Tuesday, August 03, 2021

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD - திராவிட விஷ பாம்புகள்

சங்கிகளை

அண்டி பிழைக்கவும்,

ஒன்றி பிழைக்கவும் 

திமுக அச்சாரம்  போட்டாச்சு!

‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்கவும், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற இளங்கோவடிகளின் கூற்றுக்கு இணங்கவும் திமுகவின் கடந்த நான்கு வருட  ’சங்கி எதிர்ப்பு வேடம்’  கலைந்து அப்பட்டமான சரணாகதியில் முடிவடைந்திருக்கிறது. இனி மோடி அரசை அண்டி இருந்தால் மட்டுமே ’ஆட்சி பிழைக்கும்’ என்ற நிலை உருவான பின்பு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே பணிந்தும், குனிந்தும் நடக்க திமுகவினர்  ஆயத்தமாகி விட்டதையே இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் படத்திறப்பு விழா வெளிப்படுத்துகிறது.

மோடி அரசிடம் திமுக அடைந்த சரணாகதி பற்றி விவாதம் செய்ய தமிழக ஊடகவியலாளர்களை எது தடுக்கிறது? இதுவே எடப்பாடியாகவோ அல்லது வேறு எவரது ஆட்சியாகவோ இருந்திருந்தால் கடந்த ஒரு வாரமாக எடுபிடி ஊடகவியலாளர்களால் மணிக்கணக்கில் விவாதங்கள் நடந்திருக்கும். ஆனால் அந்த போலி பெரியாரியவாதிகள் இப்போதெல்லாம் வாய் திறக்க மாட்டார்கள். சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் அவர்களுக்கு சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்பில் மாளிகைகள் கிடைத்த பின்பு அவர்கள் எப்படி வாய் திறப்பார்கள். எசமான் வீட்டு பிராணியாயினும் பிஸ்கட்டுகள் கிடைத்த பின்பு வாய் மூடி மௌனம் காக்கத்தானே வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 4 வருடத்தில் அதுவும் குறிப்பாக 2018-க்கு பிறகு, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை மட்டுமே முன்னிலைப் படுத்துவதிலும், அவர்களுடைய ஏவல் ஆட்களாக செயல்படுவதிலும் நடுநிலை வேஷம் தரித்த பிழைப்புவாத ஊழல் ஊடகவியலாளர்கள் போட்ட கூச்சல் பேச்சுகளுக்கு அளவே இல்லை. ஒரு மாநிலத்தின் அரசை ’அடிமை அரசு’ என்று திமுகவின் தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனத்தை மட்டுமே அடிமட்டம் வரை கொண்டு போய் சேர்த்தார்கள். தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதாலேயே இன்னும் சில முக்கியமான சம்பவங்களை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

பிஜேபியை மதவாத கட்சி என்று முத்திரை குத்தி அதற்கு எதிராக  அவர்கள் நடந்து கொண்டது எவ்வளவு போலியானது என்பதையும்; திமுகவின் வாக்கு வங்கியாக செயல்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் தமிழக இஸ்லாமிய-கிறித்தவ  மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான இடங்களிலிருந்து மத்திய தொகுப்பிற்கு  எடுக்கப்பட்ட 15 சதவீத இடங்களுக்கு  1986-ல் முதன்முறையாக AIPMT  என்ற ஓர் நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையில் இருந்தது. இந்நிலையில்  உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, தேசிய மருத்துவக் கழகம் மற்றும் மத்திய அரசு இணைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் நீட்தேர்வு-The National Eligibility cum Entrance Test என்ற தகுதி தேர்வை நடத்த 2016 ஆம் ஆண்டு ஓர் சட்டத்தை இயற்றியது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் NEET தேர்வுகள் அமலாக்கப்பட்டன.

