Thursday, June 10, 2021

தமிழக உபி களும் யோகியின் உபியும்

கடந்த சில மாதங்களாக நீங்கள் ஒன்றைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்? தொடர்ந்து உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து யாரோ ஒருவர் சொல்லி வைத்தாற் போல அவதூறுகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். புலனாய்வு புலிகள் யோகி யை வைத்து எழுதும் போது இத்துடன் பாஜக முடிந்தே விட்டது. ஆர்எஸ்எஸ் யோகியைக் கழட்டி விட்டது. கோபத்தில் உள்ளது என்பது போன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன? 

என்ன காரணம்?வார இதழ்கள், தினசரி பத்திரிக்கைகள், செய்தி ஊடகங்கள் இது தவிர யூடியூப் சேனல்கள் இந்த நான்கும் நான்கு முனைகளிலிருந்து தமிழக மக்களின் மூளையில் நியூரான்களை  அனுதினமும் ஊடுருவிக் கொண்டே இருக்கின்றது. இவையெல்லாம் இங்கே தேவையில்லையே? என்று பத்து விசயங்களைப் பட்டியலிட்டால் அந்தப் பத்தும் தான் முக்கிய விவாதப் பொருளாக இருந்து வருவதைக் காணலாம். 

ஏன் இப்படி?

பாஜக என்பது காங்கிரஸ் போல ஒன்றை ஆளுமை, குடும்ப ஆளுமை சார்ந்தது அல்ல. இன்னமும் சொல்லப் போனால் மனிதர்களை முன்னிறுத்துவது காலச் சூழல் பொறுத்து மாறுபடும். அன்று முதல் இன்று வரையிலும் அடிப்படையில் வகுக்கப்பட்ட கொள்கைகள், சித்தாந்தங்கள் வழியே அந்தச் சமயத்தில் யார் தேவைப்படுகின்றார்கள்? என்பதனை வைத்தே ஒவ்வொன்றும் நடைபெறும்.  அதிகாரம் என்பது கூடுதல் சுமை என்ற போதிலும் ஒவ்வொன்றும் கவனமாக பரிசீலிக்கப்படும்.  அப்படித்தான் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் தொடங்கிய பயணம் இன்று 303 உறுப்பினர்கள் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது. இன்னும் வளரும்.

ஆனால் 58 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஊடுருவியுள்ள இடங்களில் வாஜ்பாய் தொடங்கி மோடி வரைக்கும் இன்னமும் எட்டவில்லை என்பதே எதார்த்தமாகும்.  உச்ச நீதிமன்றம் தொடங்கி உள்ளே உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த காங்கிரஸ் அனுதாபிகளாக இன்னமும் இருக்கும் அதிகாரிகள் வரைக்கும் பாஜகவிற்கு மிகப் பெரிய சவால்களைத் தந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.

இந்தச் சூழலில் யோகி மேல் பலத்த தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

கோவிட் பெருந்தொற்று என்பது உங்களுக்கும் எனக்கும் மக்கள் உயிரோடு தொடர்புடையது. ஆனால் காங்கிரஸ் மற்றும் பாஜக வை அதிகாரத்திலிருந்து நீக்கியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்ப்பார்ளர்களுக்கு இதுவொரு வரம்.

என்ன சொல்லி எப்படி மாற்றி எதன் மூலம் மக்களைக் குழப்பி பாஜகவின் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கலாம் என்று கடந்த 20 மாதங்களாக வெவ்வேறு விதமாக தொடர்ந்து முயன்று வந்தாலும் அவர்களுக்கு இதுவரையிலும் தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. அவர்கள் எதைத் தொட்டு அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றார்களோ அதற்கு பத்துப் படிகள் தாண்டி மோடி மேலே சென்று விடுவதால் எதிர்ப்பாளர்கள் செய்வது அறியாமல் திகைத்து மூச்சு வாங்க பின்னால் துரத்தி ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள்.

இப்போது யோகி உத்திரப் பிரதேசத்தில் பெருந்தொற்று காலத்தில் மோசமான நிர்வாகத்தின் மூலம் அங்கே கலவரச் சூழல் உருவாக்க முடியும் என்றே நம்பி காத்து இருந்தனர். ஆனால் உத்திர பிரதேசத்தின் பொது சுகாதாரம் இந்திய மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்க அதிலும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கின்றார்கள். இதன் காரணம் யோகி அவர்கள் தேசிய அரசியலில் முக்கியமாக முகமாக மாறிக் கொண்டு வருகின்றார்.  இதுவரையிலும் மோடிக்கு அடுத்து அமித்ஷா என்ற நிலையில் இரண்டாவது வரிசைப்பட்டியலில் வளரும் நிலையான இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்ற நிலையில் தற்போது யோகியும் இணைந்துள்ளார். இது தான் எதிர்ப்பாளர்களுக்குப் பயத்தையும் கிலியையும் உருவாக்கியுள்ளது.

