்டுமே.

இந்த இடத்தில நம் தமிழர்கள் எந்த அளவுக்கு சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இரண்டு விசயங்களை பார்த்து விடலாம்.  


இப்போது கூடங்குளம் விவகாரத்தில் பலரும் கூடங்குளம் திறந்து விட்டால் சொர்க்கலோகம் தெரிந்து விடும் என்று குதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களுக்கு எந்த லோகம் கிடைக்கும் என்பதை இந்த உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.             

மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேசன் என்ற பெயரில் தான் கல்பாக்கம் அணு மின் நிலையம் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அணு உலைகளின் முதல் யூனிட் தன் மின் உற்பத்தியை ஜுலை 1983 ஆம் ஆண்டு தொடங்கியது.  இரண்டாவது யூனிட் நவம்பர் 1986 ல் தொடங்கியது.  இவை இரண்டும் முறையே 235 மெகாவாட் திறன் உள்ள அணு உலைகள் ஆகும். 

1983 முதல் 2007 வரையிலும் 25 ஆண்டுகளில் 50 சதவிகித அளவை இரண்டு ஆண்டுகளில் எட்டிய இந்த அளவு படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.  அதாவது மொத்தமாக 25 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கு 30 சதவிகிதத்திற்கு கீழாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. நெருக்கடியான காலகட்டங்களில் கூட இந்த அணுஉலையால் எந்த உதவியும் நமக்கு கிடைத்தபாடில்லை. 

ஒப்புக்கு சப்பாணி என்று சொல்வோமே அதைப் போலத்தான் இந்த அணுஉலைகள்.

முறைப்படி கவனித்தார்களா? கவனிக்க வேண்டியவர்களை மட்டும் கவனித்தார்களா என்பது ஆண்டவனுக்கு காட்டும் வெளிச்சத்தில் மட்டுமே உணர்ந்து கெர்ள்ள முடியும்.

நன்றாக புரிந்து கொள்ளவும்.

இந்திய அரசாங்கம் கொண்டு வர நினைக்கும் அணுஉலைகள் என்பது மக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்திற்காக அல்ல. அதற்கு அப்பாற்பட்ட பல விசயங்கள் உள்ளது.  மின்சாரம் என்பது முன்னால் சொல்லப்படுகின்ற ஒரு பம்மாத்து விசயம்.  அவ்வளவுதான். இந்த அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் தான் எதிர்கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை அசைத்துப் பார்க்கப் போகின்றது என்பதை வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம்.

அடுத்து மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் பற்றி பேச வேண்டும்.  

தற்போது முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் ஏறக்குறைய கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்.  குஜராத்திடம் இருந்து நாங்கள் வாங்கிக் கொள்கின்றோம். மின் தடத்தை ஒதுக்கித் தாருங்கள் என்றாலும் காங்கிரஸ் அரசாங்கம் புதுப்புது காரணங்களை சொல்லிக் கொண்டு தவிர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

இந்த பாரபட்சம் இன்று நேற்றல்ல.  தொடக்கம் முதலே இப்படித்தான் தமிழகம் என்றாலே மத்தியில் உள்ள அரசாங்கம் நடந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொரு சமயமும் ஆட்சிகள் மாறும்.  ஆனால் காட்சிகள் மட்டும் எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

மத்திய அரசின்  மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது காட்கில் திட்டம் (GADGIL FORMULA) என்பதன் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகின்றது.  

ஆனாலும் பல சமயங்களில் அந்தத் திட்டம் பின்பற்றப்படுவதிலலை.  

உதாரணமாக 2000 ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் உள்ள கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் மத்திய அரசின் என்டிபிசி நிறுவனத்தின்  புதிதாகத் தொடங்கப்பட்ட 1000 மெகாவாட் திறனுள்ள சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் உற்பத்தியில் பிற மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதுமே ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.  இது போன்று  தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே முழுமையாக வழங்கிடும் முன்னுதாரணம் எந்த காலத்திலும் நடந்ததே இல்லை.

ஆனாலும் 1983 முதல் 90 காலகட்டம்  தமிழ்நாடு மின் வாரியம் எடுத்த தொடர் நடவடிக்கையினால் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்தது. குறிப்பாக 16.10.1992 ஆம் ஆண்டு மின்சாரத்தில் தமிழ்நாட்டில் முழுமையான மின் தட்டுப்பாடு நீங்கி தன்னிறைவு பெற்றதாக விளங்கியது.

