Wednesday, July 21, 2021

அருள்

கேள்வி

பாஜக வந்தால் எல்லாம் மாறிவிடும்  என்று சொல்லி உள்ளீர்கள்.. இது எல்லாக் கட்சிகளும் சொல்வது தான். தனி மனிதர்கள் மாறாது இங்கு எதுவும் மாறப் போவதில்லை.. 

ஆனால் மனிதனை மாற்றும் சக்தி இயற்கைக்கு மட்டுமே உண்டு. மாறாவிட்டால் இயற்கையே அதற்குப் பதில் சொல்லும். இன்னும் 15 வருடங்கள் உலகத்தில் உயிரோடு இருப்பதே சவாலாக இருக்க போகிறது. அரசியல், மதம் இரண்டையும் வணிகம் பின்னால் இருந்து ஆட்டி வைக்கும்... 

இது நன்மையா தீமையா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்...

பதில்

நேற்று அருள் என்பவர் இந்த விமர்சனத்தைத் தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்தார். நன்றி. நான் எழுதுவது ஒரு வழிப் பாதையல்ல. எனக்கு எந்த முன் முடிவுகளும் இல்லை. நான் எழுதுவது மட்டும் சரி என்ற பிடிவாதமும் இல்லை. நாகரிகமான ஆக்கப்பூர்வமான உரையாடல்களை விரும்பவே செய்கின்றேன். நிச்சயம் அதற்கு உரியப் பதில் அளிப்பேன்.

1. என்னுடன் உரையாடும் மிக நெருங்கிய நண்பர்கள் மோடி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு உரையாடத் தொடங்கும் போது பக்கத்து வீட்டில் தீ பிடித்த அவசரம் போலவே பேசத் தொடங்குகின்றார்கள். நிதானம் இல்லை. உள்வாங்கி உணர்ந்து பேசும் பொறுமை இல்லை. அவர்களின் பதட்டத்தை ரசிப்பேன். நான் பதட்டப்படுவதில்லை. காரணம் தமிழ் நாட்டில் நடந்த நடந்து கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினால் அவர்கள் அமைதியாகி விடுவார்கள். அதற்கு அவர்கள் பதில் அளிக்க முன்வருவதில்லை என்பதனை நான் அறிந்தே வைத்துள்ளேன். 

மதம் கொடுமையானது என்று வாதிட விரும்புகின்றவர்கள் சாதி குறித்து எதுவும் பேசுவதில்லை. மதம் மூலம் ஆட்சியைப் பிடிக்கின்றார்கள் என்று வாதிட விரும்புகின்றவர்கள் சாதி மூலமாகத்தான் இங்கே அதிகாரம் தீர்மானிக்கப்படுகின்றது என்பதனை பேச விரும்புவதில்லை. ஏன்?

சமூக நீதி என்ற வார்த்தையைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் எந்தச் சமூகத்திற்கான உண்மையான நீதி என்பதனை ஏன் பேச விரும்புவதில்லை. தாழ்த்தப்பட்ட சமூகம் முன்னேற வேண்டும் என்று சொல்கின்றவர்கள் ஏன் அவர்களுக்கு இன்னமும் சமூகம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களை சுய மரியாதை உள்ளவர்களாக மாற்ற அதற்கான காரணக் காரியங்களைச் செய்வதில்லை என்பதனை யோசிப்பதே இல்லை.

நான் யோசிப்பது என்னளவில் என் குடும்பத்திற்கும் அரசாங்கத்திற்கும் உண்டான தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்பதனையே முதலில் பார்க்கின்றேன். ஜனநாயகம் என்ற போர்வையில் தேர்ந்து எடுக்கப்பட்ட சார்பாளர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனைத்தான் நான் கருத்தில் கொள்கிறேன். அதன் அடிப்படையில் தான் நான் கட்சி அரசியல் அதன் கொள்கைகளைப் பார்க்கின்றேன்.

1. இன்று நான் வாங்கும் நியாயவிலைக்கடைகளில் வந்துள்ள அனைத்து விதமான நவீனத் தொழில் நுட்ப வசதிகளும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கட்டாயத்தின் அடிப்படையில் தான் புகுத்தப்பட்டது.

2. இன்று நான் பயன்படுத்தும் மின்சாரம் என்பது பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு தான் கிடைத்து வருகின்றது. இவர்களின் கொள்ளையின் மூலம் மூட வேண்டிய தமிழக மின்சார வாரியம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

3. இன்று நான் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை அனைத்தும் கடந்து ஏழு ஆண்டுகளில் தான் தமிழகம் எங்கும் அதிகமாக போடப்பட்டுள்ளது.

4. இன்று நான் பார்த்து ஆச்சரியப்படும் ரயில்வே துறை என்பது பாஜக அரசின் மூலமே சாத்தியப்பட்டுள்ளது. 

5. பாஜக விற்கு தமிழகம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அனுப்பத் தயாராக இல்லை என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.

6. கற்றுக் கொள் களத்தில் இறங்கு குழுமம் வலைளொளிக்காட்சியை உங்கள் கட்சி கண்ணோட்டத்தை நீக்கி வைத்து விட்டு நேரம் இருந்தால் பொறுமையாக முழுமையாக ஒன்றன்பின் ஒன்றாக கேட்டுப் பாருங்கள். 

புள்ளி விபரங்கள் துறை சார்ந்து இந்தியா சாதித்த சாதனைகள் உங்களுக்குப் புரிய வாய்ப்புண்டு.

