Thursday, July 02, 2020

செங்கோட்டையனும் நம் கல்வித்துறையும்

அன்புள்ள செங்கோட்டையன் அவர்களுக்கு

நீங்கள் ஒவ்வொரு முறையும் கோபி வரும் போது கட்டாயம் நம்பியூரில் இருந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நான் அறிந்ததே. நீங்கள் தான் தமிழகத்தின் கல்வி அமைச்சர் என்பதனையும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சமீப காலமாக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.


நீங்கள் ஒவ்வொரு பேட்டியின் போது "அம்மா அரசு" "முதல்வரிடம் கேட்டு முடிவெடுத்து அறிவிக்கப்படும்" என்ற கணம் பொருந்திய வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உங்களின் தெளிவான அரசியல் நிலைப்பாட்டினை நான் புரிந்தே வைத்துள்ளேன்.

நேற்று நீங்கள் கொடுத்த பேட்டியில் இரண்டு விசயங்களை மகிழ்ச்சியாக அறிவித்து இருந்தீர்கள்.

இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பியாகிவிட்டது என்று சொன்னதோடு கூடவே நச்சென்று ஒரு வாசகத்தையும் சொல்லியிருந்தீர்கள்.

எப்போது பள்ளி திறக்கப்படும் என்பது இப்படி முடிவு செய்ய முடியாது என்பதனை ஆணித்தரமாகச் சொன்னதைப் பார்த்து மிரண்டு போய்விட்டேன்.
பிறகெதற்கு இப்போது அவசரம் அவசரமாகப் புத்தகங்கள் என்று மனதிற்குள் தோன்றியது.

அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்படும் என்பதனையும் சொன்ன நீங்கள் புதிய பாடத்திட்டத்தில் கொரானா காரணமாகக் குறுகிய கால நிலையில் உள்ள பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதா? இல்லை பழைய பாடத்திட்டமா? என்பதனை சொல்லாமல் இருந்த காரணத்தையும் நான் புரிந்தே வைத்துள்ளேன்.

தனியார் பள்ளிக்கூடம் பெற்றோர்களிடம் பள்ளிக்கட்டணம் வாங்கக்கூடாது என்று சொன்ன நீங்கள் அடுத்த பேட்டியில் அது நீதிமன்றத்தில் உள்ளது? அது குறித்து இப்போது நான் பேசக்கூடாது என்று அழகாகப் பேசும் உங்களை நான் மிகவும் விரும்புகிறேன். இப்போது வாங்கும் காசுக்கு, வாங்கப் போகும் பணத்திற்கு ஆன்லைன் வழியாகத் தனியார் பள்ளிக்கூடங்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்த ஆண்டு புத்தகத்தை அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவர்களின் ஒவ்வொருவர் வீட்டுக்கும் கொண்டு போய் கொடுக்க வழிவகை செய்யப்படும் என்பது ஆலோசனையில் உள்ளது என்பதனைக் கேட்டு நெகிழ்ந்து போய்விட்டேன்.

அதாவது அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் லட்சம் லட்சமாகச் சம்பளம் தெண்டமாக வாங்கிக் கொண்டு சும்மா தானே இருக்கின்றார்கள்? இந்த வேலையாவது செய்யட்டுமே என்று எண்ணம் இதற்குப் பின்னால் இருக்காது என்றே நான் நம்புகிறேன்.

சரி, வீட்டுக்கே சென்று கொடுத்தாலும் குழந்தைகள் இப்போது முதலே புதிய பாடத்திட்டத்தின் பாடங்களைப் படிக்கத் தொடங்க வேண்டுமா? நவம்பர் டிசம்பரில் தமிழகப் பள்ளிக்கூடங்கள் திறக்கும் பட்சத்தில் அடுத்த ஐந்து மாதங்களில் எப்படிப் பாடங்களை முடிக்க முடியும்? அதற்கு ஏதேனும் அம்மா அரசு வழிவகை வைத்துள்ளதா? என்பதனை நீங்கள் இப்போது சொல்லாவிட்டாலும் நான் யூகித்தே வைத்துள்ளேன். காரணம் காரியம் இல்லாமல் நீங்கள் வார்த்தைகளை வீணடிப்பது இல்லை. சரிதானே?

ஆன்லைன் வகுப்பு தேவையா? தேவையில்லை? அரசு பள்ளிக்கூட மாணவர்களின் கதியென்ன? போன்ற எதையும் அம்மா அரசு இதுவரைக்கும் தெரிவிக்கவில்லை என்பதனையும் நீங்கள் கொரானா காலம் என்பதால் விவசாயி எடப்பாடி அய்யா அவர்களுடன் உரையாட நேரம் இல்லாததையும் நான் புரிந்தே வைத்துள்ளேன்.