காரணம் என்ன?  செயல்பட அனுமதித்தார்கள். நம்மவர்கள் ஜெயித்தார்கள். 

இப்போது என்ன நடக்கின்றது?

தனக்கு வருவாய் தரும் துறைகளை மிரட்டி வாங்கிக் கொள்ளும் கட்சிகள் இருப்பதால் மத்திய அரசாங்கமும் எலும்பு துண்டை போட்டால் போதும் என்று ஏளனமாகத்தான் தமிழகத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

கதாநாயகன் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டேயிருந்தால் கதை நன்றாகவா இருக்கும்.  வில்லன் ரூபத்தில் வந்தது தான் புதிய பொருளாதார கொள்கை.

புதிய பொருளாதாரக் கொள்கை பல புதிய வெளிநாட்டு பொருட்களையும் நம்மிடையே கொண்டு வந்து சேர்த்தது. நம்முடைய அடிப்படை வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் என்பதையும் தாண்டி ஆடம்பரத்திற்கு என்றொரு சூழ்நிலையும் உருவானது.

விளம்பரங்கள் மூலம் புதிய புதிய மின்சாதன பொருட்கள்  நடுத்தர மக்கள் ஒவ்வொருவரையும் சுண்டியிழுக்கத் தொடங்கின.

தேவையான, தேவையற்ற அத்தனை பொருட்களும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அணிவகுக்கத் தொடங்கியது. மின்சாரத்தின் தேவைகள் அதிகமாகத் தொடங்கியது. 

புதிய பொருளாதார கொள்கைகளை தீட்டியவர்களுக்கு முழுமையாக தெரிந்து இருக்கும் தானே? 

எதிர்கால மின்சாரத் தேவை என்பதை தங்கள் கணக்கில் வைத்திருப்பார்கள் தானே?

வரு முன்னர் காக்க வேண்டியவர்கள் தெளிவாக காய் நகர்த்தினார்கள். எந்த புதிய மின் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அணு உலைகள் சார்ந்த திட்டத்திற்கே முன்னுரிமை தந்தார்கள். வேறு எதையும் நினைத்துப் பார்க்கக்கூட தயாராக இல்லை. 

மாநில அரசாங்கத்தையும் செயல்படுத்த விடவில்லை. இனி வரும் காலங்களில் புதிய பொருளாதார கொள்கையின்படி தனியார் நிறுவனங்கள் மூலம் மட்டுமே இனி மின்சாரம் வாங்க வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டு அதன் பாதையில் கொள்கைகள் வகுக்கப்பட்டது. 

மாநில மின்சார வாரியம் நோய் வாய்ப்பட்டது. சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படவில்லை.  

தனியார்கள் வந்து மின் உற்பத்தியை தொடங்கி விடுவார்கள்.  உங்கள் பிரச்சனைகள் அத்தனையும் தீர்ந்து விடும் என்றார்கள்.  அதுவரைக்கும் காற்று வாங்கிக் கொண்டிருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இடையே தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் காற்றாலை மூலம் தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை போக்க முடியுமா? என்ற சோதனை முயற்சியும் செய்து பார்க்கப்பட்டது. 

முதல் முறையாக 1986 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முல்லைக்காடு என்ற இடத்தில் பரிட்சார்ந்த ரீதியில் 10 காற்றாலைகள் கூட துவங்கப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொன்றையும் சிறப்பாக நடத்தினால் தானே அத்ன் பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும். தனியார் மின்சாரம் தரப் போகின்றார்கள்.  உங்களுக்கு ஏன் இந்த ரிஸ்க் என்று சொல்ல நம்மவர்கள் நிதானமாக ரஸ்க் சாப்பிட தொடங்கினார்கள்.

உருவாக்கப்பட்ட கொள்கைகள் ஒவ்வொன்றும் கொள்ளையடிக்க பயன்பட்டது.  இன்று வியர்வை வந்தால் உடல் நலத்திற்கு நலமாக இருக்கும் என்ற சூழ்நிலையில் வெந்து புழுங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஏனிந்த அவலம்?

உலகத்தில் உள்ள முதலாளித்துவ நாடுகளில் பல தனியார் நிறுவனங்கள் மூலம் நல்ல விசயங்கள் நாட்டுக்கு நடந்து கொண்டு தானே இருக்கின்றது என்ற கட்சியை சேர்ந்தவரா நீங்கள்?

