Tuesday, October 16, 2012

புத்தகங்களை நேசிக்காதீர்



இந்த முறை புதுக்கோட்டைக்கு சென்ற போது எனக்காக பல கடமைகள் வரிசையாக காத்திருந்தது. உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய கடமைகள், காலாண்டு விடுமுறையைக் கொண்டாட வந்தவர்களை அழைத்து வர வேண்டியது என்று சொந்த விசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வேறு இரண்டு முக்கிய கடமைகள் இருந்தது.  25 வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பரை சந்திக்க மற்றும் ஒரு சிற்பபான தனியார் நிர்வகிக்கும் நூலகத்தை பார்க்க வேண்டிய ஆவல்.

ஊரில் பழக்கமான ஒத்த வயது உள்ள நான் கல்லூரிக்குச் சென்ற போது தொழில் நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) படித்துக் கொண்டுருந்த நண்பர் தற்போது குன்றக்குடி அருகே உள்ள ஒரு தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் முதல்வராக பணியில் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பு தெரிந்தது.  பள்ளி கல்லூரியில் என்னுடன் படித்த, மற்றும் அறிமுகமான மற்றவர்களின் தற்போதைய நிலைப்பாடுகளை எழுத வந்த பிறகு அதிகம் கவனித்துப் பார்க்கின்றேன். 


ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பிறகு வேறொரு நண்பணிடம் அவரின் அலைபேசி எண் வாங்கி அழைத்த போது ஆச்சரியப்பட்டு போனார். என் நண்பனுக்கு நண்பன். எனக்கு நண்பர். மாலை நேரங்களில் எங்களுடன் படிக்க வரும் போது ஒன்றாக பார்த்து உருவாகிய நட்பு. ஒத்த கருத்து உள்ளவர். தனது கொள்கையில் உறுதிபாட்டுடன் இருந்தவர். எங்களுக்கு விபரம் தெரியாத அப்பொழுதே இறை மறுப்பு கொள்கையில் மிக ஆர்வமாக இருந்தவர். நான் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளேன் என்று அவர் காட்டிய கவிதை கடிதத்தை படித்த போதே எனக்கு பயம் வந்தது. இரண்டு நாட்கள் இவர்கள் பக்கம் தலைவைத்துப் படுக்கவே இல்லை.

காலம் உருவாக்கும் மாற்றங்கள் ஆச்சரியமானது. 

பத்தாவது வரைக்கும் படு மக்காக இருந்தவர் பனிரெண்டாம் வகுப்பில் பட்டையை கிளப்பி ஆச்சரியம் தந்துருக்கிறார். பனிரெண்டு வரைக்கும் நொண்டியடித்தவர் கல்லூரி படிப்பில் கலங்கரை விளக்கம் போல இருந்து அதிர்ச்சியளித்துள்ளார். 

இது போல பலரையும் பார்த்து ஆச்சரியப்பட்டுருக்கேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பனிரெண்டாம் வகுப்பு கணக்கு பாடத்தை அட்டகாசமாக நடத்திக் காட்டிய நண்பன் ஒருவன் இருந்தான்.  ஆனால் விதி செய்த கோலம் அவனால் கல்லூரி வரைக்கும் வர முடியாமல் நெல் அறவை மில்லுக்கு தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தான். கல்லூரி செல்லும் எங்களை வேதனையுடன் பார்த்துச் சென்ற காட்சி இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது.

இவர்கள் அனைவரும் நம்மைவிட சூரப்புலியாக கல்லூரிப்பாடங்களில் கலக்குவார்கள் என்று நம்பியவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிக்கு வந்த பிறகு கலக்கினார்கள். பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு சோடா சேர்த்து கலக்கினார்கள்.

ஏன் பெற்றோர்கள் பயத்தை உருவாக்கி அதையே ஆயுதமாக்கி வளர்த்தார்கள் என்பதை தற்போது உணர முடிகின்றது. கூடவே தலைமுறை இடைவெளி என்பதும், குழந்தைகள் நம் வாழ்க்கையில் வந்த பிறகு உருவாகும் மாறுதல்களையும் தற்போது உணர முடிகின்றது. 

சுதந்திரம் என்பது கத்தியைப் போன்றது.  கவனமாக கையாள வேண்டும்.

கல்லூரியில் கிடைத்த சுதந்திரம் என்பதன் முழு அருமையை உணராமல் கலக்கியவர்கள் குறுகிய காலத்தில் அழிந்தும் போனார்கள். ஆனால் இதிலும் சில விதிவிலக்குகளை பார்க்க முடிந்தது.  பாடங்களைத் தவிர மற்ற அத்தனை விசயங்களையும் கற்றுக் கொண்டவர் சென்றமுறை காரைக்குடி நகராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆட்சி மாறியது. வாங்கிப் போட்ட சொத்துக்களுடன் இன்று கௌரவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார். இன்று வரையிலும் கல்லூரிப் படிப்பில் வைத்திருந்த பாடங்களை எழுதி தேர்ச்சியடையவில்லை. வாழ்வில் சமூகம் எதிர்பார்க்கும் பணத்தில் தேர்ச்சி பெற்று 20 லட்சம் வாகனத்தில் பயணிக்கின்றார். 

இவரைப் போல மற்றொருவர் சாதி அரசியலில் ஆர்வமாக இருந்தார். வளர்ந்தார்.  அதிமுகவில் உள்ள சாதி லாபி இவரையும் வளர்த்தது.  இன்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.  கோடிக்கணக்கான மனைவியின் சொத்துக்களை இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

கல்லூரிக்கு வந்தவன் பாடத்தை படிக்காமல் படிக்க வந்தவர்களை மதம் மாற்றும் வேலையில் இறங்க அத்தனை பேர்களும் அவனைக் கண்டாலே ஓட்டம் பிடித்த கதையும் உண்டு. கடைசியாக அவனை சந்தித்த போது மதவாதிகளால் பாதிக்கப்பட்ட அவன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டான். அவன் பார்த்த கர்த்தர் வேறு. ஆனால் கர்த்தர் எனக்கு காட்டிய மனிதர்கள் வேறு என்பவனிடம் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.

வாழ்க்கை அழகானது. அதே சமயத்தில் கொடுமையானதும் கூட. நாம் அணுகும் விதத்தில் தான் அதன் உண்மையான ரூபங்களை புரிந்து கொள்ள முடியும். 

இது விதிக்கப்பட்ட விதியா?  இல்லை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன நகலா? போன்ற ஆயிரம் கேள்விகளை இன்று வரையிலும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.

கல்லூரியில் நான் கண்ட கேண்டீன் எனக்கு ஆச்சரியமான விசயமாகும்.  உணவகம் என்பது எனது தொடக்க அன்றாட வாழ்க்கையில் சம்மந்தம் இல்லாத ஒன்று.  வீட்டுச்சாப்பாட்டைத் தவிர அவசியமில்லாத வாழ்க்கை வாழ்ந்த எனக்கு கல்லூரியில் இருந்த கேண்டீனும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.  அதைப் போலவே கல்லூரிக்குள் இருந்த நூலகமும்.

