Friday, July 24, 2020

ஜுலை 2020 கொரானா கால நினைவுகள்

நேற்று அவினாசியிலிருந்து தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் வந்த ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பாவுடன் இரண்டு பசங்களும் இருந்தார்கள். மாருதி ஆம்னி முன்னும் பின்னும் வேப்பிலைக் கட்டியிருந்ததைக் கவனித்து டிரைவரிடம் கேட்டேன்.

"முன்னால் கண்ணாடியில் மறைக்கிறதே? கஷ்டமாக இல்லையா"?

"இப்படிக் கொத்துக் கொத்தாக நான்கு பக்கமும் சொருகாமல் வந்தால் அய்யன் வெளியே வண்டியை எடுக்க விட மாட்டார்" என்றார்.

உள்ளே முண்டியடித்து உட்கார்ந்து வந்தவர்களுக்கு, தாடைக்குக் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் துணி முகக் கவசத்தை வெறித்துப் பார்த்தேன். தமிழகம் தனி மனிதர்களின் சிந்தனையில் தன்னிகரற்ற மாநிலம் என்பதனையும் உணர்ந்து கொண்டேன்.



******
இப்போது கொரானா பயம் போய்விட்டது. குழந்தைகளின் கல்விப் பயம் தொடங்கியுள்ளது. ஆன்லைன் ஆஃப் லைன் என்றாலும் கூட பசங்க பெற்றோர்களைத் தெறிக்க விடுகிறார்கள். போதாக் குறைக்கு மாணவிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள்.

மகளிடம் பேசிய ஒரு மாணவி சொல்கிறார்.

"முன்பு அப்பா அம்மா உனக்கு எதற்கு செல்போன்? என்றார்கள். நீங்க கொடுத்தா க்ளாஸ் ல தலை காட்டுவேன்? இல்லையென்றால் உங்கள் பேரைச் சொல்லுவேன். எனக்கென்ன வந்தது? என்று சொன்னதிலிருந்து என் கையில் இருக்கிற போனை இரண்டு பேரும் கேட்பதே இல்லை. நீ எப்போது வேண்டுமானாலும் சாட் செய்யலாம்டி" என்றார்.

*****
சென்ற வருடம் டிசம்பர் வரைக்கும் தமிழக அரசியல்வாதிகள் நாம் "கணினி அரசியல்" செய்வோம் என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்கள் நாம் யாருக்குப் பாடம் நடத்துகிறோம்? என்பதே தெரியாமல் ஜன்னல் ஓரத்தில் வைத்துள்ள அலைபேசியில் ஆளில்லா அறையிலிருந்து தனி ஆளாகப் பேசப் போகின்றோம் என்றா நினைத்துப் பார்த்திருப்பார்கள்? எந்தப் பள்ளிக்கூடமும் இதற்கான கட்டமைப்பு உருவாக்கியிருக்கவில்லை என்பது முதல் ஆச்சரியம். ஏன் ஆன்லைன் வகுப்பு நடத்த மாட்டுகிறீர்கள்? என்று பெற்றோர்கள் குதறுவார்கள் என்று நினைத்தா பார்த்திருப்பார்கள்?

பல ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது சில வினோதங்களைக் கவனித்தேன். அவர்களின் மகளோ மகனோ செல்போனைப் பிடுங்குவதும் வாடிக்கையாக உள்ளது. கூடவே மனைவி திடீர் என்று "ஏங்க அந்த சாமான் வாங்கி வந்தீர்களா? சமயலறையில் காணலையே?" என்றும் பாடம் நடத்தும் சமயத்தில் அக்கறையாகக் கேட்பதும் பார்த்தும் பசங்க சிரித்துக் கொள்கின்றார்கள்.
*****
ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் கணவன் மனைவி இரண்டு பேரும் "பசங்க கிட்ட செல்போனைத் தூக்கிக் கொடுத்து வந்துவிட்டேன். அவன் படிக்கிறானா? கண்டதையும் பார்த்துக்கிட்டு இருப்பானா?" என்ற குழப்பத்தில் தவிக்கின்றார்கள்.

*****
இன்றைய சூழலில் அரசு, தனியார் பள்ளிகள் என்ற வித்தியாச பேதமில்லை. எல்லாமே ஒன்று தான் என்பதாக மாறியுள்ளது. எல்லாமே பூஜ்யத்திலிருந்து தான் தொடங்குகின்றார்கள். இப்போதைய சூழலில் குழந்தைகளின் வாழ்க்கை ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மா அப்பா கையில் தான் உள்ளது. குறிப்பாக அப்பா விபரம் பொறுத்து தான் இந்த வருடம் பசங்க பாதை மாறுவதை கட்டுப்படுத்த முடியும் என்றே நம்புகிறேன்.

பெற்றோர்கள் ஓரளவுக்கேனும் படித்து தொழில் நுட்பம் தெரிந்து பசங்க செய்யும் டிகால்டி வேலையை அவ்வப்போது கட் செய்து அனுசரித்து அவர்களை வழிகாட்டும் சூழலில் இருந்தால் மட்டுமே இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆன்லைன் வகுப்பு பலன் தரும்.