தமிழ்நாட்டில் உள்ளே வந்த தனியார் மின் நிறுவனங்களை, அதன் செயல்பாடுகளை, பின்னங்கால் பிடறி தெரிய ஓடியவர்களைப் பற்றி படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்க..............

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்..........................

வினவு தளத்தில் உள்ள கட்டுரை

Wednesday, November 07, 2012

மின்சாரக் கனவு - 3 மின்சார ஒழுங்கு முறை ஆணையம்


தொடக்கம்

முதல் பகுதி

இரண்டாவது பகுதி


மின்சாரம் -- இனி பயன்படுத்த அல்ல. புரிந்துகொள்ள மட்டும்  

இந்தியாவிற்குள் 1991 ஆம் ஆண்டு உள்ளே வந்த தாரளமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்குப் பிறகு உருவானது தான் 'தனியார் மின் உற்பத்தியாளர்'  (INDEPENDENT POWER PRODUCER -  IPP ) என்ற புதிய பூபாள ராகம் உருவானது.  

ராகத்தை உருவாக்கியவர்கள் உருவாக்கியதோடு விட்டு விட்டார்கள்.  உருவான மாற்றத்தில் இப்போது மக்கள் தாங்கள் பயன்படுத்த முடியாத மின்சாரம் குறித்து வழிந்தோடும் வியர்வையை துடைக்க முடியாமல் கசகசப்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். .


இந்தியாவில் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் என்று இரண்டு இருப்பதைப் போல இந்த இரண்டு அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு பல அரசாங்கங்கள் வெகுஜன மக்களுக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

அவை  அமைப்பு  என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இவைகள் மக்களுடன் நேரிடையான தொடர்பில் இருப்பவை அல்ல.  ஆனால் மக்களின் 'நல்வாழ்வுக்கு' என்று உருவாக்கப்பட்டவை. இப்போது மின்சாரம் என்ற துறையைப்பற்றி நாம் பார்த்துக் கொண்டு வருவதால் இதில் உள்ள ஒரு அமைப்பைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.

இந்தியாவில் மக்களுக்குத் தேவையான பல அவசியமான பொருட்கள்  பொதுப்பட்டியலில் இருக்கும்.  மின்சாரம், குடிநீர், பலவிதமான தானிய வகைகள், உணவு சம்மந்தப்பட்டது என்று பட்டியலின் நீளம் அதிகம். 

கீழே உள்ள சுட்டிகளின் மூலம் இது சம்மந்தப்ட்ட தேடல் இருப்பவர்கள் படித்துக் கொள்ளலாம். 

இது போன்ற விசயங்களில் அரசாங்கம் கொள்கை ரீதியாக அத்தனை சீக்கிரம் முடிவு எடுத்து விட முடியாது. ஆனால் இந்தியாவை ஆண்டு கொண்டுருப்பது நம்மைப் பொறுத்தவரையிலும் பிரதமர்.  ஆனால் நம்முடைய பிரதமரை ஆட் வைத்துக் கொண்டுருப்பது பெரிய நிறுவனங்களின் லாபி அமைப்புகள். இது இந்தியாவில் மட்டுமல்ல.  உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தையும் பல்வேறு நிறுவனங்கள் தான் தாங்கள் நினைத்தபடி ஆட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால்  மக்களிடம் எதிர்ப்பு வந்தால் என்ன ஆகும்?  

இதன் காரணமாகத்தான் தனிப்பட்ட அமைப்புகள்  உருவாக்கப்படுகின்றது. மாநில அரசாங்கம் என்பது ஒரு அமைப்பு. அது தன்னிச்சையாக செயல்படும் பட்சத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மதிப்பு இருக்காது.  லாகனை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தில் தான் நம்முடைய மத்திய அரசாங்கம் இருக்கிறது.

மத்தியில் கூட்டாட்சி.  மாநிலத்தில் சுயாட்சி போன்ற பழைய கோஷங்களை இப்போது நம் நினைவில் கொண்டு வரவேண்டும்.