ஊருக்குள் நாங்கள் படிக்கும் நூலகத்திற்கும் கல்லூரியில் பார்த்த நூலகத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிந்தது. அழகும், நேர்த்தியும், துறை வாரியான புத்தகங்களும், நூலகம் இருந்த சூழ்நிலையும், இதுவரையிலும் பார்த்தேயிராத பல்வகை தனிப்பட்ட வார, மாத ஆங்கில இதழ்கள் என்று முதல் இரண்டு நாளும் தடவி சுகம் கண்டு வந்து விடுவேன். இது தவிர ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான நூலகமும் இருந்தது.  

எங்கு திரும்பினாலும் புத்தகங்கள்.  எது குறித்தும் புத்தகங்கள் வாங்க முடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் பாடங்களுக்குரிய புத்தகங்கள் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்ற வாழ்க்கை மாறி ஒரு விசயத்திற்கு வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக எழுதியிருப்பார்கள் என்பதையே தொடக்கத்தில் நம்பமுடியவில்லை. மனப்பாடம் செய்வது மறந்து மகத்தான் உண்மைகள் ஒவ்வொன்றாக புரியத் தொடங்கியது.

தலையணை அளவு உள்ள அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு பேரூந்தில் ஊருக்கு வரும் போது ஒலிம்பிக்கில் ஜெயித்து தங்கப்பதக்கம் வாங்கி வரும் பெருமை போல இருந்தது. நம் கையில் இருக்கும் அந்த பெரிய ஆங்கில புத்தகங்களை பார்ப்பவர்களின் பார்வை கூட வித்தியாசமாக இருப்பதாக முதல் வருடம் தோன்றியது.  ஆனால் அதற்குள் முழ்கிய போது நாம் எந்த அளவுக்கு சுருங்கிய நத்தையாகவே பள்ளிப்படிப்பில் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  

கல்லூரி செல்வதற்கு முன் படித்த புத்தகங்கள் அத்தனையும் கதைகள் சார்ந்த புத்தகமாக இருந்த காரணத்தால் கல்லூரியில் இருந்து எடுத்து வரும் புத்தகங்கள் அனைத்தும் தூக்கத்தைத் தான் கொண்டு வந்து சேர்ந்தது. ஆனால் கனவுகள் நம்மை துரத்த அதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கியது.

இது போன்ற பல எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு நண்பரை அவரின் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரின் வியப்பு எனக்குப் புரிந்தது. வரச் சொல்லியிருந்தார். வருவதாக உறுதியளித்து இருந்தேன். இந்த சமயத்தில் அவரையும் பார்த்து விட வேண்டும் என்பதோடு தற்போதைய கல்வியின் சூழ்நிலையை அருகே சென்று பார்க்கும் ஆவலும் உருவானது. காரணம் நான் படிக்கும் போது பாலிடெக்னிக் என்ற படிப்பு தேவதூதர்கள் படிக்கும் படிப்பாக உயரத்தில் இருந்தது. 

400 மதிப்பெண்கள் வாங்கினால் தான் நினைத்தே பார்க்க முடியும். பத்தாம் வகுப்பில் ஒரு வருடத்தில் நாலைந்து பேர்கள் தான் 400 மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் தற்போது பாதிக்குப் பாதி பேர்கள் 400 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.  வீதிக்கு ஒன்றாக பாலிடெக்னிக் மற்றும் பி.ஈ. படிப்புகள் வந்து விட்டது.  மனதில் பல விசயங்களை அலைமோதிக் கொண்டுருக்க முதலில் உறவுகளுடன் உறவாடச் சென்றேன்.

உறவுகள் என்பது தற்போது அலைபேசி உறவுகளாகத்தான் இருக்கிறது. அக்கா, தங்கை, அம்மா என்ற பாரபட்சம் எதுவுமில்லை. நினைத்தால் அழைக்கலாம். பேசலாம். ஆனால் வீட்டில் இருந்தபடியே பழைய நினைவுகளை அசைபோட்டு அலசி காயபோட்டு சண்டை போட்டு விரும்பியதை கேட்டு வாங்கி தினறு ஊரில் நடந்த நடக்கும் கிசுகிசு சமாச்சாரங்களைக் கேட்பது என்பது ஒரு தனிசுகம்.  

குறிப்பாக நாக்கை சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் சாப்பாடு மேல் ஒரு தீராத காதல் உண்டு.  அந்த காதலை இந்த முறை நின்று நிதானமாகவே அனுபவிக்க முடிந்தது.  கொறிக்க ஏகப்பட்ட கிசுகிசுக்களும் கிடைத்தது. சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் தற்போதைய நிலவரம் முதல் செத்துப் போன பல் ஆத்மாக்களைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

வெட்டப்பட்ட மரங்களை, வெகு தூரத்தில் உள்ள உறவுகளை, குழந்தைக்கு தவமிருப்பவர்களை, பெற்ற குழந்தைகளை கவனிக்காமல் பொருந்தா காதலில் குறியாக இருப்பவர்கள் என்று பலதரப்பு மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அலசி பேசி விவாதம் பண்ண முடிந்தது. சட்டி பாத்திரம் போல அந்த சின்ன அறைக்குள் பல சங்கதிகளை உருட்டி விளையாட முடிந்தது.

உடன் பிறந்தவர்கள் என்றாலும் வாழும் இடமும், வாழ்க்கைச் சூழலும் அவர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்து விடுகின்றது.  வளராத மனமும், தெரிந்து கொள்ள விரும்பாத உலக நடப்புகளும் ஒன்று சோர்ந்து நமக்கு புதிய உருவத்தை அறிமுகம் செய்து வைக்கின்றது.

உனக்கு ஏன்டா தேவையில்லாத இந்த வேலை? என்று கேள்விகள் நம்மை வரும் போதே நாமும் பல கேள்விகளை கேட்டு விட முடியும்.  ஆனால் அது போன்ற சமயங்களில் அமைதி காப்பதே நாம் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தந்த பாடமாக இருப்பதால் அத்தனைக்கும் பொறுமை காத்து விடு மனமே என்று கட்டளையுடன் உறவாட முடிந்தது.

ஆனால் நகர வாழ்க்கை என்பது அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாகவும் கிராமம் சார்ந்த நகர வாழ்க்கை என்பது அளவோடு ஆசைப்படு என்பதாக இரு வேறு தளங்களில் இயங்குவதாக என் கண்களுக்கு தெரிகின்றது.

வீட்டில் அப்பா அம்மா புத்தகங்கள் எதுவும் படிப்பவர்கள் இல்லை.  அப்பா நான் பார்த்த கடைசி காலம் வரைக்கும் தினமணி தவிர வேறு எதையும் தொட்டுப் பார்த்ததே இல்லை.  ஆனால் நானும் சரி உடன்பிறந்தவர்களும் சரி ஒரு துண்டு பேப்பரைக்கூட விட்டு வைப்பதில்லை.  பொட்டலம் மடித்து வரும் அழுக்கு காகிதம் கூட எங்களுக்கு வாசிக்க உதவிய தாள்கள் தான். 