7. நிர்வாகத்தில் கீழ் முதல் மேலே உள்ள பதவிகள் வரைக்கும் நான் இருந்தவன் என்ற முறையில் ஒரு திட்டமிட்ட நிர்வாகம் எப்படி நடக்க வேண்டும் என்பதனை நான் மனதில் வைத்து இருந்தேனோ அப்படித்தான் என் பார்வையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. 

இரண்டு மின் நூலில் ஆவணப்படுத்தி உள்ளேன். ஆதாரங்கள் கொடுத்துள்ளேன். எதுவும் புனைவு அல்ல. கற்பனைகளை சேர்க்கவில்லை. எதிர்க்கட்சிகளும் மறுக்க முடியாத விசயங்கள் உள்ளது. 

8. மதம் வணிகத்தை கட்டுப்படுத்த முடியாது. வணிகம் மதத்தை உள்வாங்கி செறித்து விடும். அமேசான் பத்தாயிரம் ரூபாய் அலைபேசியை எட்டாயிரம் ரூபாய்க்கு கொடுத்தால், அதுவும் தரமானது எனில் மூன்று மதங்கள் மட்டுமல்ல அனைத்து மற்ற மத மக்களும் வாங்காமல் இருப்பார்களா? விற்பவர் கிறிஸ்துவர் என்று மற்றவர்கள் புறக்கணிப்பார்களா?

9. இணையம் வழியே நிர்வாகம் என்பதனை பாஜக அரசு தான் முன்னெடுத்து வந்துள்ளது. என்னால் இன்று வரையிலும் மாநில அரசில் உள்ள ஒரு அதிகாரி, அமைச்சர், சமஉ ஒருவரைக்கூட இயல்பாக தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் 3000 கிமீ தொலைவில் உள்ள மிகப் பெரிய அதிகார வர்க்கத்தை என்னால் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகின்றது. என் சுயமரியாதையைக் காப்பாறுகின்றார்கள்.

நான் எழுதிய 100 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாறு இதில் இணைத்துள்ளேன். 

நான் ஏன் இவர்களை ஆதரிக்க மறுக்கின்றேன் என்பதற்கு அத்தனை காரணங்களும் அதில் உள்ளது. நான் அரைகுறை அரசியல் ஆர்வலர் அல்ல. இவர்களுக்கு அதிகாரம் என்பது பணம் சம்பாதிக்க உதவும் ஒரு கருவி. இவர்கள் தங்கள் சொந்த மக்களை விலைபேசும் வேடத்தில் வாழும் அற்ப மானிட பிறப்புகள். 

ஆனால் நீங்கள் சொல்வது உண்மை. 

இவர்கள் ஆட்சியில் இருந்தால் அடுத்த 15 வருடம் அல்ல. அதற்குள் நமக்கு மட்டுமல்ல நம் வாரிசுகளும் இங்கே தமிழ் நாட்டில் வாழ முடியாத நிலையே உருவாகும். உருவாக்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். இரண்டு கட்சிகளும் முடிந்தால் மட்டுமே அது தமிழகத்திற்கு சுதந்திர தின நாள். அது பாஜக அல்லது புதிய நபர்கள் யார் வேண்டுமானாலும் இருப்பதை நான் ஆதரிப்பேன்.

இவர்கள் இன்னமும் தங்கள் சுய லாபத்துக்காக வழங்கிக் கொண்டிருக்கும் விஷ சாரயத்தை குடித்து வாழும் ஆண்கள் ஆண்மையிழந்தவர்களாக, உழைக்க முடியாதவர்களாக, செயல்பட முடியாதவர்களாக மாறியிருப்பார்கள்.  

காசு பார்ப்பதையே முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்ட காட்சி ஊடகங்கள் அனைத்து பெண்களை பொறாமைப் பேய்களாக மாற்றியிருப்பார்கள்.

ஆங்கிலமும் தமிழும் முழுமையாக தெரியாத புரியாத புதிய தலைமுறை உருவாகி தியாகத்தை கொச்சைப்படுத்துவதையே நாகரிகம் என்பதாக கருதி வாழ்வார்கள்.

காரணம் இவர்களின் நோக்கம் செயல் எல்லாமே விழிப்புணர்வு இல்லாத தலைமுறை, போட்டிகளை வெறுக்கும் தலைமுறை, தேடல் இல்லாத தலைமுறை என்று ஒரு பெருங்கூட்டத்தை இங்கே இப்படியே இருக்க வேண்டும் என்பதனை 50 ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர். அதையே சரியென்று நம்ப வைத்துருப்பதும் இவர்களின் தனிப்பட்ட வெற்றி தானே?

காரணம் காமராஜர், பக்தவச்சலம், அண்ணாத்துரை என மூன்று பேர்கள் அரசியல் தலைவர்களாக இங்கே வாழ்ந்தார்கள். அதற்குப் பின்னால் வந்த அத்தனை பேர்களும் அரசியல் வியாதியாகவே வாழ்ந்தனர் என்பதனை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

நான் வியாதியஸ்தர்களை ஆதரிக்கவும் மாட்டேன். பெருமைப்படுத்தவும் மாட்டேன்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் குறிப்பிட்ட மூவரின் சித்தாந்தம் என்ன...? உண்மையாக புரிந்தவர்கள் இருக்கும் வரை...

கனவுகள் நல்லதே...(!)

திண்டுக்கல் தனபாலன் said...

ஆமாம் ஜாதி/சாதி எனும் வடசொல் எப்படி நுழைந்தது...? தமிழன் எப்படிக் கெட்டான்...? ஆராய்க...