ஊரில் இருக்கும் எங்கள் வயலில் பழனியப்பன் என்பவர் குடும்பத்துடன் வேலை பார்த்தார். அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் பணிபுரிந்தனர். அவர்கள் ராமு என்றொரு நாய் வளர்த்தனர். அதுவும் வயலுக்குள் தான் திரியும். எலியை, வயல் நண்டுகளைப் பிடிக்கப் பயன்படுத்துவதைப் பார்த்துள்ளேன். எங்களைப் பயமுறுத்தச் செய்வர். அலறி வரப்பிலிருந்து கீழே விழுந்த நினைவுகள் என் ஞாபகத்தில் இன்றும் உள்ளது. அதற்குப் பிறகு நாய் என்ற ஜீவ ராசி என் வாழ்க்கையில் அறிமுகம் ஆகவே இல்லை.
திருப்பூரில் நடுத்தரவர்க்க மக்கள் எவரும் நாய் வளர்த்து நான் பார்த்ததில்லை.
பல ஊர்களின் இருந்து இங்கு வந்து குடியேறிய தொழிலாளர்கள் கூடத் தெருவில் உள்ள நாய்களுக்குத் தான் சோறு போட்டுப் பார்த்துள்ளேன். ஆனால் முதலாளி வர்க்கத்தினர் நாய் வளர்ப்பது என்பது அவர்களின் கௌரவத்தின் அங்கீகாரம் போல அதனை நடைப்பயிற்சி அழைத்து வருவது, அதற்குப் பணிவிடை செய்வது தொடங்கி அதற்காக மாதம் தோறும் செலவளிக்கும் தொகையைப் பற்றிப் பார்ப்பவர்களிடம் பேசித் தீர்ப்பது வரைக்கும் கவனித்துள்ளேன்.
மூன்று நாட்களாகக் காணவில்லை. திடீரென்று ஒரு நாள் மதிய வேளையின் போது வீட்டுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த போது என் காலை யாரோ நக்குவது போலத் தெரியக் குனிந்து பார்த்து இவள் நின்று கொண்டிருந்தாள். எப்போதும் போல விரட்டி விட்டு மறந்து விட்டேன். மறுநாள் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு முன்னால் இருந்த திண்ணையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்து விறுவிறுவென்று உள்ளே வந்தாள். என் அருகே வந்து நின்று கொண்டாள்.
எனக்கு வியப்பாக இருந்தது. உள்ளே நான்கு பேர்களும் இவளை அனுமதிக்க மாட்டார்கள் என்று பயந்து வெளியே அனுப்பி கதவைச் சாத்தி வைத்தேன்.
ஆனால் நகரவில்லை. கதவின் அருகே நின்று கொண்டே இருந்தது. சற்று நேரம் கழித்து ஓரமாக நின்று கொண்டு எட்டிப் பார்த்தேன். வெளியே இருந்த தெரு நாய்கள் இவளுடன் பரிபாஷையில் பேசிக் கொண்டிருந்தது. வயதுக்கு வராத கன்னியாக இருந்த காரணத்தால் ஏழெட்டு நாய்கள் தங்கள் உரையாடலை வளர்த்துக் கொண்டிருந்தன.
கடித்து வைத்து விடுமோ? என்று யோசித்துக் கொண்டே முதல் முறையாக இவளின் உடம்பைப் பார்த்தேன்.மேலே புண் இருந்தது. ஏற்கனவே எங்கேயோ கடிபட்டு வந்து நிற்பது புரிந்தது. கழுத்தில் பட்டை இருந்தது. யாரோ அருகே உள்ளவர்கள் தான் வளர்த்து இருக்கின்றார்கள். பெண் என்பதால் வெளியே விரட்டி விட்டனர்.
மகள்களிடம் மெதுவாகச் சொன்னேன். இருவர் ஆர்வமாக இருந்தனர். ஒருவர் மறுத்தார். மனைவி வெறுத்தார்.
மனைவியைச் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்து சில நாட்கள் கவனித்தேன். ஒரு வாரத்திற்குள் அதன் நாக்கு சுவை முதல் செயல்பாடுகள் வரைக்கும் கவனித்துப் பார்த்துக் கொண்டேன்.