இந்த விசயத்தில் தான் வீட்டில் அணைவரும் ஒரே மாதிரியாக இன்று வரைக்கும் இருக்கின்றோம். படிப்பதில் மட்டும் ஆர்வம் குறையவே இல்லை.  ஆனால் படித்த விசயங்களை அசைபோடுவது முதல் ஆழ்ந்து யோசிப்பது வரைக்கும் பலவிதங்களில் மாறுதல்கள் தெரிகின்றது.

படிப்பது என்பது படங்கள் பார்ப்பது போல பொழுதுபோக்கு என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  அதுவொரு தொடர் வேலையல்ல.  பொழுதே போகாத சமயங்களில் படிக்க வேண்டிய புத்தகக்ஙள என்பதாகத்தான் இந்த வாசிப்பு அனுபவத்தை குறிப்பிடுகிறார்கள்.

நண்பர் அறிமுகப்படுத்திய ஒரு எழுத்தாளர் அலைபேசியில் என்னிடம் பேசிய வார்த்தைகள் இன்னமும் மனதில் நெருஞ்சி முள் போலவே குத்திக் கொண்டே இருக்கிறது.

"வீட்டில் 30,000 புத்தகத்திற்கு மேல் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் புத்தகமாகத்தான் இருக்கும்.  பெரும்பாலும் வெளியே கிடைக்காத குறிப்புகள் எடுப்பதற்காக வைத்திருக்கும் புத்தகங்கள் அது.  ஆனால் என் மனைவிக்கு அது குறித்த புரிதல்கள் இல்லை.  எவராவது வந்து பேசும் போது என் கணவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் இது தான் என்று புலம்புவார்.  இதை வைத்து அடுப்பு கூட எறிக்க முடியாது என்று தனது ஆத்திரத்தை கொட்டுவார்.  அமைதியாகவே இருந்து விடுவேன் " என்றார்.

புத்தகங்களை நேசிப்பவர்களின் வாழ்க்கை சொல்லும் அனுபவங்கள் பல. நான்  சந்திக்க சென்ற நண்பரும் புத்தகங்களை நேசித்தவர் தான்.

அவர் தன்னுடைய மாணவர்களுக்கு தன்னுடைய புத்தக நேசிப்பை எப்படி புரியவைத்துள்ளார் என்பதை பார்க்கும் ஆவல் இருந்தது.  குன்றக்குடிக்கு பயணித்தேன்.

மீதி அடுத்த பதிவில்..........

Thursday, October 11, 2012

தண்ணீரில் விளையாடிய நாடுடா இது?



திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் தான் நான் பார்த்த காட்சிகள் ஆச்சரியமளித்தது.  தண்ணீர் பாட்டிலை சுமந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது. பேரூந்தோ அல்லது ரயிலோ பெருநகரங்களை தாண்டும் போதே ஒவ்வொரு விசயத்திலும் சில மாறுதல்களை கூர்மையாக கவனிக்கும் போது புரிந்து கொள்ள முடியும். இந்தப் பக்கம் உள்ள மக்கள் வீட்டில் இருந்து தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வந்து விடுகின்றனர். நான் பார்த்த எவர் கையிலும் 'பிராண்ட்' பொறித்த தண்ணீர் பாட்டில் இல்லை.

நகர்புறங்களில் வாழும் மனிதர்களிடத்தில், இரண்டு கைகளைப் போல வேறு இரண்டு சமாச்சாரமும் கட்டாயம் இருக்கிறது. ஒரு கையில் கைப்பேசி மற்றொரு கையில் தண்ணீர் பாட்டில். ஓட்டாமல் பிறந்த இரட்டையர்கள் போலவே இவையிரண்டும் தற்போதைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாக இருக்கிறது.  

கொறிக்க... சுவைக்க... என்பது போல பேச... குடிக்க... என்பது தான் தற்போதைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. .சிறு நகரங்களில் பெப்ஸி, கோக் என்பதும் இன்னும் அதிக அளவு ஊடுருவ இல்லை.  மனிதர்களின் மனோபாவம் என்பது மாறிக் கொண்டுருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் செலவழிக்கும் பணத்தை கணக்கு பார்த்து தான் செலவழிக்கிறார்கள். அவசரம், அவசியம், அத்யாவஸ்யம் போன்ற வித்யாசங்களை உணர்ந்தே வாழ்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் எப்படியோ? தமிழ்நாட்டில் தண்ணீர் என்பது இன்று லாபம் கொழிக்கும் வியாபாரம். சென்னையில் மட்டும் ஒரு நடுத்தர வர்க்கம் வாழ்வதற்காக மாதம் தோறும் தண்ணீருக்கு மட்டும் செலவழிக்கும் தொகை 3,500 ரூபாய். காரணம் குடும்பமே விலைக்கு வாங்கித் தான் தங்கள் குடிதண்ணீர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நான் பார்த்த கடையில் இரண்டே இரண்டு சமாச்சாரங்கள் தான் அதிக அளவு இருந்தது.  அதுவே தான் அந்த ஒரு மணி நேரம் முழுக்க அதிக அளவு விற்பனையும் ஆனது.

சிப்ஸ் வகைகள் மற்றும் விதவிதமான தண்ணீர் பாட்டில்கள்.அதுவொன்று இதுவொன்று என்று அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.

வினோதமான காலசக்கரத்தில் நாம் பயணித்துக் கொண்டுருக்கின்றோம்.  .எது தேவையோ அது முக்கியத்துவம் இல்லாமல் தெருவுக்கு வந்து கிடக்கிறது.  எது வாழ்க்கைக்கு தேவையில்லையோ அதுக்கு தான் விளம்பரங்கள் மூலம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆசைகளுக்கு மேலும் மெருகேற்றப்படுகின்றது. அவசியமான விசயங்கள் விவாத பொருளாக மாற்றப்படுகின்றது. தங்கம் விலையை செய்திக்குப் பின்னே சொல்லும் ஊடகம் அரிசி விலையைப் பேசுகின்றதா? 


நாம் உண்ணும் உணவுக்கு முக்கியத் தேவை அரிசி.  ஆனால் அது இன்று விலையில்லா அரிசி என்ற பெயரில் கேவலமாக பார்க்கப்படுகின்றது. அதன் அருமையை உணராமல் கோழிக்கு பயன்படுத்த போய்க் கொண்டுருக்கிறது. தக்காளிக்கு விலையில்லை என்று மயானத்தில் போய் கொட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள். ஆனால் திடீரென்று இதே தாக்காளி ஜிவ்வென்று பறக்கும். ரசம் வைப்பதை மற்நது விடுவோம்.  

அப்போதைக்கு உண்டான பிரச்சனை.  அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்ந்து போய்விடுவதால் எதுவும் எளிதில் நம்மை பாதிப்பதில்லை.

சென்னையில் நண்பருடன் பேசிக்கொண்டுருந்தேன்.  அவர் தந்தைக்கு இதய நோய் பிரச்சனை.  வயதான காலத்தில் பெரிய அளவுக்கு சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?  ரேசன் அரசியை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.  

வினோதமாக இருக்கிறதா?  உண்மைதான்.  

