Tuesday, August 24, 2021

சுவையான கனிந்த பழம்

குஜராத்தில் மோடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வார்டு தேர்தலில் கூட அவர் நின்று இருக்கவில்லை.  அவர் ஒரு சாதாரண ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்.  அவ்வளவு தான். டெல்லி தலைமை என்ன வேலை கொடுக்கின்றதோ அதைத் தான் செய்து கொண்டு இருந்தார்.  



கோவையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவருக்கு ஆர்எஸ்எஸ் சார்பாக வந்து இரண்டு வாரத்திற்கு மேல் இங்கே இருந்துள்ளார். நம்ப முடிகின்றதா?

குஜராத் அரசியல் சாதிய லாபி என்பது உடைக்க முடியாத ஒன்று என்று  அனைவருக்கும் தெரியும்.  வட இந்திய சாதிய லாபி என்பது எத்தனை ஆழமானது என்பது தெரிந்தது தானே?

ஆனால் ஒரே ஒரு பூகம்பம்.  குஜராத் அரசியல் முதல் மக்களின் வாழ்க்கை வரை அனைத்தையும் மாற்றியது. மோடியின் அரசியல் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. தொடங்கிய முதல் நாள் முதல் நாம் கனவுகளில் மட்டுமே கண்டு ரசித்த வெள்ளைப் புரவிகளில் அதிகார லகானுடன் பயணம் செய்யத் தொடங்கினார்.

மனிதர்கள் யாரும் உதவவில்லை.  இயற்கை இவர் அந்த இடத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்து இருந்தது என்பதாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மோடியைப் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிப்பு செய்வதற்கு முதல் நாள் வரைக்கும் குஜராத்திற்குள் அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் அவர் இருந்த பாஜக மட்டுமல்ல. 

அமெரிக்கா முதல் உலகில் உள்ள அனைத்து சக்திகளும் ஒன்றாக செயல்பட்டது என்றால் அது உண்மை. நான் அந்த சமயங்களில் வந்த ஊடக கட்டுரைகளை முழுமையாக வாசித்துள்ளேன்.

மோடி தான் பிரதமர் என்று உள் அரங்கு முடிவு செய்வதற்கு முன்பு சற்று பின்னோக்கிப் பாருங்கள்.

மோடி யாரையும் ஒதுக்கவில்லை. வெறுக்கவில்லை. ஸ்டிங் ஆப்ரேசன் செய்து மாட்டிக் கொடுக்கவும் இல்லை. கீழ்த்தரமான செயல்கள் எதுவும் செய்யவும் இல்லை. 

காரணம் சாதிய பலம், காசு பலம், வாரிசு பலம் என்று அரசியலில் வெல்ல பயன்படும் எதுவுமே அவருக்கு இல்லை என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருங்கள். அவர் தனி ஆள்.  குடும்பம் கூட அவருடன் இல்லை.  சித்தன் போக்கு சிவன் போக்கு என்று வாழ்ந்த மனிதர்.  இப்போது வரைக்கும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது கவனிக்கத் தக்கது.  

வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஷோஷி, பிரமோத் மகாஜன் போன்ற இன்னும் பலரையும் இயற்கை எப்படி மாற்றியது? ஒதுக்கியது? நீக்கியது? காலத்தோடு கரைய வைத்தது?

கணக்கிட்டுப் பாருங்கள்.

அதுவே தான் தமிழகத்தில் அண்ணாமலைக்கும்.

பாஜக மாநில தலைமைப் பொறுப்பு மூன்று வருடங்கள் மட்டுமே.  அடுத்த மூன்று வருடங்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. இன்றைய சூழலில் ஆறு வருடங்கள் அண்ணாமலை அவர்கள் இதே தலைமைப் பொறுப்பில் இருப்பார்.  

முதல் மூன்று வருடங்களில் கட்சிக்குள் களை எடுத்து விலை மகன்களாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஆசிரியராக, காவல்துறை அதிகாரியாக மட்டும் பணியாற்றிக் காட்டுவார் என்று நம்புகிறேன்.

நிச்சயம் முதல் 34 மாதங்கள் கட்சி சார்ந்த வேலைகள் பார்த்தாலும் முடிக்க முடியாத அளவுக்கு முட்கள் அதிகமாக இங்கே உள்ளது.  அருவாள் வைத்து வெட்டுவாரா? இல்லை அப்படியே தீ வைத்துக் கொளுத்துவாரா? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

இரண்டாவது மூன்றாண்டுகளில் தான் அண்ணாமலை அவர்கள் பேட்டியில் சொல்லியிருப்பது போல மாவட்டம் தோறும் பல அண்ணாமலைகளை உருவாக்க முடியும்? உருவாக்குவார் என்று நம்புகிறேன். 

அதற்குள் முத்துவேலர் பரம்பரை தன் கைங்கர்யத்தைத் தொடங்கி பத்து லட்சம் அருகே கொண்டு வந்து நிறுத்தி சாதனை புரிந்து இருப்பார்கள். அப்போது தான் அண்ணாமலை அவர்களுக்கு முழுமையாக ஆக்கப்பூர்வமான வேலைகள் காத்திருக்க வாய்ப்பு உள்ளது.   

இப்போது நடந்து கொண்டு இருக்கும் பீத்தப்பய சமாச்சாரமும், கக்கூஸ் எட்டிப் பார்த்து வீடியோ எடுத்த பெருமை மிகுந்த சாதனைகளும் அடியோடு இல்லாமல் இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

குப்புசாமி அண்ணாமலை என்பவர் திராவிட அரசியலில் ஆணி வேருக்கு மருத்துவம் பார்க்க வந்த மனிதர் இவர். இதனை வாசிக்கும் போது பலருக்கும் நகைப்பாகத் தோன்றும். அடுத்தடுத்து உருவாகும் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டே வாருங்கள்.

நான் எழுதுவது பொழுது போக்குவதற்காகவா? இல்லை முன்கூட்டியே சொல்லி இருக்கிறேனா என்று அப்போது என் பெயரை யோசித்துக் கொள்ளுங்கள்.

1957 முதல் 1967 வரை அண்ணாதுரையும் கருணாநிதியும் என்ன செய்தார்களோ அதைத்தான் அண்ணாமலை அவர்கள் தன் பணியாக இங்கே இப்போது தொடங்கி உள்ளார். இது திமுக விற்கு நன்றாகவே தெரிகின்றது. ஆனால் அவர்கள் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றார்கள்.  

அதிகாரம் கையில் இருப்பதால் அசால்ட் ஆறுமுகம் போலச் சமாளிக்கின்றார்கள்.

காத்திருங்கள். 

கனிந்த சுவையான பழத்தை நிச்சயம் நம்மால் சுவைக்க முடியும்.