Tuesday, October 16, 2012

புத்தகங்களை நேசிக்காதீர்இந்த முறை புதுக்கோட்டைக்கு சென்ற போது எனக்காக பல கடமைகள் வரிசையாக காத்திருந்தது. உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய கடமைகள், காலாண்டு விடுமுறையைக் கொண்டாட வந்தவர்களை அழைத்து வர வேண்டியது என்று சொந்த விசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வேறு இரண்டு முக்கிய கடமைகள் இருந்தது.  25 வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பரை சந்திக்க மற்றும் ஒரு சிற்பபான தனியார் நிர்வகிக்கும் நூலகத்தை பார்க்க வேண்டிய ஆவல்.

ஊரில் பழக்கமான ஒத்த வயது உள்ள நான் கல்லூரிக்குச் சென்ற போது தொழில் நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) படித்துக் கொண்டுருந்த நண்பர் தற்போது குன்றக்குடி அருகே உள்ள ஒரு தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் முதல்வராக பணியில் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பு தெரிந்தது.  பள்ளி கல்லூரியில் என்னுடன் படித்த, மற்றும் அறிமுகமான மற்றவர்களின் தற்போதைய நிலைப்பாடுகளை எழுத வந்த பிறகு அதிகம் கவனித்துப் பார்க்கின்றேன். 


ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பிறகு வேறொரு நண்பணிடம் அவரின் அலைபேசி எண் வாங்கி அழைத்த போது ஆச்சரியப்பட்டு போனார். என் நண்பனுக்கு நண்பன். எனக்கு நண்பர். மாலை நேரங்களில் எங்களுடன் படிக்க வரும் போது ஒன்றாக பார்த்து உருவாகிய நட்பு. ஒத்த கருத்து உள்ளவர். தனது கொள்கையில் உறுதிபாட்டுடன் இருந்தவர். எங்களுக்கு விபரம் தெரியாத அப்பொழுதே இறை மறுப்பு கொள்கையில் மிக ஆர்வமாக இருந்தவர். நான் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளேன் என்று அவர் காட்டிய கவிதை கடிதத்தை படித்த போதே எனக்கு பயம் வந்தது. இரண்டு நாட்கள் இவர்கள் பக்கம் தலைவைத்துப் படுக்கவே இல்லை.

காலம் உருவாக்கும் மாற்றங்கள் ஆச்சரியமானது. 

பத்தாவது வரைக்கும் படு மக்காக இருந்தவர் பனிரெண்டாம் வகுப்பில் பட்டையை கிளப்பி ஆச்சரியம் தந்துருக்கிறார். பனிரெண்டு வரைக்கும் நொண்டியடித்தவர் கல்லூரி படிப்பில் கலங்கரை விளக்கம் போல இருந்து அதிர்ச்சியளித்துள்ளார். 

இது போல பலரையும் பார்த்து ஆச்சரியப்பட்டுருக்கேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பனிரெண்டாம் வகுப்பு கணக்கு பாடத்தை அட்டகாசமாக நடத்திக் காட்டிய நண்பன் ஒருவன் இருந்தான்.  ஆனால் விதி செய்த கோலம் அவனால் கல்லூரி வரைக்கும் வர முடியாமல் நெல் அறவை மில்லுக்கு தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தான். கல்லூரி செல்லும் எங்களை வேதனையுடன் பார்த்துச் சென்ற காட்சி இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது.

இவர்கள் அனைவரும் நம்மைவிட சூரப்புலியாக கல்லூரிப்பாடங்களில் கலக்குவார்கள் என்று நம்பியவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிக்கு வந்த பிறகு கலக்கினார்கள். பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு சோடா சேர்த்து கலக்கினார்கள்.

ஏன் பெற்றோர்கள் பயத்தை உருவாக்கி அதையே ஆயுதமாக்கி வளர்த்தார்கள் என்பதை தற்போது உணர முடிகின்றது. கூடவே தலைமுறை இடைவெளி என்பதும், குழந்தைகள் நம் வாழ்க்கையில் வந்த பிறகு உருவாகும் மாறுதல்களையும் தற்போது உணர முடிகின்றது. 