நாம் வாங்கும் அரசியில் உள்ள அத்தனை சத்துக்களையும் பாலீஷ் செய்து பளபளப்பு என்பதற்காக அரைத்து ரகம் என்ற பெயரில் விற்கிறார்கள். கடைசியில் எந்த சத்தும் இல்லாத சக்கையைத்தான் அரிசி என்ற பெயரில் உண்ணுகின்றோம்.  மருத்துவர் சொன்னபடி நண்பரின் தந்தை மட்டுமல்ல குடும்பமே இன்று ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுகிறார்களாம்.  இதயப் பிரச்சனையில் உள்ள தந்தையும் நலமாகத்தான் இருக்கிறார்.

ஆனால் தற்போதைய நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமே சுவை தான். அதுவும் பளபளப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளிலும் விதவிதமான சுவைகளைத்தவிர நமக்கு வேறெதும் முக்கியமில்லை.

வந்து கொண்டுருக்கும் அத்தனை விளம்பரங்களையும் உற்று கவனித்துப் பாருங்கள். இரண்டு விசயங்களை முன்னிறுத்துவார்கள்.
  


கிருமியில்லா வாழ்க்கை.  சுத்தமான வாழ்க்கை.  
இது அவர்கள் பாணியில் ஆரோக்கிய வாழ்க்கை.  

இந்த சோப்பை,, பற்பசையை, வாய கொப்புளிக்க  வாங்குங்க என்று சொன்னால் கூட பரவாயில்லை.  வாங்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?  என்று பயங்காட்ட கிராபிக்ஸ் கிருமிகளை காட்டுவார்கள்.

வாயில் கொஞ்சமாவது கிருமியிருக்க வேண்டும்.  வயிற்றில் சிறிய அளவிலாவது குறிப்பிட்ட புழுக்கள் இருக்க வேண்டும்.  உடம்பில் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாக துடைத்து கழுவி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்குப் பெயர் உடம்பல்ல. வேறு பெயரைத் தான் சூட்ட வேண்டும்.

ஊரில் உறவினர் வீட்டில் குழாய் நீரைத்தான் அப்படியே பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள். பயத்தோடு கேட்டேன்.  சுருக்கமாகச் சொன்னார்கள்.

"பயம் தான்டா எல்லா நோய்க்கும் காரணம்."

உண்மைதான்.  பயம், கோபம், பொறாமை, சுயகௌரவம், தற்பெருமை இந்த பஞ்சபாணடவர்களைப் பற்றித் தெரியுமா?

இதய நோய் எந்த ஏழைக்கும் வருவதில்லை. மன அழுத்தம் அடித்தட்டு மக்களுக்கு வருவதில்லை, விளிம்பு நிலை மனிதர்கள் பொறாமை படுவதில்லை. 

அன்றாடங்காச்சிகளுக்கு சுய கௌரவம் பற்றித் தெரிவதில்லை.    பணம் குறைவாகத்தான் இருக்கும்.  ஆனால் மனம் முழுக்க எப்போதுமே மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.  

தெருவில் வாழ்ந்து தெருவிலே புரண்டு கிடக்கும் எந்த குழந்தைக்கும் ஏன் பெரிய நோய்கள் தாக்குவதில்லை.  காரணம் எதிர்ப்பு சக்தி உள்ளூற வலுவாக இருப்பதால் எப்போதும் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.  நாம் தான் அத்தனை எதிர்ப்பு சக்திகளையும் சுத்தமாக துடைத்து வா... வா.. என்று அத்தனை நோய்களையும் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறத்தானே செய்கின்றோம்.

தென்னக ரயில்வே ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு வைத்திருக்கும் விலை 8.50. விற்க வேண்டிய விலையின் அளவு 12 ரூபாய்.  ஆனால் இது எப்படி மாறுகின்றது தெரியுமா?  

அவசரம் இல்லாமல் நிதானமாக வந்து கேட்டால் 12 ரூபாய்.  சற்று அவசரமாய் வந்து கேட்கும் போது 15 ரூபாய்.  ரயில் நடைமேடையில் இருந்து நகரப்போகின்றது என்கிற நிலையில் போய் கேட்கும் போது 20 ரூபாய்.  நம் அவசரம் தான் கடைக்காரருக்கு முக்கியம்.  நமக்கோ குறிப்பிட்ட அந்த பிராண்ட் மட்டும் தான் முக்கியம்.  

விலையென்பது ஒரு பொருட்டே அல்ல.  உள்ளேயிருக்கும் தண்ணீருக்குப் பெயர் மினரல் வாட்டர்.  ஆனால் உண்மையிலேயே வைக்க வேண்டிய பெயர் மைனஸ் வாட்டர் என்று தான் வர வேண்டும்.

நாம் சாப்பிடும் அரிசி மற்றும் தண்ணீரைப் பற்றி எப்பொழுதாவது யோசித்து இருக்கீங்களா? 

அம்மாவிடம் இனிமேலாவது சாப்பாத்தி சாப்பிடு என்றால் கொலவெறியோடு என்னைப் பார்க்கிறார். "ஒரு வாய் கஞ்சி போதும்டா.. உன்னோட சாப்பாத்திய நீயும் உன்னோட பிள்ளைகளும் தின்னுங்க" என்பார், 


அம்மாவுக்கு அறிவுரை சொல்லும் எனக்கு சாதம் இல்லாவிட்டால் கோபம் தலைக்கேறுகிறது. குழந்தைகள் விதவித ருசிகளை விரும்பினாலும் சாதம் என்பது சாகாவரம் போலத்தான் அவர்களுக்கும் இருக்கிறது. 

இன்று உருப்படியான அரிசியின் விலை 40 ரூபாய். இதுவே ஒரு வருடம் பழையது. 6 மாதம் பழையது என்ற பெயரில் தான் சந்தைக்கு வருகின்றது. ஆனால் மாதம் மாதம் விலையேறிக் கொண்டுருக்கின்றேதே என்று வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்.  

இரண்டு மாதம் தொடர்ந்து அந்த மூட்டையைப் பிரித்து வெயிலில் காய் வைக்காமல் இருந்தால் கெட்டுப் போன அரிசியின் நிறமும் தரமும் மாறியிருக்கும்.  காரணம் அந்த லட்சணத்தில் தான் இன்றைய அரிசி இருக்கிறது.

உரத்தை கொட்டி கொட்டி நமக்கான ஆரோக்கியத்தை இன்றைய விவசாயம் தந்து கொண்டுருக்கிறது.  இந்த அரிசி தான் பாலீஷ் செய்து செய்து பளபளப்பாக உங்கள் கண்களை பறித்து இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கேட்டு வாங்கித் தின்னத் தோன்றுகின்றது. அரிசியில் இருக்கும் மொத்த சத்துக்களையும் அரைத்து மில்காரர்கள் தவிடாக மாற்றி விட்டு கடைசியாக அரிசி என்ற பெயரில் ஒரு உருவத்தை கொடுக்க நாமும் மாட்டைப்போல விதி வந்தால் சாகலாம் என்று தின்று முடிக்கின்றோம்.