2017ல் நடந்த உபி தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த மகத்தான வெற்றியின் முக்கிய சூத்ரதாரியாக இருந்தவர் அமித்ஷா அவர்கள். அவர் தான் உபி முதல்வர் என்றே அனைவரும் நம்பிக் கொண்டு இருந்தனர். யோகி என்ற பெயர் அவரின் பாராளுமன்றத் தொகுதியைத்தாண்டி கோரக்நாத் மடத்தைக் கடந்து எவரும் அறியாத ஒன்று. ஆனால் மோடி யோகியை முதல்வராக நியமித்த போது உலகமே உற்றுப் பார்த்தது. எதிர்ப்பாளர்கள் கலங்கி நின்றனர்.

பா.ஜ.க. ஏழு ஆண்டு கால ஆட்சி - இந்திய உள்கட்டமைப்பு வசதிகளில் உருவான மாற்றங்கள்

உபியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் யோகியை அமிலமாக குறிப்பிட்டார். தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.

இருபது கோடிக்கும் அதிகமாக வாழும் உபியில் மட்டும் நான்கு கோடி மக்கள் இஸ்லாமியர்கள். துறவு ஆடையில் வாழ்ந்த ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்தது இந்தியச் சரித்திரத்தில் இதுவே முதல்முறை. எதிர்முனை மற்றும் துருவ முனை என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வர்ணித்த போதும் கூட பாஜக அவற்றைப் புறந்தள்ளியது.

இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விசயங்கள் உள்ளது.

நடைபெறப் போகும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் உபி மக்கள் என்ன முடிவு எடுக்கப் போகின்றார்கள்? அதற்கு முன்பாக வரப்போகின்ற 2022 உபி சட்டமன்றத் தேர்தல் யோகி அவர்களுக்கு மீண்டும் மக்கள் ஆதரவை வழங்குவார்களா? 

யோகி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசிய அரசியலில் தவிர்க்கவே முடியாத முகமாக மாறுவார் என்று எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் இப்போது முதல் கதறத் தொடங்கி உள்ளனர்.

உபியில் கடந்த வாரம் பெருந்தொற்று என்பது மூன்று இலக்கம் என்கிற அளவிற்குக் குறைந்துள்ளது. ஆனாலும் சர்வதேச ஊடகங்கள் துணை கொண்டு உபி மேல் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புவது இன்று வரையிலும் நின்றபாடில்லை. அது கடைசியில் கங்கை நதியில் மிதக்கும் பிணங்கள் வரைக்கும் கொண்டு செலுத்துகின்றார்கள். இறந்த பிணங்கள், கணக்கில் வராத பிணங்கள், மிதக்கும் பிணங்கள் என் பிண அரசியலைத் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் படங்களைக் கொண்டு தொடர்ந்து கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகளில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் எழுதும் நச்சுக்கட்டுரைகள் தான் அதிகம். இதில் முன்னிலையில் இருப்பவர் பர்கா தத். சுடுகாட்டுக் கள ஆய்வு போராளியாகவே தற்போது மாறியுள்ளார்.

மற்றொரு மூத்த நிருபர் சேகர் குப்தா சமீபத்தில் பிசினஸ் ஸ்டாண்டர்டில் சுட்டிக்காட்டினார்: 

"மும்பை மற்றும் டெல்லியில் கிட்டத்தட்ட 100 சதவீதம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில், 2020 ஆம் ஆண்டில் மொத்த இறப்புகள் 111,942 ஆக இருந்தது, இது 2019 ல் 91,223 ஆக இருந்தது. நகரத்தில் 11,116 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன மீதமுள்ள 10,000 பேர் கோவிட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் தவறவிட்டவர்கள் என்று நீங்கள் கருதலாம்.

"டெல்லி மிகவும் சுவாரஸ்யமானது. 2020 ஆம் ஆண்டில் அதன் மொத்த இறப்புகள், 142,693, உண்மையில் 2019 கள் 149,998 ஐ விடக் குறைவு. இது 10,557 கோவிட் இறப்புகள் பதிவாகியிருந்தாலும், டெல்லியில்" வழக்கமான "காரணிகளால் இறப்பு, சாலை விபத்துக்கள், ஊரடங்கு காரணமாக கொலைகள், குடித்து விட்டு வாகனங்கள் இயக்குவதன் மூலம் நடந்த சாலையில் நிகழ்ந்து கொண்டிருந்த அனைத்தும் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டன.

ஆனாலும் எதிர்ப்பாளர்கள் பத்திரிக்கையாளர் போர்வையில் 2021 ஆம் ஆண்டிற்கான அவர்களின் கணிப்புகளின் அடிப்படையில் புதிய "மோசமான" காட்சிகளை உருவாக்குவதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார்கள்.

இவற்றையெல்லாம் மீறி, கொரோனா வைரஸ் தொற்று உத்திரபிரதேச மக்கள் மீது ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் மகன் மகள் தந்தை தாய் கணவன் போன்ற அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர். ஏழைகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக கோபத்தைத் தூண்டி விட, கோவிட் -19 ல் இருந்து உ.பி. மீண்டு வருவதை உணர்ந்த எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடங்கியது.