சுதந்திரம் என்பது கத்தியைப் போன்றது.  கவனமாக கையாள வேண்டும்.

கல்லூரியில் கிடைத்த சுதந்திரம் என்பதன் முழு அருமையை உணராமல் கலக்கியவர்கள் குறுகிய காலத்தில் அழிந்தும் போனார்கள். ஆனால் இதிலும் சில விதிவிலக்குகளை பார்க்க முடிந்தது.  பாடங்களைத் தவிர மற்ற அத்தனை விசயங்களையும் கற்றுக் கொண்டவர் சென்றமுறை காரைக்குடி நகராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆட்சி மாறியது. வாங்கிப் போட்ட சொத்துக்களுடன் இன்று கௌரவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார். இன்று வரையிலும் கல்லூரிப் படிப்பில் வைத்திருந்த பாடங்களை எழுதி தேர்ச்சியடையவில்லை. வாழ்வில் சமூகம் எதிர்பார்க்கும் பணத்தில் தேர்ச்சி பெற்று 20 லட்சம் வாகனத்தில் பயணிக்கின்றார். 

இவரைப் போல மற்றொருவர் சாதி அரசியலில் ஆர்வமாக இருந்தார். வளர்ந்தார்.  அதிமுகவில் உள்ள சாதி லாபி இவரையும் வளர்த்தது.  இன்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.  கோடிக்கணக்கான மனைவியின் சொத்துக்களை இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

கல்லூரிக்கு வந்தவன் பாடத்தை படிக்காமல் படிக்க வந்தவர்களை மதம் மாற்றும் வேலையில் இறங்க அத்தனை பேர்களும் அவனைக் கண்டாலே ஓட்டம் பிடித்த கதையும் உண்டு. கடைசியாக அவனை சந்தித்த போது மதவாதிகளால் பாதிக்கப்பட்ட அவன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டான். அவன் பார்த்த கர்த்தர் வேறு. ஆனால் கர்த்தர் எனக்கு காட்டிய மனிதர்கள் வேறு என்பவனிடம் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.

வாழ்க்கை அழகானது. அதே சமயத்தில் கொடுமையானதும் கூட. நாம் அணுகும் விதத்தில் தான் அதன் உண்மையான ரூபங்களை புரிந்து கொள்ள முடியும். 

இது விதிக்கப்பட்ட விதியா?  இல்லை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன நகலா? போன்ற ஆயிரம் கேள்விகளை இன்று வரையிலும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.

கல்லூரியில் நான் கண்ட கேண்டீன் எனக்கு ஆச்சரியமான விசயமாகும்.  உணவகம் என்பது எனது தொடக்க அன்றாட வாழ்க்கையில் சம்மந்தம் இல்லாத ஒன்று.  வீட்டுச்சாப்பாட்டைத் தவிர அவசியமில்லாத வாழ்க்கை வாழ்ந்த எனக்கு கல்லூரியில் இருந்த கேண்டீனும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.  அதைப் போலவே கல்லூரிக்குள் இருந்த நூலகமும்.

ஊருக்குள் நாங்கள் படிக்கும் நூலகத்திற்கும் கல்லூரியில் பார்த்த நூலகத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிந்தது. அழகும், நேர்த்தியும், துறை வாரியான புத்தகங்களும், நூலகம் இருந்த சூழ்நிலையும், இதுவரையிலும் பார்த்தேயிராத பல்வகை தனிப்பட்ட வார, மாத ஆங்கில இதழ்கள் என்று முதல் இரண்டு நாளும் தடவி சுகம் கண்டு வந்து விடுவேன். இது தவிர ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான நூலகமும் இருந்தது.  

எங்கு திரும்பினாலும் புத்தகங்கள்.  எது குறித்தும் புத்தகங்கள் வாங்க முடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் பாடங்களுக்குரிய புத்தகங்கள் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்ற வாழ்க்கை மாறி ஒரு விசயத்திற்கு வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக எழுதியிருப்பார்கள் என்பதையே தொடக்கத்தில் நம்பமுடியவில்லை. மனப்பாடம் செய்வது மறந்து மகத்தான் உண்மைகள் ஒவ்வொன்றாக புரியத் தொடங்கியது.