வெற்றிகரமாக மன்மோகன் சிங் விவசாயிகள் பயன்படுத்தும் யூரியாவுக்கு மானியம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் அளிக்க ஒப்புதல் அளித்து உள்ளார். உரத்தின் விலை ஏறி விடும். ஆனால் விவசாயிகள் பாதிக்கபடக்கூடாதாம். ஆகவே மானியம் என்பதை விவசாயிகளுக்கு நேரிடையாக வழங்கி விடுகிறார்களாம். 

அதாவது நீ உரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது மறைமுக கட்டளை. பயன்படுத்தாமல் இருந்தாலும் பிரச்சனையில்லை. காரணம் அந்த நிலத்தில் எதுவும் முளைக்காது. ஏற்கனவே மலடாக இருக்கும் நிலத்தில் ஏதேவொரு உரத்தை கொட்டினால் மட்டும் தான் பயிரின் பச்சை என்பதையே பார்க்க முடியும். இந்தியாவின் இயற்கை விவசாயத்தை வளர்த்தால் என்னவாகும். பன்னாட்டு எஜமான்கள் மன் மோகனை பின்னி பெடல் எடுத்து விடுவார்கள்.  அவரவர் பாடு அவரவருக்கு.

இப்படித்தான் இப்போதுள்ள மினரல் வாட்டர் கதையும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பழைய கஞ்சியை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்.  மணிக்கணக்கான வைத்து சாப்பிடுவ்து முதல் சில நாட்கள் வைத்து சாப்பிடும் கஞ்சி வரைக்கும் அதன் மருத்துவ குணத்தை பிரித்துள்ளார்கள்.  அவர்கள் சொன்னது இப்போதுள்ள அரிசியின் அடிப்படையில் அல்ல. கடற்கரையில் விற்கப்படும் சுண்டக்கஞ்சி என்பது கூட இன்னும் கூடுதலாக சில நாட்கள் வைத்திருந்தால் அதுவே விஷம். 


இதைப் போலத்தான் நாம் அருந்தும் தண்ணீரும்.  மருந்துகளுக்கெல்லாம் தாத்தா ஒன்று உண்டு என்றால் அது தண்ணீர் மட்டும் தான்.  தண்ணீரில் இல்லாத மருத்துவ குணமே இல்லை. மனித உடம்புக்கு நீரே ஆதாரம்.

மினரல் என்று சொல்லக்கூடிய அத்தனை தாதுப் பொருட்களும் ஒரு சேர இருப்பது இந்த தண்ணீர் ஒன்றில் மட்டும் தான். ஆனால் நாம் வாங்கும் தண்ணீரில் உள்ள அத்தனை சத்துக்களையும் சுத்தம் என்ற பெயரில் எடுத்து விட்டு தான் அதை பாட்டிலில் அடைத்து தருகிறார்கள். 

தண்ணீரின் எந்த குணமும் இருக்காது.  குடித்தால் தாகம் கூட அடங்குவதில்லை. இந்த தண்ணீருக்குத் தான்  தமிழ்நாடு தற்போது பாடுபட்டுக் கொண்டுருப்பதைப் பார்க்கும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது.  நன்றாக வாசிக்கவும். வருத்தமாக இல்லை.  காரணம் நாம் செய்த செய்து கொண்டுருக்கும் விளைவுகளைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வியாதிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை எதிரியாக பாவித்து முடிந்தவரைக்கும் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டுருக்கிறார்கள்.  

ஆனால் இந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்து தமிழ்நாடு கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அங்குள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமையைப் போல இங்குள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் சர்வநிச்சயம்.  நம்மவர்கள் சாவு வீட்டில் கூட காசு பார்ப்பவர்கள். மாயனத்தில் ஊழல் செய்து காசு பார்க்கும் நம் அரசியல்வாதிகளிடம் நீங்கள் எது சொன்னாலும் எடுபடாது.. 

எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சராக இருந்து கொண்டு அவர் மாநிலத்திற்கு சாதகமாக இப்படி சொல்லிட்டாரே?  என்று அங்கலாய்த்துக் கொள்கின்றோம்.  அப்படி அவர் சொல்லாவிட்டால் அந்த மாநிலத்திற்குள் அவர் அடி எடுத்து வைக்க முடியாது.  காரணம் எதிர் கருத்து பேசி விட்டு உள்ளே நுழைய முடியாது. இடி போல விழும் ஒவ்வொரு அடியும்.  அவர்கள் வரப்போகும் சட்ட மன்ற தேர்தலுக்காக கூத்துக் கட்டி ஆடிக் கொண்டுருக்கிறார்கள் என்றாலும் நாம் காவேரி நீரை எப்படி பாதுகாக்கின்றோம் தெரியுமா?

காவேரி தலைக்காவிரியில் உருவாகின்றது என்பது அணைவருக்கும் தெரிந்ததே.  ஆனால் கர்நாடக அரசாங்கம் இந்த காவேரி நீர் வரும் பாதையில் எந்த தொழிற்சாலைகளையும்  செயல்பட அனுமதிக்கவே இல்லை. ஏறக்குறைய ஓகேனக்கல் வரைக்க்கும் இப்படித்தான். இந்த பகுதியில் ஓடி வரும் காவேரி நீரை பன்னீர் என்று சொல்லலாம். நீரில் பார்த்தால் நம் முகம் தெரியும். ஆனால் தமிழ்நாட்டுக்குள் வந்து விட்டால் இந்த காவேரியை நம்மவர்கள் கற்பழித்து கதற அடிக்கின்றார்கள். இந்த வார்த்தை எழுத வருத்தபடவில்லை.  

காரணம் ஈரோடு பக்கம் வருவ்தற்குள் இந்த தண்ணீர்படும் பாடு இருக்கிறதே?

உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் என்று திருப்பூரும் ஈரோடும் போட்டிக் போட்டுக் கொண்டு வாழ முடியாத நகரமாக மாறிக் கொண்டுருக்கிறது.  சுற்றியுள்ள அத்தனை பகுதிகளுக்கும் இந்த விஷம் பரவிக் கொண்டுருக்கின்றது. 

காவேரி வரும் பாதையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினம், நஞ்சன்கோடு, திருமுக்கூடல் நரசிபுரம் போன்ற சிறு நகரங்களாக இருக்கட்டும், அல்லது பாதைகளில் உள்ள மற்ற சிறு ஊர்களாக இருக்கட்டும்.  எந்த கழிவையும் இந்த தண்ணீரில் திறந்து விட முடியாது.  கர்நாடக மாநிலத்தின் சட்டம் தன் கடமையைச் செய்து விடும்.  ஆனால் திருப்பூருக்குள் இருக்கும் கொடுமையும், மழை பெய்து விட்டால் சாயப்பட்டறை முதலாளிகள் கொண்டாடும் சந்தோஷத்தையும் காண கண்கள் கோடி வேண்டும்.

அடித்துக் கொண்டு வரும் வெள்ளத்தில் அத்தனை சாய நீரையும் திறந்து விட்டு விடலாம் அல்லவா?  அது தான் இங்கே நடந்து கொண்டுருக்கிறது. இதைப் போலத்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள ஆற்றின் நிலவரம் இருக்கிறது. கழிவுகளைக் கொட்ட, கழிவுகளைக் கொண்டு போய்ச் சேர்க்க என்று மாறி மாறி ஒவ்வொரு ஆற்றின் சுகாதாரத்தையும் நாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டுருக்கின்றோம். .

