Thursday, December 24, 2020

தெய்வங்கள் வேறில்லை மனிதர்களைத் தவிர.

சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் நான் வாசித்த செய்திகளில் சொத்து தகராறு சார்ந்த செய்திகள் மிக அதிகம். அதுவும் ஒரே குடும்பத்திற்குள் நடந்த நிகழ்வுகள் கடைசியில் வெட்டுக் குத்து வரைக்கும் சென்றுள்ளதைக் கவனித்தேன். "என்னை கடைசி வரைக்கும் காப்பாற்றுகிறேன்" என்று சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு என்னை அனாதையாக வெளியே விட்டு விட்டான் என்று மகன் மேல் குற்றச்சாட்டு சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அழுத பெண்மணியைப் பார்த்தேன். மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றும் நண்பர் சொன்ன விசயம் இது.  

"இனி நான் சொந்த ஊர்ப் பக்கம் செல்லவிரும்பவில்லை" என்றார்.  

காரணம் கேட்ட போது "உடன் பிறந்தவர்களின் மனோபாவம் இப்படி மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே வளர்ந்தவர்கள் என்ற பாகுபாடு அடிப்படையில் பாகப் பிரிவினை நடப்பதில்லை. உடன் பிறந்த அக்கா தங்கைகளைக்கூடச் சொத்து விசயத்தில் எதிரியாகப் பார்க்கின்றார்கள். அம்மா, அப்பாக்கள் கூட அவர்களின் இயல்பான குணாதிசயங்களில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். அவர்களின் பார்வையில் பாரபட்சம் தெரிகின்றது.  இவர்களுடன் மல்லுக்கட்ட விரும்பவில்லை. ஒரே ரத்தம். ஒரே வீட்டுக்குள் 20 வருடம் வளர்ந்தோம் என்ற எண்ணம் கூடச் சொத்து விசயத்தில் மாற்றி விடுகின்றது என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. போராடுவதை விட ஒதுங்கி விடுவது நல்லது என்று தொடர்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டித்துக் கொண்டே வருகிறேன்" என்றார்.

அண்ணன் தம்பி மேல் பொறாமை என்று தொடங்கி அவரவர் பக்கம் வெவ்வேறு நியாயங்களை வைத்துக் கொண்டு அடிப்படை மனித குணாதிசயங்களை இழப்பதும், காசு தான் கடவுள் என்கிற ரீதியில் மாறிப் போன உலகம் ஆச்சரியமளிக்கவில்லை. சங்க காலம் முதல் உண்டு. ஆனால் இப்போது உள்ள உலகம் முற்றிலும் வித்தியாசமானது. 

ஒரு துளி விஷம் ஒரு குடத்தில் ஊற்றும் போதும் எப்படி மொத்தப் பாலும் கெட்டு விடுகின்றதோ குடும்பத்தில் ஒருவரின் தவறான எண்ணங்கள் அனைத்தும் ஒரு பெரிய குடும்ப பிரிவுக்குக் காரணமாக உள்ளது என்பதனை இந்த வருடம் பார்த்தேன்.

கொடுக்கல் வாங்கல் இன்றி, பேச்சு வார்த்தை நிறுத்தி, பரஸ்பரம் நலம் விசாரித்தல் கூட இல்லாமல் சகோதர சகோதரிகளின் எண்ணங்கள் மாறிப் போனதையும் கவனித்தேன்.  இவரா இப்படி மாறினார்? என்று திகைப்பை உருவாக்கிய பலரையும் சந்தித்தேன். இனி இவர்களுடன் பேசி நம் மனஅழுத்தத்தை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று பயந்த மனிதர்களையும் சந்தித்தேன். 

சொத்து சேர்க்க வேண்டும். பணம் சேர்க்க வேண்டும். நகை சேர்க்க வேண்டும். பொருட்கள் வாங்க வேண்டும். வீடு வாங்க வேண்டும் என்று வேண்டும் வேண்டும் என்ற வார்த்தை தான் அவர்களை இயக்குகின்றது. இது போன்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் உறவுகள் அனைத்தையும் துறக்கத் தயாராக இருக்கின்றார்கள். 