அதற்கு இந்தியா என்பது பல இனங்கள், பல மொழிகள், பல நம்பிக்கைகள் சேர்ந்த 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது போன்ற கருத்தாழமுள்ள பல பாடங்களை பள்ளிக்கூடங்களில் படித்து வந்துருப்போம். நாமும் அதையே நம்புவோம்.  உண்மைகள் அது எப்போதும் போல அது தனியாகவே ஒரு ஓரமாக இருந்து விட்டு போகட்டும். .

இன்னும் சற்று புரியும்படி சொல்லப்போனால் தற்போது ஏறிக் கொண்டுருக்கும் பெட்ரோல் விலைக்கு 'நாங்கள் காரணம் அல்ல. அது சுயாட்சி பெற்ற எண்ணெய் நிறுவன செயல்பாடுகளின் அடிப்படையில் அமையப் பெற்றது. அவர்களின் அதிகாரத்தில் நாங்கள் நுழைய முடியாது' என் நிதி அமைச்சர்கள் சொல்வதை படித்து இருப்போம் தானே?  


அதைப் போலவே மின்சாரத்திற்கென்று ஒரு அமைப்பு இருக்கின்றது. 


இதற்கு மற்றொரு பெயர் நிழல் அரசு. இதை கட்டுப்படுத்த மாநில அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. இது அமெரிக்காவின் நிர்வாக அமைப்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.,  எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

இவர்களின் தாக்கம் ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கும்.  இவர்கள் கட்டளையை நிறைவேற்றியே ஆக வேண்டும்.  ஆனால் பின்விளைவுகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்காது. அத்துடன் பகுதி நீதி பரிபாலன (QUASI JUDICIARY) . அதிகாரமும் இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஏறக்குறைய நம்முடைய ஜனநாயக நாட்டில் இதுவொரு சர்வாதிகார அமைப்பாகும். ஆனால் மக்களை விட தனியார் காட்டில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதை வைத்து நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டும்.

மாநில அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அமைப்பு.  

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் மின்சாரம் என்பது பொது பட்டியலில் உள்ளது. மத்திய மாநில அரசாங்கம் இரண்டும் சேர்ந்து முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு துறையாகும்.

ஆனால் தாரளமயமாக்கல் கொள்கை இந்தியாவின் உள்ள வந்த பிறகு மத்திய அரசாங்கத்தால் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கிய பிறகு மாநில அரசாங்கம் எதுவும் இதில் தலையிட முடியாத நிலை உருவானது.

இந்த ஒழுங்கு முறை ஆணையங்களே புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது, மற்றும் மின் கட்டணத்தைத் தீர்மானிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

மாநில மின் வாரியங்கள் தம்மை மறு சீரமைத்துக் கொள்ள வேண்டும். இதன்படி சில மாநிலங்களின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்தல் மற்றும் திறந்த வழி பயன்பாடு என்பதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மின் வழங்கலில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். பாதுகாப்பான சிக்கனமான மின் வலையங்களை தேசிய மற்றும் பிராந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை சாத்தியப்படுத்தவே பாராளுமன்றம் 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தினை இயற்றியது.

இதுவே தனியார்களை ஊக்குவித்து உள்ளே கொண்டுவர ஏற்பாடுகளை செய்தது.  தனியார்கள் உள்ளே வந்தால் மின் நிலையங்கள் சிறப்பாக பராமரிப்பு செய்யப்படும், மின்சாரம் வீணாகாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விதமாக மின்சார தேவை இருப்பதால் தெளிவான மின் வணிக சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும் என்று நம்பியது.

திட்டம் எல்லாம் சரி தான்.

ஆனால் நடைமுறையில் நடந்தது என்ன தெரியுமா?

1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை உள்ளே வந்ததும் முதல் முறையாக 1994 செப்டம்பரில் ஓரிசா மாநில அரசும் உலக வங்கியும் கையெழுத்திட்டன. அப்போது ஒரிசா மாநில மின் வாரியம் இந்திய மாநிலங்களிலேயே அந்த அளவுக்கு சீக்காளியாக இருந்தது. 

எப்போதும் போல புத்திசாலி நிபுணர்கள் குழு என்று ஒன்று தனியாக அமைக்கப்பட்டது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து பொது நிர்வாகம் மற்றும் சட்ட நிர்வாக ஆலோசகர்களும், அமெரிக்காவில் இருந்து பொருளாதார நிர்வாக ஆலோசகர்களும், கனடாவில் உள்ள பொறியியல் நிர்வாக ஆலோசகர்களும் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.