ஊரில் பார்த்த கண்மாயில் நீர் இல்லை. வறண்டு போய் கட்டாந்தரை போல இருக்கிறது.  சும்மா இருப்பார்களா? அருகே ப்ளாட் போட முயற்சித்துக் கொண்டுருக்கிறார்கள்.  முடிந்த வரை களி மண் தாண்டி கட்டாந்தரை வரைக்கும் மண் எடுத்து விற்பனை கண ஜோராக நடந்து கொண்டுருக்கிறது.  விவசாய நிலங்களை ப்ளாட் போட்டு விற்பதில் மற்ற மாநிலங்களை தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கும் போல.

காவேரி நீர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் நில நீர் ஆதாரத்தை எப்படி வைத்துள்ளார்கள் தெரியுமா?  மணல் மாஃபியா என்பது என்று பல்லாயிரக்கணக்கான கோடிகளை தந்து கொண்டுருக்கும் காமதேனு பசுவாக உள்ளது.  இதன் காரணமாகத்தான் காவேரி உள்ளே வந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வறண்டு போய்விடுகின்றது.  வறண்டு போன நிலங்களைத் தாண்டி இந்த காவேரி உள்ளே வருவதற்குள் படாதபாடு பட்டுத்தான் வருகின்றது. நாமும் அடிப்படை ஆதாரங்களை காக்க விரும்புவதில்லை. அது குறித்து கவலைப்பட நமக்கு நேரமும் இருப்பதில்லை.  காசு கொடுத்தால் தண்ணீர் வரும் போது ஆறென்ன குளமென்ன காவேரியென்ன?

காவேரி ஆறு தமிழ்நாட்டு எல்லைக்குள் வரும் போதே ரூபம் மாறத் தொடங்குகின்றது.  கேரளா எல்லையில் உள்ள கோழிப்பண்ணைகள் கொட்டும் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கலக்கப்படுகின்றது. ஆனால் வளர்க்கப்படும் கோழிகளும் முட்டைகளும் கேரளாவுக்கு செல்கின்றது.  இதனைத் தொடர்ந்து மால்கோ, கெம்ப்ளாஸ்ட், போன்ற தொழிற்சாலைகளைத் தொடர்ந்து அனல் மின்நிலையம் வரைக்கும் அத்தனை நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவை சுமந்து வருவது தான் இந்த காவேரி தான்.

நாசிக், சூரத் போன்ற ஊர்கள் கூட பின்னுக்குப் போய்விட்டது.  நம்ம மேட்டூர் தான் இந்தியாவில் மாசடைந்த நகரில் முதலிடத்தில் இருக்கிறது. சுற்றுப்புற பாதுகாப்புக்கு விருது வாங்கிய காகித ஆலையின் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கொட்டப்படுகின்றது.

திருப்பூரில் உள்ள சாய்ப்பட்டறை முதலைகள் உருவாக்கிய பல சாயப்பட்டறைகள் அத்தனையும் காவேரி வழித்தடத்தில் தான் இருக்கிறது.  அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க காசு.  நாம் எதையும் யோசிக்காமல் இருக்க தொலைக்காட்சி. 


கோவில்களை விட கழிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொன்ன போது பொங்கித் தீர்க்கும் நமக்கு என்ன அருகதை இருக்கிறது?   கோவில்களைக் கூட நாம் சுத்தமாகவா வைத்திருக்கின்றோம்.?

நம்முடைய உண்மையான வாழ்க்கை என்பதை அமைச்சர் உணர்ந்து தான் பேசியுள்ளார்.

நாம் தான் நாம் வாழும் அத்தனை இடங்களையும் கழிப்பறையாகத்தானே வைத்துள்ளோம். பாவத்தை செய்து கொண்டே பாவத்தை கரைக்க ஒவ்வொரு கோவிலுக்கும் படையெடுக்கின்றோம். கோவிலுக்குள் உள்ளே இருக்கும் ஆண்டவனும் அமைதியாக சிரித்தபடியே நம்மை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்..

வீதி முதல் ஆறு வரைக்கும் அத்தனையையும் நாம் கழிவு கொட்டத்தானே பயன்படுத்துகின்றோம். கழிப்பறையில் வாழ விரும்பும் நாம் கையில் பாட்டிலை சுமந்து தானே ஆக வேண்டும்.

இதை விட மகிழ்ச்சி வேண்டுமா?   

Monday, October 08, 2012

சுருக்கமாக பேசு.........




25 வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தைப் சென்னையிலிருந்து திரும்பி வந்து கொண்டுருந்த போது பார்த்தேன். சொந்த ஊர் நினைவு வந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்குள் ரயில் உள்ளே நுழையும் போது நான் பார்த்த ரயில் நிலையத்திற்கு வெளியே தெரிந்த நடைமேடையும் அங்கேயிருந்து பார்த்த அந்த நீண்ட ஏரியும் எனது ஊரில் உள்ள ரயில் நிலையத்தை ஞாபகப்படுத்தியது. 

சென்னையிலிருந்து ஒரு மணி நேரம் பயணித்து செங்கல்பட்டு அருகே வந்த போது தான் மனதிற்குள் குளிர்ச்சி வந்தது. ரயில் பயணத்தில் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்த காட்சிகளில் நெருக்கியடித்துக் கொண்டுருக்கும் வீடுகளும், வாகன சப்தங்களும், ஏதோவொரு தொழிற்சாலையின் புகையுமாக நாட்டின் தொழில் வளர்ச்சி என்பதை எனக்குள் நினைவு படுத்திக் கொண்டுருந்தது. 


சென்னையின் விஸ்தீரணம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழ முடியாத, வாய்ப்புகளை தேடிக் கொண்டுருப்பவர்களுமாய் இந்த நகரத்தை மொய்த்து இன்று உள்ளே வாழும் மக்களின் தொகை 50 லட்சம்.  தினந்தோறும் வந்து போய்க் கொண்டுருப்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்து லட்சம் பேர்கள்.

அடிப்படை கட்டுமானம் என்று ஒன்று சென்னையில் இல்லவே இல்லை. அது குறித்த அக்கறையும் ஆட்சிக்கு வரும் எந்த அரசுக்கும் இருப்பதாக தெரியவில்லை.  சென்னைக்கு வரவே பலரும் விரும்புகிறார்கள். வந்தவர்கள் எல்லோரும் தங்க விரும்புகிறார்கள். தங்களுக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார்கள். வாய்ப்புகளை தேடி அலைகிறார்கள். முடியாதவர்கள் சாலையோரத்திலும், கூவத்தின் ஓரத்திலும் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள்.வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் வளர்ந்தவர்களை காட்டி காட்டி ஊரில் இருப்பவர்களுக்கும் ஆசையை அதிகமாகக்கி விடுகிறார்கள்.இதன் மூலமே இந்த சென்னை இன்று வரையிலும் ஒவ்வொருவரையும் தினந்தோறும் வரவழைத்துக் கொண்டுருக்கிறது.

