Tuesday, December 22, 2020

உன்னதமான மனிதர் 2020

உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் என்பது சதவிகித மக்களுக்குத் தொடர்பே இல்லாத துறைகள் அரசியல் மற்றும் தொழில். விவசாயம் மற்றும் முறைசாராத் தொழில்களை இந்தப் பட்டியலில் கொண்டு வர வேண்டாம். வளர்ந்த நிறுவனங்கள். சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்று பல பட்டியல்கள் உண்டு.

இந்த இரண்டு துறைகளில் இருக்கும்  20 சதவிகித மக்கள் காரண காரியமின்றி பேசவே மாட்டார்கள். அனைத்து துறைகளிலும் தொடர்பு வைத்திருப்பார்கள். அனைவருடனும் நல்லுறவு பேணுவார்கள். ஆனால் தொடர்பு இல்லாதவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். பிரிவினை கோடு போட்டு வாழ்வார்கள். தங்களை எதிரியாக மாற்றிக் கொள்வார்கள். வாழ்ந்த சுவடு தெரியாமல் மறைந்தும் விடுவார்கள். 

காலம் காலமாக இப்படித்தான் இந்தப் பூமிப் பந்து சுழன்று வந்து கொண்டேயிருந்தது.  



ஆனால் சமூக வலைதளங்கள் வந்தபின்பு உலகமே திறந்த வெளிச் சந்தையாக மாறியது. அதிகாரம் மற்றும் தொழில் அதிபர்கள் என்ற கணக்கில் 3 சதவிகித மக்களும் மீதி 97 சதவிகித மக்கள் பேசிக் கொண்டே இருப்பவர்களாகவும், யாரையோ ஒருவரை பின்பற்றுபவர்களாகவும் மாறி உள்ளனர்.  இந்தியாவில் மட்டும் வாரிசு அரசியல் அல்ல. உலகம் முழுக்கவும் இப்படித்தான் உள்ளது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் தான் குறிப்பிட்ட துறைகளை தங்கள் வசம் வைத்து உள்ளனர். இது உத்தேசக் கணக்கீடு அல்ல. 

சிலவற்றைப் படிக்கும் போது புரிந்து கொண்டேன்.

வாய்ப்புகள், சூழல்கள், பயன்படுத்திக் கொண்ட விதங்கள் என்று பலவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் உடைத்து மேலேறி வருவது என்பது சாதாரணமான விசயமல்ல. உருவாக்கி வைத்துள்ள ஒவ்வொரு கோடுகளையும் உடைத்துக் கொண்டு நாம் மேலேறி வருவதற்குள் நம் இறுதிப் பயணம் நிகழவும் வாய்ப்புண்டு. உங்கள் வாரிசுகள் குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளுக்குப் பிரச்சனையின்றி அவர்கள் வாழ்நாள் முழுக்க வாழ ஏற்பாடு செய்து விட்டால் நீங்கள் உன்னதமான காரியத்தைச் செய்தவர். அவர்களை சமூக ஆளுமையாக மாற்றியிருந்தால் நீங்கள் உட்சபட்ச திறமைசாலி. 

இதனை இப்போது சமூக வலைதளங்களில் இந்த வருடம் அதிகம் பார்த்தேன். 

ஏதோவொரு வழியில் கவனம் ஈர்க்க வைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் போராடிக் கொண்டேயிருக்கின்றார்கள். தங்களின் பொன்னான நேரங்களைச் செலவழிக்கின்றோம் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் இருட்டுக்குள் நின்று கொண்டு கத்தி வீசும் நபர்களுடன் வாளேந்தி சண்டை செய்கின்றார்கள். பொறாமை, வெறுப்பு போன்ற ஆயுதங்களை எதிரிகள் பக்கபலமாக வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுவதும் நான் வென்று காட்டியே தீருவேன் என்று வெளிச்சத்திலிருந்து கொண்டு போராடக்கூடியவர்கள் கடைசியில் அவமானப்பட்டு சமூக வலைதளங்கள் தந்த உச்சபட்ச மன அழுத்தங்களைப் பரிசாகப் பெற்றுப் பின்வாங்கி ஒதுங்கி விடுகின்றார்கள். காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றார்கள்.