இதற்காக சுமார் 300 கோடி ரூபாய் (6.3 கோடி அமெரிக்க டாலர்கள்) செலவானது.

இந்த செலவுக்கான நிதியை உலக வங்கி போன்ற பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் ஒரிசா மின் வாரியத்திற்குக் கடனாக அளித்தன. 

1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரிசா மாநிலத்தின் மின் கடத்தல் நிறுவனமான GRID CORPORATION OF ORISSA - GRIDCO) க்கு மறுசீரமைப்புக்காக கொடுக்கப்பட்ட சுமார் 1700 கோடி ரூபாய்க்கான ( 35 கோடி அமெரிக்க டாலர்கள்) கடனானது ஒரிசா மின் வாரியத்தை கடுமையான கடன் சுமையில் தள்ளியது. 


கடைசியாக என்ன நடந்தது?  அது தான் இங்கே முக்கியம்.

அப்போது இருந்த உலக வங்கித் தலைவர் ( former world bank president James wolfensohn ) சொன்ன வாசகம்.

"ஒரிசா அனுபவத்தை வெற்றிகரமானது என்று கூறிவிட முடியாது. இதன் மூலம் பல புதிய அனுபவ பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம்" என்றார்.

கிராமத்தில் வழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி "ஊரான் விட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே" போன்றவை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

ஒரிசா மக்களின் பொதுப்பணத்தை எடுத்து கற்றுக் கொண்டவர்கள் தான் இந்த இறக்குமதி செய்யப்படும் நிபுணர்கள்.

மினவாரிங்களின் கடன் சுமை என்பது அதில் உள்ள நிர்வாக சீர்கேடு என்பது ஒரு புறம் இருந்தாலும் முழுக்க முழுக்க அது தனிப்பட்ட நபர்களின் லாபங்களுக்காகவே அமைப்புகள் மூலம் ஒவ்வொரு கொள்கையும் உருவாக்கப்படுகின்றது.  அதையே சரி என்று சொல்லவும், அதைத்தான் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டுக் கொண்டுருக்கிறது என்பது தான் உண்மை.

காரணம் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஜனநாயகத்தில் உள்ள தவறுகள் மெதுவாக காலப்போக்கில் நீக்கப்படும்.  அதுவரைக்கும் நாம் அமைதியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்...................

சுட்டிகள்


Monday, November 05, 2012

(இனி) மின்சாரமே கனவு

மின்சாரம் --  புரிந்து கொள்வதற்கு மட்டும்  பயன்படுத்த அல்ல. 1


இந்த தொடரின் கருத்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தின் வாயிலாக அதில் எழுதியுள்ள முக்கிய கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்படுகின்றது.


மின் மிகை மாநிலம்.

கடந்த சில மாதங்களாக தமிழர்களுக்கு கிடைத்த தமிழ் வார்த்தை இது. அங்காடித் தெரு என்ற வார்த்தையை தமிழர்கள் திரைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டது போல இப்போதுள்ள தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறையில் அரசாங்கத்தால் சொல்லப்படும் கனவு வார்த்தை தான் மின் மிகை மாநிலம். 

மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போகின்றோம் என்ற நம்பிக்கை வார்த்தைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மாறுமா? மாற்ற முடியுமா? 


கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சியாகட்டும், தற்போது ஆண்டு கொண்டுருக்கும் அம்மையார் ஆட்சியாகட்டும் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையின் பின்னால் உள்ள உண்மையான நிலவரங்களை எவரும் புரிந்து கொள்ளவில்லை.

ஆட்சியில் இருப்பவர்களும் சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம், ஆனால் சமாளிக்க திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.  விரைவில் எல்லாமே சரியாகிவிடும் என்ற வார்த்தையை நாம் நம்பித்தான் வாழ வேண்டும்.

இது ஆட்சியாளர்களுக்கு அப்பாற்பட்ட விசயமாக மாறியுள்ளது. ஒரு துறையின் அமைச்சரையே ஒரு நிறுவனம் மனம் வைத்தால் மாற்ற முடிகின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கினறோம்.  ஆனால் சராசரி இந்திய குடிமகன் இன்னமும் இந்தியாவில் உள்ள ஜனநாயகத்தை நம்பி வாழ்ந்து கொண்டுருக்கின்றான். 

