Thursday, March 12, 2020

கடன் பட்டார் நெஞ்சம் போல...


பிஎஸ்என்எல் விவகாரம் குறித்து எழுதும் போதெல்லாம் வலையுலக பொருளாதார முதலாளித்துவ அறிஞர் மற்றும் அங்காளி பங்காளிகள் அனைவரும் தவறாமல் பின்வரும் விசயங்களைக் குறிப்பிட்டு வாதிடுகின்றனர்.

தனியார் நிறுவனங்களில் ஆட்கள் குறைவு. சம்பளம் குறைவு.

சரியான நிர்வாகம். சரியான கட்டமைப்பு,

அழகான சந்தைப்படுத்துதல், போட்டிச் சூழலைக் கையாளுதல்

என்று பலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் தான் இந்தியர்கள் அனைவரும் இன்று தடையற்று 24 மணி நேரமும் பேசு.. பேசு... பேசிக்கொண்டேயிரு என்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கிய மக்களை இடைவெளி தூரமின்றி ஒன்றிணைத்துள்ளனர் என்கிறார்கள்.




ஏர்டெல் விளம்பரங்களில் இளம் பெண்மணி புஃல் புட்டாமா போட்டு கடலுக்கு நடுவே நின்றபடி இங்கேயும் எடுக்கிறது. இன்னமும் நடுக்கடலுக்குப் போனாலும் கூடப் பேச முடியும் என்பார். இதே போல ஒவ்வொரு தனியார் நிறுவனங்களும் கதையளப்பதில் பாரபட்சமின்றி மக்களை மயக்கி பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஏன் இன்னமும் அரசாங்கம் மூடாமல் வைத்துள்ளார்கள் என்று அரும்பெரும் கருத்தினை எடுத்து இயம்புவதைத் தமிழ் கூறும் நல்லுலக அறிந்த கதை தான்.

சரி லாபத்தில் நல்ல கட்டமைப்பில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எங்கே சறுக்கினார்கள்? என்ன காரணம்? அறிந்தவர்கள், புரிந்தவர்கள் என்னைப் போன்ற சின்னப் பையன்களுக்கு எடுத்துச் சொன்னால் வசதியாக இருக்குமே?

வருடந்தோறும் அரசுக்குக் கட்ட வேண்டிய எந்தத் தொகையையும் கட்டுவதில்லை.

பிஎஸ்என்எல் உருவாக்கியுள்ள கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேல் மட்டத்தில் உள்ள அதிகாரவர்க்கத்தினரை தங்கள் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு அவ்வப்போது காரியம் சாதித்தும் கொள்கின்றார்கள்.

காசைக் கேட்டால் கதவைச் சார்த்திக் கொள்கின்றார்களே? ஏன்? தொழில் நடக்கின்றதா? லாபம் உள்ளதா? வரும் லாபத்தை என்ன செய்கின்றார்கள். இவர்கள் நட்டத்திற்கும் மோடி தான் காரணமா? இல்லை எல்லோரும் கூவும் பொருளாதார மந்தமா? இந்தியா முழுக்க பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். பேசிக்கொண்டே தானே இருக்கிறார்கள்?

"நாங்கள் கஷ்டப்படுகின்றோம். எங்களிடம் ஒன்றுமே இல்லை" என்றார்கள். உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற இழுத்தடித்தார்கள். நீதிமான்கள் கண்டிப்புடன் சொல்லி "ஒழுங்கு மரியாதையாக கட்டவில்லை என்றால் ஜெயில் தான்" என்றார்கள். கட்டாயம் அடுத்த வருடம் நீங்கள் கட்டியாக வேண்டும் என்றனர்.

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை 2020 ஜனவரி 23 அன்று செலுத்தியிருக்க வேண்டும். ஏர்டெல் செலுத்த வேண்டிய தொகை 35, 585 கோடி. ஆனால் கழுத்தில் கை வைத்து மிரட்டிய பின்பு தற்போது செலுத்திய தொகை 10,000 கோடி.