பொதுவாக மத்திய, மாநில அரசுகளால் ஒரு சட்டம் கொண்டு வரப்படுகின்ற போது, அதன் மீது கருத்து சொல்ல அனைவருக்கும் ஜனநாயக ரீதியான உரிமை உண்டு. அதன் அடிப்படையில் மாறி வரக்கூடிய சூழலில் அரசு மருத்துவ கல்லூரிகளைக் காட்டிலும் மிக குறைந்த கட்டமைப்பு வசதிகளை மட்டுமே கொண்டு பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேவை நோக்கமின்றி, வணிக நோக்கத்துடன் மட்டுமே தொடங்கப்பட்டன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பன்னிரண்டாம் வகுப்பு கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போதிய வெளி-உள் நோயாளிகள் இல்லை எனினும் ஒரு இளநிலை மருத்துவ படிப்பிற்கு ரூ 40 முதல் 50 லட்சங்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றன.

எனவே, பொதுவாக இந்தியா முழுமைக்கும் ஆயிரக் கணக்கில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதியை உருவாக்கும் வேண்டும் என்ற இந்திய மருத்துவ கழகத்தின் கருத்தை ஒரு மருத்துவராக ஆதரித்து இருந்தோம். நாம் அப்போது சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது. எனவே அந்த சட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்ததில் நமக்கு எவ்வித பங்குமில்லை; தொடர்புமில்லை.

அச்சட்டம் நாடாளுமன்ற மேலவையில் விவாதத்திற்கு வந்தபோது அதை நேரடியாக எதிர்த்து வாக்களிக்காமல், திமுக உறுப்பினர்கள் கனிமொழியும், திருச்சி சிவாவும் வெளிநடப்பு செய்தார்கள். அதன் பின் அந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியா முழுமைக்கும் அமலுக்கு வந்தது.  நீட் தேர்வு அமலாக்கப்படும் போது தொடக்கத்தில் ஓரிரு வருடம் சிரமமாக இருந்தாலும் கூட, காலப்போக்கில் அகில இந்திய அளவில் தமிழக மாணவர்களுக்கான பங்கு பன்மடங்கு அதிகரிக்கும்; அது தமிழகத்திற்கு அதிக நன்மையை பயக்கும் என்ற உண்மை கருத்தை எடுத்துச் சொன்னோம். அந்த ஒரு கருத்தை சொன்னதற்காகவே வீட்டு தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக திராவிட ஒன்றியர்களும், அவர்களை அண்டி பிழைக்கும் ஒன்றியர்களும் பயன்படுத்திய வார்த்தைகளை எழுத்தில் சொல்லி மாளாது. 

அந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ தேர்வில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் கூட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. சில நாட்களில், திடீரென ஒருநாள் அந்த மாணவி மரணித்து விட்டதாகச் செய்திகள் வந்தன. அது குறித்து சில ஊடகங்கள் கருத்து கேட்டபோது ”உயிர் ஒன்றும் கடை சரக்கு அல்ல, வேண்டும் போது எடுத்துக் கொள்வதற்கும்; வேண்டாத போது விட்டுவிடுவதற்கும்; NEET முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது, மூன்றாவது முயற்சிகளில் படித்து வெற்றி பெறும் வாய்ப்புகள்  இருக்கும் போது, அது போன்ற மோசமான முடிவை எடுத்திருக்கக் கூடாது” என்றுதான் சொன்னேன்.

ஆனால், அதற்கு முன்பாகவே அந்த மாணவி பெற்ற மதிப்பெண்களை மூடு மந்திரமாக வைத்து, ஏறக்குறைய இரண்டு-மூன்று மாத காலம் சென்னை, டெல்லி என இழுத்தடித்து, அம்மாணவியை திமுகவினர் தங்களின் அரசியல் பிரச்சாரத்திற்கு முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.  அந்த மாணவியை மருத்துவராக்க வேண்டும் என்று அவர்கள் கருதி இருந்தால், அம்மாணவியை மனோ ரீதியாக தேற்றி, ஊக்கம் அளித்து, தேவையான உதவிகளை செய்து உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தால் பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள் போலவே நீட் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்று அம்மாணவி மருத்துவராகி இருக்க முடியும்.

