Monday, October 29, 2012

காதோடு பேசலாம் வாங்க.


"போராடுவோம்... போராடுவோம்.  இறுதி வரை போராடுவோம்."

தெருமுனைகளில், அடுத்த சந்தில், அரசு அலுவக வாசலில் என்று இந்த வார்த்தைகளை ஏதோவொரு இடத்தில் கேட்டு நகர்ந்து வந்து இருப்போம். 
இன்று வரைக்கும் போராட்டத்தின் வீச்சு குறையவில்லை.  ஆனால் வடிவங்கள் தான் மாறியுள்ளது. போராட அழைப்பவர்களின் நோக்கமும் மாறியுள்ளது.

சாலையில் போக்குவரத்து கூட்ட நெரிசலில் நாம் முந்திக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போது பக்கவாட்டில் கூட்டமாக நின்று கொண்டு சப்தம் போட்டு உரக்க தங்கள் கோரிக்கைகளை கத்திக் கொண்டு இருப்பவர்களை  கவனித்துருக்கிறீர்களா?  

நடந்து சென்று கொண்டுருக்கும் உங்கள் கையில் எவரோ கொண்டு வந்து திணிக்கும் கோரிக்கைகள் அடங்கிய அந்த தாளை வாசித்து பார்த்து இருக்கிறீர்களா?  

கூட்டத்திற்குள் புகுந்து வெளியே வந்து உண்டியல் ஏந்தி வந்தவர்கள் உங்கள் முகத்திற்கு முன்னால் ஜில்ஜில் என்று குலுக்கி உங்கள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றியிருக்கும்? 

அவர்களை நிதானமாக ஏறிட்டு பார்த்து இருக்கிறீர்களா?

"இவனுகளுக்கு வேற பொழப்பே இல்லப்பா. ஆ...ஊன்னா தெருவுக்கு வந்து நம்மள வதைக்கிறானுங்கப்பா...."

அலுத்துக் கொண்டே எரிச்சலை துப்புவோம்.

குடிதண்ணீர் இருபது நாளாக வரவில்லை. எங்களுக்கு ஒரு நியாயம் வேண்டும் என்று கேட்ட கோரிக்கைகள் தீர்வு வராமல் போக தெருவுக்கு பெண்கள் பானையுடன் வந்து நிற்கும் போது அரசு நிர்வாகம் வேகமாக செயலில் இறங்கும்.  சாலை போக்குவரத்து பாதிக்க,  போராடிக் கொண்டுருக்கும் அந்த பெண்கள் கூட்டத்தை அவசரமாய் பயணிக்கும் பெண்கள் திட்டுவதை பார்க்கின்றோம்.

எந்த பிரசச்னையும் நம்மை தாக்காத வரைக்கும் அது பிரச்சனை அல்ல. அடுத்த சந்தில் தீப்பிடித்து எரிந்தால் அது அடுத்த நாள் செய்தி தாளில் வரப்போகின்ற செய்தி.  நம் வீட்டில் நடந்தால் அதுவொரு கண்ணீர் காவியம்.

போராட்த்தின் வடிவம் இன்று இணையம் வரைக்கும் பலவிதங்களிலும் மாறியுள்ளது. தெருவுக்கு வந்து போராடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அவரவர் சார்ந்த வாழ்க்கைப் போராட்டத்திற்கே இங்கே நேரம் இருப்பதில்லை. பொது நலம் என்பது இன்று அரசியல் கட்சிகளால் உச்சரிக்கப்படும் வார்த்தை மட்டுமே. அதுவே செயலாக்கம் பெறும் போது சுயநலமாகத்தான் போய்விடுகின்றது. 

இன்றைய சமூகத்தின் போராட்டங்கள் என்பது செய்திதாள்களுக்குத் தேவைப்படும் அன்றாட செய்திகளில் ஒன்று. அதற்கு பின்னால் உள்ள அவலத்தையும், அதில் பங்கெடுத்தவர்களின் அவஸ்த்தைகளும் நமக்கு முக்கியமல்ல. 

காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கு எதற்கும் நேரம் இருப்பதில்லை.  கடந்து சென்றுவிடவே விரும்புகின்றோம். 

ஒவ்வொரு நாளும் யாரோ எவரோ எதற்காகவோ தெருவில் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  விலைவாசி உயர்வு, சம்பள பிரச்சனை, நீதி கேட்டு, அதிகாரப்பூர்வமற்ற மின் வெட்டுக்காக உண்ணாவிரதம் என்று தெருமுனையில், பேரூந்து நிலையத்தில் இந்த போராட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. 