மூன்றாவது வாரத்தில் பிரச்சனை தொடங்கியது. உப்புமா, சோறு, புட்டு, இடியாப்பம், தயிர்ச் சாதம் என்று உணவில் எங்களைப் போல 80 சதவிகிதம் சைவப் பட்சணியாக இருந்தவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள். எதை வைத்தாலும் தின்ன மாட்டேன் என்று அடம்பிடிக்க ஒருவர் "நாளை மீன் வாங்க வாங்க? எப்படிச் சாப்பிடுகின்றது என்று பார்க்கலாம்"? என்றார். அவர் சொன்ன மாதிரி வெளுத்துக் கட்டினாள்.
ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். "வாரம் இருமுறை கோழிக்கறி வாங்கிக் கொடுங்கள்" என்று உத்தரவிட்டனர். முதல் கோழிக்கால்கள் கொண்ட வந்து கொடுத்த போது பத்து நிமிடத்தில் தின்று முடித்துச் சோம்பல் முறித்தது. மீதி இருந்த கால்களை அடுத்த நாள் கொடுத்த உண்ண மறுத்தது. அடுத்த பஞ்சாயத்து தொடங்கியது. "நீங்கள் கறி வாங்கி வந்தால் தான் சாப்பிடும்" என்றார்கள்.
இதற்கிடையே பெயர் சூட்டும் விழா நடந்தது. பல பெயர்களை மூவரும் சொன்னார்கள். கடைசியில் நான் மஞ்சுளா என்றேன். மூத்தவள் "நீங்க லவ் பண்ண பொண்ணு இப்போது கிழவியாக இருப்பாங்க. வேறு பெயர் வையுங்கள்" என்றார். மற்ற இருவரும் முந்திக் கொண்டு மஞ்சு மஞ்சு என்று கொஞ்சத் தொடங்க அந்தப் பெயரே நிலைத்து விட்டது.
"வாரம் இரண்டு முறை குளிப்பாட்டினால் உள்ளே இருக்க அனுமதிப்பேன்" என்று சபாநாயகர் உத்தரவிடக் குளிப்பாட்டும் வேலையானது கொண்டாட்டம் போல ஆனது. தண்ணீரைப் பார்த்தாலே பத்தடி தாவி ஓடுவதைக் கண்டு அனைவருக்கும் திருவிழா விசேடம் போலக் கலந்து கொண்டு ஒருவர் சோப்பு, ஒருவர் பிடித்துக் கொள்வது என்று மாறி மாறி படித்த நேரம் போல மற்ற நேரம் அனைத்தும் குதுகலமாக மஞ்சுளா மாற்றிவிட இவள் குடும்பத்தில் ஒருவளாக மாறிவிட்டாள்.
இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனில் மகள்கள் இவளுக்காக என்னனவோ பார்த்துப் பார்த்துச் செய்தாலும் என் பின்னால் வருவது, என்னிடம் வந்து படுத்துக் கொள்வது, நான் கேட் திறந்து வெளியே போவதற்கு முயலும் போது எனக்கு முன்னால் வண்டியில் தொற்ற முயல்வது என்று கடந்த மூன்று வாரமாக ஒரே களேபரமாகவே நாட்கள் செல்கின்றது.
நான் வெளியே சென்று உள்ளே வரும் வரை மாடியில் நின்று நான் சென்ற பாதையைப் பார்த்துக் கொண்டிருப்பது, என்னைத் தூரத்தில் பார்த்தவுடன் குலைத்து வேறு குரலில் தன் பிரியத்தை வெளிக்காட்டி கேட் அருகே வந்து நிற்பது, தாவி கழுத்து வரைக்கும் இம்சிக்கும் இவளை, "உங்கள் டார்லிங் மஞ்சுளா உள்ளே கக்கா போய்விட்டாள்". "உள்ளே யூரின் போய்விட்டாள்" என்று மகள்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறாள்.
2020 ஆம் ஆண்டில் இறுதி மாதத்தில் வந்த புதிய உறவிது.
20 comments:
இவ்வாறாக கவனிக்கும்போது நமக்கு நம்மையறியாமல் ஒரு அதீத மகிழ்ச்சியும் மனதிற்கு நிறைவும் ஏற்படும்.
அன்பான உறவு...
மகிழ்ச்சி. நல்லதொரு பெயர்.