ஆனால், ’நீட் தேர்வை எப்படியாவது ஒழித்து விட வேண்டும்’ என்ற ஒரே நோக்கத்தில் இருந்த சில தனியார் மருத்துவ கல்லூரிகளின் உரிமையாளர்களான சில வள்ளல்களின் தூண்டுதல்களால் அந்த ஏழை மாணவி டெல்லி வரையிலும் திமுகவினரால் அழைத்து செல்லப்பட்டு  நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுக்க வைக்கப்பட்டார். அந்த மாணவியின் மரணத்தை வைத்து மாநில அரசுக்கும், மத்திய மோடி அரசுக்கும் எதிராக ஒட்டுமொத்த தமிழக மக்களைத் திசை திருப்ப வேண்டும் என்பதே திமுகவின் அன்றைய ஒரே நோக்கமாக இருந்தது. அரியலூர் மாணவியை வைத்து அரசியல் செய்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று அமைச்சரும் ஆகிவிட்டார்; அந்த கட்சியும் ஆட்சிக்கு வந்துவிட்டது.

ஆனால், கடந்த அரை நூற்றாண்டுகளாக அரசியலில் நமது கருத்துகளைச் சொல்லுகின்ற போது அதன் மீதான சாதக, பாதகங்களை பலமுறை படித்து நன்கு ஆராய்ந்து, அறிந்து தான் பதிவு செய்து வருகிறோம். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பாஜக கூட நீட் நிலைப்பாட்டிலிருந்து பல்டி அடித்தார்கள். ஆனால் இன்று வரை நமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவே தான் இருக்கிறோம்.

நாம் நமது நிலைப்பாட்டில் என்றும் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பதால் நாம் வைத்த வாதங்களை கருத்தியல் ரீதியாக எதிர் கொள்ள முடியாதவர்கள் நமக்கு பாஜக கைக்கூலி, ஆர்.எஸ்.எஸ் அடிவருடி என்றெல்லாம் பட்டம் சூட்டினார்கள்; பாலக்காட்டிலும், திருவனந்தபுரத்திலும் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வந்ததாகவும், அதற்கு அனுமதி வாங்கத்தான் நாம் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் என்றெல்லாம் அப்பட்டமாக பொய் பிரச்சாரம் செய்தார்கள். அந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளையும் திமுகவும், அதன் அடிவருடி அமைப்புகளும் எப்போது தான் கண்டுபிடித்து தருவார்கள் என காத்து கொண்டிருக்கிறோம்.

ஊடக போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கக்கூடிய ஓநாய் கூட்டம் தனிப்பட்ட முறையில் எல்லை கடந்து விமர்சித்தார்கள். திமுகவின் தெருப்பேச்சாளன் ஒருவன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் மிகவும் கண்ணியகுறைவான வார்த்தைகளை  பயன்படுத்தினான்; அதற்கு அவன் அன்றே அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அக்கட்சி தலைமை அதை செய்யவில்லை. அதனால் தமிழகமெங்கும் கொதித்தெழுந்த நமது புதிய தமிழகம் கட்சி தொண்டர்களை நாம் அமைதிப்படுத்தினோம்.

அதே போன்று ஓரிரு நாட்களில் நம்மிடம் கெஞ்சிக் கூத்தாடி பெற்ற தொலைக்காட்சி பேட்டியில் மகள் மருத்துவர் சங்கீதா அவர்களின் மதிப்பெண்ணை தொலைபேசியில் முழுமையாக கேட்டறிந்த பின்னரும் ஒரு நெறியாளருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச மனசாட்சி கூட  இல்லாமல், நள்ளிரவு 1 மணி முதல் காலை 5 மணி வரை எடுத்த நான்கு மணி நேர பேட்டியை முழுவதுமாக வெளியிடாமல் வார்த்தைகளை வெட்டியும் ஒட்டியும் சேர்த்து வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பி விட்டு பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான எண்ணத்தை பரப்பி ஓரி வள்ளல் முதலாளிக்கும், திமுகவிற்கும் கார்த்திகை செல்வன்  காட்டிய விசுவாசத்தை நாடறியும்.