இணையம் என்றால் நீங்கள் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றே ஒன்று? 

"உன்னை நான் அங்கீகரிக்கவே மாட்டேன்" என்று கொள்கை கொண்டவர்களிடம் தான் நீங்கள் உறவாட வேண்டும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். 

அதற்கு அவர்கள் ஆயிரம் காரணங்கள் வைத்திருக்கலாம். அடிப்படையில் பொறாமை என்பதில் தான் வந்து முடியும். 

தன்னால் முடியாததை மற்றவர்கள் செய்யும் போது, தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை மற்றவர்கள் பெறுவதைப் பார்க்கும் போது உருவாகும் ஆற்றாமை இது. தன்னால் இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதனை மனம் ஏற்காது. திறமை இருப்பவர்களை எப்படி அசிங்கப்படுத்த முடியும்? என்பதில் கவனம் செல்லும்.  அப்படிப்பட்டவர்கள் நிறைந்த உலகம் இணையம்.

ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் நான் பார்த்த, பழகிய, பேசிய ஆயிரக்கணக்கான இணைய முகங்களில் இன்று வரையிலும் என் சிந்தை முழுக்க நிறைந்தவர் அய்யா ரத்னவேல் அவர்கள்.

நான் இந்தக் கட்சி, இந்த மதம், இந்தக் கொள்கை என்று தணித்த அடையாளங்களுடன் வாழ்பவர்கள் மட்டுமே இணையத்தில் குப்பை கொட்ட முடியும் என்ற சூழலில் நானொரு இயல்பான மனிதன் என்று இணையம் முழுக்க நல்ல எண்ணங்களைப் பரப்பிக் கொண்டு இருப்பவர்களின் இவர் முகம் எனக்கு முதன்மையாகத் தெரிகின்றது.

என் மேல் மட்டுமல்ல. தான் பழகும் அனைத்து நபர்களிடமும் ஒரே விதமாகப் பழகுவதும், அன்பு செலுத்துவது, அக்கறை காட்டுவது, அவர்களின் பிறந்த நாளை ஊருக்கு அறிவிப்பது, அவர்களின் வருகையை உளமார வரவேற்பது என்பது பல காரியங்கள் இன்றைய இணைய மனிதர்கள் செய்ய விரும்பாத ஒன்று. 

ஆனால் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற கடமை கண்ணாயிரம் போலவே நிஜ வாழ்க்கையிலும் நிதானமான மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. 

அங்கீகரித்தோம். இவர்கள் நம்மை அங்கீகரிப்பார்கள் என்ற கொடுக்கல் வாங்கல் தத்துவத்தையும் கடைப்பிடிப்பதில்லை. 

மனம் முழுக்க மாசில்லா சிந்தனைகளைக் கொண்டு வாழும் இவரை வணங்கத் தோன்றுகின்றது. 

வருடந்தோறும் விலை உயர்ந்த புத்தகங்கள் ஏதோவொன்றை என் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுகின்றார். என் குரல் பதிவுகளைத் தவறாமல் கேட்டு விடுகின்றார். என் பதிவுகளை ஒன்று விடாமல் படித்தும் விடுகின்றார். பகிர்ந்து கொள்கின்றார். தன் வயதுக்குத் தொடர்பில்லாத பங்குச் சந்தையில் நுழைந்து பணி செய்வதோடு, அதன் மூலம் பலருக்கும் வருவாய் ஈட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவரும் என்னைப் போலவே இணைய முகங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். மன உளைச்சல் இன்றி தான் விரும்புகின்றவற்றை, பார்த்தவற்றை, படித்தவற்றை, கேட்ட நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்றி ஆவணப்படுத்துகின்றார். இவர் வயதில் இந்த அளவுக்கு ஆரோக்கியமாக இணையத்தில் செயல்படும் வாய்ப்பு அமைந்தால் அதுவே பெரிய விசயமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

2020 என் வாழ்வில் (இன்னமும் நேரிடையாகச் சந்திக்காத) சிறந்த மனிதர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மரியாதைக்குரிய ரத்னவேல் அய்யா.  

