Sunday, October 21, 2012

அத்தனைக்கும் ஆசைப்படு



கல்லூரிக்கு வெளியே சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.  மாலை நான்கு மணி.   கல்லூரியில் வகுப்புகள் முடிந்து பெரும்பாலான மாணவர்கள் வெளியே சென்று விட்டனர்.  ஒரு வசதியான வாகனத்தில் வந்திருந்த ஒரு பெரியவருடன் ஒரு மாணவர் நின்று கொண்டுருந்தார்.

நணபர் அவர்களுடன் உரையாடிவிட்டு என்னை அனுப்ப மற்றொருவரை ஏற்பாடு செய்து இருந்தார்.  கல்லூரியை விட்டு வெளியே நடந்து வரும் போது அவர்கள் பேசிக் கொண்டுருந்ததை மனதில் அசைபோட்டுக் கொண்டே வந்தேன்.

அங்கே இருந்தவர் நண்பரிடம் உறுதியாகச் சொன்னது தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும். அதிர்ச்சியாகவும் இருந்தது.

“இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது.  மகனை தொடர்ந்து கல்லூரிக்கு வர அனுமதியுங்கள்.  அவர் பாடங்களில் தேர்ச்சியடைந்து வருவதை விட கல்லூரியில் மூன்று வருடங்கள் படித்தான் எனபது தான் எங்களுக்கு முக்கியம். எங்கள் தொழிலைப் பார்த்தாலே போதுமானது” என்றார்

நண்பரோ விடாப்பிடியாக இருந்தார்.

“இவன் ஒருவனே இங்கிருக்கும் அத்தனை பேர்களையும் கெடுத்து விடுவான்.  உங்கள் வசதியும் பணமும் இவனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட கல்லூரியில் எந்த அளவுக்கு சீர்கேட்டை உருவாக்க வேண்டுமோ அந்த அளவுக்கு உருவாக்கிக் கொண்டுருக்கின்றான். இவனை மேற்கொண்டு இங்கே வைத்திருப்பது எங்கள் கல்லூரிக்குத்தான் பிரசச்னை.  நல்லபடியாக இவனின் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்று விடுங்க”. என்றார்.

பிரச்சனையின் மொத்த ரூபமும் புரிந்தது.

எப்போதும் போல பணக்கார வீட்டு மாணவர்கள் செய்யும் சில்மிஷ விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தவனால் உருவான பிரச்சனை இது.

இன்றைய இந்தியாவில் திடீர் பணக்காரர்கள் நிறைய பேர்கள் உருவாகி உள்ளனர். எப்படி இவர் குறுகிய காலத்திற்குள் சம்பாரித்தார் என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை. ஆனால் அவர் வசதியாகி வாழ்க்கை சிறப்பாக வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்ற அங்கீகாரம் தான் தேவையாக இருக்கிறது. அதற்குத் தான் ஒவ்வொருவரும் முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு தேவைப்படும் வசதிகள் என்பது இன்றைய சூழ்நிலையில் இயல்பானதாகி விட்டது.

இன்றைய சமூகத்தில் ஏழை என்பதன் அர்த்தமும் வேறு விதமாக உள்ளது.

50 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஏழை என்பவன் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி  எவர் தயவிலோ அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தவன். அவனால் சுயமாக யோசிக்க முடியாத அளவுக்கு அவன் மேல் பல பாராங்கள் சுமத்தப்பட்டு இருந்தது.  ஆனால் இன்று அடிமை என்பது சற்று மாறுதலாகி உள்ளது.  ஆசைகள் தான் இன்றைய வாழ்க்கையில்  உங்களை அடிமையாக வைத்துள்ளது. உங்களுக்கு ஆசை அளவானதாக இருந்தால் நீங்கள் யாருக்கும் அடிமையில்லை.  அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்.

ஒப்பீட்டளவில் இன்று அடிமைகளின் தன்மை மாறியுள்ளது. வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் சமூக வாழ்க்கை சற்று மேம்பட்டுத்தான் இருக்கிறது.  அவரவர் பார்வையில் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொள்ள முடியும்.