"சரியானமுறையில் சிகிச்சை அளித்திருந்தால் என் பிள்ளை இறந்து போயிருக்காது.  நான் பிணத்தை வாங்க மாட்டேன்"  என்று ஒப்பாறி வைத்து அழும் பெண்ணின் முகத்தை தொலைக்காட்சியில் நெருக்கமாய் பார்க்கும் போது உள்ளே ஒரு கழிவிரக்கம் உருவாகும். சிலசமயம் நம் கண்ணில் ஒரு முத்து போல கண்ணீர் கோர்த்து விடும் என்ற சூழ்நிலையில் ரிமோட் ல் கைவைக்க தாண்டிச் சென்று விடுகின்றோம். 

ஆனால் ரிமோட்டில் பட்டனைத் தட்டி அடுத்த சேனலில் நடிகை பேசும்  கொஞ்சு தமிழ் நமக்கு ரசிக்கக்கூடியதாய் மாறிவிடும். மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் பலவற்றையும் மறக்கவே விரும்புகின்றோம்.

பந்தல் அமைத்து நிழலில் நின்று போராடுபவர்கள் தொடங்கி தெருவில் அடக்கு முறையை எதிர்த்து சாலை மறியல் என்பது வரைக்கும் என் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஏராளமான காரணங்கள். 

ஆயுதமேந்தி போராட முடியாது. அடக்குமுறையில் ஒடுக்கப்பட்டு விடும். 


நக்ஸலைட்,தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள் என்று பெயர் சூட்டி வாழ்க்கை மொத்தத்தையும் இழக்க நேரிடும். 

ஒவ்வொரு முறையும் அஹிம்சை மட்டும் தான் இன்றைய போராட்டத்திற்கு அளவு கோலாக இருக்கிறது.  

போராடலாம். ஜனநாயகத்தில் உனக்கு அந்த உரிமை இருக்கிறது. 

ஆனால் நீ இப்படித்தான் உன் போராட்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு மாதிரியை ஆளும் சமூகம் உருவாக்கியுள்ளது. 

ஆனால் தீர்வு ஏதும் கிடைத்ததா? என்றால் அது மௌனசாட்சியாகவே இருக்கிறது.

நமக்கு எந்த காரணங்களும் தேவையில்லை. ஆதரிக்க நேரமும் இருப்பதில்லை. ஆனால் எப்போதும் எல்லாவற்றையும் விமர்சிக்க மட்டுமே விரும்புகின்றோம். 

பொதுப்புத்தி என்பது எளிதாக இருப்பதால் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை. பத்து பேர்களும் ஒன்றாக யோசிக்கும் போது புதிதாக எதையும் யோசிக்கத் தேவையில்லை. மாற்றிப் பேசினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவனாக மாறிவிடுவீர்கள். 

பொதுஜனம் என்பதற்கான வரையறை என்பதே இதிலிருந்து தான் தொடங்குகின்றது.  

நான் உழைத்தேன். உழைக்க தயாராக இருக்கின்றேன். நான் நிச்சயம் ஜெயித்து வந்து விடுவேன் என்ற ஒற்றை நம்பிக்கை தான் ஏதோவொரு இலக்கை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டே செல்கின்றது.  நமது இலக்கைத் தவிர வேறு எதுவுமே நமக்கு பெரிதாக தெரிவதில்லை. 

விலைவாசி உயர்வா? விரும்பிய வசதியான இடத்தை அடைந்து விட்டால் இந்த பிரச்சனை நமக்கு உருவாகாது. வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க நன்றாக படி. வெளிநாடு சென்று விடு. உன் வாழ்க்கையை நீ நினைத்த மாதிரி அமைத்துக் கொண்டு விடலாம்.

சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும் நம்மை உருவாக்குகின்றது.  

வாழவே தகுதியில்லை.  இந்தியாவிற்குள் வரவே மனசில்லை. எப்படி இந்த நெரிசலில் வாழ முடியும் என்ற காரணங்கள் தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கும், அங்கிருந்து வர விரும்பாதவர்களும் சொல்லும் முக்கிய காரணமாக இருக்கிறது. 

ஆனால் இந்த நெரிசலுக்குள் நாமும் உழன்று தான் உருவானோம் என்பதை எளிதாக மறந்து விடுகின்றோம். வசதிகள் வரும் வரைக்கும் போராடத் தோன்றுகின்றது. ஆனால் விரும்பிய வசதியகள் வந்ததும் உடம்பும் மனசும் அசதியாகி விடுகின்றது. பலவற்றை மறக்கவே விரும்புகின்றோம்.

மறதி தான் மிகச் சிறந்த வரப்பிரசாதம். 

எது தேவையோ அதை மட்டுமே நினைத்துக் கொண்டால் மீதி அத்தனையும் அவசியமற்றதாக மாறி விடுகின்றது.  

ஒவ்வொரு போராட்டக்காரர்களும் களத்தில் நின்று போராடிக் கொண்டுருப்பது அவர்களுக்கான உரிமைகள் என்பதோடு அது மறைமுகமாக மொத்த சமூகத்தையும் சார்ந்தது. 

போரடிக் கொண்டுருப்பவர்களுக்கு ஏதோவொரு காரணங்கள் இருக்கலாம். ஆனால் பாதிப்பு என்பது மொத்த சமூகத்திற்கும் தான் என்பதை எளிதாக மறந்து போய்விடுகின்றோம். 

மூடப்பட்ட மில்லில் நம் குடும்பத்தில் எவரோ ஒருவர் பணிபுரிந்தவராக இருக்கலாம். திடீரென்று வாழ்க்கை சூறாவளியில் சிக்கியிருக்கக்கூடும். பாதிப்புகள் இன்று வரையிலும் மனதில் நிற்கும்.  அப்போதும் யாரோ பலர் நீதி கேட்டு போராடியிருக்கக்கூடும்.  காயம்பட்ட வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் கூட அடுத்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க விரும்புவதில்லை.

விலைவாசி உயர்வுக்கு எதிர்த்து போராடக்கூடியவர்களுக்கு அவர்கள் வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களுக்கு மட்டும் தான் போராடுகிறார்களா? ஒரு நிறுவனம் காரணம் இல்லாமல் இழுத்து மூடப்படும் போது அதை கேட்டு தெருவுக்கு வந்து நின்று போராடுபவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனை.  அதுவே  நாடு தழுவிய பிரச்சனையாக மாறும் போது அதன் முகமே வேறு விதமாக மாறி விடுகின்றது.

போராட எவருக்கும் துணிவில்லை என்பதை விட எவருக்கும் போராட்வே தோன்றவில்லை என்பது தான் இன்றைய எதார்த்தம்.

அரசாங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும்?

ஆள்,அம்பு,சேனை,படை,பட்டாளங்கள், நெருக்குதல் என்று எல்லா திசைகளிலும் வந்து சேரும் நிலைகுலைந்து போகும் மனிதர்களைப் பார்த்து பார்த்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றோம்.  இது தான் ஆள்பவர்களுக்கும், அரசை இயக்கிக் கொண்டுருப்பவர்களுக்கும் வசதியாக போய்விடுகின்றது.

பயமுறுத்து, பயத்தில் வைத்திரு. 

இந்த இரண்டு வார்த்தைகள் தான் இன்றைய இந்தியாவின் ஜனநாயகத்தை கட்டி காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது.

ஆனாலும் இதற்கு அப்பாலும் பல காரணங்கள் இருக்கிறது. நம்மால் வாழ முடிந்த அளவுக்கு நமக்கு வசதிகள் கிடைக்கும் போது வாழ்க்கை என்பது அழகாகத்தான் இருக்கிறது.  வசதிகளை விட வாழ்க்கையை வாழவே முடியாதவர்களின் அவலங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் முகம் திருப்பிக் கொள்ளவே விரும்புகின்றோம். 

அடுத்த இலக்கு என்று ஒன்று நம் மனதில் இருக்கும். அதை நோக்கி நகர்ந்து கொண்டுருப்போம். குறைந்தபட்சம் நம்மிடம் இருக்கும் வசதிகளை தக்க வைக்க போராடிக் கொண்டுருப்போம்.

திருப்பூரில் சாயப்பட்டறை பிரச்சனை உச்சத்தில் இருந்த போது அதிசயமாக
சாயப்பட்டறை முதலாளிகளின் மனைவிமார்கள் அத்தனை பேர்களும் ஒன்று சேர்த்து தெருவில் இறங்கி தங்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். குளுகுளு வசதியில் இருந்தவர்களால் நெருப்பு வெயில் புதிதாக இருக்க புழுக்கத்தில் தவித்தார்கள்.  

நம் காவல் துறைக்கு சொல்லித் தரவும் வேண்டுமா? 

உள்ளே பிடித்துப் போட்டால் வெளியே வர மாதக்கணக்கு ஆகும் என்று கொளுத்தி போட்ட வெடியில் மொத்த போராட்டமும் புஸ்வானம் ஆகிப்போனது. 

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு எத்தனையோ லட்ச மக்கள் போராடினார்கள்.  தலைவர்கள் பெயர்களைத் தவிர வேறு எவரின் பெயரும் நமக்கு இன்று வரையிலும் தெரியாது. உண்மையான அடக்கு முறையின் அர்த்தத்தை பிரிட்டிஷார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். 

ஆனால் அந்த போராட்டத்தின் வலிமையை குறைக்க முடியவில்லை.  போராடியவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.  காரணம் உள்ளே எறிந்து கொண்டுருந்த கனல்.  கங்காக மாறி நெருப்பாக கொளுந்து விட்டு எறிந்து ஊர் முழுக்க பரவி நாடு முழுக்க பரவியது.  

காரணம் அன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் என்பது தேவையாய் இருந்தது. இப்போது நமக்கான தேவைகள் மாறியுள்ளது. சக்திக்கும் புத்திக்கும் உள்ள சண்டையில் பல சமயங்களில் நாம் சமாதானமாகி நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக் கொண்டு விடுகின்றோம்.

ஆனால் வாங்கிய சுதந்திரத்தின் வசதியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு விதமாக அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம். ஆனால் வசதியுள்ளர்வகள் தொலைக்காட்சியில் ரசனையை வளர்த்துக் கொண்டுருக்க மீதி உள்ளவர்கள் அடுத்த வேளை சோற்றுக்கு உழைத்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆவலாய் ஓடிக் கொண்டுருக்கிறார்கள். 

இன்று நாம் வாழும் வாழ்க்கை, அடைந்த வசதிகள் ஒவ்வொன்றும் யாரோ, எவரோ, ஏதோவொரு இடத்தில் உருவாக்கிய போராட்டத்தினால் வந்தது தான் என்பதை எளிதாக மறந்து அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்.

போட்டிகள் அதிகமான உலகில் போராட்டத்தின் தன்மை மாறிவிட போராடி ஜெயித்தவர்களை இங்கே சாதனையாளர்கள் என்று கொண்டாடுகின்றோம். அந்த சாதனைக்குப் பின்னால் உள்ள வேதனைகளும், பலர் சிந்திக் கொண்டுருக்கும் கண்ணீரும் நமக்கு முக்கியமல்ல. 

கப்பல் கரைக்கு வந்து விட்டதா? அது தான் இங்கே முக்கியம்.

அரசியல் அதிகாரம் பயத்தை உருவாக்கு

22 comments:

aavee said...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.. சமூக விழிப்புணர்வை உண்டாக்கும் பயனுள்ள பதிவு.

Anonymous said...

Nathaji Your Words out of way No Contemporary Topics(word) NO blame Govt T.N.Govt Subsidey 50 percent Income Dirct to People Free Schems) Youre not messiah Or acation hero(nathaji chehovero) you know information but no wisdom

ஜோதிஜி said...

மானியங்கள் குறித்து எந்த இடத்திலும் பேசவில்லை. வரிகட்டுவோர் குறித்தும் எழுதவில்லை.

ஏதோ சொல்லவந்து இருக்கீங்க. ஆனால் அவசரமாக சொல்ல வந்து கோர்வையாக இல்லாமல் துண்டு துக்கடாவாக அங்கங்கே புரியாமல் இருக்கிறது. முடிந்தால் மறுபடியும் தெளிவாக சொல்லவும்.

ராஜ நடராஜன் said...

நன்றாக குமுறியிருக்கிறீர்கள்.இந்தியாவின் பிரச்சினையே மக்கள் தொகைதான் என்று குடும்ப கட்டுப்பாடு சட்டங்கள் வந்தும் வாழ்க்கை போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை.அமெரிக்காவின் கட்டமைப்பும்,உயர் கட்டிடங்களும்,தனி மனித வசதிகளும் உலகமயமாக்கலில் அனைத்து தேசங்களுக்குமான் அமெரிக்க வாழ் கனவுகளாகிப் போயின.முந்தைய காலத்து ஒப்பீட்டளவில் இந்திய வாழ்க்கை முறையில் மாற்றங்கள்,தேவைகள் அதிகரித்திருக்கின்றன.ஆனாலும் இந்தியர்களை கஞ்சன்கள் என்பேன்.காரணம் பணமுடக்கலும்,உடனே குட்டி போடும் சேமிப்பு திட்டங்களும்,அதன் ஏமாற்றுகளும் என மாறி விட்டதால் தங்கம் கூட நாளடைவில் குட்டி போடுமென தங்க பதுக்கல் செய்கிறது இந்தியா.செலவும் குறைவாக செய்.சேமி!பதுக்கு என்ற நிலை ஒரு புறமும்,அன்றாட வாழ்விற்கான ஓட்டம் என மறுபுறமும்.அரசு இயந்திரங்கள் ஊழல் மயமாகி விட்டன.அன்னா ஹசாரே,கெஸ்ரிவால்களின் ஊழலுக்கான எதிரான குரலும் கூட இரண்டு துண்டுகளாகி சல்மான் குர்சித்துக்கு எதிரான புகாருக்கு வெளியுறவுத்துறை பதவி உயர்வும்,கட்காரி மீதான குரலுக்கு உற்சாகத்தில் பட்டாசு கொளுத்தும் சின்னப்பையன் பட்டமே மிஞ்சுகிறது.போராட்டங்கள் ஓய்வதில்லை என்ற போதிலும் வாழைப்பழ ஜனநாயக மாங்காய் மக்கள் என வதேரா வாழ்த்துப்பா பாடுவதே வெற்றி கொள்கிறது.இதில் பஞ்சம் பொழக்க போன பசங்க ஊருக்கு திரும்புவதில்லையென்ற சலிப்பு வேற:)

ஜோதிஜி said...


ராஜ நடராஜன் has left a new comment on your post "காதோடு பேசலாம் வாங்க.":

நன்றாக குமுறியிருக்கிறீர்கள்.இந்தியாவின் பிரச்சினையே மக்கள் தொகைதான் என்று குடும்ப கட்டுப்பாடு சட்டங்கள் வந்தும் வாழ்க்கை போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை.

அமெரிக்காவின் கட்டமைப்பும்,உயர் கட்டிடங்களும்,தனி மனித வசதிகளும் உலகமயமாக்கலில் அனைத்து தேசங்களுக்குமான் அமெரிக்க வாழ் கனவுகளாகிப் போயின.முந்தைய காலத்து ஒப்பீட்டளவில் இந்திய வாழ்க்கை முறையில் மாற்றங்கள்,தேவைகள் அதிகரித்திருக்கின்றன.

ஆனாலும் இந்தியர்களை கஞ்சன்கள் என்பேன்.காரணம் பணமுடக்கலும்,உடனே குட்டி போடும் சேமிப்பு திட்டங்களும்,அதன் ஏமாற்றுகளும் என மாறி விட்டதால் தங்கம் கூட நாளடைவில் குட்டி போடுமென தங்க பதுக்கல் செய்கிறது இந்தியா.செலவும் குறைவாக செய்.சேமி!பதுக்கு என்ற நிலை ஒரு புறமும்,அன்றாட வாழ்விற்கான ஓட்டம் என மறுபுறமும்.அரசு இயந்திரங்கள் ஊழல் மயமாகி விட்டன.

அன்னா ஹசாரே,கெஸ்ரிவால்களின் ஊழலுக்கான எதிரான குரலும் கூட இரண்டு துண்டுகளாகி சல்மான் குர்சித்துக்கு எதிரான புகாருக்கு வெளியுறவுத்துறை பதவி உயர்வும்,கட்காரி மீதான குரலுக்கு உற்சாகத்தில் பட்டாசு கொளுத்தும் சின்னப்பையன் பட்டமே மிஞ்சுகிறது.போராட்டங்கள் ஓய்வதில்லை என்ற போதிலும் வாழைப்பழ ஜனநாயக மாங்காய் மக்கள் என வதேரா வாழ்த்துப்பா பாடுவதே வெற்றி கொள்கிறது.இதில் பஞ்சம் பொழக்க போன பசங்க ஊருக்கு திரும்புவதில்லையென்ற சலிப்பு வேற:)

Anonymous said...

raja natarajans comment super

கிரி said...

நல்ல கட்டுரை, ஒருசாராரின் போராட்டத்தைபற்றிய நமது பார்வையை இங்கே தெள்ளதெளிவாக பதிவு செய்திருப்பதற்கு நன்றி. கட்டுரையின் சில வாக்கியங்கள் மிகவும் அழுத்தமாக அமைந்துள்ளது.
உதாரணமாக:

"மறதி தான் மிகச் சிறந்த வரப்பிரசாதம்"

"போராட எவருக்கும் துணிவில்லை என்பதை விட எவருக்கும் போராட்வே தோன்றவில்லை என்பது தான் இன்றைய எதார்த்தம்"

"பயமுறுத்து, பயத்தில் வைத்திரு"

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

அகலிக‌ன் said...

போராட துணிவுண்டு நெஞ்சில்
போர் முரசறிவிக்க ஆயுதமில்லை கையில்,
ஆயுதம் தேடவே ஆண்டுகள் கழிந்தன‌
என்றாலும் இன்றுவரை நிராயுதபாணியாகவே...

மனிதமனத்தை பொருத்தவரை சந்தோசப்படவும், துக்கப்படவும், கோபப்படவும்கூட ஒருதன்னிரைவு மனனிலை தேவைப்படுகிறது. தன்னிரைவு அடைந்தபின்தான் அவன் அக்கம் பக்கம் பார்க்கமுடிகிறது. ஆனால் அதை அடையாதவரை அவன் சோர்ந்திருக்கிறான், அடைதபின் சோம்பிக்கிடக்கிறான். இரண்டிர்கும் இடையில் ஏதாவது ஒன்று அவனை நேரடியாய் தாக்கும்போதுதான் இனி பொருப்பதற்கில்லை என்று தெளிந்து எழுகிறான். அந்த எழுச்சியும் பலவகையில் மழுங்கடிக்கப்பட்டு நீர்த்துப்போகிறது. இதில் அவனை குற்றமாகவோ, குறைவாகவோ மதிப்பிடுவது சரியாகாது.

ஜோதிஜி said...

கிரி

ஆச்சரியமாக இருக்கு. இம்புட்டு சீக்கீரம் தமிழ் தட்டெழுத்து பயின்று தமிழிலேயே விமர்சனம் அளித்தமை.

கலக்குங்க. விரைவில்ஒரு உங்கள் வலைபதிவு பார்க்க ஆசை.

ஜோதிஜி said...

அகலிகன்

நான் எழுதியதை விட உங்கள் விமர்சனம் சிறப்பாக இருக்கு. சுருக்கமாக தெளிவாக அழகா வந்துருக்கு.

ஜோதிஜி said...

ராஜ நடராஜன்

வெகுவாக ரசித்தேன். வேற எதுவும் எழுத தெரியல. மொத்தத்தில் ஒருவிதமான ஒதுக்கல் இந்தியாவில் எல்லா நிலையிலும். என்னை விட நீங்க ஒரே குமுறலா கும்மி விட்டீங்க.

ஜோதிஜி said...

வருக கோவை நேரம், அனானி.

Anonymous said...

AGain super!!!
I boarded flight with just 24 hours notice and planned stay abroad for 6 months...but 7 years has gone, not yet back to India. In India Government Servents are thinking as they are Mogul Emporer's. We have no opportunity to fight against our corruped system, any rigourous fight will put us behind bar. So nothing to blame who stays abroad (I am not covering myself)
Karthi, Phoenix, Arizona

ஜோதிஜி said...

கார்த்திக் நீங்க சொல்வதும் உண்மை தான்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர் இந்த சாதனை செய்துள்ளார் என்று பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக கவர் ஸ்டோரி எழுதும் போது பத்திக் கொண்டு வரும். அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை இங்கே கொடுக்க முடியாதவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகள் கூட எவரும் எழுதுவதில்லை.

ஏறக்குறைய கூலி வாழ்க்கைக்காக படித்து, கூலி வேலையை செய்ய வெளிநாடு சென்று கடைசி வரைக்கும் சுயசார்பு இல்லாமல், மழுங்கிப் போன சிந்தனைகளுடன் வாழ வேண்டியது தான் தற்போதைய சமூகத்தின் கொள்கையாக இருக்கிறது. அதைத்தான் மேலைநாடுகளும் இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது. நம்முடைய எஜமான்களும் அதற்காகத்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

துளசி கோபால் said...

