Tuesday, June 08, 2021

அடிப்படை அரசியல் சூத்திரம்

எழுதினார்கள் வென்றார்கள்,

தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்கள். சின்னச் சின்ன துண்டு அறிக்கைகள் முதல் திரைப்பட வசனம் வரைக்கும். பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

தெருமுனைக்கூட்டம் முதல் லட்சக்கணக்காக மக்கள் முன்னிலையில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டேயிருந்தார்கள். வெயில், மழை, குளிர்காலம் எதையும் பார்க்கவே இல்லை. தினசரி கடமையாகவே செய்தார்கள். மக்களுக்குப் புரியுமா? புரியாதா? விரும்புவார்களா? மாட்டார்களா? நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? ஒதுக்குவார்களா? ஓரம் கட்டி விடுவார்களா? அடிக்க வருவார்களா? அரவணைப்பார்களா? ஆதரவு தருவார்களா? நம்புவார்களா? நமக்கு(ம்) அதிகாரத்தில் வாய்ப்பு தருவார்களா? எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேச்சையும் எழுத்தையும் கலையாக ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 1967 முதல் 2016 வரைக்கும் ஏதோவொரு வகையில் அறுவடை செய்து கொண்டே இருந்தார்கள். 

ஒரு தலைமுறை உழைத்த உழைப்பு பத்துத் தலைமுறைக்குப் பலனாக மாறியது. இதைப் பார்த்துச் சோர்ந்து போனவர்கள், வெறுத்துப் போனவர்கள், போராட முடியாதவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர்கள் அத்தனை பேர்களும் ஒன்று காணாமல் போனார்கள் அல்லது சரணாகதி அடைந்தார்கள். இதை வைத்து இன்று வரையிலும் எதிர்த்த அத்தனை பேர்களும் இப்போது எங்கே இருக்கின்றார்கள்? என்று கொக்கரிக்கின்றார்கள்? வாய்ப்பு இருக்கும் வரைக்கும், நேரம் கிடைத்த பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இணையத்தில் தொடர்ந்து எழுதினேன்.

பொய்களைத் தைரியமாகக் கூசாமல் பேசுகின்றார்கள். தொடர்ந்து அதனைப் பேசியே உண்மை என்று நம்ப வைக்கின்றார்கள். நம்பக்கூடியவர்களின் மனதில் வேறு எதையும் நினைக்க முடியாத அளவுக்கு ஆழமாக ஊடுருவுகின்றார்கள். உண்மைகளைப் பேசக்கூடியவர்கள் அனைவரும் பைத்தியக்காரன் போலப் பார்க்கப்படுவதால் களத்தில் அவர்கள் மட்டுமே இருப்பதாகத் தோற்றம் உருவாகத் தோல்வி பயத்தில் ஒவ்வொருவரும் காணாமல் போய்விடுகின்றார்கள். இது தான் இங்கே இத்தனை நாளும் நடந்து கொண்டிருக்கின்ற அடிப்படை அரசியல் சூத்திரம்.

இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க

https://www.amazon.in/dp/B09477X7DF/ref=cm_sw_r_wa_apa_glt_987NMVTK9D8G7JE0AF5P

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வர்ணத்தை வீழத்தினால் சரி...!