இன்றும் தமிழ்நாட்டில் செங்கல் சூளை போன்ற இடங்களில் கொத்தடிமை முறை இருந்த போதிலும் அது நீடித்து செயல்பட முடிவதில்லை. பலரின் பயத்தின் தன்மையில் தான் இந்த அடிமைகளை உருவாக்க முடிகின்றது. தவிர்க்க முடியாத பொருளாதார நிர்ப்பந்தம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் உழைக்கத் தயாராக இருந்தால் எந்த இடத்திலும் பிழைப்பதற்கான வழி கொட்டிக் கிடக்கின்றது. பழைய காலத்தில் நடந்த பஞ்சங்கள் எதுவும் இன்றைய சூழ்நிலையில் இல்லை. எளிதாக மீண்டு வந்து முடிகின்றது.  வீணாகிக் கொண்டு இருக்கும் தானியங்களை சேமித்தாலே போதுமானதாக இருக்கின்றது.  ஊழல் என்பது தேவைக்காக என்பதைத் தாண்டி அதுவொரு கௌரவம் சார்ந்தாக மாறியுள்ளது.

முறையற்ற செயல்பாடுகள் எதுவும் இப்போது சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட முடிவதில்லை. அவரவர் வளைத்தாலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுருந்தாலும் ஏதோவொரு சமயத்தில் செல்வாக்கு இழந்து விடுகின்றனர். காரணம் ஊடகம். இன்று உள்ள நவீன   வசதிகளால் கிடைத்த ஊடகமென்பது  ஒவ்வொரு நொடியும் உங்களை கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது.

உங்களின் தேவைகளை புரிந்து கொள்கின்றது. தேவைகளை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்துகின்றது. கனவு காணுங்கள் என்று சொல்கின்றது. ஆசைகளை அதிகமாக்கி உங்களை ஆவலாய் பறக்க வைக்கின்றது. அடைகாக்கும் கனவுகளை குஞ்சாக மாறுவதற்குள் அதை நஞ்சாக்கவும் மாற்றுகின்றது.

இங்கு எதுவும் சாத்தியம். ஒரு வகையில் தவறு செய்பவர்களை  ஆதரிப்பது முதல் அவர்களை யோசிக்க வைப்பதும் வரைக்கும் அத்தனையும் சாத்தியம். அவர்களை கடைசியாக தலை குப்புற கவிழ வைத்துக் கொண்டுருப்பதும் இன்றைய ஊடக சுதந்திரமே..

ஊடகங்கள் தான் இன்று நல்லதுக்கும் கெட்டதுக்கும் உண்டான அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு வினாடியும் நம் முன்னால் துப்பிக் கொண்டே இருக்கின்றது. வீட்டில் இருக்கும் வசதிகள் ஒவ்வொருவரின்  மனதையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அவரவர் எல்லைகளை விரிந்தும் சுருங்கியும் போய் விடுகின்றது. தப்பில்லை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற தைரியத்தை தருகின்றது.

தைரியங்கள் அங்கீகாரத்தை பெறும் போது அதுவே மற்றவர்களுக்கு வழியைக் காட்டி விடுகின்றது.


பெற்றோர்களுக்கு சவால்கள் தான் வாழ்க்கையாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஓயாத போராட்டத்தை உருவாக்கும் நாளாக இருக்கின்றது. வறுமையைத் துரத்த வேண்டும் என்பதை விட வாழ்க்கைக்கு தேவைப்படும் வசதிகளை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருக்கின்றது. செய்து கொண்டுருக்கும் வேலைகளுடன் வேறு சில தொழிலையும் செய்ய வைக்கின்றது.

தொழிலை கவனிக்கும் நேரத்தில் தங்களின் வாரிசுகளின் செயல்பாடுகளை கவனிக்க மறந்து விடுகிறார்கள். புற்றுநோயைப் போல வளர்ந்த மனம் நிலைகொள்ளாமல் தவிக்கத் தொடங்குகின்றது. கேள்விகள் அதிகமாக ஒவ்வொரு பழக்கமாக கற்றுக் கொண்டு அடுத்தடுத்து என்று தாவத் தொடங்கி விடுகின்றது.  மிக விரைவில் படிப்பைத் தவிர அத்தனையும் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

பேசிப்பழக நேரம் இருப்பதில்லை.  பேசினாலும் முடிவு தெரிவதில்லை.  தலைமுறை இடைவெளி என்பது நாளுக்கு நாள் அதிகமாக ஒவ்வொருவரின் மனமும் தனித்தீவாக வாழத் தொடங்கி அதுவே இறுதிவரையிலும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் போய் நின்று விடுகின்றது.