நான் பார்த்த அந்த நீண்ட ஏரியின் பிரமாண்டமும், அதில் நிறைந்திருந்த தண்ணீரும் எனக்கு அதிக சந்தோஷத்தை தந்தது. உள்ளே நுழைந்த ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டுருந்தது. நிதானமாக ரசிக்க முடிந்தது. ரயில் பாதை நடைமேடையிலிருந்து பார்க்கும் போது சிறுவனமாக மாறி இறங்கி ஓடிப்போய் ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வரலாமா? என்று தோன்றியது. மனதிற்குள் புத்துண்ரச்சி பரவியது. ரயில் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிறுவனைப் போல குதுகலித்த என்னை அருகில் இருந்தவர் வினோதமாக பார்த்தார்.

சொந்த ஊரில், ஊருக்கு வெளியே தான் ரயில் நிலையம் இருக்கிறது.  இரண்டு ஊருக்கு நடுவே கண்டணூர் - புதுவயல் என்று தென்னக ரயில் வரலாற்றில் ஒரு குட்டியூண்டு ரயில்நிலையம் அது.  பரபரப்பான ரயில் மார்க்கமல்ல. எந்த முக்கியத்துவமும் இல்லாதது.  காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ். எனக்கு விபரம் தெரிந்த நாளிலில் இருந்து அதே வேகத்தில் தான் இன்று வரை சென்று கொண்டுருக்கிறது. உலகம் முழுக்க மாற்றங்களை தனதாக்கிக் கொண்டேயிருக்க இந்தியாவின் ரயில்வே துறைக்குள் மட்டும் எதுவும் அத்தனை சீக்கிரம் எட்டிப்பார்ப்பதில்லை. 

நாம் விஞ்ஞானத்தின் உதவியால் பல விதங்களிலும் வளர்ந்து விட்டோம். ஆனால் நாமே ஒரு குப்பை தான் என்பதை வெளியிடத்தில் நடந்து கொள்ளும் முறையை வைத்து எளிதாக கண்டு கொள்ள முடியும். சக மனதிர்களைப் பார்க்கும் போது பழகும் போது எளிதாக புரிந்து கொள்ள முடியும். அரசாங்க சொத்து என்றால் அதில் காட்டும் அக்கறையற்ற தன்மையை வைத்தே கண்டு கொள்ள முடியும். அவசரம் என்ற பெயரில் காணும் இடங்களில் மிருகம் போல தூக்கி கொண்டு நிற்க முடியும். பின்னால் வருபவர்களை கவனிக்காமல் துப்ப முடியும். பாதி வைத்த உணவுகளை அப்படியே போட்டு விட்டு இருக்கும் இடத்தை ஈ மொய்க்க உதவும் நம்மவரைத் தவிர வேறு எவரையும் உதாரணம் காட்ட முடியாது. 

ஆனால் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் கூட்டம் குறைவான காரணத்தால் குப்பைகளுக்கும் அசிங்கத்திற்கும் வாய்ப்பு குறைவு. பல சமயம் இந்தப் பக்கத்தின் வழியாக சரக்கு வண்டிகள் மட்டுமே வந்து போகும்.

எனது ஊரிலிருந்து சென்னைக்குச் செல்ல நினைக்கும் குறிப்பிட்ட இன மக்கள் தான் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் குடும்பத்துடன் இந்த ரயிலில் தான் செல்வார்கள். ஆனால் பெரும்பாலும் நான் பார்த்தவரைக்கும் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ரயில் மூலமாக பயணிப்பவர்கள் குறைவு.  வேகம் ஒரு காரணமோ? நேர பிரச்சனையோ?  எப்போதும் பலரும் பேரூந்துப் பயணத்தைத்தான் இன்று வரையிலும் விரும்புகிறார்கள்.  இப்போதுள்ள கட்டண வித்தியாசங்களால் மட்டுமே பலரும் இப்போது ரயிலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

இந்த நீண்ட ரயில் நடைமேடை தான் எனக்கு ஞானம் தந்த போதிமரம். ஒரு முனையில் நடக்க ஆரம்பித்தால் மறுமுனை வரைக்கும் ஐந்து நிமிட பயணத்தில் அடைய முடியும். சாயங்கால நேரத்தில் அங்கே வரும் ஏழெட்டு பயணிகளைத் தவிர வேறு எவரும் அந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். இந்த இடம் தான் என எதிர்கால கனவுகளை அடைகாத்த ஆலமரம். வீட்டுக்கு பின்புறம் தோட்டம் இருந்தாலும் பள்ளி வரைக்கும் பள்ளிக்கூட மைதானம் தான் சாயங்கால சமயங்களில் படிக்க உதவியது. பல தரப்பு மாணவர்களும் வந்து விடுவார்கள். பெரும்பாலும் பள்ளி முடிந்ததும் விளையாட்டு பிரியர்களின் புகலிடமாக அந்த மைதானம் இருந்தது. கல்லூரி வந்த போது  நண்பர்களும் மாறினார்கள். இடமும் மாறியது. கல்லூரி பாடங்களை படிக்க உதவிய இடமாக இந்த ரயில் நிலையம் இருந்தது. 

மதிய வெயில் குறையும் போது வீட்டிலிருந்து நடந்து வந்தால் 20 நிமிடத்தில் இங்கே வந்து விடலாம்.  இருட்டு வரும் வரைக்கும். அங்கேயிருக்கும் ரயில் நிலையத்தை ஒட்டி ஒரு புறம் நீண்ட கண்மாய். எப்போதும் நிறைந்திருக்கும் தண்ணீர். மறுபக்கம் வயல்வெளிகள். கண்ணுக்கு பச்சையாய் இருக்கும். கண்மாய் தண்ணீர் மூலம் காற்றில் வரும் சுகத்தை அனுபவித்துக் கொண்டே மூன்று மணி நேரம் தவம் போல படித்து விடலாம். இரைச்சலின்றி, எந்த தொந்தரவும் இல்லாமல் அந்த பேரமைதி நம்மை நமக்கே உணர வைத்து விடும். ஈ, காக்கை கூட அந்த பக்கம் வராது.  ஆடு மேய்ப்பவர்கள் மட்டும் அங்கங்கே இருப்பார்கள்.
உலகத்தை உணர வைத்த காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது.  படிக்கும் போது உடன் இருந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். பல இடங்களிலும் பிரிந்து வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊருக்குள்ளே, ஊருக்கு அருகே தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். . 

ஆனால் நடந்து முடிந்த மாற்றங்கள் தான் அதிசயமாக இருக்கிறது.  பெண்களைக்கண்டாலே தலையை குனிந்தவனுக்கு இன்று பெண்கள் இல்லாமல் இரவு நகராது என்ற நிலையில் வாழ்க்கை மாறியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அடுத்த பத்தாண்டு கழித்து பார்க்கும் போது நர்ம் எப்படியிருப்போம்? இங்கே வருவோமா? என்று பேசியுள்ளோம்.  ஆனால் இரண்டு பத்தாண்டுகள் கடந்து போய்விட்டது. ஆனால் எவரும் இந்த நடைமேடைக்கு வருவதில்லை.  வெளியூர், உள்ளூர் என்றாலும் இந்த பகுதியை பேரூந்து வழியே கடந்து செல்லும் போது கண்களால் பார்ப்பதோடு சரி.  மற்றபடி பழைய நினைவுகளைக் கூட அவர்களுக்கு அசை போட நேரமில்லை.  

