Sunday, July 26, 2020

பெரோஸ் காந்தி முதல் வதேரா வரை

ராகுல் அவர்கள் பிவி நரசிம்மராவ் க்கு புகழ் மாலை சூட்டிய ஒரு கடிதத்தைக் கண்டேன். அது குறித்து பழைய கதைகளை எழுதி சோனியின் புகழைப் பரப்புவதைவிட அதற்கு முந்தைய பழைய கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வந்தால், எரிச்சல் வந்தால் நான் பொறுப்பல்ல. படித்து முடித்தவுடன் ஒரு சொம்பு தண்ணீர் குடித்து ஆற்றாமையை போக்கிக் கொள்ளவும். இரா. செழியன் தினமணியில் எழுதிய கட்டுரையிது.

#வரலாறுமுக்கியம்அமைச்சரே

ஒரு குடும்ப அளவில் பார்த்தால், ஜவஹர்லால் நேரு, (1947-64), இந்திரா காந்தி (1966-77, 1980-84) ராஜீவ் காந்தி (1984-89) ஆகியவர்கள் பிரதமர்களாக இருந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றித்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இன்றும் இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை இருந்தாலும், கடந்த நானூறு ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சபைக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட நிலைமையில்தான் ஆட்சிமுறை அங்கு நிலவுகிறது.


மேலும் தேர்தலில் போட்டியிட்டு "காமன்ஸ்' (மக்கள் சபை) உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்தியாவில் பிரதமராக ஆகும் தகுதி மன்மோகன்சிங்குக்கு துளியும் இல்லை. காரணம், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அங்கே பிரதமராக முடியாது.

மன்மோகன்சிங் "பெயரளவில்' பிரதமராக இருந்தாலும், நடைமுறையில் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையிலுள்ள அரசாங்கத்தையும் நடத்திச் செல்பவர் சோனியா காந்திதான். 1999 முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் பதவி வகித்தார்.

127 ஆண்டுகாலத் தேசியக் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் தொடர்ந்து தலைவராக இருப்பவர் அவர்தான். சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் நேரு பரம்பரைக்குத்தான் இந்தியாவை ஆட்சி செலுத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

"குடும்பப் பாரம்பரியம்' என்ற அளவில் இதுவரை விரிவாக இங்கு ஆராய்வதற்கான காரணம் இந்தியாவிலிருந்துவந்த "பாரம்பரிய ஆட்சிமுறை' அண்மைக் காலத்தில் விரிவடைந்துவிட்டது.

ஜவஹர்லால் நேரு காலத்தில் அவரின் மருமகன் பெரோஸ் காந்தி இருந்தார். தற்பொழுது இந்திரா காந்தியின் மருமகளின் மருமகன் ராபர்ட் வதேரா என்பவர் குறுகிய காலத்தில் பெரும் செல்வாக்குடையவராக ஆகிவிட்டார்.

இந்த இரு மருமகன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசியல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

காந்தி, குஜராத் என்ற இரு பெயர்களைச் சொன்னதும், மகாத்மா காந்தி நினைவுக்கு வந்து, அவருக்கு பெரோஸ் காந்தி உறவினர் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படக் கூடும். பெரோஸ் காந்தி பார்சி வகுப்பைச் சேர்ந்தவர். நெருப்பை வழிபடும் ஸோராஸ்ட்ரியர்.

மகாத்மா காந்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் பார்சிகளுக்கும் இந்துக்களுக்கும் பொதுவான குடும்பப் பெயராக "காந்தி' என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது.

பெரோஸ் காந்தியின் தந்தை இறந்த பிறகு, அவரும் அவர் தாயாரும் அலகாபாத் வந்துவிட்டனர். 1930-இல் இர்விங் கிறிஸ்தவக் கல்லூரியில் பெரோஸ் படிக்கும்பொழுது, ஆங்கில ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் அலாகாபாதிலும் நடைபெற்றது.

அதில் ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேருவும், 13 வயதான மகள் இந்திரா பிரியதர்சினியும் கலந்துகொண்டனர். கடும் வெயிலில் கமலா நேரு மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதைக் கவனித்த பெரோஸ் ஓடிவந்து தண்ணீர் தெளித்து, அவரை ஆனந்த பவன் மாளிகையில் சேர்த்தார்.