நீட்டை ஆதரித்தோம் என்பதற்காகவே ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு மேலாக  வெளிநாடுகளிலிருந்தும், இண்டெர்நெட் அழைப்புகள் மூலமாகவும் அநாகரிக, அராஜக வார்த்தைகளால் நம்மை காயப்படுத்தினார்கள்; அதில் குடும்பத்தினரும் தப்பிவில்லை; மருத்துவமனை ஊழியர்களும் தப்பவில்லை. இதில் மிகவும் வருந்ததக்க  விசயம் என்னவென்றால் வந்த அழைப்புகளில் அதிகம் வெளிநாடு வாழ் இஸ்லாமியர்களிடமிருந்து வந்தது என்பதுதான்.

1998-99 காலகட்டங்களில் எந்த திமுக ஆட்சியின் கீழ் ’முஸ்லிம்கள்’ என்றாலே ’தீவிரவாதிகள்’ என முத்திரை குத்தி இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட போது புதிய தமிழகம் கட்சியின் அரவணைப்பால்  மட்டும் தான் அவர்களால் பாதுகாப்புடன் நிம்மதியாக இருக்க முடிந்தது என்பதையெல்லாம் மறந்துவிட்டு, நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது; மத்திய அரசு பாஜகவின் அரசாங்கம். எனவே மத்திய அரசின் சட்டத்தை ஆதரித்தால் அவர்கள் உற்ற நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் ’சங்கி’ என்று முத்திரை குத்தி எதிர்ப்பது என்ற அடிப்படையில் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள் நெறிமுறைகளுக்கு மாறாக குனியமுத்தூர் இல்லம் மற்றும் மருத்துவமனை வரை வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

கச்சத்தீவை திமுக தாரைவார்த்த போது பறிபோகாத தமிழகத்தின் உரிமை; 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முள்ளி வாய்க்காலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது பறிபோகாத தமிழின உரிமை, நீட் தேர்வை ஆதரித்து  நாம் ஒரு கருத்துச் சொன்னதனால் தமிழக மக்களின் உரிமைகள் பறிபோனதாக திமுகவும், அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்ட கூலிப் பட்டாளங்களும் நமக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.

வலுவான கருத்துக்களால் நாம் நம்மை உருவாக்கி கொண்ட விதம் உண்மையானதாகவும், நேர்மையானதாகவும், விஞ்ஞான ரீதியாகவும் இருந்த காரணத்தினால் நம் மீது வீசிப்பட்ட இலட்சோபலட்சம்  அஸ்திரங்களும் முனை மழுங்கி மாண்டு போயின. ஏறக்குறைய நான்காண்டு காலம் தமிழக மக்களை இவர்கள் சுடுமணலின் மேல் நடப்பது போன்ற ஒரு சூழலிலேயே வைத்திருந்தார்கள். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ்-சங்கிகளின் அரசு, தமிழர்களை-சிறுபான்மையினரை அழிக்க வந்த பாசிச பாஜக அரசே காரணம் என்று ஒரு மாய பிம்பத்தைக் கட்டமைத்து அதற்கான பிரச்சாரத்தை எந்த எல்லைக்கும் கொண்டு சென்றார்கள். அந்த வலையில் சிக்கியவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் இஸ்லாமியரும், கிறித்தவர்களுமே ஆவர்.

அதனாலேயே இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வந்தபோதெல்லாம் எதிர்த்தார்கள்; அரசு விழாவிற்கு வந்த போது ஐ.ஐ.டி வாசல் வரை சென்று எல்லைமீறி கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியே வரவிடாமல் முடக்கிப் போட்டார்கள். அந்த அளவிற்கு மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்களாக ஒரு பிம்பத்தை கட்டியமைத்துக் கொண்டார்கள்.  அப்படி கட்டியமைக்கப்பட்ட பிம்பம் அவர்களுக்கு 2019 நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றியை பறித்துக் கொடுத்தது.  2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 505 வாக்குறுதிகளுடன்  20க்கும் மேற்பட்ட கட்சிகளை கூட்டணி  சேர்ந்தும் தட்டுத்தடுமாறி ஆட்சியை அமைத்துக் கொண்டார்கள்.