ஒவ்வொருவருடனும் பேசும் போதெல்லாம் உலகப் பிரச்சனைகளை விட அவரவர் சார்ந்த பிரச்சனைகள் தான் பெரிதாக இருக்கும் போல தெரிகின்றது. விரும்பியே ஆக வேண்டிய குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம். பொருளாதார பிரச்சனைகள் அடுத்த பக்கம் என்று நுகத்தடியில் மாட்டப்பட்ட மாடுகளைப் போல தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். ஆனால் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கைவசம் எதுவும் அவர்களிடமும் இல்லை. அதை நோக்கி யோசிப்பதும் இல்லை.

ஊருக்குச் செல்லும் சமயங்களில் வாடா... அந்தப்ககம் போயிட்டு வரலாம் என்றாலும் வினோதமாக பார்ப்பவர்கள் தான் அதிகம்.  காரணம் நாம் எல்லாவற்றையும் மறக்கவே விரும்புகின்றோம். இன்றைய பிரச்சனைகள் தான் முக்கியம்.  ஒவ்வொரு நிமிடமும் வருமானத்திற்கு உண்டான வாய்ப்புகளைப் பற்றி மட்டும் தான் பேச விரும்புகின்றோம். 

சுருக்கமாக பேசு. விரைவாக செயல்படு என்பது தாரக மந்திரமாகவே ஆகிவிடடது. சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு ஆசைக்கு ஆசைப்பட்டு அடைய முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  அதற்காக போராடிக் கொண்டுருப்பதாக சொல்கிறார்கள்.  அடையும் நேரம் தான் தெரியவில்லை என்று நேர காலத்தைச் சொல்லி அலுத்துக் கொள்கிறார்கள்.

நம் செட்டில் படித்த இவன் எப்படி செட்டிலாகி விட்டான் தெரியுமா?  வீடு மட்டும் 50 லட்சத்திற்கு கட்டியுள்ளானாம் என்பது போன்ற விசயங்களுக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்கின்றது. தொழில் சார்ந்து, பணம் சார்ந்து, விருப்பங்களை உள்ளடக்கிய எதிர்கால திட்டங்கள் மட்டும் தான் பேச்சாக இருக்கிறது. 

ஆனால் எல்லாவற்றிலும் ஒரு குறுக்குப் புத்தி ஓடிக்கொண்டுருப்பதை இயல்பான உரையாடலில் உணரமுடிகின்றது.

உடுத்திருக்கும் உடை, அணிந்திருக்கும் ஆபரணம் என்று தொடங்கி பயணிக்கும் வாகனம் வரைக்கும் நமது தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  சமீபத்தில் என்ன படித்தாய்? என்று கேட்டால் கெக்கேபிக்கே என்று சிரிப்பு தான் வருகின்றது. எத்தனை வருமானம் இருந்த போதிலும் உள்ளுக்குள் இருக்கும் அந்த எச்சகலை புத்தி மட்டும் மாறவேயில்லை. பயன்படுத்திக் கொண்டுருக்கும் பல பொருட்கள் அரசாங்கம் கொடுத்த இலவச பொருட்கள். அடுத்து வேறென்ன தருவார்கள் என்ற ஆர்வம் குறைந்தபாடியில்லை. ஒரு முறை இடைத்தேர்தல் வராதா என்று ஏங்குகிறார்கள்.  

வாங்கி வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனத்தை வீட்டில் வைத்து விட்டு ஓசியில் தொத்திக் கொண்டு செல்லும் சிக்கனம் என்ற ஒவ்வொருவரின்
பின்னாலும் ஓராயிரம் தந்திரங்கள். அத்தனைக்கும் சமூகம் கொடுக்கும் அங்கீகாரம் தான் ஆச்சரியம் அளிக்கின்றது. வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெண்களின் மனம் முழுக்க விகாரமாக மாறி தொலைக்காட்சி கற்றுத் தந்த கண்றாவிகளைத் தான் வேதமாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற்றதாக பேசுகிறார்கள்.

அலைபேசிகளைக்கூட மிஸ்டு கால் கொடுக்கத்தான் அதிகம் பயன்படுத்துகின்றேன் என்று நண்பன் சிரித்துக் கொண்டே சொன்ன போது என்னால் சிரிக்க முடியவில்லை. எத்தனை முறை எது குறித்து பேசினாலும் கடைசியில் காசு சம்பாரிக்க வழி சொல்லடா?  திருப்பூர் வந்தால் ஒரு வருடத்திற்குள் சம்பாரித்து விட முடியுமா? என்பவனிடம் எது குறித்து பேச முடியும்?

ரயில் மேடையில் நான் பார்த்த அந்த மரங்களைப் போலத் தான் பல
சமயத்தில் அமைதியாகவே இருந்தேன். பேசத் தொடங்கினால் எதிரே நிற்பவர் மனோநிலை என்ன? பேசுவதை விரும்புகிறாரா? இல்லையா? என்பதைக்கூட யோசிக்காமல் பேசிக்கொண்டே இருப்பவனை என்ன சொல்லி திருத்திவிட முடியும். காது இரண்டு, வாய் ஒன்றும் படைத்த இயற்கையின் கூற்றை எவரும் புரிந்து கொள்ளவில்லை.  

கேட்பதில் கவனிக்க முடிகின்றது. கவனிக்கும் போது பேசுவதின் அளவு புரிகின்றது. யோசிக்க அவகாசம் கிடைக்கின்றது.  கிடைத்து விட்டானே என்று கொட்டித் தீர்க்கும் அவர்களது அர்த்தமற்ற உரையாடலை உள்வாங்கும் போது எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

அன்று ரயில் நிலையத்தில் பார்த்த மரங்கள் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, வெறும் கிளைகள் மட்டும் அப்படியே இருக்கிறது.  இலையுதிர் காலத்தால் வந்த மாற்றமல்ல இது. எப்போதுமே இப்படித்தான் இந்த மரங்கள் இருக்கும்.  வந்து போகும் ஒவ்வொரு ரயிலும் துப்பிய புகையை சுவாசித்து தன் சுயத்தை இழந்து நிற்கும் மரத்தையும் மனிதர்களின் மனோநிலையையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிந்தது. .

மரம் என்ற போர்வையில் நின்று கொண்டுருப்பதை கோட்டோவியம் போல ரசித்து பார்த்தேன். மழுங்கடித்த மரமாக இருப்பதைப் போலத்தான் எல்லோரும் மாறிக் கொண்டேயிருக்கின்றோம். பணம் என்ற வஸ்து மனம் என்ற பொக்கிஷத்தை பொட்டலமாக கட்டி பின்னுக்குத் தள்ளிவிட்டது.  நாமும் அதைத்தான் விரும்புகின்றோம்.