Friday, December 25, 2020

விதைகள் பழுதில்லை

பெற்றோர்கள் அனைவருக்கும் அவரவர் குழந்தைகள் சிறப்பு தான். எளிய வார்த்தைகளில் குறிப்பிட்டால் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" தான்.

ஆனால் இன்று காலம் குழந்தைகள் பெற்றோர்களுக்கு வில்லனாக மாற்றியுள்ளது. தூக்கிச் சுமக்க வேண்டிய சுமையாகவும் மாற்றியுள்ளது.

 


காலம் காலமாகத் தமிழ் நாட்டில் குழந்தைகள் வளர்ப்பு என்பது இயல்பானதாகத் தான் இருந்தது. எந்தப் பெற்றோர்களும் இப்படி வளர்க்க வேண்டும்? இந்த முறையில் வளர்க்க வேண்டும்? என்று கட்டுப்பாடு வைத்து வளர்த்ததில்லை.  95 சதவிகித தமிழகப் பெற்றோர்கள் வாழ்க்கையில் குழந்தைகள் என்பவர்கள் இயல்பாக வளரும் ஒரு ஜீவனாகவே இருந்தார்கள். 

ஐந்து வயதிற்குப் பின்னால் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி கல்லூரி படித்து முடியும் வரைக்கும் எவரும் சிறப்புக் கவனம் எடுத்துக் கொண்டதுமில்லை. இன்று முதல் வகுப்பு வருவதற்குள் பல லட்சம் செலவழிக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் படிக்கும் பள்ளி குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொண்டதில்லை. இன்று இந்தப் பள்ளியில் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக அதிகாலையில் வரிசையில் நின்று விண்ணப்ப பாரம் வாங்கும் அளவிற்குப் பெற்றோர்களின் மனநிலை மாறியுள்ளது.

படித்துக் கொண்டிருக்கும் படிப்பு குறித்து அப்பா அம்மா ஆர்வம் காட்டியதில்லை. முந்தி வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தில்லை. இலக்கு என்ற பெயரில் நிர்ப்பந்தம் செய்ததில்லை. பள்ளிகளை தங்கள் கௌரவம் சார்ந்தது பார்த்ததில்லை. இன்று எல்லாமே தலைகீழ் மாற்றங்கள்.

மொழிக் குழப்பம் இல்லை. ஆசிரியர்களுக்கென்று மரியாதை இருந்தது. பள்ளிகள் குறித்த பெருமிதம் இருந்தது. ஏற்றத் தாழ்வுகள் உள்ளுற இருந்தாலும் அது எங்கும் வெளிப்படையாக உரையாடலாக வெளிப்பட்டு வெறித் தனத்தைத் தூண்டியதில்லை. மொத்தத்தில் கல்வி என்பது காசு என்ற அடிப்படைக்குள் இல்லாமல் இருந்த காரணத்தால் எந்தப் பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளின் கல்வி சுமையாக இருந்ததில்லை. 

ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் குழந்தைகள் வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையில் அதீதக் கவனம் செலுத்தும் வகையில் உருமாறியுள்ளது. கருவில் இருக்கும் போதே திட்டமிடுதல் தொடங்க வேண்டியதாக வாழ்க்கை பலரையும் மாற்றியுள்ளது.

கடந்த 13 வருடங்களில் மகள்கள் மூன்று பேர்களுக்கும் கல்விக்காக மட்டும் குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளேன். இதை இங்கே குறிப்பிடக் காரணம் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில்  குழந்தைகளின் கல்விக்காகச் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் பாதியைச் செல்வழிக்கும் சூழலில் இருக்கின்றார்கள். 

இந்தக் கட்டணம் என்பது சாதாரணப் பள்ளியின் கட்டமைப்பு அடிப்படையாகக் கொண்டது.  பள்ளியின் பெயர் பொறுத்து, சந்தையில் அது பேசப்படும் நிலை குறித்து ஒரு கோடி வரைக்கும் செல்லும் வாய்ப்புள்ளது.

இன்று யோசித்துப் பார்த்தால் நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்துள்ளேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். தரம் என்ற மாயக்கயிறு என் வருமானத்தை உறிஞ்சுள்ளது. மகள்களின் சமூகப் பாதுகாப்பு என்ற நிலையில் என்னை நானே அடமானம் வைத்து நான் இழந்தவற்றை இப்போது யோசிக்க முடிகின்றது.  வருடந்தோறும் நான் செலவழித்த பணத்தை வேறு வகையில் நான் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் நானும் கோடீஸ்வரனாக மாறியிருக்க முடியுமோ? என்று யோசிக்க முடிகின்றது.