குடும்ப அக்கறை என்பது குடும்ப கௌரவம் என்பதாக மாறி பணத்தின் மீது உள்ள வெறி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.  பணம் இருந்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற எண்ணம் உருவாக அதைத் தவிர வேறு எது குறித்தும் சிந்திக்க நேரம் இருப்பதில்லை.

பணமே கதி பணமே குறி பணமே வாழ்க்கை என்ற வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் உரிய அங்கீகாரத்தை பெற்று விட முடிகின்றது.

தவறுகளின் அளவுகோல் என்பது அவரவர் வைத்துள்ள வசதிகளை வைத்தே இங்கே தீர்மானிக்கப்படுகின்றது.

அது பெரிய இடத்து சமாச்சாரம் என்று பூசி முழுகப்படுகின்றது. இது தான் இன்றைய மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றது.

வாழ்க்கைக்கு தேவைப்படும் கல்வி என்பது மாறி கல்விக்குண்டான வாழ்க்கை என்பது வரைக்கும் வளர்ந்துள்ளோம்.  இது படித்தால் இப்படி ஆகலாம் என்ற கனவுகள் வளர்க்கப்பட்டு அதன் பாதையில் தான் பெரும்பாலனோரின் பயணம் இருக்கிறது. அளவோடு ஆசைப்படு என்பது மாறி அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக தத்துவம் புகட்டப்படுகின்றது.

அளவற்ற திறமையில் உள்ள நம்பிக்கை சுற்றியுள்ளவர்கள் மேல் கவனம் வைக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை மாறிவிடுகின்றது.

இதுவே பலசமயம் பலவிதமான நெருக்கடிகளை உருவாக்குகின்றது.  ஒவ்வொரு நெருக்கடிகளும் ஓயாத மனப்போராட்டங்களை உருவாக்குகின்றது.  ஆனால் இதை அடைய இப்படி வாழலாம் என்பதை இயல்பாக எடுத்துக் கொண்டாகி விட்டது.

நண்பருடன் பேசிக் கொண்டுருந்தேன்.

"எப்படி உங்க குழந்தைகளை இங்கே படிக்க வைக்கீறீங்க?  வேற பள்ளியில் சேர்க்கலாமே?" என்றார்,

ஏன்?  என்றேன்.

"என்னத்த சொல்றது.  நாலு வருஷம் படிக்கிறார்கள். இன்னமும் தெளிவாக இங்கீலீஷ் பேச தெரியல."

சிரித்துக் கொண்டேன்.

சொன்னவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதை விட வாசிக்கக் கூட தெரியாது.  ஆனால் வசதிகளை எப்படியே பெருக்கிக் கொண்டார்.  கையில் பணம் இருப்பதால் குழந்தைகளின் கல்வி என்பதை தன்னுடைய கௌரவமாக பார்க்கின்றார்.

வேறு பள்ளிக்கு மாற்றினார்.

கடைசியாக சந்தித்த போது....

"இரண்டு குழந்தைகளையும் ஏற்காடு கொடைக்கானல் பக்கம் கொண்டு போய் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன்" என்றார்.

அவரே காரணத்தையும் சொன்னார்..

"மனைவிக்கு படிப்பறிவு இல்லை.  வீட்டில் அவர்களால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்க சிரமாக இருக்கிறது.  ஹாஸ்டல் என்றால் அங்கேயே பார்த்துக் கொண்டு விடுவார்கள்" என்றார்.

குழந்தைகளின் மேல் நாம் வைக்கும் பாசம் என்பது இப்போது அக்கறை என்பதாக மாறியுள்ளது.  அந்த அக்கறைக்குப் பின்னால் உள்ளதை கூர்ந்து கவனித்தால் அது அறியைமை என்று கூட சொல்லலாம்.

இது தான் இன்றைய சமூகம்

"என்னோட பையன் ஏற்காடு காண்வெண்ட்டில் படிக்கிறான்.  உங்க பையன் இங்கே தான் படிக்கிறானா? " என்று கேள்விக் குறியோடு கேட்க வைக்கின்றது.

வாழ்க்கையில் ஏக்கமும், பெருமூச்சும் இருக்கும் போது மனதில் இருக்கும் கனவுகளுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இயல்பாகவே தோன்றுகின்றது.