ஐடியா மற்றும் வேடா போன் என்று சேர்ந்த பங்காளிகள் கட்ட வேண்டிய தொகை 53,038 ஆனால் இப்போது செலுத்திய தொகை 2,500 கோடி. மேலும் 1000 கோடி ரூபாயை வருகின்ற 17 ந் தேதி செலுத்துகின்றோம் என்று சொல்லி உள்ளனர்.

(இதில் அலைக்கற்றை பயன்படுத்திய தொகை மற்றும் உரிமக் கட்டணம் இரண்டும் சேர்ந்தது)

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இதே பஞ்சாயத்து நடந்தது. மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சில வருடங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் குறித்து பெருமிதமாகப் பேசினார். இப்போது அவரும் அமைதியாகி விட்டார். உச்ச நீதிமன்றம் தலையிட்டவுடன் இவர்களை இனி நம்மால் காப்பாற்ற முடியாது என்று வாயில் பப்பிள் கம் போட்டு மென்று கொண்டிருக்கிறார். நீதிமான் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பார்த்து கதறிவிட்டார். "இங்கே சட்டம் என்பது உள்ளதா? இல்லையா? அரசு செயல்படுகின்றதா? நாங்கள் இங்கே பணிபுரியத்தான் வேண்டுமா? என்று கூப்பாடு போட்டு விட்டார். "கட்டிவிட்டு மறு வேலையைப் பார்?" என்று சொன்னதும் தான் அசைந்து கொடுத்துள்ளனர்.

வராக்கடன் என்கிற ரீதியில் எப்போதும் போல அரசு இதனையும் காந்தி கணக்கில் எழுதிவிடும் என்று காத்இருந்தார்கள்.  உச்ச நீதிமன்றம் ஆப்பு அடித்து விட்டது.  இப்போது ஏர்டெல் பாதிக் கட்டியுள்ளது.  ஐடியா, வேடா போன் கொஞ்சம் கட்டியுள்ளது. இவர்கள் ஜியோ வை எதிர்த்து சந்தையில் நிற்பார்களா? என்றே தெரியவில்லை.

நண்பர்களிடம் நான் எப்போதும் சொல்வதுண்டு.  தனியார் நிறுவனங்கள் நம் நாட்டுக்கு அவசியம் தேவை.  அதே சமயத்தில் பொதுத்துறை நிறுவனங்களும் தேவை.  முக்கியமாக தனியார் நிறுவனங்கள் வளர்ந்த நாடுகள் போல வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து லாபம் சம்பாரிக்க வேண்டும். அரசு சட்ட விதிகளை அப்படியே பின்பற்ற வேண்டும்.  ஆனால் இங்கே அதிகாரிகள் ஒரு பக்கம் தின்கிறார்கள்.  மறுபக்கம் அரசியல்வாதிகள் தின்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் மக்களிடம் சம்பாரித்து அரசுக்கு கட்ட வேண்டிய எதையும் கட்டுவதில்லை.  மாறாக எலும்புத்துண்டுகளை அவ்வப்போது போட்டு விட்டு பட்டை நாமம் சாத்துகின்றார்கள்.  காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக இது தான் நடந்தது.  பாஜக ஆட்சியிலும் இதே தான் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனியார் தொலைத் தொடர்புகளைப் பயன்படுத்தும் என்னருமை சென்னை நண்பர்கள் கஞ்சா கருப்பு புளியமரத்தின் உச்சியில் நின்று கொண்டு அல்லோ அல்லோ அல்லல்லோ என்று கதறுவது கண்டு வருத்தமாக உள்ளது.

வாங்க எங்கள் BSNL பக்கம்.

தேச பக்தராக மாறுங்களேன்.

டெல்லியில் நடந்த கலவரம்?

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

ஏர்டெல் - கடல் நடுவிலும் பேசலாம்! ஹாஹா நல்ல ஏமாற்று விளம்பரம்! அந்தமான் தீவுகளில் பயணித்தபோதும், ஹிமாச்சலப் பயணங்களின் போதும் பல இடங்களில் கைகொடுத்தது பி.எஸ்.என்.எல். இணைப்பு தான்.