முதலில் மின்சாரம் குறித்த தொடக்க காலத்தை பார்த்துவிடலாம்.

இந்திய நாடு சுந்திரம் அடைந்த போது வெறும் 1300 அளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது. இப்பொழுது 1,24,311 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் நமக்கு தற்போதைக்கு தேவைப்படுவதை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக 1,00,000 மெகாவாட் தேவை என்று கணக்கிட்டுள்ளனர். 

தற்போது நடைமுறையில் நாம் பெறும் மின்சாரம் எந்தந்த வகையில் கிடைக்கின்றது என்பதை பார்த்து விடலாம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார தேவையில் நிலக்கரி, எரிவாயு, மற்றும் எண்ணெய் அடிப்படையில்  அமைந்த அனல் மின்சார உற்பத்தி என்பது 66 சதவிகிதமாகவும், புனல் (நீர்) மின்சாரத்தின் 26 சதவிகிதமாகவும் உள்ளது. 

இந்தியாவில் தற்போது இயங்கிக் கொண்டுருக்கும் அணுமின் உலைகள் மூலம் நாம் பெறுவது வெறுமனே 2.7 சதவிகிதமாகவும் உள்ளது. ஆனால் இயங்கிக் கொண்டுருக்கும் அணுமின் உலைகளுக்கு இந்திய அரசாங்கம் செலவழித்த, செலவழித்துக் கொண்டுருக்கும் தொகையானது தனியாக பார்க்க வேண்டும்.  

இந்த அணு உலைகள் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு என்ற ஒரு வார்த்தைக்குள் முடித்து விடுவார்கள். 

காரணம் அதற்கு பின்னால் உள்ள அத்தனை விசயங்களும் அணுகுண்டு ரகசியங்களைப் போல இருப்பதால் நாம் இப்போது அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. 

அணு உலைகளை தயாரிப்பவ்ர்கள், அதனை விற்பவர்கள், இடைத்தரகர்கள், சர்வதேச நாடுகள், இடையில் உள்ள லாபிக்களுடன் சேர்ந்து பயன்படும் இந்திய அரசியலில் உள்ள செல்வாக்கு படைத்தவர்கள் பெறும் ஆதாயங்கள் என்று அதன் அத்தியாயம் தொடர்கதை போலவே போய்க் கொண்டுருக்கும்.

இது நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது என்று சொல்வார்கள். நாமும் பயத்தோடு ஒதுங்கியிருப்பது தான் சரியாக இருக்கும்.

1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் 5,93,732 கிராமங்களில் 4,74,982 கிராமங்கள் மின் இணைப்பை பெற்றிருந்தன. அதாவது 80 சதவிகித கிராமங்கள் மின்சாரத்தை உபயோகிக்கும் கிராமங்களாக இருந்தன. இந்த சமயத்தில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். 

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 13.83 கோடி வீடுகள் கிராமங்களில் இருந்தன. ஆனால் இந்த தொகையில் 60.20 சதவிகித வீடுகளால் மட்டுமே மின்சாரத்தை உபயோகிக்கும் வசதிகள் இருந்தன. 

கிராமங்களில் உள்ள வீடுகளில் மின்சாரத்தை பயன்படுத்தும் கட்டமைப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அவர்களால் மின்சாரத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டுருந்தனர். 

இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முன்னால் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் தாராளமயமாக்கல் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது.  அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் தற்போதைய பாரத பிரதமர் மன் மோகன் சிங். 

அப்போது உருவான திட்டம் 2012 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வாழ்ந்து கொண்டுருக்கும் அனைவருக்கும் மின்சாரம் என்ற கொள்கை வகுக்கப்பட்டது.  அப்போது உருவானது தான் கிராம மின்மயமாக்கலுக்கான விரைவுத் திட்டம். ( A COMPREHENSIVE'  BLUE PRINT FOR POWER SECTOR DEVELOPMENT )

இப்போது 2012 ஆம் ஆண்டு முடியப் போகின்றது. பொருளாதார மேதை மன் மோகன் சிங் கூட பிரதமராகவும் இரண்டாவது முறையாகவும் இந்தியாவை ஆண்டு கொண்டுருக்கிறார். 

உருவான திட்டம் தவறா? உருவாக்கியவர்களின் தவறா?

