Monday, August 10, 2020

கிஞ்சல், பிரஞ்சல் தன்னம்பிக்கை சகோதரிகளின் கதை

ஒருவருக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பதிலடி எது?

காவல்துறை குழு ஒன்று, மார்ச் 12,1982 இரவு கோண்டா - (உத்தரப்பிரதேசம்) கிராமத்திற்குச் சென்று, ராம் மற்றும் அர்ஜுன் பாசி ஆகிய இரு குற்றவாளிகளைத் தேடியது. அங்கு இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகத் துப்பு கிடைத்திருந்தது. அந்த வட்டத்தின் தலைமை காவல் அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி சிங், குற்றவாளி ராம் வீட்டின் கதவைத் தட்டினார். அவர் தட்டும் போது யாரும் பதிலளிக்கவில்லை. சிங் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவர் திரும்பிச் செல்லும்போது, பக்கத்தில் இருந்த, ​​சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ் அவரை மார்பில் சுட, சிங் மருத்துவமனையில் இறந்து போனார். அந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கிஞ்சலுக்கு வயது வெறும் ஆறு மாதங்கள். அவளுடைய தந்தை DSP சிங் கொல்லப்பட்ட அந்தச் சமயத்தில் அவளது இளைய சகோதரி தாயின் வயிற்றில் கருவாக இருந்தாள்.


இறக்கும் முன்னர் அந்த டிஎஸ்பி சொன்ன கடைசி வார்த்தைகள், தயவுசெய்து என்னைக் கொல்ல வேண்டாம். எனக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். தந்தையின் பாசம் இல்லாத கிஞ்சலும் அவரது தங்கை பிரஞ்சலும் தங்கள் குழந்தைப் பருவத்தில் படிப்பைத் தொடர எல்லாவற்றையும் தியாகம் செய்தனர். தாய் பக்கபலமாக நின்றார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் admission கிஞ்சலுக்கு கிடைத்தது. பட்டப்படிப்பின் முதல் செமஸ்டர் காலத்தில், கிஞ்சல் தனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைந்தார்.

அம்மா சீக்கிரமே இறந்துவிடுவார் என்கிற நிலையில் சகோதரிகள் இருவரும் நிச்சயமாகப் பட்டப்படிப்பு முடித்து UPSC தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவோம் என்று அம்மாவுக்கு உறுதியளித்தனர். கிஞ்சலிடம் இருந்த நம்பிக்கை அவர்களது அம்மாவிற்கு (விபாதேவி) மன அமைதியைக் கொடுத்திருந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். கிஞ்சால் தனது தாயார் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு டெல்லிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. கிஞ்சால் அனைத்துக் கஷ்டங்களையும் சமாளித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பில் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கம் வென்றார். பட்டப்படிப்பு முடிந்ததும், கிஞ்சல் தனது தங்கை பிரஞ்சலை டெல்லிக்கு அழைத்து முகர்ஜி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

அங்கு இரண்டு சகோதரிகளும் மேற்கூறிய UPSC தேர்வில் வெற்றி பெற தங்களை தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். இந்த இரு சகோதரிகள் தங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். பண்டிகைக் காலங்களில் கூட அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவில்லை.தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சகோதரிகள் இருவரும் ஒரே ஆண்டில் தேர்வை வெற்றிகரமாக முடித்தனர். தந்தையைச் சிறு வயதில் இழந்து, இளம் வயதில் தாயையும் இழந்து சமூகத்தில் தன்னந்தனியாகப் போராடிய இருவரும் இப்போது கிஞ்சல் சிங் (ஐ.ஏ.எஸ்) மற்றும் பிரஞ்சல் சிங் (ஐ.ஆர்.எஸ்). இந்திய அரசுப் பணியில் முதல் நிலை அதிகாரிகள். இதற்கிடையே அவர்களின் தந்தை படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விட்ட இரு சகோதரிகள் கதைகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான முடிவு வந்தது. இப்போது பார்க்கலாம் பதிலடி. DSP கே.பி சிங் கொலை செய்யப்பட்டதாகத் தீர்மானித்து, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று போலீஸ்காரர்களுக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 31 வருடப் போராட்டத்திற்குப் பிறகு, ஜூன் 5, 2013 அன்று லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், DSP திரு.கேபி சிங் கொலைக்குக் காரணமான இருந்த 18 போலீஸ்காரர்களுக்கும் தண்டனையை வழங்கியது.

