Sunday, December 20, 2020

"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

நான் என் மகள்களிடம் திரும்பத் திரும்ப ஒரு விசயத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வின் போது சொல்லிக் கொண்டேயிருப்பேன். "சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று.  காரணம் "உங்கள் கல்வி வேறு. வாழப் போகின்ற வாழ்க்கை வேறு. இது யாராலும் உங்களுக்கு கற்றுத் தர முடியாது. நீங்கள் தான் உணர வேண்டும். உள் வாங்க வேண்டும். உணர்ந்ததைப் புரிந்து கொள்ள வேண்டும். தவறு நடக்கும். மாற்றிக் கொள்ள வேண்டும்".


10 வரைக்கும் ஆங்கிலக் கல்வியில் தனியார்ப் பள்ளியில் படித்த மகள்களுக்கு வெளியே செல்லத் தைரியம் வரவில்லை. தனியாகக் கடைகளில் சென்று ஒரு பொருள் வாங்க, கொடுக்கும் பணம், வாங்கும் மீதியுள்ள பணம் எதையும் சரிபார்க்கும் மனப் பக்குவம் வரவில்லை. ஒழுக்கம் என்ற பெயரில் 13 வருடங்கள் கூண்டுப் புறா அடக்கி ஒடுக்கிப் படிக்க வைத்து அதையே திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்ய வைத்து, மதிப்பெண்கள் என்ற மாய வித்தையின் கீழ் உனக்குப் பின்னால் அவள், உனக்கு முன்னால் இவள் என்று சேணம் கட்டிய குதிரை போல நிஜ வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத வாழ்க்கையைத்தான் தனியார்ப் பள்ளிகள் இன்று மாணவர்களை சமூகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அறிவுரைகளை எந்தப் பெற்றோர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. "சுய கௌரவம்" என்ற பெயரில் தங்களைத் தானே பாழுங்கிணற்றில் தள்ளிக் கொண்டு வாழும் அவர்களைப் பார்த்து பலமுறை மனதிற்குள் வியந்தது உண்டு. இதன் அடிப்படையில் தான் கட்டாயம் 11 மற்றும் 12 அரசுப் பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனால் இதில் உள்ள கொடுமை என்னவெனில் உடன் படிக்கும் மாணவிகளே "உங்கள் அப்பாவிடம் இங்கு படிக்க வைக்கக் காசு இல்லையா"? என்று கேட்பது தொடங்கிப் பல பெற்றோர்கள் "எங்களுக்கும் ஆசை தான். ஆனால் சொந்த பந்தங்கள் எங்களைக் கேவலமாக நினைப்பார்கள்" என்பது வரைக்கும் பல ஆச்சரியமான உரையாடல்களைக் கடந்தே வந்தோம்.

இங்கு இப்போது ஒவ்வொன்றும் "சமூகத்தின் பார்வையில்" என்கிற ரீதியில் தான் மாற்றம் பெற்றுள்ளது.  வீடு, வாகனம், அணியும் ஆடைகள், பயணிக்கும் இடங்கள் என்று எல்லாவற்றிலும் ஆடம்பரம் இருக்க வேண்டும். அவசியம் அதனை மற்றவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் பெரும்பாலான மக்கள் கடன் வாங்குவது தவறில்லை என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள். அப்படித்தான் வாழ்கின்றார்கள். கடைசியில் வீட்டுக்குள் தினமும் சண்டை சச்சரவு என்கிற ரீதியில் ஏதோவொரு பிரச்சனை நடந்து கொண்டேயிருக்கிறது.

வளரும் குழந்தைகளின் மனம் முழுக்க விஷம் பரவி விடுவதால் அந்தக்குழந்தை அதனைச் சார்ந்த பழகும் ஐந்து குழந்தைகளுக்கும் கடத்தி இது அப்படியே தொடர்ந்து விஷப்பின்னல் போல ஒவ்வொரு நிகழ்வும் விஸ்வரூபம் எடுத்து விடுகின்றது.