மேற்கு உ.பி.யில் ஆதித்யநாத்துக்கு எதிராக ஜாட் வாக்குகளைத் திரட்ட போராட்டத்தை பி.கே.யூ ( பாரதிய கிஷான் யூனியன்) தலைவர் ராகேஷ் தியாகத்  அவதூறுகளைப் பரப்பி வருகின்றார்.

ஆதித்யநாத் தனது பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். 

கடந்த நான்கு ஆண்டுகளில் உ.பி.யின் வளர்ச்சி முன்னேற்றம் குறித்து இரண்டு நிமிட விளம்பரங்கள் உருவாக்கப்பட்டது. மக்களுக்குத் தொடர்ந்து புரிந்து கொள்ளும் வண்ணம் அந்தப் பணியில் உபியின் செய்தித் தொடர்புத்துறை தொடர்ந்து இயங்கி வருகின்றது. எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் உள்ளூர் மாநில செய்திச் சேனல்கள் செய்வதறியாது தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இறுதியில், 2022 உ.பி. சட்டமன்றத் தேர்தலில் வேலைகள், பொருளாதாரம், கோவிட் மற்றும் விவசாயிகள் அனைவரும் பங்கு வகிப்பார்கள் என்றாலும், அது துருவமுனை, ஆதித்யநாத் அறிந்திருப்பது போல, அது ஒரு கத்தி முனையில் ஒரு மாநிலத்தைச் சாய்க்கும் தேர்தலாகவே நடைபெறப் போகும் உபி தேர்தல் இருக்கப் போகின்றது.

சமாஜ் வாடி கட்சியின் ஆட்சியின் போது நடந்த மிருகத்தனமான சட்டவிரோதம்  இன்னும் உபி மக்களால் மறக்கப்படவில்லை. இன்னும், யாதவ்-முஸ்லீம் வாக்கு வங்கி எஸ்பிக்கு ஒரு பெரிய பலமாகவே உள்ளது. இத்துடன் மாயாவதியில் தலித் வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் எஸ்பி இருவரும் 2017 உபி சட்டமன்ற வாக்கெடுப்பில் 20 சதவீத வாக்குகளைப் பெற்றனர். எஸ்பி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடையிலான வாக்குப் பிளவு காரணமாக பாஜக வென்றது.

2022 ஆம் ஆண்டில் பாஜக ஒரு சில சதவீதப் புள்ளிகளால் கூட நழுவி, எஸ்பி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் வாக்குப் பங்கை ஓரளவு அதிகரித்தால், 2022 விளைவு மிகவும் வித்தியாச முடிவாகவே  இருக்கும். இதன் காரணமாகவே இப்போது யோகி அவர்கள்  திட்டமிடப்பட்ட ஊடக பிரச்சாரம், பாதகமான விளைவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆதித்யநாத்தின் தேசிய லட்சியங்கள் என்ன?

2022 இல் பாஜக உ.பி.யை இழந்தால், அவர் தனது கோரக்நாத் மடத்திற்குத் திரும்புவார். எந்த மாற்றமும் இருக்காது.

2022 ஆம் ஆண்டில் உ.பி.யில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால், மோடிக்கு பிந்தைய காலத்தில் முன்னணி தேசியப் போட்டியாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இணைவார்.

மோடி பிரதமராக இல்லாதிருந்தால், அவர் 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தனது பிரிட்டிஷ் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆண்டி மரினோவிடம் கூறியது போல, அவர் ஒரு துறவியாக மாறியிருக்க வாய்ப்பு அதிகமாக இருந்தது.  ஆனால் இப்போது முதலமைச்சரான ஒரு துறவி, ஒரு நாள் பிரதமர் என்ற இடத்தைப் பிடித்தால் அது இந்திய வரலாற்றில் முரண் நகையாகவே இருக்கும்.

அதுவரையிலும் எதிர்ப்பாளர்களுக்கு இருக்கும் சில வாய்ப்புகள். மோடிக்கும் ஆதித்யநாத் க்கு சண்டை.  ஆதித்யநாத் அவர்களை ஆர்எஸ்எஸ் புறக்கணிக்கின்றது. பாஜக இரண்டாம் கட்டத் தலைவராக யோகி அவர்கள் மாற முடியாது. அமித்ஷா ஏற்றுக் கொள்ள மாட்டார் போன்ற கற்பனைகளை எழுதி புளகாங்கிதம் அடைய வேண்டியது தான்.

காரணம் கர்மயோகிகளுக்கு மட்டும் தான் தெரியும். 

மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அழியக்கூடியவர்கள். 

ஆனால் கொள்கை என்பது அடுத்தடுத்த நபர்களால் கொண்டு செலுத்தப்படும். 

அதற்கு மனிதர்கள் கடத்தும் சூத்திரதாரிகள் மட்டுமே என்பதனை ஆழமாக உணர்ந்திருப்பார்கள். 

1 comment:

Krishna said...

Fantastic Write up