கல்லூரிப் படிப்பை விட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் பெரோஸ். 1930-இல் கைது செய்யப்பட்டு லால்பகதூர் சாஸ்திரியுடன் சிறையில் இருந்தார். கமலா நேரு எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுது அவருடன் பெரோஸ் இருந்து உதவினார்.

நோய் முற்றிய நிலையில் கமலா நேரு மருத்துவச் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றபொழுது பெரோஸ் காந்தியும் அவருடன் சென்றார். கமலா நேரு 1936 பிப்ரவரியில் இறந்தபொழுது பெரோஸ் உடனிருந்தார்.

அந்த அளவுக்கு நேரு குடும்பத்தினருடன் நெருங்கி இருந்த பெரோஸ் மீது இந்திராவுக்கு நம்பிக்கையும் நட்பும் நாளடைவில் காதலும் உண்டானதில் ஆச்சரியமில்லை. முதலில் பெரோஸ் - இந்திரா திருமணத்துக்கு ஜவஹர்லால் நேரு சம்மதிக்கவில்லை.

மகாத்மா காந்தி தலையிட்டு இந்திராவுடன் பேசிச் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். கடைசியில் ஜவஹர்லால் நேரு உடன்பட்டு 1942 மார்ச் மாதத்தில் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்தார். திருமணத்துக்குப் பிறகுதான் கணவன் பெயரை இணைத்து "இந்திரா காந்தி' என்று இந்திரா அழைக்கப்பட்டார்.

திருமணமான ஆறு மாதத்திற்குள் இருவரும் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைக்குச் சென்றனர். பின்பு வெளிவந்ததும் 1944-இல் ராஜீவ் காந்தியும் 1946-இல் சஞ்சய் காந்தியும் பிறந்தனர்.

1947-இல் ஜவஹர்லால் நேரு, பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதும் ,இந்திரா காந்தி தந்தையுடன் பெரும்பாலும் இருக்கவேண்டி வந்தது.

பிரதமர் மாளிகையில் இருப்பது பிடிக்காமல் பெரோஸ் தம் அளவில் தில்லியில் வேறொரு இடத்தில் தங்கிவிட்டார்.

1950-52-இல் இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெரோஸ் காந்தி உறுப்பினராக இருந்தார், பிறகு 1952 பொதுத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபை உறுப்பினராக ஆனார்.

மாமனார் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தாலும், பெரோஸ் காந்தி தமது தன்மானத்தையும் அரசியல் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்கவே இல்லை. முக்கிய பிரச்சினைகள் எழும்பொழுது அரசாங்கத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார்.

குறிப்பாக 1955 டிசம்பர் மாதத்தில் பிரபல செல்வந்தரான ராமகிருஷ்ண டால்மியாவின் வங்கி-இன்சூரன்ஸ் அமைப்புகளில் செய்த ஊழல்களைத் தக்க ஆதாரங்களுடன் மக்கள் சபையில் பெரோஸ் எழுப்பினார்.

எதிர்க்கட்சியினரைவிட அதிகமாக அவர் எழுப்பிய குரலும் ஊழலை எதிர்த்த கண்டனமும் பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாயின. அவருடைய கண்டனத்தின் விளைவாக, டால்மியா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது.

மக்கள் பணத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் துறையைத் தேசியமயமாக்கும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது பெரோஸ் காந்தி அந்தப் பிரச்சினையை எழுப்பியதால்தான்.

1957 பொதுத்தேர்தலில் பெரோஸ் காந்தி மீண்டும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபைக்கு வந்தார். 1958-இல் முந்திரா ஊழல் என்பதை பெரோஸ் அம்பலப்படுத்த முன்வந்தார்.