இவர்கள் இந்த திட்டத்தை உருவாக்கும் போது மற்றொரு விசயத்தையும் தெளிவு படுத்தினர்.    இந்தியா 8 சதவிகித பொருள் உற்பத்தியை (GDP) அடைய இந்திய மக்கள் வறுமை நிலையை தாண்டி மேலே வந்து விட வேண்டும். அதற்கு நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியமானது என்றனர்.

ஆனால் தற்போதைய நிலைமை?


இந்தியாவில் நடுத்தரவர்க்கமும், அடித்தட்டு மக்களும் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கைக்கு பெயர் 'தர்மசங்கடமான சூழ்நிலை' அல்லது 'ரெண்டாங்கெட்டான் வாழ்க்கை' எனபதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஒரு விதமான கிடுக்கியில் அகப்பட்ட ஜந்து போலத்தான் வாழ்ந்து கொண்டுருக்கின்றோம். நாம். வாழ்ந்த பழைய வாழ்க்கைக்கும் செல்ல முடியாது. தற்போதையை வாழ்க்கையிலும் விரும்பியபடி வாழ முடியாது.  இது தான் இப்போது நடந்து கொண்டுருக்கிறது.  

காரணம் நாம் விஞ்ஞானத்தின் மூலம் பெற்ற வசதிகள் அதன் மூலம் கிடைத்த வாய்ப்புகள், அனுபவிக்கும் சந்தோஷங்களை. விட்டு ஒதுங்கி நிற்க நமக்கு மனம் வருமா?

உங்க வீட்டில் மிக்ஸி கூட இல்லையா? என்று ஏளனமாக கேட்கும் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.  அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவை எப்படியிருக்கும் என்றே சமகாலத்தில் உள்ளவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக உள்ளது. நாம் உடல் உழைப்பை குறைத்து பொருள் ஈட்ட வேண்டிய நடைமுறை வாழ்க்கைக்கு மாறி வெகுகாலமாகிவிட்டது. 

மின்சாரத்தின் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இது தவிர தன்னுடைய சுகத்திற்கு, வசதிக்கு என்று ஏராளமான பொருட்கள் தினந்தோறும்  சந்தையை ஆக்ரமித்துக் கொண்டேயிருக்கிறது.

ஆசைகளுக்கு அளவில்லை.  அதே சமயத்தில் அவஸ்த்தைகள் என்பதும் இயல்பானதாக மாறியும் விட்டது.

அந்நிய செலவாணியை கணக்கில் வைத்து இன்று இந்தியா என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஒரு சந்தையாக மாற்றியுள்ளனர். வரப்போகும், வந்து கொண்டுருக்கின்ற, வந்த அத்தனை நிறுவனங்களுக்கும் நம் நாட்டில் தற்போது உற்பத்தியாகிக் கொண்டுருக்கும் மிச்ச சொச்ச மின்சாரத்தையும் கருணை அடிப்படையில் ஆட்சியாளர்கள் வழங்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். 

உள் நாட்டு தொழிற்சாலைகள் அம்போவென்று விடப்பட்ட போதிலும இன்னமும் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கென்று திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். தினந்தோறும் தங்கள் வாழ்க்கையை வாழ முடியாதவர்களின் திட்டுக்கள் எதுவும் ஆள்பவர்களின் காதுக்கு செல்வதில்லை. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி என்று திட்டமிட்டவர்கள் இன்றும் திறமைசாலிகள் என்ற போர்வையில் தான் ஆட்சியில், அதிகாரத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  

தாங்கள் உருவாக்கிய திட்டங்கள் நடைமுறையில் எப்படி மாறியுள்ளது என்பதை அறிந்த போதிலும் இன்னமும் அவர்களுக்கு விழிப்பு வந்தபாடியில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியம் லாபத்தில் செயல்பட்டுக் கொண்டுருந்த ஒரு நிறுவனம். மற்ற மாநில மின்சார வாரியங்களைக் காட்டிலும் முதன்மையான இடத்தில் தான் இருந்தது. 

ஆனால் இன்று?  

53,000 கோடி நஷ்டம்.  ஆனாலும் இன்று நமக்கு பயன்படுத்த மின்சாரம் இல்லை.

'"அமைதியாக பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும். 

அடுத்த வருடம் இறுதிக்குள் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாற்றிவிடுவோம்" என்று ஆட்சியாளர்கள் சொல்வது உண்மையா?

வாய்ப்புகள் உள்ளதா?

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்....................