இதென்ன குழந்தைகள் விசயத்தில் வரவு செலவு என்கிற ரீதியில் பார்ப்பதா என்று உங்களுக்குக் குழப்பம் உருவாகக்கூடும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களும் உச்சம் தொட்டுள்ளனர்.

மாதம் பத்தாயிரம் கட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்ட பெரிய முதலாளிகளின் வாரிசுகளும் போக்கிரிகளாக இருந்து ஆலமரம் போல வளர்ந்து இருந்த நிறுவனத்தின் ஆணிவேரை அசைத்துச் சாய்த்து உள்ளதையெல்லாம் காணும் போது படித்த பள்ளி, கற்ற கல்வி, வாழ்க்கை என மூன்றுக்கும் தொடர்பே இல்லை என்பதனை என்னால் புரிந்து கொள்ளப் பத்து வருடம் ஆகியுள்ளது.

ஆனால் சில விசயங்களில் உறுதியாக இருந்தேன். மற்றவர்களுக்காக வாழ்வது. எனக்காக வாழ்வது. எதிர்காலச் சமூகத்திற்காக வாழ்வது என்ற மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில் மகள்களை வளர்த்துள்ள திருப்தியை 2020 எனக்குத் தந்துள்ளது. நான் இதுவரையிலும் அவர்களிடம் உருவாக்கிய தாக்கத்தின் விளைவுகளை இந்த வருடம் அவர்களிடம் பார்த்தேன்.

இருபது வயதிற்குள் நாம் குழந்தைகளிடம் உருவாக்கும் தாக்கம் என்பது நாம் அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுதல் மூலம் தான் உருவாகும் என்பதில் உறுதியாக இருந்தேன்.  அப்படியே நாங்கள் வாழ்ந்தோம்.  அவர்கள் எப்படி மாற வேண்டும்? வாழ வேண்டும் என்பதனை படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் செதுக்கி வந்தோம்.  

என்னை விட நன்றாக அடிப்படை இலக்கணம் புரிந்து தமிழ் எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள். தனித்தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துகின்றார்கள்.  என்னைப் போல அவர்களின் தமிழ் எழுத்துக்கள் குண்டு குண்டாக அழகாக எழுதும் அளவிற்குத் தமிழ் மொழியை நேசிக்கும் பண்பை கற்று உள்ளனர்.  ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என்பதில் வெறுப்பு உருவாகாத அளவிற்கு மூன்றிலும் அடிப்படை புரிதல் உருவாகியுள்ளது.  

பழமை என்பதால் அதனை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில் அதையே தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை. விஞ்ஞானம் என்பதற்காக மட்டும் அதனைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கத் தேவையில்லை. அதே சமயத்தில் அது உணர்த்தும் கருத்துக்களை உள்வாங்கி உணர்தல் முக்கியம் என்பதனையும் உணரும் அளவிற்குப் பக்குவமடைந்துள்ளனர்.

நம் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அரசியல் உள்ளது என்பதனை உணர்ந்து உரையாடல் கலையை வளர்த்துள்ளனர். இதுவரையிலும் நாங்கள் உருவாக்கிய வாசிப்புப் பழக்கம் இந்த வருடம் உருவாக்கிய அதிகப்படியான ஓய்வுப் பொழுதுகளை வாசிக்கும் பொழுதாக மாற்றி இருந்தனர். காட்சி ஊடக ஆர்வம் போல வாசித்து அறிய வேண்டிய விசயங்களிலும் கவனம் செலுத்தும் அளவிற்கு தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளும் வண்ணம் உருமாறியுள்ளனர்.