ஹரி தாஸ் முந்திரா என்னும் முதலாளிக்குச் சொந்தமான சில கம்பெனிகளின் பங்குகளை ஆயுள் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1.54 கோடி கொடுத்து வாங்கியது. அந்தப் பங்குகளின் உண்மையான மதிப்பீட்டைவிட அதிகமான விலைக்கு அரசாங்க ஆதரவினால் வாங்கப்பட்டுவிட்டன என்பதற்கான விவரங்களைப் பெரோஸ், மக்கள் சபையில் 1957 டிசம்பர் 16 அன்று வெளிப்படுத்தினார்.

அவருடைய ஊழல் எதிர்ப்பினால் இரண்டாவது புயல் கிளம்பியது.

பெரோஸ் காந்தியின் குற்றச்சாட்டு நேரடியாக அப்போதைய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரியாரைத் தாக்கியது. முந்திரா விவகாரத்தை விசாரணை செய்யப் பம்பாய் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி. சாக்ளா தலைமையில் விசாரணைக் குழுவை நேரு அரசாங்கம் அமைத்தது.

சாக்ளா குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விவியன் போஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிதி அமைச்சர் மீது முழுக் குற்றச்சாட்டையும் போட்டது. கடைசியில் நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலாளி முந்திரா குற்றவாளியாகச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

முந்திரா ஊழலைப் பற்றி மக்கள் சபையில் பேசும்பொழுது பெரோஸ் காந்தி உணர்ச்சிப்பூர்வமாக ஒரு கருத்தை வலியுறுத்தினார். ""நான் மிகவும் உறுதியுடன் இந்த விவாதத்தைத் துவக்குகிறேன். இப்பொழுது ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்களின் நிதி தனிப்பட்ட ஒருவரின் தேவைகளுக்காகப் பயன்படுவது தவறானது, குற்றமானது. ஒரு குற்றம் நிகழும்பொழுது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது பெரிய குற்றமாகும்''.

மற்றொரு வகையில் முற்போக்கான ஒரு சட்டத்தை உருவாக்குவதில் பெரோஸ் காந்தி வெற்றிபெற்றார். அவருடைய முயற்சியினால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய சட்டம் 1956-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தவறுகள் எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெளியிடுபவர் மீது எந்த நீதிமன்றத்திலும் எந்த வகையிலும் குற்றம் சாட்டப்படக்கூடாது என்று சட்டப்பூர்வமான பாதுகாப்பு செய்தியாளர்களுக்குத் தரப்பட்டது.

1956-இல் பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் பெரோஸ் காந்தியால் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து அந்தச் சட்டத்தை இந்திய அரசாங்கம் மற்றொரு சட்டம் போட்டு நீக்கிவிட்டது. அதாவது, 1975-76 நெருக்கடிக் காலத்தில் அந்தச் சட்டத்தை நீக்கியவர் வேறு யாருமில்லை பெரோஸ் காந்தியின் மனைவி பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்தாம்.

நெருக்கடிக்காலம் நீங்கியதும், ஜனதா ஆட்சியில் பத்திரிகையாளர் சட்டம் மீண்டும் உயிர் பெற்றது என்பதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.

முற்போக்கான சட்டத்தை முன்மொழியும் துணிவும், கடமை உணர்வும் பெரோஸ் காந்திக்கு இருந்தது, அதை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையும், ஜனநாயகப் பண்பும் ஜவஹர்லால் நேருவுக்கு இருந்தது. ஆனால், அதை நீக்கிடும் எதேச்சாதிகார உணர்வு இந்திரா காந்திக்கு 1975-76-இல் ஏற்பட்டது. இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் குடும்பப் பாரம்பரிய அரசியல் அந்த அளவு மாறி மாசு படிந்துவிட்டது.

நாள்தோறும் காலையில் மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் பெரோஸ். 1958 செப்டம்பர் மாதத்தில் இதயநோய் அவரைத் தாக்கியது. இந்திரா காந்தி உடனடியாக வந்து அவரைக் கவனித்து உடல் நலம் பெறும்வரை உடனிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1960 செப்டம்பர் 8 இரண்டாவது முறையாக இதயத் தாக்குதல் வந்தது, அதிலிருந்து மீளமுடியாமல், 48-ஆவது வயது நிறைவு பெறுவதற்கு நான்கு நாள்கள் முன்னதாக பெரோஸ் காந்தி இறந்தார்.