ஆல் பாஸ் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் மதிப்பெண்கள் பட்டியல் குறித்து நீங்கள் ஏதும் சொல்லவில்லை என்பதற்காக நீங்கள் உழைக்க வில்லை என்று எடுத்துக் கொள்ள மாட்டேன். மதிப்பெண்களுக்குப் பதிலாக அனைவரும் இவ்வாண்டு கிரேடு வழங்கப்படும் என்பதனை மிகவும் ரகசியமாக அம்மா அரசு வைத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொன்னதை நான் உங்களிடம் சொல்லமாட்டேன். தனியார் பள்ளிக்கூடங்கள் இதன் மூலம் பெரிய தொகையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நீங்கள் கவனிக்கவில்லை. நானும் உங்களுக்குச் சொல்ல விரும்பவில்லை.

நீங்கள் நேற்று அறிவித்தபடி புதிய பாடத்தின்படி பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்துத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப் புத்தகங்கள் அனைத்தும் இணையத்தில் நீங்க சொன்ன முகவரியில் இருக்கின்றதா? என்று சோதித்துப் பார்த்தோம்.

கூடவே E learning மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி ஒவ்வொரு பாடத்தையும் வலையேற்றி உள்ளோம் என்பதனையும் அம்மா அரசு சார்பாக நீங்கள் அறிவித்த போது மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்த போது வடிவேலும் அர்ஜுன் ம் குற்றவாளியைத் தப்ப விட்டு கதவைத் திறந்து பார்த்தால் பொட்டல் வெளியாகத் தெரியுமே அது போலத்தான் எதை அமுக்கினாலும் தெரிந்தது.

எதுவும் வலையேற்ற வில்லை என்பது உங்கள் குற்றமல்ல. கடமையின் கண்ணாக இருந்தவர்கள் கொரானா காலத்தில் சமூக இடைவெளியே எவ்வாறு கடைப்பிடிப்பது என்ற வலைக்காட்சியை மட்டும் வலையேற்றி உள்ளனர். அதாவது அமைச்சர் பேட்டி கொடுப்பதை நம்பி இந்தப் பக்கமெல்லாம் வந்து விடாதீர்கள்? என்பது போலவே உங்கள் ஈ லேர்னிங் உள்ளது.

கோவை கதிர் தொழில்நுட்பக் கல்லூரியில் இருக்கும் உங்கள் மகன் கதிர் அவர்களிடம் சொல்லி அவ்வப்போது இது போன்ற தளங்களைச் சோதித்து உங்களுக்குத் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அதிகாரிகள் உங்களை ஏமாற்றக்கூடும். அதற்குப் பிறகு இது போன்ற ஆக்கப் பூர்வத் தகவல்களைப் பேட்டியாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவும்.

நன்றி.

இப்படிக்கு

நம்பிக்கெட்டோம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சார்பாக.

7 comments:

Rathnavel Natarajan said...

செங்கோட்டையனும் நம் கல்வித்துறையும் - இன்றைய தமிழக கல்வித்துறையின் தடுமாறல்கள், இதனால் தமிழக மாணவச் செல்வங்கள் படப்போகும் சிரமங்கள் அனைத்தையும் விரிவாக, மனம் நொந்து எழுதப்பட்ட கட்டுரை. நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

திண்டுக்கல் தனபாலன் said...

E learning உட்பட பலவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றையும் உங்கள் பாணியில் சொன்னது அருமை... பதிவில் உள்ள கேள்விகள் சிந்திக்கவேண்டியவை... பதில்கள் = என்ன நடக்கும் என்பது தான் தெரியவில்லை...

நம்பத் தகுந்த வட்டாரங்கள் உங்களுக்கு பெருகி விட்டது குறித்து மகிழ்ச்சி அண்ணே...

வெங்கட் நாகராஜ் said...

பதிலில்லா கேள்விகள்..... குழந்தைகளின் இந்த வருட கல்வி மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

மிகுந்த கோபமான வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கி எழுத வேண்டியதாக உள்ளது.

ஜோதிஜி said...

இதுவும் கடந்து போகும்.

Unknown said...

தமிழகமும்,தமிழ்நாட்டு மக்களும் இன்னும் எத்தனை காலம் ஏமாந்து கொண்டிருப்பார்கள் என தெரியவில்லை.