உழைக்க விரும்பாத மனங்களுக்கு குறுக்குப்புத்தியும் உருவாகத் தொடங்கி விடுகின்றது.


சமீபத்தில் பல்லடத்திற்கு அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியை செய்திதாளில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

எம்.பி,ஏ படித்த இரண்டு மாணவர்கள் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார்கள். சென்னையில் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்துள்ளனர்.  ஒவ்வொரு இடமாகச் சென்று அந்த நிறுவனத்தின் பொருட்களை விற்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.

குறிப்பிட்ட கடைகளில் அந்த பொருட்களைப் பற்றி விவரித்து சொல்லி அதற்கான ஒப்பந்தங்களை பெற்று விட்டால் வேறொரு குழுவினர் வந்து அந்த பொருட்களை அந்த குறிப்பிட்ட கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.

ஆனால் இவர்களால் அலைய முடியவில்லை.  மனம் குறுக்கே திரும்பியது.

வேலையை விட்டு வெளியே வந்தனர்.  வந்ததோடு மட்டுமல்லாது அந்தகுறிப்பிட்ட நிறுவனத்தின வண்டி எந்தப் பாதையில் வரும்? எப்போது வரும் என்பதை கணக்கில் வைத்துக் கொண்டு கொள்ளையடித்து அந்த பொருட்களை தாங்கள் திட்டமிட்டு வைத்துள்ள இடத்திற்கு கொண்டு வர நினைத்தனர்.

மாட்டிக் கொண்டனர்.

இன்றைய கல்வி மட்டும் இது போன்ற வாழ்க்கையை கற்றுக் கொடுக்கவில்லை. இது தான் சரியான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டுருக்கும் நாமும் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றோம்.

குடிப்பழக்கத்தில்  மாட்டிக்கொள்ளும் இளையர்களும், அடிப்படை சமூக அக்கறையில்லாமல், வாழ்க்கைக்கு அறம் என்பது தேவையில்லை என்பதாக வளர்த்தெடுக்கும் கல்வியும் உள்ள மாணவர்களை நம்பி எதிர்கால இந்தியா வல்லரசாக மாறப் போகின்றது. இந்த மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவை வடிவமைக்கப் போகின்றார்கள்.

நாம் கற்றுக் கொள்ளப் போகும் பாடங்கள் நம் முன்னால் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றது?

19 comments:

சிவக்குமார் said...

//அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்.// இது சரியான வரி

எந்த வேலைக்குப் போனாலும் ஆங்கில அறிவு மிக அடிப்படையானது. இப்போது கல்வி கற்று வேலை கிடைக்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாக ஆங்கிலப் போதாமை ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. பெற்றோர்கள் தமக்கு கிடைக்காத கல்வியை குழந்தைக்கு தந்து விடத் துடிக்கிறார்கள். இதில் அவர்கள் மீது எனக்கு விமர்சனமில்லை. என்னுடைய தனிப்பட வாழ்க்கையில் ஆங்கிலப் போதாமை என்னுடைய தோல்விக்குக் காரணம் என்பேன். அது என்னுடைய தவறு இல்லையெனின்னும் இன்று வரை என்னை உறுத்துகிறது. தோல்வி என்பது படிப்பில், வேலை தேடுவதில் என்று கொள்க. தமிழ்வழியில் கற்று பட்டம் பெற்று, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும் அதன் வேதனை.

சிபிஎஸ்சி குழைந்தகளுக்கு வீட்டில் ஒரு ஆள் இருந்தால்தான் கவனித்து அனுப்ப முடியும். 4 வது படிக்கும் குழந்தைக்கு ப்ரோஜக்ட், ரெகார்ட் நோட் என்று அலற வைக்கிறார்கள்.

மற்றபடி வாழ்க்கைக்கான கல்வியை பள்ளிக்கு வெளியே சமூகத்தில்தான் கற்றுக் கொள்ள வேண்டும். சமூகமோ பள்ளியை விட மோசமான பாடங்களே கற்பிக்கிறது. நுகர்வுப் பண்பாடு, பிறரைப் பார்த்து ஏங்குதல் இதெல்லாம் பணத்தை பெறுவதற்கு எதையும் செய்யத் தூண்டுகிறது.

ப.கந்தசாமி said...

காலமாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடிவதில்லை என்பதுதான் செய்தி.

Avargal Unmaigal said...

ஜோதிஜி உங்களின் பார்வையும் அனுபவங்களும் சிந்தனைகளும் அதை அனைத்தையும் எழுத்தாக்கி மற்றவர்களுக்கு பகிரும் உங்களை எப்படி பாராட்டுவது என்பது எனக்கே தெரியவில்லை உங்களை நான் குறை சொல்ல வேண்டுமானல் நீங்கள் பெரிய பதிவாக இடுகிறீர்கள் என்பதுதான் சிலர் பெரிய பதிவு இடுவார்கள் ஆனால் அதில் ஏதோ ஒரு பத்தியில்தான் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருப்பார்கள் ஆனால் உங்கள் பெரிய பதிவில் எல்லா பத்திகளும் மிக சிறந்த கருத்துக்களை சொல்லி செல்கின்றன

உங்கள் பதிவை பற்றி சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ஒரு பாக்ஸில் நமக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டுக்களை போட்டு எடுத்துக்கோ என்றால் எந்த ஸ்வீட்டை எடுத்து சுவைப்பது என்பதில் தடுமாற்றம் ஏற்படுவது மாதிரி உங்கள் பதிவில் எந்த பத்தியை எடுத்து சுவைத்து அசை போடுவது என்பதில் எனக்கு தடுமாற்றமே ஏற்படுகிறது


வாழ்த்துக்கள் ஜோதிஜி

ஜோதிஜி said...

நண்பரே ச்சும்மா ஒரு பாராட்டுக்கு அல்லது அறிமுகத்திற்கு என்று வலையுலகில் விமர்சனம் செய்வது என்பது இங்குள்ள நடைமுறை. நான் எந்த பதிவுக்குச் சென்றாலும், அது குறித்து என்றாலும் அதை உள்வாங்கி விட்டு ஒரு விமர்சனமாக கொடுப்பது தான் என் வழக்கம்.

இதில் விமர்சனம் செய்துள்ள மூத்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற பழனி கந்தசாமி பதிவுகளில் அது போன்ற நீண்ட விமர்சனமாக கொடுப்பது என் வாடிக்கை. என்னுடன் தொடர்பு கொண்ட ஒரு நண்பர் கோவி கண்ணன் பதிவில் நான் கொடுத்த விமர்சனத்தில் அளித்த வாழ்த்துகள் என்பது வாழ்க்கையை வாழ வைப்பதற்கே என்பதை சிலாகித்து என்னுடன் பேசினார்.

இங்கே (வலையுலகில்) கவனிப்பவர்கள் மிக அதிகம் பேர்கள். ஆனால் எவரும் எளிதில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதில் பல காரணங்கள் இருந்தாலும் ஆங்கில மொழி மூலம் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அத்தனை வெளிநாட்டு நண்பர்களும் தமிழிலில் எழுத சோம்பேறித்தனம் படுவது முக்கியமான காரணம். அதில் உள்ள முக்கியப் பிரச்சனை தமிழ் தட்டெழுத்து என்பதை நான் உணர்ந்து வைத்துள்ளேன். அதனால் விமர்சனம் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒரு சிலர் படித்தவுடன் தங்கள் அனுபவங்கள் எழுத்தோடு ஒன்றி வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சில இடங்களில் தங்கள் விமர்சனங்களை ஆங்கிலத்திலேயே கொடுத்து விடுவதுண்டு. அது அவர்களின் எண்ணங்களின் வடிகால். ஒரு விதமான ஆத்ம திருப்தி. என்னைத் தெரியாமலேயே என்னைப் போலவே நீயும் யோசித்து இருக்கிறாய் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

பாலகுமாரன் அல்லது உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளை படிக்கும் போது உங்கள் வாழ்க்கை சம்பவங்கள் போல அந்த கதாபாத்திரம் உரையாடல் வரும் போது உங்களுக்கு ஒரு விதமான ஆச்சரியம் வருமே? அது போலத்தான் வலைபதிவுகளும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பெரிது சிறிது என்பதை தற்போது நான் கணக்கில் எடுத்து தான் எழுதுகின்றேன். இந்த பதிவில் மொழிச் சிதைவை நம் தமிழ்நாட்டில் உருவாக்கி தொடங்கி வைத்த கலாநிதி மாறன் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்து தான் தொடங்கினேன். ஆனால் வேகத்தில் அது தேவையில்லாமல் கோர்வையாக இருந்த காரணத்தால் அதை உள்ளே கொண்டு வராமல் விட்டு விட்டேன்.