மகள்கள் ஒன்றும் மகன்களை விட எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை கிஞ்சல், ப்ரஞ்சல் சகோதரிகள் தங்களது தரமான வாழ்க்கைப் போராட்டம் மூலமாக நிரூபித்துள்ளனர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும் போது - 31 வருட வருத்தம் தீர்ந்த நிலை. கிஞ்சல் சிங் (Kinjal Singh) - தற்போது அரசியல் ரவுடிகள், மாஃபியாக்கள், ஊழல் அதிகாரிகள் என்று யாராக இருந்தாலும் பேரைக் கேட்டால் நடுங்க வைக்கும் பெண்மணி. சிங் சகோதரிகளின் இந்த வெற்றி ஒவ்வொரு பெற்றோரை இழந்த குழந்தைக்கும் ஒரு வாழ்க்கை பாடம். ஒரு நல்ல திரைப்படத்திற்கு நிகரானது.

பதிலடி என்பது சூழ்நிலையைப் பொறுத்தது.

(நேரம் இருந்தால் இணைப்பில் கொடுத்துள்ள இண்டியன் எக்ஸ்பிரஸ் ல் வந்துள்ள முழுமையாக விரிவாக கொடுத்துள்ள கட்டுரையை வாசித்துப் பார்க்கலாம்)

*********

எளிய சிந்தனை கொண்ட தமிழ்ப்பிள்ளைகள் என்றால் என்ன?


ஊருக்குச் செல்லும் போதெல்லாம் கவனிப்பதுண்டு. அக்காக்கள் முதல் உறவினர்களில் உள்ள பெண்கள் வரைக்கும் இன்னமும் ரமணி சந்திரன் அதி தீவிர வாசகியாகத் தான் இருக்கின்றார்கள். ஒரு முறை அக்காவுடன் நூலகம் சென்றேன். குறிப்பிட்ட ரமணி சந்திரன் புத்தகம் குறித்துக் கேட்டார். "உங்களுக்கு முன்னால் 20 பேர்கள் கேட்டு உள்ளனர்" என்று எழுதி வைத்துள்ள புத்தகத்தைக் காட்டினார். இன்று அமேசான் தளத்திலும் அவர் புத்தகம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் வலைதளத்தில் எந்த விளம்பரங்களும் செய்வதில்லை. ஆனால் பழைய எம்ஜிஆர் படம் போல ஹவுஸ்புல் காட்சியாக வசூல் மகாராணியாக இன்னமும் இருப்பது ஆச்சரியமே.

நானும் ஒரு காலத்தில் இவரின் புத்தகங்கள் மற்றும் லஷ்மி அனுராதா ரமணன் சிவசங்கரி புத்தகங்களைத் தேடித் தேடி அலைந்து படித்தது இப்போது ஞாபகம் வருகின்றது. ஒரு பிரபல பத்திரிக்கையின் திருப்பூர் முகவர் சொன்னது இப்போது ஞாபகத்தில் வருகின்றது.

"தினத்தந்தி என்பது தமிழக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்றது. அதை முறியடிக்க வேறொரு தினசரி வர வாய்ப்பே இல்லை" என்றார். "ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து வாசிப்பு மாறி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து போகும் கூட்டமுண்டு. அதே போல உடனே மற்றொரு கூட்டம் தினத்தந்திக்கு வாசகர்களாக மாறுவார்கள். எங்களால் கூட அதன் விற்பனை உயரத்தை எட்ட முடியவில்லை" என்றார்.