எந்நாளும் நலமாய் வாழ வாழ்த்துகள்.

பறவைகளுடன் வாழ்ந்த ஆண்டு 2020

17 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களைப் போல் பலருக்கும் இவர் மிகச்சிறந்த மனிதராகவே உள்ளார். உங்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெய்ப்பொருள் said...

தன்னால் இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதனை மனம் ஏற்காது. திறமை இருப்பவர்களை எப்படி அசிங்கப்படுத்த முடியும்? என்பதில் கவனம் செல்லும். அப்படிப்பட்டவர்கள் நிறைந்த உலகம் இணையம்.
இணையம் மட்டுமல்ல - சொந்தங்களும் , தெரிந்தவர்களும்
கூட வேலை பார்ப்பவர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பின் போது ரத்னவேல் அய்யாவை சந்தித்தேன்... சிறப்பான மனிதர்...

Mohamed Yasin said...

வயது ஒரு நிலையை அடையும் போது ஒரு வித அயர்ச்சியை கொடுக்கும்.. ஆனால் இது போல ரத்தினவேல் அய்யா போன்ற மனிதர்களை அடையாளம் காணும் போதும், அவர்களின் இயக்கத்தையும், ஓட்டத்தையும் , சிந்தனையையும் பற்றி அறியும் போது, உடலுக்கு தான் வயது, உள்ளத்துக்கு வயது கிடையாது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

"தன்னால் முடியாததை மற்றவர்கள் செய்யும் போது, தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை மற்றவர்கள் பெறுவதைப் பார்க்கும் போது உருவாகும் ஆற்றாமை இது. தன்னால் இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதனை மனம் ஏற்காது. திறமை இருப்பவர்களை எப்படி அசிங்கப்படுத்த முடியும்? என்பதில் கவனம் செல்லும். அப்படிப்பட்டவர்கள் நிறைந்த உலகம் இணையம்."

(இணையத்தை குறித்த உங்களது பார்வை என்னை வியக்க வைக்கிறது.. அதே சமயம் யோசித்து பார்த்தால் நீங்கள் கூறியதன் ஆழமும் விளங்குகிறது.)

Mohamed Yasin said...

ஒவ்வொரு அடியாக மெதுவாக எடுத்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மேலேறும் போது... எப்போது வீழ்வான் என எதிர்பார்த்து, பள்ளத்தில் புதைக்க பெரும் கூட்டமே காத்து கொண்டிருக்கும்..நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை.

ஸ்ரீராம். said...

அய்யாவின் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும், வணக்கங்களுடன்.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய மனிதர்
மதுரை வலைப் பதிவர் சந்திப்பில் ஐயாவை சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. நானும் என் மனைவியும் படித்தோம். மிகவும் நெகிழ்ந்து விட்டேன். விரிவாக எழுதுகிறேன், என் மனதில் இருப்பதை எல்லாம் எழுத ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறீர்கள். நான் உங்கள் பதிவுகளைப் பார்த்துத் தான் பதிவு எழுத கற்றுக் கொண்டேன். நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி.

ஜோதிஜி said...

உடன் பிறந்தவர்கள் எதிரிகளாக மாறுவது தான் வாழ்வின் மிகப் பெரிய கொடுமை.

ஜோதிஜி said...

அருமை அருமை.

ஜோதிஜி said...

மனம் பக்குவமாகி நிதானமாகிவிட்டது.

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி

ஜோதிஜி said...

வளமுடன் வாழ்க.

வெங்கட் நாகராஜ் said...

போற்றுதலுக்குரிய பெரியவர். அவருக்கு எனது வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றி.