வாசிக்கும் போது உங்களுக்கு ஒரு சோர்வு வருகின்றது என்றால் அது எழுதுபவனின் தவறு. அதையும் மீறி அது அத்தனை பெரிதாக இருந்தாலும் ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தால் அதுவொரு சாதனை தான்.

வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை. என்னுடைய அனுபவங்களை கோர்வையாக வலைபதிவுகளை எழுதி வைக்க விரும்புகின்றேன். அவ்வளவுதான் என் நோக்கமும்.

அது பலருக்கு உதவியாக இருக்கும்பட்சத்தில் மகிழ்ச்சியே. பெரும்பாலும் என் பதிவில் புதிய புதிய நண்பர்கள் ஒவ்வொரு சமயத்திலும் வருவார்கள். வந்து கொண்டே இருக்கிறார்கள். இதில் முதல் விமர்சனமாக கொடுத்துள்ள தமிழானவன் விமர்சனத்தைப் பாருங்க. எந்த அளவுக்கு இந்த பதிவை உள்வாங்கி இருக்கிறார் என்பதே நமது எழுத்தின் வெற்றி தானே.

உங்கள் தெளிவான அக்கறைக்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

//அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்.//

அடுத்தவரை ஒப்பிட 'நினைப்பதே' பிரச்சனையின் ஆரம்ப வேர்... இதைப்பற்றி ஒரு பதிவில் என் அனுபவப்படி அலசி உள்ளேன்...

ஆங்கிலமோ, ஹிந்தியோ, எந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா....? என்றால் கிடையாது... எல்லாவற்றையும் தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... கற்க வைக்கிறோம்... கற்க வைக்கிறார்கள்... அப்படியானால் முதலில் தமிழில் முழு தேர்ச்சி பெற்று உள்ளோமா...? சந்தேகம் தான்... சரி, அது இருக்கட்டும்...

எந்த மொழியானால் என்ன..? ஐந்து மொழி கற்றுக் கொண்டால், அவர் ஐந்து பேருக்கு சமம்... உலகில் எந்த மூலைக்கும் செல்லலாம்-யாருடைய துணையுமின்றி....!

சர்க்கரை குறைப்பாடு : சமநிலையில் உள்ளது என்கிற நினைப்பில் (என்ன வேண்டுமானாலும் செய்யலாம்), பேராசையால் தவறுகள் செய்வதுண்டு... மிக அதிகம் ஆகும் வரை தெரிவதில்லை... திடீரென்று ஒரு நாள் செம அட்டாக்...!

சர்க்கரை குறைவானால்-தினம் தினம் அவர்களுக்கு மிக மிக மிக கஷ்டம்...

சர்க்கரை குறைப்பாடு = பணம்

நல்லதொரு அலசலுக்கு நன்றி...

ஜோதிஜி said...

தனபால் எனக்குத் தெரிந்தவரையில் இந்த முறை தான் மிக அழகான விமர்சனம் (வலையுலகில்) நான் பார்த்தவரைக்கும் தந்து இருக்கீங்க. இதே போல ஒவ்வொருவிமர்சனத்தையும் சற்று அலசி காயப் போட்டு விடுங்க. மக்கள் பீதியாகி விடுவாங்க. கூகுள் ப்ளஸ் சமாச்சாரம் போல இனி நடக்காது.

moe said...

i m from tirupur. i can relate to all the thing you write about.

Regarding your friend who wants to enroll his kids in kodai or Ooty.
They normally are first generation rich businessmen. who came up on their own.
They were never in to studies.Probably feared it and dropped out.
They have little or no idea about "How to learn" and what it means by learning?
Some of those educated also fall in to this.

Their intent is good.They want to give the best education possible to their kids.
Once they see that their son goes to a normal school like those middleclass kids and fails
in education, they think that the school is the problem and they have a way to fix it.
Since they had gotten everything fixed with money, they resort to something which can't be achievable
by those middleclass..
OOty or Kodai school education.
Also, they figured one thing in this that they can't help their kids with studies. It doesnt matter
if it's CBSE or stateboard, they can't and they won't. as it's time consuming and it's for 9-5'ers
with some subject knowledge.