******

"தெளிய வச்சு அடிப்பது" என்றால் என்ன?


மத்திய அரசு தங்கள் தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்களோ? அதைக் கர்மசிரத்தையாக ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றார்கள். நமக்குப் பிடிக்கலாம்? பிடிக்காமல் வெறுக்கலாம்? அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று செயலில் வேகம் காட்டுகின்றார்கள். அவர்கள் உருவாக்கிய "கல்விக்கொள்கை" சட்ட வடிவைப் பெற்று விட்டது. எத்தனை பேர்களிடம் கருத்துருக்கள் பெறப்பட்டது? எவையெல்லாம் திருத்தப்பட்டது என்பதெல்லாம் அநாவசியம். "நாங்கள் உங்கள் நல்லதுக்குத் தான் எல்லாவற்றையும் செய்கின்றோம்" என்று கஸ்தூரி ரங்கன் சொன்ன பிறகு அதில் கேள்வி என்பதே வரக்கூடாது. அடுத்து வரப் போகும் "சுற்றுப்புறச் சூழல் வரை"வும் அப்படித்தான் நிறைவேற்றப்படும்.

இதன் முக்கிய நோக்கம் கடற்கரையோர மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் மேல் மத்திய அரசின் கழுகுப் பார்வை இனி வரும் காலங்களில் அதிகம் இருக்கும். மத்திய அரசாங்கம் இந்திய முழுக்க உருவாக்க நினைக்கும் "இராணுவ காரிடர்" அமைப்பு மிக முக்கியமானது. அதன் சாதக பாதகங்கள் வேறொரு சமயத்தில் பேசுவோம். இனி வரும் காலங்களில் மாநில அரசு கவுன்சிலர் அதிகாரத்தைப் பெற்றுச் சொல்வதைக் கேட்டுக் கொண்டால் போதும் என்கிற நிலையில் "மாநில சுயாட்சி" இருக்கும்.

இப்போது இந்தச் சமயத்தில் மற்றொரு விசயத்தைப் பற்றிப் பேசுவோம்.

எளிய தமிழ்ப் பிள்ளைகள் அடிக்கடி சொல்லும் வாசகமான "எங்கள் உரிமையை நாங்களே தீர்மானித்துக் கொள்கின்றோம்". நீ யார்? உள்ளே வர? என்று தமிழக மக்களின் நலன் மேல் அதிக அக்கறை வைத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. எனக்கு மோடி ஒழிக என்று சத்தமாகச் சப்தம் போட்டுக் கத்த வேண்டும் என்றே தோன்றியது அப்போது தான் இதனைப் பார்த்தேன்.

தடுக்கி விழுந்தால் பொரியல் கல்லூரி மன்னிக்கவும் பொறியியல் கல்லூரி என்ற உயரிய இலக்கை அடைந்த தமிழகத்தின் தற்போதைய நிலை எப்படியுள்ளது என்பதனை தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்ததே. வருடந்தோறும் நடமாடும் உணவுக்கடைகளுக்கு நம் பொறியியல் கல்லூரிகள் தரமான மாணவர்களை அனுப்பிக் கொண்டிருக்கும் போது மேலும் அவர்கள் நிர்வாகத்தில் ஏதேனும் மாற்றங்கள் உருவாக்கியுள்ளனரா? என்பது போன்ற தேவையில்லாத ஆராய்ச்சியைத் தூக்கம் வராது நடு இரவில் உட்கார்ந்து என்னைப் போன்ற வேலை வெட்டி இல்லாத தமிழ்ப் பிள்ளைகள் ஆராய்வதுண்டு.