தலையணை அளவு உள்ள அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு பேரூந்தில் ஊருக்கு வரும் போது ஒலிம்பிக்கில் ஜெயித்து தங்கப்பதக்கம் வாங்கி வரும் பெருமை போல இருந்தது. நம் கையில் இருக்கும் அந்த பெரிய ஆங்கில புத்தகங்களை பார்ப்பவர்களின் பார்வை கூட வித்தியாசமாக இருப்பதாக முதல் வருடம் தோன்றியது.  ஆனால் அதற்குள் முழ்கிய போது நாம் எந்த அளவுக்கு சுருங்கிய நத்தையாகவே பள்ளிப்படிப்பில் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  

கல்லூரி செல்வதற்கு முன் படித்த புத்தகங்கள் அத்தனையும் கதைகள் சார்ந்த புத்தகமாக இருந்த காரணத்தால் கல்லூரியில் இருந்து எடுத்து வரும் புத்தகங்கள் அனைத்தும் தூக்கத்தைத் தான் கொண்டு வந்து சேர்ந்தது. ஆனால் கனவுகள் நம்மை துரத்த அதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கியது.

இது போன்ற பல எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு நண்பரை அவரின் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரின் வியப்பு எனக்குப் புரிந்தது. வரச் சொல்லியிருந்தார். வருவதாக உறுதியளித்து இருந்தேன். இந்த சமயத்தில் அவரையும் பார்த்து விட வேண்டும் என்பதோடு தற்போதைய கல்வியின் சூழ்நிலையை அருகே சென்று பார்க்கும் ஆவலும் உருவானது. காரணம் நான் படிக்கும் போது பாலிடெக்னிக் என்ற படிப்பு தேவதூதர்கள் படிக்கும் படிப்பாக உயரத்தில் இருந்தது. 

400 மதிப்பெண்கள் வாங்கினால் தான் நினைத்தே பார்க்க முடியும். பத்தாம் வகுப்பில் ஒரு வருடத்தில் நாலைந்து பேர்கள் தான் 400 மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் தற்போது பாதிக்குப் பாதி பேர்கள் 400 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.  வீதிக்கு ஒன்றாக பாலிடெக்னிக் மற்றும் பி.ஈ. படிப்புகள் வந்து விட்டது.  மனதில் பல விசயங்களை அலைமோதிக் கொண்டுருக்க முதலில் உறவுகளுடன் உறவாடச் சென்றேன்.

உறவுகள் என்பது தற்போது அலைபேசி உறவுகளாகத்தான் இருக்கிறது. அக்கா, தங்கை, அம்மா என்ற பாரபட்சம் எதுவுமில்லை. நினைத்தால் அழைக்கலாம். பேசலாம். ஆனால் வீட்டில் இருந்தபடியே பழைய நினைவுகளை அசைபோட்டு அலசி காயபோட்டு சண்டை போட்டு விரும்பியதை கேட்டு வாங்கி தினறு ஊரில் நடந்த நடக்கும் கிசுகிசு சமாச்சாரங்களைக் கேட்பது என்பது ஒரு தனிசுகம்.  

குறிப்பாக நாக்கை சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் சாப்பாடு மேல் ஒரு தீராத காதல் உண்டு.  அந்த காதலை இந்த முறை நின்று நிதானமாகவே அனுபவிக்க முடிந்தது.  கொறிக்க ஏகப்பட்ட கிசுகிசுக்களும் கிடைத்தது. சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் தற்போதைய நிலவரம் முதல் செத்துப் போன பல் ஆத்மாக்களைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

வெட்டப்பட்ட மரங்களை, வெகு தூரத்தில் உள்ள உறவுகளை, குழந்தைக்கு தவமிருப்பவர்களை, பெற்ற குழந்தைகளை கவனிக்காமல் பொருந்தா காதலில் குறியாக இருப்பவர்கள் என்று பலதரப்பு மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அலசி பேசி விவாதம் பண்ண முடிந்தது. சட்டி பாத்திரம் போல அந்த சின்ன அறைக்குள் பல சங்கதிகளை உருட்டி விளையாட முடிந்தது.