அரசு பள்ளிக்கூடம் என்பது வசதி குறைந்தவர்கள் படிக்கும் இடமல்ல. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக வாழ்க்கையில், பொருளாதார நிலையில் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதனை அங்கே வரும் மற்ற மாணவிகள் மூலம் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். நானும் அம்மாவும் உங்களை எப்படி வளர்த்துள்ளோம் என்பதனை அங்கே நீங்கள் பார்க்கும் மற்ற மாணவிகளின் பழக்க வழக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்பதனை புரிய வைத்ததை இப்போது உணர்ந்துள்ளனர்.  எத்தனை வர்க்க வேறுபாடுகள் உள்ளது? எப்படியெல்லாம் பொருளாதாரச் சூழல் மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குகின்றது. அதன் காரணமாகச் சின்ன வயதில் அவரவர் மனதில் உருவாகும் வெறுப்பு, பொறாமை, ஏக்கம் போன்ற குணாதிசயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதனை உங்களால் உணர முடியும் என்று சொல்லி இருந்தேன். கடந்த இரண்டு வருடங்களில் அவர்கள் என்னுடன் அதிகம் பேசுவதை விட அம்மாவிடம் உரையாடல் வழியாக உணர்த்தும் விதத்தை வைத்து நம்பிக்கை பெற்றுள்ளேன். 

என்னிடம் பொது விசயங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். அம்மாவிடம் உள்வாங்கிய விசயத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள்.

நம் வாழ்க்கையில் பணம் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றது. நம்மிடம் உள்ள பணம் மற்றவர்களை எப்படி மாற்றுகின்றது? மாற்றும்? எப்படி உணர முடியும்? போன்ற பல விசயங்களை நாள்தோறும் பேசிப் பேசி புரிய வைத்த போது எந்த அளவுக்கு இவர்களால் இதனை இந்த வயதில் உள்வாங்க முடியும்? என்று பலமுறை யோசித்துள்ளேன். ஆனால் இதனை இந்த வருடம் நடந்த வெவ்வேறு சூழல் மூலம் இவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு கொண்டேன்.

தனக்கான ஆளுமை என்பது கல்வி தருவதல்ல. நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை தங்களின் 16 வயதில் புரிந்துள்ளனர். நான் இதனைப் புரிந்து கொள்ள 30 வயது ஆனது.  இவர்களின் தோழிகள் கவனம் செலுத்தும் தேவையற்ற விசயங்களைக் கேட்டுக் கொள்கின்றார்கள். கவனிக்கின்றார்கள். அதனை அரட்டையாகவும் மாற்றிக் கொள்கின்றார்கள். அதே சமயத்தில் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து அதனை தங்கள் வாழ்க்கையில் தவிர்க்கும் மனப் பக்குவத்தையும் அடைந்துள்ளனர்.

உறவுகள், அவர்களின் மாறிய மனோபாவங்கள் போன்றவற்றை உணரும் பக்குவமும், உயர்ந்த லட்சியங்கள் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்ற வெற்றிகள் தோல்விகள் என் அனைத்தையும் எழுத்து வடிவில், பேச்சு வடிவில் என அனைத்தையும் இவர்களுக்கு இந்த வருடம் அறிமுகப் படுத்தி வைத்தேன். அடுத்த வருடம் கல்லூரி செல்லத் தயாராக இருப்பவர் மனதில் ஒழுக்கம் குறித்துப் புரிய வைக்க ஒழுக்கமற்ற செயல்பாட்டின் விளைந்த விபரீத நிகழ்வுகளை, நடந்து கொண்டிருக்கும் சமூகச் சூழலைக் கவனப்படுத்தி வாசிக்க, பார்க்க வைத்துள்ளேன்.

மொத்தத்தில் நீ யார்? உன் நோக்கம் என்ன? கடைசிவரைக்கும் பெண் என்ற வட்டத்திற்குள் வாழ்ந்து கூனிக்குறுகி யாருக்கோ வாழ்க்கை முழுக்க அடிமையாக இருந்து வாழ்ந்த சுவடு தெரியாமல் மறைந்து விடப் போகின்றீர்களா? என்று உரத்த சிந்தனைகளை இவர்களிடம் விதைத்துள்ளேன். நான் கடந்த ஐந்து வருடமாக நீரூற்றி வளர்ந்த இந்தச் செடியில் இந்த வருடம் மலர்கள் உருவாகி நறுமணம் பரப்பக்கூடிய காலகட்டத்தில் வளர்ந்து வந்து நிற்கின்றார்கள் என்ற திருப்தி வந்துள்ளது.

ஆனால் இரண்டு விசயங்கள் இவர்கள் வாழ்க்கையில் நடக்கவே வாய்ப்பில்லை. நாம் அதற்கும் ஆசைப்படக்கூடக்கூடாது என்று என்னை நானே மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன். அவ்வப்போது சொல்லி வந்துள்ளேன்.