அப்படி ஆராய்ந்த போது (கீழே இணைப்பு கொடுத்துள்ளேன்) இந்தத் தகவல் பார்த்து வியந்து போய் நின்றேன். https://youtu.be/jbtZV5I1-kM

மாநிலக் கல்வி. மாநில அரசு கட்டுப்பாடு. புதிய கல்விக் கொள்கை இல்லை. மத்திய அரசு தலையிடவே இல்லை. கன்னடர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தில் உயரிய பொறுப்பில் வந்தமர்ந்த போது உருவான அலையைப் பார்த்த அசந்து போனேன். அவர் வந்து அமர்ந்த பின்பு உருவான மாற்றங்கள், உருவாக்கிய கட்டமைப்புக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தது? எப்படிக் காயடிக்கப்பட்டு அவர் ஒதுங்கினார் அல்லது ஓரம் கட்டப்பட்டார் போன்ற விசயங்கள் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தேவையில்லாத விசயம். இந்தச் சமயத்தில் தான் நமது பொறியியல் கல்லூரியின் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் இப்படியுள்ளது என்பதனை தமிழ் கூறும் நல்லுலகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2018 மற்றும் 2019 ஆம் அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறியியல் (தன்னாட்சி மற்றும் இணைப்பு) கல்லூரியின் தேர்ச்சி சதவிகிதம். 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் தேர்ச்சி சதவிகிதம் இது.

ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதம் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற கல்லூரி மொத்தம் 2 மட்டுமே.

ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் பத்து சதவிகிதம் தான் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்தக் கணக்கு இப்படியே தொடர்கின்றது. பல கல்லூரிகளில் ஒரு மாணவர் கூடத் தேர்ச்சி பெறாத கணக்கு இதில் வருகின்றது.

இதற்குப் பின்னால் கலைக்கல்லூரிகள் என்று தொடங்கிய பல துறை சார்ந்த கல்லூரிகளின் தரத்தை இதே போல எடுத்து பட்டியலிட்டால் போதும்? ஏன் அன்பழகனும் கருப்பணன் அவர்களும் ஆலோசனையில் உள்ளது என்று பேட்டி கொடுக்கும் வியூக யுக்தியை அவர்களின் மதியை நாம் போற்றிக் கொண்டாட முடியும்? வருத்தப்பட இதில் ஒன்றுமே இல்லை.


தேர்வு வைத்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட எளிய தமிழ்ப் பிள்ளைகளை ஒடுக்க நினைக்கும் அண்ணா பொறியியல் கல்லூரியின் நிர்வாகத்தை எதிர்த்து ஃபேஸ்புக்கில் களமாடினால் போதுமானது. நான்கு வருடம் ஐந்து லட்சத்தைக் கட்டி தெருவில் நிற்கும் அவர்கள் அடுத்து ஃபேஸ்புக் ட்விட்டர் ஐடி திறந்து யாரால் நாம் கெட்டோம் என்று ஆராய்ந்து சொல்லும் வரை காத்திருப்போம். அப்பாக்கள் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாரித்த பணத்தை பிஈஈஈஈ என்று நுழைந்து பாவம் செய்து பாரம் சுமக்கும் எளிய தமிழ்ப்பிள்ளைகள் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு அடைக்கலம் தருவேன்.


அமேசான் தளத்தில் மிக விரைவில் ராபின்சன்பூங்கா-திருக்கழுக்குன்றம் (100 ஆண்டு கால தமிழக அரசியலின் சுவராசிய தொகுப்பு)


4 comments:

கிரி said...

சகோதரிகளின் போராட்டம், முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. செம :-) .

ஜோதிஜி said...

வைராக்கியத்தோடு செயல்படும் போது வெல்வது எளிது.

koilpillai said...

இரண்டு சகோதரிகளின் பொறுப்புணர்வு , கடும் உழைப்பு, தாம் கொண்ட கொள்கையில் தங்களுக்கிருந்த உறுதியை வெளிப்படுத்துகின்றது.

நிகழ்ச்சியை அழகாக சொல்லிய விதம் அருமை.

ஜோதிஜி said...

நன்றி.