எனக்கு என்ன லாபம்? உன்னால் எனக்கு என்ன தர முடியும்? என்பதன் அடிப்படையில் உறவாட நினைக்கின்றார்கள்.  

வாங்கிய பணத்தைத் தர முடியாத தங்கையும் நீ செத்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? என் பணத்தை என்னிடம் கொடுத்து விடு? என்று உரையாடல் வளர்ந்து அக்காவும் தங்கையும் அனுபவித்த கோரமான நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது சாவு என்பது நமக்கு இல்லை என்பதாகவே இவர்கள் கருதுகின்றார்கள் என்றே நினைத்துக் கொண்டேன்.

எல்லாவற்றையும் மறைக்கின்றார்கள்.  

மாற்றி மாற்றிப் பேசுகின்றார்கள்? 

காரணத்தைக் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கின்றார்கள் என்று பணத்தைச் சுற்றி வரும் விளையாட்டுகள் அதிகம். எப்படியாவது உயிருடன் வாழும் வரைக்கும் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் எவருடனும் எந்தச் சண்டை சச்சரவுகளையும் வைத்துக் கொள்ளக்கூடாது. நாமே விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்ற என் எண்ணத்தை முழுமையாக மாற்றிய ஆண்டு 2020. 

விலகி இருந்தால் போதும். நம்மால் நிம்மதியாக வாழ முடியும் என்கிற அளவுக்கு ஒவ்வொருவரின் பேராசைகள் பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.

ஆனால் என் வாழ்வில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக என் சொந்த நிறுவனம் சார்ந்த வங்கி அதிகாரியாக அறிமுகமாகி, பல ஊர்கள் மாறிச் சென்று இன்று வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் என் மேல் என் குடும்பத்தின் மேல் அதிக அக்கறை கொண்டவரும், உண்மையான பாசம் கொண்டவருமான ரமேஷ் ராமச்சந்திரன் என் வாழ்நாள் முழுக்க நினைத்திருக்கும் அளவிற்கு இந்த வருடம் எனக்கு பெரிய உதவியைச் செய்தார்.  

தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சனைகள் இதன் மூலம் முடிவுக்கு வந்தது.

உங்கள் உறவுகளிடம் ஏதோவொரு உதவியைக் கேட்டுப் பாருங்கள். யோசித்துச் சொல்கிறேன் என்பதில் தொடங்கி காரணங்கள் சொல்வது வரைக்கும் ஏராளமான பாடங்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் நட்பு ரீதியாக உங்களுடன் நெருக்கமாக இருக்கும் எவரும், உங்களை உண்மையாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் வலியைச் சுமக்கத் தயாராக இருப்பார்கள். 

என் வாழ்க்கை வழித்தடங்கள்  முழுக்க நண்பர்கள் தான் என் வலியைச் சுமந்து வந்து உள்ளனர். எந்த எதிர்பார்ப்புமின்றி ஏராளமான விசயங்கள் நடந்துள்ளது.

இந்த ஆண்டு இவர் மூலம் நடந்துள்ளது.

என் எழுத்தின் சிறந்த வாசகர், சிறந்த மனிதாபிமானி, நூறு சதவிகித நேர்மையாளர். மாற்றுக் கருத்தை மதிப்பவர். மனதில் உள்ளதை அப்படியே பாரபட்சமின்றி வெளிப்படுத்தத் தயங்காதவர், தன்னலம் கருதாதவர் போன்ற அனைத்தும் அவரின் இயல்பான குணமாக இருப்பதால் இன்று வரையிலும் இருவரின் தொடர்பும் நீடித்த பந்தம் போலத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அரசியல் கொள்கைகளில் நாங்கள் இருவரும் நேரெதிர் கொள்கைகளைக் கொண்டவர்கள். இருவரின் நட்பும் உறவும் இரண்டு தண்டவாளம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எங்கள் பயணம் சிறப்பாகவே உள்ளது. காரணம் துருவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இருவரின் அடிப்படை எண்ணங்கள் ஒரே புள்ளியில் வந்தே நிற்கின்றது.