There are easy way's like helping the kids to start reading (not text books).
Which we never do.

Not that our education system is great that one has to get a degree to be successful.
That's a different topic altogether.

Rathnavel Natarajan said...

திரு ஜோதிஜி அவர்களின் அருமையான பதிவு.
ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு - பெற்றோரின் கடமைகள்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.

தி.தமிழ் இளங்கோ said...

போலி கௌரவம், போலியான வாழ்க்கை இவற்றால் பேராசை கொண்ட மனிதர்களைப் பற்றி ஒரு அலசல் இந்த கட்டுரை.

குறும்பன் said...

நமக்கு தமிழ் ஒழுங்கா தெரியரதில்லை. ஊடகத் தமிழ் தான் தமிழ் என்றால் நமக்கு தமிழ் நன்றாக தெரியும் என்று கொள்ளலாம். அன்றாட வாழ்க்கைக்கு ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும் என்றால் சில நூறு சொற்கள் போதும். தி இண்டுவை மட்டும் வழக்கமா படிச்சா அவர்கள் சில சொற்களை தான் அதிகமா பயன்படுத்துவாங்க, இண்டியன் எக்சுபிரசில் வேறு சொற்கள் இருக்கும். இதுக்கு காரணம் அங்கு செய்தியை குறிப்பிட்ட நபரே எழுதுவார் அவர் குறிப்பிட்ட சொற்களையே அதிகம் பயன்படுத்துவார் (அது இயல்பானதே).எனக்கு தெரிந்து நிறைய கல்லூரிகளில் திறமை குறைந்தவர்களே ஆசிரியர்களாக உள்ளனர், வேற நல்ல (ஊதியம் அதிகம் கிடைக்கும்) வேலை கிடைக்கும் வரை ஆசிரியராக பணியாற்றுவோரே அதிகம். கற்பிப்பது தனி கலை.

ஜோதிஜி said...

குறும்பன் கற்பது என்பது காசாக்கும் கலை. நாலைந்து பட்ட படிப்புகள் பட்ட மேற்படிப்புகள் வாங்கிய பல பேர்கள் 5000 க்கு குறைவான சம்பளத்தில் தான் தங்கள் கற்றுக் கொடுக்கும் தொழிலை (ஆமாம் இப்போது இது தொழில் தான்) செய்து கொண்டு வருகிறார்கள்.

ஜோதிஜி said...



நீங்கள சொல்வது புரிகின்றது. கௌரவத்திற்காக ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்ற இடங்களில் படித்து விட்டு வரும் தங்கள் வாரிசுகளை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்து நிறுவனங்கள் அழிந்த கதை தான் திருப்பூரில் நடந்து கொண்டு இருப்பது. எதார்த்தம் தெரியாது. தொழில் தெரியாது. அதற்கு மேலே உழைக்கவும் விருப்பம் இருக்காது. கற்ற கல்வி சொகுசை கற்றுக் கொடுத்தது. தமிழ் மூலம் நிர்வாகம் நடத்த வேண்டும். அங்கு தான் பிரசச்னை தொடங்குகின்றது. ஒரு ஒப்பந்தம் வாங்கும் வரைக்கும் தான் வெளிநாட்டுக்காரன் தொடர்பு. அதை ஆடைகளாக உருவமாக்க உள்ளூர் மனிதர்களை வேலை வாங்கத் தெரிய வேண்டும். அது தான் இங்கே இவர்களுக்கு ஜீரோ.

ஹீரோ போல் இருந்த அத்தனை நிறுவனங்களும் அழிந்தது இப்படித்தான்.

கிரி said...

At the outset GOOD Article and explain the status of Today Education point of view by our Society (Particularly Parents). Present Parents are certain extent compelling their Children to fulfill their dreams & aspirations, for the sake of Society status which may not be correct, Bcoz Children has different Aim and wishes but no other go, since they depend upon them.

Degree and Certificates are just proof your education. But establishing yourself in Family / Friend Circle / Office all depends on your Attitude and Character. Moreover, Common Sense has the pivotal role to establish, bcoz it will tell you When / With Whom / What / How to establish yourself. But that is one kind of ART like Teaching. what can we do, it is not for all.