காரணம் ஆசிரியர் நேரிடையாக இருந்து கண்காணித்துக் கவனித்துச் செய்யக்கூடியவற்றை ஒரு கருவி செய்யும் என்பதனை நம்பினால் அது நூறு சதவிகிதம் மடத்தனம். பசங்க வயதுக்கு இது இப்போதைக்குப் பெரிதாகத் தெரியாது. காரணம் அவர்கள் வயது அப்படி யோசிக்கத் தோன்ற வைக்காது. ஆனால் ஒரு வருடத்தின் தொடர்ச்சி தான் அடுத்த வருடக் கல்வி. அடுத்த வருடம் கல்லூரி செல்லும் போது, நுழைவுத் தேர்வு செல்லும் போது அல்லது அடுத்த வகுப்புக்குச் செல்லும் போது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் திக்குத் தெரியாத காட்டில் திசை தெரியாத பறவை போலவே தடுமாறப் போவதை 2021 தமிழகம் பார்க்கும். பார்க்கப் போகின்றது.


பக்கோடா 2020 ஜுலை


11 comments:

வெங்கட் நாகராஜ் said...

சோதனையான காலங்கள் - பள்ளிபடிக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்.

KILLERGEE Devakottai said...

எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தும் 2020-ல் சந்தித்து இருக்கிறோம்.

பார்க்கலாம் இன்னும் என்னென்னவோ... ?

G.M Balasubramaniam said...

ஆன் லைன் வகுப்புகள்நேரிடை பயிற்சிக்கு ஈடாகுமா ஏற்கனவே இருக்கும் ஏற்றதாழ்வுகள் போதாதா இப்போதுஇது வேறு

திண்டுக்கல் தனபாலன் said...

டகால்டி வேலையை கண்டுபிடிக்க நாமும் அதையே செய்து இருக்க வேண்டும்...

அது சரி, இணைத்த படம் எங்கே ? எப்போது...? என்றைக்கு...?

Rathnavel Natarajan said...

ஆனால் ஒரு வருடத்தின் தொடர்ச்சி தான் அடுத்த வருடக் கல்வி. அடுத்த வருடம் கல்லூரி செல்லும் போது, நுழைவுத் தேர்வு செல்லும் போது அல்லது அடுத்த வகுப்புக்குச் செல்லும் போது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் திக்குத் தெரியாத காட்டில் திசை தெரியாத பறவை போலவே தடுமாறப் போவதை 2021 தமிழகம் பார்க்கும். பார்க்கப் போகின்றது. - அருமை. நன்றி திரு ஜோதிஜி

கரந்தை ஜெயக்குமார் said...

மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் திக்குத் தெரியாத காட்டில் திசை தெரியாத பறவை போலவே தடுமாறப் போவதை 2021 தமிழகம் பார்க்கும். பார்க்கப் போகின்றது.
உண்மை

ஜோதிஜி said...

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களை செங்கோட்டையன் படாய் படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இன்று வரையிலும் அவர்களுக்கு இறுதியான முடிவு சொல்ல முடியாமல் தமிழக கல்வித்துறை தடுமாறுகின்றது. முதலில் தேர்வு இல்லை என்றார்கள். இப்போது மீண்டும் எழுத வேண்டும் என்கிறார்கள். நாளை என்ன மாறுதல் வரும் என்றே தெரியாமல் தவிக்கின்றார்கள். இது போல ஒவ்வொரு நிகழ்வும் இந்த வருடம் இப்படித்தான் உள்ளது.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

இந்த வருடம் ஜனவரி மாதம் பள்ளி விழாவில் கலந்து கொள்ள சென்ற போது எங்கள் ஊரில் இருந்த பூங்காவிற்குச் சென்றேன். அருகே ரயில் நிலையம். இந்த இடங்களில் தான் 10 முதல் கல்லூரி முடியும் வரைக்கும் அமர்ந்து நீண்ட நேரம் படித்து முடித்து விட்டு வீட்டுக்கு வருவதுண்டு. அப்போது காதலித்துக் கொண்டிருந்த தருணம். அந்தப் பெண்ணின் பெயரை இங்குள்ள ஒரு மரத்தில் எழுதி வைத்தேன். இருக்கின்றதா? என்று தேடிச் சென்றேன். மொத்த மரங்களையும் அடியோடு வெட்டிச் சாய்த்து பொட்டல் காடு போல மாற்றியிருந்தார்கள். சொந்தக் கதை சோகக் கதை தனபாலன். அந்தப் பெண் இப்போது பொள்ளாச்சியில் தான் இருப்பதாக நண்பன் சொன்னான். அவருக்கும் இரட்டைப் பிள்ளைகள்.

ஜோதிஜி said...

அது குறித்து தனியாகவே எழுதியுள்ளேன்.

ஜோதிஜி said...

ஏழை பணக்காரன் பாமரன் விஞ்ஞானி என்று பாரபட்சமின்றி உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டதே. சாதாரண கண்களுக்குத் தெரியாக சிறிய கிருமி.