வாழும் மனிதர்கள் தான் நம்முடன் தெய்வமாக இருக்கின்றார்கள். சிலருக்குக் கண்களுக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது.

எனக்கு இவர் அதையும் கடந்தவர்.

இந்த வருடம் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்ததற்கு நீங்களும் ஒரு காரணம்.

உங்களின் எண்ணிய எண்ணமெல்லாம் வரும் 2021 நிறைவேறிட எங்கள் வாழ்த்துகள்.

உன்னதமான மனிதர் 2020

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்

Mohamed Yasin said...

உதவி என்ற ஒரு நிகழ்வில் மனிதனது உண்மை நிலையை எளிதாக கண்டறியலாம். குறிப்பாக சொந்த பந்தங்கள்.. கடந்த காலத்தில் எனக்கு நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளினால் யார்? நல்லவர்? யார் கெட்டவர்? என அடையாளம் காண தெரியவில்லை.. கடந்த காலத்தில் வாங்கிய செருப்படிகளின் அச்சின் அடையாளம் இன்னும் அப்படியே நெஞ்சை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கிறது..

நாம் புதிய உறவுகளை எப்போது வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அந்த உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது கடினமான ஒன்று. சில சமயம் எவ்வளவோ முயற்சிகளையும், தியாகங்களையும் கொட்டித் தீர்த்தாலும் ,அவை தோல்வியில் தான் சென்று முடியும். அதற்குப் பின் அந்த இருவருக்கும் இடையிலான ஒரு உறவை நினைத்துப் பார்க்கவும் முடியாது. உங்களுக்கு அமைந்த இந்த உறவு நீண்ட நாட்களுக்கு தொடரவேண்டும்.. (தொடரும் என நம்புகிறேன்.. )

ஜோதிஜி said...

பலரையும் வாழ வைத்தவர். வைத்துக் கொண்டிருப்பவர். நன்றி.

ஜோதிஜி said...

இது போன்ற காயங்கள் அனைவருக்கும் உண்டு. இந்தவருடம் பல விசயங்களில் மிரண்டு போனேன். நம்ப முடியாத அளவுக்கு பல விசயங்கள் நடந்துள்ளது. மனிதர்களின் மேல் இருந்த பார்வை மாறியுள்ளது.

மெய்ப்பொருள் said...

பணம் ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்று எண்ணம் .

உறவுகள் , சொந்தங்கள் என்று ஒரு காலத்தில் இருந்தன .
உதவி என்றால் உதவி கிடைத்தது . முகம் பார்ப்பது
என்று இருந்தது . பேசும் போது சொந்தங்கள் மனது
நோகக்கூடாது என்று கவனமாக இருப்பார்கள் .
கடைசியில் நம்ம சொந்தம்தான் நம்மை காப்பாற்றும்
என்று நம்பினார்கள் .

இன்று திருமணம் ஆன பெண் தகராறு செய்து பணத்தை
கொடுத்தால் டிவோர்ஸ் இல்லனா தூக்கி உள்ளே
வச்சிருவேன் என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது .
மாமியார்கள் மருமகளை பார்த்து பயப்படுகிறார்கள் .
நூற்றுக்கு ஒன்று -இரண்டு திருமணம் இப்படித்தான் முடிகிறது .

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வது உண்மையே.

கிரி said...

தற்போது உறவுகளுக்குள் சொத்து தகராறு அதிகமாகி விட்டது என்று கருதுகிறேன். ஒற்றுமை குறைந்து பொறாமை சண்டைகள் அதிகரித்து விட்டது வருத்தமளிக்கிறது.

ஒவ்வொருவரின் சூழ்நிலை அனைத்தையும் மாற்றி விடுகிறது. இது சிக்கலான பிரச்சனை தான்.

ஜோதிஜி said...

சூழல் உருவாக்கும் பேராசை தான் முக்கியக் காரணம்.

Rathnavel Natarajan said...

அருமை