என் அக்கா தங்கைகள் போல நீங்களும் தாவணி பாவாடை உடை உடுத்தி அதன் பின்பே நிஜமாகவே ஆசையுடன் புடவை அணியும் மனப்பக்குவம் வரவேண்டும். இப்போது அணியக்கூடிய நாகரிக உடைகள் தவறில்லை. மற்றவர்களின் கண்களில் அது கிளர்ந்தெழும் எண்ணங்களை உருவாக்காமலிருந்தால் போதும் என்றே சொல்லி வந்துள்ளேன். இந்த வருடம் தீபாவளிக்கு அவர்களாகவே ஆசைப்பட்டு நான் விரும்பிய வண்ணம் மாறியிருந்தார்கள்.  

ஏற்றுக் கொண்டார்கள் என்பதனை விட அவர்கள் இயல்பாகவே வாழ விரும்புகின்றார்கள் என்பதனையும் உணர்ந்து கொண்டேன்.

எத்தனை உயரத்திற்குச் சென்றாலும், பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக வாழ்ந்தாலும், செல்வாக்கு செலுத்தும் ஆளுமையாக எதிர்காலத்தில் மாறினாலும் பெண்கள் என்பவர்கள் இந்தியாவிற்குள் வாழ வேண்டுமானால் கட்டாயம் இங்கிருக்கும் காலச்சாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உண்டு.  கணவருடன் கடைசி வரைக்கும் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே இங்கே மதிப்புண்டு.  வெறுப்பு, கோபம், ஆதங்கம் இருந்தாலும் சகிப்புத்தன்மை என்பது கடைசி வரைக்கும் ஆண்களை விடப் பெண்களைக் கரை சேர்க்கும்.  இது பழமைவாத சிந்தனைகள் அல்ல. பாதுகாப்பான சிந்தனைகள் என்பதனை என்னளவில் பலமுறை பலவிதமாகப் புரிய வைத்துள்ளேன். 

அதன் வழியே வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்குமளவிற்கு இந்த வருடம் அவர்களின் தனிப்பட்ட உரையாடல் வழியே இனம் கண்டு கொண்டேன்.  

கூடவே சமையல் கலை என்பது ஒரு பெண்ணுக்கு மிகப் பெரிய ஆயுதம்.

மகிழ்ச்சி, திருப்தி போன்ற வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெரிய வேண்டும் என்றால் உங்கள் கைப்பக்குவம் என்று உங்களைச் சார்ந்திருப்பவர்கள் பாராட்டும் போது கிடைக்கும் அங்கீகாரம் என்பது நீங்கள் மாவட்ட ஆட்சியராக வந்து அமர்ந்தாலும் அதில் கிடைக்காது. பெரிய பதவிகள் மூலம் கிடைக்கும் அங்கீகாரத்தில் பலரின் நரித்தனம் இருக்கும். ஆனால் கணவர், குழந்தைகள், சார்ந்திருக்கும் உறவினர்கள் அளிக்கும் அங்கீகாரத்தில் நல்லது அதிகம் இருக்கும் என்பதனை பல முறை சொன்னதை இந்த வருடம் சமையல் கலையில் உச்சம் தொடும் அளவிற்குச் சிறப்பான அளவிற்கு வளர்ந்துள்ளனர்.

செடிக்கு உரம் தேவை.  மழை குறைவாக இருந்தாலும், காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகமாக இருந்து அல்லாட வைத்தாலும் ஆணி வேர் தன் பிடிமானத்தை ஆழ அகல மண்ணுக்குள் பரப்பி இருந்தால் நிச்சயம் அது முட்டி மோதி தனக்கான வளர்ச்சியை அடையாளம் காட்டும். 

காணும் என்ற நம்பிக்கையை மகள்கள் எங்களுக்கு விதைத்த ஆண்டு 2020.
 

உன்னதமான மனிதர் 2020

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சர்வ சாதாரணமாக சொல்லி விட்டாலும், இதற்கு பின் உங்களின் பல்வேறு ஆற்றல் கொண்ட ஆளுமை நினைத்து வியக்கிறேன்... வாழ்த்துகள் அண்ணே...

கரந்தை ஜெயக்குமார் said...