என்னுடைய வாழ்வில் இன்று வரை இதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை.. ஆறாம் வகுப்பு படிக்கும் போது பூனை வளர்த்து வந்தேன்.. அதன் பின் என்னுடைய நேரம் முழுவதும் புறா வளர்ப்பின் மீது தான்!!! கிட்டத்திட்ட 3 ஆண்டுகள் மேல் வளர்த்து வந்தேன்.. பள்ளியில் வகுப்பறையில் கூட இதே நினைவாக தான் இருப்பேன்.. அது ஒரு வசந்த காலம்.. தற்போதும் புறா வளர்க்க அதே ஆர்வம் அப்படியே இருக்கிறது.. ஆனால் சூழ்நிலை ஒத்து வரவில்லை.. மஞ்சுளா என்ற பெயர் வைத்ததினால் எல்லாமே மஞ்சளாகவே தெரிகிறது (உங்கள் உடை, காலணி, நாயின் கழுத்து பட்டை, வீட்டின் வர்ணம்)..மஞ்சுளாவின் வரவை படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது..
சுவாரஸ்யமான பதிவு. வீட்டில் செல்லங்களை வளர்க்கும் வழக்கத்தை முன்னரே நிறுத்தி விட்டேன். பிரிவை தாங்க முடியவில்லை. மேலும் விசேஷங்களுக்குச் செல்வதும் அவஸ்தை. ஆனாலும் அவற்றின்மேல் உள்ள பிரியம் குறையவில்லை.
செல்லம் அழகாக இருக்கிறது.
அருமை. நன்றி. மகிழ்ச்சி
முக்கியமாக மனிதர்களின் பாசத்திற்கும் மிருகங்களின் உண்மையான பாசத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.
அன்பான (மிருக) காதலி.
அதுவொரு காரணப் பெயர்.
லதா மற்றும் மஞ்சுளா என்ற பெயர்கள் 1 முதல் 12 வரைக்கும் என்னை துரத்திக் கொண்டு வந்தது. பானு என்ற பெயர் கல்லூரியில் கலங்கடித்தது. மஞ்சள் இவர்கள் விரும்பிய நிறம். மலரும் நினைவுகள்.
மிகப் பெரிய இனிய அவஸ்த்தைகளாகவே உள்ளது ராம். மார்கழி மாதம் அருகில் உள்ளவர்கள் பயப்படுகின்றார்கள்.
நன்றி
சோப்பு போட்டுக் குளிப்பாட்டும் போது அழகாகத்தானே இருப்பாள்.
"மூத்தவள் "நீங்க லவ் பண்ண பொண்ணு இப்போது கிழவியாக இருப்பாங்க. வேறு பெயர் வையுங்கள்" என்றார்."
சரியா பிடித்துட்டாங்க :-) :-)
நாய் என்றால் அதீத பிரியம். இது தலைமுறை கடந்தும் ஜீன் வழியாக தொடர்கிறது, என் பையன் வரை.
தற்போது வளர்ப்பது சிரமம் என்பதால், வளர்க்கவில்லை.
நான் ரிட்டையர் ஆனால் தான் வளர்க்க முடியும் என்று கூறினேன், பையன்.. அப்படின்னா எப்ப ரிடையர் ஆவீங்கன்னு கேட்கிறான் :-) .
நாயை போல நன்றியுள்ள பிராணியை காண்பது கடினம்.
டார்லிங் மஞ்சுளா - மிகவும் ரசித்தேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படிக்க வேண்டுகிறேன். திரு ஜோதிஜியின் வித்தியாசமான எழுத்து ந்டை. தொடர்ந்து எழுதுங்கள் திரு ஜோதிஜி - பாராட்டுகள்
அருமை அருமை.
நாய்களுக்கு விசேஷ சக்தி உண்டு. முதலில் குடும்பத்தில் ஒருவரை மட்டும் கவரும். போகப் போக வெறுப்பவர்களையும் கவர்ந்துவிடும். அது செய்யும் குறும்புகளும் அடங்களும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். இப்படித்தான் எங்கள் வீட்டில் ஜுனோ என்றொருவன் எங்கிருந்தோ வந்தான். இரண்டு ஆண்டுகளுக்குள் மர்மமாக இறந்து போனான். ஒரு இரங்கல் கவிதை எழுத வைத்தது ஜுனோ. செல்ல நாயின் இறப்பு ஒருவாரம் பரபரப்பு என்றொரு தொடரும் எழுதினேன். ஸ்ரீராம் சொன்னது போல இன்னொன்று வளர்க்க விருப்பமில்லை.
அலாதியான பிரியம்.
நன்றி
அதீத நன்றி. உண்மை தான்.
Post a Comment