வீட்டுக்கு அருகே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குள் 50 பிரியாணிக் கடைகள் 100 பேக்கரி கடைகள். ஆனால் எல்லா இடங்களிலும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.  தொழில் நகரங்களில் காசு புழங்குகின்றது? கிராமப்புறங்களில் இயல்பானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையும் இந்த வருடம் மாறிவிட்டது. ஒரு ஜாக்கெட் தைக்க ரூபாய் 3500 முதல் 5000 வரைக்கும் கொடுக்க தயாராக இருக்கும் பலரின் வாழ்க்கையும் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழே உள்ள பொருளாதாரத்தைக் கொண்டவர்கள் தான். ஆனால் அவர்களின் ஆசைகள் வாழ்க்கையை ஆட்டிப் படைக்கின்றது. இன்றே இறந்து விடுவோம் என்ற எண்ணங்கள் மேலோங்கி இருப்பதால் வரவுக்கு மீறிய வாழ்க்கை என்பது இயல்பானதாக உள்ளது.

மனைவி, மகள்களிடம் இது குறித்து உரையாடும் போதெல்லாம் "அடிப்படை ஆரோக்கியம், அடிப்படையாக நம்மிடம் இருக்க வேண்டிய சிந்தனைகள் இவற்றுடன் நீங்கள் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் மனிதர்களை எதிர்கொள்ள வேண்டிய விதம். நான் சமூகத்தில் நுழையும் போது இந்த விசயத்தில் தான் அதிகம் பாதிக்கப்பட்டேன். என்னால் மீண்டு வர ஐந்து வருடம் ஆனது. 90 சதவிகித எதிர்மறை மனிதர்களை நீங்கள் எதிர் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் உங்கள் அடிப்படை குணாதிசயங்கள் மாறாமல் பாதுகாக்கவும் வேண்டும்" போன்ற பல விசயங்களைப் பேசிப் பேசி புரிய வைத்தாலும் நடப்பு சூழலில் அவர்கள் உள்ளே நுழைந்து அவர்களாகவே வெளியே வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்ற வருடம் திருப்பூரில் நடந்த மாரத்தான் போட்டி (வாக்கத்தான் 5 கிலோ மீட்டர்) யில் கலந்து கொண்ட போது மூன்று பேர்களும் மூன்று மரக் கன்றுகளை வாங்கி வந்தார்கள்.  "நீங்கள் கல்லூரி செல்வதற்குள் மூன்றையும் வளர்த்து விடுங்கள்" என்று சொல்லியிருந்தேன்.  இரண்டு பல்வேறு காரணங்களால் பாதுகாக்க முடியவில்லை. சாலை வேலைகள் நடந்த போது தோண்டி எடுத்து விட்டார்கள். ஒன்று மட்டும் தப்பித்துப் பிழைத்து நிற்கின்றது.

மகள் உயரத்திற்கு வளர்ந்துள்ளது. அடுத்த வருடம் கல்லூரி செல்லப் போகின்றார்.

மீண்டும் தொடங்கவும்.

4 comments:

Mohamed Yasin said...

எல்லாவற்றிலும் எளிமையாக இருந்த நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை , இந்த தலைமுறையில் எல்லாமே ஆடம்பரங்களை நோக்கியே செல்கிறது.. அவசரம் / ஆடம்பரம் இது ரெண்டையும் நாம் தற்போது அதிக அளவில் காண முடிகிறது.. எல்லோருமே அவசர அவசரமாகவே ஓடுகின்றோம்.. சிக்கனலில் நிற்பதற்கு கூட யாருக்கும் பொறுமை இல்லை.. எப்படி இந்த மாற்றம் நம்முள் நிகழ்ந்தது என்றே தெரியவில்லை.. நீங்கள் குறிப்பிட்ட பேக்கரி, பிரயாணி கடை, தையலகம் இது போன்ற நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.. சரியான பருவத்தில் குழந்தைகளிடம் சமூகத்தை குறித்து உங்கள் நிலையை பகிர்ந்து உள்ளீர்கள்.. நிச்சயம் இந்த நிகழ்வு அவர்களுக்குள் ஒரு வித மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகிறேன்.. நன்றி..

ஜோதிஜி said...

இருபது வயதிற்குள் நம்முடன் வாழும் குழந்தைகளின் உள்ளத்தை சரியானவற்றை விதைத்து விட்டால் அவர்கள் காலச் சூழலில் தவறான பாதையில் சென்றாலும் கூட நிச்சயம் உணர்ந்து தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வார்கள். தங்களின் சரியான பாதைக்கு திரும்பி விடுவார்கள் என்றே நம்புகிறேன். மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

வேண்டாம் ஒற்றாடல்...

Rathnavel Natarajan said...

அருமை