அரசியல் நண்பர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியவர்களின் கூட்டத்தைவிடப் பெரிய அளவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரோஸ் காந்தி இல்லத்தின் முன் திரண்டு அவருக்கு அஞ்சலி செய்யக் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்ணுற்ற ஜவஹர்லால் நேரு கூறினாராம், ""இந்த அளவுக்கு மக்களுடைய பாசமும் செல்வாக்கும் பெரோஸýக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியாது'' என்று. ஒரு மனிதனின் பெருமை அவன் மறைந்த பிறகுதான் அவனுடைய நெருங்கிய உறவினர்களுக்கே கூடத் தெரியவருகிறது.

பெரோஸ் காந்தி பிறந்த நாள் 1912 செப்டம்பர் 12; அவரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு 2012-இல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அவசியம் தற்காலக் காங்கிரஸ் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லை என்றாலும், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்புத் தரும் சட்டத்தை உருவாக்கியவருக்கு நூற்றாண்டு விழா எடுக்காமற் போனாலும், தனிப்பட்ட முறையில் செய்தித் துறையும் வாசகர் வட்டங்களும் அவரை நினைவில் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

பிரதமர் நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ஊழல் பெருச்சாளிகளைத் தண்டிக்க, தமது பதவியை முழுமையாகப் பயன்படுத்தினார். அது 1950-60 வரை இருந்த குடும்ப அரசியல் நிலவரம். தற்பொழுதைய காங்கிரஸ் அரசியல் பாரம்பரியத்தில், பிரதமர் பதவிக்கும் மேலாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துவதுடன், ""வதேரா மீது நடத்தப்படும் தாக்குதல் காங்கிரஸ் மீது போடப்படும் தாக்குதல்'' என்கிறார்.

என்ன கொடுமை இது? ""வதேரா என்றால் காங்கிரஸ் கட்சி'' என்று ஆகிவிட்டது! நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக் கொதித்து எழ பெரோஸ் காந்தி உயிருடன் இல்லை!

(பின்குறிப்பு - நரசிம்ம ராவ் பிணத்தைக்கூட சரியாக எரிக்காமல் முறைப்படி மரியாதை செய்ய விடாமல் அனாதை போல அலையவிட்டார்கள். சரி அவர் உங்கள் குடும்பமில்லை. பெரோஸ் பிறந்த தினம் இறந்த தினமாவது கொண்டாடுங்க ராகுல் அவர்களே.)


ஜுலை 2020 கொரானா கால நினைவுகள்


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது அனைத்தும் சாம்பல் ஆகப் போகிறது...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஃபெரோஸ் காந்தி பற்றி இவ்வளவு தகவல்கள் உள்ளதா. இந்திரா காந்தியின் கணவர் என்ப்தைத் தவிர வேறு எதுவும் எங்களைப்போன்றவர்களுக்கு தெரியாது.எதிர்க் கட்சிகள்கூட இவரைப் பற்றி பேசியதில்லையே. வரலாறு எவ்வளவு எளிதாக மறைக்கப் பட்டு விடுகிறது.

ஸ்ரீராம். said...

பொதுநலம் முற்றிலும் மறைந்து சுயநலங்கள் பேயாட்டம் ஆடும் காலம் இது. இது காங்கிரஸுக்கு மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஜோதிஜி said...

தல முதலில் டார்லிங் அழைத்து திருமணம் செய்யச் சொல்லுங்களேன். வாடிப்பட்டி பக்கம் ஒரு நல்ல கருத்த பொண்ணு இருக்கு. பேசுறீங்களா?

ஜோதிஜி said...

என்னுடைய அரசியல் வரலாறு புத்தகம் வெளிவந்த பின்பு படிக்கவும். பைத்தியமே பிடித்து விடும். அரசியல்வாதிகளை நினைத்து அல்ல. நம் தமிழக மக்களின் அறியாமை நினைத்து.

ஜோதிஜி said...

அருமை அருமை ராம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கட்டுரை ஜி. நல்ல பல தலைவர்களை இழந்திருக்கிறது காங்கிரஸ். இப்போது மட்டுமல்ல! முன்பும்.