உடன் பிறந்தவர்கள் என்றாலும் வாழும் இடமும், வாழ்க்கைச் சூழலும் அவர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்து விடுகின்றது.  வளராத மனமும், தெரிந்து கொள்ள விரும்பாத உலக நடப்புகளும் ஒன்று சோர்ந்து நமக்கு புதிய உருவத்தை அறிமுகம் செய்து வைக்கின்றது.

உனக்கு ஏன்டா தேவையில்லாத இந்த வேலை? என்று கேள்விகள் நம்மை வரும் போதே நாமும் பல கேள்விகளை கேட்டு விட முடியும்.  ஆனால் அது போன்ற சமயங்களில் அமைதி காப்பதே நாம் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தந்த பாடமாக இருப்பதால் அத்தனைக்கும் பொறுமை காத்து விடு மனமே என்று கட்டளையுடன் உறவாட முடிந்தது.

ஆனால் நகர வாழ்க்கை என்பது அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாகவும் கிராமம் சார்ந்த நகர வாழ்க்கை என்பது அளவோடு ஆசைப்படு என்பதாக இரு வேறு தளங்களில் இயங்குவதாக என் கண்களுக்கு தெரிகின்றது.

வீட்டில் அப்பா அம்மா புத்தகங்கள் எதுவும் படிப்பவர்கள் இல்லை.  அப்பா நான் பார்த்த கடைசி காலம் வரைக்கும் தினமணி தவிர வேறு எதையும் தொட்டுப் பார்த்ததே இல்லை.  ஆனால் நானும் சரி உடன்பிறந்தவர்களும் சரி ஒரு துண்டு பேப்பரைக்கூட விட்டு வைப்பதில்லை.  பொட்டலம் மடித்து வரும் அழுக்கு காகிதம் கூட எங்களுக்கு வாசிக்க உதவிய தாள்கள் தான். 

இந்த விசயத்தில் தான் வீட்டில் அணைவரும் ஒரே மாதிரியாக இன்று வரைக்கும் இருக்கின்றோம். படிப்பதில் மட்டும் ஆர்வம் குறையவே இல்லை.  ஆனால் படித்த விசயங்களை அசைபோடுவது முதல் ஆழ்ந்து யோசிப்பது வரைக்கும் பலவிதங்களில் மாறுதல்கள் தெரிகின்றது.

படிப்பது என்பது படங்கள் பார்ப்பது போல பொழுதுபோக்கு என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  அதுவொரு தொடர் வேலையல்ல.  பொழுதே போகாத சமயங்களில் படிக்க வேண்டிய புத்தகக்ஙள என்பதாகத்தான் இந்த வாசிப்பு அனுபவத்தை குறிப்பிடுகிறார்கள்.

நண்பர் அறிமுகப்படுத்திய ஒரு எழுத்தாளர் அலைபேசியில் என்னிடம் பேசிய வார்த்தைகள் இன்னமும் மனதில் நெருஞ்சி முள் போலவே குத்திக் கொண்டே இருக்கிறது.

"வீட்டில் 30,000 புத்தகத்திற்கு மேல் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் புத்தகமாகத்தான் இருக்கும்.  பெரும்பாலும் வெளியே கிடைக்காத குறிப்புகள் எடுப்பதற்காக வைத்திருக்கும் புத்தகங்கள் அது.  ஆனால் என் மனைவிக்கு அது குறித்த புரிதல்கள் இல்லை.  எவராவது வந்து பேசும் போது என் கணவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் இது தான் என்று புலம்புவார்.  இதை வைத்து அடுப்பு கூட எறிக்க முடியாது என்று தனது ஆத்திரத்தை கொட்டுவார்.  அமைதியாகவே இருந்து விடுவேன் " என்றார்.