மே 7-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றவுடன் ’Dravidian Stock’ எனப் பதிவிட்டு தங்களை தாங்களே தனித்து அடையாளப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அது போதாது என்று இந்தியத் தேசத்தை அடையாளப்படுத்த  மறுத்து ’ஒன்றிய அரசு’ எனச்  சிறுமைபடுத்தி வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நீட் ரத்து செய்யப்படும், இராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட 7 தமிழர்களையும் விடுவிப்போம்; பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி வளையத்திற்குள் கொண்டு வரப்படும், லிட்டருக்கு ரூபாய் ஐந்து குறைக்கப்படும்; தமிழகத்திற்கான நிலுவைத் தொகை 18,000 கோடி  பெற்றுத் தரப்படும்  போன்ற கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

முதல்வரான பின் பல்வேறு கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்ற ஸ்டாலின் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வெறும் கையோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர்களுக்கு ஒன்று மட்டும் மூன்று மாதத்தில் மிகவும் தெளிவாகிவிட்டது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்ற பாடத்தை நன்கு கற்றுக் கொண்டார்கள்.

இன்னும் மோடி ஆட்சி குறைந்தது மூன்று வருடத்திற்கு இருக்கும்.  மூன்றாண்டு  காலத்திற்கும் மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சியை ஓட்டுவது கடினம். நேரடியாகக் காலில் விழுந்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே கதவைச் சாத்திக்கொண்டு காலில் விழுவது தான் ஒரே வழி என முடிவெடுத்து ’நூற்றாண்டு விழா’ என்ற பெயரில் ராம்நாத் கோவிந்த் அவர்களை அழைத்து இருக்கிறார்கள். இப்போழுது திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று?  பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா?

 சட்டமன்ற நூற்றாண்டு விழாவாக  2021- ஆம் ஆண்டை தங்களுக்கு பொருத்தமாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆங்கிலேய அரசுக்கு எதிராக வங்காளம் மற்றும் பஞ்சாப் போன்ற வட இந்தியப் பகுதிகளில் சுதந்திரப் போராட்டம் வீரியமாக நடந்து கொண்டிருந்த  அக்காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தின் உத்வேகத்தை குறைக்கச் செய்ய சொற்ப அதிகாரங்களுடன் ஆட்சியில் பங்கு என்ற அமைப்பு 1921 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அந்த அரைகுறை ஆட்சியில் இரண்டாம் தரக்குடிமக்களாக பங்கேற்க ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், அன்றைய நீதிக்கட்சி மட்டும் பட்டவர்த்தனமாக இந்தியச் சுதந்திரத்தை எதிர்த்து பேசி ஆங்கிலேயரை அண்டியும், ஒன்றியும் பிழைக்க  தென்னெந்திய நலவுரிமை சங்கம் என்ற பெயரில் செயல்பட்ட ஜமீந்தார்களையும், நிலச்சுவாந்தார்களையும் உள்ளடக்கி அன்றைய ஆங்கிலேயரின் கீழ் ஆட்சியை ருசிக்கவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தை சிதைக்கவும், ஆங்கிலேயருக்கு சேவை செய்யவும் ,ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகிப் போனார்கள்.

அன்று இந்திய சுதந்திரத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இருந்த தென்னிந்திய நலவுரிமை சங்கமான நீதிகட்சியின் நீட்சிதான் ’Dravidian Stock’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். ஒரு வகையில் அது உண்மையாக இருக்கக்கூட வாய்ப்பு உண்டு. அது அப்படியே இருந்து விட்டு போகட்டும்.!

மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்தை ஜனநாயக ரீதியாக ஆதரித்ததற்காக பிஜேபியை அண்டியும், _த்தியும் பிழைக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் நெறிதவறி நமக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் திமுகவினர். ஆனால் நான்காண்டு  காலம் ஆர்.எஸ்.எஸ், பாஜக-க்கு எதிராக பேசிய வீராவசனங்களை நாடறியும். பாரத பிரதமரை கூட ’பாரத பிரதமர்’ என அழைக்காமல், இன்றுவரை இந்திய தேசத்தை ’ஒன்றிய அரசு’ என கூப்பாடு போட கூடியவர்களுக்கு இன்று ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அமித்ஷா வேறு, மோடி வேறு; பாஜக அரசு வேறு; மத்திய அரசாங்கம் வேறு; சங்கிகள் வேறு; ஜனாதிபதி ரம்நாத் கோவிந்த் அவர்கள் வேறா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது ஒரு பழமொழி. அது திமுகவிற்கு நன்கே பொருந்தும்.

இன்று வரை சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல் ’ஒன்றிய அரசு’  என அழைத்துக் கொண்டு மனம் கூசாமல் ஜனாதிபதி அவர்களை மட்டும் எப்படி அழைக்க முடிந்தது?  நீங்கள் உங்கள் ஆட்சி-அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சங்கிகளை; சங்கி அரசை அண்டிப் பிழைக்கவும், ஒன்றி பிழைக்கவும் தயார் ஆகி கொள்ளலாம். உங்களுக்கு இதெல்லாம் புதிது கிடையாது. ஏனெனில் அதற்கான விதையை  நடேச முதலியாரும், தியாகராயரும், டி.எம்.நாயரும் 1921-லேயே விதைத்துச் சென்று விட்டார்கள். அதனால் நீங்கள் நிறம் மாறுவது ஆச்சரியப்படும் விசயம் ஒன்றுமில்லை. ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு வருத்தம் தான், நீங்கள் சங்கிகளுக்கு எதிராக போட்ட போலி நாடகத்தை முழுமையாக நம்பி ஏமார்ந்து போன தமிழக கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும், எண்ணற்ற தமிழக இளைஞர்களும் இனிமேலாவது விழித்துக் கொள்வார்களா? என்பதே நமது கேள்வி.

வெற்றி பெறுவதற்காக எந்த பொய்யையும் பேசலாம்; எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்; ஏன் சிரித்துக்கூட கழுத்தறுக்காலம் என்ற ’மாக்கியவல்லி’யின் அரசியல் பாடம் எல்லா காலகட்டத்திலும் கை கொடுக்காது என்பதை மறந்து விட வேண்டாம். ஜனநாயக  ரீதியான கருத்துக்களுக்காக நீங்கள் எங்களை பார்த்து ஒரு விரலை சுட்டிக் காட்டி சங்கிகளின் கைக்கூலி, பிஜேபியை அண்டியும், _த்தியும் பிழைக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் பேசியதை இப்போது எங்களது நான்கு விரல்களும் உங்களுக்கு எதிராக சுட்டிக்காட்டி பேச திரும்பி இருக்கிறது இதுதான் ’அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்பதன் பொருளாகும்.

நாம் எக்காலத்திலும் எவரிடத்திலும் அண்டியும், ஒண்டியும் பிழைத்ததும் இல்லை, பிழைக்கவும் மாட்டோம்!

அது நமது இரத்தத்திலேயே இல்லாத விஷயம்!!

தன்னிடம் ஊழல் பணம் அதிகம் இருப்பதாலும், அதைப் பயன்படுத்தி எளிதான இலக்கு எனக் கருதியும் ஒருகாலத்திலும் வரைமுறையற்ற பிரச்சாரத்தில் எவருக்கு எதிராகவும் செயல்படாதீர்கள்!

காலம் பொல்லாதது; எதை மறைக்க முயற்சி செய்தீர்களோ,

அது இப்போது அம்பலப்பட்டு விட்டது!

கொண்டாடுங்கள்! நன்றாக கொண்டாடுங்கள்!!

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை

அண்டி பிழைத்ததையும், _த்தி பிழைத்ததையும்;

இனி சங்கிகளை அண்டியும், ஒன்றியும் பிழைக்க போவதையும் எண்ணி அகமகிழ்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடுங்கள்!!

வாழ்த்துக்கள்!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,

நிறுவனர் & தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

02.08.2021


No comments: