Showing posts with label தற்போதைய கல்வி. Show all posts
Showing posts with label தற்போதைய கல்வி. Show all posts

Sunday, October 21, 2012

அத்தனைக்கும் ஆசைப்படு



கல்லூரிக்கு வெளியே சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.  மாலை நான்கு மணி.   கல்லூரியில் வகுப்புகள் முடிந்து பெரும்பாலான மாணவர்கள் வெளியே சென்று விட்டனர்.  ஒரு வசதியான வாகனத்தில் வந்திருந்த ஒரு பெரியவருடன் ஒரு மாணவர் நின்று கொண்டுருந்தார்.

நணபர் அவர்களுடன் உரையாடிவிட்டு என்னை அனுப்ப மற்றொருவரை ஏற்பாடு செய்து இருந்தார்.  கல்லூரியை விட்டு வெளியே நடந்து வரும் போது அவர்கள் பேசிக் கொண்டுருந்ததை மனதில் அசைபோட்டுக் கொண்டே வந்தேன்.

அங்கே இருந்தவர் நண்பரிடம் உறுதியாகச் சொன்னது தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும். அதிர்ச்சியாகவும் இருந்தது.

“இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது.  மகனை தொடர்ந்து கல்லூரிக்கு வர அனுமதியுங்கள்.  அவர் பாடங்களில் தேர்ச்சியடைந்து வருவதை விட கல்லூரியில் மூன்று வருடங்கள் படித்தான் எனபது தான் எங்களுக்கு முக்கியம். எங்கள் தொழிலைப் பார்த்தாலே போதுமானது” என்றார்

நண்பரோ விடாப்பிடியாக இருந்தார்.

“இவன் ஒருவனே இங்கிருக்கும் அத்தனை பேர்களையும் கெடுத்து விடுவான்.  உங்கள் வசதியும் பணமும் இவனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட கல்லூரியில் எந்த அளவுக்கு சீர்கேட்டை உருவாக்க வேண்டுமோ அந்த அளவுக்கு உருவாக்கிக் கொண்டுருக்கின்றான். இவனை மேற்கொண்டு இங்கே வைத்திருப்பது எங்கள் கல்லூரிக்குத்தான் பிரசச்னை.  நல்லபடியாக இவனின் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்று விடுங்க”. என்றார்.

பிரச்சனையின் மொத்த ரூபமும் புரிந்தது.

எப்போதும் போல பணக்கார வீட்டு மாணவர்கள் செய்யும் சில்மிஷ விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தவனால் உருவான பிரச்சனை இது.

இன்றைய இந்தியாவில் திடீர் பணக்காரர்கள் நிறைய பேர்கள் உருவாகி உள்ளனர். எப்படி இவர் குறுகிய காலத்திற்குள் சம்பாரித்தார் என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை. ஆனால் அவர் வசதியாகி வாழ்க்கை சிறப்பாக வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்ற அங்கீகாரம் தான் தேவையாக இருக்கிறது. அதற்குத் தான் ஒவ்வொருவரும் முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு தேவைப்படும் வசதிகள் என்பது இன்றைய சூழ்நிலையில் இயல்பானதாகி விட்டது.

இன்றைய சமூகத்தில் ஏழை என்பதன் அர்த்தமும் வேறு விதமாக உள்ளது.

50 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஏழை என்பவன் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி  எவர் தயவிலோ அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தவன். அவனால் சுயமாக யோசிக்க முடியாத அளவுக்கு அவன் மேல் பல பாராங்கள் சுமத்தப்பட்டு இருந்தது.  ஆனால் இன்று அடிமை என்பது சற்று மாறுதலாகி உள்ளது.  ஆசைகள் தான் இன்றைய வாழ்க்கையில்  உங்களை அடிமையாக வைத்துள்ளது. உங்களுக்கு ஆசை அளவானதாக இருந்தால் நீங்கள் யாருக்கும் அடிமையில்லை.  அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்.

ஒப்பீட்டளவில் இன்று அடிமைகளின் தன்மை மாறியுள்ளது. வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் சமூக வாழ்க்கை சற்று மேம்பட்டுத்தான் இருக்கிறது.  அவரவர் பார்வையில் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொள்ள முடியும்.

இன்றும் தமிழ்நாட்டில் செங்கல் சூளை போன்ற இடங்களில் கொத்தடிமை முறை இருந்த போதிலும் அது நீடித்து செயல்பட முடிவதில்லை. பலரின் பயத்தின் தன்மையில் தான் இந்த அடிமைகளை உருவாக்க முடிகின்றது. தவிர்க்க முடியாத பொருளாதார நிர்ப்பந்தம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் உழைக்கத் தயாராக இருந்தால் எந்த இடத்திலும் பிழைப்பதற்கான வழி கொட்டிக் கிடக்கின்றது. பழைய காலத்தில் நடந்த பஞ்சங்கள் எதுவும் இன்றைய சூழ்நிலையில் இல்லை. எளிதாக மீண்டு வந்து முடிகின்றது.  வீணாகிக் கொண்டு இருக்கும் தானியங்களை சேமித்தாலே போதுமானதாக இருக்கின்றது.  ஊழல் என்பது தேவைக்காக என்பதைத் தாண்டி அதுவொரு கௌரவம் சார்ந்தாக மாறியுள்ளது.

முறையற்ற செயல்பாடுகள் எதுவும் இப்போது சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட முடிவதில்லை. அவரவர் வளைத்தாலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுருந்தாலும் ஏதோவொரு சமயத்தில் செல்வாக்கு இழந்து விடுகின்றனர். காரணம் ஊடகம். இன்று உள்ள நவீன   வசதிகளால் கிடைத்த ஊடகமென்பது  ஒவ்வொரு நொடியும் உங்களை கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது.

உங்களின் தேவைகளை புரிந்து கொள்கின்றது. தேவைகளை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்துகின்றது. கனவு காணுங்கள் என்று சொல்கின்றது. ஆசைகளை அதிகமாக்கி உங்களை ஆவலாய் பறக்க வைக்கின்றது. அடைகாக்கும் கனவுகளை குஞ்சாக மாறுவதற்குள் அதை நஞ்சாக்கவும் மாற்றுகின்றது.

இங்கு எதுவும் சாத்தியம். ஒரு வகையில் தவறு செய்பவர்களை  ஆதரிப்பது முதல் அவர்களை யோசிக்க வைப்பதும் வரைக்கும் அத்தனையும் சாத்தியம். அவர்களை கடைசியாக தலை குப்புற கவிழ வைத்துக் கொண்டுருப்பதும் இன்றைய ஊடக சுதந்திரமே..

ஊடகங்கள் தான் இன்று நல்லதுக்கும் கெட்டதுக்கும் உண்டான அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு வினாடியும் நம் முன்னால் துப்பிக் கொண்டே இருக்கின்றது. வீட்டில் இருக்கும் வசதிகள் ஒவ்வொருவரின்  மனதையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அவரவர் எல்லைகளை விரிந்தும் சுருங்கியும் போய் விடுகின்றது. தப்பில்லை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற தைரியத்தை தருகின்றது.

தைரியங்கள் அங்கீகாரத்தை பெறும் போது அதுவே மற்றவர்களுக்கு வழியைக் காட்டி விடுகின்றது.


பெற்றோர்களுக்கு சவால்கள் தான் வாழ்க்கையாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஓயாத போராட்டத்தை உருவாக்கும் நாளாக இருக்கின்றது. வறுமையைத் துரத்த வேண்டும் என்பதை விட வாழ்க்கைக்கு தேவைப்படும் வசதிகளை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருக்கின்றது. செய்து கொண்டுருக்கும் வேலைகளுடன் வேறு சில தொழிலையும் செய்ய வைக்கின்றது.

தொழிலை கவனிக்கும் நேரத்தில் தங்களின் வாரிசுகளின் செயல்பாடுகளை கவனிக்க மறந்து விடுகிறார்கள். புற்றுநோயைப் போல வளர்ந்த மனம் நிலைகொள்ளாமல் தவிக்கத் தொடங்குகின்றது. கேள்விகள் அதிகமாக ஒவ்வொரு பழக்கமாக கற்றுக் கொண்டு அடுத்தடுத்து என்று தாவத் தொடங்கி விடுகின்றது.  மிக விரைவில் படிப்பைத் தவிர அத்தனையும் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

பேசிப்பழக நேரம் இருப்பதில்லை.  பேசினாலும் முடிவு தெரிவதில்லை.  தலைமுறை இடைவெளி என்பது நாளுக்கு நாள் அதிகமாக ஒவ்வொருவரின் மனமும் தனித்தீவாக வாழத் தொடங்கி அதுவே இறுதிவரையிலும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் போய் நின்று விடுகின்றது.

குடும்ப அக்கறை என்பது குடும்ப கௌரவம் என்பதாக மாறி பணத்தின் மீது உள்ள வெறி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.  பணம் இருந்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற எண்ணம் உருவாக அதைத் தவிர வேறு எது குறித்தும் சிந்திக்க நேரம் இருப்பதில்லை.

பணமே கதி பணமே குறி பணமே வாழ்க்கை என்ற வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் உரிய அங்கீகாரத்தை பெற்று விட முடிகின்றது.

தவறுகளின் அளவுகோல் என்பது அவரவர் வைத்துள்ள வசதிகளை வைத்தே இங்கே தீர்மானிக்கப்படுகின்றது.

அது பெரிய இடத்து சமாச்சாரம் என்று பூசி முழுகப்படுகின்றது. இது தான் இன்றைய மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றது.

வாழ்க்கைக்கு தேவைப்படும் கல்வி என்பது மாறி கல்விக்குண்டான வாழ்க்கை என்பது வரைக்கும் வளர்ந்துள்ளோம்.  இது படித்தால் இப்படி ஆகலாம் என்ற கனவுகள் வளர்க்கப்பட்டு அதன் பாதையில் தான் பெரும்பாலனோரின் பயணம் இருக்கிறது. அளவோடு ஆசைப்படு என்பது மாறி அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக தத்துவம் புகட்டப்படுகின்றது.

அளவற்ற திறமையில் உள்ள நம்பிக்கை சுற்றியுள்ளவர்கள் மேல் கவனம் வைக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை மாறிவிடுகின்றது.

இதுவே பலசமயம் பலவிதமான நெருக்கடிகளை உருவாக்குகின்றது.  ஒவ்வொரு நெருக்கடிகளும் ஓயாத மனப்போராட்டங்களை உருவாக்குகின்றது.  ஆனால் இதை அடைய இப்படி வாழலாம் என்பதை இயல்பாக எடுத்துக் கொண்டாகி விட்டது.

நண்பருடன் பேசிக் கொண்டுருந்தேன்.

"எப்படி உங்க குழந்தைகளை இங்கே படிக்க வைக்கீறீங்க?  வேற பள்ளியில் சேர்க்கலாமே?" என்றார்,

ஏன்?  என்றேன்.

"என்னத்த சொல்றது.  நாலு வருஷம் படிக்கிறார்கள். இன்னமும் தெளிவாக இங்கீலீஷ் பேச தெரியல."

சிரித்துக் கொண்டேன்.

சொன்னவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதை விட வாசிக்கக் கூட தெரியாது.  ஆனால் வசதிகளை எப்படியே பெருக்கிக் கொண்டார்.  கையில் பணம் இருப்பதால் குழந்தைகளின் கல்வி என்பதை தன்னுடைய கௌரவமாக பார்க்கின்றார்.

வேறு பள்ளிக்கு மாற்றினார்.

கடைசியாக சந்தித்த போது....

"இரண்டு குழந்தைகளையும் ஏற்காடு கொடைக்கானல் பக்கம் கொண்டு போய் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன்" என்றார்.

அவரே காரணத்தையும் சொன்னார்..

"மனைவிக்கு படிப்பறிவு இல்லை.  வீட்டில் அவர்களால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்க சிரமாக இருக்கிறது.  ஹாஸ்டல் என்றால் அங்கேயே பார்த்துக் கொண்டு விடுவார்கள்" என்றார்.

குழந்தைகளின் மேல் நாம் வைக்கும் பாசம் என்பது இப்போது அக்கறை என்பதாக மாறியுள்ளது.  அந்த அக்கறைக்குப் பின்னால் உள்ளதை கூர்ந்து கவனித்தால் அது அறியைமை என்று கூட சொல்லலாம்.

இது தான் இன்றைய சமூகம்

"என்னோட பையன் ஏற்காடு காண்வெண்ட்டில் படிக்கிறான்.  உங்க பையன் இங்கே தான் படிக்கிறானா? " என்று கேள்விக் குறியோடு கேட்க வைக்கின்றது.

வாழ்க்கையில் ஏக்கமும், பெருமூச்சும் இருக்கும் போது மனதில் இருக்கும் கனவுகளுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இயல்பாகவே தோன்றுகின்றது.

உழைக்க விரும்பாத மனங்களுக்கு குறுக்குப்புத்தியும் உருவாகத் தொடங்கி விடுகின்றது.


சமீபத்தில் பல்லடத்திற்கு அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியை செய்திதாளில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

எம்.பி,ஏ படித்த இரண்டு மாணவர்கள் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார்கள். சென்னையில் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்துள்ளனர்.  ஒவ்வொரு இடமாகச் சென்று அந்த நிறுவனத்தின் பொருட்களை விற்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.

குறிப்பிட்ட கடைகளில் அந்த பொருட்களைப் பற்றி விவரித்து சொல்லி அதற்கான ஒப்பந்தங்களை பெற்று விட்டால் வேறொரு குழுவினர் வந்து அந்த பொருட்களை அந்த குறிப்பிட்ட கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.

ஆனால் இவர்களால் அலைய முடியவில்லை.  மனம் குறுக்கே திரும்பியது.

வேலையை விட்டு வெளியே வந்தனர்.  வந்ததோடு மட்டுமல்லாது அந்தகுறிப்பிட்ட நிறுவனத்தின வண்டி எந்தப் பாதையில் வரும்? எப்போது வரும் என்பதை கணக்கில் வைத்துக் கொண்டு கொள்ளையடித்து அந்த பொருட்களை தாங்கள் திட்டமிட்டு வைத்துள்ள இடத்திற்கு கொண்டு வர நினைத்தனர்.

மாட்டிக் கொண்டனர்.

இன்றைய கல்வி மட்டும் இது போன்ற வாழ்க்கையை கற்றுக் கொடுக்கவில்லை. இது தான் சரியான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டுருக்கும் நாமும் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றோம்.

குடிப்பழக்கத்தில்  மாட்டிக்கொள்ளும் இளையர்களும், அடிப்படை சமூக அக்கறையில்லாமல், வாழ்க்கைக்கு அறம் என்பது தேவையில்லை என்பதாக வளர்த்தெடுக்கும் கல்வியும் உள்ள மாணவர்களை நம்பி எதிர்கால இந்தியா வல்லரசாக மாறப் போகின்றது. இந்த மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவை வடிவமைக்கப் போகின்றார்கள்.

நாம் கற்றுக் கொள்ளப் போகும் பாடங்கள் நம் முன்னால் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றது?