புத்தகங்களை நேசிப்பவர்களின் வாழ்க்கை சொல்லும் அனுபவங்கள் பல. நான்  சந்திக்க சென்ற நண்பரும் புத்தகங்களை நேசித்தவர் தான்.

அவர் தன்னுடைய மாணவர்களுக்கு தன்னுடைய புத்தக நேசிப்பை எப்படி புரியவைத்துள்ளார் என்பதை பார்க்கும் ஆவல் இருந்தது.  குன்றக்குடிக்கு பயணித்தேன்.

மீதி அடுத்த பதிவில்..........

9 comments:

அமுதா கிருஷ்ணா said...

என்னுடன் முதுகலை மிக சுமாராய் படித்த 4 பேர் இப்போது கல்லூரி பேராசிரியர்கள்.முதல் மூன்று இடத்திற்குள் வந்தவர்கள் வீட்டை மட்டும் மேய்த்து கொண்டு இருக்கிறோம். என்ன என் பசங்களுடன் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. பசங்களை இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு நிலை தடுமாற்றம் ஏற்படும் போது கண்காணிக்க முடிகிறது. ஃப்ரண்ட்லியாக பழக நேரம் நிறைய கிடைக்கிறது.என் கணவர் மிக அதிகமாய் புத்தகம் வாசிப்பர். ஆனால் அதை பத்திர படுத்த மாட்டார். அதை பத்திர படுத்த படும் அவஸ்தை தான் எல்லா மனைவிகளுக்கும் புத்தகத்தின் மீது கோபம் வருகிறதோ என்னவோ. குன்றகுடிக்கு வெயிட்டிங்..

ஜோதிஜி said...

முதல் மூன்று இடத்திற்குள் வந்தவர்கள் வீட்டை மட்டும் மேய்த்து கொண்டு இருக்கிறோம். என்ன என் பசங்களுடன் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. பசங்களை இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு நிலை தடுமாற்றம் ஏற்படும் போது கண்காணிக்க முடிகிறது. ஃப்ரண்ட்லியாக பழக நேரம் நிறைய கிடைக்கிறது

தவறாக எழுதி வீட்டீங்க. அடுத்த வலுவான தலைமுறை உருவாக்கிக் கொண்டு இருக்கீங்க. எனது மூத்த சகோதரி வால் மாதிரி பட்டங்கள் வாங்கி விட்டு வீட்டில் அமைதியாகவே டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டுருந்தார்.

லஞ்சம் கொடுத்து வேலையில் சேர மாட்டேன் என்று. சில வருடங்கள் கழித்து இயல்பாகவே அரசாங்க வேலையும் வீட்டுக்கு தேடியே வந்தது. இவர் பயங்கரமான கண்டிப்பு. பள்ளிக்கூட பசங்களை நினைத்து மற்ற நாங்க வீட்டில் ஒன்று சேரும் போது அவருக்குத் தெரியாமல் சிரித்துக் கொள்வோம்.

Rathnavel Natarajan said...

ஆழ்ந்து படிக்க வேண்டிய அருமையான பதிவு.
ஜோதிஜி அருமையாக பழைய நினைவுகளை அசை போடுகிறார்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

Unknown said...

கேன்டீன் பற்றியும் சொன்னது அற்புதம்

குறும்பன் said...

என் மலரும் நினைவுகளை உங்க இடுகை கிளரிவிட்டது. எனக்கு புத்தகங்கள் படிப்பது என்றாலே பிடிக்காது, ஆனா எல்லா செய்தித்தாள்களையும் ஒரு வரி விடாம படிச்சிருவேன் இஃகி இஃகி. குன்றக்குடி கதைக்கு காத்திருக்கிறேன்.

ரவி சேவியர் said...

நேதா ஜீ, கீழே நான் கோடிட்டு காட்டிய தங்கள் பதிவின் பல வாக்கியங்கள்( எண்ணங்கள், உணர்வுகள், புரிதல்) என்னையும் கடந்து சென்றிருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

இறுதியில் கோடிட்டு குறிப்பிட்டிருக்கும் வாக்கியங்கள் எனக்கும் பொருந்தும் (குறிப்பாக புத்தக வாசிப்பை பற்றி மனைவியின் புரிதல் பெரும்பாலும் இப்படிதான் இருக்குமோ?)