Regarding English Language, Yes that has the different perception in our society.everybody wants to learn but certain extent they could not. But very important language to learn. At the same time I am not at all having any aversion with TAMIL, bcoz TAMIL is my mother tongue, I could very well express my inner feeling thru TAMIL only, but If I come out of Tamilnadu very difficult only with Tamil,(Trust you also agree this since you have been travelling other States & Countries).

Most of your Articles, reflecting my thoughts and point of views. Great Works, Plz. keep the Good momentum.

NOTE: I too love & wish to register my comments in TAMIL, but due to challenge in Tamil Keyboard I could not, if any easy way of Tamil Typing pl. let me know.

ஜோதிஜி said...

நன்றி கிரி. மிகந்த அக்கறையுடன் உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து படித்துக் கொண்டு வருவதற்கு. கூகுள் இருக்கின்றது. தமிழ் தட்டெழுத்து அடிப்பது எப்படி என்று கேட்டுப் பாருங்க. அல்லது இ கலப்பை, என்.ஹெச்.எம். என்ற மென்பொருள் எல்லாம் இருக்கிறது. தமிழிலில் எழுதும் போது இன்னும் கூட உங்கள் எழுத்தின் கூர்மை மெருகேறும்.

செல்வநாயகி said...

///வாழ்க்கைக்கு அறம் என்பது தேவையில்லை என்பதாக வளர்த்தெடுக்கும் கல்வியும் உள்ள மாணவர்களை நம்பி ////

It took me into so many thoughts. Though time doesn`t permit me to write, I keep reading your posts. Thank you for your meaningful writings. I apologize for typing in english.

ஜோதிஜி said...

செல்வநாயகி

உங்கள் வாசிப்பும், உங்கள் அக்கறையின் பால் தாங்கள் தந்த விமர்சனமே போதுமானது. மிக்க நன்றி.

Unknown said...

// ஆங்கிலப் போதாமை என்னுடைய தோல்விக்குக் காரணம் என்பேன். //
தங்களின் அறியாமை என்றே எண்ணுகிறேன். ஆங்கில மொழிப் போதாமை என்பதல்ல உங்களின் குறை. கூச்ச உணர்வே குறை. எம்மொழியாக இருந்தாலும் கூச்சத்தை விட்டுவிட்டால் மொழி தானாக வந்துவிடும். மேலும் மற்ற மொழி தெரியாததால் தோல்வி என்பது ஏற்றுக் கொள்ள இயலாத காரணம். ஒன்று மொழியைக் பழகியிருக்க வேண்டும் பழக இயலா குறையிருப்பின் வேறு தொழிலில் வென்றிருக்க வேண்டும். நமக்கு என்ன வாய்ப்புகள் உள்ளதோ அவற்றை வைத்து முன்னேறுவதுதான் முன்னேற்றம். அது இல்லை இது இல்லை என்பது சாக்குப் போக்கு.

நான் கணினித் துறையில் பணியாற்றுகிறேன். தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. ஆனால் ஆங்கிலம் தெரிந்திருந்தால் அந்த நாடு போயிருப்பேன் இந்த நாடு போயிருப்பேன் என்று புலம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் என் குடும்ப சூழ்நிலையில் படித்ததே பெரியவிசயம். மேலும் கல்வி வேறு மொழி வேறு என்ற உண்மையை அறிந்ததால் இந்த ஏக்கம் இல்லை எனக்கு.

Unknown said...

ஒவ்வொரு குடும்பத்திலும் சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் குடும்ப விவகாரம் என்று கூறி விட்டுவிடுகிறோம். (தப்பித்துக் கொள்கிறோம்) ஆனால் அது சமூக சிக்கல் என்பதை உணர்வதில்லை. இன்றைய கால குடும்பச் சிக்கலை உருவாக்குவது சமூக அழுத்தங்களே என்பதை உணராமல் சமூகத்தை சீர்திருத்த முடியாது.

தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் காரணமாக இருப்பது நுகர்வு கலாசாரத்தின் விளைவுகள்.

கலாகுமரன் said...

ஆசைகள் தான் இன்றைய வாழ்க்கையில்  உங்களை அடிமையாக வைத்துள்ளது. உங்களுக்கு ஆசை அளவானதாக இருந்தால் நீங்கள் யாருக்கும் அடிமையில்லை. அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்........ உண்மை உண்மை