தனக்கான ஆளுமை என்பது கல்வி தருவதல்ல. நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை தங்களின் 16 வயதில் புரிந்துள்ளனர்.

வாழ்த்துகள் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்காலகட்டத்தில் சூழலுக்கு ஏற்றாற்போல் நாம் வளர்க்கும் விதமும், குழந்தைகள் தங்களை தகவமைத்துக்கொள்வதும் மிகவும் சிரமமாகும். அதில் சில பெற்றோரும், பிள்ளைகளுமே வெற்றி பெறுகின்றார்கள். பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள். அவ்வகையில் உங்களைப் போற்றுகிறேன்.

ஜோதிஜி said...

அடுத்த நொடி ஆச்சரியங்களைக் கொண்டது வாழ்க்கை.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

தியாகம் என்று சொல்லலாம்.

கிரி said...

ஜோதிஜி பள்ளிகளுக்காக நாம் செலவழிக்கும் கட்டணம் மிக அதிகம். நாம் படிக்கும் போது அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே படித்து இருப்போம்.

தற்போது தனியார் பள்ளிகளுக்கு நகர்ந்து விட்டதால், கட்டணங்களும் அதிகரித்து விட்டன.

எங்கள் கோபி பகுதியில் பள்ளி கட்டணம், சென்னையை விட பல மடங்கு அதிகம்.

சென்னையில் 55,000 என்றால் கோபியில் 80,000 என்கிறார்கள்.

பள்ளி கட்டணங்கள் மிகப்பெரிய சுமை ஆகி விட்டன. சம்பாதிப்பது கல்விக்கட்டணங்களுக்கு கொடுக்கும் பணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் செல்கிறது.

இந்நிலை மாறுவது கடினம். எதிர்காலத்தில் பாதிக்கும் மேல் பள்ளிக்கட்டணம் கட்டவே சென்று விடும் போல.

பிள்ளைகளுக்குப் படிக்கும் போது பள்ளி சொல்லித் தருகிறதோ இல்லையோ அதைக் கூறுவது பெற்றோரின் கடமை. பெற்றோர் அதைப் புறக்கணிப்பதாலும், செல்லம் அதிகம் கொடுப்பதாலுமே பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

பின்னர் இதற்காக வருந்துகிறார்கள். முன்னரே கட்டுப்படுத்தி இருந்தால், பின்னர் கவலை படவேண்டிய தேவையில்லை.

ஜோதிஜி said...

இன்றைய சூழலில் பெருநகரங்கள் கிராமங்கள் போல உள்ளது. கிராமங்கள் பெரு நகர வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றது. நகைமுரண்.

Mohamed Yasin said...

மிகவும் சிக்கலான கணிதத்தை மிகவும் எளிமையாக முடித்து இருக்கிறீர்கள்.. 30 வயதில் உங்களுக்கு ஏற்பட்ட பக்குவம், 16 வயதில் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட காரணம், உங்களை அருகில் இருந்து சுவாசித்தது தான்!!! உங்களை முற்றிலும் உள்வாங்கும் போது இயற்கையாகவே அவர்கள் நேர்வழியில் மட்டும் தான் பயணிப்பார்கள்..

வாழ்வில் வெற்றி என்பது என்ன??? பணம் சம்பாரிப்பது மட்டுமே!!! என்ற பார்வை எங்கும் வியாபித்து கிடப்பதால் கடந்த 15/ 20 வருடங்களில் மக்களின் மனதில் நிறைய மாற்றங்கள். ஒன்றாம் வகுப்பை தாண்டும் முன் லட்சங்கள் செலவாகிறது எனும் போது, கல்லூரியை முடிக்கும் முன் சில கோடிகளை தொடலாம்..

எளிய படிப்பும் , நல்ல ஒழுக்கமும், சுய சிந்தனையையும், நல்ல எண்ணங்களையும் குழந்தைகள் மனதில் வளர்த்து விட்டு.. படிப்பிற்கு செலவு செய்யும் தொகையை அவர்களது எதிர்கால சேமிப்பாக வைத்து இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு அது பயன்படும்.. திறமை இருப்பின் சுயமாகவும் தொழில் செய்யலாம்.. யாரையும் எதிர்பார்க்க வேண்டிய தேவை இருக்காது..

Rathnavel Natarajan said...

அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்