ஜோதிஜி,

உள்ளக்குமுறல் புரியுது. ஆனா.... திரும்பி வந்து நாங்க என்ன செய்யறது? அங்கிருக்கும் விலை வாசியும் சமூக நெருக்கடிகளும் சேர்ந்து எங்களை உடனடியா ஒழிச்சுக் கட்டிருமே:(

இந்தியா போன்ற கலாச்சாரம் உள்ள நாடுகளில் நாம் சமூகம் சொன்னபடி வாழணும். நம் மனது விரும்பும்படி வாழ முடியாது. அட்லீஸ்ட் செத்தபிறகாவது குடும்பத்துக்கு நிம்மதி உண்டா? சுடுகாட்டுலேயும்கூட ஊழலும் லஞ்சமும். டீஸண்ட் எக்ஸிட் இருக்கான்னு சொல்லுங்க.

பிறந்த முதல் வயசில் தவழ்ந்தோமேன்னு இன்னும் அப்படியே இருக்க முடியுமா? என்னவோ போங்க:(

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் உண்மைகளை உங்கள் பாணியில் சொல்லி உள்ளீர்கள்... பதில்கள் : ஒரு பதிவே எழுதணும்... சுருக்கமாக :

இது போல் சுயநலமாக இருக்கக் கூடாது என்று நீங்கள் நினைப்பதாக நான் எண்ணிக் கொள்கிறேன்...

நன்றி...

ஜோதிஜி said...

நன்றி தனபாலன். எண்ணிக் கொள்வோம்.

டீச்சர் நீங்க சொல்வதும் உண்மை தான். இந்தியாவில் உள்ள இன்னமும் மாற்ற முடியாத ஒரே பெரிய குறை என்னவென்றால் தங்கள் வாழ்க்கையை விட அடுத்தவர் வாழ்க்கையை கவனிப்பது, விமர்சிப்பது, அது குறித்து அறித்து கொள்ள ஆசைப்படுவது.

இதைத்தான் தன் முதுகு அழுக்கு தெரியாதவர்கள் என்று எளிமையாக சொல்கின்றார்கள். தன்னை உணர்ந்தால் எளிதான முன்னேற்றம் கண்டு விடலாம். நாம் தான் மற்றவற்றைத் தானே ஆர்வமாக கவனிக்கின்றோம்.

தனிப்பட்ட நபர்களை கவனிக்கும் நபர்கள் முந்தைய தேர்தலில் உனக்கு இந்த அளவுக்கு சொத்து இல்லையே? இப்ப உனக்கு எப்படி இந்த அளவுக்கு சொத்து வந்தது? என்று காரணம் கேட்டு அடுத்த முறை ஓட்டுக்கு வரும் ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் ஒவ்வொரு தனிப்பட்ட மனித்ர்களும் கேட்கும் பட்சத்தில் இந்தியாவில் என்ன மாற்றம் உருவாகும் என்பதை யோசித்து இருக்கீங்களா?

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

ESWARAN.A said...

"இன்று நாம் வாழும் வாழ்க்கை, அடைந்த வசதிகள் ஒவ்வொன்றும் யாரோ, எவரோ, ஏதோவொரு இடத்தில் உருவாக்கிய போராட்டத்தினால் வந்தது தான் என்பதை எளிதாக மறந்து அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்"
இது சத்தியமான வார்த்தை..பிரமாதமாக இருக்கிறது..கொஞ்சம் குறைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது..

Valmeegy said...

ஜோதிஜி உங்கள் கோபம் புரிகிறது, ஆனால் அடிப்படையை மாற்றுவது கடினம். ஏதோ ஒரு புத்தகத்திலோ , இனைய பக்கத்திலோ படித்தது (பெயர் மறந்துவிட்டது )
ஐரோப்பியர்கள் இயல்பிலேயே மூர்க்கமான போராட்ட குணம் மிகுந்தவர்கள் அது அவர்கள் கடும் பனியில் கழ்டப்பட்டு உயிர் பிழைத்து, வெறியோடு பல நாடுகளை போரிட்டு அடிமை கொண்டு அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று நிலைகொண்டு விட்டார்கள் . இந்த நூற்றாண்டில் அவர்கள் பண்பாட்டை கவனமாய் கற்றுக் கொள்கிறார்கள் . (அவர்கள் பண்பாட்டுடன் வாழ்வதில் நாம் இப்போது மோகம் கொள்கிறோம், நாம் வாழும் நிலையை பார்த்து வெட்க படுகிறோம் )

ஆசியர்கள் (குறிப்பாக இந்தியர்கள் )இயல்பிலேயே பண்பாடு மிக்கவர்கள் அது வரலாற்றை கவனித்தாலே புரியும் , போரில் கூட விதிகள் வைத்துதான் போரிடுவார்கள் (சூரியன் மறைந்தால் போர் கிடையாது, எதிரி வாள் கொண்டுவந்தால் வாளால் மட்டுமே சண்டை ) மற்றும் பல ... இது அவர்கள் போராட்ட குணத்தை கற்றுகொள்ளும் நேரம் . ஆனால் கற்றுகொடுக்கவும் ஆள் இல்லை கற்றுகொள்ளும் பக்குவமும் நூறு ஆண்டுகள் முடிந்தும் வரவில்லை.

தலைமைகள் மக்களின் போராட்ட குணத்தை மழுங்கடிப்பதில் மிக மிக கவனமாய் இருக்கின்றன (என் சொல்லுக்கு தலையை ஆட்டுபவர்கள் மட்டுமே என் கூட்டத்தில் இருக்க முடியும் என்பதே இங்கு எல்லா தலைமைகளின் கட்டாயமாக இருப்பதை நாமே கண்கூடாக பார்க்கிறோம் )

காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை ஆனால் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க போகிறோமோ தெரியவில்லை ஜி....

Valmeegy said...

ஜோதிஜி உங்கள் கோபம் புரிகிறது, ஆனால் அடிப்படையை மாற்றுவது கடினம். ஏதோ ஒரு புத்தகத்திலோ , இனைய பக்கத்திலோ படித்தது (பெயர் மறந்துவிட்டது )
ஐரோப்பியர்கள் இயல்பிலேயே மூர்க்கமான போராட்ட குணம் மிகுந்தவர்கள் அது அவர்கள் கடும் பனியில் கழ்டப்பட்டு உயிர் பிழைத்து, வெறியோடு பல நாடுகளை போரிட்டு அடிமை கொண்டு அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று நிலைகொண்டு விட்டார்கள் . இந்த நூற்றாண்டில் அவர்கள் பண்பாட்டை கவனமாய் கற்றுக் கொள்கிறார்கள் . (அவர்கள் பண்பாட்டுடன் வாழ்வதில் நாம் இப்போது மோகம் கொள்கிறோம், நாம் வாழும் நிலையை பார்த்து வெட்க படுகிறோம் )

ஆசியர்கள் (குறிப்பாக இந்தியர்கள் )இயல்பிலேயே பண்பாடு மிக்கவர்கள் அது வரலாற்றை கவனித்தாலே புரியும் , போரில் கூட விதிகள் வைத்துதான் போரிடுவார்கள் (சூரியன் மறைந்தால் போர் கிடையாது, எதிரி வாள் கொண்டுவந்தால் வாளால் மட்டுமே சண்டை ) மற்றும் பல ... இது அவர்கள் போராட்ட குணத்தை கற்றுகொள்ளும் நேரம் . ஆனால் கற்றுகொடுக்கவும் ஆள் இல்லை கற்றுகொள்ளும் பக்குவமும் நூறு ஆண்டுகள் முடிந்தும் வரவில்லை.

தலைமைகள் மக்களின் போராட்ட குணத்தை மழுங்கடிப்பதில் மிக மிக கவனமாய் இருக்கின்றன (என் சொல்லுக்கு தலையை ஆட்டுபவர்கள் மட்டுமே என் கூட்டத்தில் இருக்க முடியும் என்பதே இங்கு எல்லா தலைமைகளின் கட்டாயமாக இருப்பதை நாமே கண்கூடாக பார்க்கிறோம் )

காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை ஆனால் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க போகிறோமோ தெரியவில்லை ஜி....

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் ஒரு சின்ன திருத்தம். தலைமையில் உள்ளவர்கள் மட்டும் அல்ல. நாம் அன்றாடம் பழகும் நபர்கள் கூட தான் சொல்வதை மட்டும் தான்கேட்க வேண்டும் என்ற குறுகிய வட்டத்திற்குள் தான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது. மேலே ஈஸ்வரன் அய்யா கோடிட்ட வார்த்தைகளை பார்த்துக் கொள்ளவும்.

எவரோ எப்போழுதோ போராடியதன் விளைவு தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை சந்தோஷங்களும்.