//காலம் உருவாக்கும் மாற்றங்கள் ஆச்சரியமானது. கல்லூரியில் கிடைத்த சுதந்திரம் என்பதன் முழு அருமையை உணராமல் கலக்கியவர்கள் குறுகிய காலத்தில் அழிந்தும் போனார்கள்.//

//பாடங்களைத் தவிர மற்ற அத்தனை விசயங்களையும் கற்றுக் கொண்டவர் காரைக்குடி நகராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.//

//அவன் பார்த்த கர்த்தர் வேறு. ஆனால் கர்த்தர் எனக்கு காட்டிய மனிதர்கள் வேறு என்பவனிடம் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.//

//வாழ்க்கை அழகானது. அதே சமயத்தில் கொடுமையானதும் கூட. நாம் அணுகும் விதத்தில் தான் அதன் உண்மையான ரூபங்களை புரிந்து கொள்ள முடியும்.//

//இது விதிக்கப்பட்ட விதியா? இல்லை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன நகலா? போன்ற ஆயிரம் கேள்விகளை இன்று வரையிலும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.//

// நாம் எந்த அளவுக்கு சுருங்கிய நத்தையாகவே பள்ளிப்படிப்பில் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.//

// பள்ளியில் பாடங்களுக்குரிய புத்தகங்கள் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்ற வாழ்க்கை மாறி ஒரு விசயத்திற்கு வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக எழுதியிருப்பார்கள் என்பதையே தொடக்கத்தில் நம்பமுடியவில்லை. மனப்பாடம் செய்வது மறந்து மகத்தான் உண்மைகள் ஒவ்வொன்றாக புரியத் தொடங்கியது.//

// நான் படிக்கும் போது பாலிடெக்னிக் என்ற படிப்பு தேவதூதர்கள் படிக்கும் படிப்பாக உயரத்தில் இருந்தது.//

//உறவுகள் என்பது தற்போது அலைபேசி உறவுகளாகத்தான் இருக்கிறது. உடன் பிறந்தவர்கள் என்றாலும் வாழும் இடமும், வாழ்க்கைச் சூழலும்,வளராத மனமும், தெரிந்து கொள்ள விரும்பாத உலக நடப்புகளும் ஒன்று சோர்ந்து நமக்கு புதிய உருவத்தை அறிமுகம் செய்து வைக்கின்றது.//

//என் மனைவிக்கு அது குறித்த புரிதல்கள் இல்லை. எவராவது வந்து பேசும் போது என் கணவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் இது தான் என்று புலம்புவார். இதை வைத்து அடுப்பு கூட எறிக்க முடியாது என்று தனது ஆத்திரத்தை கொட்டுவார். அமைதியாகவே இருந்து விடுவேன்//

//கேள்விகள் நம்மை வரும் போதே நாமும் பல கேள்விகளை கேட்டு விட முடியும். ஆனால் அது போன்ற சமயங்களில் அமைதி காப்பதே நாம் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தந்த பாடமாக இருப்பதால் அத்தனைக்கும் பொறுமை காத்து விடு மனமே என்று கட்டளையுடன் உறவாட முடிந்தது.//ஜோதிஜி said...

ரவி

வரிகளை மனப்பாடமே செய்து விட்டீங்க போலிருக்கே.

ஜோதிஜி said...

குறும்பன்

நீங்களாவது பரவாயில்லை. செய்திதாள்கள், புத்தகங்கள் என்று எதுவுமே 40 வயது ஆன பின்பும் கூட படிக்காத படிக்க விரும்பாத பல நூறு பேர்களை பார்த்துக் கொண்டுருக்கேன். நான் தினமும் அவர்களுடன் பழகிக் கொண்டுருக்கேன்.

Unknown said...

மிக பிரமாதமான பதிவு! என் மன உணர்வுகளையே எழுதியிருக்கிறீர்கள். 90% எனக்கும் நிகழ்ந்தவையே!